தீர்க்கதரிசிகள் நமக்கு முன்மாதிரிகள்—நாகூம்
1. நாகூம் புத்தகத்திலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்?
1 பூர்வ நினிவே நகரத்தின் இடிபாடுகளைப் பார்க்கும்போது நாகூம் சொன்ன தீர்க்கதரிசனம் நினைவுக்கு வருகிறது. யெகோவா தம் எதிரிகளைப் பழிவாங்குவார் என்பதற்கும், எவ்வளவு பலசாலிகளாக இருந்தாலும் அவருக்குமுன் அவர்கள் கால்தூசு என்பதற்கும் அது அத்தாட்சியாக இருக்கிறது. (நாகூ. 1:2, 6) நாகூம் சொன்ன தீர்க்கதரிசனம், இன்று நம் ஊழியத்திற்கு எப்படி உதவும் என்று பார்க்கலாம்.
2. ஊழியத்தில் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் நாம் எப்படிப் பேசலாம்?
2 ஆறுதலாகவும் நம்பிக்கையாகவும் பேசுங்கள்: நாகூம் புத்தகத்தை மேலோட்டமாக வாசித்தால் அதில் அசீரியாவின் தலைநகரமான நினிவேக்கு எதிராக சொல்லப்பட்ட தண்டனைத் தீர்ப்பு மட்டுமே இருப்பதுபோல் தெரியும். (நாகூ. 1:1; 3:7) ஆனால், அந்தத் தண்டனைத் தீர்ப்பு யெகோவாவின் மக்களுக்கு நல்ல செய்தியாக இருந்தது. நாகூம் என்ற பெயருக்கு “ஆறுதல்” என்று அர்த்தம். அவருடைய பெயருக்கு ஏற்ற விதமாகவே அவர் யூதர்களுக்கு ஆறுதல் அளித்தார், எதிரிகள் நிச்சயம் அழிவார்கள் என்ற உறுதியையும் அளித்தார். அதோடு யெகோவா, “இக்கட்டு நாளிலே அரணான கோட்டை” போல இருப்பதாகவும் சொன்னார். (நாகூ. 1:7) நாமும் ஊழியத்தில் மக்களுக்கு நற்செய்தியைச் சொல்கிறோம்; ஆபத்து காலத்தில் யெகோவாவை நம்பியிருக்கும்படியும் சொல்கிறோம்.—நாகூ. 1:15.
3. நாகூமைப் போல் நாம் எப்படி உதாரணங்களைப் பயன்படுத்தலாம்?
3 உதாரணங்களைப் பயன்படுத்துங்கள்: நினிவேயின் அழிவை எகிப்தில் இருந்த தீப்ஸ் (நோ அம்மோன்) நகரத்தின் அழிவுக்கு ஒப்பிட்டு நாகூம் மூலம் யெகோவா தீர்க்கதரிசனம் சொன்னார். தீப்ஸ் நகரத்தை முன்பு அசீரியர்கள்தான் அழித்தார்கள். (நாகூ. 3:8-10) நாம் இன்று மக்களிடம் இந்தப் பொல்லாத உலகத்தின் அழிவைப் பற்றி பேசும்போது யெகோவா சொன்ன தீர்க்கதரிசனங்கள் எந்தளவு துல்லியமாக நிறைவேறியிருக்கிறது என்பதை சிறப்பித்துக் காட்டலாம். உதாரணத்திற்கு நினிவே நகரத்தை அழிக்க பாபிலோனியர்களும் மேதியர்களும் கி.மு. 632-ல் வந்தபோது டைக்ரிஸ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது கோட்டையைப் போலிருந்த நினிவேயின் பலமான மதிற்சுவரின் ஒரு பாகம் இடிந்துவிழுந்தது. யெகோவா சொன்ன விதமாகவே நினிவே எளிதில் கைப்பற்றப்பட்டது.—நாகூ. 1:8; 2:6.
4. ஊழியத்தில் நாம் எப்படி மற்றவர்களுக்குப் புரியும் விதத்தில் தெளிவாகப் பேசலாம்?
4 புரியும் விதத்தில் தெளிவாகப் பேசுங்கள்: நாகூமின் எழுத்துநடை விவரமாக, தத்ரூபமாக இருந்தது. அவர் சொன்ன விஷயங்கள் எல்லாமே தெளிவாக இருந்தன. (நாகூ. 1:14; 3:1) நாமும் அவரைப் போலவே எல்லோருக்கும் புரியும் விதத்தில் எளிமையாகப் பேச வேண்டும். (1 கொ. 14:9) ஊழியத்தில் ஒருவரைப் பார்க்கும்போது, அவரைச் சந்தித்துப் பேசுவதற்கான காரணத்தைத் தெளிவாகச் சொல்லுங்கள். நீங்கள் ஒருவரோடு பைபிள் படிக்கும்போது யெகோவா மீதும் பைபிள் மீதும் விசுவாசத்தை வளர்க்க அவர்களுக்கு உதவுங்கள். படிக்கும் விஷயங்கள் தங்களுக்கு எந்தளவு பிரயோஜனமாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவும் அவர்களுக்கு உதவுங்கள்.—ரோ. 10:14.
5. இன்று நாம் எதைக் குறித்து நம்பிக்கையாக இருக்கலாம்?
5 யெகோவா சொன்ன வார்த்தை அப்படியே நிறைவேறும் என்பதில் நாகூமிற்கு அசைக்கமுடியாத விசுவாசம் இருந்தது; இதற்கு நாகூம் புத்தகம் அத்தாட்சியாக இருக்கிறது. இன்று சாத்தானின் உலகத்திற்கு அழிவு நெருங்கிக்கொண்டே வருவதால், “இடுக்கம் மறுபடியும் உண்டாகாது” என்று கடவுள் சொன்ன வார்த்தை நிச்சயம் நிறைவேறும் என்பதில் நாமும் நம்பிக்கையாக இருக்கலாம்.—நாகூ. 1:9.