“எல்லாருக்கும்” நற்செய்தியைச் சொல்லுங்கள்
1. நற்செய்தியைத் திறம்பட அறிவிப்பவர்கள் எப்படித் திறமையான கைத்தொழிலாளியைப் போல இருக்கிறார்கள்?
1 ஒரு திறமையான கைத்தொழிலாளியிடம் ஏராளமான கருவிகள் இருக்கும். அவை ஒவ்வொன்றையும் எப்போது பயன்படுத்த வேண்டும், எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். அதேபோல், நற்செய்தியை திறம்பட அறிவிப்பதற்கு உதவும் பலவிதமான கருவிகள் நம்மிடமும் இருக்கின்றன. உதாரணத்திற்கு, நம்மிடம் வெவ்வேறு தலைப்புகளில் சிற்றேடுகள் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி ‘எல்லா’ விதமான மக்களுக்கும் நற்செய்தியை அறிவிக்கிறோம். (1 கொ. 9:22) இந்த நம் ராஜ்ய ஊழியத்தின் உட்சேர்க்கையில், பல சிற்றேடுகளைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவை எப்படிப்பட்ட மக்களுக்காகத் தயாரிக்கப்பட்டிருக்கின்றன, அவற்றை நாம் எப்படி அளிக்கலாம் போன்ற விவரங்கள் அதில் உள்ளது.
2. ஊழியத்தில் நாம் எப்போது சிற்றேடுகளைக் கொடுக்கலாம்?
2 சிற்றேடுகளை எப்போது கொடுக்கலாம்: ஒரு கைத்தொழிலாளி தன்னிடம் இருக்கும் ஒரு கருவியைத் தேவைக்கு ஏற்றாற்போல் பயன்படுத்துவார். அதேபோல், வீட்டுக்காரரின் தேவைக்கு ஏற்ப நாம் சிற்றேட்டை அளிக்கலாம், சிற்றேடு அளிப்பதற்கான மாதத்தில் மட்டுமல்ல. உதாரணத்திற்கு, ஒரு மாதத்தில் நாம் பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை அளிக்க வேண்டியிருக்கலாம். ஆனால், நம்முடைய பகுதியில் கிறிஸ்தவர்கள் அதிகம் இல்லாமலிருக்கலாம், அவர்களுக்கு பைபிள்மீது அதிக ஆர்வம் இல்லாதிருக்கலாம். அப்போது, ஒரு பொருத்தமான சிற்றேட்டை வீட்டுக்காரருக்குக் கொடுத்துவிட்டு, பின்னர் பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைக் கொடுத்து அவருடைய ஆர்வத்தை அதிகரிக்கலாம்.
3. நம்மிடம் உள்ள கருவிகளை ஏன் திறம்பட பயன்படுத்த வேண்டும்?
3 வேலையைத் திறமையாகச் செய்பவரை பைபிள் பாராட்டுகிறது. (நீதி. 22:29) ‘நற்செய்தியை அறிவிக்கும் பரிசுத்த வேலையை’ விட மிக முக்கியமான வேலை வேறு எதுவுமில்லை. (ரோ. 15:16) “எதைக் குறித்தும் வெட்கப்படாத வேலையாளாக” இருக்க நாம் விரும்பினால் நம்மிடம் உள்ள கருவிகளைத் திறம்பட பயன்படுத்துவதற்குப் பெருமுயற்சி செய்வோம்.—2 தீ. 2:15.