அதிகாரம் 12
கடவுளுடைய அரசாங்கத்தின் வேலைகளை ஆதரிப்பது—உள்ளூரிலும் உலகெங்கிலும்
கடைசி நாட்களைப் பற்றி இயேசு சொன்ன தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக, யெகோவாவின் சாட்சிகள் “பூமியின் எல்லைகள் வரையிலும்” நல்ல செய்தியை அறிவித்துவருகிறார்கள். (அப். 1:8; மத். 24:14) இதற்காகத் தங்களுடைய நேரத்தையும் சக்தியையும் தாராளமாகச் செலவழிக்கிறார்கள். யெகோவா தன்னுடைய சக வேலையாட்களின் தேவைகளைக் கவனித்துக்கொள்வார் என்ற நம்பிக்கையில், அவருடைய அரசாங்கத்துக்குத் தங்கள் வாழ்க்கையில் எப்போதும் முதலிடம் தருகிறார்கள். (மத். 6:25-34; 1 கொ. 3:5-9) அதனால் கிடைத்திருக்கும் பலன்களைப் பார்க்கும்போது, யெகோவா அவர்களுடைய வேலையை ஏற்றுக்கொண்டு ஆசீர்வதித்திருப்பது தெளிவாகத் தெரிகிறது.
உலகெங்கும் நடக்கும் வேலைகளை ஆதரிப்பது
2 ஊழியத்தில் நாம் பைபிள்களையும் பைபிள் பிரசுரங்களையும் விலையில்லாமல் கொடுப்பதை மக்கள் பார்க்கும்போது, “உங்களால எப்படி இத செய்ய முடியுது?” என்று கேட்கலாம். உண்மைதான், பைபிள்களையும் பைபிள் பிரசுரங்களையும் தயாரிப்பதற்கும் அச்சிடுவதற்கும் பணம் செலவாகிறது. பெத்தேல் வீடுகளைக் கட்டவும் பராமரிக்கவும்கூட நிறைய பணம் தேவைப்படுகிறது. (பெத்தேல் ஊழியர்கள் பிரசுரங்களை அச்சடிக்கும் வேலையையும், பிரசங்க வேலையைக் கண்காணிக்கும் வேலையையும், பிரசங்க வேலையை ஆதரிக்கும் மற்ற வேலைகளையும் செய்கிறார்கள்.) அதோடு, விசேஷ முழுநேர ஊழியம் செய்யும் வட்டாரக் கண்காணிகளும், மிஷனரிகளும், விசேஷப் பயனியர்களும், மற்றவர்களும் தங்களுடைய சேவையைத் தொடர்ந்து செய்வதற்காக ஒரு சிறிய தொகை கொடுக்கப்படுகிறது. அதனால், உள்ளூரிலும் சரி, உலகெங்கிலும் சரி, நல்ல செய்தியைப் பிரசங்கிக்க நிறைய பணம் செலவாகிறது. இதற்கெல்லாம் எப்படிப் பணம் கிடைக்கிறது?
3 நிறைய பேர் யெகோவாவின் சாட்சிகள் செய்யும் உலகளாவிய வேலைக்கு, அதாவது பைபிளைப் பற்றிச் சொல்லிக்கொடுக்கும் வேலைக்கு, பாராட்டு தெரிவித்து மனப்பூர்வமாக நன்கொடை தருகிறார்கள். ஆனாலும், யெகோவாவின் சாட்சிகள்தான் முக்கியமாக இந்த உலகளாவிய வேலைக்கு நன்கொடை தருகிறார்கள். அவர்களில் சிலர், தங்கள் நாட்டிலுள்ள கிளை அலுவலகத்துக்கு நன்கொடைகளை அனுப்பி வைக்கிறார்கள். அன்று வாழ்ந்த இஸ்ரவேலர்கள் யெகோவாவின் ஆலயத்தைக் கட்டுவதற்குத் தாராளமாக நன்கொடைகள் தந்தது போலவே இவர்களும் இன்று மனப்பூர்வமாக நன்கொடைகள் தருகிறார்கள். (யாத். 35:20-29; 1 நா. 29:9) சிலர் தங்கள் சொத்துகளை அமைப்பின் பெயருக்கு உயில் எழுதி வைக்கிறார்கள். மற்றவர்கள் தனிப்பட்ட விதமாகவோ சபையாகவோ வட்டாரமாகவோ நன்கொடைகளைக் கொடுக்கிறார்கள். பொதுவாக, இவை சிறிய தொகையாக இருந்தாலும், மொத்தமாகச் சேர்க்கும்போது, ஊழிய வேலை தொடர்ந்து நடப்பதற்குத் தேவையான பணம் கிடைத்துவிடுகிறது.
பிரசங்க வேலையை ஆதரிப்பதற்குத் தங்கள் பணத்தையும் சொத்துகளையும் கொடுப்பதை யெகோவாவின் சாட்சிகள் ஒரு பாக்கியமாக நினைக்கிறார்கள்
4 பிரசங்க வேலையை ஆதரிப்பதற்குத் தங்கள் பணத்தையும் சொத்துகளையும் கொடுப்பதை யெகோவாவின் சாட்சிகள் ஒரு பாக்கியமாக நினைக்கிறார்கள். இயேசுவும் அவருடைய சீஷர்களும் ஒரு பணப்பெட்டியை வைத்திருந்தார்கள்; அதில் போடப்பட்ட காணிக்கைகளை வைத்து செலவுகளைக் கவனித்துக்கொண்டார்கள். (யோவா. 13:29) சில பெண்களும்கூட இயேசுவுக்கும் அவருடைய சீஷர்களுக்கும் பணிவிடை செய்ததாக பைபிள் சொல்கிறது. (மாற். 15:40, 41; லூக். 8:3) அப்போஸ்தலன் பவுலின் காலத்தில் இருந்த சிலர் பிரசங்க வேலையையும் பவுல் செய்த ஊழியத்தையும் ஆதரிக்க விரும்பி அவருக்கு அன்போடு பொருள் உதவி செய்தார்கள்; அதை அவர் நன்றியோடு ஏற்றுக்கொண்டார். (பிலி. 4:14-16; 1 தெ. 2:9) இப்படி, அன்றைக்கு வாழ்ந்தவர்கள் பக்திவைராக்கியத்தோடு சேவை செய்வதிலும் தாராளமாகக் கொடுப்பதிலும் முன்மாதிரி வைத்தார்கள். அவர்களுடைய முன்மாதிரியை இன்று யெகோவாவின் சாட்சிகள் பின்பற்றுவதால், எல்லா இடங்களிலும் உள்ள நல்மனமுள்ள ஆட்களுக்கு அவர்களால் “வாழ்வு தரும் தண்ணீரை இலவசமாக” கொடுக்க முடிகிறது.—வெளி. 22:17.
சபையின் செலவுகளைக் கவனித்துக்கொள்வது
5 சபையின் செலவுகளுக்கும் நன்கொடைப் பணம் பயன்படுத்தப்படுகிறது. சபையில் பணம் வசூலிக்கப்படுவது கிடையாது. ஒவ்வொருவரும் எவ்வளவு கொடுக்க வேண்டுமென்று சொல்லப்படுவது இல்லை; யாரும் பணம் கொடுக்கும்படி வற்புறுத்தப்படுவதும் இல்லை. ஆனால், ஒவ்வொருவரும் ‘தன் இதயத்தில் தீர்மானித்தபடியே கொடுப்பதற்காக’ கூட்டங்கள் நடக்கும் இடங்களில் நன்கொடைப் பெட்டிகள் வைக்கப்படுகின்றன.—2 கொ. 9:7.
6 நன்கொடைகள் முக்கியமாக ராஜ்ய மன்றத்தைப் பயன்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் ஆகும் செலவுகளுக்காக உபயோகிக்கப்படுகின்றன. உலகளாவிய வேலையை ஆதரிப்பதற்காக ஒரு தொகையை கிளை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க மூப்பர் குழு முடிவு செய்யலாம். ஆனால், அதைப் பற்றி சபையில் வாக்கெடுப்பு முறையில் தீர்மானம் எடுக்கப்படும். இப்படி, உலகளாவிய வேலைக்காக நிறைய சபைகள் தவறாமல் நன்கொடைகள் கொடுக்கின்றன. சபைக்கு அவ்வப்போது வரும் செலவுகளைப் பற்றி எல்லாரும் யோசித்துப் பார்த்தால், நன்கொடைகள் தேவைப்படுவதைப் பற்றி அடிக்கடி அறிவிப்பு செய்ய வேண்டியிருக்காது.
நன்கொடைகளைப் பயன்படுத்துவது
7 ஒவ்வொரு கூட்டம் முடிந்த பிறகும் இரண்டு சகோதரர்கள் நன்கொடைப் பெட்டிகளிலிருந்து பணத்தை எடுத்து, கணக்கை எழுதி வைப்பார்கள். (2 ரா. 12:9, 10; 2 கொ. 8:20) கிளை அலுவலகத்திடம் அனுப்பும்வரை அல்லது சபைக்காகப் பயன்படுத்தும்வரை அந்தப் பணத்தைப் பாதுகாப்பதற்கு மூப்பர் குழு ஏற்பாடுகள் செய்யும். சபைக் கணக்குகளைக் கவனிக்கும் சகோதரர், செலவுகளைப் பற்றி சபைக்கு தெரியப்படுத்துவதற்காக ஒவ்வொரு மாதமும் ஒரு அறிக்கையைத் தயார் செய்வார். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கணக்குகளைத் தணிக்கை (audit) செய்வதற்கு மூப்பர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஏற்பாடு செய்வார்.
வட்டாரச் செலவுகள்
8 வட்டார மாநாடுகளுக்கான செலவுகளுக்கும் மற்ற வட்டாரச் செலவுகளுக்கும், அந்தந்த வட்டாரத்திலுள்ள யெகோவாவின் சாட்சிகள் தரும் நன்கொடைகள் பயன்படுத்தப்படுகின்றன. வட்டாரத்துக்காக எல்லாரும் நன்கொடைகள் கொடுப்பதற்கு வசதியாக மாநாட்டு மன்றங்களில் நன்கொடைப் பெட்டிகள் வைக்கப்படுகின்றன. அதோடு, தொடர்ந்து ஏற்படும் செலவுகளைக் கவனித்துக்கொள்ள, சபைகள் மற்ற சமயங்களில் நன்கொடைகள் தரலாம்.
9 பொதுவாக, வட்டார மாநாடுகளுக்கான செலவுகளை வட்டாரங்களே கவனித்துக்கொள்ள வேண்டும். மிச்ச பணத்தை உலகளாவிய வேலைக்கு நன்கொடையாகக் கொடுத்துவிட வேண்டும். நடந்துகொண்டிருக்கும் மாநாட்டு செலவுகளுக்கும் அடுத்த மாநாட்டின் ஆரம்ப செலவுகளுக்கும் (உதாரணமாக, மாநாட்டு மன்றத்துக்கு முன்பணம் செலுத்துவதற்கும்), வட்டாரக் கணக்கில் போதிய பணம் இல்லாவிட்டால், நன்கொடை கொடுக்கும் பாக்கியத்தைப் பற்றி வட்டாரக் கண்காணி சபைகளுக்குத் தெரிவிக்கலாம். ஒவ்வொரு சபையின் மூப்பர் குழுவும் அதைப் பற்றிக் கலந்துபேசி, வட்டாரச் செலவுகளுக்கு சபையாக எவ்வளவு நன்கொடை தரலாம் என்று முடிவு செய்யும். அதன் பிறகு வாக்கெடுப்பு முறையில் தீர்மானம் எடுக்கப்படும்.
10 ஏதாவது ஒரு செலவைப் பற்றி வட்டாரத்திலுள்ள மூப்பர்கள் எல்லாரும் சந்தித்துப் பேச வேண்டியிருந்தால், வட்டார மாநாட்டின்போது அதற்கான கூட்டத்தை வைக்க வேண்டும். குறிப்பிட்ட சில வட்டாரச் செலவுகளைத் தவிர மற்ற எல்லா செலவுகளுக்கும் மூப்பர்கள் வாக்கெடுப்பு முறையில் தீர்மானம் எடுக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு முறை வட்டாரக் கணக்கிலிருந்து செலவு செய்யும்போதும், அந்தத் திட்டவட்டமான தொகையை எழுதி, அதற்கு ஒப்புதல் வாங்க வேண்டும்.
11 வட்டாரக் கணக்குகளை அவ்வப்போது தணிக்கை செய்ய ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
ஏழைகளைக் கவனித்துக்கொள்வது
12 இயேசுவும் அவருடைய சீஷர்களும் பணப்பெட்டியை வைத்திருந்ததற்கு ஒரு காரணம், ஏழைகளுக்கு உதவி செய்வதற்காகத்தான். (மாற். 14:3-5; யோவா. 13:29) “ஏழைகள் எப்போதும் உங்களோடு இருக்கிறார்கள்” என்று இயேசு சொன்னார். (மாற். 14:7) அதனால், அவர்களுக்கு உதவி செய்ய வேண்டிய பொறுப்பு இப்போதும் கிறிஸ்தவர்களுக்கு இருக்கிறது. யெகோவாவின் சாட்சிகள் எப்படி இந்தப் பொறுப்பைச் செய்கிறார்கள்?
13 சிலசமயங்களில், முதுமையினாலோ உடல் பலவீனத்தினாலோ கைமீறிப்போன சில பிரச்சினைகளினாலோ சபையில் இருக்கும் உண்மையுள்ள சில கிறிஸ்தவர்களுக்கு பொருள் உதவி தேவைப்படலாம். அதைப் பற்றித் தெரிந்த குடும்பத்தாரும், உறவினர்களும், மற்றவர்களும் அவர்களுக்கு உதவி செய்ய நினைக்கலாம். இது, அப்போஸ்தலன் யோவான் சொன்ன இந்த அறிவுரைக்கு இசைவாக இருக்கிறது: “இந்த உலகத்தில் பொருள் வசதிகள் உள்ளவன் தன்னுடைய சகோதரன் வறுமையில் வாடுவதைப் பார்த்தும், அவன்மேல் கரிசனை காட்ட மறுத்தால் கடவுள்மேல் அவனுக்கு அன்பு இருக்கிறதென்று எப்படிச் சொல்ல முடியும்? சின்னப் பிள்ளைகளே, உங்களுடைய சொல்லில் மட்டுமல்ல, செயலிலும் அன்பு காட்ட வேண்டும், அதை உண்மை மனதோடு காட்ட வேண்டும்.” (1 யோ. 3:17, 18; 2 தெ. 3:6-12) பொருள் உதவி தேவைப்படும் உண்மையுள்ள கிறிஸ்தவர்களுக்கு உதவி செய்வது உண்மை வணக்கத்தின் ஒரு பாகமாக இருக்கிறது.—யாக். 1:27; 2:14-17.
14 அப்போஸ்தலன் பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதிய முதல் கடிதத்தில், உதவி பெறத் தகுதியுள்ள கிறிஸ்தவர்களுக்கு மற்றவர்கள் எப்படி உதவலாம் என்று விளக்கினார். அதைப் பற்றி 1 தீமோத்தேயு 5:3-21-ல் நீங்கள் வாசித்துப் பார்க்கலாம். ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் தன் குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளைக் கவனித்துக்கொள்ளும் முக்கியப் பொறுப்பு இருக்கிறது. வயதானவர்களையும் உடம்பு முடியாதவர்களையும், அவர்களுடைய பிள்ளைகளோ பேரப்பிள்ளைகளோ மற்ற நெருங்கிய உறவினர்களோ கவனித்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை, அரசு நிதியுதவி திட்டங்கள் அல்லது சமூகநலத் திட்டங்கள் மூலம் பொருள் உதவியைப் பெற்றுக்கொள்ள குடும்பத்தாரோ மற்றவர்களோ அவர்களுக்கு உதவி செய்யலாம். சிலசமயங்களில், ரொம்பக் காலமாக உண்மையோடு சேவை செய்துவரும் சகோதரர்களுக்கோ சகோதரிகளுக்கோ உதவி தேவைப்படலாம். அவர்களுக்கு எப்படி உதவி செய்யலாம் என்பதைப் பற்றி சபையாகப் பேசித் தீர்மானம் எடுக்க வேண்டியிருக்கலாம். அவர்களுக்கு குடும்பத்தாரோ உறவினர்களோ இல்லாவிட்டால்... அரசு உதவியும் கிடைக்காவிட்டால்... வேறு உதவி கிடைக்க மூப்பர் குழு பொருத்தமான சிபாரிசுகளைச் செய்யலாம். கிறிஸ்தவர்கள் தங்களுடைய பொருள் உடைமைகளைத் தேவையில் இருப்பவர்களோடு பகிர்ந்துகொள்வதை ஒரு பாக்கியமாக நினைக்கிறார்கள்.
15 இந்தக் கொடிய காலத்தில் துன்புறுத்தல், போர், நிலநடுக்கம், வெள்ளம், பஞ்சம், அல்லது மற்ற பேரழிவுகள் காரணமாக நிறைய சகோதர சகோதரிகளுக்கு பொருள் உதவி தேவைப்படலாம். (மத். 24:7-9) உள்ளூர் சபைகளால் அவர்களுக்கு உதவ முடியாமல் இருக்கலாம்; இதுபோன்ற சூழ்நிலைகளில், மற்ற இடங்களிலுள்ள சகோதரர்கள் அவர்களுக்கு உதவ ஆளும் குழு ஏற்பாடு செய்கிறது. முதல் நூற்றாண்டில்கூட, பஞ்சம் ஏற்பட்டபோது யூதேயாவில் இருந்த சகோதரர்களுக்கு ஆசியா மைனரில் இருந்த கிறிஸ்தவர்கள் உணவு கொடுத்து உதவி செய்தார்கள். (1 கொ. 16:1-4; 2 கொ. 9:1-5) அவர்களுடைய உதாரணத்தைப் பின்பற்றுவதன் மூலம், நம் சகோதர சகோதரிகள்மீது அன்பு இருப்பதைக் காட்டுகிறோம். அதோடு, இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீஷர்களாக இருப்பதையும் காட்டுகிறோம்.—யோவா. 13:35.
பிரசுரங்களை வினியோகிப்பது
16 கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியைச் சொல்வதற்கு நாம் முக்கியமாக பைபிளையும் பைபிள் பிரசுரங்களையும் பயன்படுத்துகிறோம். பொதுவாக, சபையில் பிரசுரங்கள் சம்பந்தப்பட்ட வேலைகளைச் செய்வதற்கு மூப்பர் குழு ஒரு உதவி ஊழியரை நியமிக்கும். இந்தச் சகோதரர்கள் தங்களுடைய வேலைகளைக் கண்ணும்கருத்துமாகச் செய்கிறார்கள். போதுமான பிரசுரங்கள் கையிருப்பில் இருக்கும்படி பார்த்துக்கொள்வதற்காக இவர்கள் எல்லாவற்றையும் சரியாகப் பதிவுசெய்து வைக்கிறார்கள்.
17 நாம் நம்முடைய வாழ்க்கையைக் கடவுளுக்கு அர்ப்பணித்திருக்கிறோம். நம் நேரமும், அறிவுத்திறனும், உடல் பலமும், திறமைகளும், பொருள் உடைமைகளும், சொல்லப்போனால் நம் உயிரும்கூட கடவுள் தந்திருக்கும் பரிசுகள் என்பது நமக்குத் தெரியும். அவற்றை அவருடைய சேவைக்காகப் பயன்படுத்த வேண்டும் என்பதும் நமக்குத் தெரியும். (லூக். 17:10; 1 கொ. 4:7) இவற்றையெல்லாம் சரியாகப் பயன்படுத்துவதன் மூலம், யெகோவாமேல் எந்தளவு அன்பு வைத்திருக்கிறோம் என்பதைக் காட்டுகிறோம். நம்முடைய மதிப்புமிக்க பொருள்களைக் கொடுத்து யெகோவாவை மகிமைப்படுத்த விரும்புகிறோம். உள்ளப்பூர்வமான பக்தியோடு நாம் கொடுக்கும் எல்லா விதமான காணிக்கைகளையும் யெகோவா சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறார் என்பது நமக்குத் தெரியும். (நீதி. 3:9; மாற். 14:3-9; லூக். 21:1-4; கொலோ. 3:23, 24) “இலவசமாகப் பெற்றீர்கள், இலவசமாகக் கொடுங்கள்” என்று இயேசு சொன்னார். (மத். 10:8) நம்மையும் நம் வளங்களையும் யெகோவாவின் சேவைக்காகக் கொடுக்கும்போது, நமக்கு அதிக சந்தோஷம் கிடைக்கிறது.—அப். 20:35.