“மதபேதமுள்ள” ஒருவரை விசாரித்தலும் தண்டித்தலும்
இத்தாலியிலுள்ளவிழித்தெழு! நிருபர்
திகிலூட்டும் அந்த ஒடுக்குமுறை விசாரணை மன்றத்தில், கனம்பொருந்திய நீதிபதிகளின் குழு கம்பீரமாக அமர்ந்திருக்கிறது. நடுவிலே அவைத்தலைவரின் இருக்கை போடப்பட்டிருக்கிறது. அதற்கு மேலே, கரும் நிறமுள்ள ஒரு துணியால் விதானம் (canopy) அமைக்கப்பட்டிருக்கிறது. மேலே மரத்தால் ஆன ஒரு பெரிய சிலுவை வைக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சிலுவையே முழு மன்றத்திலும் கம்பீரமாய் தோற்றமளிக்கிறது. அவைத்தலைவரின் இருக்கைக்கு முன் குற்றவாளி நின்றுகொண்டிருக்கிறார்.
இப்படியாகத்தான் அந்தத் திகிலூட்டிய கத்தோலிக்க ஒடுக்குமுறை விசாரணை (Catholic Inquisition) நடந்த நீதிமன்றங்கள் அடிக்கடி விவரிக்கப்பட்டன. சபிக்கப்பட்ட குற்றவாளிமீது சுமத்தப்பட்ட பயங்கரமான குற்றச்சாட்டு “மதபேதமுள்ளவன்” என்பது தான். மதபேதமுள்ளவன் என்ற வார்த்தை ஒருவரின் காதில் விழுந்ததும், அவரது மனத்திரையில் கொடூரமாக இம்சிக்கப்படுவதும் மரத்திலே கட்டிவைத்து கொளுத்தப்படுவதும் படங்களாக ஓடும். கத்தோலிக்க ஒடுக்குமுறை விசாரணை மன்றம் (Inquisition) என்பது சர்ச்சின் ஒரு விசேஷித்த மத நீதிமன்றம் ஆகும். (இன்க்குஷிசன் என்ற ஆங்கில வார்த்தை “விசாரணை செய்” என்று பொருள்படும் இன்குவீரோ என்ற இலத்தீன் வினைச்சொல்லிலிருந்து வருகிறது.) மதபேதம் தலைதூக்காமல் இருக்க, அதாவது பாரம்பரிய ரோமன் கத்தோலிக்க சர்ச்சின் போதனையிலிருந்து வேறுபடும் கருத்துக்களோ கோட்பாடுகளோ தலைதூக்கினால் அவற்றை பூண்டோடு ஒழித்துவிடவேண்டும் என்பதற்காக இம்மன்றம் நிறுவப்பட்டது.
இம்மன்றம் படிப்படியாக நிறுவப்பட்டது என்று கத்தோலிக்க மூலங்களிலிருந்து கிடைக்கும் தகவல்கள் குறிப்பிடுகின்றன. கவுன்சில் ஆஃப் வெரோனாவில் மூன்றாம் போப் லூஸியஸ் என்பவர் இந்த ஒடுக்குமுறை விசாரணை மன்றத்தை 1184-ல் நிறுவினார். பிறகு வந்த போப்புகள் இதன் ஒழுங்கமைப்பையும் செயல்படும்விதத்தையும் சீர்செய்தனர். சீர்செய்தல் என்ற வார்த்தையை, கொடூரமான ஒடுக்குமுறை விசாரணை நடத்திய மன்றத்தை விவரிக்க பயன்படுத்தலாமென்றால் அவ்வார்த்தையால் குறிப்பிடலாம். ஒன்பதாம் போப் கிரிகரி என்பவர் பதிமூன்றாம் நூற்றாண்டில், ஐரோப்பாவின் பல பகுதிகளில் இந்த ஒடுக்குமுறை நீதிமன்றங்களை நிறுவினார்.
கூட்டாட்சி நடத்திய பெர்னான்டோவும் இஸபெல்லாவும் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கி, நான்காம் போப் சிக்டஸ் என்பவர் இந்த இழிவான ஸ்பானிய ஒடுக்குமுறை விசாரணை மன்றத்தை 1478-ல் நிறுவினார். கிறிஸ்தவர்களாக மதம் மாறிய யூதர்களும் மதம் மாறாத யூதர்களும் துன்புறுத்தலுக்கு பயந்துபோய் கத்தோலிக்க மதத்திற்கு மாறினார்கள். அவர்கள் உண்மையில் மதம் மாறவில்லை. அவ்வாறே, ஸ்பெய்ன் நாட்டு அரேபிய கலப்பினத்தவரும், இஸ்லாம் மதத்தைப் பின்பற்றியவர்களும் பயத்தின் காரணமாகவே மதம் மாறினார்கள். இவ்வாறு போலியாக மதம் மாறியவர்களை நீக்குவதற்காகவும் மதபேதமுள்ள ஸ்பெய்ன் நாட்டவரை சமாளிப்பதற்காகவும் இந்த ஒடுக்குமுறை விசாரணை மன்றம் நிறுவப்பட்டது. ஸ்பெய்னில் ஒடுக்குமுறை விசாரணை மன்றத்தின் முதல் தலைவராகவும் டாமினிக் துறவியர் குழுவில் (Dominican friar) ஒரு துறவியாகவும் இருந்த டோமாஸ் டி டொர்குமாடா என்பவர் தன்னுடைய மிதமிஞ்சிய மத வெறியின் காரணமாக ஒடுக்குமுறை விசாரணை மன்றத்தில் நடந்த கொடூர செயல்களுக்கெல்லாம் ஒட்டு மொத்த உருவமாய் திகழ்ந்தார்.
1542-ல், மூன்றாம் போப் பால் என்பவர் ரோமன் கத்தோலிக்க ஒடுக்குமுறை விசாரணை மன்றத்தை நிறுவினார். கத்தோலிக்க உலகமுழுவதிலும் இம்மன்றத்தின் ஆதிக்கம் மேலோங்கியிருந்தது. மத உயர் அதிகாரிகள் ஆறுபேர் அடங்கிய, மத்திய நீதிமன்றம் ஒன்றையும் அவர் ஏற்படுத்தினார். புனித ரோமன் சபை என்றும் சர்வலோக ஒடுக்குமுறை விசாரணை மன்றம் என்றும் அது அழைக்கப்பட்டது. தனி நபர்கள் அடங்கியிருந்த இந்த மதக்குழு ‘பயங்கரமான அச்சம்தரும் ஓர் அரசாங்கமாகவே மாறிவிட்டது. ரோம் முழுவதையும் பயத்தால் நடுநடுங்க வைத்தது.’ (டிஸியோனாரியோ என்ஸிக்ளோப்பிடிகோ இட்டாலியானோ [Dizionario Enciclopedico Italiano]) மதபேதமுள்ளவர்களுக்கு மரணத்தீர்ப்பளித்து அவர்கள் கொன்ற செயல், கத்தோலிக்க சர்ச் ஆதிக்கம் செலுத்திய நாடுகளையெல்லாம் பயத்தால் உறைய வைத்தது.
விசாரணையும் ஆட்டோடெஃபியும்
மதபேதமுள்ளவர்கள் என குற்றஞ்சாட்டப்பட்ட ஆட்களிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலம் பெறுவதற்காக அவர்களை விசாரணை மன்றத்தில் இருந்த ஆட்கள் பயங்கரமாக கொடுமைப்படுத்தினார்கள் என்ற உண்மையை வரலாறு உறுதிசெய்கிறது. அக்காலத்தில் அப்படி கொடுமைப்படுத்துவது அரசாங்க நீதிமன்றங்களிலும்கூட சர்வசகஜம்தான் என்று எழுதுவதன் மூலம் கத்தோலிக்க உரையாசிரியர்கள் ஒடுக்குமுறை விசாரணை மன்றத்தின் பழிபாவத்தை கொஞ்சமாக குறைத்து கூற முயன்றனர். ஆனால் கிறிஸ்துவின் பிரதிநிதிகள் என தங்களை சொல்லிக்கொள்ளும் ஊழியர்கள் செய்த அட்டூழியங்களையெல்லாம் நியாயப்படுத்த முடியுமா? கிறிஸ்து தம் எதிரிகளுக்கு இரக்கம் காட்டியதைப்போலவே அவர்களும் காட்டியிருக்க வேண்டும் அல்லவா? இதை நாம் கருத்தூன்றி காணவேண்டுமென்றால், இந்த ஓர் எளிய கேள்வியைக் கேட்டுக்கொள்ளலாம்: தம்முடைய போதனைகளிலிருந்து ஒருவர் வேறுபடுகிறார் என்றால் அவரை இயேசு கிறிஸ்து கொடுமைப்படுத்தியிருப்பாரா? இயேசு கூறினார்: “உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யுங்கள்.”—லூக்கா 6:27.
குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு கொஞ்சநஞ்சமாவது நீதி கிடைக்கும் என்ற உத்தரவாதத்தை வழங்க அந்த ஒடுக்குமுறை விசாரணை மன்றம் தவறியது. நடைமுறையில், அந்த ஒடுக்குமுறை விசாரணை மன்றம் வைத்திருந்த அதிகாரத்திற்கு வரம்பே கிடையாது. “சந்தேகம், குற்றச்சாட்டுகள், புரளியாக இருந்தாலும்கூட போதும், ஒடுக்குமுறை விசாரணை மன்ற நீதிபதி தனக்கு முன்வந்து ஆஜராகும்படி ஒருவருக்கு அழைப்பு அனுப்பமுடியும்.” (என்ஸிக்ளோப்பீடியா காட்டாலிக்கா) அந்தக் கத்தோலிக்க மத ஆட்சியாளர்கள் (hierarchy) ஒடுக்குமுறை விசாரணை மூலம் நீதி வழங்கும் முறையில் பூரணத் திருப்தி அடைந்து அதனை ஏற்றுக்கொண்டார்கள். ரோமானியர்கள் அமைத்திருந்த வழக்குத் தீர்க்கும் முறையை அவர்கள் கைவிட்டார்கள் என்ற விஷயத்தை சட்ட வரலாற்று ஆசிரியர் இட்டாலொ மீராவ் உறுதிப்படுத்துகிறார். குற்றஞ்சாட்டுபவர் தான் சுமத்தும் குற்றச்சாட்டை நிரூபிக்கவேண்டும் என்பது ரோம சட்டத்தில் இருந்தது. ஒருவேளை சந்தேகம் இருந்தால் அப்பாவி ஒருவர்மீது பழி சுமத்துவதைவிட அவரை விடுதலை செய்வது எவ்வளவோ மேல். இந்த அடிப்படை சட்ட விதியை கத்தோலிக்க மத ஆட்சியாளர்கள் மாற்றியமைத்து, சந்தேகம் இருந்தால்போதும் அதைக் குற்றமாக ஊகித்துக்கொள்ளலாம் என்ற ஒரு கருத்தை நுழைத்துவிட்டனர். மேலும் குற்றம்சுமத்தப்பட்டவரே தன்னை நிரபராதியாக நிரூபிக்கவேண்டும் என்று கூறினார்கள். வழக்கில் சாட்சி சொன்ன நபர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்பட்டன. எதிர்வாதம் புரியும் வழக்கறிஞர், தனி ஒருவராக நின்று, மதபேதமுள்ளவராக கருதப்படும் ஒருவருக்காக வெற்றிகரமாக வாதாடிவிட்டால் அவரது புகழும் பதவியும் பறிபோகும் நிலை இருந்தது. இதன் காரணமாக உண்மையில் குற்றம்சுமத்தப்பட்டவர் நிர்க்கதியாக நின்றார். அந்த வழக்கறிஞரால் செய்ய முடிந்ததெல்லாம் தன் தவறை ஒத்துக்கொள்ளும்படி குற்றவாளிக்கு அறிவுரை கூறுதல்!” என்று என்ஸிக்ளோப்பீடியா காட்டலிக்கா ஒத்துக்கொள்கிறது.
ஆட்டோடெஃபி (auto-da-fé) என்பது ‘விசுவாச செயல்’ என்ற அர்த்தம் தரும் ஒரு போர்ச்சுகீஸ் சொல்லாகும். வழக்கு விசாரணை ஆட்டோடெஃபியில் உச்சக்கட்டத்தை எட்டியது. அது என்ன? மதபேத குற்றம்சுமத்தப்பட்ட துரதிர்ஷ்ட குற்றவாளிகள் கேவலமான காட்சிப்பொருளாக ஆக்கப்பட்டார்கள் என்பதை அக்காலத்து ஓவியங்கள் காட்டுகின்றன. டிஸினாரியோ எக்லிஸ்யாஸ்டிகோ (Dizionario Ecclesiastico) ஆட்டோடெஃபியை இவ்வாறு வரையறுக்கிறது: தீர்ப்பு ஆணை வாசிக்கப்பட்ட பிறகு, “மதபேதமுள்ளவர்களாக பழிசுமத்தப்பட்டவர்களும், அதற்காக மனம்வருந்தியவர்களும் செய்யும் பிராயச்சித்தத்தை வெளிப்படையாக காட்டும் செயலாகும்.”
தீர்ப்பு ஆணையை வாசித்தப்பிறகு, மதபேதமுள்ளவர்களின் மரணத்தண்டனை கொஞ்சம் காலத்திற்கு தள்ளிப்போடப்பட்டது. இவ்வாறாக கிட்டத்தட்ட வருடத்திற்கு இருமுறை நிறைய குற்றவாளிகளை ஒட்டுமொத்தமாக சேர்த்து, ஒரு கேவலமான காட்சிப்பொருளாக காட்டிவிட்டு கொலைசெய்தார்கள். மதபேதமுள்ளவர்களை ஒரு நீண்ட ஊர்வலமாக கூட்டிச்செல்வார்கள். பயந்து நடுநடுங்கும் ஒரு கூட்டமும் துன்பத்தில் இன்பம் காணும் வெறியர்களின் கூட்டமும் அடங்கிய மக்கள் அதை வேடிக்கைப் பார்ப்பார்கள். சாலைகள் சந்திக்கும் ஒரு பெரிய சதுக்கத்தில் போடப்பட்டிருக்கும் ஒரு மேடையிலே குற்றவாளிகளை ஏற்றி, அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் சத்தமாக வாசிக்கப்படும். அப்போது தங்கள் அபிப்பிராயத்தை கைவிட்டுவிடும் ஆட்களுக்கு, அதாவது மதபேத கருத்துக்களை மறுத்துவிடும் ஆட்களுக்கு சமூகத்திலிருந்து ஒதுக்கிவைத்தல் என்ற கொடுமையான தண்டனையும், ஆயுள் தண்டனை உட்பட இன்னும் பல்வேறு தண்டனைகளும் கொஞ்ச நாட்களுக்குத் தள்ளிப்போடப்படும். அதேசமயத்தில் கொள்கைகளை கைவிட மறுத்துவிட்டு, ஆனால் கடைசி நேரத்தில் தன் தவறை ஒரு மதகுருவிடம் ஒத்துக்கொள்ளும் ஆட்களை கழுத்தை நெரித்து கொல்லவோ, தூக்கிலிடவோ, தலையை வெட்டியபின் கொளுத்திவிடவோ கூறி, அவர்களை அரசாங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிடுவார்கள். குற்றத்திற்காக வருந்தாத ஆட்களை உயிரோடு கொளுத்திவிடுவார்கள். கொஞ்ச நாட்கள் சென்றதும் மறுபடியும் பொது மக்கள் காணும்படி செய்து தண்டனை நிறைவேற்றப்படும்.
ரோமன் கத்தோலிக்க ஒடுக்குமுறை விசாரணை மன்ற நடவடிக்கை மாபெரும் ரகசியமாக மூடிவைக்கப்பட்டிருந்தது. இன்றும்கூட அதன் பதிவுகளை ஆராய்ந்து பார்க்க அறிஞர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இருப்பினும், மிகவும் பொறுமையோடு செய்துவந்த ஆராய்ச்சியானது, ரோமன் நீதிமன்றத்தில் நடந்த விசாரணைகளைப் பற்றிய ஆவணங்கள் பலவற்றை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது. அவை எவற்றை வெளிச்சம்போட்டு காட்டுகின்றன?
கிறிஸ்தவ மத குருவுக்கு விசாரணை
பெயட்ரோ கார்னஸ்க்கீ என்பவர் 16-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஃப்ளாரென்ஸ் என்னுமிடத்தில் பிறந்தார். அவர் ஏழாம் போப் கிளமென்ட் என்பவரின் அரசாட்சி மன்றத்தில் மத பணி செய்வதில் சிறப்பாக முன்னேறினார். அவரை போப் தன்னுடைய அந்தரங்க காரியதரிசியாக நியமித்திருந்தார். ஆனால், போப் இறந்ததும் கார்னஸ்க்கீயின் வேலையும் அப்படியே நின்றுபோனது. பிறகு உயர் குடியிலிருந்து வந்த ஒரு பாதிரியுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அவரும் இவரைப்போலவே புராட்டஸ்டண்ட் மறுமலர்ச்சி இயக்கம் சொல்லிக்கொடுத்த பல கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டிருந்தார். அதன் விளைவாக மூன்று தடவை விசாரணைக்காக அவர் வரவழைக்கப்பட்டார். மரண தண்டனை விதிக்கப்பட்டு, தலை வெட்டப்பட்டு, அவரது உடல் கொளுத்தப்பட்டது.
கார்னஸ்க்கீயின் சிறைவாழ்க்கையை நடைப்பிண வாழ்க்கை என்று கருத்துரையாளர்கள் கூறுகிறார்கள். அவரிடமிருந்து ஒப்புதல்வாக்குமூலம் பெறுவதற்காக அவரை கொடுமைப்படுத்தி பட்டினிப்போட்டார்கள். 1567, செப்டம்பர் 21-ல் ரோமிலிருந்த மத உயர் அதிகாரிகள் கிட்டத்தட்ட எல்லாரும் குழுமியிருக்க, அவர்கள் முன்னிலையில் அச்சம் தரும் ஆட்டோடெஃபி அவருக்கு நடத்தப்பட்டது. கார்னஸ்க்கீயை மேடையில் ஏற்றி, மக்கள் முன்னிலையில் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை வாசிக்கப்பட்டது. மதபேதமுள்ளவர் ஒப்படைக்கப்படவிருந்த அரசாங்க நீதிமன்ற உறுப்பினர்களுக்கான சம்பிரதாய சடங்கோடும் ஜெபத்தோடும் அது முடிவுக்கு வந்தது; ‘இந்த நபரை தண்டிக்கையில் மிதமாக தண்டிக்கவும், அவரது உயிர்போகும் அளவுக்கு அல்லது அதிகமாக இரத்தம் வெளியேறும் அளவுக்கு கொடுமைப்படுத்தக்கூடாது,’ என்பதற்காக இவ்வாறு செய்யப்பட்டது. ஆக, இது எவ்வளவு பெரிய மாய்மாலம்? மதபேதமுள்ளவர்களை ஒழித்துவிடவேண்டும் என்று ஒடுக்குமுறை விசாரணை நடத்தியவர்கள் விரும்பினார்கள். ஆனால், அதேசமயம் அவர்கள்மீது இரக்கம் காட்டும்படி அரசாங்க அதிகாரிகளிடம் கெஞ்சுவதைப்போல் நாடகமாடினார்கள். இவ்வாறாக தங்கள் மானம் கப்பல் ஏறாமல் காத்துக்கொண்டனர், இரத்தப் பழியை வேறொருவர்மீது சுமத்தினார்கள். கார்னஸ்க்கீக்கு வழங்கப்பட்ட தண்டனையை வாசித்தப்பின், அவருக்கு ஒரு சான்பெனிடோ அணிவிக்கப்பட்டது. இது சாக்குத் துணியால் ஆன ஓர் அங்கி. மனம்வருந்திய குற்றவாளிக்கு மஞ்சள் நிறத்தில் சிவப்பு சிலுவைப் போடப்பட்ட அங்கியும் மனம்வருந்தாதவருக்கு கருப்பு நிறத்தில் நெருப்பு தணல்களின், பேய்களின் படம் வரையப்பட்டிருக்கும் அங்கியும் அணிவிக்கப்பட்டது. அதன் பிறகு 10 நாட்கள் சென்றதும் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
முன்னாள் போப்பின் காரியதரிசியாக இருந்த இவரை எதற்காக மதபேதமுள்ளவர் என்று குற்றஞ்சாட்டினார்கள்? அவரை விசாரணை நடத்தியதன் விவரப்பதிவுகள் கடந்த நூற்றாண்டின் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டன. அவர் சர்ச்சைகளாக எழுப்பிய விவாதங்களில் 34 குற்றங்கள் அவர்மீது சுமத்தப்பட்டிருந்தன என்ற உண்மையை அந்தப் பதிவுகள் காட்டின. அவற்றுள், உத்தரிக்கும் ஸ்தலம், பாதிரிமார் மற்றும் கன்னியாஸ்திரீகளின் பிரமச்சரியம், அப்பமும் திராட்சை ரசமும் கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறுதல், புதுநன்மை எடுத்தல், பாவ அறிக்கை செய்தல், உணவு கட்டுப்பாடுகள், தண்டனைக் குறைப்பு ஆராதனைகள், ‘புனிதர்களிடம்’ ஏறெடுக்கப்படும் ஜெபங்கள் போன்ற போதனைகள் அடங்கியிருந்தன. அவர்மீது சுமத்தப்பட்ட எட்டாவது குற்றச்சாட்டு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. (பக்கம் 21-ல் இருக்கும் பெட்டியை பார்க்கவும்.) “பரிசுத்த வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கும் கடவுளுடைய வார்த்தையை” ஆதாரமாக கொண்டிருக்கும் நம்பிக்கையை ஏற்றுக்கொண்டவர்களை அது மரணத்தீர்ப்புக்கு ஒப்புக்கொடுத்தது. அதனால், ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்டதற்கு ஊற்றுமூலமாக இருப்பது பரிசுத்த பைபிள் மாத்திரமே என கத்தோலிக்க சர்ச் கருதுவதில்லை என்ற உண்மையைக் கத்தோலிக்க ஒடுக்குமுறை விசாரணை மன்றம் வெட்டவெளிச்சம் ஆக்கியது. எனவேதான், சர்ச்சின் பல கோட்பாடுகள் வேதவசனங்களை அல்ல, ஆனால் சர்ச்சின் பாரம்பரியங்களை அடிப்படையாக கொண்டுள்ளன என்பது ஆச்சரியம் அளிப்பதில்லை.
ஓர் இளம் மாணவனின் மரண தண்டனை
1531-ல் நேபிள்ஸுக்கு அருகில் பிறந்த போம்பான்யோ ஆல்ஜேரீ என்பவரின் குறுகிய, இருதயத்தை இளக்கிவிடும் வாழ்க்கை வரலாறு அநேகருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் காலம் என்னும் சுவடுகளின் அடியில் மறைந்துகிடந்த இந்தக் கதை, எண்ணற்ற அறிஞர்கள் கடும் முயற்சியோடு கண்டெடுத்த வரலாற்று கண்டுபிடிப்புகளின் உதவியால் மெல்ல வெளியே வந்திருக்கிறது. பாடெவா என்னும் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது ஆல்ஜாரீயோவுக்கு ஆசிரியர்களோடும் ஐரோப்பாவின் பல்வேறு இடங்களிலிருந்து வந்த மாணவர்களோடும் பழக்கம் ஏற்பட்டு, மதபேதம் என்று சொல்லப்படும் கோட்பாடுகளும் புராட்டஸ்டண்ட் மறுமலர்ச்சி கோட்பாடுகளும் அவருக்கு அறிமுகம் செய்யப்பட்டன. வேதவசனங்களில் அவருடைய ஆர்வம் அதிகரித்தது.
பைபிள் மாத்திரம் ஏவப்பட்டெழுதப்பட்டது என்று அவர் நம்ப ஆரம்பித்தார். அதன்விளைவாக புதுநன்மை எடுத்தல், பாவ அறிக்கை செய்தல், உத்தரிக்கும் ஸ்தலம், அப்பமும் திராட்சை ரசமும் கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறுதல், “புனிதர்கள்” மத்தியஸ்தம் செய்தல், மேலும் கிறிஸ்துவின் பிரதிநிதி போப் என்னும் போதனை என கத்தோலிக்க கோட்பாடுகள் பலவற்றை அவர் ஏற்க மறுத்துவிட்டார்.
பாடெவாவில் இருந்த கத்தோலிக்க ஒடுக்குமுறை விசாரணை மன்றம் ஆல்ஜாரீயோவை கைதுசெய்து விசாரணை செய்தது. அவர் விசாரணையாளர்களிடம் இவ்வாறு கூறினார்: “நான் சிறைச்சாலைக்கு திரும்பிப்போக மனப்பூர்வமாய் சம்மதிக்கிறேன். ஒருவேளை கடவுளின் விருப்பம் நான் இறக்கவேண்டும் என்றிருந்தால் மரணத்தையும் ருசிபார்க்க நான் தயங்கமாட்டேன். கடவுள் தமது மகிமையால் ஒவ்வொருவருக்கும் இன்னும் அதிகமாக ஆவிக்குரிய வகையில் அறிவூட்டுகிறார். ஒவ்வொரு இம்சையையும் நான் ஆனந்தமாக ஏற்றுக்கொள்வேன். ஏனென்றால் நொறுங்குண்ட ஆத்துமாக்களின் பரிபூரண ஆறுதல் அளிப்பவராக இருக்கும் கிறிஸ்துவே எனது ஒளியாகவும் உண்மையான வெளிச்சமாகவும் இருக்கிறார். அவரால் ஆன்மீக இருளை முழுமையாக விரட்டியடிக்க முடியும்.” பின்பு, அந்த ரோமன் கத்தோலிக்க ஒடுக்குமுறை விசாரணை மன்றம் அவரை தன்னிடம் ஒப்படைக்க அரசாங்கத்திடம் அனுமதியைப் பெற்று, அவருக்கு மரண தண்டனையை விதித்தது.
ஆல்ஜாரீ இறக்கும்போது அவருக்கு வயது 25 மட்டுமே. ரோமில் அவர் கொல்லப்படவிருந்த நாளில், பாவ அறிக்கை செய்யவும் நற்கருணை பெறவும் மறுத்துவிட்டார். அவரை கொலைசெய்த விதம் பொதுவாக கொலைசெய்யப்படும் விதத்தைக் காட்டிலும் பயங்கர கொடூரமாக இருந்தது. கட்டைகளை போட்டு அவரை கொளுத்தவில்லை. அதற்கு பதிலாக, எரியும் வஸ்துக்களை, அதாவது எண்ணெய், தார், பிசின் போன்ற பொருட்களை ஒரு பெரிய கொப்பரையில் போட்டு, ஜனங்களுக்கு நன்றாகத் தெரியும்படி மேடையிலே வைத்தார்கள். அந்த இளைஞனை கட்டிப்போட்டு, கொப்பரையிலே இறக்கிவிட்டு, எரிப்பொருட்களுக்கு நெருப்பு வைத்தார்கள். அவர் உயிரோடே மெல்ல மெல்ல எரிக்கப்பட்டார்.
மாபெரும் பாவத்திற்கு மற்றொரு காரணம்
ஒடுக்குமுறை விசாரணை சங்கத்தால் சாகடிக்கப்பட்ட கார்னஸ்க்கீசும், ஆல்ஜாரீசும், இன்னும் பலரும் வேதவசனங்களில் அரைகுறையான அறிவையே பெற்றிருந்தார்கள். இந்தக் காரிய ஒழுங்குமுறையின் ‘முடிவுகாலத்தில் . . . பெருகும்’ என்று சொல்லப்பட்ட அறிவு இனிமேல்தான் பெருகவேண்டியிருந்தது. இருந்தபோதிலும், கடவுளுடைய வார்த்தையிலிருந்து அவர்களால் பெற முடிந்த அந்தக் குறைந்த அளவான ‘உண்மையான அறிவுக்கே’ தங்களுடைய உயிரை இழக்க தயாராக இருந்தார்கள்.—தானியேல் 12:4.
புராட்டஸ்டண்ட் மதத்தினரும், ஏன் அவர்களுடைய சீர்திருத்தவாதிகள் சிலரும் கருத்துபேதம் உள்ளவர்களை கம்பத்தில் கட்டிவைத்து உயிரோடு கொளுத்துவதன் மூலம் அவர்களை அகற்றினார்கள் அல்லது அரசாங்க அதிகாரிகளின் உதவியைக்கொண்டு கத்தோலிக்கர் கொல்லப்படும்படி செய்தனர். உதாரணத்திற்கு, மதபேதமுள்ளவர்களை சிரைச்சேதம் செய்யவே முன்னுரிமை வழங்கப்பட்டபோதிலும், மைக்கேல் சர்வெட்டஸ் என்பவர் திரித்துவத்திற்கு எதிராக மதபேதம் உடையவராக இருந்தார் என்ற காரணத்திற்காக கெல்வின் அவரை உயிரோடு எரித்து கொன்றார்.
உண்மை என்னவென்றால், கத்தோலிக்க மதமும் புராட்டஸ்டண்ட் மதமும் என்னதான் ஆயிரம் சாக்குப்போக்குகளை சொன்னாலும், மதபேதமுள்ளவர்களை துன்புறுத்துவதும், கொல்லுவதும் இரண்டிற்கும் சர்வசகஜம். ஆனால், மத ஆட்சியாளர்களின்மேல் இன்னும் அதிகமான பழி சுமரும். ஏனென்றால் செய்த கொலைகளுக்கு வேதப்பூர்வமான ஆதாரம் இருப்பதாக சொல்லிக்கொண்டு, கடவுள் தாம் அத்தகைய செயல்களை செய்யும்படி கட்டளையிட்டதைப்போல் செயல்பட்டனர். இது கடவுள் பெயருக்கு நிந்தையை குவிக்கவில்லையா? “மத” பலாத்காரம் என்ற கொள்கையை, அதாவது மதபேதமுள்ளவரை சமாளிப்பதற்காக பலாத்காரத்தை உபயோகிக்கலாம் என்ற கொள்கையை முதன்முதலில் ஆதரித்தவர் புகழ்பெற்ற கத்தோலிக்க “சர்ச் தந்தை” அகஸ்டீன் என்பவரே என்பதை எண்ணற்ற அறிஞர்கள் உறுதிப்படுத்துகிறார்கள். செய்யும் செயலுக்கு பைபிளிலிருந்து நியாயம் காட்ட முயன்ற அவர், லூக்கா 14:16-24-ல் காணப்படும் இயேசுவின் உவமையில் உள்ள சொற்களை மேற்கோள்காட்டினார்: “ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா.” தெளிவாகவே அகஸ்டீனால் திரித்து கூறப்பட்ட இவ்வார்த்தைகள் விருந்தோம்பும் பண்பில் தாராளமாக இருப்பதையே சுட்டிக்காட்டினவே அன்றி கொடூரமான பலாத்காரத்தை அல்ல.
கத்தோலிக்க ஒடுக்குமுறை விசாரணை மன்றம் தீவிரமாக இருந்த காலத்திலேயே மத சகிப்புத்தன்மையை ஆதரித்துவந்த ஆட்கள், மதபேதமுள்ளவர்களை துன்புறுத்துவதை எதிர்த்து வாதிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கோதுமையும் களைகளும் என்ற உவமையை அவர்கள் மேற்கோள்காட்டினார்கள். (மத்தேயு 13:24-30, 36-43) அவர்களுள் ஒருவர் ராட்டர்டாமை சேர்ந்த டேஸிடெரியஸ் ஈராஸ்மஸ் என்பவர். நிலத்தின் சொந்தக்காரராக இருக்கும் கடவுள், களைகள் போன்ற மதபேதமுள்ளவர்களை சகித்துக்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறார் என்று அவர் கூறினார். மறுபட்சத்தில், மார்ட்டின் லூத்தர், கருத்துபேதமுள்ள குடியானவர்கள்மீது வன்முறையைத் தூண்டிவிட்டார். கிட்டத்தட்ட 1,00,000 பேர் கொல்லப்பட்டார்கள்.
மதபேதமுள்ளவர்கள் என்று பெயரளவில் அழைக்கப்பட்டவர்களை துன்புறுத்த ஊக்கம் அளித்த கிறிஸ்தவமண்டல மதங்களின் மாபாதக செயலை உணரும்போது, அது நம்மை என்ன செய்யும்படி தூண்டவேண்டும்? கடவுளுடைய வார்த்தையின் உண்மையான அறிவை தேடவேண்டும் என்று நாம் நிச்சயம் விரும்புவோம். கடவுள்மீதும், அயலார்மீதும் கொண்டிருக்கும் அன்பே உண்மை கிறிஸ்தவர்களின் அடையாளம் என்பதாக இயேசு சொன்னார். தெளிவாகவே, அன்பில் வன்முறைக்கு இடமில்லை.—மத்தேயு 22:37-40; யோவான் 13:34, 35; 17:3.
[பக்கம் 21-ன் பெட்டி]
கார்னஸ்க்கீ மீறியதாக சொல்லப்பட்ட சில குற்றச்சாட்டுகள்
8. “பரிசுத்த வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கும் கடவுளின் வார்த்தையை தவிர வேறொன்றையும் நம்பக்கூடாது என்று [நீ உறுதியாக இருந்தாய்].”
12. “புனிதமான பாவ அறிக்கை செய்வது ட யூரீ டிவினோ (de jure Divino) [தெய்வீக சட்டத்திற்கு உட்பட்டதல்ல.] இதை இயேசு ஏற்படுத்தவில்லை. வேதவசனங்களும் இதை நிரூபிப்பதில்லை. கடவுளிடம் மாத்திரம் பாவ அறிக்கை செய்வது அவசியமே அன்றி வேறு எந்தவிதமான பாவ அறிக்கையும் தேவையற்றது என்று [நீ நம்பினாய்].”
15. “உத்தரிக்கும் ஸ்தலம் பற்றி நீ சந்தேகத்தை கிளப்பினாய்.”
16. “மரித்தவர்களுக்காக ஜெபிப்பதைப் பற்றி சொல்லும் மக்கபேயர் நூல் ஏற்கத்தகுந்தது அல்ல என்று நீ கருதினாய்.”
[பக்கம் 18-ன் படத்திற்கான நன்றி]
The Complete Encyclopedia of Illustration/J. G. Heck