உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g99 4/22 பக். 20-25
  • சைபீரியாவிற்கு நாடுகடத்தப்படுதல்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சைபீரியாவிற்கு நாடுகடத்தப்படுதல்!
  • விழித்தெழு!—1999
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நாடு கடத்தப்படுதல்
  • நாடுகடத்தப்பட்டு வேலை செய்தல்
  • எங்களுடைய ஆன்மீக வாழ்க்கை
  • நிலைமைகள் மாறும்போது சகித்திருத்தல்
  • எனது ஆன்மீக வளர்ச்சி
  • வேலை படிப்படியாக வளர்ந்தது
  • பெரும் வளர்ச்சியில் மகிழ்ச்சியடைதல்
  • உத்தமத்தை காத்துக்கொள்வதே என் முக்கிய நோக்கம்
    விழித்தெழு!—2000
  • இரும்பு திரைக்குப் பின் 40 வருடங்களுக்கு மேலாக
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • “சோதனைகளின் மத்தியிலும் உண்மையாயிருத்தல்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • சர்வாதிகார கொடுங்கோலாட்சியில் விசுவாசத்தை காத்துக்கொள்ளுதல்
    விழித்தெழு!—2000
மேலும் பார்க்க
விழித்தெழு!—1999
g99 4/22 பக். 20-25

சைபீரியாவிற்கு நாடுகடத்தப்படுதல்!

வாஸிலை கலின் என்பவரால் சொல்லப்பட்டது

பீரங்கிகள் குண்டுமழை பொழிந்து கொண்டிருக்கும்போது ஒருவர் அமைதியாக பைபிள் படித்துக்கொண்டிருப்பதை நீங்கள் பார்த்தால், இவர் மாத்திரம் எப்படி அமைதியாக இருக்கிறார் என்று அறிந்துகொள்ள ஆவலாக இருப்பீர்கள் அல்லவா? 56 வருடங்களுக்கு முன்பாக இந்த காட்சியை நேரில் கண்ட எனது அப்பாவுக்கும் அதே ஆவல்தான் ஏற்பட்டது.

அது ஜூலை 1942. இரண்டாம் உலகப்போர் தனது ஆக்ரோஷத்தின் உச்ச கட்ட வெறியில் இருந்தது. உக்ரேனிலுள்ள வில்ஸானிட்சா கிராமத்தில் எனது அப்பா குடியிருந்தார். ஜெர்மன் படையின் முன்னணியினர் அந்த கிராமத்தை கடந்து சென்றனர். அப்போதுதான் முதிர்வயதான நபர்கள் தங்கியிருந்த ஒரு வீட்டிற்கு அப்பா சென்றார். அச்சமயம் எங்கு பார்த்தாலும் குண்டு மழை பொழியும் வேலையில் பீரங்கிகள் சுறுசுறுப்பாக இருந்தன; இருந்தபோதிலும் ஒரு பெரியவர் அப்போது ஸ்டவ்வில் மக்காச்சோளத்தை சுட்டுக்கொண்டே பைபிளையும் வாசித்துக் கொண்டிருந்தார்.

இந்த சம்பவம் நான் பிறப்பதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. உக்ரேனின் மேற்கத்திய நகரமான இவானோ-ஃபிரான்கோவ்ஸ்க் அழகு கொழிக்குமிடமாகும். அப்போது சோவியத் யூனியனின் பாகமாயிருந்த இந்த நகரத்தில்தான் நான் பிறந்தேன். யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராகிய அந்த நபரை சந்தித்த தன்னுடைய மறக்க முடியாத அனுபவத்தையும் யுத்தத்தின் கோரமான நினைவுகளையும் பற்றி அப்பா என்னிடம் பிற்பாடு சொன்னார். மக்கள் நொந்துபோயிருந்தனர்; நடந்த எல்லாவற்றையும் பார்த்து திக்கு தெரியாமல் திண்டாடிக் கொண்டிருந்தார்கள். ‘ஏன் இவ்வளவு அநீதி? ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் பலியாவதேன்? கடவுள் ஏன் இவற்றை அனுமதித்திருக்கிறார்? ஏன்? ஏன்? ஏன்?’

அந்த பெரியவரோடு மணிக்கணக்காக மேற்குறிப்பிட்ட கேள்விகளை ஒளிவு மறைவின்றி அப்பா விவாதித்தார். அப்பாவின் கேள்விகளுக்கு பைபிளை திறந்து வசனங்களின் மூலம் அவர் பதிலளித்தார்; இந்தக் கேள்விகள்தான் அப்பாவை பல ஆண்டுகள் குழப்பியிருக்கின்றன. தாம் ஏற்கெனவே நிர்ணயித்திருக்கும் ஒரு சமயத்தில், கடவுள் எல்லா யுத்தங்களையும் முடிவுக்கு கொண்டு வருவார்; இந்த முழு பூமியும் அழகிய நந்தவனமாக மாற்றப்படும்; இதுவே கடவுளுடைய நோக்கம் என்பதாக அவர் விவரித்தார்.​—⁠சங்கீதம் 46:9; ஏசாயா 2:4; வெளிப்படுத்துதல் 21:3, 4.

எனது அப்பா ஆச்சரியத்தில் மூழ்கிப்போனார். உடனடியாக வீட்டிற்கு திரும்பிய அவர், “உங்களால் இதை நம்ப முடிகிறதா? நான் யெகோவாவின் சாட்சிகளோடு ஒரே ஒரு தடவைதான் பேசினேன், அதனால் எனது அறிவுக் கண்கள் திறந்தன. நான் சத்தியத்தை கண்டுபிடித்து விட்டேன்!” என்பதாக பெருமிதத்துடன் சொன்னார். தான் தவறாமல் கத்தோலிக்க சர்ச்சிற்கு சென்றுகொண்டிருந்தபோது தன்னுடைய கேள்விகளுக்கு பாதிரியார்களால் பதில் சொல்ல முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ஆகவே அப்பா பைபிளை படிக்க ஆரம்பித்தார். அம்மாவும் அவரோடு சேர்ந்து கொண்டார். கற்றவற்றை தங்களுடைய மூன்று குழந்தைச் செல்வங்களுக்கும் சொல்லிக்கொடுத்தனர். அப்போது எனது சகோதரிக்கு 2 வயது. சகோதரர்களில் ஒருவனுக்கு 7 வயது, அடுத்தவனுக்கோ 11 வயது. கொஞ்ச காலம் கழித்து எங்களுடைய வீட்டை ஒரு குண்டு பதம்பார்த்தது. ஒண்டுவதற்கு ஒரு அறையை மட்டும் விட்டுவிட்டு, முழு வீட்டையும் தரைமட்டமாக்கியது.

அம்மாவின் குடும்பம் பெரியது. ஆறு சகோதரிகளும் ஒரு சகோதரரும் இதில் அடக்கம். அந்தப் பகுதியில் எங்கள் தாத்தா பெரிய பணக்காரராக இருந்தார். ஆகவே அவருக்கு அதிகாரமும் அந்தஸ்தும்தான் முக்கியமானதாக இருந்தது. இதன் காரணமாக எங்கள் குடும்பத்தின் புதிய விசுவாசத்தை உறவினர்கள் ஆரம்பத்தில் கடுமையாக எதிர்த்தனர். ஆனால் போகப்போக எல்லாம் மாறத்தொடங்கியது. சத்தியத்தை முன்பு எதிர்த்தவர்கள், தங்களுடைய விக்கிரக வணக்கத்திற்கு டாட்டா காண்பித்துவிட்டனர். பைபிள் ஆதாரமற்ற இப்படிப்பட்ட பழக்கவழக்கங்களை கைவிட்டு, எனது பெற்றோருடன் உண்மையான வணக்கத்தில் சேர்ந்துகொண்டனர்.

சாட்சிகளுக்கு எதிராக பாதிரியார்கள் வெளிப்படையாகவே மக்களை தூண்டிவிட்டனர். இதன் விளைவாக உள்ளூர் மக்கள் எனது பெற்றோரை மிரட்டி, வீட்டின் ஜன்னல்களை உடைத்து நொறுக்கினர். இந்த எல்லா மிரட்டல் உருட்டலுக்கெல்லாம் எனது பெற்றோர் மசியவில்லை. தங்களுடைய பைபிள் படிப்பை அவர்கள் தொடர்ந்தார்கள். ஆகவே எங்களது குடும்பம் யெகோவாவை ஆவியோடும் உண்மையோடும் வணங்க ஆரம்பித்தது. இந்த சந்தர்ப்பத்தில்தான் 1947-⁠ல் நான் பிறந்தேன்.​—⁠யோவான் 4:⁠24.

நாடு கடத்தப்படுதல்

ஏப்ரல் 8, 1951. எனக்கு அப்பொழுது நான்கு வயதுதான் இருக்கும். இருப்பினும் அன்று அதிகாலை நடந்த நிகழ்ச்சிகள் இன்றும் என் மனதில் பசுமையாகவே இருக்கின்றன. மோப்ப நாய்களுடன் இராணுவ வீரர்கள் திபுதிபு என வீட்டில் நுழைந்தார்கள். நாடு கடத்தப்படுவதற்கான ஆர்டரை கொடுத்து விட்டு, வீடு முழுவதும் சோதனை நடத்தினர். மோப்ப நாய்களுடன் வந்திருந்த இராணுவத்தினர் இயந்திரத் துப்பாக்கிகளை கையில் ஏந்தியவர்களாக கதவண்டையில் காவலுக்காக நின்றனர். இராணுவ உடையிலிருந்த வீரர்கள் எங்களது டேபிளில் உட்கார்ந்தனர். நாங்கள் வீட்டைவிட்டு கிளம்புவதற்கு இரண்டு மணிநேரம் மட்டும் அளித்தனர். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஓ. . .வென்று அழுதது மட்டும் இன்னும் ஞாபகமிருக்கிறது.

தாங்கள் இனிமேலும் யெகோவாவின் சாட்சிகள் அல்ல என்றும் சாட்சிகளோடு எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள மாட்டார்கள் என்றும் குறிப்பிடும் ஒரு படிவத்தில் கையொப்பமிட வேண்டும் என பெற்றோருக்கு கட்டளையிடப்பட்டது. இதில் கையொப்பமிட்டால் அவர்களுடைய நாட்டிலும் அவர்களுடைய சொந்த வீட்டிலும் இருக்கலாம். “நீங்கள் எங்களை எங்கே அனுப்பினாலும் சரி, எங்கள் கடவுளாகிய யெகோவா எங்களை கைவிடமாட்டார். இதில் எள்ளளவும் சந்தேகமில்லை” என்பதாக அப்பா ஆணித்தரமாக சொல்லிவிட்டார்.

“உன்னுடைய குடும்பத்தையும் பிள்ளைகளையும் யோசித்துப்பார்” என்று ஒரு அதிகாரி கெஞ்சினார். “உங்களை ஒரு கோடை வாசஸ்தலத்தைப் போன்ற இடத்திற்கு அழைத்துச் செல்லப் போவதில்லை. வடக்கே தொலைதூரத்திற்கு நாடுகடத்தப்பட போகிறீர்கள். அங்கே நிரந்தரமாக பனி இருக்கும்; தெருக்களில் துருவக்கரடிகள்தான் உங்களை வரவேற்கும்” என்பதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

அந்த சமயத்தில் “சைபீரியா” என்ற பெயரை கேட்டாலே எல்லாருக்கும் வயிற்றை கலக்கும்; அது ஏதோ பயங்கரமான, மர்மமான இடம் என்ற ஒரு எண்ணம் இருந்தது. ஆனால் யெகோவாவிடத்திலிருந்த விசுவாசமும் தீவிரமான அன்பும் தெரியாத விஷயத்தைப் பற்றிய பயத்தைவிட மிக வலிமை வாய்ந்தவையாக விளங்கின. எங்களுடைய எல்லா மூட்டை முடிச்சுகளும் ஒரு வேனில் ஏற்றப்பட்டன. அங்கிருந்து நாங்கள் நகரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, ஒரு இரயிலில் ஏற்றப்பட்டோம். இப்பிரயாணத்தின்போது இதேபோல இருபதிலிருந்து முப்பது குடும்பங்கள் எங்களுடன் சேர்ந்து கொண்டன. சைபீரியாவின் பாலைவனப் பகுதி அல்லது டைகாவின் உட்பகுதிக்கு எங்களுடைய பயணம் ஆரம்பித்தது.

பல்வேறு ரயில்வே ஸ்டேஷன்களை கடந்து எங்களது இரயில் சென்றுகொண்டிருந்தது. வழியில் எங்களைப் போலவே நாடுகடத்தப்பட்டவர்களை ஏற்றிச் சென்ற இரயில்களை நாங்கள் பார்த்தோம். “யெகோவாவின் சாட்சிகள் உள்ளே இருக்கிறார்கள்” என்ற பேனர்களும் இரயில் பெட்டிகளில் கட்டப்பட்டிருந்தன. இது மிகவும் வித்தியாசமான சாட்சி கொடுத்தலாக இருந்தது. ஏனெனில் ஆயிரக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய குடும்பங்களுடன் வடக்கேயும் வெகுதூரத்திலுள்ள கிழக்குப் பகுதிகளுக்கும் நாடுகடத்தப்பட்டதை இதன் மூலம் பொதுமக்கள் அறிந்து கொண்டனர்.

ஏப்ரல் 1951-⁠ல் சாட்சிகள் சுற்றி வளைக்கப்பட்டு நாடுகடத்தப்பட்ட விவரம் துல்லியமாக அறிக்கை செய்யப்பட்டது. சோவியத் யூனியனில் மதம் (ஆங்கிலம்) என்ற தனது புத்தகத்தில் வரலாற்றாசிரியர் உவால்டர் கோலார்ஸ் எழுதினார்: “இப்படி செய்ததால் ‘சாட்சிகளை’ ரஷ்யாவிலிருந்து ஒழித்துவிட முடியவில்லை. அதற்கு மாறாக அவர்களுடைய ஊழியத்தில் புதிய அத்தியாயத்தின் ஆரம்பமாகவே இது நிரூபித்தது. அவர்கள் நாடுகடத்தப்படும்போது எல்லா இரயில்வே ஸ்டேஷன்களிலும் தங்களுடைய விசுவாசத்தைப் பற்றி பிரசங்கித்துக் கொண்டே சென்றார்கள். சோவியத் அரசாங்கம், சாட்சிகளை நாடுகடத்தியதால் அவர்களுடைய விசுவாசம் இன்னும் பரவலாக பரவுவதற்கு வழி செய்துவிட்டது. எங்கேயோ ஒரு மூலையில் கிராமத்தில் தனித்து இருந்த ‘சாட்சிகள்’ பரந்த உலகத்திற்கு வந்துவிட்டனர். ஆகவே அவர்கள் பயங்கரமான கான்சன்ட்ரேஷன் கேம்புகளிலும் அடிமை வேலையாட்களின் கேம்புகளிலும் தள்ளப்பட்டாலும் நன்றாக அறியப்பட்டார்கள் என்பதுதான் உண்மை.”

எப்படியோ எங்களுடைய குடும்பத்தினர் மாவு, மக்காச்சோளம், பீன்ஸ் போன்ற உணவுப்பண்டங்களை எடுத்துச் செல்லும்படி அனுமதிக்கப்பட்டனர். என்னுடைய தாத்தாவுக்கு ஒரு பன்றியை அடித்து சமைப்பதற்கு அனுமதி கிடைத்தது; அது எங்களுக்கும் மற்ற சாட்சிகளுக்கும் சாப்பாடாக அமைந்தது. பயணத்தின்போது சாட்சிகளுடைய இருதயப்பூர்வமான பாடல்களை ரெயில் பெட்டிகளிலிருந்து கேட்க முடிந்தது. சகித்திருப்பதற்கு போதுமான சக்தியை யெகோவா எங்களுக்கு கொடுத்தார்.​—⁠நீதிமொழிகள் 18:⁠10.

ரஷ்யாவின் குறுக்கே கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் பயணம் செய்து கடைசியாக சைபீரியாவின் தொலைதூரத்திலுள்ள அந்த தனிமையான, குளிர்மிகுந்த இடத்திற்கு வந்து சேர்ந்தோம். இர்குட்ஸ்க் மாவட்டத்தைச் சேர்ந்த சன்ஸ்க் பிராந்தியத்திலுள்ள டோரியோ ஸ்டேஷனுக்கு அழைத்து வரப்பட்டோம். அங்கிருந்து நாங்கள் டைகாவிலேயே இன்னும் உட்புறப் பகுதியிலுள்ள சிறிய கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டோம். இந்த இடத்தை எங்களுடைய ஆவணங்கள் “நிரந்தர குடியிருப்பு” என்பதாக விவரித்தன. 15 குடும்பத்தினரின் உடைமைகள் ஒரு பனிச்சறுக்கு வண்டியில் தாராளமாக அடங்கின. ஒரு ட்ராக்டர் இந்த வண்டியை இளவேனில் பருவத்தில் சேற்றில் தரதரவென்று இழுத்து சென்றது. போர் வீரர்களுக்கு அமைக்கப்படுவதைப் போன்ற தடுப்புச் சுவரே இல்லாத நீண்ட குடியமைப்பில் சுமார் 20 குடும்பங்கள் அடைக்கப்பட்டன. உள்ளூர்வாசிகளிடம் யெகோவாவின் சாட்சிகள் மிகவும் மோசமானவர்கள் என்பதாக அதிகாரிகள் முன்கூட்டியே எச்சரிக்கை செய்திருந்தனர். இதன் காரணமாக உள்ளூர்வாசிகள் எங்களை பார்த்தாலே பயந்து பத்தடி ஓடினார்கள். எங்களோடு நன்றாக அறிமுகமாக வேண்டும் என்பதாக யாருமே முயற்சி செய்யவில்லை.

நாடுகடத்தப்பட்டு வேலை செய்தல்

யெகோவாவின் சாட்சிகள் மிகவும் கடினமான சூழ்நிலைகளில் மரங்களை வெட்டும் வேலையை செய்தார்கள். மரத்தை அறுப்பது, செதுக்குவது, குதிரை வண்டிகளில் அவற்றை ஏற்றுவது, பிற்பாடு சரக்கு இரயில் பெட்டிகளில் ஏற்றுவது போன்ற எல்லா வேலைகளையும் கைகளால்தான் செய்ய வேண்டும். மேகம் போல திரளாக வந்த ஒரு வகை கொசுக்களிடமிருந்து தப்பித்து கொள்வதற்கு மறைவான இடமே இல்லை. இதனால் எனது அப்பா மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டார். அவருடைய உடல் பலூனைப்போல புஸ்ஸென்று உப்பிக்கொண்டது. இந்த வேதனையை தாங்கிக்கொள்ள யெகோவாவிடம் அப்பா மன்றாடிக் கேட்டுக்கொண்டார். இப்படிப்பட்ட கஷ்டங்கள் மத்தியிலும் பெரும்பாலான யெகோவாவின் சாட்சிகளின் விசுவாசம் அசைக்க முடியாததாக இருந்தது.

கொஞ்சங்காலம் கழித்து நாங்கள் இர்குட்ஸ்க் நகரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கிருந்த முன்னாள் சிறைச்சாலை வளாகத்தில் நாங்கள் குடும்பமாக வாழ்ந்து வந்தோம்; ஒரு செங்கற்சூளையில் நாங்கள் வேலையும் செய்தோம். சுட்டுப்பொசுக்கும் செங்கற்களை சூளையிலிருந்து நேரடியாக கைகளால் எடுக்க வேண்டும். தினந்தோறும் செய்து முடிக்கவேண்டிய வேலைப் பளுவும் மலைபோல நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருந்தது. ஆகவே ஒதுக்கப்பட்ட வேலையை முடிப்பதற்கு, சிறு பிள்ளைகளும் தங்களுடைய பெற்றோர்களுக்கு உதவ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பூர்வ எகிப்தில் இஸ்ரவேலர்கள் எவ்விதமாக அடிமைகளாக கஷ்டப்பட்டிருப்பார்கள் என்பதை இச்சம்பவங்கள் எங்களுக்கு நினைப்பூட்டின.​—⁠யாத்திராகமம் 5:9-16.

சாட்சிகள் நேர்மையானவர்கள்; கடும் உழைப்பாளிகள் என்பது தெள்ளத்தெளிவானது. “மக்களின் எதிரிகள்” என்று சாட்சிகளை குறிப்பிட்டது தவறு என்பதும் தெளிவானது. யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர்கூட அதிகாரிகளை அவமதிக்கவில்லை என்பதும் அதிகாரத்திலிருப்பவர்களின் தீர்மானத்தை எதிர்த்து கலகம் செய்யவும் இல்லை என்பதும் கவனிக்கப்பட்டது. காலப்போக்கில் அநேகர் சாட்சிகளுடைய விசுவாசத்தை பாராட்டினர்.

எங்களுடைய ஆன்மீக வாழ்க்கை

நாடுகடத்தப்படுவதற்கு முன்பாகவும் இரயில் பயணத்தின்போதும் நாடுகடத்தப்பட்ட இடத்திலும் அதிகாரிகள் மீண்டும் மீண்டுமாக சாட்சிகளை துருவித்துருவி சோதனை செய்தனர். இருந்தபோதிலும் சாட்சிகள் தங்களோடு காவற்கோபுரம் பத்திரிகைகளையும் ஏன் பைபிள்களையும்கூட மறைத்து வைத்திருந்தனர். பிற்பாடு இவை கையினாலும் மற்ற ஏதுக்களினாலும் நகல்கள் எடுக்கப்பட்டன. அந்தக் குடியிருப்புகளில் கிறிஸ்தவ கூட்டங்கள் தவறாமல் நடைபெற்றன. நாங்கள் கூட்டமாக பாடல்கள் பாடும்போது கமாண்டர் வந்து விட்டால், பாடுவதை நிறுத்த வேண்டும் என்று ஆர்டர் போட்டுவிடுவார். நாங்களும் நிறுத்தி விடுவோம். கமாண்டர் அடுத்த கூடாரத்திற்கு சென்று விட்டால் மீண்டுமாக பாடத் தொடங்கி விடுவோம். நாங்கள் இவ்வாறு செய்வதை யாராலும் தடுக்கவே முடியவில்லை.

எங்களுடைய பிரசங்க ஊழியத்தையும் யாராலும் நிறுத்த முடியவில்லை. எல்லாரிடத்திலும் எல்லா இடங்களிலும் சாட்சிகள் பிரசங்கித்தார்கள். என்னுடைய பெற்றோர்களும் அண்ணன்மார்களும் எவ்விதமாக பைபிள் சத்தியத்தை மற்றவர்களிடம் பகிர்ந்துகொண்டனர் என்பதைக் குறித்து என்னிடம் பலமுறை சொல்லி இருக்கிறார்கள். இதனால், கொஞ்சம் கொஞ்சமாக பைபிள் சத்தியம் நேர்மையான ஆட்களுடைய மனதை கவர்ந்திழுக்க ஆரம்பித்தது. ஆகவே 1950-களின் ஆரம்பத்திலேயே யெகோவாவின் ராஜ்யத்தைப் பற்றி இர்குட்ஸ்க்கிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் அறிவிக்கப்பட்டது.

ஆரம்பத்தில் சாட்சிகள் அரசியல் எதிரிகளாகக் கருதப்பட்டனர். ஆனால் சிறிது காலம் கழித்து நாங்கள் தெளிவாகவே ஒரு மத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. இருப்பினும் நம்முடைய வேலையை தடுத்து நிறுத்த அதிகாரிகள் முயற்சி செய்தனர். ஆகவே பைபிள் படிப்பு நடைபெறுகிறது என்பதை யாரும் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக சிறு தொகுதிகளாக, இரண்டு மூன்று குடும்பங்களாக கூடிவந்தோம். 1952-⁠ல் பிப்ரவரி மாதத்தின் ஒரு காலைவேளையில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதன் விளைவாக பத்து சாட்சிகள் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களோ பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். எங்களுடைய குடும்பம் இர்குட்ஸ்க் நகரத்திலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இஸ்க்ரோ கிராமத்திற்கு அனுப்பப்பட்டது; அப்போது அக்கிரமத்தில் மக்கள் தொகை சுமார் நூறுதான்.

நிலைமைகள் மாறும்போது சகித்திருத்தல்

அந்த கிராமத்தின் நிர்வாகிகள் நாங்கள் எதிர்பார்க்காத நல்ல உபசரிப்பை அளித்தனர். அந்த மக்கள் மிகவும் எளிமையானவர்களாகவும் சிநேக மனப்பான்மை உள்ளவர்களாகவும் இருந்தனர். அவர்களுடைய வீட்டிலிருந்து வெளிவந்து எங்களுக்கு உதவிக்கரம் நீட்ட அநேகர் முன்வந்தனர். சுமார் 17 சதுர மீட்டர் பரப்பளவுள்ள சிறிய அறையில் குடியேற்றப்பட்ட குடும்பங்களில் மூன்றாவது குடும்பம் எங்களுடையது. மண்ணெண்ணெய் விளக்குகள்தாம் எங்களது வீட்டிற்கு ஒளி வழங்கிய ஒரே ஏதுக்கள்.

அடுத்த நாள் அங்கே தேர்தல் நடைபெற்றது. தாங்கள் ஏற்கெனவே கடவுளுடைய ராஜ்யத்திற்கு ஓட்டு போட்டுவிட்டதாக எனது பெற்றோர்கள் கிராமத்திலிருந்தவர்களிடம் சொன்னார்கள்; அதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பது உண்மைதான். ஆகவே எங்களது குடும்பத்திலுள்ள வயதுவந்தவர்கள் அனைவரும் அந்நாள் முழுவதும் காவலில் வைக்கப்பட்டனர். பிற்பாடு அநேக ஜனங்கள் எங்களுடைய நம்பிக்கைகளைக் குறித்து கேள்விமேல் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர். எனவே எங்களது குடும்ப அங்கத்தினர் அவர்களிடம், மனித குலத்தின் ஒரே நம்பிக்கை கடவுளுடைய அரசாங்கம் மட்டுமே என்பதை எடுத்துச் சொல்ல இது அரிய வாய்ப்பாக அமைந்தது.

இஸ்க்ரோ கிராமத்தில் நான்கு ஆண்டுகள் நாங்கள் தங்கியிருந்தோம். அச்சமயம் நாங்கள் கூட்டுறவு கொள்வதற்கு மற்ற சாட்சிகள் அங்கு ஒருவர்கூட இல்லை. நாங்கள் கிராமத்தை விட்டு வெளியே செல்ல வேண்டுமெனில் கமாண்டரிடம் விசேஷ அனுமதி பெற வேண்டும்; இப்படிப்பட்ட அனுமதியும் எல்லா சமயத்திலும் கிடைக்காது. கண்ணைக்கட்டி காட்டுக்குள் விட்டதுபோல எங்களை இக்கிராமத்தில் தள்ளியதற்கு காரணமே, மக்களிடமிருந்து எங்களை தனிமைப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான். இருப்பினும், உடன் சாட்சிகளுடன் தங்களுக்குக் கிடைத்த ஆவிக்குரிய உணவினைப் பகிர்ந்துகொள்வதற்காக சாட்சிகள் கடும் முயற்சி எடுத்தனர்.

ஸ்டாலின் 1953-⁠ல் மரணமடைந்தார். இதை பின்தொடர்ந்து, குற்றஞ்சாட்டப்பட்ட சாட்சிகளின் சிறைதண்டனை 25-லிருந்து 10 வருடங்களாக குறைக்கப்பட்டது. சைபீரியாவிலிருப்பவர்கள் ஒரு இடம் விட்டு மற்ற இடங்களுக்கு செல்வதற்கு இனிமேலும் விசேஷ ஆவணங்களை வைத்திருக்க வேண்டியதாக இல்லை. என்றபோதிலும் அதிகாரிகள் சீக்கிரத்தில் சோதனைகளை தொடர்ந்தனர். பைபிளையும் பைபிள் சம்பந்தப்பட்ட புத்தகங்களையும் வைத்திருந்த சாட்சிகளை கைது செய்தனர். சாட்சிகளுக்கென விசேஷ கேம்புகள் ஏற்படுத்தப்பட்டன. இர்குட்ஸ்க்கிலும் அதன் சுற்றுப்புறத்திலும் சுமார் 400 சகோதரர்களும் 200 சகோதரிகளும் தங்க வைக்கப்பட்டனர்.

சோவியத் யூனியனில் யெகோவாவின் சாட்சிகள் துன்புறுத்தப்படுகின்றனர் என்ற செய்தி உலகம் முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. 1956-⁠ன் மத்திப காலத்திலிருந்து பிப்ரவரி 1957 வரை உலகம் முழுவதும் நடைபெற்ற 199 மாவட்ட மாநாடுகளில் எங்கள் சார்பாக ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அந்த சமயத்தில் சோவியத் பிரிமியராக இருந்த நிகோலேய். எ. பல்கனினுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளை அம்மாநாடுகளில் கூடியிருந்த 4,62,936 பேர் ஆமோதித்தனர். முக்கியமாக மற்ற விஷயங்களைக் குறிப்பிட்டதோடு அந்தப் பெட்டிஷன் நாங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று விண்ணப்பித்தது. அதோடுகூட “ரஷ்யன், யுக்ரேனியன் மொழிகள் உட்பட தேவைப்படும் மற்ற மொழிகளிலும் காவற்கோபுரம் பத்திரிகையையும் சாட்சிகளால் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் மற்ற புத்தகங்களை பிரசுரிக்கவும் பெற்றுக்கொள்ளவும் எங்களுக்கு அங்கீகாரம் வழங்கும்படியாக” வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதற்கிடையில் எங்களுடைய குடும்பம் தன்னந்தனியாக இருந்த மற்றொரு கிராமமாகிய குட்யோகாவோவிற்கு அனுப்பப்பட்டது. அந்த கிராமம் இர்குட்ஸ்க்கிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலிருந்தது. இந்த இடத்தில் நாங்கள் ஏழு ஆண்டுகள் வாழ்ந்தோம். என்னுடைய அண்ணன் ஃப்யோடர், 1960-⁠ல் இர்குட்ஸ்க்கிற்கு சென்றுவிட்டார். பிற்பாடு அடுத்த வருடத்தில் அவர் திருமணம் செய்துகொண்டார். பின்னர் என்னுடைய அக்காவும் வெளியூருக்குச் சென்றுவிட்டார். பிரசங்க வேலையில் ஈடுபட்டதன் காரணமாக ஃப்யோடர், 1962-⁠ல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

எனது ஆன்மீக வளர்ச்சி

எங்களது கிராமமாகிய குட்யோகாவோவிலிருந்து சைக்கிளில் அல்லது நடந்து சுமார் 20 கிலோமீட்டர் சென்றால்தான் பைபிள் படிப்பு நடக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியும். ஆகவே மற்ற சாட்சிகளோடு நெருங்கிய தொடர்பு வைத்துக்கொள்வதற்கு நாங்கள் இர்குட்ஸ்க்கு குடிபெயர முயற்சித்தோம். இருப்பினும் எங்களுடைய திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடுவதற்கு அப்பகுதியின் தலைவர் பெரும் பாடுபட்டார். ஏனெனில் நாங்கள் அங்கிருந்து வேறு இடத்திற்கு செல்வதை அவர் கடுமையாக எதிர்த்தார். அப்புறமாக என்ன ஆனதோ தெரியவில்லை, அத்தலைவர் எங்களுக்கு மிகவும் சாதகமாக நடந்துகொண்டார். ஒருவழியாக இர்குட்ஸ்க்கு 10 கிலோமீட்டர் தூரத்திலுள்ள பிவோவோரிக்கோ என்ற கிராமத்திற்கு குடிபெயர்ந்தோம். அங்கே யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு சபை இருந்தது என்று தெரியவந்தது. இங்குதான் என்னுடைய வாழ்வில் புதிய அத்தியாயம் துவங்கியது. இங்கே ஒழுங்குபடுத்தப்பட்ட புத்தகப் படிப்பு மையங்கள் இருந்தன. ஆன்மீக நடவடிக்கைகளை மேற்பார்வையிட சகோதரர்களும் இருந்தார்கள். நான் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிப்போனேன்!

இந்த எல்லா சம்பவங்களுக்குப் பிறகு, பைபிள் சத்தியங்களை நான் மிக அதிகமாக போற்ற ஆரம்பித்தேன்; நான் முழுக்காட்டுதல் பெற்றுக்கொள்ள விரும்பினேன். ஆகஸ்ட் 1965-⁠ல் என்னுடைய கனவு நனவாகியது. ஓல்கோ என்ற சிறிய ஆற்றிலே முழுக்காட்டுதல் பெற்ற புதிய சாட்சிகளில் நானும் ஒருவன். இந்நிகழ்ச்சியை பார்த்த சாதாரண வழிப்போக்கர்களுக்கு நாங்கள் ஏதோ பிக்னிக்கிற்காக வந்திருப்பதைப்போலவும் ஜாலியாக தண்ணீரில் நீந்தி விளையாடுவதைப் போலவும் தோற்றமளித்திருக்கும். அதன் பிறகு தேவராஜ்ய ஊழியப் பள்ளியின் நடத்துனராக நியமிக்கப்பட்டேன். இதுவே எனது முதல் நியமனம். பிறகு நவம்பர் 1965-⁠ல் இன்னொரு மகிழ்ச்சியும் எங்களுக்கு காத்திருந்தது. என்னுடைய அண்ணன் ஃப்யோடர் சிறையிலிருந்து வீடு திரும்பினார்.

வேலை படிப்படியாக வளர்ந்தது

நாடுகடத்தப்பட்டவர்கள் எல்லாம் எங்கே போகவேண்டும் என்று நினைக்கிறார்களோ அங்கே செல்வதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது என்று 1965-⁠ல் எல்லாரையும் கூட்டிச்சேர்த்து அறிவிப்பு செய்தனர். இதனால் எங்களுடைய அந்த “நிரந்தர குடியிருப்பு”க்கு ஒரு முடிவு வந்தது. நாங்கள் எந்தளவுக்கு மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியிருப்போம் என்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? எங்களில் அநேகர் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லவேண்டும் என்று முடிவெடுத்து சென்றுவிட்டார்கள். தங்களுடைய ஆன்மீக நடவடிக்கைகளுக்கு, யெகோவா உறுதுணையாக இருந்து ஆசீர்வதித்த இடத்திலேயே தங்கிவிடுவதற்கு மற்றவர்கள் தீர்மானித்தனர். இவர்களில் அநேகர் தங்களது மூன்று தலைமுறையினரை சைபீரியாவிலேயே கண்டுகளித்தனர்; காலம்போகப்போக அந்த இடம் அவ்வளவு பயம் நிறைந்ததாக இல்லை.

உக்ரேனிலிருந்து சைபீரியாவிற்கு நாடு கடத்தப்பட்ட குடும்பத்தை சேர்ந்த மரியா என்ற பெண்ணை 1967-⁠ல் நான் சந்தித்தேன். சிறுபிள்ளைகளாக இருந்தபோது நாங்கள் இருவரும் வில்ஸானிட்சா கிராமத்தில் வாழ்ந்து வந்தோம். 1968-⁠ல் நாங்கள் இருவரும் திருமணத்தில் இணைந்தோம்; பின்னர் யாரோஸ்லாவ் என்ற மகனையும் ஓக்ஸானா என்ற மகளையும் பெற்றெடுத்தோம்.

பெரும் திரளாக கிறிஸ்தவ கூட்டுறவை அனுபவிப்பதற்கு திருமண மற்றும் சவ அடக்க நிகழ்ச்சிகளை தொடர்ந்து பயன்படுத்தினோம். அங்கு கூடி வந்திருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பைபிள் சத்தியங்களை விளக்குவதற்கு இந்த சந்தர்ப்பங்களை நாங்கள் தவறவிட்டதே இல்லை. இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அந்தச் சமயங்களில், திருமணம் கடவுளுடைய ஏற்பாடு என்பதையும் மரித்தவர்களுக்கான நம்பிக்கையைப் பற்றியும் புதிய உலகின் எதிர்கால ஆசீர்வாதங்களைப் பற்றியும் வெளிப்படையாக பைபிளிலிருந்து பேசினோம்.

ஒருசமயம், சவஅடக்க நிகழ்ச்சி ஒன்றில் என்னுடைய பேச்சை நான் முடிக்கும் தறுவாயிலிருந்தேன். அப்போது ஒரு கார் வந்து நின்றது, அதில் அநேகர் இருந்தனர். அதிலிருந்து வெளியே வந்த ஒருவன், என்னை காருக்குள் ஏறும்படியாக கட்டளையிட்டான். நான் பயப்படவே இல்லை. நாங்கள் ஒன்றும் குற்றவாளிகள் இல்லையே, கடவுளை நம்புகிறவர்கள்தானே. ஆனால் என்னுடைய பாக்கெட்டில் சபையில் இருப்பவர்களின் ஊழிய அறிக்கைகள் இருந்தன. இதை அவர்கள் கண்டுபிடித்துவிட்டால் நான் கைதுசெய்யப்படுவேன். நான் அவர்களோடு போவதற்கு முன்பாக என்னுடைய மனைவியிடம் பணம் கொடுக்கவேண்டும் என்பதாக சொன்னேன். அவர்களுக்கு முன்பாகவே நான் அமைதியாக பர்ஸையும் சபையின் ஊழிய அறிக்கைகளையும் என் மனைவியிடம் கொடுத்தேன்.

நானும் எனது மனைவி மரியாவும் 1974-⁠ன் ஆரம்பம் முதல் பைபிள் பிரசுரங்களை வீட்டிலேயே இரகசியமாக தயாரித்தோம். எங்களுடைய மகன் சிறுவனாக இருந்ததால், அவனுக்கு தெரியக்கூடாது என்பதால், அவன் தூங்கிய பிறகு இரவு நேரங்களில் இவற்றை தயாரித்தோம். என்ன நடக்கிறது என்பதை கூர்ந்து கவனிப்பதற்காக சில சமயங்களில் அவன் தூங்குவதைப் போல நடித்தும் இருக்கிறான். பிற்பாடு “கடவுளைப் பற்றி பத்திரிகைகளை தயாரிப்பது யார் என்று எனக்குத் தெரியும்” என்பதாக சொல்லியிருக்கிறான். எங்களுக்கோ சற்று மனக்கலக்கமாக இருந்தது. இந்த முக்கியமான வேலையில் எங்கள் குடும்பத்தைக் காப்பாற்றுமாறு யெகோவா தேவனை நாங்கள் எப்பொழுதும் வேண்டியிருக்கிறோம்.

காலப்போக்கில் யெகோவாவின் சாட்சிகளைப்பற்றி அதிகாரிகளுடைய மனப்பான்மையும் சாதகமாக மாறியது. ஆகவே நாங்கள் ஒரு பெரிய கூட்டத்தை உசோல்யீ-செபிர்ஸ்காயாவிலுள்ள மிர் ஆர்ட்ஸ் அண்டு லெஸ்ஸர் சென்டரில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்தோம். நம்முடைய கூட்டங்கள் முழுமையாக பைபிள் படிப்பிற்காகவும் கிறிஸ்தவ கூட்டுறவுக்காகவும்தான் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன என்பதாக நகர நிர்வாகிகளுக்கு உறுதியளித்தோம். ஜனவரி 1990-⁠ல் 700 பேருக்கும் அதிகமான கூட்டம் அந்த மன்றத்தை நிரப்பியது. இது பொதுமக்களுடைய கவனத்தை பெருமளவுக்கு கவர்ந்திழுத்தது.

மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்தது. “எப்போது உங்களுடைய இளம் பிள்ளைகளுக்கு இப்படிப்பட்ட பயிற்சி அளித்தீர்கள்?” என்று கேட்டார் ஒரு நிருபர். முதன்முதலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த எல்லா வாண்டுகளும் அவ்வளவு அமைதியாக, தங்களுடைய கவனம் சிதறாமல் நான்கு மணிநேரம் உட்கார்ந்திருந்தார்கள். இதை மூக்கில் விரலை வைத்து ஆச்சரியத்துடன் பார்த்து வியந்தது அந்த நிருபர் மட்டுமல்ல, மற்ற பார்வையாளர்களும்தான். உடனடியாக யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி அருமையான கட்டுரை உள்ளூர் செய்தித்தாளில் வெளிவந்தது. “[யெகோவாவின் சாட்சிகளிடம்] நாம் கற்றுக்கொள்வதற்கு உண்மையில் விஷயம் இருக்கிறது” என்பதாக அச்செய்தி குறிப்பிட்டது.

பெரும் வளர்ச்சியில் மகிழ்ச்சியடைதல்

சோவியத் யூனியனில் 1991-⁠ல் ஏழு மாநாடுகள் நடைபெற்றன. இதில் கலந்து கொண்டவர்கள் 74,252 பேர். முன்னாள் சோவியத் யூனியன் குடியரசு சுதந்திரம் பெற்ற பிறகு, யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் நான் மாஸ்கோவிற்கு செல்ல வேண்டும் என்பதாக சொல்லப்பட்டேன். அங்கே இராஜ்ய வேலையில் என்னுடைய பங்கை அதிகரிக்க முடியுமா என்பதாக கேட்டுக்கொள்ளப்பட்டேன். இந்த சமயத்தில் யாரோஸ்லாவ் திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கும் தகப்பனாக ஆனான். ஓக்ஸானா வாலிப வயதில் இருந்தாள். ஆகவே 1993-⁠ல் நானும் மரியாவும் முழுநேர ஊழியத்தை மாஸ்கோவில் ஆரம்பித்தோம். அதே வருடத்தில் ரஷ்யாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளின் மண்டல மத அமைப்பின் நிர்வாக மையத்திற்கு ஒத்திசைவாளராக நியமிக்கப்பட்டேன்.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிலுள்ள புதிய கிளை காரியாலய வளாகத்தில் இப்போது நானும் மரியாவும் வேலை செய்கிறோம். ரஷ்யாவில் ராஜ்ய பிரசங்கிப்பாளர்கள் எண்ணிக்கையில் படுவேகமாக வளர்ந்து வருகிறார்கள். உண்மையுள்ள மற்ற சகோதரர்களுடன் சேர்ந்து அவர்களுக்கு உதவி செய்வதை பெரும் பாக்கியமாக நான் கருதுகிறேன். முன்னாள் சோவியத் யூனியன் குடியரசில், இன்று 2,60,000-⁠க்கும் அதிகமான சாட்சிகள் இருக்கின்றனர். ரஷ்யாவில் மாத்திரம் இவர்களது எண்ணிக்கை 1,00,000-ஐ தாண்டுகிறது!

சைபீரியாவில் ராஜ்ய சேவையில் உண்மையுடன் நிலைத்திருக்கும் எங்கள் அன்பான உறவினர்களையும் நண்பர்களையும் நானும் மரியாவும் அடிக்கடி நினைத்துப் பார்க்கிறோம்; ஒருகாலத்தில் இந்த இடம்தான் எங்கள் பிரியமான வீடாக இருந்தது. இன்று பெரிய மாநாடுகள் அங்கு தவறாமல் நடைபெறுகின்றன. இர்குட்ஸ்க்கிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் சுமார் 2,000 சாட்சிகள் சுறுசுறுப்புடன் கடவுளுடைய சேவையில் ஈடுபடுகின்றனர். ஏசாயா 60:22-⁠ல் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம் உலகின் இந்தப் பகுதியிலும் நிறைவேறுவதில் கொஞ்சங்கூட சந்தேகம் இல்லை: “சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்: கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்.”

[பக்கம் 20-ன் படம்]

இர்குட்ஸ்க்கில் 1959-ஆம் வருடம் நாடுகடத்தப்பட்டவர்களோடு என்னுடைய அப்பாவுடன் எங்களது குடும்பம்

[பக்கம் 23-ன் படம்]

இஸ்க்ரோவில் நாடுகடத்தப்பட்ட பிள்ளைகள்

[பக்கம் 25-ன் படம்]

எங்களுக்கு திருமணமான வருடத்தில்

[பக்கம் 25-ன் படம்]

இன்று நான் மரியாவுடன்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்