வால்டென்ஸ்கள்—மத பேதத்திலிருந்து புராட்டஸ்டன்ட் மதத்திற்கு
வருடம் 1545. தென் பிரான்ஸிலுள்ள ப்ரவான்ஸின் அழகிய லூயிபேராங் பகுதி. மத சகிப்பின்மையால் தூண்டப்பட்ட ஒரு பயங்கரமான திட்டத்தை செயலாற்றுவதற்காக ஒரு படை அணிவகுத்தது. இதன் விளைவாக ஒரு வாரத்திற்கு இரத்தக்களம்தான்.
கிராமங்கள் தரைமட்டமாக்கப்பட்டன, அங்கிருந்த மக்கள் சிறைப்படுத்தப்பட்டனர் அல்லது கொல்லப்பட்டனர். ஐரோப்பாவையே நடுங்க வைத்த இந்தப் படுகொலையில் முரட்டுத்தனமான படைவீரர்கள் கொடூரமான அட்டூழியங்களில் இறங்கினர். சுமார் 2,700 பேர் கொல்லப்பட்டனர், 600 பேர் தட்டையான தாழ்ந்த ஒருவகை கப்பல்களில் துடுப்பு வலிக்க அனுப்பப்பட்டனர்; பெண்களும் பிள்ளைகளும் பட்ட அவஸ்தையை சொல்லவே வேண்டாம். இரத்த வெறிகொண்ட இந்த திட்டத்தை செயல்படுத்திய இராணுவ தலைவரை பிரெஞ்சு மன்னரும் போப்பும் வாயார புகழ்ந்தனர்.
சமய சீர்திருத்தத்தின் காரணமாக ஏற்கெனவே ஜெர்மனி சின்னாபின்னமாகி இருந்தது. அந்த சமயத்தில்தான், புராட்டஸ்டன்ட் மதம் பரவுவதைக் குறித்த கவலையில், தன்னுடைய ஆட்சி பகுதியில் மத பேதமுள்ளவர்கள் என கருதப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க பிரான்ஸின் கத்தோலிக்க மன்னர் முதலாம் பிரான்ஸிஸ் விசாரணைகள் நடத்தினார். மத பேதமுள்ள ஒருசிலரையே இங்குமங்குமாக காண்பதற்கு பதிலாக மொத்த கிராமங்களே மதக் கருத்துக்களில் வேறுபட்டிருப்பதை ப்ரவான்ஸின் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இந்த மத பேதத்தை ஒழித்துக்கட்ட ஆணை பிறப்பிக்கப்பட்டு, 1545-ல் நடந்த படுகொலையில் அது நிறைவேற்றப்பட்டது.
இந்த மத பேத வாதிகள் யார்? கட்டுக்கடங்காத மத சகிப்பின்மைக்கு குறியிலக்காக இவர்கள் இருந்ததேன்?
வசதியிலிருந்து வறுமைக்கு
படுகொலையில் கொல்லப்பட்டவர்கள் ஒரு மத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். அது 12-ம் நூற்றாண்டிலேயே துவங்கிய ஒரு இயக்கம்; ஐரோப்பாவின் பெரும் பாகத்தில் அது பரவியிருந்தது. அது பரவிய விதமும் பல நூற்றாண்டுகளாக தாக்குப்பிடித்து நின்ற விதமும் மத கருத்து வேறுபாட்டின் வரலாற்று பக்கங்களில் அதற்கு தனிச்சிறப்பான இடத்தைப் பிடித்து தந்திருக்கின்றன. அந்த இயக்கம் சுமார் 1170-ம் வருடத்தில் தொடங்கியதாக அநேக வரலாற்றாசிரியர்கள் ஒத்துக்கொள்கின்றனர். லயான்ஸ் என்னும் பிரெஞ்சு நகரில், வாடீ என்ற செல்வந்தரான வணிகர், கடவுளை சந்தோஷப்படுத்துவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்வதில் ஆழ்ந்த ஆர்வம் காட்டினார். தன் ஆஸ்திகளை எல்லாம் விற்று தரித்திரருக்குக் கொடுக்கும்படி ஒரு செல்வந்தனிடம் இயேசு கிறிஸ்து கூறிய அறிவுரை இவருக்கு தூண்டுகோலாக அமைந்திருக்கலாம்; வாடீ சுவிசேஷத்தை பிரசங்கிப்பதற்காக, தன் குடும்பத்துக்கு தேவையான பண வசதியை செய்துவிட்டு பின்னர் தன் செல்வத்தை எல்லாம் துறந்தார். (மத்தேயு 19:16-22) இவரை விரைவில் பின்பற்ற ஆரம்பித்தவர்கள் வால்டென்ஸ்கள் என்று பின்னர் அறியப்பட்டார்கள்.a
ஏழ்மை, பிரசங்க ஊழியம், பைபிள் ஆகியவையே வாடீயின் வாழ்க்கையில் முக்கிய அம்சங்களாய் இருந்தன. மத குருமாரின் செல்வச்செழிப்புக்கு எதிராக கண்டனம் செய்வது ஒன்றும் புதிதல்ல. கருத்து வேறுபாடுகளை கொண்டிருந்த குருவர்க்கத்தைச் சேர்ந்த பலர், சர்ச்சின் ஊழல்களையும் அதிகார துஷ்பிரயோகத்தையும் குறித்து கொஞ்ச காலமாகவே கண்டித்து பேசியிருந்தனர். ஆனால் வாடீ ஒரு சாமானியர்; அவரைப் பின்பற்றிய பலரும் அப்படித்தான். மக்கள் பேசும் மொழியில் பைபிள் இருக்க வேண்டும் என்று அவர் உணர்ந்ததற்கான காரணத்தை இது தெளிவாக்குகிறது. சர்ச்சின் லத்தீன் மொழிபெயர்ப்பு பைபிளை மதகுருமார் மட்டுமே பயன்படுத்த முடிந்ததால், சுவிசேஷங்களையும் பைபிளின் மற்ற புத்தகங்களையும் பிரான்ஸின் மத்திப கிழக்குப் பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு புரிகிற பிராந்திய பிரெஞ்சு ப்ரோவென்ஷல் மொழியில் மொழிபெயர்க்கச் செய்தார் வாடீ.b பிரசங்கிக்கச் சொல்லும் இயேசுவின் கட்டளைக்கு இசைய, லயான்ஸின் எளியோர் தங்கள் செய்தியை தெருவில் சென்று பிரசங்கித்தனர். (மத்தேயு 28:19, 20) வெளியில் சென்று பிரசங்கிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியதே வால்டென்ஸ்களிடம் சர்ச்சுக்கு இருந்த நோக்குநிலையை பாதிப்பதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது என்று வரலாற்றாசிரியர் காப்ரியல் ஆடிஸியா விவரிக்கிறார்.
கத்தோலிக்கரிலிருந்து மத பேத வாதிகளாக
அந்தக் காலப் பகுதியில், குருவர்க்கத்தினர் மட்டுமே பிரசங்க ஊழியம் செய்தனர்; பிரசங்கிப்பதற்காக அதிகாரம் அளிக்கும் பொறுப்பும் சர்ச்சின் கையிலேயே இருந்தது. வால்டென்ஸ்களை ஒன்றும் அறியாதவர்களும் படிப்பறிவற்றவர்களுமாக மதகுருமார் கருதினர்; ஆனால் 1179-ல், பிரசங்கிப்பதற்கு அதிகாரப்பூர்வமான அனுமதியளிக்கும்படி போப் மூன்றாம் அலெக்ஸாண்டரிடம் வாடீ கேட்டுக்கொண்டார். அனுமதி வழங்கப்பட்டது, ஆனால் அது உள்ளூர் பாதிரிமார் அங்கீகரித்தால் பிரசங்கிக்கலாம் என்ற நிபந்தனைக்குட்பட்டதாய் இருந்தது. இது “கிட்டத்தட்ட முற்றிலுமாக மறுப்பதற்கு சமமாகவே இருந்தது” என்று வரலாற்றாசிரியர் மால்கம் லாம்பர்ட் குறிப்பிடுகிறார். உண்மையில், பாமரர் பிரசங்கிப்பதற்கு தடை விதித்தார் லயான்ஸின் ஆர்ச்பிஷப் ஷான் பெல்மிங். “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது” என்று அப்போஸ்தலர் 5:29-ஐ மேற்கோள் காட்டி வாடீ பதிலளித்தார். தடை உத்தரவுக்கு இசைந்து செல்ல மறுத்ததால் 1184-ல் வாடீ சர்ச்சிலிருந்து விலக்கி வைக்கப்பட்டார்.
லயான்ஸின் டயஸிஸிலிருந்து வால்டென்ஸ்கள் விலக்கப்பட்டு நகரத்திற்கு வெளியே துரத்தி வேட்டையாடப்பட்ட போதிலும், இந்த ஆரம்ப கண்டனம் அவ்வளவு தீவிரமாக அமல்படுத்தப்பட்டதாக தெரியவில்லை. வால்டென்ஸ்களின் நேர்மையையும் அவர்களுடைய வாழ்க்கை முறையையும் சாதாரண மக்கள் பலர் வியந்து பாராட்டினர்; பிஷப்புகள்கூட அவர்களுடன் தொடர்ந்து பேசிக் கொண்டுதான் இருந்தனர்.
வரலாற்றாசிரியர் யூயன் காம்ரன் சொல்லுகிறபடி, வால்டென்ஸிய பிரசங்கிகள் “ரோம சர்ச்சை எதிர்த்தே ஆக வேண்டும் என்பதற்காக” எதிர்க்கவில்லை. அவர்கள் வெறுமனே “பிரசங்கிக்கவும் கற்பிக்கவும் விரும்பினார்கள்.” அவர்களுடைய அதிகாரத்தையும் செல்வாக்கையும் படிப்படியாகவும் நிரந்தரமாகவும் குறைக்கும்படியான ஆணைகள் தொடர்ந்து பிறப்பிக்கப்பட்டதால் அந்த இயக்கம் மத பேதமாகவே மாறியது என்று வரலாற்றாசிரியர்கள் சொல்கின்றனர். வால்டென்ஸ்களுக்கு எதிராக 1215-ல் நான்காவது லேட்டரன் பொதுக் குழு போட்ட தடையால் சர்ச் கண்டனங்கள் உச்சக்கட்டத்தை எட்டின. இது அவர்களுடைய பிரசங்க ஊழியத்தை எவ்வாறு பாதித்தது?
தலைமறைவாகின்றனர்
1217-ம் வருடம் வாடீ இறந்தார்; அவரைப் பின்பற்றியவர்கள், துன்புறுத்துதல் காரணமாக பிரான்ஸின் மலைப்பாங்கான பள்ளத்தாக்குகள், ஜெர்மனி, வட இத்தாலி, மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் என நாலாபுறமும் சிதறிப் போனார்கள். துன்புறுத்துதலினால் வால்டென்ஸ்கள் நாட்டுப்புறங்களில் குடியிருக்க தொடங்கினார்கள்; இது பல இடங்களில் அவர்களுடைய பிரசங்கிப்புக்கு முட்டுக்கட்டையாய் அமைந்தது.
1229-ல், பிரான்ஸின் தெற்கு பகுதியில் காத்தரி அல்லது ஆல்பஜன்ஸிஸ்களுக்கு எதிரான தன் போராட்டத்தை கத்தோலிக்க சர்ச் முடித்துக்கொண்டது.c அடுத்ததாக அவர்களுடைய கடும் தாக்குதல்களுக்கு ஆளானவர்கள் வால்டென்ஸ்கள். சர்ச்சின் விரோதிகள் அனைவரையும் ஒடுக்குமுறை விசாரணை விரைவில் ஈவிரக்கமின்றி தாக்கவிருந்தது. பயத்தால் வால்டென்ஸ்கள் தலைமறைவாக செயல்பட வேண்டியதாயிற்று. 1230-ல் அவர்கள் இனியும் வெளிப்படையாக பிரசங்கித்து வரவில்லை. ஆடிஸியா பின்வருமாறு விளக்குகிறார்: “புதிய ஆடுகளை தேடி கண்டுபிடிப்பதற்கு பதிலாக . . . , மதம் மாறியவர்களை பேணி காப்பதிலேயே அவர்கள் கவனம் செலுத்தினர்; வெளியிலிருந்து வரும் அழுத்தம் மற்றும் துன்புறுத்துதல் மத்தியிலும் அவர்கள் விசுவாசத்தை காத்துக்கொள்ள உதவினர்.” “பிரசங்கித்தல் அவசியமானதாகவே கருதப்பட்ட போதிலும் நடைமுறையில் அது முற்றிலும் மாறியிருந்தது” என்று அவர் மேலுமாக சொல்கிறார்.
அவர்களுடைய நம்பிக்கைகளும் பழக்கங்களும்
பிரசங்க நடவடிக்கைகளில் ஆண்களும் பெண்களும் ஈடுபடுவதற்கு பதிலாக, பிரசங்கிகளுக்கும் விசுவாசிகளுக்கும் இடையில் வித்தியாசத்தை 14-ம் நூற்றாண்டில் வால்டென்ஸ்கள் ஏற்படுத்தியிருந்தனர். நன்கு பயிற்றுவிக்கப்பட்ட ஆண்கள் மட்டுமே அப்போது மேய்க்கும் வேலையில் ஈடுபட்டனர். அலைந்து திரியும் இந்த ஊழியர்கள் பார்ப்கள் (அங்கிள்கள்) என பின்னர் அழைக்கப்பட்டனர்.
வால்டென்ஸிய குடும்பங்களை அவர்கள் வீடுகளில் சந்திக்க சென்ற பார்ப்கள், அவர்கள் இயக்கத்தை பரப்புவதைவிடவும் உள்ளதை காக்கவே முயன்றனர். பார்ப்கள் அனைவருக்கும் எழுத படிக்க தெரியும்; அவர்களுக்கு பைபிள் சார்ந்த பயிற்சி அளிக்கப்பட்டது; இந்தப் பயிற்சிக்கு ஆறு வருடகாலம் எடுத்தது. பைபிளை சொந்த மொழியில் வைத்திருந்ததால் தங்கள் மந்தைக்கு அதை விளக்க வசதியாக இருந்தது. வால்டென்ஸ்களில் பிள்ளைகள் உட்பட அனைவரும் பைபிள் கலாச்சாரத்தில் ஊறிப்போனவர்களாயும் வேதாகமத்தின் பெரும் பகுதிகளை மனப்பாடமாக சொல்ல முடிந்தவர்களாயும் இருந்ததை விரோதிகள்கூட ஒத்துக்கொண்டனர்.
பொய் சொல்லுதல், உத்தரிக்கும் ஸ்தலம், இறந்தவர்களுக்கு பூசைகள், கத்தோலிக்க சர்ச்சின் பாவ மன்னிப்பு சீட்டுகள், மாதாவையும் “புனிதர்க”ளையும் வழிபடுவது ஆகியவை வால்டென்ஸ்கள் ஏற்க மறுத்தவற்றில் சில விஷயங்கள். கர்த்தருடைய இராப்போஜனம், அல்லது கடைசி இராப்போஜனத்தை வருடாந்தரமாக ஆசரித்தார்கள். “சொல்லப்போனால்,” அவர்களுடைய வணக்கமுறை “சாமானியனின் மதமாக இருந்தது” என்கிறார் லாம்பர்ட்.
“இரட்டை வாழ்க்கை”
வால்டென்ஸிய சமுதாயத்தினரிடையே நெருங்கிய பந்தம் நிலவியது. அவர்கள் தங்கள் இயக்கத்தாரையே மணம் முடித்தனர்; இதன் காரணமாக நூற்றாண்டுகள் கடந்து செல்கையில் வால்டென்ஸ்களுக்கே உரிய குடும்பப் பெயர்களும் உருவாயின. ஆனாலும், தொடர்ந்து நிலைத்திருப்பதற்கான போராட்டத்தில், வால்டென்ஸ்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக தெரிவிக்காமலிருக்க முயன்றனர். அவர்களுடைய மத நம்பிக்கைகளும் பழக்கங்களும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்ததால், எதிரிகள் அவர்களுக்கு விரோதமாக அபாண்டமாக பழிசுமத்துவது சுலபமாக இருந்தது; உதாரணமாக அவர்கள் பிசாசு வழிபாட்டில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டினார்கள்.d
வரலாற்றாசிரியர் காமரன் சொல்கிறபடி கத்தோலிக்க வணக்கத்துடன் “கொஞ்சம் இணங்கிச்சென்று” தங்கள் நம்பிக்கைகளை விட்டுக்கொடுப்பதே இந்த எதிர்ப்புகளை சமாளிக்க வால்டென்ஸ்கள் மேற்கொண்ட ஒரு வழி. அநேக வால்டென்ஸ்கள் கத்தோலிக்க குருமாரிடம் பாவ மன்னிப்பு கோரினர், பூசைகளுக்கு சென்றனர், தீர்த்தங்களை பயன்படுத்தினர், புனிதத்தலங்களுக்கு யாத்திரைகளையும் மேற்கொண்டனர். “பல விஷயங்களில் தங்கள் அக்கம்பக்கத்து கத்தோலிக்கர் செய்தவற்றையே செய்தனர்” என்று லாம்பர்ட் குறிப்பிடுகிறார். காலப்போக்கில் வால்டென்ஸ்கள் “இரட்டை வாழ்க்கை வாழ்ந்தனர்” என்று நேரடியாக ஆடிஸியா குறிப்பிடுகிறார். “ஓரளவு அமைதியான வாழ்க்கையை காத்துக்கொள்வதற்காக, ஒரு பக்கம் பார்வைக்கு கத்தோலிக்கரைப் போலவே நடந்துகொண்டனர்; மறுபக்கம், அவர்களுடைய சமுதாயம் தொடர்ந்திருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்வதற்காக ஒருசில சடங்குகளையும் பழக்கங்களையும் தங்கள் மத்தியில் கடைப்பிடித்து வந்தனர்” என்று அவர் மேலுமாக கூறுகிறார்.
மத பேதத்திலிருந்து புராட்டஸ்டன்ட் மதத்திற்கு
16-வது நூற்றாண்டில், சமய சீர்திருத்தம் ஐரோப்பிய மத நிலவரத்தை தீவிரமாக மாற்றியது. மத சகிப்பின்மைக்கு பலியானவர்கள் தங்கள் நாட்டிலேயே சட்டப்பூர்வ அங்கீகாரத்தை நாடலாம் அல்லது அதிக சாதகமான நிலைமைகள் நிலவும் இடங்களைத் தேடி குடிபெயரலாம் என்ற நிலைமை ஏற்பட்டது. மத பேதமும் அப்போது அவ்வளவு பிரச்சினைக்குரியதாக இருக்கவில்லை, ஏனென்றால் ஸ்தாபிக்கப்பட்ட பாரம்பரிய மதத்தைக் குறித்து அநேகர் கேள்வி எழுப்ப தொடங்கியிருந்தனர்.
1523-ம் வருடத்திலேயே, பிரபல சீர்திருத்தவாதி மார்ட்டின் லூத்தர் வால்டென்ஸ்களைப் பற்றி குறிப்பிட்டார். 1526-ல், ஐரோப்பாவில் மத சம்பந்தமாக ஏற்பட்ட முன்னேற்றங்களைக் குறித்த செய்தியை வால்டென்ஸிய பார்ப் ஒருவர் ஆல்ப்ஸ் பகுதிக்கு கொண்டுவந்தார். இதைத் தொடர்ந்து வந்தது கருத்து பரிமாற்றத்தின் காலம்; புராட்டஸ்டன்ட் தொகுதியினர் தங்கள் கருத்துக்களை வால்டென்ஸ்களிடம் பகிர்ந்து கொண்டனர். பைபிளை மூல மொழிகளிலிருந்து பிரெஞ்சு மொழிக்கு முதன்முறையாக மொழிபெயர்க்க ஆதரவளிக்கும்படி வால்டென்ஸ்களுக்கு புராட்டஸ்டன்டுகள் ஊக்கமளித்தனர். இப்படி 1535-ல் அச்சிடப்பட்ட பைபிள் ஆலிவேட்டான் பைபிள் என்று பின்னர் அறியப்பட்டது. ஆனாலும் இதில் வினோதமான விஷயம் என்னவென்றால் அநேக வால்டென்ஸ்களுக்கு பிரெஞ்சு மொழி புரியாது.
கத்தோலிக்க சர்ச்சின் துன்புறுத்துதல் தொடர்ந்தபோது, குடிபெயர்ந்து சென்ற புராட்டஸ்டன்டுகளைப் போலவே பேரெண்ணிக்கையான வால்டென்ஸ்களும் தென் பிரான்ஸிலுள்ள பாதுகாப்பான ப்ரவான்ஸ் பகுதியில் குடியேறினர். இவ்வாறு இவர்கள் குடிபெயர்வதைக் குறித்து அதிகாரிகள் விரைவில் எச்சரிக்கப்பட்டனர். வால்டென்ஸ்களின் வாழ்க்கை முறையையும் ஒழுக்கத்தையும் குறித்து எவ்வளவோ சாதகமான அறிக்கைகள் இருந்தபோதிலும், அவர்களுடைய உண்மைத்தன்மையை சிலர் சந்தேகித்து, அமைதியையும் ஒழுங்கையும் காப்பதற்கு அவர்கள் அச்சுறுத்தலாய் இருப்பதாக குற்றஞ்சாட்டினார்கள். மெரின்டால் ஆணை பிறப்பிக்கப்பட்டது; அதன் விளைவாகவே இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் சொல்லப்பட்ட படுபயங்கரமான இரத்தக்களம் ஏற்பட்டது.
கத்தோலிக்கருக்கும் வால்டென்ஸ்களுக்கும் இடையே உறவு தொடர்ந்து சீரழிந்து வந்தது. தங்களுக்கு விரோதமாக தாக்குதல்கள் நடத்தப்பட்டபோது வால்டென்ஸ்கள் தற்காப்புக்காக ஆயுதம் தாங்கிய படையையும்கூட சார்ந்திருந்தனர். இந்தச் சச்சரவே அவர்கள் புராட்டஸ்டன்ட் தொகுதியினருடன் சேர காரணமாயிற்று. இவ்வாறாக வால்டென்ஸ்கள், புராட்டஸ்டன்ட் மதத்துடன் இணைந்துகொண்டனர்.
பல நூற்றாண்டுகளாக, பிரான்ஸிலிருந்து தொலை தூரத்திலுள்ள நாடுகளாகிய உருகுவேயிலும் ஐக்கிய மாகாணங்களிலும் வால்டென்ஸிய சர்ச்சுகள் நிறுவப்பட்டிருக்கின்றன. என்றாலும், “சமய சீர்திருத்த காலத்தில் வால்டென்ஸிய மதமும் முடிவுக்கு வந்தது” என்று சொல்கிற ஆடிஸியோவின் கருத்தையே அநேக வரலாற்றாசிரியர்கள் ஒப்புக்கொள்கின்றனர்; அந்தச் சமயத்தில் அதைப் “புராட்டஸ்டன்ட் மதம் விழுங்கிக் கொண்டது.” உண்மையில் அதற்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே வால்டென்ஸிய இயக்கம் ஆரம்பத்திலிருந்த ஆர்வத்தை இழந்துவிட்டது. பைபிள் அடிப்படையில் செய்த பிரசங்கிப்பு மற்றும் போதிப்பு வேலையை பயத்தின் காரணமாக அதன் அங்கத்தினர்கள் கைவிட்டபோதே அவ்வாறாகிவிட்டது.
[அடிக்குறிப்புகள்]
a வாடீ என்பவர் வால்டெஸ், வால்டீஸீயஸ், அல்லது வால்டோ என்றெல்லாம் பலவாறு அழைக்கப்படுகிறார். “வால்டென்ஸ்கள்” என்பது வால்டோ என்ற பெயரிலிருந்து வந்ததாக தெரிகிறது. வால்டென்ஸ்கள் அல்லது வால்டென்ஸியர்கள், லயான்ஸின் எளியோர் என்றும் அறியப்பட்டனர்.
b 1199-ம் வருடத்திலேயே, மக்கள் தங்கள் சொந்த மொழியில் பைபிளை வாசித்து அதைக் குறித்து கலந்து பேசுகிறார்கள் என்பதாக போப் மூன்றாம் இன்னசென்ட்டிடம் வடகிழக்கு பிரான்ஸிலுள்ள மெட்ஸின் பிஷப் முறையிட்டார். அநேகமாக வால்டென்ஸ்களை மனதில் வைத்துத்தான் அந்த பிஷப் சொல்லியிருக்க வேண்டும்.
c காவற்கோபுரம், 1995, செப்டம்பர் 1, பக்கங்கள் 27-30-ல் “காத்தரிகள்—அவர்கள் கிறிஸ்தவ உயிர்த்தியாகிகளா?” என்ற கட்டுரையைக் காண்க.
d தொடர்ச்சியாக வால்டென்ஸ்கள் அவதூறாக பேசப்பட்டதிலிருந்தே வாடரீ (பிரெஞ்சில் வாட்வா) என்ற பதம் வந்தது. மத பேத வாதிகளாக சந்தேகிக்கப்பட்டவர்களை அல்லது பிசாசு வணக்கத்தாரை விவரிக்க இந்தப் பதம் பயன்படுத்தப்படுகிறது.
[பக்கம் 23-ன் தேசப்படம்/படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
வால்டென்ஸ்கள் செல்வாக்கு செலுத்திய பகுதிகள்
பிரான்ஸ்
லயான்ஸ்
ப்ரவான்ஸ்
லூயிபேராங்
ஸ்ட்ராஸ்பர்க்
மிலான்
ரோம்
பெர்லின்
ப்ராக்
வியன்னா
[படம்]
1535 ஆலிவேட்டான் பைபிள் மொழிபெயர்ப்புக்கு வால்டென்ஸ்கள் ஆதரவளித்தனர்
[படத்திற்கான நன்றி]
பைபிள்: © Cliché Bibliothèque nationale de France, Paris
[பக்கம் 20, 21-ன் படங்கள்]
வாடீ
வயதான இரு வால்டென்ஸிய பெண்கள் எரிக்கப்படுதல்
[படத்திற்கான நன்றி]
பக்கங்கள் 20, 21: © Landesbildstelle Baden, Karlsruhe