யெகோவாவின் சாட்சிகள் என்ற அமைப்பை ஆரம்பித்துவைத்தவர் யார்?
யெகோவாவின் சாட்சிகளுடைய நவீன நாளைய அமைப்பு 19-ஆம் நூற்றாண்டின் முடிவில் ஆரம்பமானது. அந்த சமயத்தில், அமெரிக்கா, பென்ஸில்வேனியாவில் உள்ள பிட்ஸ்பர்கில் பைபிள் மாணாக்கரின் ஒரு சிறிய தொகுதியினர் பைபிளை ஒழுங்கான விதத்தில் ஆராய்ந்து படிக்க ஆரம்பித்தார்கள். அப்பொழுது அவர்கள் சர்ச் கோட்பாடுகளை பைபிள் உண்மையில் கற்பிப்பதோடு ஒப்பிட்டு பார்த்தார்கள். பிறகு, அவர்கள் கற்றுக்கொண்ட விஷயங்களை புத்தகங்களிலும், செய்தித்தாள்களிலும் இப்பொழுது காவற்கோபுரம்-யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது என அழைக்கப்படுகிற பத்திரிகையிலும் வெளியிட ஆரம்பித்தார்கள்.
நல்மனமுள்ள பைபிள் மாணாக்கரின் அந்தத் தொகுதியில் சார்லஸ் டேஸ் ரஸலும் ஒருவர். அந்தச் சமயத்தில், பைபிள் கல்வி புகட்டும் இந்த வேலையை ரஸல் முன்னின்று வழிநடத்தியதோடு காவற்கோபுர பத்திரிகையின் முதல் பதிப்பாளராகவும் இருந்தார்; என்றாலும், அவர் ஒரு புதிய மதத்தை ஸ்தாபிக்கவில்லை. ரஸலும் அன்று பைபிள் மாணாக்கர் என்று அறியப்பட்ட தொகுதியினரும், இயேசு கிறிஸ்துவின் போதனைகளை ஊக்குவித்து முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபை பின்பற்றின முறைகளை பின்பற்றவே விரும்பினார்கள். கிறிஸ்தவ மதத்தை ஸ்தாபித்தவர் இயேசுவே என்பதால் அவரே எங்கள் அமைப்பை ஸ்தாபித்தார் என கருதுகிறோம்.—கொலோசெயர் 1:18-20.