அது எப்படிக் கூடிய காரியமாய் இருந்தது?
மனிதவர்க்கத்துக்கு எதிரான மிகப் பயங்கரமான குற்றச்செயல்களில் சில—20-ம் நூற்றாண்டு கான்ஸன்ட்ரேஷன் முகாம்களுக்கு மட்டுமே இணையான குற்றச்செயல்களில் சில—கிறிஸ்துவின் அன்பின் செய்தியைப் பிரசங்கிப்பதற்காக ஒப்புக்கொடுக்கப்பட்ட இரண்டு பிரசங்கிப்புத் தொகுதியைச் சேர்ந்த டோமினிக்கன் அல்லது பிரான்ஸிஸ்கன் குருக்குலத்தினரால் செய்யப்பட்டதானது சரித்திரத்தின் புரியாப் புதிர்களில் ஒன்று.
“பக்தியோடு கிறிஸ்து இயேசுவில் வாழ விரும்புவோர் அனைவரும் துன்புறுத்தப்படுவர்,” என்ற பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட வார்த்தைகளுக்குத் தங்களை அற்பணித்திருக்கும் ஒரு சர்ச்தானே எப்படி துன்புறுத்தும் ஒன்றாக இருக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்வது கடினமாயிருக்கிறது. (2 தீமோத்தேயு 3:12, தமிழ் கத்தோலிக்க மொழிபெயர்ப்பு) அது எப்படிக் கூடிய காரியமாய் இருந்தது?
முதலாவதாக, கத்தோலிக்கப் போதனைத்தானே அதைக் கூடிய காரியமாக்கியது. அது கத்தோலிக்கப் “புனிதர்” அகஸ்டினின் பேர்பெற்ற பின்வரும் வார்த்தைகளில் அடங்கிவிடுகிறது: “சாலூஸ் எக்ஸ்ட்ரா எக்லீஸியம் நான் எஸ்ட்” (சர்ச்சுக்குப் புறம்பே எவ்வித இலட்சிப்பும் இருப்பதில்லை.) சமீபத்தில் பால் ஜான்சன் எழுதிய கிறிஸ்தவ மதத்தின் ஒரு சரித்திரம் அகஸ்டினைக் குறித்து குறிப்பிட்டதாவது: “அவர் துன்புறுத்துவதை அங்கீகரித்ததுமட்டுமின்றி அதற்கு விளக்க வடிவளித்ததே அவர்; போப் மதப் புறக்கணிப்பாளருக்குத் தண்டனைக்குத் தற்காப்பளித்த எல்லா அம்சங்களும் அதற்கு முன்பாக அவருடையத் தற்காப்பு அம்சங்களாக இருந்தன.”
13-ம் நூற்றாண்டில் தேவதூத மருத்துவர் என்று அழைக்கப்பட்ட “புனிதர்” தோமா அக்வினாஸ், மத பேதகர்களுக்கு மரண தண்டனைக் கொடுக்கப்பட வேண்டும் என்பதைச் சிபார்சுச் செய்தார். இதைக் கத்தோலிக்க என்ஸைக்ளோபீடியா இப்படியாக விவரித்தது: “இறைமையியல் வல்லுனர்களும் சட்ட நிபுணர்களும், போப் மதப் புறக்கணிப்பாளரையும் உயர் மட்ட தேச துரோகியையும் ஒன்றாகக் கருதிடும் மனப்பான்மையைக் கொண்டிருந்தனர்.” அதே நூல் தொடர்ந்து ஒப்புக்கொள்வதாவது: “எனவே சாதாரண விசுவாச துரோகிகளைச் சரீரப்பிரகாரமான வாதித்தலின் உரிமைத் தனக்கு இருக்கிறது என்று சர்ச் உரிமைப்பாராட்டினதை எவ்விதத்திலும் சந்தேகிப்பதற்கில்லை.
மத பேதகரை வாதிக்கவும் நெருப்பில் சுட்டெரிக்கவும் சர்ச்சுக்கு “உரிமை” இருந்தது என்பது தானே எரிநரகம் மற்றும் உத்தரிக்கும் ஸ்தலம் என்ற வேதப்பூர்வமற்ற கோட்பாடுகளுக்கு ஒரு பயங்கரமான சம்பந்தம் இருப்பதைக் காண்பிக்கிறது. உயிரோடு வாதிப்பவர் என்று கடவுளைத் தூஷிக்கும் வகையில் சர்ச் கடவுள் பெயரில் ஆட்களை வாதித்தது.—எரேமியா 7:31; ரோமர் 6:23-ஐ ஒப்பிடவும்.
இப்படிப்பட்ட பயங்கரமான தண்டனைக் கூடிய காரியமாயிருந்ததற்கு மற்றொரு காரணம் சர்ச் அரசியலில் ஆழமாக உட்பட்டிருந்தது. இடைக்கால ஐரோப்பா ஒரு சர்வாதிபத்திய சமுதாயமாக இருந்தது. அங்கு சர்ச்சுக்கும் அரசுக்கும் இடையில் அடிக்கடி ஒரு போட்டி மனப்பான்மை நிலவியபோதிலும் மத குருவையோ அல்லது இளவரசனையோ குறைகூற நினைப்பவனுக்கு விரோதமாகத் தங்கள் பலத்தை ஒருமுகப்படுத்தினர். இப்படிப்பட்ட ஒரு விபச்சார உறவில் பிறந்ததுதான் அந்தப் பயங்கர விசாரணை அல்லது தண்டனை முறை. பிரெஞ்சு மொழி என்ஸைக்ளோபீடியா யுனிவர்சலிஸில் நாம் பின்வருமாறு வாசிக்கிறோம்: “இந்த மத தண்டனை முறை தனது நோக்கத்தைப் பொது அதிகாரிகளின் துணையின்றி நிறைவேற்றியிருக்க முடியாது, ஏனெனில் அவர்கள்தானே தண்டனையை நிறைவேற்றுகிறவர்களும் அதற்கான ஏதுக்களை அளிப்பவர்களாயும் இருந்தனர்.”
புராட்டஸ்டான்ட் பிரிவினர் குற்றமற்றவர்கள் என்று சொல்வதற்கில்லை. பாரபட்சமற்ற சரித்திர பதிவுகளைக் கவனிக்கும்போது, சில சமயங்களில் அவர்களுங்கூட கத்தோலிக்கரைப் போலவே மதசகிப்பின்மையை வெளிக்காட்டியிருக்கின்றனர். இவர்களுங்கூட கிறிஸ்துவின் நாமத்தில் பயங்கரமான கொடுமைகளை இழைத்திருக்கின்றனர். இவர்களுங்கூட தங்கள் மதத்தைப் புறக்கணித்தவர்களை மரத்தில் தூக்கி தீக்கு இறையாக்குகின்றனர். அதை அநேகமாய் அரசு அதிகாரிகளின் துணைகொண்டுச் செய்திருக்கின்றனர். புராட்டஸ்டான்டினரின் கொடுஞ் செயல்களும் அதே காரணங்களுக்காக இழைக்கப்பட்டவை: புராட்டஸ்ட்டான்டினர், கடவுள் நித்திய காலத்திற்கும் வாதிப்பவர் என்ற வேதப்பூர்வமற்ற கோட்பாட்டை உட்படுத்தியிருக்கும் ஒரு மத அமைப்பு முறையைச் சேர்ந்தவர்கள், மற்றும் அரசு வல்லமைகளுடன் அல்லது அதிகாரங்களுடன் அசுத்தமான ஆவிக்குரிய உறவைக் காலாகாலமாகக் காத்து வந்திருக்கிறது.
தற்காலத் தன்னாணைக் கொடை
அந்த மதத் தண்டனை முறை மீண்டும் தலைதூக்குமா? இன்றைய மதச் சார்பற்ற சமுதாயத்தில் அது தலைதூக்காது. ஐயமிருப்பதற்கில்லை. என்றபோதிலும், தி நியு என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா பின்வரும் அக்கறைக்குரிய குறிப்பைக் கொண்டிருக்கிறது: “கிறிஸ்தவ மதச் சகிப்பின்மையும் அது விருத்திசெய்த முறைகளும் என்ற தன்னாணைக் கொடை (உதாரணம்: போப் மதப் புறக்கணிப்பாளரைத் தண்டித்ததும், அல்லது மூளைக்கழுவுதலும்) தற்கால அரசியல் புரட்சிகளின் இலட்சியங்கள் செயல்முறைகளின் மதச் சகிப்பின்மையில் கிரியை செய்கிறது.”
ஆம் “[விசுவாசதுரோக] கிறிஸ்தவ மதச் சகிப்பின்மையும் அது விருத்தி செய்த முறைகளும் என்ற தன்னாணைக் கொடை” தற்கால மதச்சார்பற்றச் சமுதாயத்தில் காணலாம். சில நாடுகளில் கத்தோலிக்க சர்ச் பிரதிநிதிகளுக்கு எதிராக அரசியல் சக்திகளால் அந்தப் பழைய தண்டனை முறையை ஒத்திருக்கும் முறைகள் கையாளப்பட்டு வருகிறது. இது வரப்போகும் காரியத்திற்கு ஒரு முன்னனுபவம்.
இப்படிப்பட்ட உலகப்பிரகாரமான மதங்கள் ஆவிக்குரிய “வேசித்தனத்தில்” ஈடுபட்டிருக்கும் “பூமியின் ராஜாக்கள்” அல்லது உலக ஆட்சியாளர்கள் “வேசி”யால், “மகா பாபிலோ”னால் அடையாளப்படுத்தப்படும் பொய் மத உலகப் பேரரசு முழுவதற்கும் எதிராகத் திரும்புவார்கள் என்று பைபிள் காண்பிக்கிறது. (வெளிப்படுத்துதல் 17:1-6) அவள் அரசியல் விவகாரங்களில் தலையிடும் விஷயத்தின்பேரில் அவர்கள் சலிப்படைந்து விடுவார்கள். இப்படிப்பட்ட மத எதிர்ப்பு அரசியல் ஏதுக்களைப் பயன்படுத்தி கடவுள் இந்தக் கொடிய மத ஒழுங்கு முறையின் மீது தம்முடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவார். அவர்கள் “அவள் ஆடைகளைப் பறித்து, அவளைப் பாழாக்கிவிடும். அவளது தசையைத் தின்னும்; அவளை நெருப்பினால் சுட்டெரித்துவிடும்.” (வெளிப்படுத்துதல் 17:12, 16-18, கத்தோலிக்கத் தமிழ் மொழிபெயர்ப்பு) மதப் போர்கள், சிலுவைப் போர்கள் மற்றும் கொடிய தண்டனை முறைகள் மூலம் அவள் சிந்தியிருக்கும் இரத்தத்திற்கு அவள் இந்த வழியில் பழிவாங்கப்படுவாள்.—வெளிப்படுத்துதல் 18:24, 19:2.
எனவேதான் குற்றமற்ற இரத்தத்தை இந்தளவுக்குச் சிந்தியிருக்கும் ஒரு மத அமைப்பின் பாகமாயிருப்பதை அவமானமாக எண்ணும் உண்மை மனதுள்ள கத்தோலிக்கரும் புராட்டஸ்டான்ட்டினரும் கடவுளுடைய பின்வரும் அழைப்புக்குச் செவிகொடுக்க ஊக்கமளிக்கிறது: “என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.”—வெளிப்படுத்துதல் 18:4. (g86 4/22)
[பக்கம் 23-ன் சிறு குறிப்பு]
மத பேதகரை வாதிக்கவும் நெருப்பில் சுட்டெரிக்கவும் சர்ச்சுக்கு “உரிமை” இருந்தது என்பதுதானே எரிநரகம் மற்றும் உத்திரிக்கும் ஸ்தலம் என்ற வேதப் பூர்வமற்ற கோட்பாடுகளின் பயங்கரமான விளைவு