மனிதர்களால் போர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது
போர் வேரோடு அழிக்கப்படும்—எப்படி?
மனிதர்கள் அல்ல, கடவுள்தான் ‘பூமி முழுவதும் போர்களுக்கு முடிவுகட்டுவார்’ என்று பைபிள் சொல்கிறது.—சங்கீதம் 46:9.
மனித அரசாங்கங்களுக்கு கடவுள் முடிவு கட்டுவார்
பைபிளில் அர்மகெதோன்a என்று அழைக்கப்படுகிற போர் மூலமாக மனித அரசாங்கங்களுக்கு கடவுள் முடிவுகட்டுவார். (வெளிப்படுத்துதல் 16:16) அந்தச் சமயத்தில், ‘சர்வவல்லமையுள்ள கடவுளின் மகா நாளில் நடக்கப்போகும் போருக்காகப் பூமி முழுவதுமுள்ள ராஜாக்கள் கூட்டிச்சேர்க்கப்படுவார்கள்.’ (வெளிப்படுத்துதல் 16:14) அர்மகெதோன் என்ற கடவுளுடைய போர் இந்தப் பூமியில் நடக்கிற எல்லா போர்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும்.
மனித அரசாங்கங்களுக்கு பதிலாக கடவுளுடைய அரசாங்கம் பரலோகத்திலிருந்து பூமியை ஆட்சி செய்யும். இந்த அரசாங்கம் ஒருபோதும் அழியாது. (தானியேல் 2:44) தன்னுடைய மகனான இயேசு கிறிஸ்துவை அந்த அரசாங்கத்தின் ராஜாவாக கடவுள் தேர்ந்தெடுத்திருக்கிறார். (ஏசாயா 9:6, 7; மத்தேயு 28:18) முழு பூமியும் ஒரே அரசாங்கத்தின்கீழ், இயேசுவின் ஆட்சியின்கீழ் வந்துவிடும். அதில் எல்லா மனிதர்களும் ஒற்றுமையாக வாழ்வார்கள். இயேசு தன்னை பின்பற்றியவர்களிடம் இந்த அரசாங்கத்துக்காகத்தான்b ஜெபம் செய்ய சொன்னார்.—மத்தேயு 6:9, 10.
இயேசு மனித ஆட்சியாளர்களைப் போல் இல்லை, அவர் தன்னுடைய அதிகாரத்தை சொந்த காரியத்துக்காக பயன்படுத்த மாட்டார். அவர் நியாயமாக நடந்துகொள்வார், பாரபட்சம் பார்க்க மாட்டார். அதனால் இனம், தேசம், கலாச்சாரம் ஆகியவற்றின் அடிப்படையில் அநியாயமாக நடத்தப்படுவோமோ என்று யாரும் கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது. (ஏசாயா 11:3, 4) தங்களுடைய உரிமைகளை கேட்டு யாரும் போராட வேண்டிய அவசியமும் இருக்காது. ஏனென்றால், நம் ஒவ்வொருவர் மேலும் இயேசு அக்கறை காட்டுவார். “ஏழைகளின் கூக்குரலைக் கேட்டு அவர் உதவி செய்வார். எளியவனுக்கும் ஆதரவற்றவனுக்கும் கைகொடுப்பார். . . . கொடுங்கோல் ஆட்சியிலிருந்தும் வன்முறையிலிருந்தும் அவர்களை விடுவிப்பார்.”—சங்கீதம் 72:12-14.
கடவுளுடைய அரசாங்கம் ஆபத்தான ஆயுதங்களை பூமியிலிருந்து ஒழித்துக்கட்டும். (மீகா 4:3) அதோடு, வேண்டுமென்றே வன்முறையில் ஈடுபடுகிற... மற்றவர்களுடைய நிம்மதியை பறிக்கிற... பொல்லாதவர்களையும் இருந்த இடம் தெரியாமல் செய்துவிடும். (சங்கீதம் 37:9, 10) பூமியில் எந்த மூலையில் இருந்தாலும் ஆண், பெண், குழந்தை என ஒவ்வொருவரும் பாதுகாப்பாக உணர்வார்கள்.—எசேக்கியேல் 34:28.
மக்கள் ஒருவரோடு ஒருவர் சண்டை போடுவதற்கு காரணமாக இருக்கிற வறுமை, பசிபட்டினி, வீட்டுவசதி இல்லாத நிலை போன்ற பிரச்சினைகளை கடவுளுடைய அரசாங்கம் சுவடு தெரியாமல் அழித்துவிடும். அந்த அரசாங்கம் இந்த பூமியை ஆட்சி செய்யும்போது மனிதர்கள் நிறைவான வாழ்க்கை வாழ்வார்கள். எல்லாருக்கும் சத்தான உணவு ஏராளமாக கிடைக்கும், சௌகரியமான வீட்டில் சந்தோஷமாக வாழ்வார்கள்.—சங்கீதம் 72:16; ஏசாயா 65:21-23.
போர்களால் ஏற்பட்ட படுமோசமான விளைவுகளையெல்லாம் கடவுளுடைய அரசாங்கம் சரிசெய்துவிடும். உடலிலும் மனதிலும் ஏற்பட்ட காயங்களையும், இதயத்தை நொறுக்கும் வேதனைகளையும் அது குணமாக்கும். இறந்தவர்களும் உயிரோடு எழுந்து இந்தப் பூமியில் மறுபடியும் வாழ்வார்கள். (ஏசாயா 25:8; 26:19; 35:5, 6) குடும்பங்கள் ஒன்றிணைக்கப்படும். “முன்பு இருந்தவை ஒழிந்துபோய்விட்டன” என்று பைபிள் சொல்கிறபடி, முன்பு நடந்த மோசமான விஷயங்கள் எதுவுமே மனிதர்களுடைய நினைவுக்கே வராது.—வெளிப்படுத்துதல் 21:4.
பாவத்துக்கு கடவுள் முடிவுகட்டுவார்
கடவுளுடைய அரசாங்கம் இந்தப் பூமியை ஆட்சி செய்யும்போது “அன்புக்கும் சமாதானத்துக்கும் ஊற்றாக இருக்கிற” ஒரே உண்மை கடவுளான யெகோவாவைc எல்லாரும் வணங்குவார்கள். (2 கொரிந்தியர் 13:11) ஒருவரோடு ஒருவர் சமாதானமாக வாழ்வது எப்படி என்று மக்கள் கற்றுக்கொள்வார்கள். (ஏசாயா 2:3, 4; 11:9) கடவுள் பேச்சை கேட்டு நடக்கும் மக்களுக்கு பாவத்திலிருந்தும் அதன் பாதிப்புகளிலிருந்தும் விடுதலை கிடைக்கும்.—ரோமர் 8:20, 21.
சாத்தானுக்கும் அவனுடைய கெட்ட தேவதூதர்களுக்கும் கடவுள் முடிவுகட்டுவார்
மனிதர்களை போர் செய்ய தூண்டுகிற சாத்தானையும் அவனுடன் சேர்ந்துகொண்ட பொல்லாத தேவதூதர்களையும் கடவுளுடைய அரசாங்கம் அழித்துவிடும். (வெளிப்படுத்துதல் 20:1-3, 10) அவர்களால் மக்கள்மேல் மோசமான செல்வாக்கு செலுத்த முடியாது. அதனால் “மிகுந்த சமாதானம் இருக்கும்.”—சங்கீதம் 72:7.
போர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க கடவுளுக்கு ஆசை மட்டுமல்ல அதிகாரமும் இருக்கிறது. அதனால், போர்களுக்கு முடிவுகட்டப் போவதாக கடவுள் கொடுத்த வாக்குறுதி நிச்சயம் நடக்கும் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம்.
போரையும் வன்முறையையும் முடிவுகட்டுவதற்கு கடவுளுக்கு சக்தி இருக்கிறது, அதை எப்படிச் செய்வது என்ற ஞானமும் இருக்கிறது. (யோபு 9:4) கடவுளால் செய்ய முடியாதது எதுவுமே இல்லை.—யோபு 42:2.
மக்கள் கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது கடவுளுக்கு வேதனையாக இருக்கும். (ஏசாயா 63:9) “வன்முறையை விரும்புகிற எவனையும் அவர் வெறுக்கிறார்.”—சங்கீதம் 11:5.
சொன்ன வார்த்தையை கடவுள் காப்பாற்றுவார், அவர் பொய் சொல்லவே மாட்டார்.—ஏசாயா 55:10, 11; தீத்து 1:3.
எதிர்காலத்தில் கடவுள் கொண்டுவரப் போகிற சமாதானத்துக்கு முடிவே இருக்காது
இந்தப் பூமியை போரில்லாத பூமியாக கடவுள் மாற்றுவார்
a jw.org-ல் இருக்கிற “அர்மகெதோன் போர் என்றால் என்ன?” என்ற கட்டுரையை வாசியுங்கள்.
b jw.org-ல் இருக்கிற கடவுளுடைய அரசாங்கம் என்றால் என்ன? என்ற வீடியோவைப் பாருங்கள்.
c யெகோவா என்பது கடவுளுடைய பெயர்.—சங்கீதம் 83:18.