வாழ்க்கை சரிதை
“இப்போது நான் ஊழியத்தை ரொம்ப சந்தோஷமாக செய்கிறேன்!”
நியுசிலாந்தின் தெற்குப் பகுதியில் இருக்கிற பல்க்லுத்தா என்ற ஊரில்தான் நான் வளர்ந்தேன். நான் சின்னப் பிள்ளையாக இருந்தபோது எனக்கு யெகோவாவை ரொம்பப் பிடிக்கும். கூட்டங்களுக்குப் போவது என்றாலே எனக்கு குஷியா இருக்கும். சபையில் இருக்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருப்பேன். எனக்கு கூச்ச சுபாவம் இருந்தாலும் ஊழியத்துக்குப் போக ரொம்ப பிடிக்கும். எல்லா வாரமும் போய்விடுவேன். என்கூட பள்ளியில் படித்தவர்களிடமும் மற்றவர்களிடமும் யெகோவாவைப் பற்றி சொல்வதற்கு தயங்கவே மாட்டேன். நான் ஒரு யெகோவாவின் சாட்சியாய் இருப்பதை நினைத்து பெருமைப்பட்டேன். பதினொரு வயதில் ஞானஸ்நானம் எடுத்தேன்.
சலிப்புத்தட்ட ஆரம்பித்தது
எனக்குக் கிட்டத்தட்ட பதின்மூன்று வயது ஆனபோது யெகோவாமேல் இருந்த அன்பு குறைய ஆரம்பித்தது. என்கூட படிப்பவர்கள் எல்லாம் ரொம்ப சுதந்திரமாக இருப்பதுபோல் என் கண்ணுக்குப் பட்டது. அவர்கள் மாதிரியே நானும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அப்பா அம்மா போட்ட சட்டங்களும் பைபிளில் இருக்கிற சட்டங்களும் பாரமாகத் தோன்றியது. யெகோவாவின் சாட்சியாக இருப்பது ரொம்ப கஷ்டம் என்று நினைத்தேன். யெகோவா இருக்கிறாரா இல்லையா என்றெல்லாம் எனக்கு சந்தேகமில்லை. ஆனால், அவரோடு இருந்த நட்புதான் கொஞ்சம் கொஞ்சமாக பலவீனமாகிக்கொண்டே வந்தது.
செயலற்ற பிரஸ்தாபியாக ஆகிவிடக் கூடாது என்பதற்காக பேருக்கு ஊழியத்துக்குப் போனேன். ஊழியத்துக்காக தயாரிக்கவே மாட்டேன். அதனால், பேசுவதற்கே திணறினேன். எனக்கு மறு சந்திப்புகளோ பைபிள் படிப்புகளோ கிடைக்கவே இல்லை. ஊழியம் செய்வதற்கே சுத்தமாகப் பிடிக்காமல் போய்விட்டது. ‘வாராவாரம் மாசாமாசம் ஊழியத்துக்கு போக யாரால முடியும்?’ என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டேன்.
எனக்கு 17 வயது ஆனதும் இன்னும் சுதந்திரமாக வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதனால், வீட்டை விட்டு கிளம்பி ஆஸ்திரேலியாவுக்குப் போய்விட்டேன். நான் அப்படிப் போனது அப்பா அம்மாவுக்குக் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனாலும், நான் யெகோவாவைவிட்டுப் போய்விட மாட்டேன் என்று நம்பினார்கள்.
நான் ஆஸ்திரேலியாவுக்குப் போனதும் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது. எப்போதாவது ஒரு தடவைதான் கூட்டங்களுக்குப் போவேன். சில வயசு பையன்களும் பெண்களும் கூட்டங்களில் நல்ல பிள்ளைகளைப் போல் இருந்தார்கள். ஆனால், நைட் கிளப்புக்குப் போய் குடித்துக் கும்மாளம் போட்டார்கள். அவர்களோடு பழகுவது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. இப்போது நினைத்துப் பார்த்தால், நான் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைத்திருந்தேன் என்று தெரிகிறது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் நான் எதிலும் சந்தோஷமாக இல்லை.
முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொண்டேன்
கிட்டத்தட்ட இரண்டு வருஷங்களுக்குப் பிறகு, வட்டாரக் கண்காணியும் அவருடைய மனைவி தமாராவும் வந்து எங்களோடு ஒரு வாரத்துக்குத் தங்கினார்கள். அந்தச் சமயத்தில், கல்யாணம் ஆகாத நாலு சகோதரிகளுடன் சேர்ந்து ஒரு வீட்டில் நான் குடியிருந்தேன். என் வாழ்க்கை எந்தத் திசையில் போய்க்கொண்டு இருக்கிறது என்று யோசித்துப் பார்க்க தமாரா எனக்கு உதவி செய்தார். வட்டாரக் கண்காணி சபை வேலையைப் பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில் தமாரா எங்களோடு ஜாலியாக இருப்பார். நாங்கள் எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்து சந்தோஷமாக சிரித்து பேசிக்கொண்டு இருப்போம். தமாரா ரொம்ப சகஜமாகப் பழகினார். நாங்கள் தயக்கம் இல்லாமல் அவரிடம் பேச முடிந்தது. அது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. யெகோவாவுக்கு நிறைய சேவை செய்கிற ஒருவரால் ஜாலியாகவும் இருக்க முடியும் என்பது எனக்கு அப்போதுதான் புரிந்தது.
தமாரா எப்போதும் சுறுசுறுப்பாகவும் துடிப்போடும் இருப்பார். அவர் சத்தியத்தை ரொம்ப நேசித்தார். ஆர்வமாக ஊழியம் செய்வார். அவரைப் பார்ப்பவர்களுக்கு அவர் மாதிரியே இருக்க வேண்டும் என்ற ஆசை வரும். தன்னால் முடிந்த எல்லாவற்றையுமே அவர் யெகோவாவுக்காக செய்தார். அதனால் ரொம்ப சந்தோஷமாக இருந்தார். ஆனால், நான் வெறும் கடமைக்காக ஊழியம் செய்துகொண்டு இருந்தேன். அதனால் நான் சந்தோஷமாகவே இல்லை. தமாராவோடு பழகியது என் வாழ்க்கையையே மாற்றியது. முக்கியமான ஒரு பாடத்தை நான் கற்றுக்கொண்டேன்: நாம் ‘சந்தோஷமாகவும்’ ‘சந்தோஷ ஆரவாரத்தோடும்’ அவருக்கு சேவை செய்ய வேண்டும் என்றுதான் யெகோவா ஆசைப்படுகிறார்.—சங். 100:2.
ஊழியத்தை மறுபடியும் நேசிக்க ஆரம்பித்தேன்
தமாரா மாதிரியே நானும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதற்காக நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தது. அதற்குக் கொஞ்சக் காலம் எடுத்தது. நான் கொஞ்சம் கொஞ்சமாக சின்னச் சின்ன மாற்றங்களை செய்ய ஆரம்பித்தேன். முதலில், ஊழியத்துக்குத் தயாரிக்க ஆரம்பித்தேன். பிறகு, அவ்வப்போது துணைப் பயனியர் ஊழியம் செய்தேன். அதனால், பதட்டம் இல்லாமல் தைரியமாக ஊழியம் செய்ய முடிந்தது. நம்பிக்கையும் அதிகமானது. நான் எந்தளவுக்கு பைபிளைப் பயன்படுத்தினேனோ அந்தளவுக்கு ஊழியத்தைத் திருப்தியாக செய்ய முடிந்தது. சீக்கிரமாகவே மாதாமாதம் துணைப் பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்தேன்.
யாரெல்லாம் யெகோவாவுக்கு சந்தோஷமாக சேவை செய்தார்களோ அவர்கள் எல்லாருடனும் வயது வித்தியாசம் இல்லாமல் பழகினேன். அவர்கள் எல்லாரும் எனக்கு நெருங்கிய நண்பர்களானார்கள். வாழ்க்கையில் எதற்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதையும், தினமும் பைபிளைப் படிப்பது எவ்வளவு முக்கியம் என்பதையும் அவர்களைப் பார்த்து கற்றுக்கொண்டேன். போகப்போக, ஊழியம் செய்வது ரொம்ப பிடித்துப்போய்விட்டது. கொஞ்ச நாட்களில் ஒழுங்கான பயனியர் சேவையை ஆரம்பித்தேன். சின்ன வயதில் கூட்டங்களுக்குப் போனபோது எவ்வளவு சந்தோஷமாக இருந்ததோ, அதே சந்தோஷம் ரொம்ப வருஷங்களுக்கு அப்புறம் திரும்பவும் கிடைத்தது.
நிரந்தரமான பயனியர் பார்ட்னர் கிடைத்தார்
ஒரு வருஷத்துக்கு அப்புறம், அலெக்ஸ் என்ற ஒரு சகோதரரைச் சந்தித்தேன். அவர் ரொம்ப அன்பானவர். யெகோவாவையும் ஊழியத்தையும் ரொம்ப நேசித்தார். உதவி ஊழியராக இருந்தார். ஆறு வருஷங்களாக ஒழுங்கான பயனியராகவும் சேவை செய்துகொண்டு இருந்தார். மலாவியில் தேவை அதிகம் இருந்ததால் கொஞ்சக் காலம் அங்கேயும் சேவை செய்திருந்தார். அப்போது, மிஷனரிகளோடு பழகும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. வாழ்க்கையில் எப்போதும் யெகோவாவுக்கு முதலிடம் கொடுக்கச் சொல்லி அவர்கள் அவரை உற்சாகப்படுத்தியிருந்தார்கள்.
2003-ல், அலெக்ஸும் நானும் கல்யாணம் செய்துகொண்டோம். அன்றுமுதல் இன்றுவரை முழுநேர சேவையைத் தொடர்ந்து செய்துவருகிறோம். எங்களுடைய வாழ்க்கையில் நிறைய பாடங்களைக் கற்றுக்கொண்டோம். யெகோவா அளவில்லாமல் எங்களை ஆசீர்வதித்திருக்கிறார்.
யெகோவா எங்களுக்குக் கொடுத்த ஆசீர்வாதங்கள்
தைமூர்-லெஷ்டேவில் இருக்கிற க்ளெனோ நகரத்தில் ஊழியம் செய்கிறோம்
இந்தோனேசிய தீவுக் கூட்டத்தில், தைமூர்-லெஷ்டே என்ற ஒரு சின்ன நாடு இருக்கிறது. அங்கே போய் மிஷனரிகளாக சேவை செய்ய முடியுமா என்று 2009-ல் அமைப்பு எங்களைக் கேட்டது. அது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ரொம்ப சந்தோஷப்பட்டோம். அதே சமயத்தில் கொஞ்சம் பயமாகவும் இருந்தது. ஐந்து மாதங்களுக்குப் பிறகு, தைமூர்-லெஷ்டேவின் தலைநகரமான டிலிக்கு வந்து சேர்ந்தோம்.
இது எங்கள் வாழ்க்கையில் நடந்த தலைகீழ் மாற்றம் என்றே சொல்லலாம்! புது கலாச்சாரம்... மொழி... சாப்பாடு... அங்கிருந்த வாழ்க்கை... என எல்லாமே வித்தியாசமாக இருந்தது. ஊழியத்துக்குப் போகும்போது, வறுமையால் பாதிக்கப்பட்டவர்களையும் கல்வியறிவு இல்லாதவர்களையும் படுபயங்கரமான கொடுமைகளை அனுபவித்தவர்களையும் சந்தித்தோம். போராலும் வன்முறையாலும் அங்கிருந்த நிறைய பேர் உடலளவிலும் மனதளவிலும் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.a
ஊழியத்தில் நல்ல பலன்கள் கிடைத்தன. ஒரு தடவை, மரியாb என்ற 13 வயது பெண்ணைச் சந்தித்தேன். அவளுடைய அம்மா கொஞ்ச வருஷங்களுக்கு முன்னால் இறந்துபோயிருந்தார். அவளுடைய அப்பாவும் அவளைக் கைவிட்டிருந்தார். அதனால், எப்போதும் அவள் சோகமாக இருந்தாள். அவளுடைய வயதிலிருந்த நிறைய பெண்கள்போல், அவளுக்கும் வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்றே தெரியவில்லை. ஒரு சமயம், அவளுடைய மனதில் இருப்பதையெல்லாம் கொட்டி பயங்கரமாக அழுதாள். அது இப்போதும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. ஆனால், அவளுடைய பாஷை எனக்கு அவ்வளவாகத் தெரியாததால், அவள் என்ன சொன்னாள் என்றே எனக்குப் புரியவில்லை. ‘அவள ஆறுதல்படுத்துறதுக்கு தயவு செஞ்சு உதவி செய்யுங்க யெகோவா அப்பா’ என்று அந்த நேரத்தில் ஜெபம் செய்தேன். அப்புறம், சில வசனங்களை படித்துக் காட்டினேன். கொஞ்ச வருஷத்தில், மரியா சந்தோஷமான பெண்ணாக மாறிவிட்டாள். அவள் உடுத்துகிற விதம்... வாழ்க்கை... என எல்லாமே மாறிவிட்டது. பைபிள் படிப்புதான் அவளை அப்படி மாற்றியது. கொஞ்ச நாட்களில் அவள் ஞானஸ்நானம் எடுத்தாள். இப்போது, அவள் நிறைய பேருக்கு பைபிள் படிப்பு நடத்துகிறாள். இன்று, யெகோவாவின் குடும்பத்தில் அவளும் ஒருத்தி. அவளிடம் அன்பு காட்ட இன்று நிறைய பேர் இருக்கிறார்கள்.
தைமூர்-லெஷ்டேவில் நடக்கிற வேலையை யெகோவா ஆசீர்வதித்திருக்கிறார். கடந்த 10 வருஷங்களில்தான் அங்கே நிறைய பேர் ஞானஸ்நானம் எடுத்தார்கள். ஆனால், அவர்களில் நிறைய பேர் பயனியர்களாகவும் உதவி ஊழியர்களாகவும் மூப்பர்களாகவும் சேவை செய்கிறார்கள். வேறுசிலர், மொழிபெயர்ப்பு அலுவலகத்தில் சேவை செய்கிறார்கள். கூட்டங்களில் அவர்கள் பாடுவதையும், சிரித்த முகத்தோடு இருப்பதையும், யெகோவாவிடம் நல்ல பந்தத்தை வைத்திருப்பதையும் பார்க்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
நியமிக்கப்படாத ஒரு ஊழியப் பகுதியில், மற்றவர்களோடு சேர்ந்து அலெக்ஸும் நானும் நினைவு நாள் அழைப்பிதழைக் கொடுப்பதற்காகப் போகிறோம்
நினைத்துக்கூட பார்க்காத ஒரு வாழ்க்கை
ஆஸ்திரேலியாவில் இருந்த வாழ்க்கை வேறு, தைமூர்-லெஷ்டேவில் இருந்த வாழ்க்கை வேறு! இங்கே, பயங்கர கூட்டமாக இருக்கிற பஸ்களில் சிலசமயம் போவோம். சந்தையில் வாங்கிய கருவாட்டையும் காய்கறிகளையும் அதில் ஏற்றியிருப்பார்கள். பைபிள் படிப்புக்காக நான் போன சில வீடுகள் ரொம்ப சின்னதாகவும் பயங்கர சூடாகவும் இருந்தன. தரையும் அழுக்காக இருந்தது. கோழிகள் அங்கேயும் இங்கேயும் ஓடிக்கொண்டு இருந்தன. இவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் தைமூர்-லெஷ்டேவில் இருந்த வாழ்க்கை நான் நினைத்துக்கூட பார்க்காத அளவுக்கு சந்தோஷமாக இருந்தது.
ஊழியத்துக்குப் போகும் வழியில்...
என்னுடைய அப்பா அம்மாவுக்குதான் நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால், யெகோவாவைப் பற்றி எனக்கு அவர்கள் சொல்லிக் கொடுத்தார்கள். யெகோவாவோடு எனக்கு இருந்த பந்தம் என்னுடைய பருவ வயதில் ரொம்ப பலவீனமாக இருந்தது. அந்த சமயத்தில்கூட அவர்கள் எனக்கு ஆதரவாக இருந்தார்கள். நீதிமொழிகள் 22:6 சொல்வது எவ்வளவு உண்மை! என்னையும் அலெக்ஸையும் பார்த்து அப்பா அம்மா ரொம்ப பெருமைப்படுகிறார்கள். யெகோவா எங்களைப் பயன்படுத்துவதை நினைத்து சந்தோஷப்படுகிறார்கள். 2016-லிருந்து ஆஸ்திரலேசியா கிளை அலுவலகப் பகுதியில் வட்டார சேவை செய்கிறோம்.
தைமூர்-லெஷ்டேவில் இருக்கிற பிள்ளைகளிடம் கேலப் சோபியா வீடியோவை காட்டிக்கொண்டு இருக்கிறேன்
இப்போது நான் ஊழியத்தை ரொம்ப சந்தோஷமாக செய்கிறேன். இவ்வளவு அருமையான வேலையை, சலிப்புத்தட்டும் ஒரு வேலையாக ஒருகாலத்தில் நினைத்தேன் என்பதை இப்போது என்னால் யோசித்துப்பார்க்கக்கூட முடியவில்லை. வாழ்க்கையில் மேடு பள்ளங்கள் இருந்தாலும் யெகோவாவுக்கு முழு மனதோடு சேவை செய்தால், நமக்கு உண்மையான சந்தோஷம் கிடைக்கும் என்பதைப் புரிந்துகொண்டேன். பதினெட்டு வருஷங்களாக அலெக்ஸோடு சேர்ந்து நான் யெகோவாவுக்கு சேவை செய்துவருகிறேன். என் வாழ்க்கையிலேயே இந்த நாட்கள்தான் ரொம்ப சந்தோஷமான நாட்கள்! “உங்களிடம் தஞ்சம் அடைபவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்கள் எப்போதும் சந்தோஷத்தோடு உங்களைப் புகழ்ந்து பாடுவார்கள். . . . உங்கள் பெயரை நேசிப்பவர்கள் உங்களை நினைத்து சந்தோஷப்படுவார்கள்” என்று தாவீது சொன்னது எவ்வளவு உண்மை!—சங். 5:11.
சாதாரண மக்களுக்கு பைபிளை பற்றி சொல்லிக்கொடுப்பது எவ்வளவு சந்தோஷத்தைத் தருகிறது!
a தைமூர்-லெஷ்டேவில் இருந்த மக்கள் சுதந்திரத்துக்காக 1975-லிருந்து போர் செய்தார்கள். அந்தப் போர் கிட்டத்தட்ட இருபது வருஷங்கள் நடந்தது.
b பெயர் மாற்றப்பட்டிருக்கிறது.