யெகோவாவைப் புகழ புதிய பாடல்கள்!
1 வாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டி ஆஃப் பென்ஸில்வேனியாவின் வருடாந்தர கூட்டம் அக்டோபர் 4, 2014-ல் நடந்தது. யெகோவாவை வணங்குவதற்கு பாடல்கள் எந்தளவு முக்கியம் என்ற விஷயத்தை அந்த கூட்டத்தில் சொன்னார்கள். (சங். 96:2) நம்முடைய பாட்டு புத்தகத்தில் மாற்றம் செய்யப்போவதாகவும் சொன்னார்கள். அதை கேட்டு நாம் எல்லோரும் ரொம்ப சந்தோஷப்பட்டோம், இல்லையா?
2 இப்போது இருக்கிற பாட்டு புத்தகத்தில் மாற்றம் செய்வதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. ஒரு காரணம்: பைபிளில் இருக்கிற சில விஷயங்களை நாம் புரிந்துகொண்ட விதம் மாறியிருக்கிறது; அதனால், பாடல் வரிகளையும் மாற்ற வேண்டியிருக்கிறது. (நீதி. 4:18) இன்னொரு காரணம்: முன்பு இருந்த ஆங்கில புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளில் இருக்கும் வார்த்தைகளை பயன்படுத்திதான் நம்முடைய பாட்டு புத்தகத்தை தயாரித்திருந்தார்கள். ஆனால் 2013-ல் வெளியிடப்பட்ட ரிவைஸ்டு பைபிளில் சில வார்த்தைகள் மாறியிருப்பதால், பாடல் வரிகளையும் மாற்ற வேண்டியிருக்கிறது. சில புது பாடல்களையும் சேர்த்திருக்கிறார்கள்.
3 புது பாடல்களை கற்றுக்கொள்வதற்கு பாட்டு புத்தகம் வரும் வரை காத்திருக்க வேண்டுமா? இல்லை. ஒவ்வொரு பாட்டு தயாரானதும், உடனடியாக jw.org வெப்சைட்டில் போட்டுவிடுவார்கள். நீங்கள் டவுன்லோட் செய்துகொள்ளலாம். ஒரு புது பாட்டு வெளியானவுடன், அதை ஊழியக் கூட்டத்தின் கடைசி பாட்டாக பாடுவோம். அந்த வார அட்டவணையில், ‘புது பாட்டு’ என்று போட்டிருப்பார்கள்.
4 புது பாட்டை எப்படி கற்றுக்கொள்வது? பாடல்களை உடனே கற்றுக்கொள்வது கொஞ்சம் கஷ்டம்தான். இருந்தாலும், சபைக் கூட்டத்தில் எல்லாரும் பாட்டு பாடும்போது நாம் “அமைதியாயிராமல்” தாவீதை போலவே யெகோவாவை புகழ்ந்து பாட ஆசைப்படுகிறோம். (சங். 30:12, ஈஸி டு ரீட் வர்ஷன்) புது பாடல்களை கற்றுக்கொள்வதற்கு சில டிப்ஸ்:
புது பாட்டின் இசையை வெப்சைட்டில் இருந்து டவுன்லோட் செய்யுங்கள். அதை திரும்பத் திரும்ப கேளுங்கள். அப்போதுதான் அது உங்களுடைய மனதில் நன்றாக பதியும்.
பாடல் வரிகளை மனப்பாடம் செய்யுங்கள்.
பிறகு, இசையோடு சேர்ந்து பாடுங்கள். நிறைய தடவை பாடிப் பழகுங்கள்.
புது பாட்டை குடும்ப வழிபாட்டில் பாடுங்கள். வீட்டில் இருக்கிற எல்லோரும் நன்றாக கற்றுக்கொள்ளும் வரை பாடிப் பாருங்கள்.
5 ஊழியக் கூட்டத்தில் புதிய பாடல்களை எப்படி பாடுவோம்? முதலில் அந்த பாட்டின் இசையை மட்டும் கேட்போம். பிறகு, இசையோடு சேர்ந்து எல்லோரும் பாடுவோம்.
6 இப்படி ஒன்றுசேர்ந்து யெகோவாவை புகழ்ந்து பாடும்போது, நமக்கு சந்தோஷமாக இருக்கிறது. அதனால், பாட்டு பாடும் சமயத்தில் தேவையில்லாமல் வெளியே போகமாட்டோம்.
7 மாநாட்டு நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்பு இசை போடுவார்கள். இந்த இசையைத் தயாரிப்பதற்கு, உலகம் முழுவதும் இருக்கிற சகோதர சகோதரிகள் வருடத்திற்கு இரண்டு முறை சொந்த செலவில் நியு யார்க் நகரத்திற்கு போகிறார்கள். அதனால், மாநாட்டின்போது, இசையை கவனிக்கும்படி சேர்மேன் சொல்லும்போது, நம்முடைய இடத்தில் உட்கார்ந்து இசையை அமைதியாக கேட்க வேண்டும். அப்போதுதான் பேச்சுகளை கேட்பதற்கு நம்முடைய மனம் தயாராக இருக்கும்.—எஸ்றா 7:10.
8 கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்ய ஆரம்பித்து 100 வருடம் ஆனதை முன்னிட்டு, “கடவுளுடைய ஆட்சி வருக!” என்ற புதிய பாடல் தயாரிக்கப்பட்டது. இந்த பாடலை சமீபத்தில் நடந்து முடிந்த வருடாந்தர கூட்டத்தில் பாடினார்கள். அதே பாடலை இன்று கூட்டத்தின் முடிவில் நாமும் பாடப்போகிறோம்.
9 இந்த பாடல்கள் எல்லாமே யெகோவா நமக்கு கொடுத்திருக்கிற நல்ல பரிசு. (மத். 12:35) எனவே, இவற்றை நன்றாகக் கற்றுக்கொள்வதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும். அப்போதுதான் மனதிலிருந்து பாட முடியும்; யெகோவாவுக்கு புகழ் சேர்க்க முடியும்.—சங். 147:1.