கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறீர்களா?
நீங்கள் 23-லிருந்து 65 வயதுக்குள் இருக்கிற முழுநேர ஊழியரா? நீங்கள் ஆரோக்கியமானவராக, தேவை அதிகமுள்ள இடத்தில் சேவை செய்ய முடிந்தவராக இருக்கிறீர்களா? இந்தக் கேள்விகளுக்கு ‘ஆம்’ என்பதே உங்களுடைய பதிலாக இருந்தால், ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளிக்கு விண்ணப்பிப்பதைப் பற்றி யோசித்திருக்கிறீர்களா? இந்தப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது முதல், ஆயிரக்கணக்கான தம்பதிகளும், மணமாகாத சகோதர சகோதரிகளும் இதற்கு விண்ணப்பித்திருக்கிறார்கள். ஆனால், மணமாகாத சகோதரர்கள்தான் அதிகமாகத் தேவைப்படுகிறார்கள். யெகோவாவைப் பிரியப்படுத்தவும், அவருடைய மகனைப் பின்பற்றவும் வேண்டுமென்ற ஆசையை வளர்த்துக்கொள்ள உதவும்படி ஜெபம் செய்யுங்கள். (சங் 40:8; மத் 20:28; எபி 10:7) பிறகு, அதற்குத் தகுதி பெறுவதற்காக உங்களுடைய வேலையை அல்லது தனிப்பட்ட பொறுப்புகளை எப்படிக் குறைக்கலாம் என்று யோசித்துப் பாருங்கள்.
இந்தப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்களால் எந்தெந்த விதங்களில், எந்தெந்த இடங்களில் சேவை செய்ய முடிந்திருக்கிறது? வேறு மொழி பேசப்படுகிற இடங்களில் சேவை செய்ய சிலர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அல்லது தங்களுடைய ஊழிய நேரத்தில் ஒரு பகுதியைப் பெருநகரங்களில் செய்யப்படுகிற விசேஷ பொது ஊழியத்தில் செலவிட நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். வேறு சிலர், கொஞ்ச காலத்துக்குப் பிறகு துணை வட்டாரக் கண்காணிகளாக அல்லது மிஷனரிகளாக சேவை செய்கிறார்கள். எந்தெந்த விதங்களில் யெகோவாவுக்கு சேவை செய்ய முடியும் என்று யோசித்துப் பார்த்தால், ஏசாயா சொன்னது போல “இதோ, நான் இருக்கிறேன்! என்னை அனுப்புங்கள்!” என்று உங்களாலும் சொல்ல முடியும்.—ஏசா 6:8.
மிஷனரிகள்—அறுவடையில் பங்குகொள்ளும் வேலையாட்கள் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
மிஷனரிகள் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?
மிஷனரிகள் என்ன வேலையைச் செய்கிறார்கள்?
மிஷனரி சேவையில் கிடைக்கும் சில ஆசீர்வாதங்கள் என்ன?