மெக்ஸிகோவில் கத்தோலிக்க ஒடுக்குமுறை விசாரணை—அது எப்படி நேரிட்டது?
நீங்கள் அந்த மதம் கற்றுக்கொடுப்பதை நம்பித்தான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிற மதக் கோர்ட்டுக்கு முன்பிருப்பதாக கற்பனை செய்துபாருங்கள். யார் உங்களைக் குற்றஞ்சாட்டுகிறார் என்றோ எதற்காக குற்றஞ்சாட்டப்படுகிறீர்கள் என்றோ உங்களுக்குத் தெரியாது. சொல்லப்படுவதற்கு மாறாக, உங்களைக் கைது செய்ததற்கான காரணத்தைக் கொடுக்கும்படியும் உங்களுக்கு விரோதமாக என்ன பழி சாட்டப்பட்டதாக நினைக்கிறீர்கள் என்பதை விளக்கும்படியும் குற்றஞ்சாட்டியவர் யார் என்று சொல்லும்படியும் நீங்கள் வலுக்கட்டாயப்படுத்தப்படுகிறீர்கள்.
எப்படிப் பதிலளிக்கிறீர்கள் என்பதைப் பற்றி ஜாக்கிரதையாயிருங்கள். நீங்கள் குற்றஞ்சாட்டப்பட்டிராத காரியத்தை ஒப்புக்கொண்டு, உங்கள் நிலைமையை மோசமாக்கக்கூடும்! மேலும் உங்களுக்கு எதிராக சொல்லப்படும் பழிக்கு சம்பந்தமேயில்லாத ஆட்களை மாட்டிவைக்கவுங்கூடும்.
நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லையென்றால், பெரும் அளவான தண்ணீரை விழுங்கவைத்து உங்களை இம்சைப்படுத்தலாம். அல்லது தாங்கமுடியா வலியெடுக்கும்வரை வதைக்கிற மேசையில் உங்கள் கைகளையும் கால்களையும் படிப்படியாக இறுகவைக்கக்கூடும். கோர்ட் உங்கள் உடைமைகளை ஏற்கெனவே பறிமுதல் செய்துவிட்டிருக்கிறது. நீங்கள் அதைப் பெரும்பாலும் திரும்பவும் பெறமாட்டீர்கள். எல்லாமே இரகசியமாக நடக்கிறது. உங்கள்மீது குற்றம் இருப்பதாக நினைத்தால், நாட்டிலிருந்தே உங்களை வெளியேற்றிவிடுவார்கள் அல்லது உயிரோடே எரித்துவிடுவார்கள்.
இந்த 20-ம் நூற்றாண்டில் இதுபோன்ற கொடூரமான மத நடவடிக்கையை நினைத்துப் பார்ப்பதுங்கூட உங்களுக்கு கடினமாக இருக்கலாம். ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால், மெக்ஸிகோவில் அத்தகைய அட்டூழியங்கள் நடந்தன.
உள்ளூர்வாசிகளை “மதமாறச் செய்வது”
இப்போது மெக்ஸிகோ என்றழைக்கப்படுகிற நாடானது 16-ம் நூற்றாண்டில் ஸ்பெய்ன் நாட்டவர்களால் கைப்பற்றப்பட்டபோது, மதவாத கைப்பற்றுதலும் நடைபெற்றது. உள்ளூர்வாசிகளை மதம் மாற்றுவது பாரம்பரியங்களையும் சடங்காச்சாரங்களையும் மாற்றுவதைவிட அதிகமொன்றும் செய்யவில்லை. ஏனென்றால் சில கத்தோலிக்க குருமார்கள் பைபிளைப் போதிப்பதிலேயே கவனம் செலுத்தினர். உள்ளூர்வாசிகளின் மொழியைக் கற்றுக்கொள்ளவோ அல்லது மதக் கொள்கை கிடைக்கப்பெற்ற லத்தீன் மொழியை கற்றுக்கொடுக்கவோ அவர்கள் கவனஞ்செலுத்தவில்லை.
இந்தியன் ஒருவன் முழுமையான மதக் கல்வியைப் பெறவேண்டும் என்று சிலர் எண்ணினர். ஆனால் வேறு சிலர் சமயத் துறவி டோமிங்கோ டெ பெட்டான்சோஸ் கொண்டிருந்த அதே அபிப்பிராயத்தையே கொண்டிருந்தனர். இவர், ரிச்சர்ட் E. கிரீன்லீஃப் ஸுமாராகாவும் மெக்ஸிக கத்தோலிக்க ஒடுக்குமுறை விசாரணையும் (Zumárraga and the Mexican Inquisition) என்ற தன்னுடைய புத்தகத்தில் சொல்லியிருக்கிறபடி, “இந்தியனுக்கு லத்தீன் மொழியை கற்றுத்தரக்கூடாது, ஏனென்றால் அவ்வாறு செய்வது குருவர்க்கம் எந்தளவுக்கு அறியாமையிலிருக்கிறது என்பதை அறிய வழிகோலும் என்று நம்பினார்.”
உள்ளூர்வாசிகளுக்கு எதிராக கத்தோலிக்க ஒடுக்குமுறை விசாரணை
தாய்நாட்டில் பிறந்த மெக்ஸிகோ ஆட்கள் புது மதத்தை தழுவவில்லையென்றால், அவர்கள் விக்கிரகாராதனைக்காரர்களாக கருதப்பட்டு கடுமையாக துன்புறுத்தப்பட்டார்கள். உதாரணமாக, ஒருவர் தன்னுடைய புறமத விக்கிரகங்களை வழிபடுவதினிமித்தம் நூறு கசையடிகளைப் பெற்றார். “கிறிஸ்தவ” வழிபாட்டை பின்பற்றுவதுபோல நடித்து, இந்த விக்கிரகங்களை அவர் கிறிஸ்தவமண்டல விக்கிரகத்துக்கு அடியில் மறைத்து வைத்திருந்தார்.
மறுபட்சத்தில், தெச்சுகோகோ குலமுதல்வராகிய டான் கார்லோஸ் ஓமெடாக்ட்சின் என்பவரும் அஸ்டெக்குகளின் ராஜாவினுடைய பேரனாகிய நெட்சாயுவால்காயாட்டில் என்பவரும் சர்ச்சை வாய்மொழியால் தாக்கிப்பேசினார்கள். “டான் கார்லோஸ் குறிப்பாக சர்ச்சைத் தாக்கிப் பேசியிருக்கிறார். ஏனென்றால் துறவிகளின் ஒழுக்கக்கேட்டைப் பற்றி உள்ளூர்வாசிகளிடத்தில் அறிவித்திருந்தார்,” என்று கிரீன்லீஃப் சொல்கிறார்.
அப்போது கத்தோலிக்க ஒடுக்குமுறை விசாரணை நடத்துனராயிருந்த துறவி ச்சுவான் டெ ஸுமாராகா என்பவர் இதைக் குறித்து கேள்விப்பட்டபோது, டான் கார்லோஸை கைதுசெய்யும்படி உத்தரவிட்டார். “கொள்கைப்பிடிவாதமுள்ள சமய பேதமுள்ளவன்” என்று குற்றஞ்சாட்டப்பட்டு, நவம்பர் 30, 1539 அன்று டான் கார்லோஸ் மரத்திலேற்றி எரிக்கப்பட்டார். மந்திரவாத பழிகளுக்காக பல்வேறு உள்ளூர்வாசிகள் தண்டனை விதிக்கப்பட்டனர்.
அந்நியர்களுக்கு எதிராக கத்தோலிக்க ஒடுக்குமுறை விசாரணை
மெக்ஸிகோவில் வாழ்ந்துகொண்டு, கத்தோலிக்க மதத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த அந்நியர்கள் சமய பேதமுள்ளவர்களாகவும் லூத்தரன்களாகவும் யூத மதத்தைச் சேர்ந்தவர்களாகவும் குற்றஞ்சாட்டப்பட்டனர். போர்த்துகல் நாட்டைச் சேர்ந்த கார்வாஜால் குடும்பத்தினர் இதற்கு ஓர் உதாரணமாயிருந்தனர். யூத மதத்தை அனுசரித்து வருபவர்களாக குற்றஞ்சாட்டப்பட்டு, கிட்டத்தட்ட எல்லாருமே கத்தோலிக்க ஒடுக்குமுறை விசாரணையால் இம்சைக்குள்ளாக்கப்பட்டனர். இந்தக் குடும்பத்தின் அங்கத்தினர் ஒருவருக்கு எதிராக விதிக்கப்பட்ட பின்வரும் தண்டனை கொடூரத்தை எடுத்துக்காட்டுகிறது: “சொல்லப்பட்ட டோனா மரியானா டெ கார்வாஜால் என்பவள், . . . தானாக சாகும் வரை கராட் [கழுத்தை நெறிக்கும் கருவி] கொடுக்கப்பட்டு, பின்னர் அவளைப்பற்றிய நினைவு இல்லாமல் அவள் சாம்பலாகும் வரை கொழுந்துவிட்டு எரிகிற நெருப்பில் எரித்துப்போட வேண்டும் என்று [நான்] தண்டனைத் தீர்ப்பளிக்கிறேன்.” அவ்வாறே நடந்தது.
அந்நியன் ஒருவன் குருவர்க்கத்தினுடைய அதிகாரத்தை அச்சுறுத்தினால், அவன் விசாரணைக்குக் கொண்டுவரப்படுவான். மெக்ஸிகோவை விடுவிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டதாக டான் கீயென் லாம்பாற்டோ டெ குஸ்மாண் என்ற மனிதன் குற்றஞ்சாட்டப்பட்டார். என்றபோதிலும், ஒரு ஜோதிடனாகவும் கால்வினின் வகுப்புவாத சமய பேதமுள்ளவனாகவும் இருப்பதே அவர் கைதுசெய்யப்படுவதற்கும் விசாரிக்கப்படுவதற்குமான குற்றச்சாட்டாக, சமயத் தண்டமுறை மன்றம் கொண்டு வந்தது. கைதியாயிருந்தபோது பித்துப்பிடித்தவராக அவர் ஆனார். கடைசியாக நவம்பர் 6, 1659 அன்று மரத்திலேற்றி அவரை உயிரோடே எரித்தார்கள்.
அந்தச் சமயத்தை டான் ஆர்டேமியோ டெ வாயி-ஆரிஸ்பெ என்பவர் கத்தோலிக்க ஒடுக்குமுறை விசாரணையும் குற்றச்செயல்களும் (Inquisition and Crimes) என்ற புத்தகத்தில் விவரிக்கிறார்: “அவர்கள் குற்றவாளிகளைக் கட்டி, தொண்டையைச் சுற்றி இரும்பு பட்டையைக் கட்டி மரத்தில் அறைந்தார்கள். . . . விசுவாசத்தின் பரிசுத்த சொக்கப்பனைகள் செந்நிறமும் கருமையும் கலந்த சுழல்காற்றாக எரியத் தொடங்கின. டான் கீயென் . . . திடீரென்று விழுந்தார்; கழுத்தில் கட்டியிருந்த அந்தப் பட்டை அவரை நெறித்தது, பின்னர் அவருடைய சரீரம் கபகபவென்று எரிகிற ஜுவாலையில் மறைந்தது. சமயத் தண்டமுறை மன்றத்தின் துயரகரமான ஜெயில்களில் மெதுவாகவும் தொடர்ந்தும் பதினேழு ஆண்டுகளாக துன்பப்பட்டுக்கொண்டிருந்த அந்த வாழ்க்கையை அவர் நீத்தார். சொக்கப்பனைகள் கொஞ்சம் கொஞ்சமாக தணிந்து, அவற்றின் நீல-செந்நிற கொந்தளிப்பான தழல்கள் மங்கிமறைந்து, பின்னர் அவிந்ததும், இரவில் பிரகாசமான தணல்களின் குவியல் மாத்திரமே எரிவதற்கு விடப்பட்டது.”
“சமயத் தண்டமுறை மன்றம்” ஸ்தாபிக்கப்பட்டது
முன்னமே குறிப்பிட்டபடி, அநேக உள்ளூர்வாசிகளும் அந்நிய நாட்டில் பிறந்த மெக்ஸிகர்களும் தண்டிக்கப்பட்டனர், மேலும் சிலர் பரிகாசம் செய்ததற்கும் அல்லது புதிய மதத்தைத் தழுவாமைக்கும் கொல்லப்பட்டனர். இது துறவிகளாலும் பின்னர் பிஷப்புகளாலும் மூட்டிவிடப்பட்ட கத்தோலிக்க ஒடுக்குமுறை விசாரணையைக் கொண்டுவந்தது. என்றபோதிலும், மெக்ஸிகோவில் டான் பேட்ரோ மோயா டெ கான்ட்ரேராஸ் என்ற முதன்மை கத்தோலிக்க ஒடுக்குமுறை விசாரணை அதிகாரி, அங்குக் கத்தோலிக்க ஒடுக்குமுறை விசாரணையின் சமயத் தண்டமுறை மன்றத்தின் தீர்ப்பு மன்றத்தை அதிகாரப்பூர்வமாக ஸ்தாபிக்க 1571-ல் ஸ்பெய்னிலிருந்து வந்தார். 1820-ல் இந்தக் கோர்ட் இயங்குவதை நிறுத்திக்கொண்டது. இவ்வாறு, 1539 முதல், சுமார் முந்நூறு ஆண்டுகளாக, கத்தோலிக்க மதநம்பிக்கைகளைப் பகிர்ந்துகொள்ளாத ஆட்கள் சித்திரவதையையும் இம்சையையும் சாவையும் அனுபவித்தனர்.
யார்மீதாவது குற்றம் கண்டுபிடிக்கப்பட்டால், அவன் ஒப்புக்கொள்ளும் வரை அவனை இம்சைப்படுத்தினார்கள். கோர்ட்டானது கத்தோலிக்கமல்லாத பழக்கவழக்கங்களைத் துறந்து, சர்ச்சின் போதனைகளை அவன் ஏற்றுக்கொள்ளும்படியாக எதிர்பார்த்தது. குற்றவாளி, தான் நிரபராதி என்பதை நிரூபித்தால், அவனுடைய குற்றத்தை நிரூபிக்க முடியவில்லையென்றால் அல்லது இறுதியாக அவன் ஒப்புக்கொண்டு வருந்தினால் மாத்திரமே விடுவிக்கப்பட்டான். பின்கூறப்பட்ட விஷயத்தில், அவன் தன்னுடைய குற்றத்தை அறவே வெறுத்தொதுக்கிய வாக்குமூலமும் செய்த காரியத்திற்கு ஈடுசெய்ய வாக்குப்பண்ணினதும் யாவரறிய வாசித்துக் காட்டப்பட்டது. எப்படியிருந்தாலும், அவன் தன்னுடைய சொத்துக்களை இழந்தவனாய், பெருந்தொகையான அபராதமும் கட்டவேண்டும். குற்றவாளியாக கண்டுபிடிக்கப்பட்டால், உலகப்பிரகாரமான அதிகாரிகளிடத்தில் தண்டனைக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டான். இது பொதுவாக, உயிரோடு இருக்கும்போதோ மரணத்திற்கு ஆளான பிறகு உடனடியாகவோ மரத்திலேற்றி எரிக்கப்படுவதில் முற்றுப்பெற்றது.
எல்லாரும் பார்க்கும் வண்ணம் தண்டனைகளை நிறைவேற்ற, சமய பேதமுள்ளவர்களை எரிப்பதற்கான பெரிய நிகழ்ச்சியொன்று நடத்தப்பட்டது. நடக்கவிருக்கும் நாளையும் இடத்தையும் எல்லாருக்கும் சொல்வதற்கு நகரமெங்கும் ஒரு பொது அறிவிப்பானது செய்யப்படும். அந்நாளில் தீர்ப்பளிக்கப்பட்டவர்கள், சமயத் தண்டமுறை மன்றத்தின் தீர்ப்பு மன்ற ஜெயில்களிலிருந்து வெளிவருவார்கள். அவர்கள் சாம்பெனீடோவையும் (கைப்பகுதியில்லாத ஒரு வகையான அங்கி) தங்கள் கைகளில் மெழுகுவர்த்தியையும் தங்கள் கழுத்தைச் சுற்றி ஒரு கயிற்றையும் தங்கள் தலையில் கொரோஸாவை (கூம்பு வடிவத் தொப்பி) போட்டுக்கொண்டும் வெளிவருவார்கள். கத்தோலிக்க மதநம்பிக்கைக்கு எதிராக செய்யப்பட்ட குற்றங்களை வாசித்துக் காட்டிய பிறகு, ஒவ்வொரு பலியாளுக்கும் தீர்க்கப்பட்ட தண்டனை அளிக்கப்படும்.
இப்படியாக அநேகர் மதத்தின்பேரில் தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டார்கள். பலியாட்கள் மரத்திலேற்றி சாவதைக் கண்ட திரளான மக்களுக்கு, குருமாரின் கொடூரமானத் தன்மையும் சரிநிகரான சுயாதீனமில்லாமையும் வெளியரங்கமாயின.
கிறிஸ்தவத்திற்கு நேரடியான எதிர்ப்பு
கிறிஸ்து இயேசு உண்மை கிறிஸ்தவத்தினிடம் மக்களை மதமாற்ற தம்முடைய சீஷர்களை உத்தரவிட்டார். அவர் உத்தரவிட்டதாவது: “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்.”—மத்தேயு 28:19, 20.
என்றபோதிலும், மக்களை வலுக்கட்டாயப்படுத்தி மதம் மாற வைக்கவேண்டும் என்று இயேசு குறிப்பிட்டதே கிடையாது. மாறாக, இயேசு சொன்னார்: “எவனாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவது விட்டுப் புறப்படும்போது, உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள்.” (மத்தேயு 10:14) கிறிஸ்தவர்களின் சரீரப்பிரகாரமான குறுக்கிடுதல் இல்லாமலேயே, சர்வவல்ல தேவனாகிய யெகோவாவிடம் இந்த மக்களின் கடையான நியாயத்தீர்ப்பு விடப்பட்டிருக்கிறது.
அப்படியானால், தெளிவாகவே, உலகில் எங்கெல்லாம் கத்தோலிக்க ஒடுக்குமுறை விசாரணை நடந்ததோ, அங்கெல்லாம் கிறிஸ்தவ நியமங்களுக்கு நேரெதிராகவே அது செய்யப்பட்டது.
இப்போது மெக்ஸிகோவில் நிலவும் மத சுயாதீன சூழ்நிலைமை, கடவுளை வணங்கும் விதம் சம்பந்தப்பட்டதில் மக்களுக்குச் சுயாதீனத்தை அனுமதிக்கிறது. ஆனால் பரிசுத்த கத்தோலிக்க ஒடுக்குமுறை விசாரணை என்றறியப்பட்ட நூற்றாண்டுகள், மெக்ஸிக கத்தோலிக்க சர்ச்சின் சரித்திரத்தில் கொடுமையான பக்கமாக நிலைத்திருக்கின்றன.