ரஸலின் படைப்புகளைப் பாராட்டிய இரு பாஸ்டர்கள்
யெகோவாவின் உண்மை கிறிஸ்தவ வணக்கத்தார் மத்தியில் அரும் தொண்டாற்றிய சார்ல்ஸ் டேஸ் ரஸல், 1891-ல் முதன்முறையாக ஐரோப்பாவுக்கு பயணப்பட்டார். வழியில் இத்தாலியில் பினேராலோ என்ற நகரில் ரஸல் இறங்கியபோது, டானியலே ரிவார் என்ற பேராசிரியரை சந்தித்தார். இவர் வால்டென்ஸ்கள்a என்ற மதப் பிரிவின் முன்னாள் பாஸ்டர் ஆவார். ரிவார் தன் ஊழிய பணியிலிருந்து விலகிக்கொண்ட பின்னும் வால்டென்ஸ்களோடு நெருங்கிய தொடர்பு வைத்திருந்தபோதும், அவர் திறந்த மனமுள்ளவராக இருந்தார், சி. டி. ரஸல் எழுதிய பிரசுரங்கள் பலவற்றை படித்து வந்தார்.
ரஸல் எழுதிய த டிவைன் ப்ளான் ஆஃப் தி ஏஜஸ் என்ற புத்தகத்தை ரிவார் 1903-ல் இத்தாலியன் மொழியில் மொழிபெயர்த்து தன் செலவில் அச்சிட்டார். சொஸைட்டி இந்தப் புத்தகத்தை இத்தாலியன் மொழியில் வெளியிடுவதற்கு வெகு முன்னரே இவர் அச்சிட்டார். புத்தகத்தின் முன்னுரையில் ரிவார் இவ்வாறு எழுதியிருந்தார்: “இந்த முதல் இத்தாலிய பதிப்பை ஆண்டவரின் பாதுகாப்பில் விடுகிறோம். அதிலுள்ள குறைகள் மத்தியிலும் அது ஆண்டவரின் மகா பரிசுத்த பெயரை மகிமைப்படுத்துவதில் பங்களித்து, இத்தாலியன் மொழி பேசும் அவருடைய பிள்ளைகளுடைய பக்தியை வளர்க்கும்படி அதை அவர் ஆசீர்வதிப்பாராக. இந்தப் புத்தகத்தை வாசிப்பவர்கள் கடவுளுடைய நோக்கம் மற்றும் அன்பின் ஐசுவரியம், ஞானம், அறிவு ஆகியவற்றின் ஆழத்தை புரிந்துகொண்டு அவருக்கே நன்றி செலுத்தட்டும். அவருடைய கிருபையினாலேயே இந்தப் புத்தகத்தை வெளியிட முடிந்திருக்கிறது.”
ஸயன்ஸ் உவாட்ச்டவர் அண்டு ஹெரால்டு ஆஃப் கிறைஸ்ட்ஸ் பிரசன்ஸ் என்ற பத்திரிகையையும் ரிவார் இத்தாலியன் மொழியில் மொழிபெயர்க்க ஆரம்பித்தார். 1903-ல் அது காலாண்டு பதிப்பாக வெளி வந்துகொண்டிருந்தது; அதுவே இப்போது காவற்கோபுரம் பத்திரிகையாக வெளிவருகிறது. அந்தச் சமயத்தில் யெகோவாவின் சாட்சிகள் பைபிள் மாணாக்கர் என்று அழைக்கப்பட்டார்கள். ஆனால் பேராசிரியர் ரிவார் ஒரு பைபிள் மாணாக்கராக ஆகாவிட்டாலும் அவர்களுடைய பிரசுரங்களில் விளக்கப்பட்டிருந்த பைபிள் செய்தியை பரப்புவதில் அதிக ஆர்வம் காட்டினார்.
“என் கண்ணை மறைத்திருந்த செதிள்கள் கீழே விழுந்ததைப் போல உணர்ந்தேன்”
ரஸலின் பிரசுரங்களை பெரிதும் பாராட்டிய மற்றொரு பாஸ்டர் வால்டென்ஸ்கள் பிரிவைச் சேர்ந்த ஜூசெப்பே பாங்கெட்டி என்பவர். கத்தோலிக்கராக இருந்த ஜூசெப்பேயின் தந்தை, மதம் மாறியபோது வால்டென்ஸ்களின் போதனைகளை அவருக்குக் கற்றுக்கொடுத்தார். 1894-ல் ஜூசெப்பே பாஸ்டராகி, அப்பூலியா, ஆப்ரூட்ஸி என்னும் இடங்களிலும் எல்பா, சிசிலி தீவுகளிலும் வால்டென்ஸ்களுக்கு ஊழியம் செய்து வந்தார்.
ரஸலின் த டிவைன் ப்ளான் ஆஃப் தி ஏஜஸ் புத்தகத்தை சொஸைட்டி 1905-ல் இத்தாலியன் மொழியில் வெளியிட்டது. பாங்கெட்டி அந்தப் புத்தகத்திற்கு உற்சாகமாக ஒரு விமர்சனத்தை எழுதினார். புராட்டஸ்டன்டு பத்திரிகையான லா ரிவிஸ்டா கிறிஸ்டியானா இதை வெளியிட்டது. “[ரஸலின் புத்தகம்] எங்களுக்கு அதிக அறிவொளியூட்டும் நம்பகமான ஒரு வழிகாட்டி, பரிசுத்த வேதாகமத்தை பயனுள்ள விதத்தில் படித்து பலன் பெற விரும்பும் எந்த ஒரு கிறிஸ்தவனுக்கும் அது வழிகாட்டியாகவே இருக்கிறது . . . நான் அதை வாசித்து முடித்தவுடன் என் கண்ணை மறைத்திருந்த செதிள்கள் கீழே விழுந்ததைப் போல உணர்ந்தேன், கடவுளின் வழி இன்னும் நேரானதாகவும் இன்னும் எளிதானதாகவும் தோன்றியது. பொதுவாக முரணாக தெரிந்தவைகூட மறைந்துவிட்டன. ஒரு சமயம் புரிந்துகொள்வதற்கு கடினமாக இருந்த கோட்பாடுகள், எளிமையானவையாகவும் முழுவதும் ஏற்றுக்கொள்ள முடிந்தவையாகவும் தோன்றின. இதுவரை புரிந்துகொள்ள முடியாதிருந்தவை தெளிவாயின. கிறிஸ்துவின் மூலம் உலகை இரட்சிப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட இந்த வியத்தகு ஏற்பாடு மலைப்பை ஏற்படுத்தும் வகையில் வெகு எளிமையாக இருந்தது. ‘ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது!’ என அப்போஸ்தலன் சொன்ன வார்த்தைகளையே ஆச்சரியத்தோடு என்னையும் சொல்ல வைத்தது.”—ரோமர் 11:33.
ரெமீஷோ கூமினீடி 1925-ல் சொன்ன விதமாக, பாங்கெட்டி பைபிள் மாணாக்கரின் ஊழியத்தில் “மிகுந்த ஆர்வம்” காட்டினார், கோட்பாடுகள் சம்பந்தப்பட்டதில் அவர்களது விளக்கங்களை “முழுமையாக நம்பினார்.” தனக்குத் தெரிந்த வழிகளில் அவற்றை பரப்பவும் செய்தார்.
வேத வசனங்களில் சொல்லப்பட்டதற்கு இசைவாக, யெகோவாவின் சாட்சிகளைப் போலவே இவரும் பூமிக்குரிய உயிர்த்தெழுதலில் நம்பிக்கை வைத்திருந்தார் என்பது பாங்கெட்டியின் எழுத்துக்களிலிருந்து தெளிவாகிறது. 70 வாரங்களைப் பற்றிய தானியேல் தீர்க்கதரிசனத்தில் இயேசு மரிக்கவிருந்த ஆண்டு முன்னதாகவே தீர்மானிக்கப்பட்டு கடவுளால் வெளிப்படுத்தப்பட்டது என்பதாக விளக்கப்பட்டிருந்த விஷயத்திலும் பைபிள் மாணாக்கருடன் ஒத்துப்போனார். (தானியேல் 9:24-27) பல தடவை சர்ச்சின் போதனைகளை அவர் வெளிப்படையாக கண்டித்தார்; இயேசு கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்பு, வருடத்துக்கு ஒரு முறை மாத்திரமே “சரியாக அந்த மரண நாளின் போதே” அனுசரிக்கப்பட வேண்டும் என்று நம்பினார். (லூக்கா 22:19, 20) அவர் டார்வினின் பரிணாம கோட்பாட்டை ஏற்க மறுத்தார், போர்களில் கிறிஸ்தவர்கள் ஈடுபடக்கூடாது என்று அவர் உறுதியாக சொன்னார்.—ஏசாயா 2:4.
ஒரு சமயம் ரஸலின் புத்தகங்களைப் பற்றி ஜே. கேம்பெல் வால் என்பவரோடு பாங்கெட்டி பேசிக் கொண்டிருந்தார். வால்ஸ் அவற்றை விமர்சித்தபோது, பாங்கெட்டி இவ்வாறு பதில் கூறினார்: “ரஸலின் ஆறு தொகுதிகளையும் நீங்கள் வாசித்தால், மிக மிக ஆனந்தப் பரவசமடைவீர்கள் என்பது நிச்சயம். உணர்ச்சிபொங்க எனக்கு நன்றியும் சொல்வீர்கள். எனக்கு பிடித்த கோட்பாடு என நான் பெருமையாக விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கவில்லை; பதினொரு ஆண்டுகளுக்கு முன்பாக அந்தப் புத்தகங்களை நான் படித்தேன்; பரிசுத்த வேதாகமத்தை முழுக்க முழுக்க அடிப்படையாகக் கொண்ட ஒரு படைப்பின் மூலம் எனக்கு அறிவொளியையும் ஆறுதலையும் அளித்ததற்காக இன்றும் நாள் தவறாமல் கடவுளுக்கு நன்றி சொல்லுகிறேன்.”
“செவிகொடுங்கள், செவிகொடுங்கள், செவிகொடுங்கள்”
வால்டென்ஸ்களின் பாஸ்டர்களாக இருந்த டானியலே ரிவாரும் ஜூசெப்பே பாங்கெட்டியும் பைபிளுக்கு ரஸல் அளித்த விளக்கங்களை நன்றியோடு ஏற்றுக்கொண்டது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். பாங்கெட்டி இவ்வாறு எழுதினார்: “சுவிசேஷ ஊழியர்களாகிய நம் எவருக்கும், ஏன் நம்முடைய பாஸ்டர்கள் அல்லது இறையியல் பேராசிரியர்களுக்குக்கூட எல்லாமே தெரியாது. ஆம், நாம் கற்றுக்கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. . . . நமக்கு . . . எல்லாமே தெரியும் என்று நினைக்காமல் பொறுமையாக செவிகொடுக்க வேண்டும். ஆராய்ந்து பார்க்கும்படி நம்மிடம் சொல்லப்படும் எதையும் நிராகரித்து விடக்கூடாது. அதற்கு பதிலாக, செவிகொடுங்கள், செவிகொடுங்கள், செவிகொடுங்கள்.”
யெகோவாவின் சாட்சிகள் வீடுகளில் வந்து அறிவிக்கும் ராஜ்ய செய்திக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் செவிகொடுக்கிறார்கள். பைபிள் சத்தியங்களை அறிய ஆவலாயிருக்கும், எங்குமுள்ள திறந்த மனம் படைத்தவர்கள் “என்னைப் பின்பற்றிவா” என்ற இயேசுவின் அழைப்புக்கு செவிசாய்க்கிறார்கள்.—மாற்கு 10:17-21; வெளிப்படுத்துதல் 22:17.
[அடிக்குறிப்பு]
a பிரான்ஸ் நாட்டிலுள்ள லயான்ஸில் 12-ஆம் நூற்றாண்டில் வணிகராக இருந்த பையர் வாடீ அல்லது பீட்டர் வால்டோ என்பவரின் பெயரிலிருந்து இவர்கள் இவ்வாறு அறியப்பட்டனர். வால்டோ தன் நம்பிக்கைகளின் நிமித்தம் கத்தோலிக்க திருச்சபையிலிருந்து விலக்கப்பட்டார். வால்டென்ஸ் பிரிவினரைப் பற்றிய கூடுதலான தகவலுக்கு மார்ச் 15, 2002 காவற்கோபுரம் இதழில் வெளிவந்த “வால்டென்ஸ்கள்—மத பேதத்திலிருந்து புராட்டஸ்டன்ட் மதத்திற்கு” என்ற கட்டுரையைக் காண்க.
[பக்கம் 28-ன் படம்]
பேராசிரியர் டானியலே ரிவார்
[பக்கம் 29-ன் படம்]
ஜூசெப்பே பாங்கெட்டி
[படத்திற்கான நன்றி]
பாங்கெட்டி: La Luce, April 14, 1926