ஆவியுலகத் தொடர்பு அதன் நுகத்தை உதறித் தள்ளுதல்
நான் 14 வயது சிறுமியாக இருந்தபோது துன்பம் எங்கள் குடும்பத்தை தாக்கியது. அந்த சமயம் கொடிய கொலைக்காரன் ஒருவன் என்னுடைய உறவினர்களை ஒழித்துக்கட்ட ஆரம்பித்தான். அவனுக்கு முதலில் பலியானவர்கள் என்னுடைய சகோதரியின் பிள்ளைகள்—மொத்தம் ஒன்பது பேர். பின்பு அவளுடைய கணவனை அவன் கொலை செய்தான். அதற்குப் பின் விரைவிலேயே அவன் என்னுடைய சகோதரிகளில் ஒருத்தியையும்கூட கொலைசெய்தான். அதைத் தொடர்ந்து என்னுடைய சகோதர சகோதரிகளில் இன்னும் நாலு பேரும் கொல்லப்பட்டார்கள். என்னுடைய அம்மாவும் நானும் மட்டுமே உயிரோடே விடப்பட்டோம். ஆ, நான் எவ்வளவாக பயந்திருந்தேன்!
அதைத் தொடர்ந்து வந்த வருடங்களின்போது நான் தினந்தோறும் பயத்திலேயே சாப்பிட்டு, பயத்திலேயே வேலை செய்து பயத்திலேயே தூங்கினேன். “எப்பொழுது அவன் தாக்குவான்? அடுத்தது யாராக இருக்கும், அம்மாவா அல்லது நானா?” என்று நான் யோசித்தேன்.
என்னுடைய பின்னணி
பின்னால் என்ன நடந்தது என்பதை நீங்கள் புரிந்துகொள்வதற்கு உங்களுக்கு உதவிசெய்ய, என்னுடைய பின்னணியைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்ல என்னை அனுமதியுங்கள். 1917-ல் சூரினாமில் மெரோடு நதியிலிருந்த ஒரு தீவில் பாரமா கேனர் காட்டு வாசிகளாகிய நீக்ரோ இனத்தில் நான் பிறந்தேன். என்னுடைய முன்னோர்கள் கடினமான ஆனால் சுதந்திரமான ஒரு வாழ்க்கையை தேடி, காட்டுப் பகுதிகளுக்குள் தப்பி ஓடிவந்த அடிமைகள். ஆம், அது மனித அடிமைத்தனத்திலிருந்து சுதந்திரமான ஒரு வாழ்க்கையாக இருந்தது. ஆனால் பேய்களின் அடிமைத்தனத்திலிருந்து சுதந்தரமான ஒரு வாழ்க்கையாக இருக்கவில்லை.
எங்களுடைய கிராமத்தில் அன்றாட வாழ்க்கையானது பேய் வணக்கத்தாலும் மூதாதையர் வணக்கத்தாலும் கட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தது. மந்திர ஆற்றலால் மற்றவர்களை கட்டிப்போட்டு, உடன் மானிடருக்கு நோயையும் மரணத்தையும் கொண்டு வருவதற்கு, சில ஆட்கள் சூனியத்தை கையாண்டனர் அல்லது தொந்தரவு செய்யும் ஆவிகளின் (koenoe) உதவியை நாடினர். இவர்கள் குடும்ப அங்கத்தினரால் மோசமாக நடத்தப்பட்ட ஆட்களாக கருதப்படுகின்றனர். அவர்களுடைய மரணத்துக்குப் பின்பு அவர்கள் பழிவாங்குவதற்காக குடும்பத்திற்கு திரும்ப வருவதாகச் சொல்லப்படுகிறார்கள். ஆனால் உண்மையில் இந்த ஆட்கள் தங்களை வணங்கும்படியாக மக்களை கட்டாயப்படுத்தும் கீழ்த்தரமான பேய்களாக இருக்கின்றன.
புராட்டஸ்டண்டு சர்ச்சைச் சேர்ந்த சுவிசேஷ சகோதர சமுதாயத்தின் உறுப்பினராக, கடவுளைப் பற்றி கொஞ்சம் நான் அறிந்திருந்தேன். அவரை எவ்விதமாக வணங்குவது என்பதைப் பற்றி நான் அறிந்திராதப்போதிலும் என்னைச் சுற்றியிருந்த காடு, அவர் தேவையானவற்றை அபரிமிதமாக அளித்திடும் கடவுள் என்பதற்கு ஏராளமான அத்தாட்சியை கொடுப்பதாக இருந்தது. “துன்பங்களைக் கொண்டுவரும் ஒரு பொல்லாத ஆவியை அல்ல, ஆனால் ஒரு நல்ல கடவுளையே நான் வணங்க விரும்புகிறேன்” என்பதாக நான் சொல்லிக்கொண்டேன். தொந்தரவு கொடுக்கும் இந்த ஆவிகள், தங்களுக்குக் கீழ்ப்படியாத ஆட்களை மரணம் வரையாக வாதிக்க விரும்புவதையும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
எங்கள் குடும்ப விரோதிகள் இப்படிப்பட்ட ஒரு ஆவியை எங்களிடம் ஏவி விட்டிருந்ததை தெரிந்துகொண்டபோது நான் எப்படி அதிர்ந்து போனேன் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். இந்த கொடிய பணிக்காக அந்த ஆவி அனுப்பப்பட்டபோது எனக்கு வயது 14. இருபத்து ஆறு வருடங்களுக்குப் பின் என்னுடைய அம்மாவும் நானும் மட்டுமே உயிரோடிருந்தோம்.
முதல் அனுபவம்
என்னுடைய அம்மா கடின உழைப்பாளி. ஒரு நாள் அவள் பண்ணைக்கு நடந்துபோய் கொண்டிருக்கையில் கீழே தள்ளப்பட்டாள். அவளால் எழுந்திருக்க முடியவில்லை. அந்த ஆவி என்னுடைய அம்மாவை தெரிந்து கொண்டிருந்தது. அவள் உடல் நலம் குன்றி பக்கவாதத்தால் தாக்கப்பட்டாள். அவளுக்கு என்னுடைய உதவி தேவைப்பட்டது. ஆனால் நானோ, அவள் மீது எனக்கிருந்த அன்புக்கும், அவளை ஆட்கொண்டிருந்த பிசாசின் மீது எனக்கிருந்த பயத்துக்குமிடையே அலைக்கழிக்கப்பட்டேன். ஆனால் அந்த ஆவி தாக்கியபோதெல்லாம், பாவம் அம்மா அத்தனை வேதனையோடு அழுதாள். அதைத் தாங்கிக்கொள்ள முடியாமல், ஆறுதலாக அவள் தலையை என் மடிமீது வைத்துக்கொள்வேன். அதற்குப் பின் அவள் அமைதியாகிவிடுவாள். ஆனால் “கைகள்” என்னுடைய உடலை அழுத்துவதுபோல எனக்கிருக்கும்.
நான் எழுந்து ஓட விரும்பியபோது அம்மா மீண்டும் அழுவாள். ஆகவே அவளுக்காக நான் அங்கேயே இருந்து இந்த கொலைப் பாதகனை முதல் முறையாக நடுக்கத்தோடு சந்தித்தபோது அதை சகித்துக் கொண்டேன்.
தீவிரமாக்கப்பட்ட தாக்குதல்கள்
அம்மா இறந்துபோனாள். மூன்றே நாட்களுக்குப் பின்பு, “லின்டீனா, லின்டீனா, நான் உன்னைக் கூப்பிடுவது உனக்கு கேட்கவில்லையா?” என்பதாக கனிவான ஒரு குரல் பேசுவதை நான் கேட்டேன். இதுவே அத்தனை பெரிதாக இருந்த ஒரு வேதனைக்கு ஆரம்பமாக இருந்தது. அதனால் நான் சீக்கிரம் மரித்துப் போவதை விரும்பினேன்.
ஆரம்பத்தில் இந்த பிசாசு, நான் தூங்கச் சென்ற சமயத்தில் மட்டுமே என்னை தொந்தரவு செய்தது. தூக்கம் இழுத்துக்கொண்டு போகும்போது, இந்தக் குரல் என்னை எழுப்பி, கல்லறைகளையும் மரணத்தையும் பற்றி பேசிக்கொண்டிருக்கும். தூக்கமில்லாததால் நான் பலவீனமாக உணர்ந்தேன். ஆனாலும் என்னுடைய பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய அனைத்தையும் செய்துவந்தேன்.
பின்னால் இந்த பிசாசு தன்னுடைய தாக்குதல்களை தீவிரமாக்கியது. பல தடவைகள் அது என் கழுத்தை நெரிப்பதுபோல நான் உணர்ந்திருக்கிறேன். நான் ஓடிப் போக முயன்றாலும் என்னால் முடியாது. ஏனென்றால் ஒரு கனமான பாரம் என் உடலின் மீது அழுத்திக் கொண்டிருப்பது போல எனக்கிருக்கும். நான் கத்தி கூச்சலிட விரும்பினேன். ஆனால் ஒரு சப்தமும் என்னால் போடமுடியாது; ஆனாலும்கூட அவனை வணங்க நான் மறுத்துவிட்டேன்.
ஒவ்வொரு தாக்குதலிலிருந்தும் நான் மீண்டு வந்த பின்பு, விவசாயத்தில், அதாவது மரவள்ளிக்கிழங்கு கரும்பு ஆகியவற்றைப் பயிர் செய்வதில் ஈடுபட்டு, ஒரு சிறிய கரையோர நகரிலுள்ள சந்தையில் அவற்றை விற்று வந்தேன். ஜீவனம் நடத்துவது எளிதாக இருந்தது. ஆனால் மிக மோசமான துன்பங்கள் இன்னும் எனக்கு முன்னாலிருந்தன.
பரிகாரத்துக்காக எடுத்த முயற்சி
ஒரு நாள் வரப்போகிற தீமையை முன்னறிவிக்கும் பிசாசின் குரல், “உன்னுடைய வயிறை ஒரு பந்தைப்போல் உப்பிவிடச்செய்வேன்” என்று சொன்னது. கொஞ்ச காலத்துக்குப் பின்பு, என்னுடைய வயிற்றில் கட்டி ஒன்று தோன்றி நான் கர்ப்பிணியைப் போல் தோற்றமளிக்கும் வரையாக அது வளர்ந்தது. உண்மையில் பயந்துபோய், ‘சிருஷ்டிகராகிய கடவுள் இந்த ஆவியிலிருந்து விடுபட எனக்கு உதவி செய்யக்கூடுமா? அவனை துரத்திவிடுவதற்கு ஒரு நல்ல மற்றும் பலமுள்ள ஆவியை அவர் அனுப்பக்கூடுமா?’ என்று யோசிக்க ஆரம்பித்தேன். இதைக் கண்டுபிடிக்க ஒரு பில்லிசூனிய மருத்துவரிடம் சென்றேன்.
முதலில் நான் பார்த்த பில்லிசூனிய மருத்துவர் எனக்கு தாயத்துக்களைக் கொடுத்தார். ஆனால் வீக்கம் குறையவில்லை. பரிகாரத்தை கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்று தீர்மானமாக, ஒரு மருத்துவரிடமிருந்து மற்றொரு மருத்துவரிடமாகச் சென்றேன். ஆனால் பிரயோஜனமில்லை. இதற்கிடையில், பில்லிசூனிய மருத்துவர்களுக்கு கொடுக்க வேண்டிய பியர், திராட்சரசம், விலையுயர்ந்த மது வகை மற்றும் அரைத்துணிகளை வாங்குவதற்கு தேவையான பணத்தை சம்பாதிக்க விவசாயமும் செய்துவந்தேன். அநேக தடவைகள் அவர்கள் கொடுத்த ஆலோசனையானது: “அதற்கு முன்னால் பணிந்துவிடுங்கள், உங்கள் எஜமானராக அதனிடம் மன்றாடுங்கள். அதை பணிந்துக்கொள்ளுங்கள். அது உங்களை விட்டுவிடும்.” ஆனால் என்னை வாதித்து என்னை கொலை செய்ய விரும்பிய ஒரு ஆவியை நான் எவ்விதமாக வணங்க முடியும்? என்னால் முடியாது.
என்றபோதிலும் நம்பிக்கையிழந்த நிலையில், பில்லிசூனிய மருத்துவர்கள் சொன்ன மற்ற எல்லா காரியங்களையும் செய்தேன். இவர்களில் ஒருவர் ஐந்து மாதங்களுக்கு எனக்கு சிகிச்சையளித்தார். அவர் மருத்துவ மூலிகைகளினால் என்னை குளிப்பாட்டி 11 வித்தியாசமான செடிகளின் சாறுகளை என் கண்களுக்குள் பிழிந்தார். நான் வலியினால் கதற, அது “அவைகளை சுத்திகரிப்பதற்காக” என்று அவர் சொன்னார். ஆனால் சிகிச்சை முடிந்த பிறகு ஒரு காசும் கையில் இல்லாதவளாக, மோசடி செய்யப்பட்டவளாகவும் நோயுற்றவளாகவும் நான் வீட்டுக்குத் திரும்பிச் சென்றேன்.
“இதுவே உன் முடிவு”
நெதர்லாந்தில் வாழ்ந்து வரும் என்னுடைய ஒரு மகன், உதவி தேடும் முயற்சியை தொடருவதற்காக எனக்கு பணம் அனுப்பி வைத்தான். ஆகவே தலைநகரத்திலுள்ள ஒரு மருத்துவரிடம் சென்றேன். என்னை பரிசோதித்தப் பின்பு அவர் “உங்களுக்கு என்னால் உதவி செய்ய முடியாது. ஒரு பில்லிசூனிய மருத்துவரைப் போய் பாருங்கள்” என்று சொன்னார். ஆகவே கிழக்கத்திய ஆவி மத்தியஸ்தர் ஒருவரை சென்று பார்த்தேன். ஆனால் அவரால் எனக்கு உதவி செய்ய முடியவில்லை. நான் வீட்டை நோக்கி விரைந்தேன். ஆனால் தலைநகரத்தில் என்னுடைய மகளின் வீடு வரையாக மட்டுமே என்னால் போக முடிந்தது. அங்கே நான் நிலைகுலைந்து சோர்ந்து போனேன். 17 வருடங்களாக பரிகாரத்தை தேடி நான் 1,07,900 ரூபாய் செலவழித்திருக்கிறேன். எனக்கு 57 வயதாகிவிட்டது.
அடுத்ததாக, பிசாசு, “நான் உன்னை தீர்த்துக் கட்ட போகிறேன். இதுவே உன் முடிவாக இருக்கும்” என்று என்னை மிரட்டியது.
“ஆனால் நீ கடவுளில்லையே, நீ இயேசு இல்லையே,” என்று நான் அழுதேன்.
“கடவுளால்கூட என்னை தடுத்திட முடியாது” என்று பிசாசு பதிலளித்தது. “உன் நாட்கள் எண்ணப்பட்டிருக்கின்றன.”
இறுதி போராட்டம்
சில வாரங்கள் கடந்து போயின. எங்கள் பக்கத்து வீட்டில் வசித்து வந்த மீனா என்ற பெண்மணி யெகோவாவின் சாட்சிகளின் ஒரு முழு-நேர ஊழியக்காரியாக இருந்தாள். அவள் என் மகளிடம் என்னைப் பற்றி விசாரித்துவிட்டு, “உன் அம்மாவுக்கு பைபிளை கொண்டு மாத்திரமே உதவி செய்ய முடியும்” என்றாள். இதைக் கேட்டுக்கொண்டிருந்த நான் அவர்கள் இருந்த இடத்துக்குச் சென்றேன். ஆனால் அவர்கள் அருகே செல்வதற்கு முன்னே, நான் கீழே தள்ளப்பட்டேன். மீனா அவசரமாக ஓடிவந்து: “அந்த பிசாசு உங்களை விடாது. உங்களுக்கு உதவக்கூடியவர் யெகோவா தேவன் மட்டுமே, வேறு எவராலும் முடியாது,” என்று சொன்னாள். பின்பு அவள் என்னோடு சேர்ந்து யெகோவா தேவனிடம் ஜெபித்தாள். என்னை வந்து சந்திக்கவும் ஆரம்பித்தாள். அவள் அதிகமதிகமாக என்னை வந்து பார்க்க, பிசாசின் தாக்குதலும் அதிக தீவிரமானது. இரவு நேரத்தின்போது என்னுடைய உடல் அத்தனை பயங்கரமாக நடுங்கியதால், வீட்டில் எவராலும் தூங்க முடியாது. நான் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன். சில சமயங்களில் மனதின் ஆற்றலை நான் முழுவதுமாக இழந்துவிட்டிருந்தேன்.
என்னுடைய நிலைமை அத்தனை மோசமாகிவிட்டதால், கிராமத்திலிருந்த என்னுடைய ஒரு மகன் நான் மரித்துவிடுவேன் என்று நினைத்து என்னை அழைத்துச்செல்ல வந்தான். பிரயாணம் செய்ய மிகவும் பலவீனமாக இருந்தபடியால், நான் போக மறுத்துவிட்டேன். ஆனால் மரிக்கப் போவதை உணர்ந்து, பிரியாவிடை பெற்றுக்கொள்ள, சாட்சியை அழைத்தேன். நான் மரித்தாலும்கூட, உயிர்த்தெழுதல் நம்பிக்கை இருக்கிறது என்பதாக பைபிளிலிருந்து மீனா எனக்கு விளக்கினாள்.
“உயிர்த்தெழுதலா? அப்படியென்றால் என்ன?”
“கடவுள் உங்களை பரதீஸில் உயிர்த்தெழுந்து வரச் செய்யமுடியும்” என்று அவள் பதிலளித்தாள். சிறிதளவு நம்பிக்கை பிறந்தது!
ஆனால் அதே இரவு பிசாசு என்னை அலைக்கழித்தது. ஒருவித மயக்கத்தில், அந்த ஆவியையும் அதை தொடர்ந்து ஒரு ஜனக்கூட்டத்தையும் பார்ப்பதுபோல இருந்தது. அது “அவள் தனக்கு உயிர்த்தெழுதல் கிடைக்குமென்று நினைக்கிறாள்” என்று சொல்லி கேலி செய்தது. அதற்கு அந்த கூட்டம் சிரியோ சிரி என்று சிரித்தது. ஆனால் அப்பொழுது இதுவரை ஒருபோதும் செய்திராத ஒன்றை நான் செய்தேன். “யெகோவா! யெகோவா!” என்று சத்தமிட்டு அழைத்தேன் எனக்கு அவ்வளவுதான் சொல்ல தெரிந்திருந்தது. பிசாசு என்னை விட்டு போனது!
என்னுடைய மகன்கள் மறுபடியுமாக வந்து “அம்மா, நகரத்தில் உயிரை விட்டுவிடாதீர்கள். உங்கள் கிராமத்துக்கு உங்களை நாங்கள் அழைத்துச் செல்வோம்” என்று கெஞ்சி கேட்டுக் கொண்டார்கள். யெகோவாவைப் பற்றி அதிகம் கற்றுக்கொள்ள நான் விரும்பியதால் இதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை. “சரி, ஒருவேளை எப்படியும் நான் மரித்துப் போவேன். ஆனாலும் நான் குறைந்த பட்சம் சிருஷ்டிகரையாவது சேவித்திருப்பேனே” என்று நான் அவர்களிடம் சொன்னேன்.
ஒரு பலத்த துருகத்தைப் போல்
மீனாவும் மற்ற சாட்சிகளும் தொடர்ந்து என்னை சந்தித்து வந்தார்கள். யெகோவாவிடம் ஜெபிக்க எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள். மற்ற காரியங்களோடுகூட, யெகோவாவுக்கும் சாத்தானுக்குமிடையேயுள்ள விவாதத்தைப் பற்றியும் கடவுளை மறுதலிக்கும்படியாக யோபுவைச் செய்ய பிசாசு எவ்விதமாக அவனுக்கு துன்பங்களைக் கொண்டு வந்தான் என்பதைப் பற்றியும் அவர்கள் எனக்குச் சொன்னார்கள். இந்தக் காரியங்களைக் கற்றறிந்தபோது, பிசாசை ஒருபோதும் வணங்கக்கூடாது என்ற என் மன உறுதியை அது பலப்படுத்தியது. எனக்கு மிகவும் அருமையானதாகிவிட்ட ஒரு வசனத்தை சாட்சிகள் எனக்கு வாசித்துக் காண்பித்தார்கள்: “யெகோவாவின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்.”—நீதிமொழிகள் 18:10.
படிப்படியாக எனக்கு பெலன் வந்தது. என்னுடைய மகன் என்னைப் பார்க்க வந்தபோது அவனை வெளியே காத்திருக்கும்படி நான் சொன்னேன். நான் உடை மாற்றிக்கொண்டு வீக்கம் மறைந்துபோனதை காண்பிப்பதற்காக என்னுடைய மேல் சட்டையை பாவடைக்குள் செருகிக்கொண்டு பின்னர் வெளியே வந்தேன்.
“அம்மா லின்டீனாவா?” என்று என் மகன் உணர்ச்சி பொங்க கேட்டான்.
“ஆம், நானேதான்—என் தேவனாகிய யெகோவாவுக்கு நன்றி.”
என்னுடைய நிலைநிற்கையை எடுப்பது
என்னால் கொஞ்சம் நடக்க முடிந்தபோது, நான் யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்துக்குச் சென்றேன். அங்கு நண்பர்களிடமிருந்து அவ்வளவு ஊக்குவிப்பை நான் பெற்று கொண்டதால், கூட்டங்களுக்கு ஆஜராவதை நான் ஒருபோதும் நிறுத்திவிடவில்லை. ஒருசில மாதங்களுக்குப் பின்பு நான் சாட்சிகளோடு பிரசங்க வேலையில் ஈடுபட்டேன். அதன் பின்பு நான் முழுக்காட்டப்பட்டு அன்பாக என்னை தப்புவித்தவரான யெகோவாவின் ஊழியக்காரியாக ஆனேன். எனக்கு வயது 58.
என்றபோதிலும், இன்னும் செய்ய வேண்டிய ஒரு காரியம் இருந்தது. பல வருடங்களுக்கு முன்னால், கிராமத்திலிருந்த என் குடிசையில், என்னுடைய மூதாதையர்களுக்கு பலிகளைச் செலுத்துவதற்காக ஒரு பலிபீடத்தை நான் கட்டியிருந்தேன். ஆவிக்குரிய வகையில் சுத்தமுள்ளவளாக இருப்பதற்கு நான் அதை அழித்துவிட வேண்டும். என்னுடைய செயல் கிராம வாசிகளின் மத்தியில் ஒரு பெரும் ஆரவாரத்தை உண்டு பண்ணக்கூடுமாதலால் உதவிக்காக நான் யெகோவாவிடம் ஜெபித்தேன். என்னுடைய குடிசைக்குச் சென்று கதவை திறந்தபோது, எவரோ ஒருவர் “காட்டுப் பன்றிகள்” என்று குரல் கொடுத்தார். ஒரு பன்றி மந்தை குறுக்கே ஆற்றில் குதித்து நீந்திச் செல்வதற்காக இந்த தீவைக் கடந்துச் சென்று கொண்டிருந்தது. உடனடியாக கிராமத்திலுள்ள இளைஞர்களும் முதியவர்களும் இவைகளை எளிதில் பிடிப்பதற்காக விரைந்தார்கள். கிளர்ச்சியடைந்தவளாய், இந்த சம்பவத்துக்காக நான் முழங்காலிட்டு யெகோவாவுக்கு நன்றி செலுத்தினேன். வேகமாகச் சென்று பலிபீடத்தை வெளியே இழுத்துப் போட்டு மண்ணெண்ணையை அதன் மீது ஊற்றி அதை எரித்துவிட்டேன். கூட்டம் திரும்புவதற்கு முன்பு பலிபீடம் மறைந்துவிட்டது. பிறகு அவர்கள் அதை கண்டுபிடித்துவிட்டார்கள். ஆனால் அதைக் குறித்து இனிமேல் ஒன்றும் செய்யமுடியாது. ஆகவே, மன சமாதானத்தோடு நான் தலைநகரம் திரும்பினேன்.
துன்பத்திலிருந்து இன்பத்துக்கு
இன்னும் அதிகமான ஆசீர்வாதங்கள் எனக்கு கிடைத்தன. நெதர்லாந்தில் வாழ்ந்துவந்த என்னுடைய மகன் என்னைப் பற்றி அவன் கேள்விப்பட்ட சங்கதிகளை நம்பாததால் நேரில் பார்க்க விமானத்தில் வந்திறங்கினான். நான் ஆரோக்கியமாக இருப்பதைப் பார்த்து அவன் அவ்வளவு மகிழ்ச்சியடைந்து இப்பொழுது நான் வசிக்கும் இந்த அழகான வீட்டை எனக்காக வாங்கினான். என் வாழ்க்கையில் என்னே ஒரு மாற்றம்—ஒரு காசும் இல்லாமல் பிசாசுகளுக்கு அடிமையாக இருந்த நான், நன்றாக கவனிக்கப்படும் யெகோவாவின் ஊழியக்காரியாக மாறிவிட்டிருக்கிறேன்.
முழுக்காட்டுதல் பெற்று பதினோரு ஆண்டுகள் கழிந்தபின்பு, நன்றியுள்ளவளாக இருக்க எனக்கு இன்னும் கூடுதலான காரணமும்கூட உண்டு. நான் பெற்றுக்கொண்ட அநேக ஆசீர்வாதங்களைப் பார்த்த என்னுடைய மூன்று பிள்ளைகளும் ஒரு மருமகனும்கூட பைபிள் சத்தியத்தில் அக்கறை காண்பித்து கடைசியாக தங்களுடைய வாழ்க்கையை யெகோவா தேவனுக்கு ஒப்புக்கொடுத்தார்கள். பிசாசுகளிடமிருந்து தொடர்பை முறித்துக்கொள்ள தைரியமில்லாத பைபிள் மாணாக்கர்களைப் பார்த்து, பேய்களோடு எனக்கிருந்த அனுபவத்தைச் சொல்வதற்காக அடிக்கடி சகோதர சகோதரிகள் என்னை அவர்களுடைய படிப்புகளுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இந்த வகையில், அந்த பயங்கரமான வருடங்களும்கூட ராஜ்ய பிரசங்கிப்பு வேலையில் கொஞ்சம் பிரயோஜனமாக இருந்திருக்கின்றன.
என் தேவனாகிய யெகோவாவுக்கு நன்றியை வெளிக்காட்டுவதற்கு என்னிடம் போதிய வார்த்தைகள் இல்லை. நிச்சயமாகவே என் சார்பாக அவருடைய சர்வ வல்லமையான கரத்தை நான் பார்த்திருக்கிறேன். ஆம், யெகோவா எனக்கு நல்லவராக இருந்திருக்கிறார்!—சங்கீதம் 18:17-19 ஒப்பிடவும். (w87 9⁄1)
[பக்கம் 7-ன் படம்]
ஆவியுலகத் தொடர்பை முறித்துக் கொள்வதில், “யெகோவாவின் நாமம் பலத்த துருகம்” என்பதை லின்டீனா வான் கீனன் கற்றுக்கொண்டாள்
[பக்கம் 9-ன் படம்]
ஆவியுலகக் காரியங்களுக்கு அநேகர் அடிமைத்தனத்தில் இருக்கும் சூரினாமிலுள்ள ஹிண்டர்லாந்து