விழிப்புடன் இருங்கள்!
கிறிஸ்தவர்கள் எப்படி இருப்பார்கள்?—பைபிள் என்ன சொல்கிறது?
இன்று நிறைய பேர் அவர்களை கிறிஸ்தவர்கள் என்று பெருமையாக சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால், மற்றவர்களிடம் அவர்கள் நடந்துகொள்ளும் விதம் மோசமாக இருக்கிறது. சிலர் அன்பே இல்லாமல் சுயநலமாக, அநியாயமாக நடக்கிறார்கள். இன்னும் சிலர், அவர்களுடைய கணவனுக்கோ மனைவிக்கோ உண்மையில்லாமல் இருக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது ‘நீங்களெல்லாம் கிறிஸ்தவர்களா’ என்று மக்கள் கேட்கிறார்கள்.
கிறிஸ்தவர்கள் எப்படி இருக்க வேண்டும்
‘நான் ஒரு கிறிஸ்தவன்’ என்று சொல்வது சுலபம். ஆனால் ஒரு கிறிஸ்தவராக வாழ்வது ரொம்ப முக்கியம். இயேசு கிறிஸ்துவின் சீஷர்களைத்தான் கிறிஸ்தவர்கள் என்று பைபிள் சொல்கிறது. (அப்போஸ்தலர் 11:26) “நீங்கள் எப்போதும் என் வார்த்தைகளைக் கடைப்பிடித்தால் நிஜமாகவே என் சீஷர்களாக இருப்பீர்கள்” என்று இயேசு சொன்னார். (யோவான் 8:31) உண்மைதான் யாராலும் இயேசுவின் வார்த்தைகளை நூறு சதவீதம் அப்படியே கடைப்பிடிக்க முடியாது. ஆனால், ஒரு கிறிஸ்தவர் இயேசு சொல்லிக்கொடுத்த விஷயங்களை கடைப்பிடித்து அதன்படி வாழ, தினமும் கடினமாக முயற்சி செய்வார். அவர் என்னவெல்லாம் செய்வார்? சில உதாரணங்களை பார்க்கலாம்.
கிறிஸ்தவர்கள் சுயநலமில்லாமல் அன்பு காட்டுகிறார்கள்
இயேசு என்ன சொன்னார்: “நீங்கள் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டுங்கள். நான் உங்கள்மேல் அன்பு காட்டியது போலவே நீங்களும் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்ட வேண்டுமென்ற புதிய கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டினால், நீங்கள் என்னுடைய சீஷர்கள் என்று எல்லாரும் தெரிந்துகொள்வார்கள்” என்று சொன்னார்.—யோவான் 13:34, 35.
இயேசு என்ன செய்தார்: இயேசு எந்த ஏற்றத்தாழ்வும், வித்தியாசமும் பார்க்காமல் எல்லாரிடமும் சுயநலமில்லாமல் அன்பு காட்டினார். உடம்பு முடியாதவர்களை குணமாக்கினார். பசியில் இருந்தவர்களுக்கு சாப்பாடு கொடுத்தார். மற்றவர்களுக்காக அவருடைய உயிரையே கொடுத்தார்.—மத்தேயு 14:14-21; 20:28.
கிறிஸ்தவர்கள் என்ன செய்வார்கள்: தாராளமாக கொடுப்பார்கள், பாரபட்சம் பார்க்க மாட்டார்கள், மன்னிப்பார்கள். இப்படி சுயநலமில்லாத அன்பை காட்டுவார்கள். உதவி தேவைப்படுகிறவர்களுக்கு உதவி செய்வார்கள். மற்றவர்களுக்காக தியாகங்கள் செய்யவும் தயாராக இருப்பார்கள்.—1 யோவான் 3:16.
கிறிஸ்தவர்கள் நேர்மையாக இருப்பார்கள்
இயேசு என்ன சொன்னார்: ‘நானே சத்தியம்.’—யோவான் 14:6.
இயேசு என்ன செய்தார்: இயேசுவின் சொல்லும் செயலும் நேர்மையாக இருந்தது. மற்றவர்களை பொய் சொல்லி ஏமாற்றி, அவர் நினைத்ததை செய்ய வைக்கவில்லை. ரொம்ப நேர்மையாக இருந்தார். அவருக்கு பிரச்சினை வந்தபோதும் அவருடைய நேர்மையை விட்டுக்கொடுக்கவில்லை.—மத்தேயு 22:16; 26:63-67.
கிறிஸ்தவர்கள் என்ன செய்வார்கள்: கிறிஸ்தவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள். திருட மாட்டார்கள். வரி கட்டுவார்கள். வேலை செய்யும் இடத்தில், வாங்கும் சம்பளத்துக்கு உண்மையாக வேலை செய்வார்கள். (ரோமர் 13:5-7; எபேசியர் 4:28) மோசடி செய்ய மாட்டார்கள். பரீட்சையில் ஏமாற்ற மாட்டார்கள். வேலைக்காக விண்ணப்பிக்கும்போதும் சரி மற்ற ஆவணங்களிலும் சரி பொய்யான தகவல்களை சேர்க்க மாட்டார்கள்.—எபிரெயர் 13:18.
கிறிஸ்தவர்கள் அன்பாக இருப்பார்கள்
இயேசு என்ன சொன்னார்: “உழைத்துக் களைத்துப்போனவர்களே, பாரமான சுமையைச் சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்குப் புத்துணர்ச்சி கொடுப்பேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாக இருக்கிறேன்; அதனால் என் நுகத்தடியை உங்கள் தோள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்; அப்போது, உங்களுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும். ஏனென்றால், என்னுடைய நுகத்தடி மென்மையாகவும் என்னுடைய சுமை லேசாகவும் இருக்கிறது” என்று சொன்னார்.—மத்தேயு 11:28-30.
இயேசு என்ன செய்தார்: யார் வேண்டுமானாலும் தயக்கமில்லாமல் இயேசுவிடம் போய் பேசலாம். அந்தளவுக்கு அவர் அன்பாக இருந்தார். அவர் சின்ன பிள்ளைகளிடம் அன்பாக பழகினார். மனம் உடைந்துபோனவர்களிடம் ஆறுதலாக பேசினார். எல்லாரையும் மதிப்பு மரியாதையோடு நடத்தினார்.—மாற்கு 10:13-15; லூக்கா 9:11.
கிறிஸ்தவர்கள் என்ன செய்வார்கள்: கிறிஸ்தவர்கள் மற்றவர்களிடம் அன்பாக பேசுவார்கள். அவர்களை தரக்குறைவாகவோ மோசமாகவோ நடத்த மாட்டார்கள். (எபேசியர் 4:29, 31, 32) மற்றவர்கள் மேல் அக்கறையோடு இருப்பார்கள். அவர்களுக்கு எப்படி உதவி செய்யலாம் என்று பார்த்துக்கொண்டே இருப்பார்கள்.—கலாத்தியர் 6:10.
கிறிஸ்தவ கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் உண்மையாக இருப்பார்கள்
இயேசு என்ன சொன்னார்: “கடவுள் இணைத்து வைத்ததை எந்த மனிதனும் பிரிக்காமல் இருக்கட்டும்.”—மாற்கு 10:9.
இயேசு என்ன செய்தார்: இயேசு கல்யாணம் ஆகாதவர்தான். ஆனால், கல்யாணம் ஆனவர்கள் ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தார். (மத்தேயு 19:9) கல்யாண வாழ்க்கையை கெடுத்துப்போடும் எதையும் செய்யக்கூடாது என்றும் எச்சரித்தார்.—மத்தேயு 5:28.
கிறிஸ்தவர்கள் என்ன செய்வார்கள்: கல்யாண வாழ்க்கையை கெடுத்துப்போடும் எந்த செயலையும் கிறிஸ்தவர்கள் செய்ய மாட்டார்கள். (எபிரெயர் 13:4) கணவன்-மனைவி ஒருவரையொருவர் அன்போடும் மரியாதையோடும் நடத்துவார்கள்.—எபேசியர் 5:28, 33.