ஊழியப் பயிற்சிப் பள்ளி—பெரிதும் அனுகூலமுமான கதவு
1 எரேமியா தீர்க்கதரிசி மூலம் யெகோவா இவ்வாறு முன்னறிவித்தார்: ‘அவர்களை [என் ஜனங்களை] மேய்க்கத்தக்கவர்களை அவர்கள்மேல் ஏற்படுத்துவேன்; இனி அவர்கள் பயப்படுவதுமில்லை, கலங்குவதுமில்லை, காணாமற்போவதுமில்லை.’ (எரே. 23:4) இத்தகைய மேய்க்கும் வேலை இன்று சகல தேசத்தார் மத்தியிலும் நடந்தேறி வருகிறது. இது சபைகளிலுள்ள பத்தாயிரக்கணக்கான மூப்பர்களால் செய்யப்பட்டு வருகிறது. அதோடு, யெகோவாவுக்குச் சேவை செய்ய தங்களை மனமுவந்து அர்ப்பணித்திருக்கும், பனித்துளிகள் போன்று ஏராளமாய் இருக்கும் இளம் ஆண்களாலும் செய்யப்பட்டு வருகிறது. (சங். 110:3) இத்தகைய மனத்தாழ்மையுள்ள சகோதரர்கள் கடவுளுடைய ஜனங்களின் சபைகளுக்குக் கிடைத்திருப்பது எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதம்! ஆவிக்குரிய கூட்டிச் சேர்க்கும் வேலை தொடர்ந்து நடந்தேறி வருகையில் தங்கள் சகோதரர்களுக்குச் சேவை செய்யத் தயாராய் இருக்கும் தகுதிபெற்ற ஆண்கள் இன்னும் அநேகர் தேவைப்படுகிறார்கள்.
2 திருமணமாகாத மூப்பர்களையும் உதவி ஊழியர்களையும் அதிக பொறுப்புகளை ஏற்கும்படி பயிற்றுவிக்கிற அருமையான ஏற்பாடுதான் இந்த ஊழியப் பயிற்சிப் பள்ளி ஆகும். 1987-ல் இந்தப் பள்ளி ஆரம்பமானதிலிருந்து நடத்தப்பட்ட 999 வகுப்புகளில் சுமார் 140 நாடுகளைச் சேர்ந்த 22,000-க்கும் அதிகமான மாணாக்கர்கள் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். இவர்களுக்கு, இப்பள்ளி ‘பெரிதும் அநுகூலமுமான கதவாக’ நிரூபித்திருக்கிறது.—1 கொ. 16:9.
3 இப்பள்ளியின் நோக்கம்: அமைப்பில் தேவை அதிகமுள்ள இடங்களில் பொறுப்புகளைக் கையாளுவதற்கு, தகுதிபெற்ற ஆண்களைப் பயிற்றுவிப்பதும் தயார்படுத்துவதுமே இந்த ஊழியப் பயிற்சிப் பள்ளியின் நோக்கமாகும். இது, பிரசங்க ஊழியத்தில் முன்நின்று வழிநடத்தவும், மேய்க்கும் வேலையில் பங்குகொள்ளவும், சபையில் போதிக்கவும் தேவைப்படுகிற திறமைகளை அவர்களில் வளர்க்கிறது. பட்டம் பெற்ற பிறகு சில மாணாக்கர்கள் அவர்களுடைய நாட்டிலோ வெளி நாட்டிலோ விசேஷப் பயனியர்களாக அல்லது பயணக் கண்காணிகளாக நியமிக்கப்படுகிறார்கள். மற்றவர்கள் அவர்களுடைய சபையிலேயே அல்லது அவர்களது நாட்டிலேயே தேவை அதிகமுள்ள இடங்களில் சேவை செய்ய நியமிக்கப்படுகிறார்கள்.
4 இந்த எட்டு வாரப் பயிற்சியின்போது மாணாக்கர்கள் தீவிர பைபிள் படிப்பில் இறங்குகிறார்கள். ஏராளமான பைபிள் போதனைகளையும் மேய்க்கும் பொறுப்புகளையும் கிறிஸ்தவ வாழ்க்கையில் பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கான வழிகாட்டு குறிப்புகளையும் கவனமாகக் கற்றுக்கொள்கிறார்கள். நிர்வாகம், நியாயவிசாரணை, அமைப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் ஆகியவற்றைக் குறித்து பைபிள் போதிப்பவற்றையும் கற்றுக்கொள்கிறார்கள். மேடையிலிருந்து பேச்சுக் கொடுப்பதில் விசேஷப் பயிற்சியும் பெறுகிறார்கள், ஆவிக்குரிய ரீதியில் அவர்கள் இன்னும் முன்னேறுவதற்குத் தனிப்பட்ட உதவியையும் பெறுகிறார்கள்.
5 தகுதிகள்: இப்பள்ளியில் கலந்துகொள்பவர்களிடம் விசேஷத் தகுதிகள் எதிர்பார்க்கப்படுவது புரிந்துகொள்ளத்தக்கதே. விண்ணப்பதாரர்கள் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்காவது மூப்பர்களாக அல்லது உதவி ஊழியர்களாக சேவை செய்திருக்க வேண்டும். எல்லாரும் திருமணமாகாதவர்களாய், 23 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களாய் இருக்க வேண்டும். இவர்கள் ஆங்கிலம் வாசிக்கவும் எழுதவும் பேசவும் தெரிந்தவர்களாய் இருக்க வேண்டும், ஆரோக்கியமுள்ளவர்களாய், விசேஷக் கவனிப்போ, உணவுப் பத்தியமோ தேவைப்படாதவர்களாய் இருக்க வேண்டும். ஒழுங்கான பயனியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
6 சகோதரர்கள் மீது அன்பும், அவர்களுக்குச் சேவை செய்யும் ஆசையுமே ஒருவரை ஊழியப் பயிற்சிப் பள்ளிக்காக விண்ணப்பிக்கத் தூண்ட வேண்டும்; ஏதோ பெருமைக்கும் அந்தஸ்துக்கும் ஆசைப்பட்டு விண்ணப்பிக்கக் கூடாது. இத்தகைய அருமையான பயிற்சியைப் பெற்ற பிறகு பட்டதாரிகள், மற்றவர்கள் பயனடைவதற்காக தாங்கள் கற்றவற்றை கடைப்பிடிக்கும்படி எதிர்பார்க்கப்படுகிறார்கள்.—லூக். 12:48.
7 பயன்கள்: எட்டு வாரத் தீவிரப் பயிற்சியின்போது மாணாக்கர்கள் ‘விசுவாசத்திற்குரிய வார்த்தைகளிலும் நற்போதகத்திலும் தேறினவர்களாய்’ ஆகிறார்கள். (1 தீ. 4:6) இது, அவர்கள் நியமிக்கப்படுகிற சபைகளிலும், வட்டாரங்களிலும் மற்றவர்களுக்கு உதவியும் உற்சாகமும் அளிக்க அவர்களைத் தகுதியுள்ளவர்களாக ஆக்குகிறது. அப்படி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ள பல இடங்களில் வெளி ஊழிய நடவடிக்கைகள் அதிகரித்திருக்கின்றன, பயனியர் ஊழியம் செய்வதற்கான உற்சாகம் முக்கியமாக இளைஞர்களுக்குக் கிடைத்திருக்கிறது, கடவுளுடைய ஜனங்களுடன் புதிதாகக் கூட்டுறவுகொள்ளும் அநேகருக்குத் தனிப்பட்ட உதவி அளிக்க முடிந்திருக்கிறது.
8 நீங்கள் மணமாகாத மூப்பரா அல்லது உதவி ஊழியரா? 23 முதல் 50 வயதுக்குட்பட்டவரா? அப்படியானால், ஊழியப் பயிற்சிப் பள்ளிக்காக விண்ணப்பிப்பதைக் குறித்து நீங்கள் ஏன் யோசித்துப் பார்க்கக் கூடாது? நீங்கள் யெகோவாவுடைய சேவையில் நீண்டகால இலக்குகளை உடைய ஓர் இளம் சகோதரரா? அப்படியானால், இந்தப் ‘பெரிதும் அனுகூலமுமான கதவு’ வழியாய் நுழைவதற்கு உங்கள் வாழ்க்கையை எளிமையாகவும் எவ்விதத்திலும் கவனம் சிதறாததாகவும் நீங்கள் ஏன் வைத்துக்கொள்ளக் கூடாது? அவ்வாறு செய்வது உங்களுக்கு அளவிலா ஆனந்தத்தையும் பரம திருப்தியையும் தரும். ஊழியப் பயிற்சிப் பள்ளி அதன் பட்டதாரிகளுக்கு மட்டுமல்ல, உலகெங்குமுள்ள கடவுளுடைய மக்களுக்கும் உண்மையிலேயே ஆசீர்வாதமாக நிரூபித்திருக்கிறது.
[பக்கம் 6-ன் பெட்டி]
அவர்கள் பயிற்சியால் பயனடைந்த விதம்
“இந்தப் பயிற்சி, ஊழியத்தில் என்னை ரொம்பவே முன்னேற வைத்திருக்கிறது, அதுமட்டுமல்ல, பைபிளை உபயோகித்து ஞானமாய் மந்தையை மேய்க்கும் திறமையிலும் முன்னேற வைத்திருக்கிறது.”
“சபையில் பல்வேறு பொறுப்புகளைக் கையாளுவதற்கு இப்பள்ளி அதிக தன்னம்பிக்கையை எனக்கு அளித்திருக்கிறது.”
“கடவுளுடைய ஆட்சி முறையையும் அமைப்பையும் பற்றிய எண்ணத்தையே, ஏன், என் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையுமே அது மாற்றியிருக்கிறது.”
“தேவை அதிகமுள்ள இடங்களில் சேவை செய்யத் தயாராய் இருப்பதற்கான அவசியத்தைப் புரிந்துகொள்ள இந்தப் பயிற்சி எனக்கு உதவியிருக்கிறது.”