காத்தரிகள்—அவர்கள் கிறிஸ்தவ உயிர்த்தியாகிகளா?
“அவர்கள் எல்லோரையும் கொல்லுங்கள்; தம்முடைய பிள்ளைகளை கடவுள் அறிவார்.” 1209-ல் அந்தக் கோடைகால நாளன்று தென் பிரான்ஸிலிருந்த பிஸியர்ஸ்ஸின் குடிமக்கள் அனைவரும் படுகொலை செய்யப்பட்டனர். கத்தோலிக்க சிலுவைப்போர் வீரர்களுக்கு போப்பின் தலைமை பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டிருந்த மடத்துறவி ஆர்னல்ட் அமல்ரிக் எந்த இரக்கத்தையும் காட்டவில்லை. கத்தோலிக்கர்களுக்கும் சமய எதிர்வாதிகளுக்கும் எப்படி வித்தியாசத்தை அறிந்துகொள்வது என்று அவருடைய ஆட்கள் கேட்டபோது மேலே குறிப்பிடப்பட்டுள்ள துர்கீர்த்தியுள்ள பதிலை அவர் தந்தார் என்று அறிக்கை செய்யப்படுகிறது. கத்தோலிக்க சரித்திராசிரியர்கள் அதன் வலிமையைக் குறைத்து பின்வருமாறு எழுதுகின்றனர்: “கவலைப்படாதீர்கள். ஒருசில சமய எதிர்வாதிகளே மதமாற்றமடைவார்கள் என நான் நம்புகிறேன்.” சரியாக அவருடைய பதில் எதுவாக இருப்பினும், கத்தோலிக்க உயர் சமயகுருக்களால் நடத்தப்பட்ட சுமார் 3,00,000 சிலுவைப்போர் வீரர்களின் கைகளால் குறைந்தது 20,000 ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்தப் படுகொலைக்கு காரணம் என்ன? தென்-மத்திய பிரான்ஸிலிருந்த லாங்குவடாக் மாகாணத்திலிருந்த சமய எதிர்வாதிகள் என்றழைக்கப்பட்டவர்களுக்கு விரோதமாக மூன்றாவது போப் இன்னொஸன்ட் தொடுத்திருந்த அல்பிஜென்ஸிய சிலுவைப்போரின் ஆரம்பமே அது. சுமார் 20 வருடங்களுக்குப் பிறகு அது முடிவடைவதற்குள் அநேகமாக பத்து லட்சம் மக்கள்—காத்தரிகள், வால்டென்ஸஸ்கள், அநேக கத்தோலிக்கர்களுங்கூட—உயிரிழந்தனர்.
இடைக்கால ஐரோப்பாவில் மத உட்பூசல்
பொ.ச. 11-வது நூற்றாண்டில் வாணிபத்தின் வேகமான வளர்ச்சி இடைக்கால ஐரோப்பாவின் சமுதாய, பொருளாதார கட்டமைப்புகளில் பெரும் மாற்றங்களை விளைவித்தது. அதிகரித்துவந்த தொழில் வினைஞர்களும் வணிகர்களும் குடியேற பட்டணங்கள் பல முளைத்தன. இது புதிய கருத்துகள் உருவாக வழிவகுத்தது. ஐரோப்பாவில் எங்குமிராத அளவு குறிப்பிடத்தக்க ஒத்துப்போகும் தன்மையும் முன்னேறிய நாகரீகமும் செழித்த லாங்குவடாக்கில் மத உட்பூசல் வேர்விட ஆரம்பித்தது. லாங்குவடாக்கிலிருந்த டௌலௌஸ் நகரம் ஐரோப்பாவிலிருந்த செல்வச்செழிப்பான நகரங்களில் மூன்றாவதாக இருந்தது. அப்பிரதேசங்களில் தான் பிரெஞ்சு நாடோடி இசைப்பாடகர்கள் செழித்தனர், அவர்களுடைய பாடல்களில் சிலவற்றில் அரசியல் மற்றும் மத கருத்துகள் அடங்கியிருந்தன.
11-வது மற்றும் 12-வது நூற்றாண்டுகளிலிருந்த மத சூழ்நிலையை விவரித்து வரலாறு மற்றும் மத தத்துவங்களின் மறுபார்வை என்ற பிரெஞ்சு புத்தகம் சொல்கிறது: “அதற்கு முந்திய நூற்றாண்டில் இருந்ததைப்போன்றே 12-வது நூற்றாண்டிலும் குருமார்களின் ஒழுக்கங்கள், அவர்களின் செல்வ வளம், கைக்கூலிக்கு ஆட்படும் பண்பு, அவர்களின் ஒழுக்கக்கேடு ஆகியவை கேள்விக்கிடமாயின, ஆனால் முக்கியமாக அவர்களுடைய செல்வமும் அதிகாரமும், அரசாங்க அதிகாரிகளுடன் வஞ்சமாய் கூடி வேலைசெய்வதும், மட்டுக்குமீறி பணிந்துவிடும் தன்மையுமே குறைகூறப்பட்டன.”
பயணம் செய்த பிரசங்கிகள்
ஐரோப்பாவிலும் விசேஷமாக தென் பிரான்ஸிலும் வட இத்தாலியிலும் சமயப் பிரிவினைவாத கருத்து கொண்ட, பயண பிரசங்கிகளின் அதிகரிப்புக்கு சர்ச்சுக்குள் பெருகியிருந்த அக்கிரமமே காரணம் என்பதை மூன்றாவது போப் இன்னொஸன்ட்டும் ஒத்துக்கொண்டார். அத்தகையோரில் பெரும்பான்மையானவர்கள் காத்தரிகளாகவோ அல்லது வால்டென்ஸஸ்களாகவோ இருந்தனர். மக்களுக்கு போதிக்காதிருந்ததற்காக குருக்களை கடிந்துகொண்டு அவர் சொன்னார்: “மக்களுக்கு ஆவிக்குரிய அப்பம் தேவையாயிருக்கிறது. நீங்களோ அதை அவர்களுக்கு பிட்டுக்கொடுப்பதில்லை.” ஆயினும், மக்களுக்கு பைபிள் கல்வியை அதிகரிப்பதற்கு பதிலாக இன்னொஸன்ட் சொன்னார்: “தெய்வீக வேத வார்த்தைகள் அத்தனை ஆழ்ந்த கருத்துள்ளவையாய் இருப்பதால், சாதாரணமானவர்களும் படிப்பறியாதவர்களும் மட்டுமல்லர், புத்திக்கூர்மையுள்ளவர்களும் கற்றறிந்தவர்களும்கூட அவற்றைப் புரிந்துகொள்ள முயற்சிக்க தகுதியற்றவர்கள்.” குருக்களைத் தவிர வேறெவரும் பைபிளை படிக்கக்கூடாதென தடைசெய்யப்பட்டது, பின்பு லத்தீனில் மட்டும் படிக்க அனுமதிக்கப்பட்டது.
கருத்துவேறுபாடு கொண்டவர்களின் பயண பிரசங்கத்தை தடுக்க, டோமினிக்கர்கள் அல்லது ஃபிரயர் பிரசங்கிகளின் அணி ஏற்படுத்தப்படுவதற்கு போப் ஒப்புதல் அளித்தார். செல்வச்செழிப்பிலிருந்த கத்தோலிக்க குருவர்க்கத்திலிருந்து வித்தியாசப்பட்ட இந்த ஃபிரயர்கள் தென் பிரான்ஸிலிருந்த “சமய எதிர்வாதிகளிடமிருந்து” கத்தோலிக்க மரபுக்கோட்பாடுகளை பாதுகாக்க நியமிக்கப்பட்டனர். காத்தரிகளோடு விவாதித்து அவர்களை மறுபடியும் கத்தோலிக்க மந்தைக்குள் கொண்டுவர முயற்சிக்கும்படி போப் தன் பிரதிநிதிகளையும் அனுப்பினார். அம்முயற்சிகள் தோல்வியுற்றதாலும், சமய எதிர்வாதி என்று நினைக்கப்படும் ஒருவரால் அந்தப் பிரதிநிதிகளில் ஒருவர் கொல்லப்பட்டதாலும், மூன்றாம் இன்னொஸன்ட் 1209-ல் அல்பிஜென்ஸிய சிலுவைப்போர் ஆரம்பிக்க கட்டளையிட்டார். காத்தரிகள் எண்ணிக்கையில் மிகுதியாயிருந்த பட்டணங்களில் ஒன்று அல்பி. எனவே சர்ச் வரலாற்றுப்பதிவாளர்கள் காத்தரிகளை அல்பிஜென்ஸியர்கள் (பிரெஞ்சு மொழியில், அல்பிஜியாய்ஸ்) என்று குறிப்பிட்டு, அப்பகுதியிலிருந்த வால்டென்ஸஸ் உட்பட எல்லா “சமய எதிர்வாதிகளையும்” குறிப்பிட அப்பதத்தை பயன்படுத்தினர். (கீழேயுள்ள பெட்டியைப் பார்க்கவும்.)
காத்தரிகள் எனப்பட்டவர்கள் யார்?
“காத்தர்” என்ற வார்த்தை “தூய” என்னும் அர்த்தமுடைய கிரேக்க வார்த்தையான காதராஸ் என்பதிலிருந்து வருகிறது. 11 முதல் 14-வது நூற்றாண்டு வரை காத்தரிகளின் சமயக்கொள்கை விசேஷமாக வட இத்தாலியிலிருந்த லொம்பார்டியிலும், லாங்குவடாக்கிலும் பரவியது. காத்தரிகளின் நம்பிக்கைகள் ஒருவேளை அயல்நாட்டு வணிகர்களாலும் மிஷனரிகளாலும் கொண்டுவரப்பட்ட கிழக்கத்திய இருபொருள் உண்மை கோட்பாடும் சமரச மறையியல் கோட்பாடும் சோர்ந்த கலவையாக இருந்தன. என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் ரிலிஜியன் விளக்குகிறபடி, காத்தரிகளின் இருபொருள் உண்மை கோட்பாடு நம்பிக்கை “இரண்டு நியமங்களில்: ஒன்று, ஆவிக்குரியவை அனைத்தையும் கட்டுப்படுத்தும் நன்மை, மற்றொன்று மனிதனின் உடல் உட்பட ஜடப்பொருள் சம்பந்தமான உலகத்துக்கு காரணமாயுள்ள தீமை,” என்பதன் பேரில் இருந்தது. ஜடப்பொருள் உலகை சாத்தான் படைத்தான் எனவும் அது தவிர்க்கமுடியாதபடி அழியும்படி தீர்க்கப்பட்டிருப்பதாகவும் காத்தரிகள் நம்பினர். இந்தத் தீய, பொருள்சம்பந்தப்பட்ட உலகிலிருந்து விடுபடுவோம் என அவர்கள் நம்பிக்கொண்டிருந்தனர்.
பரிபூரணர், விசுவாசிகள் என்று இரண்டு பிரிவுகளாக காத்தரிகள் பிரிக்கப்பட்டிருந்தனர். பரிபூரணர் கான்சொலமென்டம் என்றழைக்கப்பட்ட ஒரு ஆவிக்குரிய ஞானஸ்நான சடங்குடன் நியமிக்கப்பட்டனர். ஓராண்டு தகுதி ஆய்வின் பிறகு இது கைகளை வைப்பதன் மூலம் நடத்தப்பட்டது. இந்தச் சடங்கு அவரை சாத்தானின் ஆளுகையிலிருந்து விடுவித்து, எல்லா பாவத்திலிருந்தும் அவரை சுத்தப்படுத்தி, பரிசுத்த ஆவியை அவருக்குக் கொடுப்பதாக எண்ணப்பட்டது. மற்ற விசுவாசிகளுக்கு ஊழியர்களாக செயல்பட்ட சிறுபான்மையினர் அடங்கிய உயர்ந்தோர் குழுவுக்கு “பரிபூரணர்” என்ற பட்டம் உபயோகிக்கப்பட இது வழிவகுத்தது. அந்தப் பரிபூரணர் விரதம், கற்பு, ஏழ்மை ஆகியவற்றின் சம்பந்தமாக பொருத்தனைகளை செய்துகொண்டனர். திருமணமாகியிருந்தால், ஒரு பரிபூரணர் தன் துணைவரை அல்லது துணைவியை விட்டுப் பிரிந்துவிட வேண்டும், ஏனெனில் பாலுறவே ஆதி பாவம் என காத்தரிகள் நம்பினர்.
விசுவாசிகள் கடும் நோன்புள்ள வாழ்க்கை பாணியை மேற்கொள்ளாவிட்டாலும் காத்தர் போதனைகளை ஏற்றுக்கொண்ட நபர்கள். மெலியோராமென்டம் என்றழைக்கப்பட்ட ஒரு சடங்கில் பரிபூரணருக்கு மரியாதை செலுத்தும் வகையில் முழங்கால் படியிடுவதன்மூலம் விசுவாசி மன்னிப்பையும் ஒரு ஆசீர்வாதத்தையும் கோரினர். தாங்கள் சாதாரண வாழ்க்கையை நடத்த வசதியாயிருக்கும்படி விசுவாசிகள், மரண-படுக்கையில் கான்சொலமென்டம், அல்லது ஆவிக்குரிய ஞானஸ்நானம் கொடுக்க பரிபூரணருடன் ஒரு கன்வெனென்ஸா, அல்லது ஒப்பந்தம் செய்துகொண்டனர்.
பைபிளைப் பற்றி அவர்களுடைய கருத்து
காத்தரிகள் பைபிளிலிருந்து மிகுதியாக மேற்கோள்கள் எடுத்து உபயோகித்தபோதிலும், அதில் முக்கியமாக உருவகங்களும் கட்டுக்கதைகளுமே அடங்கியிருந்ததாக கருதினர். எபிரெய வேதாகமங்களின் பெரும் பகுதி பிசாசிடமிருந்து வந்ததாக அவர்கள் எண்ணினர். மாம்சத்தையும் ஆவியையும் வித்தியாசப்படுத்திக்காட்டும் வசனங்களைப் போன்ற கிரேக்க வேதாகமங்களின் பாகங்களை அவர்கள் தங்கள் இருபொருள் உண்மை தத்துவத்தை ஆதரிக்க பயன்படுத்திக் கொண்டனர். கர்த்தருடைய ஜெபத்தில் ‘அனுதின அப்பத்துக்கு’ பதிலாக “பருப்பொருள்கடந்த அப்பத்துக்காக” (“ஆவிக்குரிய அப்பம்” என்று பொருள்படும்) ஜெபித்தனர். சொல்லர்த்தமான அப்பம் அவர்கள் கண்களில் அத்தியாவசிய தீமையாக இருந்தது.
காத்தர் போதனைகளில் அநேகம் பைபிளோடு நேராக முரண்பட்டன. உதாரணமாக, ஆத்துமா அழியாமையிலும் மறுபிறவியிலும் அவர்கள் நம்பினர். (பிரசங்கி 9:5, 10; எசேக்கியேல் 18:4, 20-ஐ ஒப்பிடுக.) தள்ளுபடி ஆகமங்களையும் அவர்கள் தங்கள் நம்பிக்கைகளுக்கு ஆதாரமாக வைத்திருந்தனர். ஆயினும், வேதவார்த்தைகளின் பகுதிகளை உள்ளூர் மொழிகளில் மொழிபெயர்த்ததன் மூலம் காத்தரிகள் இடைக்காலத்தின்போது பைபிள் நன்கு அறியப்பட்ட புத்தகமாக ஆகும்படி செய்தனர்.
கிறிஸ்தவர்களல்லர்
தாங்கள் அப்போஸ்தலரின் உரிமையுள்ள சுதந்திரவாளிகள் என பரிபூரணர் நினைத்தனர், எனவே, தங்களை “கிறிஸ்தவர்கள்” என்று அழைத்துக் கொண்டனர், அதற்கு அழுத்தத்தைக் கூட்ட அதோடு “உண்மையான” அல்லது “நல்ல” என்ற பதங்களையும் சேர்த்துக் கொண்டனர். உண்மையில், காத்தர் நம்பிக்கைகளில் அநேகம் கிறிஸ்தவத்துக்கு புறம்பாயிருந்தன. காத்தரிகள் இயேசுவை கடவுளுடைய குமாரன் என ஏற்றுக்கொண்டபோதிலும், அவர் மாம்சத்தில் வந்ததையும் அவருடைய மீட்கும் பலியையும் நிராகரித்தனர். மாம்சத்தையும் உலகத்தையும் பைபிள் கண்டனம் செய்வதை தவறாக புரிந்துகொண்டு, எல்லா ஜடப்பொருள்களும் தீமையிலிருந்து தோன்றுவதாக அவர்கள் கருதினர். எனவே இயேசுவுக்கு ஆவிக்குரிய உடலே இருந்திருக்க முடியும் என்றும் அவர் பூமியில் இருக்கையில் வெறுமனே மாம்ச உடலில் இருப்பதைப்போல தோன்றினார் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். முதல் நூற்றாண்டு விசுவாச துரோகிகளைப்போல் காத்தரிகளும் “மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத” ஆட்களாயிருந்தனர்.—2 யோவான் 7.
இடைக்கால சமய எதிர்வாதம் என்ற தன் ஆங்கில புத்தகத்தில் எம். டி. லாம்பர்ட் எழுதுகிறார்: “கட்டாய நோன்புமுறையின் மூலம் காத்தரிய கொள்கை கிறிஸ்தவ ஒழுக்கத்தை மாற்றியது, . . . [கிறிஸ்துவினுடய மரணத்தின்] இரட்சிக்கும் வல்லமையை ஒத்துக்கொள்ள மறுப்பதன் மூலம் மீட்பை நீக்கிவிட்டது.” “பரிபூரணரின் உண்மையான பிணைப்பு கிழக்கத்திய நோன்பு போதகர்களோடும், சீனா அல்லது இந்தியாவிலிருந்த முனிவர்களோடும் துறவிகளோடும், ஆர்பியஸ் மறைபொருள் இரகசியங்களில் கைதேர்ந்தவர்களோடும், அல்லது சமரச மறையியல் கோட்பாட்டை கற்பித்தவர்களோடுமே இருந்தது,” என அவர் கருதுகிறார். காத்தர் நம்பிக்கையின்படி, இரட்சிப்பு இயேசுகிறிஸ்துவின் மீட்கும் பொருள் பலியின் மீதல்ல, கான்சொலமென்டம் அல்லது பரிசுத்த ஆவிக்குள் முழுக்காட்டப்படுவதன் பேரில் சார்ந்திருந்தது. அவ்விதம் சுத்தப்படுத்தப்பட்டவர்களுக்கு இறப்பு ஜடப்பொருளிலிருந்து விடுதலையைக் கொண்டுவரும்.
ஓர் அசுத்தமான சிலுவைப்போர்
குருமார்களின் பணம்பிடுங்கும் முறைகளினாலும் பரவலான சீர்கேட்டினாலும் சோர்வடைந்திருந்த பொதுமக்கள் காத்தரிகளின் வாழ்க்கை பாணியால் கவரப்பட்டனர். வெளிப்படுத்துதல் 3:9-லும் 17:5-லும் சொல்லப்பட்டுள்ள ‘சாத்தானின் கூட்டம்’ மற்றும் ‘வேசிகளுக்கு தாய்’ ஆகியவற்றை பரிபூரணர் கத்தோலிக்க சர்ச்சுக்கும் அதன் உயர் குருவர்க்கத்துக்கும் பொருத்தினர். காத்தரிகளின் கொள்கை தென் பிரான்ஸில் செழித்து அங்கு சர்ச்சின் வேரறுத்துக்கொண்டிருந்தது. இதற்கு மூன்றாம் போப் இன்னொஸன்ட் பிரதிபலித்த விதம் அல்பிஜென்ஸிய சிலுவைப்போர் என்றழைக்கப்பட்டதை ஆரம்பித்து அதற்கு பண உதவி செய்வதன் மூலமாக ஆகும். கிறிஸ்தவர்கள் என உரிமைபாராட்டினவர்களுக்கு விரோதமாக கிறிஸ்தவமண்டலத்துக்கு உள்ளேயே செய்யப்பட்ட முதல் சிலுவைப்போர் அதுவே.
கடிதங்கள் மூலமாகவும் பிரதிநிதிகள் மூலமாகவும் போப் ஐரோப்பாவிலிருந்த கத்தோலிக்க அரசர்கள், உயர் பணியாளர்கள், இளவரசர்கள், பெருந்தகைகள் போன்றவர்களை வற்புறுத்தினார். இந்தச் சமய எதிர்வாதத்தை “எவ்வழியிலாவது” அழிக்கப் போராடும் அனைவருக்கும் அவர் சலுகைகளையும் லாங்குவடாக்கின் செல்வங்களையும் வாக்களித்தார். அவருடைய வேண்டுகோள் வீணாகவில்லை. கத்தோலிக்க மடத்துறவிகள் மற்றும் உயர் சமயகுருக்களின் தலைமையில் வட பிரான்சு, பிளான்டர்ஸ், ஜெர்மனி ஆகிய இடங்களிலிருந்து திரண்ட பல்வேறுபட்ட சிலுவைப் போர்வீரர்களின் சேனை ரைன் பள்ளத்தாக்கின் வழியே தெற்கு நோக்கிச் சென்றது.
பிஸியர்ஸ்ஸின் பேரழிவோடு ஆரம்பித்த இந்த சிலுவைப் போர் லாங்குவடாக்கை கட்டுப்படுத்தப்படாத தீக்கும் கொலைக்கும் இரையாக்கியது. அல்பி, கார்காஸ்ஸோன், காஸ்ட்ரஸ், பாயிக்ஸ், நார்பொன், டெர்மா, டௌலௌஸ் ஆகிய அனைத்தும் இரத்தவெறிபிடித்த சிலுவைப் போர்வீரர்களால் முறியடிக்கப்பட்டன. காஸே, மினர்வா, லேவொர் போன்ற காத்தர் அரண்களில் நூற்றுக்கணக்கான பரிபூரணர் மரங்களில் கட்டி எரிக்கப்பட்டனர். மடத்துறவியும் வரலாற்றுப் பதிவாளருமான பையர் டி வோடெசெர்னா எழுதியபடி, சிலுவைப்போர் வீரர்கள் ‘இருதயத்தில் பூரிப்புடன் பரிபூரணரை உயிருடன் எரித்தனர்.’ 20 ஆண்டுகள் நீடித்த போராட்டத்திற்கும் அழிவிற்கும் பின், 1229-ல், லாங்குவடாக் பிரெஞ்சு முடியாட்சியின் கீழ் வந்தது. ஆனால் படுகொலை இன்னும் ஓயவில்லை.
கத்தோலிக்க ஒடுக்குமுறை விசாரணைகள் மரண அடி கொடுக்கின்றன
1231-ல் இந்த ஆயுதபோராட்டத்துக்கு ஆதரவளிக்க ஒன்பதாவது போப் க்ரகரி போப்பின் ஒடுக்குமுறை விசாரணைகளை ஏற்படுத்தினார்.a இந்த ஒடுக்குமுறை விசாரணைகள் முதலில் கண்டனங்களிலும் கட்டுப்படுத்தல்களிலும் ஆரம்பித்து, பின்னர், முறைப்படியான சித்திரவதையின் உருவை எடுத்தது. பட்டயத்தால் அழிக்கமுடியாததை அழிப்பதே அதன் நோக்கம். ஒடுக்குமுறை விசாரணை நீதிபதிகள்—பெரும்பாலும் டொமினிக்கன் மற்றும் பிராஸிஸ்கன் குருக்கள்—போப்புக்கு மட்டுமே பயப்படவேண்டும். சமய எதிர்வாதத்துக்கு தண்டனை எரித்துக் கொல்லப்படுவதாகும். ஒடுக்குமுறை விசாரணை செய்தவர்களின் வெறியும் கொடூரமும் அவ்வளவு அதிகமாக இருந்ததால் அல்பியிலும், டௌலௌஸ்ஸிலும் இன்னும் பிற இடங்களிலும் கலகங்கள் எழும்பின. அவிநையோனேவில் ஒடுக்குமுறை விசாரணை நீதிபதிகள் அனைவரும் கொல்லப்பட்டனர்.
1244-ல் அநேக பரிபூரணர்களின் புகலிடமாக இருந்த மான்ட்சாகுயர் மலைக்கோட்டை சரணடைந்தது காத்தரிச கொள்கைக்கு மரண அடியாக தொனித்தது. சுமார் 200 ஆண்களும் பெண்களும் மரங்களில் கட்டப்பட்டு ஒருசேர எரிக்கப்பட்டனர். பின்தொடர்ந்த ஆண்டுகளில், ஒடுக்குமுறை விசாரணைகள் எஞ்சியிருந்த காத்தரிகளை தேடி அழித்தன. கடைசி காத்தர் 1330-ல் லாங்குவடாக்கில் மரத்தில் கட்டி எரிக்கப்பட்டதாக அறிக்கை செய்யப்பட்டுள்ளது. இடைக்கால சமய எதிர்வாதம் என்ற புத்தகம் குறிப்பிடுகிறது: “காத்தரிகளினுடைய கொள்கையின் வீழ்ச்சியே கத்தோலிக்க ஒடுக்குமுறை விசாரணைகளுக்குக் கிடைத்த உயர்ந்த வீரப்பதக்கம்.”
காத்தரிகள் நிச்சயமாக உண்மைக் கிறிஸ்தவர்களல்லர். ஆனால் கத்தோலிக்க சர்ச்சை அவர்கள் குறைகூறியது கிறிஸ்தவர்கள் என்றழைக்கப்பட்டவர்களால் அவர்கள் கொடூரமாக அழிக்கப்பட்டதை நியாயமென ஆக்கிவிடுகிறதா? அந்தக் கத்தோலிக்க துன்புறுத்தலாளர்களும் கொலைகாரர்களும் பத்தாயிரக்கணக்கான சமய பிரிவினையாளர்களை சித்திரவதை செய்து படுகொலை செய்தபோது கடவுள் மீதும் கிறிஸ்துவின் மீதும் அவமதிப்பை கொண்டுவந்து உண்மை கிறிஸ்தவத்தைப் பற்றி தவறான அபிப்பிராயத்தை உருவாக்கினர்.
[பக்கம் 28-ன் பெட்டி]
வால்டென்சஸ்கள்
பொ.ச. 12-வது நூற்றாண்டின் இறுதிபகுதியின்போது, பியர் வால்டஸ் அல்லது பீட்டர் வால்டோ என்றழைக்கப்பட்ட லையன்ஸ்ஸில் இருந்த ஒரு பணக்கார வியாபாரி, தென் மற்றும் தென்கிழக்கு பிரான்ஸில் பேசப்பட்ட மொழியான ப்ராவென்கால்லின் பல்வேறு கிளைமொழிகளில் பைபிளின் பகுதிகள் முதன்முதலில் மொழிபெயர்க்கப்படும்படி பண உதவியளித்தார். உண்மைமனதுள்ள கத்தோலிக்கரான அவர் தன் வியாபாரத்தை விட்டு சுவிசேஷ பிரசங்கிப்புக்கு தன்னை அர்ப்பணித்தார். கறைபட்ட குருமார்கள் மீது வெறுப்படைந்த மற்ற அநேக கத்தோலிக்கர்கள் அவரைப் பின்பற்றி பயணம் செய்யும் பிரசங்கிகளாக ஆனார்கள்.
சீக்கிரத்தில் வால்டோவுக்கு உள்ளூர் குருமார்களிடமிருந்து எதிர்ப்பு வந்தது, அவர்கள் போப்பைத் தூண்டி அவர் பகிரங்கமாக சாட்சி கொடுத்ததை தடுத்து தடையுத்தரவு போடும்படி செய்தனர். அறிக்கை செய்யப்பட்டபடி அவருடைய பதில்: “மனிதரைவிட நாம் கடவுளுக்கே கீழ்ப்படிவது அவசியம்.” (ஒப்பிடுக: அப்போஸ்தலர் 5:29, NW) வால்டோ விட்டுக்கொடுக்காமல் இருந்ததால், அவர் சர்ச்சிலிருந்து நீக்கப்பட்டார். அவரைப் பின்பற்றியவர்கள் வால்டென்ஸஸ் அல்லது லையன்ஸ்ஸின் ஏழை மனிதர்கள் என்றழைக்கப்பட்டனர், வைராக்கியத்துடன் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றி இரண்டிரண்டு பேராக சென்று மக்களுடைய வீடுகளில் பிரசங்கித்தனர். அதன் விளைவாக அவர்களுடைய போதனைகள் பிரான்ஸின் தெற்கிலும், கிழக்கிலும், வடக்கின் சில பகுதிகளிலும், வட இத்தாலியிலும் வேகமாக பரவின.
முக்கியமாக, அவர்கள் ஆரம்பக் கிறிஸ்தவத்தின் நம்பிக்கைகளுக்கும் பழக்கங்களுக்கும் திரும்ப செல்லவேண்டும் என பரிந்துரைத்தனர். உத்தரிக்கும் ஸ்தலம், இறந்தவர்களுக்காக ஜெபிப்பது, மரியாள் வழிபாடு, “புனிதர்களிடம்” ஜெபிப்பது, சிலுவை வணக்கம், சமய சலுகைகள், திவ்விய நற்கருணை, குழந்தை ஞானஸ்நானம் போன்ற பல போதனைகளுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.*
*வால்டென்ஸஸ்களின் பேரில் கூடுதலான தகவலுக்கு, “வால்டென்ஸஸ்—திருச்சபைக்கு முரணான கோட்பாடுடையவரா அல்லது சத்தியத்தைத் தேடுபவரா?” என்ற கட்டுரையை ஆகஸ்ட் 1, 1981, ஆங்கில காவற்கோபுரம், பக்கங்கள் 12-15-ல் காண்க.
வால்டென்ஸஸ்களும் காத்தரிகளும் ஒன்றே என்று அநேக சமயங்களில் சிலருக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளபோதிலும், வால்டென்ஸஸ்களின் போதனைகள் காத்தரிகளின் கிறிஸ்தவமற்ற இருபொருள் உண்மை கோட்பாட்டுக்கு முற்றிலும் வித்தியாசமானதாய் இருந்தன. இந்தக் குழப்பத்துக்கு முக்கிய காரணம் வால்டென்ஸிய பிரசங்கத்தை அல்பிஜென்ஸியர்களின், அல்லது காத்தரிகளின் போதனைகளோடு வேண்டுமென்றே பொருத்திக்காட்டி குழப்ப முயற்சித்த கத்தோலிக்க விவாத உரைஞர்களே.
[அடிக்குறிப்புகள்]
a இடைக்கால ஒடுக்குமுறை விசாரணைகளைப் பற்றி கூடுதலான தகவல்களுக்கு, உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட விழித்தெழு! (ஆங்கிலம்), ஏப்ரல் 22, 1986 இதழில் “பயங்கர கத்தோலிக்க ஒடுக்குமுறை விசாரணைகள்” என்ற பகுதியில் பக்கங்கள் 20-3-ஐப் பார்க்கவும்.
[பக்கம் 29-ன் படம்]
20,000 ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும் படுகொலை செய்த பிஸியர்ஸ்ஸில் உள்ள தூய மகதலேனா மரியாள் சர்ச்சில் ஏழாயிரம் பேர் இறந்தனர்