ரகசிய ஆவணங்கள்—பகிரங்கம்
இத்தாலியிலிருந்து விழித்தெழு! நிருபர்
“கத்தோலிக்க ஒடுக்குமுறை விசாரணை ஆவணங்கள் பகிரங்கமாயின.” பரபரப்பான செய்திகள் வெளிவந்தன. ஆவணங்களை வல்லுநர்கள் சுலபமாக அணுகுவதற்கான அனுமதியை வாடிகன் வழங்கியதைப் பற்றிய அறிக்கைகளே இவை. 1965 வரை கத்தோலிக்க சமயத்தண்டமுறை மன்றம் என அறியப்பட்டிருந்த விசுவாச கோட்பாட்டு சபையின் ரகசிய ஆவணங்கள் வெளியரங்கமாயின.
இந்த ஏற்பாடு “இரண்டாம் ஜான் பால், கி.பி. 2000-க்கு முன் முடிக்க விரும்பிய, நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட நீண்ட காலப்பகுதியை உட்படுத்தும் சரித்திர மறுபார்வை நடவடிக்கைக்குட்பட்டதாக” கருதப்பட வேண்டும்.a இந்த ஆவணங்களில் ஏன் இத்தனை ஆர்வம்? அப்படியென்ன ரகசியங்கள் இவற்றில் அடங்கியிருக்கின்றன?
1542-ல், மூன்றாம் போப் பால் என்பவரால் கத்தோலிக்க சமயத்தண்டமுறை மன்றம் நிறுவப்பட்டது. இது ரோம ஒடுக்குமுறை விசாரணை மன்றம் என்றும் அழைக்கப்பட்டது. இப்பெயர் 1478-ல் ஆரம்பிக்கப்பட்ட ஸ்பானிஷ் ஒடுக்குமுறை விசாரணை மன்றத்திலிருந்து இதை வித்தியாசப்படுத்திக் காட்டியது.b இது “கொள்கை முரண்பாடுகளை” அடக்கி ஒடுக்குவதற்கான போப்பின் ஏஜென்சியாக இருந்தது. 1542-ல் நிறுவப்பட்ட மத குருமார்களடங்கிய இக்குழுவின் “முக்கிய நோக்கம் கிறிஸ்தவப் பிரிவுகள் எல்லாவற்றிலும் காணப்படும் கொள்கை முரண்பாடுகளை நீக்குவதே” என வல்லுநர் ஆட்ரியானோ பிராஸ்பரீ கூறுகிறார். 16-ம் நூற்றாண்டில் இருந்த விசாரணைக் குழுக்களில் ரோம விசாரணைக்குழு ஒன்றே இன்னும் இயங்கிவருகிறது. ஆனால், பெயரிலும் முறையிலும் வேறுபட்டு.
இவ்விசாரணைகளின் பதிவுகள் சேகரிக்கப்பட்டன. காலப்போக்கில் இவை இக்குழுக்களின் ரகசிய ஆவணங்களாயின. 1559-ல், ரோம ஒடுக்குமுறை விசாரணை மன்றத்தைத் துவக்குவதில் பிரதான முன்னோடியாய்த் திகழ்ந்த ஐந்தாம் போப் பால் இறந்தார். அதைக் “கொண்டாடும்” விதத்தில் ரோம் மக்களில் ஒருசிலர் இந்த ஆவணங்களை சூறையாடினர். முதலாம் நெப்போலியன் ரோமைக் கைப்பற்றிய பிறகு 1810-ல், இந்த ஆவணங்களை பாரிஸுக்கு மாற்றினான். அப்பொழுதும், அதற்கு பிறகும் இவற்றை மீட்டு போப்பிடம் ஒப்படைக்கும் பணியின்போது இந்த ஆவணங்களில் பல தொலைந்து அல்லது அழிந்து போய்விட்டன.
அவற்றில் அடங்கியுள்ளவை?
4,300-க்கும் அதிகமான இப்படிப்பட்ட ஆவணங்கள் செ. பீட்டர் பாஸிலிக்கா சர்ச்சை ஒட்டியுள்ள இரு அறைகளில் வைக்கப்பட்டிருக்கின்றன. இவை சரித்திரப்பூர்வமான விஷயங்களை மறைமுகமாக தெரிவிக்கின்றன. இருப்பினும், “அவை முக்கியமாக இறையியல் சம்பந்தப்பட்டவையே” என்பது மதகுரு யோசஃப் ராட்சிங்கரின் கருத்து. இவர் விசுவாச கோட்பாட்டின் வாடிகன் சபையின் தலைவர்.
இந்த ஆவணங்களிலிருந்து அப்படியொன்றும் அதிகம் தெரிந்துகொள்ள முடியாது—இது வரலாற்றாசிரியர்களின் ஒருமித்த கருத்து. ஏனெனில், ரோம ஒடுக்குமுறை விசாரணைக் கூட்டங்களின் நிகழ்ச்சிக் குறிப்பேடுகள் மட்டுமே இருக்கின்றன; ஆனால், “விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்ட சுருக்கக்குறிப்புகள், வழக்கு சம்பந்தப்பட்ட பதிவுகள், ஏறக்குறைய விசாரணை சம்பந்தமான பேப்பர்கள் எதுவுமே காணப்படவில்லை. பெரும்பாலானவை பாரிஸில் 1815-1817 வரையான காலப்பகுதியில் பெருந்தகை மாரீனோ மாரினியின் ஆணையின்பேரில் அழிக்கப்பட்டுவிட்டன; நெப்போலியன் அகற்றிய பேப்பர்களை மீட்டுவர ரோமிலிருந்து அனுப்பப்பட்டவர் இவரே” என்று பேராசிரியர் பிராஸ்பரீ விளக்குகிறார்.
இந்த ஆவணங்களை பார்க்கும் உரிமையை வல்லுநர்களுக்கு வாடிகன் அளித்திருக்கிறது. இவை பதின்மூன்றாம் லியோவால் 1903, ஜூலையில் அவர் இறப்பதற்குமுன் சேகரிக்கப்பட்டவை. இவற்றை ஆராய்வதற்கு சிபாரிசு கடிதங்களை ஆராய்ச்சியாளர்கள் ஒப்புவிக்கவேண்டும். இக்கடிதங்களை கல்வி அல்லது மத நிறுவனங்களிடத்திலிருந்து பெறவேண்டும்.
குறைகள்
ஆவணங்கள் பகிரங்கமாக்கப்பட்ட பரபரப்பான செய்தி பலரால் சந்தோஷமாக வரவேற்கப்பட்டாலும் பல கண்டனக் குரல்களும் எழுந்தன. 1903-க்கு முற்பட்ட ஆவணங்கள்மட்டுமே ஏன் கிடைத்தன என்ற சர்ச்சை எழுந்தது. இதைப்பற்றி கத்தோலிக்க இறையியலாளர் ஹான்ஸ் க்யூங் இவ்வாறு கேட்கிறார்: “1903-ல் பத்தாம் பயஸ் போப்பாண்டவரானார். அவ்வருடத்தில்தான், புதுமைக்கருத்துகளுக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்தார். இது அநேக இறையியலாளர்களுடைய சாவிற்கு காரணமாயிற்று. இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்த பிஷப்புகளுக்கு சிக்கல்களை இது உருவாக்கியது. இதனால், எண்ணற்ற மக்களும் சர்ச்சிலிருந்து விலகிச் சென்றனர். அடுத்தடுத்து நடந்த இச்சம்பவங்களால்தான் 1903-ம் ஆண்டில் ஆவணங்கள்மீது கவனம் திரும்பியதோ?” என கேட்கிறார்.
பெயர் மாற்றப்பட்டபோதிலும், “பழைய ஒடுக்குமுறை விசாரணைகளைப் போலவே, [விசுவாச கோட்பாட்டு சபையின் முறைகளும்] அமைந்திருந்தன.” பழைய முறையில், விசாரணைக்கு வைக்கப்பட்டிருந்தவர்களை பற்றிய விவரங்கள் அடங்கிய ஆவணங்களை பார்க்க அவர்களே அனுமதிக்கப்படவில்லை. அதுபோலவே இவ்விசாரணையிலும் நடத்தப்பட்டனர் என சட்ட வல்லுநர் ஈடாலோ மெராயூ கருத்து தெரிவிக்கிறார்.
‘அறியப்படாத ரகசியம் ஒன்றுமில்லை’
வல்லுநர்கள் “விசாரணை ஆவணங்களில்” எந்தவொரு பரபரப்பூட்டும் விஷயத்தையும் கண்டுபிடிக்கப்போவதில்லை என்பதே சரித்திராசிரியர்கள் இடையே பொதுவாக நிலவும் கருத்து. இருந்தபோதிலும், பொது மக்களின் தீர்ப்புக்கு கத்தோலிக்க சர்ச் கட்டுப்பட விரும்புவது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், எல்லாவற்றைவிட மிக முக்கியமான அபிப்பிராயம் கடவுளுடையதே! குறித்த காலத்தில் அவர் தம் நியாயத்தீர்ப்பை வழங்குவார். கிறிஸ்தவர்களென உரிமைப்பாராட்டிக் கொண்டு பல நூற்றாண்டுகளாக கடவுளுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படியாத இம்மதத்தின்மீது நிச்சயமாகவே கடவுள் தம் நியாயத்தீர்ப்பை வழங்குவார். கொடூரமான விசாரணைகளை நடத்தியதன்மூலம் இயேசுவின் போதனைகளுக்கு மாறான ஓர் குரூர மனநிலையை வெளிப்படுத்தியதற்கு அவர்கள் கடவுளுடைய தீர்ப்பை எதிர்ப்பட்டேயாக வேண்டும். இவ்விசாரணைகளில், ஒரு பாவமும் அறியாத எண்ணற்ற மக்கள் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டனர். ஏன்? சர்ச்சின் கோட்பாடுகளையும் பழக்கவழக்கங்களையும் ஏற்றுக்கொள்ளாததாலேயே.—மத்தேயு 26:52; யோவான் 14:15; ரோமர் 14:21.
வல்லுநர்கள் ஆவணங்களை எவ்வளவு தீவிரமாக ஆராய்ந்தாலும் அது ஒருபோதும் முழுமை பெறாது. அதற்கு பதிலாக, “படைப்பு எதுவும் [கடவுளுடைய] பார்வைக்கு மறைவாய் இல்லை. அவருடைய கண்களுக்கு முன் அனைத்தும் மறைவின்றி வெளிப்படையாய் இருக்கின்றன. நாம் அவருக்கே கணக்குக் கொடுக்க வேண்டும்.” (எபிரேயர் 4:13, திருத்திய மொழிபெயர்ப்பு) எனவேதான், அவரை எதிர்த்த மதத்தலைவர்களைக் குறித்து இயேசு இவ்வாறு தம் சீஷர்களிடம் சொன்னார்: “அவர்களுக்குப் பயப்படாதிருங்கள்; வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை; அறியப்படாத இரகசியமும் இல்லை.”—மத்தேயு 10:26.
[அடிக்குறிப்புகள்]
a காவற்கோபுரம், மார்ச் 1, 1998, பக்கங்கள் 3-7-ஐக் காணவும்.
b இவை இயங்கிய முறைகளும் அதன் விளைவுகளும் சிறிதளவே வேறுபட்டு இருந்தன. எனினும், இவ்விரண்டு நிறுவனங்களுமே இடைக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணை மன்றங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டவை. இவை 1231-ல் இத்தாலியிலும் பிரான்ஸிலும் நிறுவப்பட்டன.
[பக்கம் 12-ன் படத்திற்கான நன்றியின் படம்]
கத்தோலிக்க சமயத்தண்டமுறை மன்ற மாளிகை, ரோம், இத்தாலி
படங்கள்: Bildersaal deutscher Geschichte புத்தகத்திலிருந்து