ஊழியத்தில் பயன்படுத்தும் கருவிகள்
1. மரவேலை செய்பவர்களிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
1 மரவேலை செய்பவர் நிறைய கருவிகளை பயன்படுத்துவார். சில கருவிகளை நுணுக்கமான வேலைகளை செய்வதற்கு மட்டும் எப்போதாவது பயன்படுத்துவார். ஆனால், சில கருவிகளை அடிக்கடி பயன்படுத்துவார். அடிக்கடி பயன்படுத்தும் கருவிகளை எப்போதும் கையில் வைத்திருப்பார். அதனால் அவருக்கு அதை எல்லாம் நன்றாக பயன்படுத்த தெரியும். அதே போல நாமும் ஊழியத்தில் நிறைய கருவிகளை பயன்படுத்துகிறோம். அந்தக் கருவிகளை நன்றாக பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் “எதைக் குறித்தும் வெட்கப்படாத வேலையாளாக” இருக்க முடியும். அதோடு, ஊழியத்தை இன்னும் நன்றாக செய்ய முடியும். (2 தீ. 2:15) பைபிள்தான் நாம் பயன்படுத்தும் ரொம்ப முக்கியமான கருவி. மற்றவர்களை ‘சீடர்களாக்குவதற்கு’ அதை பயன்படுத்துகிறோம். (மத். 28:19, 20) அதனால் பைபிளை ‘சரியாகப் பயன்படுத்த’ முயற்சி செய்ய வேண்டும். ஊழியத்தில் அடிக்கடி பயன்படுத்துவதற்கு இன்னும் நிறைய கருவிகள் இருக்கிறது. அந்த கருவிகளையும் நன்றாக பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும். அப்போது பைபிளைப் பற்றி மற்றவர்களுக்கு நன்றாக கற்றுக்கொடுக்க முடியும்.—நீதி. 22:29.
2. நாம் எந்தக் கருவிகளை அடிக்கடி பயன்படுத்துகிறோம்?
2 அடிக்கடி பயன்படுத்தும் கருவிகள்: பைபிளைத் தவிர நாம் வேறு என்ன கருவிகளை பயன்படுத்துகிறோம்? பைபிளை பற்றி மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்க பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தை பயன்படுத்துகிறோம். இது நாம் பயன்படுத்துகிற ஒரு முக்கியமான கருவி. இந்த புத்தகத்தை முடித்தவுடன் ‘கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்’ என்ற புத்தகத்தில் படிப்பு நடத்துகிறோம். பைபிள் ஆலோசனைகளை வாழ்க்கையில் எப்படி கடைபிடிக்கலாம் என்பதை கற்றுக்கொடுக்க இது உதவி செய்கிறது. அதனால் இந்த இரண்டு புத்தகங்களையும் நன்றாக பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும். பைபிள் படிப்பை ஆரம்பிக்க இன்னும் சில சிறு புத்தகங்களும் இருக்கின்றன. கடவுள் சொல்லும் நற்செய்தி! சிறு புத்தகம் பைபிள் படிப்பை ஆரம்பிக்க உதவி செய்கிறது. மணவாழ்வில் மகிழ்ச்சி மலர... என்ற சிறுபுத்தகம் கிறிஸ்தவர்களாக இல்லாதவர்களுக்கு பைபிள் படிப்பை ஆரம்பிக்க உதவியாக இருக்கிறது. முதலில் இந்த புத்தகத்தை கொடுத்து அவர்களுடைய ஆர்வத்தை வளர்க்கலாம். பிறகு கடவுள் சொல்லும் நற்செய்தி! சிறு புத்தகத்திலிருந்து பைபிள் படிப்பை தொடரலாம். கடவுள் சொல்வதைக் கேளுங்கள் அல்லது கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள் என்ற சிறு புத்தகங்கள் படிக்க தெரியாதவர்களுக்கு பைபிள் படிப்பை ஆரம்பிக்க ரொம்ப உதவியாக இருக்கிறது. வேறு மொழி பேசுகிறவர்களுக்கு கொடுக்க நம்மிடம் புத்தகங்கள் இல்லை என்றாலும் இந்த சிறு புத்தகங்களிலிருந்து பைபிள் படிப்பு நடத்தலாம். பைபிள் படிப்பவர்கள் நம்முடைய அமைப்பை பற்றித் தெரிந்து கொள்வதற்கு இன்று யெகோவாவின் சித்தத்தைச் செய்பவர்கள் யார்? என்ற புத்தகம் உதவி செய்கிறது. அதோடு வீடியோக்களையும் நாம் பயன்படுத்துகிறோம். பைபிளை ஏன் படிக்க வேண்டும்?, ராஜ்ய மன்றத்தில் கூட்டங்கள் எப்படி நடக்கும்?, கடவுளுக்கு ஒரு பெயர் இருக்கா? (ஆங்கிலம்) என்ற வீடியோக்களையும் நாம் ஊழியத்தில் பயன்படுத்துகிறோம். இந்த கருவிகள் எல்லாவற்றையும் நன்றாக பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்.
3. இனிவரப்போகிற நம் ராஜ்ய ஊழியம் எதற்கு உதவி செய்யும்?
3 இந்தக் கருவிகளை எல்லாம் நன்றாக பயன்படுத்துவதற்கு இனி வரப்போகிற நம் ராஜ்ய ஊழிய பிரதிகள் உதவி செய்யும். அதில் சொல்லப்படும் ஆலோசனைகளை கடைபிடிக்க நாம் முயற்சி செய்ய வேண்டும். ஏனென்றால், “உன் மீதும் உன் போதனையின் மீதும் எப்போதும் கவனம் செலுத்து. இவற்றிலேயே நிலைத்திரு; இப்படிச் செய்யும்போது நீயும் மீட்படைவாய், உன் போதனைக்குச் செவிகொடுப்பவர்களையும் மீட்படையச் செய்வாய்” என்று பைபிள் சொல்கிறது.—1 தீ. 4:16.