நல்ல பெயர் இருந்தால் மற்றவர்களுடைய நம்பிக்கையையும் மரியாதையையும் சம்பாதிக்கலாம்
‘நிறைய சொத்துகளைவிட நல்ல பெயரே சிறந்தது’
நல்ல பெயர் மிகவும் மதிப்புள்ளது! ஏனென்றால், சில நாடுகளில் இது சட்டப்பூர்வமாகப் பாதுகாக்கப்படுகிறது. பொய்க் குற்றச்சாட்டிலிருந்தும் (வெளியிடப்பட்ட அல்லது ஒலிபரப்பப்பட்ட பொய்யான தகவலிருந்தும்) அவதூறிலிருந்தும் (பொய்யாகப் பேசப்படுகிற விஷயத்திலிருந்தும்) அது பாதுகாக்கப்படுகிறது. நல்ல பெயரைப் பற்றி ஒரு பழமொழி இப்படிச் சொல்கிறது: “நிறைய சொத்துகளைச் சம்பாதிப்பதைவிட நல்ல பெயரைச் சம்பாதிப்பது சிறந்தது. தங்கத்தையும் வெள்ளியையும் சம்பாதிப்பதைவிட மரியாதையைச் சம்பாதிப்பது சிறந்தது.” (நீதிமொழிகள் 22:1) அப்படியென்றால், நல்ல பெயரையும் மற்றவர்களுடைய மரியாதையையும் நாம் எப்படிச் சம்பாதிக்கலாம்? இதற்கு பைபிளில் சில அருமையான ஆலோசனைகள் இருக்கின்றன.
உதாரணத்துக்கு, பைபிளில் சங்கீதம் 15-ஆம் அதிகாரம் இதைப் பற்றி என்ன சொல்கிறது என்று கவனியுங்கள். “யார் [கடவுளுடைய] கூடாரத்தில் விருந்தாளியாக இருக்க முடியும்?” என்ற கேள்விக்குச் சங்கீதக்காரன் இப்படிப் பதில் சொல்கிறார்: “எப்போதும் சரியானதைச் செய்து, இதயத்தில் உண்மையைப் பேசுகிறவன்தான். அப்படிப்பட்டவன், மற்றவர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேச மாட்டான். மற்றவர்களுக்கு எந்தக் கெடுதலும் செய்ய மாட்டான். நண்பர்களைப் பற்றிக் கேவலமாகப் பேச மாட்டான். கீழ்த்தரமாக நடக்கிறவனோடு சேர மாட்டான் . . . எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் கொடுத்த வாக்கை மீற மாட்டான் . . . லஞ்சம் வாங்க மாட்டான்.” (சங்கீதம் 15:1-5) இந்த வார்த்தைகளின்படி வாழும் ஒருவருக்கு நீங்கள் மரியாதை கொடுப்பீர்கள், இல்லையா?
மற்றவர்களுடைய மரியாதையைச் சம்பாதிக்க வேண்டுமென்றால் மனத்தாழ்மையும் அவசியம். “மனத்தாழ்மையாக இருந்தால் மதிப்பு மரியாதை கிடைக்கும்” என்று நீதிமொழிகள் 15:33 சொல்கிறது. தான் எந்த விஷயத்தில் முன்னேற்றம் செய்ய வேண்டும் என்று மனத்தாழ்மையாக இருக்கும் ஒருவர் யோசித்துப் பார்ப்பார்; அதற்குக் கடினமாக முயற்சி செய்வார். யாரையாவது கஷ்டப்படுத்தியிருந்தால் அவரிடம் மன்னிப்பு கேட்க தயாராக இருப்பார். (யாக்கோபு 3:2) ஆனால், அகம்பாவமுள்ள ஒருவர் சீக்கிரத்தில் கோபப்படுவார். “அகம்பாவம் வந்தால் அழிவு வரும். ஆணவம் வந்தால் அடிசறுக்கும்” என்று நீதிமொழிகள் 16:18 சொல்கிறது.
யாராவது உங்கள் நல்ல பெயரைக் கெடுத்துவிட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? சட்டென்று கோபப்பட்டு ஏதாவது செய்துவிடுவீர்களா? அப்போது உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என் பேர காப்பாத்திக்க முயற்சி செஞ்சா, என்மேல சுமத்தப்பட்ட பழிய நானே பரப்புர மாதிரி ஆயுடுமா?’ சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுப்பது சில சமயங்களில் சரியாக இருந்தாலும், பைபிள் தரும் இந்த ஆலோசனையைக் கவனியுங்கள்: “அவசரப்பட்டு ஒருவன்மேல் வழக்கு போடாதே . . . பிரச்சினையை அவனோடு நேரடியாகப் பேசித் தீர்த்துக்கொள்.” (நீதிமொழிகள் 25:8, 9)a இப்படிக் கவனமாகவும் சாந்தமாகவும் இந்த விஷயத்தை கையாளும்போது, சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுப்பதால் வரும் அதிகப்படியான செலவுகளையும் நம்மால் தவிர்க்க முடியும்.
பைபிள், மதம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் மட்டுமே அடங்கிய ஒரு புத்தகம் அல்ல! அது, நம்முடைய வாழ்க்கைக்கு நம்பகமான வழிகாட்டியும்கூட! இதில் இருக்கிற ஞானமான ஆலோசனைகளின்படி நடக்கிற எல்லாராலும் அருமையான குணங்களை வளர்த்துக்கொள்ள முடியும். அப்படி அருமையான குணங்களை வளர்த்துக்கொள்ளும்போது, நல்ல பெயரையும் மற்றவர்களுடைய மரியாதையையும் அவர்களால் சம்பாதித்துக்கொள்ள முடியும்.
a பிரச்சினைகளைச் சரிசெய்வது பற்றிய பைபிள் ஆலோசனைகள் மத்தேயு 5:23, 24; 18:15-17 ஆகிய வசனங்களில் இருக்கின்றன.