உலகளாவிய மக்களுக்கு உதவ பட்டதாரிகளை உருவாக்கும் ஒரு பள்ளி
இருநூறுக்கும் அதிகமான நாடுகளில், யெகோவாவின் சாட்சிகளுடைய 98,000-க்கும் அதிகமான சபைகளில் வித்தியாசமான பின்னணிகளைச் சேர்ந்த மக்கள் ஒன்றுகூடிவருகிறார்கள். இவர்கள் அனைவரும் கடவுளால் போதிக்கப்படுகிறார்கள். அவர்களுடைய முக்கிய பாடப்புத்தகம் பைபிள். கடவுளுடைய சித்தத்தைப் பற்றியும், அதன்படி வாழ்வதைப் பற்றியும் கற்றுக்கொண்டு, ஆன்மீக ரீதியில் முன்னேற ஆட்களுக்கு உதவுவதே இக்கல்வியின் நோக்கம். இந்தக் கல்வியை ஏற்றுக்கொள்கிறவர்கள் பெருமளவில் பயனடைகிறார்கள். சீஷராக்கும்படி இயேசு கிறிஸ்து கொடுத்த கட்டளைக்கு ஏற்ப, தாங்கள் கற்றுக்கொள்வதை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்கிறார்கள்.—மத்தேயு 28:19, 20.
யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய சபைகளின் வாயிலாக தொடர்ந்து போதனையைப் பெற்றுவருகிறார்கள். அதோடுகூட, அநேக சிறப்புப் பள்ளிகளையும் உருவாக்கியிருக்கிறார்கள். அவற்றில் ஒன்றுதான் ஊழியப் பயிற்சிப் பள்ளி. அ.ஐ.மா., பென்சில்வேனியாவிலுள்ள பிட்ஸ்பர்க்கில் 1987-ஆம் ஆண்டு, அக்டோபரில் இப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. முதல் வகுப்பில் ஆங்கிலம் பேசும் மாணவர்கள் 24 பேர் கலந்துகொண்டார்கள். அப்போதிருந்து 43 நாடுகளில் 21 மொழிகளில் இந்த வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 90-க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த மணமாகாத அநேக மூப்பர்களும், உதவி ஊழியர்களும் இதில் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். எட்டு வார பயிற்சிக்குப்பின், பட்டதாரிகள் தங்களுடைய நாடுகளிலோ வெளிநாடுகளிலோ எங்கு தேவை இருக்கிறதோ அங்கு சேவை செய்வதற்கு நியமிக்கப்படுகிறார்கள். 2005-ன் முடிவுக்குள் 22,000-க்கும் அதிகமான கிறிஸ்தவ ஊழியர்கள் இப்பள்ளியில் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். ராஜ்யம் சம்பந்தமான காரியங்களை முன்னேற்றுவிக்கவும் மற்றவர்களுக்கு உதவவும் மனத்தாழ்மையோடு அவர்கள் எடுக்கும் கடின முயற்சிகளுக்கு அருமையான பலன்கள் கிடைத்திருக்கின்றன.—நீதிமொழிகள் 10:22; 1 பேதுரு 5:5.
கலந்துகொள்வதற்கான முன்னேற்பாடு
ஊழியப் பயிற்சிப் பள்ளியில் கலந்துகொள்வதற்காக அநேக மாணவர்கள் தாங்கள் செய்துவருகிற பகுதிநேர அல்லது முழுநேர வேலையிலிருந்து விடுப்பு எடுக்க விண்ணப்பிக்க வேண்டியிருக்கிறது. இது சிலசமயங்களில் சவால்களை முன்வைக்கிறது. ஹவாயில், ஆசிரியர்களாக வேலை பார்த்துவந்த இருவர் இப்பள்ளியில் கலந்துகொள்ளும்படி அழைக்கப்பட்டனர். ஆகவே, அவர்கள் விடுப்பு எடுக்க வேண்டியிருந்தது. யெகோவாவில் நம்பிக்கை வைத்து, விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர். அந்தப் பள்ளியில் கலந்துகொள்வதற்கான காரணத்தையும் அதன்மூலம் பெறவிருக்கிற பயனையும் விளக்கினர். அதன்பிறகு, விடுப்பு எடுத்துக்கொள்ள இருவருக்குமே அனுமதி கிடைத்தது.
விடுப்பு எடுத்தால் வேலை போய்விடும் என்ற பதிலே அநேக சாட்சிகளுக்கு கிடைத்திருக்கிறது. வேலை போய்விடும் எனத் தெரிந்திருந்தாலும்கூட, யெகோவாவின் அமைப்பிடமிருந்து பயிற்சி பெறுவதையே அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இவர்களில் சிலரை பள்ளி முடிந்தபிறகு வேலையில் திரும்பவும் சேர்ந்துகொள்ளும்படி பிற்பாடு அவர்களுடைய முதலாளிகளே கூறியிருக்கிறார்கள். பள்ளியில் கலந்துகொள்ள வேண்டுமென்று தீர்மானித்தவர்கள் எடுத்த நடவடிக்கைகளை ரத்தினச்சுருக்கமாக இப்படிச் சொல்லலாம்: விண்ணப்பங்களை முதலாளியிடம் சமர்ப்பியுங்கள்; உதவிக்காக யெகோவாவிடம் ஜெபியுங்கள், மற்றவற்றை அவர் கையில் விட்டுவிடுங்கள்.—சங்கீதம் 37:5.
‘யெகோவாவால் போதிக்கப்பட்டிருப்பார்கள்’
பைபிளை ஆழ்ந்து படிப்பதே இந்த எட்டு வாரப் பள்ளியின் சிறப்பம்சம். கடவுளின் சித்தத்தைச் செய்ய யெகோவாவின் மக்கள் எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அதில் கற்றுக்கொள்கிறார்கள். அதோடு, வெளி ஊழியத்திலும், சபைக் கூட்டங்களிலும், மாநாடுகளிலும் பைபிளை திறம்பட்ட விதத்தில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும் கற்றுக்கொள்கிறார்கள்.
இந்தப் பயிற்சிக்காக அதிக நன்றியுள்ள ஒரு பட்டதாரி, இன்னும் பள்ளியில் கலந்துகொள்ளாத ஒரு மாணவருக்கு இவ்வாறு எழுதினார்: “உண்மையாய் சொல்லுகிறேன், நீ இதுவரை பெற்றிருக்கும் எந்தக் கல்வியையும்விட மிகச் சிறந்த கல்வியைப் பெறுவாய். ‘யெகோவாவால் போதிக்கப்பட்டிருப்பார்கள்’ என்ற வேதவசனம் அதிக அர்த்தமுள்ளதாக ஆகும். இந்தக் கல்வி இயேசு கிறிஸ்துவின் முன்மாதிரியை மிகநெருக்கமாகப் பின்பற்றுவதற்கு நம் இருதயத்தையும் சுபாவத்தையும் புடமிடுகிறது, வடிவமைக்கிறது. அதில் கலந்துகொள்ளும்போது நீ உன்னுடைய வாழ்வில் மிகச்சிறந்த அனுபவத்தைப் பெறுவாய்.”—ஏசாயா 54:13.
சுவிசேஷகர்களாக, மேய்ப்பர்களாக, போதகர்களாக . . .
ஊழியப் பயிற்சிப் பள்ளி பட்டதாரிகள் தற்போது 117 நாடுகளில் சேவை செய்கிறார்கள். இவற்றில் அட்லாண்டிக், கரீபியன், பசிபிக் பகுதிகளிலுள்ள தீவுகளும், யெகோவாவின் சாட்சிகளின் கிளை அலுவலகங்கள் இருக்கும் பெரும்பாலான நாடுகளும் அடங்கும். மாணவர்கள் பெற்ற நல்ல பயிற்சி அவர்களுடைய பிரசங்க, மேய்ப்பு மற்றும் போதிக்கும் வேலைகளில் வெளிப்படுகிறது என கிளை அலுவலகங்கள் அறிக்கையிடுகின்றன. வெளி ஊழியத்தில் பைபிளை சிறந்த விதத்தில் பயன்படுத்த இந்தப் பயிற்சி அவர்களைத் தயார்படுத்துகிறது. (2 தீமோத்தேயு 2:15) வீட்டுக்காரர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது, வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல்a புத்தகத்திலிருந்து அவர்கள் அடிக்கடி மேற்கோள் காட்டுகிறார்கள். அதேபோல செய்வதற்கு மற்ற ராஜ்ய பிரஸ்தாபிகளையும் பயிற்றுவிக்கிறார்கள். இந்தப் பட்டதாரிகளின் பக்திவைராக்கியம் மற்றவர்களையும் பற்றிக்கொள்கிறது; அவர்களுடைய நடவடிக்கைகள் சபைகளைப் பலப்படுத்துகின்றன.
சபை மூப்பர்கள் ‘மந்தையை மேய்க்கும்’ பாக்கியத்தைப் பெற்றிருக்கிறார்கள். இதன்மூலம் மற்றவர்களுடைய ஆன்மீகத் தேவைகளை கவனித்துக்கொள்ள உதவுகிறார்கள். (1 பேதுரு 5:2, 3) இந்த ஏற்பாடு குறித்து ஒரு மூப்பர் இவ்வாறு சொன்னார்: “தேவனுடைய மந்தையை மேய்க்கும் பொறுப்பைச் சுமப்பதில் எங்களுக்கு உதவ நன்கு பயிற்சிபெற்ற சகோதரர்களைக் கிளை அலுவலகம் அனுப்புகிறது. இதற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.” தூர கிழக்கில் உள்ள ஒரு கிளை அலுவலகமும் இதேமாதிரி குறிப்பிடுகிறது: “பட்டதாரிகள் மிகவும் பரிவுள்ளவர்களாக இருக்கிறார்கள். கடினமாக உழைக்கிறார்கள், சபையாரின் ஆழ்ந்த மரியாதையைப் பெறுகிறார்கள். அவர்களுடைய மனத்தாழ்மையையும் அன்பையும் ஆர்வத்தையும் மற்றவர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள்; அவற்றை உயர்வாகப் போற்றுகிறார்கள். அவர்கள் மனமுவந்து தங்களையே அர்ப்பணிக்கிறார்கள், மேய்ப்பர்கள் எங்கு தேவைப்படுகிறார்களோ அந்த சபைகளுக்கு சந்தோஷமாய் மாறிச் செல்கிறார்கள்.” (பிலிப்பியர் 2:4) இம்மாதிரியான சகோதரர்கள் தங்களுடைய சக விசுவாசிகளுக்குப் புத்துணர்ச்சி ஊட்டுகிறார்கள்; பாராட்டைப் பெற அவர்கள் தகுந்தவர்களே.—1 கொரிந்தியர் 16:18.
கூடுதலாக, பொதுப் பேச்சு கொடுப்பதில் திறமைகளை வளர்த்துக்கொள்ள மாணாக்கர்களுக்கு ஊழியப் பயிற்சிப் பள்ளியின் போதனையாளர்கள் உதவுகிறார்கள். பட்டதாரிகள் தாங்கள் பெறும் ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் கடைப்பிடிக்கிறார்கள். அதனால் அவர்களில் அநேகரை விரைவில் வட்டார, மாவட்ட மாநாட்டு நிகழ்ச்சிகளில் பயன்படுத்த முடிகிறது. பட்டதாரிகள் “பேச்சுக்களை பிரமாதமாக கொடுக்கிறார்கள். அதோடு, நல்ல நியாயவிவாதங்களைப் பயன்படுத்தி முக்கிய கருத்தை விளக்குகிறார்கள்” என்று ஒரு வட்டார கண்காணி கூறுகிறார்.—1 தீமோத்தேயு 4:13.
ஓர் ஆப்பிரிக்க நாட்டில் ஊழியப் பயிற்சிப் பள்ளி நடத்தப்பட்டு, பட்டதாரிகளை சபைகளில் நியமித்த பிறகு, சபைக்கூட்டங்களில் கொடுக்கப்படும் பேச்சுகளின் தரம் பெரியளவில் முன்னேறியது. பள்ளியிலிருந்து அனுப்பப்படும் மூப்பர்கள் பிரசங்க வேலையிலும், மேய்ப்பு வேலையிலும், போதிக்கும் வேலையிலும் உதவிபுரிகிறார்கள்; இதனால் சபைகள் ஆன்மீக ரீதியில் பலமாகக் கட்டப்படுகின்றன.—எபேசியர் 4:8, 11, 12.
சிறப்பாகும் சபை மேற்பார்வை
அநேக இடங்களில் மூப்பர்களும் உதவி ஊழியர்களும் ஏராளமாக தேவைப்படுகிறார்கள். ஊழியப் பயிற்சிப் பள்ளியில் பட்டம்பெற்ற மூப்பர்கள் அனுப்பப்படும்வரை சில சபைகளில் மூப்பர்களே இருப்பதில்லை. எனவே, அந்தமாதிரி தேவைகள் இருக்கும் இடங்களில் நிறையப் பட்டதாரிகள் நியமிக்கப்படுகிறார்கள்.
இந்தச் சகோதரர்கள் “அமைப்பின் ஏற்பாடுகளை நன்றாய் அறிந்திருக்கிறார்கள்,” “தங்களுடைய பொறுப்புகளை கவனமாகச் செய்கிறார்கள்,” “யெகோவாவின் அமைப்பைப் புரிந்துகொள்ளவும் அதற்கு மரியாதை காட்டவும் மற்றவர்களுக்கு உதவுகிறார்கள்,” “சபையிலுள்ளவர்கள் அன்பிலும் ஆன்மீகத்திலும் முன்னேற உதவுகிறார்கள்” என்று நிறைய கிளை அலுவலகங்கள் அவர்களைப்பற்றி அறிக்கையிடுகின்றன. இதற்குக் காரணம், இப்பள்ளியின் பட்டதாரிகள் சுய புத்தியை சார்ந்திருப்பதில்லை; தங்களை ஞானிகளாக எண்ணுவதுமில்லை. மாறாக, கடவுளுடைய வார்த்தையில் எழுதியிருப்பவற்றையே பின்பற்றுகிறார்கள். (நீதிமொழிகள் 3:5-7) இம்மாதிரியான சகோதரர்கள் தாங்கள் நியமிக்கப்படும் சபைகளில் ஆன்மீக வரங்களாக இருக்கிறார்கள்.
ஒதுக்குப்புறமான பகுதிகளில் சேவை
ஒதுக்குப்புறமான தொகுதிகளைச் சபைகளாக மாற்றுவதில் உதவுவதற்காக சில பட்டதாரிகள் விசேஷ பயனியர்களாக அங்கு நியமிக்கப்படுகின்றனர். குவாதமாலாவில் இருக்கும் ஒதுக்குப்புறப் பகுதியைச் சேர்ந்த ஒரு மூப்பர் இவர்களுடைய உதவிக்காக நன்றியுள்ளவராய் இருக்கிறார். அவர் இவ்வாறு சொல்கிறார்: “20 வருடங்களாக இந்தப் பெரிய பிராந்தியத்தை எப்படி கவனித்துக்கொள்வது என கவலைபட்டுக் கொண்டிருந்தேன். அதைப்பற்றி அடிக்கடி ஜெபம் செய்தேன். ஊழியப் பயிற்சிப் பள்ளியிலிருந்து வந்த சகோதரர்கள் பேச்சு கொடுப்பதிலும், அமைப்பு சார்ந்த காரியங்களிலும் நன்றாக பயிற்சி பெற்றிருந்தனர்; தற்போது இந்தப் பகுதி அன்பான கவனிப்பைப் பெற்றுவருவதைப் பார்க்கிறேன், அதற்காக நன்றியுள்ளவனாயிருக்கிறேன்.”
சில பிராந்தியங்களில் ஆங்காங்கே சிதறியிருக்கும் குக்கிராமங்களுக்குச் செல்ல உயரமான மலைப்பகுதிகளில் நீண்டதூரம் பயணிக்க வேண்டியிருக்கும்; அப்படிப்பட்ட இடங்களிலும் திறம்பட்டவர்களாய் இருப்பதற்கு இந்தப் பட்டதாரிகள் கற்றிருக்கிறார்கள். அங்கே சீக்கிரத்தில் அவர்கள் ஒதுக்குப்புற தொகுதிகளை ஏற்படுத்தி, ஒழுங்கமைக்கிறார்கள். இதை மற்ற பிரஸ்தாபிகளால் செய்யமுடியாதபோதிலும் இவர்கள் செய்திருக்கிறார்கள். உதாரணமாக, நைஜரில் இருக்கும் ஒரு மூப்பர் பட்டதாரிகளின் உதவியைக் கோரினார். ஏனென்றால், அவர் வாழும் பகுதியில் அவர்கள் அபாரமாக வேலைசெய்ய முடியுமென உணர்ந்தார். குறிப்பாக, ஒதுக்குப்புற பகுதிகளில், விசேஷப் பயனியர்களாகவும் வட்டாரக் கண்காணிகளாகவும் சேவை செய்வது மணமாகாத சகோதரர்களுக்கு சுலபமாக இருக்கலாம். அப்போஸ்தலன் பவுலைப் போல, ‘ஆறுகளினால் வரும் ஆபத்துகள், கள்ளரால் வரும் ஆபத்துகள், வனாந்தரத்தில் இருக்கும் ஆபத்துகள்,’ சொந்த அசெளகரியங்கள், அதோடு அவர்கள் சேவை செய்யும் சபையைப் பற்றிய கவலை ஆகியவற்றை அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கிறது.—2 கொரிந்தியர் 11:26-28.
இளைஞர்கள் பயனடைதல்
சிருஷ்டிகரை நினைக்கும்படி வேதவாக்கியங்கள் இளைஞர்களைத் தூண்டுகின்றன. (பிரசங்கி 12:1) ஊழியப் பயிற்சிப் பள்ளியில் தேர்ச்சிபெற்ற பக்திவைராக்கியமுள்ள பட்டதாரிகள் கிறிஸ்தவ இளைஞர்களுக்கு சிறந்த முன்மாதிரிகளாகத் திகழ்கிறார்கள். ஐக்கிய மாகாணங்களில் உள்ள ஒரு சபைக்கு இரண்டு பட்டதாரிகள் வந்தபிறகு, பிரஸ்தாபிகள் ஊழியத்தில் செலவழித்த மொத்த மணிநேரம் இரண்டு மடங்காக உயர்ந்தது. அதோடு, ஒழுங்கான பயனியர்களின், அதாவது முழுநேரமாய் பிரசங்கிப்போரின் எண்ணிக்கையும் 2-லிருந்து 11-ஆக அதிகரித்தது; நிறைய சபைகளில் நடந்தவற்றுக்கு இது ஓர் எடுத்துக்காட்டு மட்டுமே.
மேலும், ஊழியப் பயிற்சிப் பள்ளியில் கலந்துகொள்வதைப்பற்றி யோசித்துப்பார்க்கும்படி இளைஞர்களை அவர்கள் உற்சாகப்படுத்துகிறார்கள். இதனால், இதுவரை உதவி ஊழியர்களாக ஆகாத சகோதரர்கள் அந்தப் பொறுப்பைப் பெறுவதற்குத் தூண்டப்பட்டிருக்கிறார்கள். ஊழியப் பயிற்சிப் பள்ளி பட்டதாரிகளைக் குறித்து நெதர்லாந்து கிளை அலுவலகம் பின்வருமாறு கூறுகிறது: “தங்கள் வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டுமென ஆழ்ந்து சிந்திக்கும் இளைஞர்களுக்கு இவர்கள் உயிருள்ள முன்மாதிரிகளாய் இருக்கிறார்கள்.”
அந்நிய மொழி சபைகளில் சேவை
நிறைய நாடுகளில், மக்களுக்கு அவர்களுடைய சொந்த மொழிகளிலே நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் நல்ல பலன்களைத் தந்திருக்கின்றன. ஊழியப் பயிற்சிப் பள்ளி பட்டதாரிகள் பெரும்பாலும் பிற மொழிகளைக் கற்றுக்கொள்கிறார்கள்; பிறகு, வேறு நாட்டிலிருந்து வந்து குடியேறிய மக்கள் பெருமளவில் வசிக்கும் பிராந்தியங்களில் சேவை செய்கிறார்கள். உதாரணமாக, பெல்ஜியம் நாட்டில் வாழும் அல்பேனிய, பெர்ஸிய, ரஷ்ய மொழி பேசுபவர்களுக்குப் பிரசங்கிக்க ராஜ்ய அறிவிப்பாளர்கள் அதிகமாக தேவைப்படுகிறார்கள்.
இத்தாலி, ஐக்கிய மாகாணங்கள், பிரிட்டன், மெக்சிகோ, ஜெர்மனி, இன்னும் பிறநாடுகளிலுள்ள அந்நிய மொழி சபைகளும், தொகுதிகளும் ஊழியப் பயிற்சிப் பள்ளியில் பட்டம் பெற்றிருக்கும் பயணக் கண்காணிகள், மூப்பர்கள், உதவி ஊழியர்கள் ஆகியோரால் மாபெரும் பலன்களை ஏற்கனவே அனுபவித்துவருகின்றன. கொரியாவிலுள்ள கிளை அலுவலகம் இவ்வாறு அறிக்கையிடுகிறது: “200-க்கும் அதிகமான பட்டதாரிகள் அந்நிய மொழி சபைகளுக்கும் தொகுதிகளுக்கும் உதவுவதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறார்கள்.”
மற்ற பொறுப்புகளில் பணிவோடு சேவித்தல்
ஊழியப் பயிற்சிப் பள்ளி பட்டதாரிகள் அந்நிய மொழி தொகுதிகளிலும் சபைகளிலும் சேவை செய்வதோடு, மூப்பர்களாகவும், உதவி ஊழியர்களாகவும், பயணக் கண்காணிகளாகவும் சேவை செய்கிறார்கள். சிலர், பிற நாடுகளில் நியமிப்புகளைப் பெற்றுக்கொள்கிறார்கள்; பெரும்பாலும் ஒரு கிளை அலுவலகத்தில் ஊழிய இலாகாவில் ஏற்படும் அவசரத் தேவையின் காரணமாக அங்கே சேவை செய்யும்படி நியமிக்கப்படுகிறார்கள். கட்டடப் பணியில் திறமையுள்ளவர்கள் ராஜ்யமன்ற கட்டுமானத் திட்டத்தில் பங்கு வகிக்கிறார்கள்.
உலகம் முழுவதும் சபைகள், வட்டாரங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆகையால் அதிகமான பயணக் கண்காணிகள் தொடர்ந்து தேவைப்படுகிறார்கள். இந்தத் தேவையைப் பூர்த்திசெய்வதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியப் பயிற்சிப் பள்ளி பட்டதாரிகள் சிலர் பயண ஊழியம் தொடர்பாக பத்துவாரப் பயிற்சியைப் பெறுகிறார்கள். பிறகு துணை வட்டாரக் கண்காணியாக அல்லது வட்டாரக் கண்காணியாக சேவை செய்கிறார்கள். தற்போது சுமார் 1,300 பட்டதாரிகள் 97 நாடுகளில் பயணக் கண்காணிகளாகச் சேவை செய்கிறார்கள். ஓர் ஆப்பிரிக்க நாட்டில், பயணக் கண்காணிகளாக சேவை செய்பவர்களில் 55 சதவீதத்தினர் ஊழியப் பயிற்சிப் பள்ளி பட்டதாரிகளே. இன்னொரு ஆப்பிரிக்க நாட்டில் இது 70 சதவீதமாக இருக்கிறது.
இந்தப் பள்ளியில் பயிற்சி பெற்ற நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் ஆஸ்திரேலியா, ஐரோப்பா, ஐக்கிய மாகாணங்கள், கனடா, தூர கிழக்கு நாடுகள் ஆகிய இடங்களிலிருந்து தேவை இருக்கும் மற்ற நாடுகளுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள். இதனால், உலகமுழுவதும் இருக்கும் சபைகள் இந்தப் பள்ளியிலிருந்து பலன் பெறுகின்றன.
யெகோவா, தம்முடைய மகன் இயேசு கிறிஸ்துவின் மூலமாக இந்தக் கடைசி நாட்களில் சுவிசேஷகர்களையும், மேய்ப்பர்களையும், போதகர்களையும், ராஜ்யம் சம்பந்தப்பட்ட காரியங்களை முன்னேற்றுவிக்கும் மற்றவர்களையும் எழும்பப் பண்ணியிருக்கிறார். கடவுளுடைய மக்களின் எண்ணிக்கை மேலுமாக அதிகரிப்பதற்கு இன்னும் வாய்ப்புகள் இருக்கின்றனவா? நிச்சயமாகவே! கூடுதலான பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள ஒப்புக்கொடுத்த சகோதரர்கள் அதிகமதிகமாக முன்வர வேண்டிய தேவை இருக்கிறது. (ஏசாயா 60:22; 1 தீமோத்தேயு 3:1, 13) ஊழியப் பயிற்சிப் பள்ளி, மூப்பர்களும் உதவி ஊழியர்களும் தங்களுடைய ஊழியத்தை விரிவுபடுத்தத் தகுந்தவர்களாகத் தங்களை மாற்றிக்கொள்வதற்கு வாய்ப்பளிக்கிறது. இதனால் அவர்களும் உலகம் முழுவதும் உள்ள மற்றவர்களும் மாபெரும் பலன்களைப் பெறுகின்றனர்.
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 10-ன் படங்கள்]
ஊழியப் பயிற்சிப் பள்ளி உலகளாவிய விதத்தில் ராஜ்யம் சம்பந்தப்பட்ட காரியங்களை முன்னேற்றுவிக்கிறது
[பக்கம் 13-ன் படங்கள்]
ஊழியப் பயிற்சிப் பள்ளியில் உங்களால் கலந்துகொண்டு, மற்றவர்களுக்கு உதவ முடியுமென நினைக்கிறீர்களா?