போரின் பின்விளைவுகள்
“இரண்டாம் உலகப் போருக்கு பின்பு எப்போதுமே இல்லாத அளவுக்கு போர்கள் இப்போது இந்த உலகத்தில் அதிகமாகிக்கொண்டே வருகின்றன. கிட்டத்தட்ட உலக மக்கள்தொகையில் கால்வாசி பேர், அதாவது 200 கோடி மக்கள், போர் நடக்கும் பகுதியில் வாழ்கிறார்கள்.”
ஐ.நா. சபையின் துணை பொதுச் செயலாளர் அமினா ஜே. முகமது, ஜனவரி 26, 2023.
அமைதிப் பூங்காவாக இருக்கிற இடங்களில் கூட எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம். போர் நடக்கும் இடங்களிலிருந்து தொலைதூரத்தில் இருப்பவர்கள்கூட பாதிக்கப்படுகிறார்கள். ஏனென்றால் அரசியல், வியாபாரம், தொழில்நுட்பம் போன்ற பல விஷயங்களால் இந்த உலகம் இணைக்கப்பட்டிருக்கிறது. போர் ஓய்ந்தாலும் அதன் பின்விளைவுகள் ரொம்ப நாட்களுக்கு நீடிக்கின்றன. அதற்கு சில உதாரணங்களைப் பார்க்கலாம்:
உணவு பற்றாக்குறை. “இன்றைக்கும் பசி பட்டினிக்கான முக்கிய காரணமே போர்தான். உலகத்தில் உணவு கிடைக்காமல் திண்டாடுகிற 70 சதவீத மக்கள் போர் நடக்கிற இடத்தில்தான் வாழ்கிறார்கள்” என்று உலக உணவுத் திட்டத்தின் அறிக்கை சொல்கிறது.
உடல்நல மனநல பிரச்சினைகள். ஒரு இடத்தில் போர் நடப்பதற்கான அறிகுறிகள் தெரிந்தாலே அங்கிருக்கிற மக்களுக்கு மன அழுத்தமும் பதற்றமும் ஏற்படும். போரின் கோரப் பிடியில் சிக்கித் தவிப்பவர்களுக்கு உடலளவில் மட்டுமல்ல மனதளவிலும் நிறைய பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. வருத்தமான விஷயம் என்னவென்றால், அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளும் கிடைப்பதில்லை.
அகதிகளாக தள்ளப்படும் நிலைமை. செப்டம்பர் 2023-ன் கணக்குப்படி, உலகம் முழுவதும் 11.4 கோடிக்கும் அதிகமானவர்கள் தங்கள் நாட்டையும் வீட்டையும் விட்டு வெளியேற வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்று அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் சொல்கிறது. இதற்கு முக்கியமான காரணமே போர்தான்.
பொருளாதார நெருக்கடி. போர் நடப்பதால் பணவீக்கம் ஏற்படும், அதாவது விலைவாசி ராக்கெட் வேகத்தில் உயரும். மருத்துவம், கல்வி போன்ற சேவைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளை அரசாங்கம் ராணுவத்துக்கு செலவழிக்கலாம். போரால் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்வதற்கும் எக்கச்சக்கமாக செலவாகலாம். இதனால் மக்கள் பாடுதான் பெரும் திண்டாட்டமாகிறது.
சுற்றுச்சூழல் பிரச்சினை. இயற்கை வளங்களை போர் நாசப்படுத்துவதால் மக்கள் பெரிதளவில் பாதிக்கப்படுகிறார்கள். உயிர்வாழ மிகவும் அவசியமான நிலம், நீர், காற்று மாசுபடுவதால் நீண்ட கால உடல்நல பிரச்சினைகள் வருகின்றன. போர் முடிந்த பின்பும், புதைத்துவைக்கப்பட்ட கண்ணிவெடிகள் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் ஆபத்தும் இருக்கிறது.
உண்மைதான், போர் பேரழிவையும் பெரும் செலவையும் ஏற்படுத்துகிறது.