போர்கள் தொடர்கதையாவது ஏன்?
போர்கள் ஏன் நடக்கின்றன என்பதையும் அவை ஏன் இன்னும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன என்பதை பற்றியும் பைபிள் சொல்கிறது.
பாவம்
நம்முடைய முதல் பெற்றோரான ஆதாமையும் ஏவாளையும் கடவுள் தன்னுடைய சாயலில் படைத்தார். (ஆதியாகமம் 1:27) அதனால் கடவுளுடைய குணங்களான சமாதானம், அன்பு போன்றவற்றை அவர்களால் இயல்பாகவே காட்ட முடியும். (1 கொரிந்தியர் 14:33; 1 யோவான் 4:8) இருந்தாலும், ஆதாமும் ஏவாளும் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடக்கவில்லை, அவர்கள் பாவம் செய்தார்கள். அவர்களிடமிருந்துதான் பாவமும் மரணமும் நம் எல்லாருக்கும் வந்தது. (ரோமர் 5:12) பாவம் செய்கிற இயல்பு மனிதர்களுக்கு இருப்பதால்தான் அவர்கள் கெட்ட விஷயங்களை யோசிக்கிறார்கள், கொடூரமாகவும் நடக்கிறார்கள்.—ஆதியாகமம் 6:5; மாற்கு 7:21, 22.
மனித அரசாங்கம்
தங்களை தாங்களே ஆட்சி செய்கிற விதத்தில் கடவுள் மனிதர்களை படைக்கவில்லை. பைபிள் இப்படி சொல்கிறது: “மனுஷனுக்குத். . . தன் காலடிகளை நடத்தும் அதிகாரம் இல்லை.” (எரேமியா 10:23) அதனால்தான் மனித அரசாங்கத்தால் போருக்கும் வன்முறைக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை.
சாத்தானும் அவனுடைய கெட்ட தேவதூதர்களும்
“இந்த உலகம் முழுவதும் பொல்லாதவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது” என்று பைபிள் சொல்கிறது. (1 யோவான் 5:19) இந்த ‘பொல்லாதவன்’ பிசாசாகிய சாத்தான் என்று அழைக்கப்படுகிறான். இவன் ஈவிரக்கமற்ற கொலைகாரன். (யோவான் 8:44) சாத்தானும் அவனுடன் சேர்ந்துகொண்ட பொல்லாத தேவதூதர்களும், போரை ஆரம்பிப்பதற்கும் பொல்லாத காரியங்களை செய்வதற்கும் மனிதர்களை மறைமுகமாகத் தூண்டுகிறார்கள்.—வெளிப்படுத்துதல் 12:9, 12.
போருக்கும் வன்முறைக்கும் ஆணிவேராக இருக்கும் விஷயங்களை மனிதர்களால் முற்றிலுமாக எடுத்துப்போட முடியாது, ஆனால் கடவுளால் நிச்சயம் முடியும்!