உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • od அதி. 9 பக். 88-105
  • நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதற்கான முறைகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதற்கான முறைகள்
  • யெகோவாவின் விருப்பத்தைச் செய்யும் அமைப்பு
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • வீட்டுக்கு வீடு ஊழியம்
  • தகுதியுள்ளவர்களைத் தேடிக் கண்டுபிடியுங்கள்
  • மறுசந்திப்புகள்
  • பைபிள் படிப்புகள்
  • ஆர்வம் காட்டுகிறவர்களை அமைப்பிடம் வழிநடத்துங்கள்
  • பைபிள் பிரசுரங்கள்
  • சந்தர்ப்ப சாட்சி
  • பிராந்தியம்
  • எல்லா மொழியினருக்கும் பிரசங்கிக்க ஒத்துழைப்பு கொடுப்பது
  • தொகுதியாக ஊழியம் செய்வது
  • பிற மொழி பேசுபவர்களுக்கு உதவுதல்
    நம் ராஜ்ய ஊழியம்—2009
  • ஊழியத்தில் பிற மொழி பேசுவோரை சந்திக்கையில்
    நம் ராஜ்ய ஊழியம்—2008
  • கேள்விப் பெட்டி
    நம் ராஜ்ய ஊழியம்—1990
  • பல மொழிகள் பேசப்படும் பிராந்தியத்தில் ஒன்றுசேர்ந்து உழைத்தல்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
மேலும் பார்க்க
யெகோவாவின் விருப்பத்தைச் செய்யும் அமைப்பு
od அதி. 9 பக். 88-105

அதிகாரம் 9

நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதற்கான முறைகள்

நல்ல செய்தியை அதிக ஆர்வத்தோடு பிரசங்கிப்பதில், இயேசு தன்னைப் பின்பற்றுகிறவர்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்கிறார். மக்கள் தன்னிடம் வர வேண்டுமென்று எதிர்பார்க்காமல், அவரே அவர்களுடைய வீடுகளுக்கும் மற்ற பொது இடங்களுக்கும் போய் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். (மத். 9:35; 13:36; லூக். 8:1) தனி நபர்களிடமும், தன் சீஷர்களிடமும், ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டத்திடமும்கூட அவர் கடவுளைப் பற்றிப் பேசினார். (மாற். 4:10-13; 6:35-44; யோவா. 3:2-21) தனக்குக் கிடைத்த எல்லா சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தி, உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தரும் விதத்தில் மக்களிடம் பேசினார். (லூக். 4:16-19) பசியாகவும் களைப்பாகவும் இருந்த சமயங்களில்கூட, சாட்சி கொடுக்காமல் அவர் இருந்துவிடவில்லை. (மாற். 6:30-34; யோவா. 4:4-34) இயேசுவின் ஊழியத்தைப் பற்றி பைபிளில் சொல்லப்பட்டிருக்கிற பதிவுகளைப் படிக்கும்போது, அவரைப் பின்பற்ற வேண்டும் என்ற ஆசை நமக்கு வருகிறது, இல்லையா? கண்டிப்பாக! இயேசுவின் அப்போஸ்தலர்களைப் போல, நாமும் அவரைப் பின்பற்ற ஆசைப்படுகிறோம்.—மத். 4:19, 20; லூக். 5:27, 28; யோவா. 1:43-45.

2 கிட்டத்தட்ட 2,000 வருஷங்களுக்கு முன்னால் இயேசு கிறிஸ்து ஆரம்பித்து வைத்த வேலையைச் செய்ய இன்று நமக்கு என்னென்ன வழிகள் இருக்கின்றன என்பதை இப்போது பார்க்கலாம்.

வீட்டுக்கு வீடு ஊழியம்

3 கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியை வீடு வீடாகச் சொல்வது எவ்வளவு முக்கியம் என்பதை யெகோவாவின் சாட்சிகளாகிய நாம் புரிந்து வைத்திருக்கிறோம். நல்ல செய்தியைச் சொல்ல இந்த முறையை நாம் அதிகமாகப் பயன்படுத்தியிருப்பதால், இது நம்முடைய அடையாளமாகவே ஆகிவிட்டது. இந்த வேலையால் கிடைத்திருக்கும் அருமையான பலன்களைப் பார்க்கும்போது, லட்சக்கணக்கான மக்களைக் குறுகிய காலப்பகுதியில் சந்திப்பதற்கு இதுதான் சிறந்த முறை என்பது தெளிவாகத் தெரிகிறது. (மத். 11:19; 24:14) யெகோவாமீதும் மற்றவர்கள்மீதும் நாம் அன்பு வைத்திருப்பதைச் செயலில் காட்ட வீட்டுக்கு வீடு ஊழியம் ஒரு நல்ல வழி என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை!—மத். 22:34-40.

4 வீட்டுக்கு வீடு ஊழியம், யெகோவாவின் சாட்சிகள் நவீன காலத்தில் கண்டுபிடித்த புது வழி கிடையாது. அப்போஸ்தலன் பவுல்கூட, தான் மக்களுடைய வீடுகளுக்குப் போய்க் கற்பித்ததாகச் சொல்லியிருக்கிறார். அவருடைய ஊழியத்தைப் பற்றி எபேசுவிலிருந்த கண்காணிகளிடம் சொன்னபோது, “நான் ஆசிய மாகாணத்துக்கு வந்து உங்களோடிருந்த நாள்முதல் . . . நன்மையான எல்லாவற்றையும் உங்களுக்குச் சொன்னேன். . . . வீடு வீடாகவும் உங்களுக்குக் கற்பித்தேன்” என்று குறிப்பிட்டார். இப்படி வீடு வீடாகவும் மற்ற வழிகளிலும், “கடவுளிடம் மனம் திருந்தி வருவதைப் பற்றியும், நம்முடைய எஜமானாகிய இயேசுமேல் விசுவாசம் வைப்பதைப் பற்றியும் யூதர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் முழுமையாகச் சாட்சி” கொடுத்தார். (அப். 20:18, 20, 21) அந்தக் காலத்தில் இருந்த ரோமப் பேரரசர்கள், சிலைகளை வணங்கும்படி மக்களைத் தூண்டினார்கள். மக்களில் நிறைய பேரும் அந்த ‘தெய்வங்கள்மேல் பயபக்தியாக’ இருந்தார்கள். அவற்றை விட்டுவிட்டு, ‘உலகத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் படைத்த கடவுளை,’ அதாவது ‘மனம் திருந்தும்படி எல்லா இடங்களிலும் உள்ள மக்களுக்குச் சொன்ன கடவுளை,’ அவர்கள் தேட வேண்டிய அவசரத் தேவை இருந்தது.—அப். 17:22-31.

5 இன்று, மக்களுக்கு நல்ல செய்தியைச் சொல்ல வேண்டியது அதைவிட அவசரமாக இருக்கிறது. ஏனென்றால், இந்தப் பொல்லாத உலகத்துக்கு முடிவு மிகவும் நெருங்கிவிட்டது. அதனால், ஊழியம் செய்ய நாம் இன்னும் அதிக முயற்சி எடுக்க வேண்டியிருக்கிறது. சத்தியத்துக்காக ஏங்குகிற மக்களைக் கண்டுபிடிக்க வீட்டுக்கு வீடு ஊழியம்தான் எப்போதுமே சிறந்த வழியாக இருந்திருக்கிறது. இயேசு மற்றும் அப்போஸ்தலர்களின் காலத்தைப் போலவே, இன்றும் இந்த ஊழியம் அதிக பலனைத் தருகிறது.—மாற். 13:10.

6 நீங்கள் வீட்டுக்கு வீடு ஊழியத்தை முழுமையாகச் செய்கிறீர்களா? அப்படியென்றால், யெகோவா உங்களைப் பார்த்து நிச்சயம் சந்தோஷப்படுவார். (எசே. 9:11; அப். 20:35) ஆனால், வீட்டுக்கு வீடு ஊழியம் செய்வது உங்களுக்கு அவ்வளவு சுலபமாக இல்லாமல் இருக்கலாம். உங்கள் உடல்நிலை அதற்கு ஒத்துழைக்காமல் இருக்கலாம். அல்லது, நீங்கள் ஊழியம் செய்கிற பகுதியில் வாழ்கிற நிறைய பேர் நீங்கள் சொல்வதைக் கேட்காமல் இருக்கலாம். அரசாங்கம் இந்த வேலையைத் தடை செய்திருக்கலாம். ஒருவேளை, உங்களுக்குக் கூச்ச சுபாவம் இருந்தால், முன்பின் தெரியாத ஆட்களிடம் பேசுவது கஷ்டமாகத் தெரியலாம். அதனால், வீட்டுக்கு வீடு ஊழியம் செய்யும்போதெல்லாம் உங்களுக்குப் படபடப்பாக இருக்கலாம். அப்படியென்றால், சோர்ந்துவிடாதீர்கள்! (யாத். 4:10-12) உங்களுக்கு இருக்கிற அதே பிரச்சினை மற்ற இடங்களில் இருக்கிற நிறைய சகோதர சகோதரிகளுக்கும் இருக்கிறது.

7 “இதோ! இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டம்வரை எல்லா நாட்களிலும் நான் உங்கள் கூடவே இருக்கிறேன்” என்று இயேசு தன் சீஷர்களுக்கு வாக்குக் கொடுத்தார். (மத். 28:20) அதுதான் சீஷராக்கும் வேலையைச் செய்ய நமக்குப் பலத்தைக் கொடுக்கிறது. “என்னைப் பலப்படுத்துகிறவர் மூலம் எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பலம் இருக்கிறது” என்று சொன்ன அப்போஸ்தலன் பவுலைப் போலத்தான் நாமும் உணருகிறோம். (பிலி. 4:13) வீடு வீடாக சாட்சி கொடுப்பதற்கு சபை செய்கிற ஏற்பாடுகளை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். மற்றவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்யும்போது உங்களுக்கு உதவியும் உற்சாகமும் கிடைக்கும். உங்களுக்கு என்ன தடைகள் இருந்தாலும் சரி, அவற்றையெல்லாம் தாண்டுவதற்கு யெகோவாவிடம் உதவி கேளுங்கள். (1 யோ. 5:14) நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதற்குத் தீவிரமாக முயற்சி செய்யுங்கள்.

8 மற்றவர்களிடம் நல்ல செய்தியைப் பிரசங்கிக்கும்போது, “உங்கள் நம்பிக்கையைப் பற்றி” கேள்வி கேட்கிறவர்களிடம் பதில் சொல்ல நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். (1 பே. 3:15) கடவுளுடைய அரசாங்கத்தின்மேல் நம்பிக்கை உள்ளவர்களுக்கும், அதன்மேல் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் இடையில் இருக்கிற வித்தியாசத்தை உங்களால் இன்னும் தெளிவாகப் பார்க்க முடியும். (ஏசா. 65:13, 14) “உங்கள் ஒளியை . . . பிரகாசிக்கச் செய்யுங்கள்” என்று இயேசு கொடுத்த கட்டளைக்குக் கீழ்ப்படிகிறீர்கள் என்ற திருப்தி உங்களுக்குக் கிடைக்கும். யெகோவாவைப் பற்றியும் முடிவில்லாத வாழ்வுக்கு வழிநடத்துகிற சத்தியத்தைப் பற்றியும் தெரிந்துகொள்ள மற்றவர்களுக்கு உதவுகிற பாக்கியமும் உங்களுக்குக் கிடைக்கும்.—மத். 5:16; யோவா. 17:3; 1 தீ. 4:16.

9 வார நாட்களிலும், சனி-ஞாயிறுகளிலும் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. சில இடங்களில், காலை நேரத்தில் நிறைய பேர் வீட்டில் இருக்க மாட்டார்கள். அதனால், சில சபைகள் மாலை நேர ஊழியத்துக்கு ஏற்பாடு செய்கின்றன. காலையில் போவதைவிட, பிற்பகலிலோ, மாலையிலோ போகும்போது, மக்கள் நன்றாகக் கேட்க வாய்ப்பிருக்கிறது.

தகுதியுள்ளவர்களைத் தேடிக் கண்டுபிடியுங்கள்

10 தகுதியுள்ளவர்களை ‘தேடிக் கண்டுபிடிக்கும்படி’ இயேசு தன் சீஷர்களிடம் சொன்னார். (மத். 10:11) அப்படிப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க அவர் வீட்டுக்கு வீடு ஊழியத்தை மட்டுமே செய்யவில்லை. வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் சந்தர்ப்ப சாட்சியும் கொடுத்தார். (லூக். 8:1; யோவா. 4:7-15) அதேபோல், அப்போஸ்தலர்களும் வெவ்வேறு இடங்களில் சாட்சி கொடுத்தார்கள்.—அப். 17:17; 28:16, 23, 30, 31.

முடிந்தவரை எல்லாருக்கும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்பதுதான் நம்முடைய குறிக்கோள்

11 இன்றும், முடிந்தவரை எல்லாருக்கும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்பதுதான் நம்முடைய குறிக்கோள். அதனால், சீஷராக்கும் வேலையை இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் எந்த விதங்களில் செய்தார்களோ அந்த விதங்களில் நாமும் செய்ய வேண்டும். அதோடு, காலமும் மக்களுடைய சூழ்நிலைகளும் மாறிவருவதால் அதற்கு ஏற்றபடி நாம் ஊழியம் செய்ய வேண்டும். (1 கொ. 7:31) உதாரணத்துக்கு, பிரஸ்தாபிகள் நிறைய பேர் வியாபார இடங்களிலும் மக்களைச் சந்தித்து சாட்சி கொடுத்திருக்கிறார்கள். நிறைய நாடுகளில், தெரு ஊழியம் செய்வது நல்ல பலன்களைத் தந்திருக்கிறது; பூங்காக்களிலும், வாகனம் நிறுத்தும் இடங்களிலும், மற்ற இடங்களிலும் சாட்சி கொடுப்பதுகூட நல்ல பலன்களைத் தந்திருக்கிறது. சில சபைகள், தங்களுடைய பகுதிகளில் பிரசுரங்களை மேஜையிலோ வீல் ஸ்டாண்டிலோ வைத்து ஊழியம் செய்ய ஏற்பாடு செய்கின்றன. பெரிய நகரங்களில், மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில், விசேஷப் பொது ஊழியம் செய்வதற்கு கிளை அலுவலகம் ஏற்பாடு செய்யலாம். வெவ்வேறு சபைகளைச் சேர்ந்தவர்கள் இதற்கு அழைக்கப்படலாம். இந்த ஊழியத்தின் மூலமாக, வீட்டில் பார்க்க முடியாத ஆட்களிடம்கூட நல்ல செய்தியைச் சொல்ல முடிகிறது.

12 பைபிள் செய்தியில் ஆர்வம் காட்டும் மக்களைப் பொது இடங்களில் நாம் சந்திக்கும்போது, பொருத்தமான ஒரு பிரசுரத்தைக் கொடுக்கலாம். அவர்களுடைய ஆர்வத்தை வளர்ப்பதற்கு, உங்களைத் தொடர்புகொள்ளத் தேவையான தகவலைக் கொடுத்துவிட்டு மறுசந்திப்புக்கு ஏற்பாடு செய்யலாம், நம்முடைய வெப்சைட்டைக் காட்டலாம், அல்லது பக்கத்திலுள்ள சபையின் விலாசத்தைக் கொடுக்கலாம். பொது இடங்களில் சாட்சி கொடுப்பது, ஊழியத்தை விரிவாக்குவதற்கு ஒரு அருமையான வழி என்பதை உங்களால் ருசித்துப் பார்க்க முடியும்.

13 ஆனால், நல்ல செய்தியை அறிவிப்பது மட்டுமே நமக்குக் கொடுக்கப்பட்ட வேலை கிடையாது. முடிவில்லாத வாழ்வுக்கு வழிநடத்துகிற சத்தியத்தை ஏற்றுக்கொள்ள மற்றவர்களுக்கு உதவ வேண்டுமென்றால், ஆர்வம் காட்டுகிறவர்களைத் திரும்பத் திரும்பப் போய்ப் பார்ப்பதும் முக்கியம். அப்போதுதான், அவர்களால் முன்னேற்றம் செய்யவும், முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களாக ஆகவும் முடியும்.

மறுசந்திப்புகள்

14 “நீங்கள் . . . பூமியின் எல்லைகள் வரையிலும் எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள்” என்று இயேசு தன்னைப் பின்பற்றியவர்களிடம் சொன்னார். (அப். 1:8) அதோடு, “நீங்கள் புறப்பட்டுப் போய், எல்லா தேசத்தாரையும் சீஷர்களாக்கி, . . . நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்” என்றும் சொன்னார். (மத். 28:19, 20) மறுசந்திப்பு செய்வது சந்தோஷமாக யெகோவாவுக்குச் சேவை செய்வதற்கு ஒரு வழி. நல்ல செய்தியை ஆர்வமாகக் கேட்பவர்களை நீங்கள் மறுபடியும் போய்ப் பார்த்தால் அவர்கள் சந்தோஷப்படுவார்கள். கூடுதலான பைபிள் விஷயங்களை அவர்களிடம் சொல்லும்போது, கடவுள்மேல் அவர்களுக்கு இருக்கிற விசுவாசத்தைப் பலப்படுத்த முடியும்; ஆன்மீகத் தேவையை உணர்ந்துகொள்ள அவர்களுக்கு உதவி செய்யவும் முடியும். (மத். 5:3, அடிக்குறிப்பு) நீங்கள் நன்றாகத் தயாரித்துவிட்டு, அவர்களுக்கு வசதியான நேரத்தில் மறுசந்திப்பு செய்தால், அது ஒரு பைபிள் படிப்பாக ஆவதற்கு வாய்ப்பிருக்கிறது. நாம் மறுசந்திப்பு செய்வதற்கான காரணமே அதுதான். நாம் சத்திய விதைகளை விதைப்பதோடு, அவற்றுக்குத் தண்ணீரும் ஊற்றுகிறோம்.—1 கொ. 3:6.

15 மறுசந்திப்பு செய்வது சிலருக்குக் கஷ்டமாக இருக்கலாம். நீங்கள் ஒருவேளை நல்ல செய்தியைச் சுருக்கமாகச் சொல்வதில் திறமைசாலியாக ஆகியிருக்கலாம். அதனால், முதல் சந்திப்பு செய்வது உங்களுக்கு ரொம்பப் பிடித்திருக்கலாம். ஆனால், மறுபடியும் போய் அந்த நபரிடம் பைபிளைப் பற்றிக் கலந்துபேசுவது ரொம்பக் கஷ்டம் என்று நீங்கள் நினைக்கலாம். நன்கு தயாரித்தால் நம்பிக்கையோடு பேச முடியும். வாரநாள் கூட்டத்தில் சொல்லப்படும் நடைமுறையான ஆலோசனைகளைக் கடைப்பிடியுங்கள். அனுபவமுள்ள ஒரு பிரஸ்தாபியைக் கூட்டிக்கொண்டு போவதும் உதவியாக இருக்கும்.

பைபிள் படிப்புகள்

16 யூத மதத்துக்கு மாறிய ஒரு அதிகாரி, கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதை நற்செய்தியாளரான பிலிப்பு பார்த்தார். அப்போது அவரிடம், “நீங்கள் வாசிப்பது உங்களுக்குப் புரிகிறதா?” என்று பிலிப்பு கேட்டார். அதற்கு அந்த அதிகாரி, “ஒருவர் கற்றுக்கொடுக்காவிட்டால் எனக்கு எப்படிப் புரியும்?” என்று கேட்டார். பிலிப்பு அந்த அதிகாரி வாசித்துக்கொண்டிருந்த வேதவசனங்களிலிருந்து ஆரம்பித்து, “இயேசுவைப் பற்றிய நல்ல செய்தியை அவருக்கு அறிவித்தார்” என்று அப்போஸ்தலர் 8-வது அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. (அப். 8:26-36) பிலிப்பு அவரிடம் எவ்வளவு நேரம் பேசினார் என்று நமக்குத் தெரியாது. ஆனால், அந்த அதிகாரி சத்தியத்தை ஏற்றுக்கொண்டு, ஞானஸ்நானம் எடுக்க விரும்புவதாகச் சொல்லும் அளவுக்கு நல்ல செய்தியை பிலிப்பு அவருக்கு விளக்கினார். அவர் இயேசு கிறிஸ்துவின் சீஷராக ஆனார்.

17 இன்று, நிறைய பேருக்கு பைபிளைப் பற்றி தெரியாது. அதனால், நாம் பல தடவை மறுசந்திப்பு செய்ய வேண்டியிருக்கும். பல வாரங்களுக்கோ மாதங்களுக்கோ ஒரு வருஷத்துக்கோ, அதற்கும் அதிகமான காலத்துக்கோகூட அவர்களுக்கு பைபிள் படிப்பு நடத்த வேண்டியிருக்கும். அதற்குப் பிறகுதான் கடவுள்மீது விசுவாசத்தை வளர்த்துக்கொண்டு ஞானஸ்நானம் எடுப்பதற்கு அவர்களால் தகுதி பெற முடியும். ஆனால், நல்மனமுள்ள ஆட்கள் சீஷர்களாக ஆவதற்கு நாம் பொறுமையோடும் அன்போடும் உதவும்போது நமக்குச் சந்தோஷம் கிடைக்கும். இயேசு சொன்னபடியே, “வாங்குவதைவிட கொடுப்பதில்தான் அதிக சந்தோஷம் இருக்கிறது.”—அப். 20:35.

18 பைபிள் படிப்பு நடத்துவதற்காகவே தயாரிக்கப்பட்ட பிரசுரங்களில் ஒன்றைப் பயன்படுத்திதான் நாம் படிப்பு நடத்துவோம். வாரநாள் கூட்டத்தில் நடக்கும் அறிவுரைகளைப் பின்பற்றும்போதும் சபையில் இருக்கும் அனுபவமுள்ளவர்களோடு ஊழியம் செய்யும்போதும், பலன்தரும் படிப்புகளை நம்மால் நடத்த முடியும். இப்படி, இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாவதற்கு மற்றவர்களுக்கு உதவ முடியும்.

19 பைபிள் படிப்பை ஆரம்பிப்பதற்கோ நடத்துவதற்கோ உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், கண்காணிகளில் ஒருவரிடமோ பைபிள் படிப்பு எடுப்பதில் திறமைசாலியாக இருக்கும் ஒருவரிடமோ தயங்காமல் கேளுங்கள். வாழ்க்கையும் ஊழியமும் பயிற்சி புத்தகத்தில் கொடுக்கப்படும் ஆலோசனைகளும் அவற்றைப் பயன்படுத்தி கூட்டத்தில் செய்யப்படும் நடிப்புகளும் உங்களுக்குக் கைகொடுக்கும். பைபிள் படிப்பு நடத்த யெகோவாவிடம் உதவி கேளுங்கள், அவரையே சார்ந்திருங்கள். (1 யோ. 3:22) அதனால், உங்கள் குடும்பத்தில் இருக்கும் ஒருவருக்கு பைபிள் படிப்பு நடத்துவதோடு நிறுத்திக்கொள்ளாமல், வேறு யாருக்காவது பைபிள் படிப்பை ஆரம்பிக்கவும் முயற்சி செய்யுங்கள். பைபிள் படிப்புகளை நடத்தினால் உங்களால் இன்னும் சந்தோஷமாக ஊழியம் செய்ய முடியும்.

ஆர்வம் காட்டுகிறவர்களை அமைப்பிடம் வழிநடத்துங்கள்

20 யெகோவா தேவனைப் பற்றித் தெரிந்துகொண்டு இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாவதற்கு நாம் மற்றவர்களுக்கு உதவும்போது அவர்கள் சபையின் பாகமாக ஆகிறார்கள். பைபிள் மாணவர்கள் யெகோவாவுடைய அமைப்பைப் பற்றித் தெரிந்துகொண்டு அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கும்போது ஆன்மீக முன்னேற்றம் செய்து, முதிர்ச்சி அடைவார்கள். அமைப்புக்கு எப்படி ஒத்துழைப்பு கொடுப்பது என்று நாம் அவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பது முக்கியம். இதற்காகவே சில வீடியோக்களும், இன்று யெகோவா விரும்புவதை செய்பவர்கள் யார்? என்ற சிற்றேடும் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் புத்தகத்தின் 4-வது அதிகாரத்தில் இருக்கும் சில தகவல்களும் இதற்கு உதவும்.

21 இன்று பூமி முழுவதும் பிரசங்க வேலையைச் செய்து முடிப்பதற்கு யெகோவா ஒரு அமைப்பைப் பயன்படுத்தி வருகிறார் என்பதை ஆரம்பத்திலிருந்தே உங்கள் பைபிள் மாணவருக்குச் சொல்லிக்கொடுங்கள். பைபிள் படிப்புக்கு உதவும் பிரசுரங்களின் மதிப்பைப் பற்றி அவருக்குச் சொல்லுங்கள். யெகோவாவுக்குத் தங்களையே அர்ப்பணித்த ஊழியர்களால் அவை எப்படித் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் வினியோகிக்கப்படுகின்றன என்பதையும் அவருக்கு விளக்கிச் சொல்லுங்கள். ராஜ்ய மன்றத்தில் நடக்கும் கூட்டங்களுக்கு உங்களோடு வரும்படி அவரை அழையுங்கள். கூட்டங்கள் எப்படி நடத்தப்படுகின்றன என்பதை விளக்குங்கள். சகோதர சகோதரிகளிடம் அவரை அறிமுகப்படுத்துங்கள். மாநாடுகளுக்கு வரும் மற்ற சாட்சிகளோடு நட்பாகப் பழகுவதற்கும் உதவி செய்யுங்கள். இதுபோன்ற சமயங்களிலும் மற்ற சமயங்களிலும், உண்மைக் கிறிஸ்தவர்களுக்கு அடையாளமாக இருக்கிற அன்பை நாம் எப்படிக் காட்டுகிறோம் என்பதை அவரே நேரில் பார்த்துத் தெரிந்துகொள்ளட்டும். (யோவா. 13:35) யெகோவாவுடைய அமைப்புமீது அவருக்கு இருக்கும் மதிப்பு அதிகமாகும்போது, அவர் யெகோவாவிடம் இன்னும் நெருங்கி வருவார்.

பைபிள் பிரசுரங்கள்

22 முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் கடவுளுடைய வார்த்தையைப் பற்றி மிகுந்த ஆர்வத்தோடு அறிவித்தார்கள். அவர்கள் தனிப்பட்ட விதமாகப் படிப்பதற்காகவும் சபையில் படிப்பதற்காகவும் வேதாகமத்தை நகல் எடுத்தார்கள். கடவுளுடைய சத்திய வார்த்தையைப் படிக்க மற்றவர்களையும் உற்சாகப்படுத்தினார்கள். கைப்பட எழுதப்பட்ட நகல்கள் மிகக் குறைவாக இருந்ததால், அவற்றை அவர்கள் விலைமதிப்புள்ளவையாக நினைத்தார்கள். (கொலோ. 4:16; 2 தீ. 2:15; 3:14-17; 4:13; 1 பே. 1:1) இன்று யெகோவாவின் சாட்சிகள் நவீன அச்சு முறைகளைப் பயன்படுத்தி கோடிக்கணக்கான பைபிள்களையும் பைபிள் பிரசுரங்களையும் வெளியிடுகிறார்கள். உதாரணத்துக்கு, துண்டுப்பிரதிகளையும், புத்தகங்களையும், பத்திரிகைகளையும் நூற்றுக்கணக்கான மொழிகளில் வெளியிடுகிறார்கள்.

23 மற்றவர்களிடம் நல்ல செய்தியைச் சொல்வதற்கு, யெகோவாவின் அமைப்பு தருகிற பைபிள் பிரசுரங்களைப் பயன்படுத்துங்கள். யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்களைப் படித்ததால் நீங்கள் எந்தளவு நன்மை அடைந்திருக்கிறீர்கள் என்பதை யோசித்துப் பார்க்கும்போது அவற்றை மற்றவர்களுக்குக் கொடுக்கத் தூண்டப்படுவீர்கள்.—எபி. 13:15, 16.

24 தகவல்களைத் தெரிந்துகொள்ள மக்கள் இன்று இன்டர்நெட்டை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். அதனால், நல்ல செய்தி எல்லா இடங்களிலும் எட்டுவதற்கு பைபிள் பிரசுரங்கள் மட்டுமல்ல, jw.org என்ற நம்முடைய அதிகாரப்பூர்வ வெப்சைட்டும் மிகச் சிறந்த கருவியாக இருக்கிறது. உலகத்தின் எல்லா பகுதிகளிலும் வாழ்கிற மக்களால் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி, நூற்றுக்கணக்கான மொழிகளில் பைபிளையும் பைபிள் பிரசுரங்களையும் வாசிக்கவோ அவற்றின் ஆடியோ பதிவுகளைக் கேட்கவோ முடியும். நம்மிடம் பேசத் தயங்குகிறவர்கள் அல்லது ஊழியம் அதிகமாகச் செய்யப்படாத இடங்களில் வாழ்கிறவர்கள் தங்களுடைய வீடுகளில் இருந்தே jw.org வெப்சைட் மூலம் நம்முடைய நம்பிக்கைகளைப் பற்றி ஆராய்ந்து பார்க்க முடிகிறது.

25 அதனால், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் jw.org வெப்சைட்டை எல்லாருக்கும் நாம் அறிமுகப்படுத்துகிறோம். ஊழியத்தில் யாராவது நம்முடைய நம்பிக்கைகளைப் பற்றிக் கேள்வி கேட்டால், அதற்கான பதிலை நம்முடைய மொபைல் ஃபோனிலிருந்து அல்லது டேப்லெட்டிலிருந்து உடனடியாக அவருக்குக் காட்ட முடியும். சைகை மொழியையோ வேறொரு மொழியையோ பேசுகிற ஒருவரை நாம் சந்தித்தால், அவருடைய மொழியில் இருக்கும் பைபிளையும் பைபிள் பிரசுரங்களையும் நம்முடைய வெப்சைட்டிலிருந்து காட்ட முடியும். பிரஸ்தாபிகள் நிறைய பேர் பைபிள் விஷயங்களைப் பற்றி பேச ஆரம்பிப்பதற்கு நம் வெப்சைட்டில் இருக்கும் வீடியோக்களில் ஒன்றைப் பயன்படுத்துகிறார்கள்.

சந்தர்ப்ப சாட்சி

26 தான் பேசியதைக் கவனித்துக் கேட்டுக்கொண்டிருந்த சீஷர்களிடம் இயேசு இப்படிச் சொன்னார்: “நீங்கள் உலகத்துக்கு ஒளியாக இருக்கிறீர்கள். . . . உங்கள் ஒளியை மனுஷர்களுக்கு முன்னால் பிரகாசிக்கச் செய்யுங்கள்; அப்போது, அவர்கள் உங்களுடைய நல்ல செயல்களைப் பார்த்து, பரலோகத்தில் இருக்கிற உங்கள் தகப்பனை மகிமைப்படுத்துவார்கள்.” (மத். 5:14-16) அவரைப் பின்பற்றுவதன் மூலம் சீஷர்கள் யெகோவாவின் வழியில் நடந்தார்கள். இயேசு தன்னைப் பற்றிச் சொல்லும்போது, “நான் இந்த உலகத்துக்கு ஒளியாக இருக்கிறேன்” என்று சொன்னார். தன் வார்த்தைகளைக் கேட்கிற எல்லாருக்காகவும் “வாழ்வு தரும் ஒளியை” அவர் பிரகாசிக்கச் செய்தார். இந்த விதத்தில், கிறிஸ்தவர்களுக்கு ஒரு நல்ல முன்மாதிரி வைத்தார்.—யோவா. 8:12.

27 அப்போஸ்தலன் பவுலும் நமக்கு ஒரு நல்ல முன்மாதிரி. (1 கொ. 4:16; 11:1) அத்தேனே நகரத்தில் தினமும் சந்தையில் சந்தித்த ஆட்களிடம் அவர் சாட்சி கொடுத்தார். (அப். 17:17) பிலிப்பியில் இருந்த கிறிஸ்தவர்கள் அவரைப் பின்பற்றினார்கள். அதனால்தான் பவுல் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், “சீர்கெட்டு நெறிகெட்டுப்போன தலைமுறையின் நடுவே” அவர்கள் “இந்த உலகத்தில் விளக்குகளாக ஒளிவீசிக்கொண்டு” இருப்பதாகச் சொன்னார். (பிலி. 2:15) இன்று நாமும், நல்ல செய்தியை மற்றவர்களுக்குச் சொல்ல வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் விளக்குகளாக ஒளிவீசலாம்; அதாவது, நம் சொல்லாலும் செயலாலும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய சத்தியத்தைப் பிரகாசிக்கச் செய்யலாம். நாம் நேர்மையாகவும் நியாயமாகவும் நடப்பதைப் பார்த்தே, நாம் வித்தியாசமானவர்கள் என்பதை மற்றவர்கள் தெரிந்துகொள்வார்கள் என்பது உண்மைதான். ஆனாலும், நல்ல செய்தியை மற்றவர்களுக்கு சொல்லும்போதுதான், நாம் ஏன் வித்தியாசமாக இருக்கிறோம் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள்.

28 யெகோவாவின் மக்களில் நிறைய பேர், வேலை செய்யும் இடத்திலும், பள்ளியிலும், பொது வாகனங்களில் போகும்போதும், அன்றாட வேலைகளைச் செய்யும்போதும் மற்றவர்களுக்கு நல்ல செய்தியைச் சொல்கிறார்கள். நாம் சந்திக்கிற ஆட்களிடம் சாதாரணமாகப் பேச்சு கொடுக்க ஆரம்பித்தாலும், எப்படியாவது அவர்களுக்குச் சாட்சி கொடுப்பதில் குறியாக இருக்க வேண்டும். பொருத்தமான எல்லா சந்தர்ப்பத்திலும் மற்றவர்களிடம் பேசுவதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.

29 நாம் செய்யும் சேவை நம் படைப்பாளருக்குப் புகழ் சேர்க்கிறது... அவருடைய பெயருக்கு மகிமை சேர்க்கிறது... என்பதை மனதில் வைத்தால், சாட்சி கொடுப்பதற்கான வாய்ப்புகளை நழுவவிட மாட்டோம். அதுமட்டுமல்ல, யெகோவாவுக்குச் சேவை செய்யவும், இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைப்பதன் மூலம் அருமையான வாழ்க்கையைப் பெற்றுக்கொள்ளவும் நல்மனமுள்ள ஆட்களுக்கு உதவி செய்வோம். நாம் எடுக்கும் முயற்சியைப் பார்த்து யெகோவா சந்தோஷப்படுவார், அதைப் பரிசுத்த சேவையாகவும் ஏற்றுக்கொள்வார்.—எபி. 12:28; வெளி. 7:9, 10.

பிராந்தியம்

30 நகரங்கள், கிராமங்கள் என உலகம் முழுவதும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைச் சொல்ல வேண்டும் என்பதுதான் யெகோவாவின் விருப்பம். அதனால், சபைகளுக்கும் சரி, ஒதுக்குப்புறமான இடங்களில் சேவை செய்கிற தனிநபர்களுக்கும் சரி, பிராந்தியங்களைக் கிளை அலுவலகம் நியமிக்கிறது. (1 கொ. 14:40) முதல் நூற்றாண்டிலும் இதேபோன்ற ஏற்பாட்டைத்தான் கடவுள் செய்திருந்தார். (2 கொ. 10:13; கலா. 2:9) இந்தக் கடைசி நாட்களில், கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகள் பிரமாண்டமான அளவில் நடந்துவருகின்றன. அதனால், அந்தந்த சபைக்கு ஒதுக்கப்பட்ட பிராந்தியங்களில் ஒழுங்கமைப்பட்ட விதத்தில் ஊழியம் செய்யும்போது நிறைய சாதிக்க முடியும்.

31 இந்த ஏற்பாட்டை ஊழியக் கண்காணி மேற்பார்வை செய்வார். பிராந்தியங்களைப் பிரித்துக் கொடுக்கும் வேலையை ஒரு உதவி ஊழியர் செய்யலாம். இரண்டு விதமான பிராந்தியங்கள் இருக்கின்றன; ஒன்று, தொகுதிகளுக்கான பிராந்தியம், இன்னொன்று தனிப்பட்டவர்களுக்கான பிராந்தியம். சபையின் பிராந்தியம் சின்னதாக இருந்தால், தொகுதிகளுக்கான பிராந்தியத்தில் பிரஸ்தாபிகள் ஊழியம் செய்வார்கள். ஆனால், சபையின் பிராந்தியம் பெரியதாக இருந்தால், தனிப்பட்டவர்களுக்கான பிராந்தியங்களைப் பிரஸ்தாபிகள் கேட்டு வாங்கி ஊழியம் செய்யலாம்.

32 தனிப்பட்டவர்களுக்கான பிராந்தியத்தைக் கேட்டு வாங்கும் பிரஸ்தாபி, வெளி ஊழியக் கூட்டம் ஏற்பாடு செய்யப்படாதபோது அல்லது தன் தொகுதிக்குப் போக முடியாதபோது அங்கே ஊழியம் செய்யலாம். சில பிரஸ்தாபிகள், தாங்கள் வேலை செய்யும் இடத்திற்குப் பக்கத்தில் ஒரு பிராந்தியத்தைக் கேட்டு வாங்கிக்கொண்டு, உணவு இடைவேளையிலோ வேலை முடிந்த பிறகோ அங்கே போய் ஊழியம் செய்கிறார்கள். சில குடும்பங்கள் தங்கள் வீட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு பிராந்தியத்தைக் கேட்டு வாங்கிக்கொண்டு சாயங்கால நேரங்களில் ஊழியம் செய்கிறார்கள். இதுபோல, தங்களுக்கு வசதியான இடங்களில் தனிப்பட்ட பிராந்தியங்களை பிரஸ்தாபிகள் வாங்கிக்கொண்டால் ஊழியத்தில் அதிக நேரம் செலவிட முடியும். தனிப்பட்டவர்களுக்குக் கொடுக்கப்படும் பிராந்தியங்களைத் தொகுதியாக ஊழியம் செய்வதற்கும் பயன்படுத்தலாம். உங்களுக்குத் தனிப்பட்ட பிராந்தியம் வேண்டுமென்றால் உங்கள் சபையில் பிராந்தியங்களைக் கவனித்துக்கொள்ளும் சகோதரரைக் கேளுங்கள்.

33 ஒரு தொகுதிக் கண்காணி தன் தொகுதிக்காக ஒரு பிராந்தியத்தைக் கேட்டு வாங்கியிருந்தாலும் சரி, ஒரு பிரஸ்தாபி தனக்காக ஒரு பிராந்தியத்தைக் கேட்டு வாங்கியிருந்தாலும் சரி, ஒவ்வொரு வீட்டிலும் யாராவது ஒருவரையாவது சந்திக்க அவர் போதுமான முயற்சி எடுக்க வேண்டும். பிராந்தியத்தை முழுமையாக முடிப்பதற்குச் செய்யப்படும் ஏற்பாடுகள், பொருத்தமான தகவல் பாதுகாப்புச் சட்டங்களுக்கு இசைவாக இருக்க வேண்டும். ஒரு பிராந்தியத்தைக் கேட்டு வாங்கும் தொகுதிக் கண்காணியோ பிரஸ்தாபியோ நான்கு மாதங்களுக்குள் அதை முடிக்க முயற்சி செய்ய வேண்டும். அதை முடித்தவுடன் பிராந்தியங்களைக் கவனித்துக்கொள்ளும் சகோதரரிடம் தெரிவிக்க வேண்டும். சூழ்நிலையைப் பொறுத்து, அந்தத் தொகுதிக் கண்காணியோ பிரஸ்தாபியோ அந்தப் பிராந்தியத்தை அவரிடம் திருப்பிக் கொடுத்துவிடலாம் அல்லது மறுபடியும் ஊழியம் செய்வதற்காக வைத்துக்கொள்ளலாம்.

34 இப்படி, சபையில் இருக்கும் எல்லாரும் ஒத்துழைக்கும்போது சபையின் பிராந்தியங்களை முழுவதுமாகச் செய்து முடிக்க முடியும். ஒரே பிராந்தியத்தை இரண்டு அல்லது அதற்கும் அதிகமான பிரஸ்தாபிகள் மறுபடியும் மறுபடியும் செய்து வீட்டுக்காரருக்கு எரிச்சல் உண்டாக்காமலும் இருக்க முடியும். இந்த விதத்தில், நம் சகோதரர்கள்மீதும் நம் பிராந்தியத்தில் இருக்கும் மக்கள்மீதும் கரிசனை காட்ட முடியும்.

எல்லா மொழியினருக்கும் பிரசங்கிக்க ஒத்துழைப்பு கொடுப்பது

35 யெகோவா தேவனையும், அவருடைய மகனையும், அவருடைய அரசாங்கத்தையும் பற்றி எல்லாரும் தெரிந்துகொள்ள வேண்டும். (வெளி. 14:6, 7) மீட்புப் பெறுவதற்காக யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்ளவும், கிறிஸ்தவ சுபாவத்தை அணிந்துகொள்ளவும் எல்லா மொழியினருக்கும் உதவ வேண்டுமென்று ஆசைப்படுகிறோம். (ரோ. 10:12, 13; கொலோ. 3:10, 11) பல மொழி பேசுபவர்கள் இருக்கும் இடத்தில் ஊழியம் செய்யும்போது என்னென்ன சவால்கள் வரலாம்? நாம் எப்படி அந்தச் சவால்களைச் சமாளித்து, மற்றவர்கள் தங்கள் மொழியிலேயே நல்ல செய்தியைக் கேட்பதற்கு உதவலாம்?—ரோ. 10:14.

36 மொழியின் அடிப்படையில் ஒவ்வொரு சபைக்கும் வெவ்வேறு பிராந்தியங்கள் பிரித்துக் கொடுக்கப்படுகின்றன. அதனால், பல மொழி பேசுபவர்கள் குடியிருக்கும் இடங்களில் வெவ்வேறு மொழி சபைகளைச் சேர்ந்த பிரஸ்தாபிகள் ஊழியம் செய்வார்கள். இப்படி ஊழியம் செய்யும்போது, தங்கள் மொழியைப் பேசுபவர்களுக்கு மட்டும் நல்ல செய்தியைச் சொல்வதற்கு அவர்கள் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு வருஷமும் விசேஷ அழைப்பிதழ் கொடுக்கும் சமயத்திலும் இதுபோலவே செய்ய வேண்டும். ஆனால், பொது ஊழியம் செய்யும்போதும் சந்தர்ப்ப சாட்சி கொடுக்கும்போதும், யாரிடம் வேண்டுமானாலும் பேசலாம், எந்த மொழியில் வேண்டுமானாலும் பிரசுரங்களைக் கொடுக்கலாம்.

37 சிலசமயங்களில், மற்ற மொழி சபைகளால் ரொம்பத் தூரத்தில் இருக்கும் தங்களுடைய பிராந்தியத்துக்குத் தவறாமல் போய் ஊழியம் செய்ய முடியாமல் இருக்கலாம். அதனால், சம்பந்தப்பட்ட சபைகளில் இருக்கும் ஊழியக் கண்காணிகள் ஒருவருக்கொருவர் தொடர்புகொண்டு, பிராந்தியங்களை எப்படிச் செய்து முடிக்கலாம் என்று பேசி முடிவெடுக்க வேண்டும். இப்படிச் செய்வதால், நல்ல செய்தியைக் கேட்க எல்லாருக்கும் வாய்ப்புக் கிடைக்கும்; திரும்பத் திரும்ப ஒரே வீட்டுக்குப் போவதைத் தவிர்க்கவும் முடியும்.—நீதி. 15:22.

38 நாம் சந்திக்கும் நபர் வேறு மொழியில் பேசினால் என்ன செய்யலாம்? அவருடைய மொழியில் பேசும் பிரஸ்தாபிகள் அவரைச் சந்திப்பார்கள் என்று நினைத்துக்கொள்ளக் கூடாது. சில பிரஸ்தாபிகள் தங்களுடைய பிராந்தியத்தில் வேறு மொழி பேசுகிறவர்களை அடிக்கடி சந்திப்பதால், அவர்களுடைய மொழியிலேயே நல்ல செய்தியை ஒருசில வரிகளில் சொல்ல கற்று வைத்திருக்கிறார்கள். நம்முடைய jw.org வெப்சைட்டிலிருந்து அவருடைய மொழியிலுள்ள பிரசுரங்களை எப்படிப் பார்க்கலாம் அல்லது டவுன்லோட் செய்யலாம் என்று சொல்லிக் கொடுக்கலாம். அவருடைய மொழியில் பிரசுரங்களைக் கொண்டுவந்து தருவதாகக்கூடச் சொல்லலாம்.

39 ஒருவர் உண்மையிலேயே ஆர்வமாக இருந்தால், அவருக்கு உதவி செய்ய அவருடைய மொழி பேசும் ஒரு பிரஸ்தாபியைக் கண்டுபிடிக்க நாம் முயற்சி செய்ய வேண்டும். அவருடைய மொழியில் கூட்டங்கள் பக்கத்தில் எங்கே நடக்கின்றன என்றும் சொல்ல வேண்டும். தன்னுடைய மொழி பேசுகிற ஒருவர் தன்னைச் சந்திக்க வேண்டுமென்று அவர் விரும்பினால், jw.org-ல் அதை எப்படித் தெரியப்படுத்தலாம் என்று சொல்லிக்கொடுக்க வேண்டும். அதற்குப்பின், அவரைச் சந்திப்பதற்குப் பக்கத்தில் இருக்கும் பிரஸ்தாபியையோ, தொகுதியையோ, சபையையோ கிளை அலுவலகம் கேட்டுக்கொள்ளும்.

40 தன்னுடைய மொழி பேசும் ஒருவர் வந்து தன்னைச் சந்தித்துவிட்டார் என்று அவர் சொல்லும்வரை நாம் அவரைத் தொடர்ந்து சந்தித்துக்கொண்டிருக்க வேண்டும். சிலசமயங்களில், அவருடைய மொழி பேசும் ஒரு பிரஸ்தாபியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கிளை அலுவலகம் மூப்பர்களுக்குத் தெரிவிக்கும். அப்படி நடக்கும்போது, அவருக்குத் தொடர்ந்து உதவி செய்யும் பொறுப்பு நமக்குத்தான் இருக்கிறது. முடிந்தால் அவருடைய மொழியில் இருக்கும் ஒரு பிரசுரத்தை வைத்து அவருக்கு பைபிளைச் சொல்லிக்கொடுக்கலாம். அந்தப் பிரசுரத்தில் இருக்கிற படங்களை நன்றாகப் பயன்படுத்துவதன் மூலமும், மேற்கோள் காட்டப்படாத வசனங்களை அவருடைய பைபிளில் வாசிக்கச் சொல்வதன் மூலமும், பைபிளின் அடிப்படை விஷயங்களைப் புரிந்துகொள்ள அவருக்கு உதவி செய்யலாம். அவருடைய குடும்பத்திலேயே யாராவது அவருடைய மொழியையும் நம்முடைய மொழியையும் பேசினால், அந்த நபருடைய உதவியோடு நாம் அவருக்குச் சொல்லிக்கொடுக்கலாம்.

41 அவரைக் கடவுளுடைய அமைப்பிற்கு வழிநடத்த கூட்டங்களுக்கு அழைக்க வேண்டும். கூட்டங்களில் சொல்லப்படுவது அவருக்கு முழுமையாகப் புரியாது என்று நினைத்து விட்டுவிடக் கூடாது. வசனங்கள் வாசிக்கப்படும்போது, அவருடைய மொழியில் பைபிள் இருந்தால், அதில் அந்த வசனங்களை எடுத்துப் பார்க்க அவருக்கு உதவி செய்ய வேண்டும். கூட்டத்துக்கு வரும் சகோதர சகோதரிகளோடு பழகுவதே அவருக்கு உற்சாகம் தரும், ஆன்மீக முன்னேற்றம் செய்யவும் உதவும்.

42 முன்தொகுதிகள் (Pregroups): ஒரு முன்தொகுதியில், வேறு மொழி ஆட்களிடம் பிரசங்கிக்கிற சில பிரஸ்தாபிகள் இருப்பார்கள். ஆனால், அந்த மொழியில் வாராவாரம் கூட்டங்கள் நடத்த தகுதியுள்ள மூப்பரோ உதவி ஊழியரோ இருக்க மாட்டார். பின்வரும் தகுதிகள் இருந்தால் ஒரு முன்தொகுதியை ஆரம்பிக்க ஒரு சபைக்குக் கிளை அலுவலகம் அனுமதி தரலாம்:

  1. (1) சபையின் மொழி அல்லாத வேறு மொழியைப் பேசுகிற நிறைய பேர் அந்தப் பகுதியில் இருக்க வேண்டும்.

  2. (2) கொஞ்சம் பிரஸ்தாபிகளாவது அந்த மொழியைத் தெரிந்துவைத்திருக்க வேண்டும் அல்லது அந்த மொழியைக் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும்.

  3. (3) அந்த மொழியில் ஊழிய ஏற்பாடுகள் செய்ய மூப்பர் குழுவுக்கு விருப்பம் இருக்க வேண்டும்.

ஒரு முன்தொகுதியை ஆதரிக்க மூப்பர் குழு விரும்பினால், வட்டாரக் கண்காணியிடம் பேசலாம். அந்த மொழி பேசுகிறவர்களிடம் பிரசங்கிக்க வேறு ஏதாவது சபை ஏற்பாடு செய்திருக்கிறதா என்பது அவருக்குத் தெரிந்திருக்கலாம். முன்தொகுதியை எந்த சபை ஆதரித்தால் பிரயோஜனமாக இருக்கும் என்பதை முடிவு செய்ய, அவர் தரும் நல்ல ஆலோசனைகள் உதவலாம். அதை முடிவு செய்த பிறகு, மூப்பர்கள் கிளை அலுவலகத்துக்குக் கடிதம் எழுதி, தங்கள் சபையில் முன்தொகுதியை ஆரம்பிப்பதற்கு அனுமதி கேட்பார்கள்.

43 தொகுதிகள்: பின்வரும் தகுதிகள் இருந்தால் ஒரு தொகுதியை ஆரம்பிக்க ஒரு சபைக்குக் கிளை அலுவலகம் அனுமதி தரலாம்:

  1. (1) ஆர்வம் காட்டுகிறவர்கள் போதுமான அளவில் இருக்க வேண்டும்; வளர்ச்சிக்கான வாய்ப்பும் இருக்க வேண்டும்.

  2. (2) கொஞ்சம் பிரஸ்தாபிகளாவது அந்த மொழியைத் தெரிந்துவைத்திருக்க வேண்டும் அல்லது அந்த மொழியைக் கற்றுவர வேண்டும்.

  3. (3) வாரம்தோறும் நடக்கும் கூட்டங்களில் ஒன்றையாவது அல்லது அந்த ஒரு கூட்டத்தின் ஒரு பகுதியையாவது (உதாரணத்துக்கு, பொதுப் பேச்சையோ காவற்கோபுர படிப்பையோ) அந்த மொழியில் நடத்த தகுதியுள்ள மூப்பரோ உதவி ஊழியரோ இருக்க வேண்டும்.

இந்த விஷயங்கள் நியாயமான அளவுக்கு ஒத்துவந்தால், ஒரு தொகுதியை ஆரம்பிக்க அனுமதி கேட்டு மூப்பர் குழு கிளை அலுவலகத்துக்கு ஒரு கடிதத்தை அனுப்பும். அதில் எல்லா விவரங்களையும் குறிப்பிடும். அந்தத் தொகுதியை முன்நின்று நடத்துகிற மூப்பரோ உதவி ஊழியரோ, “தொகுதிக் கண்காணியாக” அல்லது “தொகுதி ஊழியராக” செயல்படுவார்.

44 ஒரு தொகுதி ஆரம்பிக்கப்பட்ட பிறகு, அதை ஆதரிக்கும் சபையின் மூப்பர் குழு, சபைக் கூட்டங்களின் மற்ற பகுதிகளையும் நடத்த வேண்டுமா என்பதையும், மாதத்தில் எத்தனை முறை அந்தக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்பதையும் முடிவு செய்யும். அந்தத் தொகுதிக்காக வெளி ஊழியக் கூட்டங்களும் ஏற்பாடு செய்யப்படலாம். அந்தத் தொகுதியிலுள்ள எல்லாரும் அந்தத் தொகுதியைக் கவனித்துக்கொள்ளும் சபையின் மூப்பர் குழுவுடைய மேற்பார்வையில் செயல்படுவார்கள். அந்த மூப்பர்கள் தொகுதியின் தேவைகளை முன்வந்து கவனித்துக்கொள்வார்கள், சமநிலையோடு அறிவுரைகளைக் கொடுப்பார்கள். அந்தத் தொகுதியைக் கவனித்துக்கொள்ளும் சபையை வட்டாரக் கண்காணி சந்திக்கும் வாரத்தில், அந்தத் தொகுதியினரோடு அவர் ஊழியம் செய்வார். பிறகு, அந்தத் தொகுதியின் வளர்ச்சியைப் பற்றிய சுருக்கமான அறிக்கையைக் கிளை அலுவலகத்துக்கு அனுப்புவார். அந்தத் தொகுதிக்கு ஏதாவது குறிப்பிட்ட தேவை இருந்தால் அதைப் பற்றியும் குறிப்பிடுவார். காலப்போக்கில், அந்தத் தொகுதி ஒரு சபையாக ஆவதற்கு வாய்ப்பிருக்கிறது. சம்பந்தப்பட்ட எல்லாருமே அமைப்பு கொடுக்கிற ஆலோசனைகளைப் பின்பற்றும்போது, யெகோவா சந்தோஷப்படுவார்.—1 கொ. 1:10; 3:5, 6.

தொகுதியாக ஊழியம் செய்வது

45 கடவுளுக்குத் தங்களை அர்ப்பணித்த கிறிஸ்தவர்கள், நல்ல செய்தியை மற்றவர்களுக்கு சொல்லும் பொறுப்பைப் பெற்றிருக்கிறார்கள். இதைச் செய்வதற்கு பல வழிகள் இருக்கின்றன. ஆனால், நம்மில் நிறைய பேர் மற்றவர்களோடு சேர்ந்து வெளி ஊழியத்துக்குப் போகவே ஆசைப்படுகிறோம். (லூக். 10:1) அதனால்தான், சனி, ஞாயிறுகளிலும், மற்ற நாட்களிலும் சபையில் வெளி ஊழிய ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. விடுமுறை நாட்களில் நிறைய பேருக்குத் தொகுதியாக ஊழியம் செய்ய வாய்ப்புகள் கிடைக்கின்றன. அப்படிப்பட்ட நாட்களில், வெளி ஊழியக் கூட்டங்களைக் காலையிலும் சரி, மாலையிலும் சரி, வசதியான நேரங்களிலும் இடங்களிலும் நடத்த சபையின் ஊழியக் குழு ஏற்பாடு செய்யும்.

46 தொகுதியாக சாட்சி கொடுக்கும்போது, பிரஸ்தாபிகள் ஒன்றுசேர்ந்து ஊழியம் செய்யவும், ‘ஒருவருக்கொருவர் உற்சாகம் பெறவும்’ முடிகிறது. (ரோ. 1:12) புதிய பிரஸ்தாபிகள் திறமையும் அனுபவமும் உள்ள பிரஸ்தாபிகளோடு ஊழியம் செய்து நல்ல பயிற்சியைப் பெற்றுக்கொள்ள முடிகிறது. சில பகுதிகளில், இரண்டு அல்லது அதற்கும் அதிகமான பிரஸ்தாபிகள் சேர்ந்து ஊழியம் செய்வது பாதுகாப்பாக இருக்கலாம். நீங்கள் தனியாக ஊழியம் செய்யத் தீர்மானித்தாலும், உங்கள் தொகுதியோடு கூடிவரும்போது மற்ற எல்லாருக்குமே உற்சாகமாக இருக்கும். அதே பகுதியில் மற்றவர்களும் ஊழியம் செய்கிறார்கள் என்பதைத் தெரிந்திருப்பதே உங்களுக்குத் தைரியத்தைத் தரும். பயனியர்களும் மற்றவர்களும் சபை ஏற்பாடு செய்கிற ஒவ்வொரு வெளி ஊழியக் கூட்டத்துக்கும், அதுவும் ஒவ்வொரு நாளும் நடத்தப்படுகிற கூட்டத்துக்கும், ஆதரவு தர வேண்டுமென்ற அவசியமில்லை. ஆனாலும், வாராவாரம் நடத்தப்படும் சில வெளி ஊழியக் கூட்டங்களுக்காவது அவர்கள் ஆதரவு தரலாம்.

47 இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் வைத்த முன்மாதிரியை நாம் எல்லாருமே பின்பற்ற வேண்டும். பிரசங்க வேலையில் முழுமையாக கலந்துகொள்வதற்காக நாம் எடுக்கிற முயற்சியை யெகோவா ஆசீர்வதிப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.—லூக். 9:57-62.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்