புதன், அக்டோபர் 15
ஆல்பாவும் ஒமேகாவும் நானே.—வெளி. 1:8.
ஆல்பா என்பது கிரேக்க மொழியில் முதலாவது எழுத்து. ஒமேகா என்பது கடைசி எழுத்து. “ஆல்பாவும் ஒமேகாவும் நானே” என்று சொல்வதன் மூலம், ஒரு விஷயத்தை ஆரம்பித்தால் கண்டிப்பாக அதை நல்லபடியாக செய்து முடிப்பார் என்பதை யெகோவா காட்டுகிறார். யெகோவா ஆதாமையும் ஏவாளையும் படைத்த பிறகு அவர்களிடம், “‘நீங்கள் பிள்ளைகளைப் பெற்று, ஏராளமாகப் பெருகி, பூமியை நிரப்புங்கள்; அதைப் பண்படுத்துங்கள்’ . . . என்று சொல்லி ஆசீர்வதித்தார்.” (ஆதி. 1:28) இது ஒருவிதத்தில் அவர் “ஆல்பா” என்று சொன்னதுபோல் இருந்தது. சீக்கிரத்தில், ஆதாம் ஏவாளின் சந்ததியில் வரும் கீழ்ப்படிதலுள்ள மக்கள் இந்தப் பூமி முழுவதையும் நிரப்பி, அதைப் பூஞ்சோலையாக மாற்றுவார்கள். அந்தச் சமயத்தில் யெகோவா “ஒமேகா” என்று சொல்வதுபோல் இருக்கும். தன் நோக்கத்தை நிறைவேற்ற யெகோவா ஏழாவது நாளை ஒதுக்கி வைத்திருக்கிறார். அந்த நாளின் முடிவில் அவருடைய நோக்கம் கண்டிப்பாக நிறைவேறிவிடும்.—ஆதி. 2:1-3. w23.11 5 ¶13-14
வியாழன், அக்டோபர் 16
யெகோவாவுக்கு வழியைத் தயார்படுத்துங்கள்! நம் கடவுளுக்காக பாலைவனத்தில் ஒரு சமமான நெடுஞ்சாலையை அமையுங்கள்.—ஏசா. 40:3.
பாபிலோனிலிருந்து இஸ்ரவேலுக்குப் போக கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் ஆகும். அந்தப் பயணம் ரொம்ப கஷ்டமாகவும் இருக்கும். ஆனால், இடையில் வரும் எல்லா தடைகளையும் நீக்கப்போவதாக யெகோவா வாக்குக் கொடுத்தார். உண்மையுள்ள யூதர்களுக்கு ஒரு விஷயம் நன்றாகத் தெரிந்திருந்தது. இஸ்ரவேலுக்குத் திரும்பிப் போவதற்காக அவர்கள் செய்யும் தியாகங்களைவிட அவர்களுக்குக் கிடைக்கும் ஆசீர்வாதங்கள்தான் அதிகம்! அதில் ஒரு ஆசீர்வாதம்: அவர்களால் மறுபடியும் யெகோவாவைச் சுதந்திரமாக வணங்க முடியும்! யெகோவாவை வணங்குவதற்கு பாபிலோனில் ஆலயமே இல்லை. திருச்சட்டத்தில் சொன்னதுபோல் யெகோவாவுக்குப் பலிகளைச் செலுத்த இடமும் இல்லை, குருமார் ஏற்பாடும் இல்லை. அந்த ஊரில் யெகோவாவையும் அவருடைய சட்டங்களையும் மதித்து நடந்தவர்களைவிட பொய் தெய்வங்களை வணங்கியவர்கள்தான் நிறைய பேர் இருந்தார்கள். அதனால், யெகோவாவுக்கு உண்மையாக இருந்த ஆயிரக்கணக்கான யூதர்கள், அவர்களுடைய தாய்நாட்டுக்குத் திரும்பிப் போய் உண்மை வணக்கத்தைத் திரும்பவும் ஆரம்பிப்பதற்கு ஆசையாகக் காத்திருந்தார்கள். w23.05 14-15 ¶3-4
வெள்ளி, அக்டோபர் 17
தொடர்ந்து ஒளியின் பிள்ளைகளாக நடந்துகொள்ளுங்கள். —எபே. 5:8.
தொடர்ந்து “ஒளியின் பிள்ளைகளாக” நடப்பதற்குக் கடவுளுடைய சக்தியின் உதவி நமக்குத் தேவை. இந்த ஒழுக்கங்கெட்ட உலகத்தில் சுத்தமாக இருப்பது சுலபம் இல்லைதான். (1 தெ. 4:3-5, 7, 8) இந்த உலகத்தின் யோசனைகளையும் தத்துவங்களையும் எதிர்த்து போராட கடவுளுடைய சக்தி உதவி செய்யும். அதுமட்டுமல்ல, ‘எல்லா விதமான நல்ல குணத்தையும் நீதியையும்’ வளர்த்துக்கொள்ளவும் அது உதவும். (எபே. 5:9) கடவுளுடைய சக்தி வேண்டுமென்றால் அதற்காக ஜெபம் செய்ய வேண்டும். யெகோவா, “தன்னிடம் கேட்கிறவர்களுக்குத் தன்னுடைய சக்தியை . . . கொடுப்பார்” என்று இயேசுவும் சொன்னார். (லூக். 11:13) சபையில் யெகோவாவைப் புகழும்போதும் அந்த சக்தி நமக்குக் கிடைக்கும். (எபே. 5:19, 20) கடவுளுடைய சக்தி நம்மேல் செயல்படும்போது, யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி நம்மால் வாழ முடியும். w24.03 23-24 ¶13-15