ஒழுக்க சுத்தமே இளைஞருக்கு அழகு
“வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, . . . உன் நெஞ்சின் வழிகளிலும் உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி.”—பிரசங்கி 11:9.
“இளமையும் உற்சாகமும் மென்மையும் வசந்த கால நாட்களை ஒத்திருக்கின்றன. அவை குறுகிய காலமே நீடிப்பது குறித்து குறைபட்டுக் கொள்வதற்குப் பதிலாக அவைகளை அனுபவித்துக் களிக்க முயற்சி செய்.” இவ்வாறாக எழுதியவர் 19-வது நூற்றாண்டு ஜெர்மன் நாட்டு கவிஞர். இளைஞர்களாகிய உங்களுக்குச் சொல்லப்படும் அந்த ஆலோசனை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக பைபிள் புத்தகமாகிய பிரசங்கியில் எழுதப்பட்டவற்றை எதிரொலிக்கின்றன: “வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே [இளம் பெண்மைக்குரிய நாட்களிலே] உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும் உன் கண்ணின் காட்சிகளிலும் நட.” (பிரசங்கி 11:9-ன் முற்பகுதி) ஆகவே யெகோவா தேவன் இளமைப் பருவத்திலேற்படும் ஆசைகளுக்குக் கவர்ச்சியூட்டும் காரியங்களைக் குறித்து எதிர்மறையான கருத்தைக் கொண்டவராக இல்லை. நீங்கள் உங்களுடைய இளமையின் பெலத்தையும் பராக்கிரமத்தையும் முழுமையாக அனுபவிக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார்.—நீதிமொழிகள் 20:29.
2 ஆனால் உங்கள் இருதயத்துக்கும் கண்களுக்கும் கவர்ச்சியூட்டும் எதை வேண்டுமானாலும் நீங்கள் நாடிச் செல்லலாம் என்பதை இது அர்த்தப்படுத்துகிறதா? நிச்சயமாக இல்லை! (எண்ணாகமம் 15:39; 1 யோவான் 2:16) வேதாகமம் தொடர்ந்து சொல்வதாவது: “ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் [உன் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள நீ தெரிந்து கொள்ளும் பொழுதுபோக்குகள்] தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி.” (பிரசங்கி 11:9-ன் பிற்பகுதி) ஆம், உங்களுடைய செயல்களின் பின்விளைவுகளை நீங்கள் தப்பித்துக்கொள்ள முடியாது; இளைஞரும் வயது வந்தவர்களைப் போலவே யெகோவாவின் நியாயத்தீர்ப்புக்குட்பட்டவர்களாக இருக்கிறார்கள்.—ரோமர் 14:12.
3 யெகோவாவின் சாதகமான நியாயத்தீர்ப்பைப் பெற்றுக் கொள்வது, நித்திய ஜீவனுக்கு வழிநடத்துவது மட்டுமல்லாமல், இப்பொழுங்கூட கடவுளோடு நெருக்கமான ஓர் உறவுக்கு வழிநடத்துகிறது. ஆனால் நீங்கள் ஒழுக்க சுத்தத்தில் மிக உயர்ந்த தராதரத்தைக் காத்துக் கொள்ள வேண்டும். சங்கீதம் 24, வசனங்கள் 3–5 இவ்விதமாக அதைக் குறிப்பிடுகிறது: “யார் யெகோவாவுடைய பர்வதத்தில் ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்? கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே.” ஆம், நீங்கள் ஒழுக்க சுத்தத்தைக் காத்துக் கொள்கையில் யெகோவாவின் பார்வையில் அழகுள்ளவர்களாக இருக்கிறீர்கள்.
4 என்றபோதிலும் கடவுளோடு உங்களுடைய சுத்தமான நிலைநிற்கையை இழந்துவிடுவதற்கு உங்கள் மீது அழுத்தம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. இந்தக் கடைசி நாட்கள் அவைகளின் முடிவை நோக்கிச் செல்லுகையில் ஒழுக்கங்கெட்ட நடத்தையும் அசுத்தமான செல்வாக்குகளும் கொள்ளைநோயளவிலுள்ளது. (2 தீமோத்தேயு 3:1–5) ஒழுக்க சுத்தத்தைக் காத்துக் கொள்ளும் சவால் இளைஞர்களுக்கு ஒருபோதும் இத்தனை பெரியதாக இல்லை. சவாலை நீங்கள் வெற்றிகரமாக எதிர்ப்பட்டுவருகிறீர்களா? நீங்கள் தொடர்ந்து அவ்விதமாகச் செய்து வருவீர்களா?
நீங்கள் எதிர்ப்படும் சவால்
5 பொழுதுபோக்கு ஏதுக்கள் கண்ணியமானதை ஒருபுறமாகத் தள்ளிவிட்டு, மிகத் தெளிவாக ஒழுக்கமற்றதாக இருப்பதைப் புகழ்ந்துபாடும் காரியங்களால் இளைஞர்களைத் தாக்குகிறது. தொடர்ச்சியாக வன்முறை நிறைந்த திகில் திரைப்படங்களின் வெளியீடுகளில் ஒன்றைக் குறித்து திரைப்பட விமர்சகர் ஒருவர் பின்வருமாறு எழுதினார்: “இந்தப் படத்தில் பெரும் அளவுகளில் மாறி மாறிவரும் பாலின-அதிர்ச்சி, கொலை-அதிர்ச்சி, ஆபாச-அதிர்ச்சி ஆகியவை இந்தப் படத்தின் பொது அம்சமாகும். இதைப் பார்க்க வருவோரின் எண்ணிக்கை பதிவை ஏற்படுத்துமேயானால், திரைப்பட ரசனையில் ஏற்பட்டிருக்கும் மற்றொரு மாபெரும் தரக்குறைவின் சரிவுக்கு இது நினைவுச் சின்னமாக இருக்கும்.” இப்படிப்பட்ட படங்களோடு சேர்ந்து ஒளிவுமறைவில்லாத பாலுறவு பற்றிய பாடல்களும் முறைகேடான பாலுறவை மேன்மைப்படுத்திடும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுமிருக்கின்றன. இப்படிப்பட்ட “துன்மார்க்க உளையின்” விளக்கமான வருணனைகளால் பாதிக்கப்பட வாய்ப்பளித்து கடவுளுக்கு முன்பாக உங்கள் சுத்தமான நிலைநிற்கையை காத்துக்கொள்ள முடியுமா? (1 பேதுரு 4:4) நீதிமொழிகள் சொல்கிறபடியே: “தன் வஸ்திரம் வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக் கொள்ளக்கூடுமோ?”—நீதிமொழிகள் 6:27.
6 கடவுளோடு உங்கள் சுத்தமான நிலைநிற்கையை இழந்துவிடுவதற்கு அழுத்தம் மற்றொரு ஊற்றுமூலத்திலிருந்தும்கூட வருகிறது—ஒத்த வயதுள்ள சகாக்களிடமிருந்து. உலகப்பிரகாரமான 17 வயது பெண் வருத்தத்தோடு சொன்னது: “முதல் முறையாக நான் எல்லாத் தவறான காரணங்களுக்காகவும் பாலுறவில் ஈடுபட்டேன்: ஏனென்றால் என் காதலன் வற்புறுத்தினான். ஏனென்றால், எல்லாரும் அதைச் செய்கிறார்கள் என்பதாக நான் நினைத்தேன்.” எவருமே கேலி செய்யப்படுவதை விரும்புவதில்லை. மற்றவர்களால் விரும்பப்பட விரும்புவது இயற்கையே. ஆனால் பைபிள் ஒழுக்கத்துக்காக நீங்கள் நிலைநிற்கை எடுக்கையில், மற்ற இளைஞர்கள் உங்களைப் பரிகாசஞ் செய்யக்கூடும். ஒத்த வயதினரோடு முற்றிலும் பொருந்தியிருக்கவும் அங்கீகாரத்தை சம்பாதிக்கவும் விரும்புவது, நீங்கள் தவறு என்பதாக அறிந்திருக்கும் ஏதோ ஒன்றை செய்வதற்கு உங்கள் மீது அழுத்தத்தைக் கொண்டுவரக்கூடும்.—நீதிமொழிகள் 13:20.
7 இந்தச் செல்வாக்குகளை எதிர்த்து போராடுவது, குறிப்பாக பாலுணர்ச்சி தூண்டுதல்கள் தீவிரமாக இருக்கும் “கன்னிகைப் பருவத்தின்” போது கடினமாக இருக்கிறது. (1 கொரிந்தியர் 7:36) ஆய்வு அமைப்பு ஒன்று பின்வரும் முடிவுக்கு வந்தது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை: “19 வயதுக்குள், விவாகத்துக்கு முன் பாலுறவில் ஈடுபட்டிராத இளம் நபர் ஒரு விதிவிலக்கானவரே.” என்றபோதிலும் யெகோவாவின் அமைப்பிலுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களாகிய நீங்கள் விதிவிலக்கானவர்களாக உங்களைக் காண்பித்திருக்கிறீர்கள். நீங்கள் சவாலை நேர்மையாக எதிர்ப்பட்டு, ஒழுக்க சுத்தத்தைக் காத்துவருகிறீர்கள்.
ஆனால் பல கிறிஸ்தவ இளைஞர்கள் உலகின் ஒழுக்கங் கெட்ட மனநிலைகள் தங்கள் மீது பாதிப்பை ஏற்படுத்த அனுமதித்துவிட்டிருப்பது வருத்தத்திற்குரிய காரியமாகும். அவர்கள் நன்மையை நேசிப்பதாக உரிமைப்பாராட்டிய போதும், அவர்கள் தீமையை வெறுத்துவிடுவதில்லை; குறைந்த பட்சம் அதைப் போதிய அளவு வெறுப்பதில்லை. (சங்கீதம் 97:10) சிலர் விஷயங்களில் அவர்கள் அதை நேசிப்பது போலவும்கூட தோன்றுகிறது. சங்கீதம் 52:3 இவ்விதமாகச் சொல்கிறது: “நன்மையைப் பார்க்கிலும் தீமையையும் யதார்த்தம் பேசுகிறதைப் பார்க்கிலும் பொய்யையும் விரும்புகிறாய்.” சிலர் எதிர்பாலருடன் பழகுவதற்கான சந்திப்புகள், பொழுதுபோக்கு மற்றும் ஒழுக்கம் போன்ற காரியங்களில், யெகோவாவின் அமைப்பிலிருந்து வரும் அறிவுரைகளை மொத்தமாகத் தள்ளிவிடும் அளவுக்குச் சென்றுவிடுகிறார்கள். இதன் விளைவாக அவர்கள் அநேகமாக தங்களுக்கும் தங்கள் பெற்றோருக்கும் அவமானத்தைக் கொண்டுவருகிறார்கள். கடவுளுடையப் பார்வையில் தங்கள் அழகையும்கூட அவர்கள் இழந்துவிடுகிறார்கள்.—2 பேதுரு 2:21, 22.
சவாலை எதிர்ப்படுவதில் உதவி
9 ஒழுக்கத்தில் சுத்தமுள்ளவர்களாக நிலைத்திருக்கும் சவாலை நீங்கள் எவ்விதமாக எதிர்ப்படமுடியும்? சங்கீதக்காரன் அதே கேள்வியைக் கேட்டான்: “வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம் பண்ணுவான்?” பின்னர் அவன் பதிலளிக்கிறான்: “உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக் கொள்கிறதினால்தானே.” (சங்கீதம் 119:9) ஆம், உங்களுக்குக் கடவுளுடைய வார்த்தையிலிருந்து வழிநடத்துதல் தேவையாக இருக்கிறது. மேலுமாக நம்முடைய அன்புள்ள பரலோகத் தகப்பன், இந்த உலகின் அசுத்தமான அழுத்தங்களை எதிர்த்து நிற்பதற்கு உங்களுக்கு உதவி செய்ய இப்படிப்பட்ட வழிநடத்தலைத் தம்முடைய அமைப்பு அளிப்பதைப் பார்த்து வந்திருக்கிறார்.
10 வருடங்களினூடாக, குறிப்பாக இளைஞர்களை மனதில் கொண்டு, உன் இளமை—அதை மிக நன்றாய்ப் பயன்படுத்துதல் போன்ற பல பிரசுரங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. 1982-ம் ஆண்டு முதற்கொண்டு, விழித்தெழு! பத்திரிகையில் “இளைஞர் கேட்கின்றனர் . . . ” தொடர் பகுதி ஆபாச இலக்கியம், காதல் கதைகள், விவாக நோக்குடன் எதிர்பாலரிடம் பழகும்போது சரியான நடத்தை போன்ற விஷயங்களின் பேரில் அதிகமான பயனுள்ள புத்திமதியைக் கொடுத்திருக்கின்றது. இப்படிப்பட்ட தகவல் இளைஞர்களுக்கு உண்மையில் உதவியிருக்கிறதா? ஓர் உதாரணத்தைச் சிந்தித்துப் பாருங்கள். தொடர் பகுதியில் பல கட்டுரைகள் தற்புணர்ச்சிப் பழக்கத்தைப் பற்றி கலந்தாராய்ந்து இப்பழக்கம் “மோகத்தைத் தூண்டி,” ஒரு நபரை எளிதில் பாலின ஒழுக்கக்கேட்டுக்குள் வீழ்ந்துவிடச் செய்யக்கூடும் என்பதைக் காண்பித்தது.a (கொலோசெயர் 3:5) இப்பழக்கத்தை எதிர்த்துப் போராடுவது எவ்வாறு என்பது பற்றியும் எவ்விதமாக பழைய நிலைக்கு மீண்டும் சறுக்கிவிடுவதை கையாளுவது என்பது பற்றியும் நடைமுறை ஆலோசனைகள் கொடுக்கப்பட்டிருந்தன. கட்டுரைகளை வாசித்த இளைஞர்களில் சிலர் எழுதியதாவது: “12 வயது முதற்கொண்டு தற்புணர்ச்சிப் பிரச்னை எனக்கு இருந்துவந்திருக்கிறது. இப்பொழுது எனக்கு வயது 18. உங்கள் கட்டுரைகளின் உதவியால் நான் படிப்படியாக இதை மேற்கொண்டுவருகிறேன். உங்கள் கட்டுரைகளுக்காக நன்றி.” “கட்டுரைகள் கொடுத்த ஆலோசனையை இப்பொழுது நான் ஏற்றுக் கொண்டிருப்பதால், நான் அதிக மேம்பட்ட ஒரு மனநிலையில் என்னைக் காண்கிறேன். முன்னிருந்ததைவிட அதிக சுத்தமாக நான் உணருகிறேன்.”
11 இப்படிப்பட்ட தகவலை வாசிப்பதும் படிப்பதும் நேரத்தை எடுத்துக் கொள்கிறது. ஆனால் அவ்விதமாகச் செய்வது ஒழுக்கத்தில் சுத்தமுள்ளர்களாக நிலைத்திருக்க உங்களுக்கு உதவக்கூடும். பிரசுரிக்கப்படும் இப்படிப்பட்ட தகவலை நீங்கள் முழுமையாக அனுகூலப்படுத்திக் கொள்கிறீர்களா? “இளைஞர் கேட்கின்றனர் . . . ” பகுதியில் வெளியான “விவாகத்துக்கு முன் பாலுறவு—ஏன் கூடாது?”b கட்டுரையை வாசித்துவிட்டு, அந்தச் சமயம் பைபிள் மாணாக்கராயிருந்த ஓர் இளம் பெண் இவ்விதமாக எழுதினாள்: “விவாகத்துக்கு முன் பாலுறவுகொள்கையில், அதன் பின் எழும் மோசமான, குற்றவுணர்வுள்ள, பொறாமையான உணர்ச்சிகளை நான் அறிந்திருக்கிறேன். இதற்காக நான் மிகவும் மனஸ்தாபப்படுகிறேன். ஒவ்வொரு நாளும் யெகோவா என்னை ஏற்றுக் கொண்டிருப்பதற்காகவும் அவருடைய மன்னிப்புக்காகவும் அவருக்கு நான் நன்றி சொல்லுகிறேன். உங்கள் கட்டுரை மற்றவர்களுக்கு நான் செய்தது போல செய்வதற்கு முன்பாக உதவி செய்யும் என்று நம்புகிறேன். அது உண்மையில் தீங்கிழைக்கிறது. இப்பொழுது, ‘வேசிமார்க்கத்துக்கு விலகி’யிருக்க வேண்டும் என்று யெகோவா தேவன் ஏன் விரும்புகிறார் என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறேன்.”—1 தெசலோனிக்கேயர் 4:3.
12 இது, சவாலை வெற்றிகரமாக எதிர்ப்படுவதற்கு உங்களுக்கு உதவக்கூடிய வேறொரு காரியத்துக்கு நம்மைக் கொண்டுவந்து விடுகிறது. யெகோவா சர்வலோக அரசுரிமையுடையவர் என்பதையும் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதையும் நீங்கள் போற்ற வேண்டும். (வெளிப்படுத்துதல் 4:11) ஆனால் அதே சமயத்தில் அவர் அன்புள்ள தகப்பனாயும் நம்முடைய மிகச் சிறந்த அக்கறைகளை இருதயத்தில் கொண்டவராயும் இருக்கிறார். (நீதிமொழிகள் 2:20–22; ஏசாயா 48:17) அவருடைய கட்டளைகள் அனாவசியமாக நம்மை கட்டுப்படுத்துவதற்கல்ல, நம்மைப் பாதுகாக்கவே திட்டமிடப்பட்டுள்ளன. ஆகவே அவைகளுக்குக் கீழ்ப்படிவதே ஞானமான போக்காகும். (உபாகமம் 4:5, 6) யெகோவா ஏன் ஒழுக்க சுத்தத்தை வலியுறுத்துகிறார் என்பதை தெளிவாகப் புரிந்துகொள்வது, அதிலிருக்கும் உண்மையான அழகைக் காண உங்களுக்கு உதவி செய்து அவரைப் பிரியப்படுத்த விரும்பும்படியாக உங்களைச் செய்யும்.—சங்கீதம் 112:1.
13 கடவுள் பாலுறவை விவாகத்துக்கு மாத்திரமே கட்டுப்படுத்தி வேசித்தனத்தை கண்டித்து தடைச் செய்வதை எடுத்துக் கொள்ளுங்கள். (எபிரெயர் 13:4) இந்தச் சட்டத்துக்குக் கீழ்ப்படிதல், நன்மையான எதையாவது நீங்கள் இழக்கும்படிச் செய்கிறதா? ஓர் அன்புள்ள பரலோகத் தகப்பன் வாழ்க்கையின் மகிழ்ச்சியை உங்களிடமிருந்து பறித்துவிட ஒரு சட்டத்தை இயற்றுவாரா? நிச்சயமாக இல்லை! கடவுளுடைய ஒழுக்கச் சட்டத்தை அசட்டை செய்யும் ஒத்த வயதிலுள்ள மற்றவர்களின் வாழ்க்கையில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைப் பாருங்கள். விரும்பப்படாத கர்ப்பம் அநேகமாக அவர்களை கருச்சிதைவுகளுக்கு அல்லது ஒருவேளை தகுந்த வயதுக்கு முன்னான விவாகங்களுக்கு வழிநடத்துகிறது. அநேகருடைய விஷயத்தில் அது கணவனின்றி ஒரு பிள்ளையை வளர்க்க வேண்டியிருப்பதை அர்த்தப்படுத்துகிறது. மேலுமாக, வேசித்தனத்தை அப்பியாசிக்கும் இளைஞர்கள் ‘தங்கள் சுய சரீரங்களுக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்து’ பாலுறவினால் கடத்தப்படும் நோய்களுக்கு ஆளாகும் நிலையில் தங்களை வைக்கிறார்கள். (1 கொரிந்தியர் 6:18) மேலுமாக யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருக்கும் ஓர் இளைஞன் வேசித்தனஞ் செய்யும் போது, உணர்ச்சி சம்பந்தமான பக்கப் பாதிப்புகள் நாசம் விளைவிப்பதாயிருக்கக்கூடும். குற்றமுள்ள மனச்சாட்சியின் நச்சரிப்பை அடக்க முயற்சி செய்வது சோர்வையும் உறக்கமில்லா இரவுகளையும் உண்டுபண்ணக்கூடும். (சங்கீதம் 32:3, 4; 51:3) அப்படியென்றால் வேசித்தனத்தை தடைசெய்யும் யெகோவாவின் கட்டளை உங்களைப் பாதுகாக்கவே திட்டமிடப்பட்டிருக்கிறது என்பது தெளிவாக இல்லையா? ஒழுக்க சுத்தத்தைக் காத்துக் கொள்வதில் உண்மையான நன்மையிருக்கிறது!
14 ஒழுக்கத்தின் பேரில் கடவுளுடைய கண்டிப்பான சட்டங்களைப் பின்பற்றுவது எளிதல்ல என்பது ஒப்புக்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக சில இளைஞர்கள் இன்னும் தாங்கள் பருவ வயதிலிருக்கும் போதே விவாகம் செய்து கொள்வதே மிகச் சிறந்த பாதுகாப்பு என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். ‘எப்படியும், 1 கொரிந்தியர் 7:9 “அவர்களுக்கு இச்சையடக்கமில்லாதிருந்தால் விவாகம் பண்ணக்கடவர்கள், வேகிறதைப் பார்க்கிலும் விவாகம் பண்ணுகிறது நலம்” என்பதாகச் சொல்லவில்லையா?’ என்பதாக அவர்கள் வாதிடுகிறார்கள். ஆனால் இப்படிப்பட்ட ஒரு கருத்து குறுகிய நோக்கமுடையதாக இருக்கிறது. பவுலின் வார்த்தைகள், பருவ வயதினரிடமாக அல்ல, ஆனால் “கன்னிகைப் பருவம் கடந்து” போனவர்களிடமாகச் சொல்லப்படுகின்றன. (1 கொரிந்தியர் 7:36) பெரும்பாலானவர்களின் விஷயத்தில், இன்னும் கன்னிகைப் பருவத்திலிருப்பவர்கள் விவாகத்தோடு வரும் அழுத்தங்களையும் பொறுப்புகளையும் ஏற்றுக் கொள்ள போதிய அளவு உணர்ச்சி பூர்வமாகவும் ஆவிக்குரிய பிரகாரமாகவும் வளர்ச்சியடைந்தவர்களாக இல்லை. விவாகம் மற்றும் குடும்ப பத்திரிகை அறிவிப்பதாவது: “குறித்த காலத்துக்கு முன் விவாகம் செய்துகொள்பவர்கள், விவாகம் சார்ந்த கடமைகளை நிறைவேற்றுவதற்கு ஆயத்தமாக இல்லாததன் காரணமாக, குறைவான விவாக திருப்தியையே அனுபவிக்கிறார்கள். கடமைகளை சரியாக நிறைவேற்றாமற் போவது, திருப்தியை குறைக்க, இது விவாகத்தின் நிலையற்றத் தன்மைக்கு வழிநடத்துகிறது.” ஆகவே இளமைப் பருவத்தில் விவாகம் செய்து கொள்வதில் அல்ல, ஆனால் விவாகத்தை வெற்றிகரமாக்குவதற்குத் தேவையான எல்லாக் குணங்களையும் நீங்கள் விருத்தி செய்துகொள்ளும்வரை விவாகமில்லா நிலையில் கற்பைக் காத்து கொள்வதில்தானே பதில் இருக்கிறது.
உங்களைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்!
15 அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினான்: “ஆகையால் விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப் போடுங்கள்.” (கொலோசெயர் 3:5) ஆம், தீவிரமான நடவடிக்கைகள் தேவையாக இருக்கின்றன; நீங்கள் ஒழுக்கத்தில் சுத்தமுள்ளவர்களாக நிலைத்திருக்க தீர்மானமாயிருக்க வேண்டும். “அழித்துப் போடுங்கள்” என்பதாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் வினைச் சொல்லின் மீது எக்ஸ்போஸிட்டரின் பைபிள் விளக்கவுரை சொல்வதாவது: “தீயச் செயல்களையும் மனநிலைகளையும் நாம் வெறுமென அடக்க அல்லது கட்டுப்படுத்த வேண்டும் என்பதை இது குறிப்பிடவில்லை. நாம் பழைய வாழ்க்கை முறையை முற்றிலுமாக அடியோடு களைந்துவிட, அவைகளை நாம் துடைத்தழித்துவிட வேண்டும். ‘முற்றிலும் அழி’ என்பது அதன் வலிமையை வெளிப்படுத்தக்கூடும் . . . வினைச் சொல்லின் பொருளும் வினைவடிவின் வலிமையும் சுறுசுறுப்பாக வருந்தி உழைக்க வேண்டிய தனிப்பட்ட தீர்மானமான செயலைக் குறிப்பிடுகிறது.”—மத்தேயு 5:27–30 ஒப்பிடவும்.
16 ஆனால் நீங்கள் எவ்விதமாக ஒழுக்கத்தில் அசுத்தமான செயல்களையும் மனநிலைகளையும் “முற்றிலும் அழிக்க” அல்லது ‘துடைத்தழிக்க’ முடியும்? இயேசு பின்வருமாறு சொன்னபோது பிரச்னையின் மூலகாரணத்துக்குச் சென்றார்: “மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும் விபசாரங்களும் வேசித்தனங்களும் . . . பொருளாசைகளும் . . . புறப்பட்டு வரும்.” (மாற்கு 7:21, 22) அடையாள அர்த்தமுள்ள இருதயம் சிந்திக்கும் திறமைகளை உட்படுத்துகிறது. இதன் காரணமாகவே இது “சிந்தனை”களோடு சம்பந்தப்படுத்தப்படுகிறது. அப்படியென்றால், ஒழுக்கத்தில் சுத்தமுள்ளவர்களாக நிலைத்திருப்பதற்கு மனதைச் சுத்தமாக வைத்துக் கொள்ள உழைக்க வேண்டும். எவ்விதமாக? மனது, உணர்ச்சிகளின் மூலமாக போஷிக்கப்படுவதன் காரணமாக, நீங்கள் உங்கள் கண்களால் என்ன பார்க்கிறீர்கள் என்பதற்கு எதிராக எச்சரிப்பாயிருப்பது அவசியமாகும். ஒழுக்கங் கெட்ட நடத்தையைச் சித்தரிக்கும் அல்லது ஆதரிக்கும் புத்தகங்களை, டெலிவிஷன் நிகழ்ச்சிகளை அல்லது திரைப்படங்களை தவிர்ப்பது அவசியமாகும். மேலுமாக உங்கள் காதால் நீங்கள் எதைக் கேட்கிறீர்கள் என்பது குறித்து கவனமுள்ளவர்களாக, பாலுறவுகளைப் பற்றிய பிரத்தியேகமான இசைப்பாடல்களைத் தவிர்த்து ஒதுக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒரு நிலைநிற்கையை எடுப்பதற்கு, விசேஷமாக உங்களுடைய ஒத்த வயதினருக்கு எதிராக அவ்விதமாகச் செய்வதற்கு தைரியம் தேவைப்படுகிறது. ஆனால் அவ்விதமாகச் செய்வது ஒழுக்கத்தில் சுத்தமுள்ளவராக நிலைத்திருந்து சுயமரியாதையைக் காத்துக் கொள்ள உங்களுக்கு உதவி செய்யும்.
17 அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறும்கூட அறிவுரைக் கூறினான்: “பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பேர் முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது.” (எபேசியர் 5:3; வசனம் 12-ஐயும் பார்க்கவும்.) ஆகவே ஒழுக்க அசுத்தம் பெயர் குறிப்பிடப்படவும் கூடாது, அதாவது, கருத்தூன்றிப் பேசப்பட அல்லது கேலிப் பேச்சுக்குரிய பொருளாக பயன்படுத்தப்படவும் கூடாது. ஏன் கூடாது? பைபிள் பண்டிதர் வில்லியம் பார்க்ளே சொல்கிறபடியே: “ஒரு காரியத்தைப் பற்றி பேசுவது, ஒரு காரியத்தைப் பற்றி கேலி செய்வது, அடிக்கடி சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருளாக ஆக்குவது, அதை மனதுக்கு அறிமுகப்படுத்தி, உண்மையில் அதைச் செய்வதை அருகில் கொண்டுவருவதாக இருக்கிறது.” (யாக்கோபு 1:14, 15) விசேஷமாக மற்ற இளைஞர்கள் அசுத்தமான கேலிப் பேச்சுகளைப் பேசிக் கொண்டு அல்லது பாலுறவு நடத்தைகளை விவரிக்க கண்ணியமற்ற பாஷையைப் பயன்படுத்துகையில் ‘வாயைக் கடிவாளத்தால் அடக்கி வைக்க’ உண்மையான மன உறுதி தேவையாக இருக்கிறது. (சங்கீதம் 39:1) ஆனால் நேர்மையாகவும் சுத்தமாகவும் நிலைத்திருப்பதன் மூலம் நீங்கள் யெகோவாவின் இருதயத்தைச் சந்தோஷப்படுத்துவீர்கள்.—சங்கீதம் 11:7; நீதிமொழிகள் 27:11.
18 ஒழுக்க அசுத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெறுவதற்கு, அசுத்தமான சிந்தனைகளையும் பேச்சையும் வெறுத்தொதுக்குவது மாத்திரம் போதாது. சீன பழமொழி சொல்வதாவது: “வெறுமையான மனம் எல்லா யோசனைகளுக்கும் திறந்திருக்கிறது.” (மத்தேயு 12:43–45 ஒப்பிடவும்.) மனதை ஆரோக்கியமான, சுத்த எண்ணங்களால் நிரப்பிக் கொள்ள வேண்டிய தேவையைப் பவுல் உணர்ந்தான். ஆகவே பிலிப்பியர்களை அவன் இவ்விதமாகத் துரிதப்படுத்தினான்: “உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக் கொண்டிருங்கள் [‘கவனமான சிந்தனைக்குப் பொருளாகக் கொள்ளுங்கள்’c].”—பிலிப்பியர் 4:8.
19 இது கடவுளுடைய வார்த்தையை ஊக்கமாகப் படிப்பதை அர்த்தப்படுத்துகிறது. (யோசுவா 1:8; சங்கீதம் 1:2) அது உங்கள் மனதையும் இருதயத்தையும் திடப்படுத்தி, யெகோவாவோடு நெருக்கமான தனிப்பட்ட ஓர் உறவை வளர்த்துக் கொள்ள உங்களுக்கு உதவி செய்யும். இதன் காரணமாக நீங்கள் ஒழுக்கத்தில் அசுத்தமான நடத்தையில் ஈடுபடும் சோதனையை எதிர்ப்பதற்கு அதிக மேம்பட்ட ஒரு நிலையில் இருப்பீர்கள். யெகோவாவின் பெயருக்குக் கனவீனத்தையும் உங்கள் குடும்பத்துக்கும் சபைக்கும் அவமானத்தையும் கொண்டுவரக்கூடிய ஆபத்துக்குள்ளாகும் நிலையை எடுக்கமாட்டீர்கள். மாறாக, உங்களுடைய இளமையின் பெலத்தையும் பராக்கிரமத்தையும் பின்னால் நீங்கள் வருந்தக்கூடாதவகையில் பயன்படுத்துவீர்கள். ஆம், ஒழுக்க சுத்தத்தின் பாதையை நீங்கள் பின்பற்றுவீர்கள். இது உண்மையாகவே யெகோவாவை சேவிக்கிறவர்களாகக் காணப்படும் இளைஞர்களின் அழகாகும்!—நீதிமொழிகள் 3:1–4. (w89 11/1)
இளைஞரே—நீங்கள் எவ்விதமாகப் பதிலளிப்பீர்கள்?
◻ ஒழுக்க சுத்தத்தில் நீங்கள் ஏன் மிக உயர்ந்த தராதரத்தைக் காத்துக் கொள்ள வேண்டும்?
◻ என்ன அழுத்தங்கள் கடவுளோடு சுத்தமான நிலைநிற்கையைக் காத்துக் கொள்வதைச் சவாலாக்குகிறது?
◻ ஒழுக்கத்தில் சுத்தமுள்ளவர்களாக நிலைத்திருக்கும் சவாலை எதிர்ப்பட எது உங்களுக்கு உதவி செய்யும்?
◻ உங்களை நீங்களே சுத்தமுள்ளவர்களாக வைத்துக் கொள்ள வேண்டுமானால் என்ன தீவிரமான நடவடிக்கைகள் அவசியமாக இருக்கின்றன?
[அடிக்குறிப்புகள்]
a ஆங்கில விழித்தெழு! செப்டம்பர் 8, 1987, பக்கங்கள் 19–21; நவம்பர் 8, 1987, பக்கங்கள் 18–20; மற்றும் தமிழ் விழித்தெழு! மார்ச் 8, 1989, பக்கங்கள் 20–3 பார்க்கவும்.
b ஆங்கில விழித்தெழு! டிசம்பர் 8, 1985, பக்கங்கள் 10–13.
c எக்ஸ்போஸிட்டரின் கிரேக்க ஏற்பாடு.
[கேள்விகள்]
1, 2. (எ) இளைஞர்களுக்காக யெகோவா எதை விரும்புகிறார்? (பி) உங்கள் இருதயத்துக்கும் கண்களுக்கும் கவர்ச்சியூட்டும் எதை வேண்டுமானாலும் நாடிச் செல்வது ஏன் முட்டாள்தனமாக இருக்கிறது?
3, 4. (எ) ஒழுக்க சுத்தத்தின் உயர்ந்த தராதரத்தை ஏன் காத்துக் கொள்ள வேண்டும்? (பி) கடவுளோடு உங்களுடைய சுத்தமான நிலைநிற்கையை இழந்துவிடுவதற்கு என்ன அழுத்தமிருந்து கொண்டிருக்கிறது? என்ன கேள்விகள் எழும்புகின்றன?
5. என்ன அசுத்தமான செல்வாக்குகள் கடவுளுக்கு முன்பாக சுத்தமான நிலைநிற்கையைக் காத்துக் கொள்வதை கடினமாக்கிவிடுகின்றன?
6. ஒத்த வயதினரிடமிருந்து இளைஞர்கள் என்ன அழுத்தத்தை எதிர்ப்படுகிறார்கள்?
7. அசுத்தமான செல்வாக்குகளை எதிர்த்துப் போராடுவது குறிப்பாக இளைஞர்களுக்கு ஏன் கடினமாக இருக்கிறது? ஆனால் யெகோவாவின் அமைப்பிலுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்களை எவ்விதமாக காண்பித்து வந்திருக்கிறார்கள்?
8. சில கிறிஸ்தவ இளைஞர்கள் ஏன் உலகின் ஒழுக்கங்கெட்ட மனநிலைகள் தங்கள் மீது பாதிப்பை ஏற்படுத்த அனுமதித்திருக்கின்றனர்? என்ன விளைவோடு?
9. ஒழுக்கத்தில் சுத்தமுள்ளவர்களாய் நிலைத்திருக்கும் சவாலை எதிர்ப்படுவதற்கு என்ன தேவைப்படுகிறது?
10, 11. (எ) ஒழுக்கத்தில் சுத்தமுள்ளவர்களாக நிலைத்திருப்பதற்கு இளைஞர்களுக்கு உதவி செய்ய என்ன பிரசுரங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன? (பி) “இளைஞர் கேட்கின்றனர் . . . ” தொடர்பகுதியினால் சில இளைஞர் எவ்விதமாக உதவப்பட்டிருக்கிறார்கள்? (சி) “இளைஞர் கேட்கின்றனர் . . . ” தொடர் பகுதியிலிருந்து நீங்கள் எவ்விதமாக தனிப்பட்ட வகையில் பயனடைந்திருக்கிறீர்கள்?
12. எது யெகோவாவைப் பிரியப்படுத்த நம்மை விரும்பும்படியாகச் செய்யும்?
[பக்கம் 23-ன் படம்]
இன்னும் கன்னிகைப் பருவத்திலிருக்கும் அநேகர் பெற்றோருக்குரிய பொறுப்புகளைக் கவனித்துக் கொள்வதற்கு மிகவும் அனுபவ முதிர்ச்சியற்றவர்களாக இருக்கிறார்கள்