பகுதி 4—கடவுள் தம்முடைய நோக்கங்களைப்பற்றி நமக்குத் தெரிவிக்கிறார்
அன்புள்ள ஒரு கடவுள் தம்மை தேடுகின்ற உண்மை மனதுள்ளோருக்கு நிச்சயமாகவே தம்முடைய நோக்கங்களை வெளிப்படுத்துகிறார். அவர் துன்பத்தை ஏன் அனுமதித்திருக்கிறார் போன்ற கேள்விகளுக்குப் பதில்களைப் பெறவிரும்பும் மனிதர்களுக்கு நிச்சயமாகவே அவர் அளிக்கிறார்.
2 பைபிள் சொல்கிறது: “நீ அவரைத் [கடவுளைத்] தேடினால் உனக்குத் தென்படுவார்.” “மறைபொருள்களை வெளிப்படுத்துகிற தேவன் பரலோகத்திலிருக்கிறார்.” “கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்.”—1 நாளாகமம் 28:9; தானியேல் 2:28, [NW]; ஆமோஸ் 3:7.
பதில்கள் எங்கே இருக்கின்றன?
3 கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார் மற்றும் அதைக் குறித்து அவர் என்ன செய்வார் போன்ற கேள்விகளுக்குரிய பதில்கள் நம்முடைய நன்மைக்காக அவருடைய ஆவி ஏவி எழுதும்படிச் செய்த பதிவில் காணப்படுகின்றன. அந்தப் பதிவு அவருடைய வார்த்தையாகிய பரிசுத்த பைபிளாகும். “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.”—2 தீமோத்தேயு 3:16, 17.
4 பைபிள் உண்மையிலேயே ஈடிணையற்ற ஒரு புத்தகமாகும். அது மனித சரித்திரத்தைப் பற்றிய மிகத் துல்லியமான பதிவைக் கொண்டிருக்கிறது, அது பின்னால் மனிதர்களுடைய சிருஷ்டிப்புக்கு அப்பாலும்கூட செல்கிறது. அது காலத்துக்கொத்ததாகவும்கூட இருக்கிறது, ஏனென்றால் அதன் தீர்க்கதரிசனங்கள் நம்முடைய நாளுக்குரியதும் சமீப எதிர்காலத்திற்குரியதுமான சம்பவங்களோடுகூட தொடர்புள்ளவையாக இருக்கின்றன.
5 வரலாற்று வழுவாமைக்கு வேறு எந்தப் புத்தகத்துக்கும் இப்படிப்பட்ட ஆதாரச்சான்றுகள் கிடையாது. உதாரணமாக பூர்வ இலக்கிய எழுத்தாளர்களின் கையெழுத்துப்பிரதிகள் ஒரு சில மாத்திரமே இருக்கின்றன. ஆனால் பைபிளின் அநேக கையெழுத்துப்பிரதிகள் ஒருசில பகுதிகளாயும், சில முழுமையாயும் இருக்கின்றன: எபிரெய வேதாகமத்தினுடையது (“பழைய ஏற்பாட்டின்” 39 புத்தகங்கள்) சுமார் 6,000 மற்றும் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தினுடையது (“புதிய ஏற்பாட்டின்” 27 புத்தகங்கள்) சுமார் 13,000 இருக்கின்றன.
6 பைபிளை எழுதும்படியாக ஏவிய சர்வவல்லமையுள்ள கடவுள் அந்தக் கையெழுத்துப்பிரதிகளில் மூலவாசகத்தின் ஆற்றல்குறையாமல் பாதுகாக்கப்பட்டிருப்பதைப் பார்த்துக்கொள்ள கவனமுள்ளவராய் இருந்திருக்கிறார். ஆகவே நம்முடைய பைபிள்கள் இன்று கட்டாயமாகவே ஏவப்பட்ட மூல எழுத்துக்களைப் போன்று அவ்வாறே உள்ளன. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் கையெழுத்துப் பிரதிகளில் சில அவை முதல்முதலாக எழுதப்பட்ட சமயத்திலிருந்து நூறு ஆண்டுகளுக்குட்பட்டவையாக இருப்பது இதைப் போற்றுவதற்கு நமக்கு உதவிசெய்யும் மற்றொரு காரியமாகும். இக்காலத்திலும்கூட இருக்கும் பூர்வ உலகியல்சார்ந்த எழுத்தாளர்களின் ஒருசில கையெழுத்துப் பிரதிகள், மூல ஆசிரியர்களுடையதிலிருந்து பல நூற்றாண்டுகளுக்குட்பட்டவையாகவும்கூட இருப்பது அரிதாகும்.
கடவுளின் பரிசு
7 பைபிள்தானே வரலாற்றில் மிகப் பரவலாக விநியோகிக்கப்பட்ட புத்தகமாக இருக்கிறது. சுமார் 300 கோடி பிரதிகள் அச்சடிக்கப்பட்டிருக்கின்றன. வேறு எந்தப் புத்தகமும் அந்த எண்ணிக்கைக்கு அருகாமையில் வருவது இல்லை. மேலும் பைபிள் அல்லது அதன் பகுதிகள் சுமார் 2,000 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. இவ்விதமாக, நம்முடைய கோளத்தின் 98 சதவீதத்தினர் பைபிளை பயன்படுத்திக்கொள்ள வாய்ப்புடையவர்களாக இருக்கிறார்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
8 கடவுளிடமிருந்து வந்ததாக உரிமைப்பாராட்டுவதும், நம்பத்தக்கத்தன்மைக்கு எல்லா வெளிப்புற மற்றும் உட்புற அத்தாட்சிகளையும் கொண்டிருக்கும் ஒரு புத்தகம் நிச்சயமாகவே நாம் ஆராய்வதற்கு தகுதியுள்ளதாக உள்ளது.a அது வாழ்க்கையின் நோக்கம், உலக நிலைமைகளின் அர்த்தம் மற்றும் எதிர்காலம் எதைக்கொண்டிருக்கிறது என்பவற்றை விளக்குகிறது. வேறு எந்தப் புத்தகமும் அதை செய்ய முடியாது.
9 ஆம், பைபிள் மனித குடும்பத்துக்கு கடவுள் தகவல் தெரிவிக்கும் ஒரு வழிமுறையாக உள்ளது. அவர் தம்முடைய கிரியை நடப்பிக்கும் சக்தி அல்லது ஆவியினால் அது எழுதப்படுவதை வழிநடத்தினார், சுமார் 40 மனிதர்கள் அதை பதிவுசெய்திருக்கிறார்கள். இவ்விதமாக கடவுள் அவருடைய வார்த்தையாகிய பரிசுத்த பைபிளின் மூலமாக நம்மிடம் பேசுகிறார். அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார்: “நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷர் வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்[டீர்கள்] . . . அது மெய்யாகவே தேவ வசனந்தான்.”—1 தெசலோனிக்கேயர் 2:13.
10 ஐக்கிய மாகாணங்களின் 16-வது ஜனாதிபதி, ஆபிரகாம் லிங்கன் பைபிளை “கடவுள் மனிதனுக்கு எக்காலத்திலும் அருளப்பட்டிருப்பதில் மிகச் சிறந்த பரிசு” என்றழைத்தார். “அது இல்லையென்றால் சரியானதை தவறானதிலிருந்து நாம் அறியமுடியாது.” அப்படியென்றால் இப்பொழுது துன்பம் எவ்வாறு ஆரம்பமானது, கடவுள் அதை ஏன் அனுமதித்தார், அதைக் குறித்து அவர் என்ன செய்வார் என்பதைக் குறித்து இந்த மிக உயர்ந்த பரிசு நமக்கு என்ன சொல்லுகிறது?
[அடிக்குறிப்புகள்]
a பைபிளின் நம்பத்தக்கத்தன்மையைப் பற்றிய கூடுதலான தகவலுக்கு, உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டி 1989-ல் வெளியிட்ட பைபிள்—கடவுளுடைய வார்த்தையா அல்லது மனிதனுடையதா? என்ற ஆங்கில புத்தகத்தைப் பார்க்கவும்.
[கேள்விகள்]
1, 2. உண்மைமனதுடன் கேட்பவர்களுக்கு கடவுள் பதில்களைக் கொடுக்கிறார் என்பது நமக்கு எப்படித் தெரியும்?
3. கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார் என்பதை எங்கிருந்து நாம் கண்டுபிடிக்கலாம்?
4, 5. பைபிளை ஈடிணையற்றதாக ஆக்குவது என்ன?
6. இன்று பைபிள், அடிப்படையில் கடவுள் அதை ஆவியால் ஏவினபோது இருந்தவிதமாகவே இருக்கிறது என்று நாம் ஏன் நிச்சயமாக இருக்கலாம்?
7. பைபிளின் விநியோகம் எத்தனை பரவலாக உள்ளது?
8-10. பைபிள் நம்முடைய ஆராய்ச்சிக்கு ஏன் தகுதியுள்ளதாக இருக்கிறது என்பதற்கு சில காரணங்கள் யாவை?
[பக்கம் 10-ன் படம்]
பைபிள், கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்டெழுதப்பட்டது, மனித குடும்பத்துக்கு அவருடைய தகவல் தெரிவிக்கும் ஒரு வழிமுறையாக இருக்கிறது