உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • od அதி. 8 பக். 72-87
  • நல்ல செய்தியைப் பிரசங்கிக்கும் ஊழியர்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நல்ல செய்தியைப் பிரசங்கிக்கும் ஊழியர்கள்
  • யெகோவாவின் விருப்பத்தைச் செய்யும் அமைப்பு
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • புதிய பிரஸ்தாபிகள்
  • தகுதிகள்
  • சின்னப் பிள்ளைகளுக்கு உதவி
  • அர்ப்பணமும் ஞானஸ்நானமும்
  • ஊழியத்தின் வளர்ச்சியைப் பற்றிய அறிக்கைகள்
  • உங்களுடைய வெளி ஊழிய அறிக்கை
  • பிரஸ்தாபி அட்டை
  • வெளி ஊழிய அறிக்கையை ஏன் கொடுக்க வேண்டும்?
  • இலக்குகள் வைக்க வேண்டும்
  • கடவுளை வணங்கும்படி மற்றவர்களுக்கு உதவிசெய்தல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1989
  • யெகோவாவின் ஆடுகளுக்கு மென்மையான கவனிப்பு தேவை
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
  • இரவும் பகலும் பரிசுத்த சேவை செய்யுங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—1996
  • கேள்விப் பெட்டி
    நம் ராஜ்ய ஊழியம்—2013
மேலும் பார்க்க
யெகோவாவின் விருப்பத்தைச் செய்யும் அமைப்பு
od அதி. 8 பக். 72-87

அதிகாரம் 8

நல்ல செய்தியைப் பிரசங்கிக்கும் ஊழியர்கள்

நமக்கு மிகச் சிறந்த முன்மாதிரியாக இருப்பதற்கு இயேசு கிறிஸ்துவை யெகோவா இந்தப் பூமிக்கு அனுப்பினார். (1 பே. 2:21) ஒருவர் இயேசுவைப் பின்பற்ற ஆரம்பிக்கும்போது, நல்ல செய்தியை அறிவிக்கும் கடவுளுடைய ஊழியர்களில் ஒருவராக ஆகிறார். இது அவருக்குப் புத்துணர்ச்சியைத் தரும் என்று இயேசு குறிப்பிட்டார். “உழைத்துக் களைத்துப்போனவர்களே, பாரமான சுமையைச் சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்குப் புத்துணர்ச்சி கொடுப்பேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாக இருக்கிறேன்; அதனால் என் நுகத்தடியை உங்கள் தோள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்; அப்போது, உங்களுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும்” என்று அவர் சொன்னார். (மத். 11:28, 29) அவருடைய அழைப்பை ஏற்றுக்கொண்ட எல்லாருக்குமே இந்தப் புத்துணர்ச்சி கிடைத்திருக்கிறது.

2 கடவுளுடைய ஊழியர்களிலேயே மிக முக்கியமானவரான இயேசு, தன்னைப் பின்பற்றி வரும்படி சிலரை அழைத்தார். (மத். 9:9; யோவா. 1:43) ஊழியம் செய்ய அவர்களுக்குப் பயிற்சி கொடுத்தார். பிறகு, தான் செய்துகொண்டிருந்த அதே வேலையைச் செய்வதற்கு அவர்களை அனுப்பினார். (மத். 10:1–11:1; 20:28; லூக். 4:43) பிற்பாடு, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை அறிவிக்க இன்னும் 70 பேரை அவர் அனுப்பினார். (லூக். 10:1, 8-11) அப்போது அவர்களிடம், “நீங்கள் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்கிறவன் நான் சொல்வதையும் காதுகொடுத்துக் கேட்கிறான். உங்களை அலட்சியம் செய்கிறவன் என்னையும் அலட்சியம் செய்கிறான். அதோடு, என்னை அலட்சியம் செய்கிறவன் என்னை அனுப்பியவரையும் அலட்சியம் செய்கிறான்” என்று சொன்னார். (லூக். 10:16) இதன் மூலம், தான் கொடுத்த பொறுப்பு எந்தளவு முக்கியமானது என்பதை வலியுறுத்தினார். அவர்கள் இயேசுவுக்கு மட்டுமல்ல, உன்னதமான கடவுளுக்கே பிரதிநிதிகளாக இருக்க வேண்டியிருந்தது! இன்றும்கூட, தன்னைப் பின்பற்றி வரும்படி இயேசு கொடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்கிற ஒவ்வொருவருமே இயேசுவுக்கும் கடவுளுக்கும் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். (லூக். 18:22; 2 கொ. 2:17) இயேசுவைப் பின்பற்றுகிற எல்லாருக்குமே, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைப் பிரசங்கித்து, சீஷராக்க வேண்டுமென்ற கட்டளை கொடுக்கப்பட்டிருக்கிறது.—மத். 24:14; 28:19, 20.

3 தன்னைப் பின்பற்றி வரும்படி இயேசு கொடுத்த அழைப்பை நாம் ஏற்றுக்கொண்டதால், யெகோவா தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் பற்றி ‘தெரிந்துகொள்ளும்’ பாக்கியத்தைப் பெற்றுக்கொண்டோம். (யோவா. 17:3) அதோடு, யெகோவாவின் சட்டதிட்டங்களைக் கற்றுக்கொண்டோம். அவருடைய உதவியோடு, நாம் யோசிக்கிற விதத்தை மாற்றிக்கொண்டோம். புதிய சுபாவத்தை வளர்த்துக்கொண்டோம். யெகோவாவின் நீதிநெறிகளுக்கு ஏற்றபடி வாழ ஆரம்பித்தோம். (ரோ. 12:1, 2; எபே. 4:22-24; கொலோ. 3:9, 10) யெகோவாவுக்கு நம்முடைய நன்றியைக் காட்டும் விதமாக, நம் வாழ்க்கையை அவருக்கு அர்ப்பணித்தோம். அதை எல்லாருக்கும் தெரியப்படுத்தும் விதமாக, தண்ணீரில் ஞானஸ்நானம் எடுத்தோம். அந்தச் சமயத்தில், கடவுளுடைய ஊழியர்களாக நாம் நியமிக்கப்பட்டோம்.

4 ‘கறைபடியாத கைகளோடும் சுத்தமான இதயத்தோடும்தான்’ கடவுளுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதை நாம் எப்போதும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். (சங். 24:3, 4; ஏசா. 52:11; 2 கொ. 6:14–7:1) இயேசு கிறிஸ்துமீது விசுவாசம் வைத்ததால், நமக்குச் சுத்தமான மனசாட்சி கிடைத்திருக்கிறது. (எபி. 10:19-23, 35, 36; வெளி. 7:9, 10, 14) மற்றவர்களுடைய விசுவாசத்தைக் குலைக்காமல் இருப்பதற்கு, நாம் எல்லாவற்றையும் கடவுளுடைய மகிமைக்காகச் செய்ய வேண்டும் என்று அப்போஸ்தலன் பவுல் ஆலோசனை கொடுத்தார். நம்முடைய நல்ல குணங்களைப் பார்த்து சத்தியத்தில் இல்லாதவர்கள்கூட விசுவாசிகளாக ஆகலாம் என்று அப்போஸ்தலன் பேதுருவும் சொன்னார். (1 கொ. 10:31, 33; 1 பே. 3:1, 2) நல்ல செய்தியைப் பிரசங்கிக்கிற ஊழியராக ஆவதற்கு நீங்கள் எப்படி ஒருவருக்கு உதவி செய்யலாம்?

புதிய பிரஸ்தாபிகள்

5 ஒருவருக்கு பைபிள் படிப்பு நடத்த ஆரம்பிக்கிற சமயத்திலிருந்தே, கற்றுக்கொள்கிற விஷயங்களை மற்றவர்களிடம் சொல்லும்படி அவரை உற்சாகப்படுத்துங்கள். அவர் அந்த விஷயங்களைத் தன்னுடைய சொந்தக்காரர்களிடமும், நண்பர்களிடமும், தன்னோடு வேலை செய்கிறவர்களிடமும், மற்றவர்களிடமும் அவர் சொல்லலாம். இப்படி சந்தர்ப்ப சாட்சி கொடுக்கக் கற்றுக்கொடுப்பது ரொம்ப முக்கியம். அப்போதுதான், நல்ல செய்தியை அறிவிக்கிற ஊழியர்களில் ஒருவராக ஆவதற்கு உங்களால் அவருக்கு உதவ முடியும். (மத். 9:9; லூக். 6:40) அவர் ஆன்மீக முன்னேற்றம் செய்து, திறமையாக சந்தர்ப்ப சாட்சி கொடுக்கக் கற்றுக்கொண்ட பிறகு, சபையுடன் சேர்ந்து ஊழியம் செய்ய ஆசைப்படுவதாக உங்களிடம் சொல்லலாம்.

தகுதிகள்

6 உங்களோடு பைபிள் படிப்பவரை வீட்டுக்கு வீடு ஊழியத்துக்கு முதல் தடவையாகக் கூட்டிக்கொண்டு போவதற்கு முன்னால், அவருக்குச் சில தகுதிகள் இருக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். ஏனென்றால், நம்மோடு ஒருவர் ஊழியத்துக்கு வரும்போது, அவரையும் ஒரு யெகோவாவின் சாட்சியாகத்தான் மற்றவர்கள் பார்ப்பார்கள். அப்படியானால், அவர் ஏற்கெனவே யெகோவாவின் நீதிநெறிகளின்படி வாழ ஆரம்பித்திருக்க வேண்டும்; ஞானஸ்நானம் எடுக்காத பிரஸ்தாபியாக இருப்பதற்குத் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

7 அவரோடு பைபிள் நியமங்களைப் பற்றிக் கலந்துபேசும்போது, அவருடைய சூழ்நிலைகளைப் பற்றி உங்களுக்குத் தெரியவந்திருக்கும். படித்த விஷயங்களுக்கு ஏற்றபடி அவர் வாழ்வதையும் நீங்கள் கவனித்திருக்கலாம். ஆனாலும், அவருடைய வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட சில விஷயங்களை மூப்பர்கள் உங்கள் இருவரையும் வைத்துப் பேசுவார்கள்.

8 மூப்பர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஏற்பாடு செய்யும் இரண்டு மூப்பர்கள்தான் உங்கள் இருவரோடும் பேசுவார்கள். அவர்களில் ஒருவர் ஊழியக் குழுவிலுள்ள மூப்பராக இருப்பார். சபையில் மூப்பர்கள் குறைவாக இருந்தால், ஒரு மூப்பரும் தகுதியுள்ள ஒரு உதவி ஊழியரும் உங்கள் இருவரிடமும் பேசுவார்கள். இந்தச் சகோதரர்கள் தாமதிக்காமல் உடனடியாக உங்கள் மாணவரிடம் பேச முயற்சி செய்ய வேண்டும். சொல்லப்போனால், உங்கள் மாணவர் ஒரு பிரஸ்தாபியாக ஆவதற்கு விரும்புகிறார் என்பது ஒரு சபைக் கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பு மூப்பர்களுக்குத் தெரியவந்தால், அந்தக் கூட்டம் முடிந்த உடனேயே உங்கள் இருவரோடும் பேசுவதற்கு அவர்கள் ஏற்பாடு செய்யலாம். அந்த மூப்பர்கள் சகஜமாகவும், நட்போடும் பேச முயற்சி செய்ய வேண்டும். ஞானஸ்நானம் எடுக்காத பிரஸ்தாபி ஆவதற்கு அனுமதி தருவதற்கு முன், பின்வரும் தகுதிகள் இருக்கிறதா என்று அவர்கள் உறுதி செய்ய வேண்டும்:

  1. (1) கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால்தான் பைபிள் எழுதப்பட்டது என்பதை அவர் நம்ப வேண்டும்.—2 தீ. 3:16.

  2. (2) பைபிளில் இருக்கிற அடிப்படை போதனைகள் அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும், அவற்றை அவர் நம்ப வேண்டும். அப்போதுதான், யாராவது அவரிடம் கேள்விகள் கேட்டால், பொய் மதப் போதனைகளையோ சொந்த கருத்துகளையோ சொல்லாமல், பைபிளில் இருப்பதைச் சொல்வார்.—மத். 7:21-23; 2 தீ. 2:15.

  3. (3) சபைக் கூட்டங்களுக்கு வர முடிந்த நிலையில் அவர் இருந்தால், யெகோவாவின் மக்களோடு ஒன்றுகூடிவர வேண்டும் என்ற பைபிள் கட்டளைக்கு அவர் கீழ்ப்படிய வேண்டும்.—சங். 122:1; எபி. 10:24, 25.

  4. (4) விபச்சாரம் செய்வது, பலரைத் திருமணம் செய்வது, ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்வது உட்பட எல்லா விதமான பாலியல் முறைகேட்டையும் பைபிள் கண்டனம் செய்வதை அவர் தெரிந்திருக்க வேண்டும். குடும்பத்தார் அல்லாத எதிர்பாலார் ஒருவரோடு அவர் ஒரே வீட்டில் வாழ்ந்துகொண்டிருந்தால்... அவர்களுக்குள் தாம்பத்திய உறவு இருந்தால்... அவர்கள் இருவரும் சட்டப்படி திருமணம் செய்துகொள்ள வேண்டும்.—மத். 19:9; 1 கொ. 6:9, 10; 1 தீ. 3:2, 12; எபி. 13:4.

  5. (5) குடிவெறியைத் தவிர்க்கும்படி பைபிள் கொடுக்கிற கட்டளைக்கு அவர் கீழ்ப்படிய வேண்டும். மருத்துவ காரணங்கள் தவிர, வேறு காரணங்களுக்காக இயற்கையான அல்லது செயற்கையான போதை மருந்துகளை அவர் பயன்படுத்த கூடாது.—2 கொ. 7:1; எபே. 5:18; 1 பே. 4:3, 4.

  6. (6) மோசமான சகவாசத்தைத் தவிர்ப்பது எவ்வளவு முக்கியம் என்பதை அவர் புரிந்துவைத்திருக்க வேண்டும்.—1 கொ. 15:33.

  7. (7) அவர் பொய் மத அமைப்புகளின் உறுப்பினராக இருந்திருந்தால், அவற்றோடு வைத்திருந்த தொடர்பைத் துண்டித்திருக்க வேண்டும். அதன் ஆராதனைகளில் கலந்துகொள்வதையும், அதன் மற்ற ஏற்பாடுகளில் கலந்துகொள்வதையும் அதற்கு ஆதரவு கொடுப்பதையும் அவர் நிறுத்தியிருக்க வேண்டும்.—2 கொ. 6:14-18; வெளி. 18:4.

  8. (8) அரசியல் விஷயங்கள் எல்லாவற்றிலிருந்தும் அவர் விலகியிருக்க வேண்டும்.—யோவா. 6:15; 15:19; யாக். 1:27.

  9. (9) ஏசாயா 2:4-ல் சொல்லப்பட்டிருக்கிறபடி, தேசங்களுக்கு இடையில் நடக்கிற சண்டை சச்சரவுகளில் அவர் தலையிடாமல் இருக்க வேண்டும்.

  10. (10) யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக ஆவதற்கு அவர் உண்மையிலேயே ஆசைப்பட வேண்டும்.—சங். 110:3.

9 இந்த விஷயங்களில் ஏதோவொன்றைப் பற்றி அந்த மாணவர் எப்படி உணருகிறார் என்பது மூப்பர்களுக்குத் தெளிவாகத் தெரியாவிட்டால், அவரிடமே கேட்க வேண்டும். அப்படிக் கேட்பதற்கு, இங்கே கொடுக்கப்பட்டிருக்கிற வசனங்களைப் பயன்படுத்தலாம். இந்த வசனங்களில் சொல்லப்பட்டுள்ளபடி வாழ்கிறவர்கள் மட்டும்தான் யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்து பிரசங்க வேலையைச் செய்ய முடியும் என்பதை அவர் புரிந்துகொள்வது முக்கியம். அவரிடம் என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதை அவர் புரிந்துவைத்திருக்கிறாரா... ஊழியத்தில் கலந்துகொள்ள போதுமான தகுதி அவருக்கு இருக்கிறதா... என்பதையெல்லாம் அவர் சொல்வதை வைத்து மூப்பர்கள் தீர்மானிக்கலாம்.

10 அந்த மாணவர் ஒரு பிரஸ்தாபியாக ஆவதற்குத் தகுதி பெற்றிருக்கிறாரா என்பதை மூப்பர்கள் உடனடியாக அவரிடம் சொல்ல வேண்டும். பெரும்பாலும், அந்தக் கலந்தாலோசிப்பு முடிந்ததுமே அவரிடம் சொல்லிவிடலாம். ஒரு பிரஸ்தாபியாக ஆவதற்கு அவர் தகுதி பெற்றிருந்தால், மூப்பர்கள் அவருக்கு வாழ்த்துச் சொல்லி வரவேற்கலாம். (ரோ. 15:7) எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஊழியத்தில் கலந்துகொள்ளும்படி மூப்பர்கள் அவரை உற்சாகப்படுத்த வேண்டும். அந்த மாதத்தின் கடைசியில் ஊழிய அறிக்கையைக் கொடுக்கும்படி சொல்ல வேண்டும். பைபிள் படிக்கிற ஒருவர், ஞானஸ்நானம் எடுக்காத பிரஸ்தாபியாக ஆகி, முதல் தடவை ஊழிய அறிக்கையைக் கொடுக்கும்போது, அவருடைய பெயரில் பிரஸ்தாபி அட்டை ஒன்று எழுதப்படும் என்றும், சபையின் பதிவுகளோடு அது சேர்க்கப்படும் என்றும் மூப்பர்கள் அவரிடம் சொல்வார்கள். பிரஸ்தாபியிடமிருந்து மூப்பர்கள் வாங்கும் அப்படிப்பட்ட தனிப்பட்ட தகவல்கள், யெகோவாவின் சாட்சிகளுடைய மதம் சம்பந்தப்பட்ட உலகளாவிய வேலைகளைக் கவனித்துக்கொள்ள அமைப்புக்கு உதவுகின்றன; அதோடு, ஆன்மீக விஷயங்களில் ஈடுபடவும் ஆன்மீக உதவிகளைப் பெறவும் பிரஸ்தாபிகளுக்கு உதவுகின்றன. தனிப்பட்ட தகவல்கள், jw.org வெப்சைட்டில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய உலகளாவிய தகவல் பாதுகாப்பு கொள்கையின்படி பயன்படுத்தப்படும் என்பதை மூப்பர்கள் புதிய பிரஸ்தாபிகளுக்கு ஞாபகப்படுத்துவார்கள்.

11 புதிய பிரஸ்தாபியோடு பேசிப் பழகுவதும், அவருடைய முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவதும் அவருக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். அப்போது, ஒவ்வொரு மாதமும் வெளி ஊழிய அறிக்கையைத் தவறாமல் கொடுப்பதற்கும் யெகோவாவுக்கு இன்னும் அதிகமாகச் சேவை செய்வதற்கும் அவர் முயற்சி எடுப்பார்.—பிலி. 2:4; எபி. 13:2.

12 பைபிள் மாணவர் ஒருவர் வெளி ஊழியத்தில் கலந்துகொள்ள தகுதி பெற்றிருக்கிறார் என்று மூப்பர்கள் தீர்மானித்த பிறகு, அவருக்கு யெகோவாவின் விருப்பத்தைச் செய்யும் அமைப்பு புத்தகத்தைக் கொடுப்பார்கள். அவர் முதல் தடவை வெளி ஊழிய அறிக்கையைக் கொடுத்த பிறகு, ஞானஸ்நானம் எடுக்காத பிரஸ்தாபியாக அவர் ஆகியிருக்கிறார் என்று சபையில் சுருக்கமாக அறிவிப்பு செய்யப்படும்.

சின்னப் பிள்ளைகளுக்கு உதவி

13 சின்னப் பிள்ளைகள்கூட பிரஸ்தாபிகளாக ஆகலாம். இயேசு சின்னப் பிள்ளைகளை அரவணைத்துக்கொண்டு, அவர்களை ஆசீர்வதித்தார். (மத். 19:13-15; 21:15, 16) பிள்ளைகளுக்கு உதவி செய்ய வேண்டிய பொறுப்பு முக்கியமாக பெற்றோருக்கு இருக்கிறது என்பது உண்மைதான். ஆனாலும், பிரசங்க வேலையைச் செய்ய மனதார ஆசைப்படுகிற பிள்ளைகளுக்கு சபையில் இருக்கிற மற்றவர்களும் உதவி செய்யலாம். ஒரு பெற்றோராக நீங்கள் சுறுசுறுப்பாக ஊழியம் செய்தால், உங்கள் பிள்ளைகளும் சுறுசுறுப்பாக ஊழியம் செய்யக் கற்றுக்கொள்வார்கள். நல்ல நடத்தையுள்ள ஒரு பிள்ளை, ஊழியம் செய்ய ஆசைப்படுவதாகச் சொல்லும்போது, பெற்றோர் என்ன செய்யலாம்?

14 அந்தப் பெற்றோர், சபையின் ஊழியக் குழுவில் இருக்கிற மூப்பர்களில் ஒருவரிடம் பேசலாம். பிரஸ்தாபியாக ஆவதற்கு அந்தப் பிள்ளை தயாரா என்பதைத் தீர்மானிப்பதற்கு மூப்பர்கள் அந்தப் பிள்ளையோடு பேச ஏற்பாடு செய்வார்கள். அந்தப் பிள்ளையிடமும், சாட்சியாக இருக்கிற அதன் பெற்றோரிடமும் அல்லது பாதுகாவலரிடமும் பேசும்படி மூப்பர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் இரண்டு மூப்பர்களிடம் சொல்வார். அந்த மூப்பர்களில் ஒருவர் ஊழியக் குழுவைச் சேர்ந்தவராக இருப்பார். பைபிளில் இருக்கிற அடிப்படை விஷயங்கள் அந்தப் பிள்ளைக்குத் தெரிந்திருந்தால்... ஊழியத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை அந்தப் பிள்ளைக்கு இருந்தால்... அந்தப் பிள்ளை நல்ல முன்னேற்றம் செய்திருப்பதைப் புரிந்துகொள்ளலாம். இதுபோன்ற விஷயங்களைக் கலந்துபேசிய பிறகு, அந்தப் பிள்ளையை ஞானஸ்நானம் எடுக்காத பிரஸ்தாபியாக ஆக்கலாமா என்பதை அந்த மூப்பர்கள் இரண்டு பேரும் தீர்மானிக்கலாம். (லூக். 6:45; ரோ. 10:10) பொதுவாக, பெரியவர்களிடம் கேட்கப்படுகிற சில கேள்விகள் சின்னப் பிள்ளைகளுக்குப் பொருந்தாமல் இருக்கலாம். அதனால் சின்னப் பிள்ளைகளிடம் கலந்துபேசும்போது, அப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்க வேண்டியதில்லை.

15 அப்படி ஒரு பிள்ளையிடம் கலந்துபேசும்போது, முன்னேற்றம் செய்திருப்பதற்காக அந்தப் பிள்ளையை மூப்பர்கள் பாராட்ட வேண்டும். ஞானஸ்நானம் எடுப்பதற்கு இலக்கு வைக்கும்படி உற்சாகப்படுத்த வேண்டும். அந்தப் பிள்ளையின் மனதில் சத்தியத்தைப் பதிய வைக்க பெற்றோர் கடினமாக உழைத்திருப்பார்கள். அதனால், இந்தச் சமயத்தில் அவர்களையும் பாராட்ட வேண்டும். “கிறிஸ்தவப் பெற்றோருக்கு” (பக்கங்கள் 179-181) என்ற பகுதியைப் பார்க்கும்படி பெற்றோரிடம் மூப்பர்கள் சொல்வார்கள். பிள்ளைக்குக் கூடுதலாக உதவ பெற்றோருக்கு இந்தப் பகுதி பிரயோஜனமாக இருக்கும்.

அர்ப்பணமும் ஞானஸ்நானமும்

16 நீங்கள் ஒருவேளை யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொண்டு, அவர்மீது அன்பு காட்டலாம். அவர் எதிர்பார்க்கிற விஷயங்களைச் செய்துவரலாம். ஊழியத்திலும் கலந்துகொள்ளலாம். ஆனாலும், யெகோவாவுடன் இருக்கிற பந்தத்தை நீங்கள் இன்னும் பலப்படுத்த வேண்டும். எப்படி? உங்கள் வாழ்க்கையை அவருக்கு அர்ப்பணிப்பதன் மூலமும், அதற்கு அடையாளமாகத் தண்ணீரில் ஞானஸ்நானம் எடுப்பதன் மூலமும்தான்.—மத். 28:19, 20.

17 யெகோவாவுக்கு உங்களை எப்படி அர்ப்பணிப்பீர்கள்? யெகோவாவுடைய சேவைக்காக உங்கள் வாழ்க்கையைப் பயன்படுத்தப்போவதாகவும், அவருடைய வழியில் நடக்கப்போவதாகவும் ஜெபத்தில் அவரிடம் பயபக்தியோடு வாக்குக் கொடுப்பதன் மூலம் உங்களை அர்ப்பணிப்பீர்கள். அப்படியென்றால், என்றென்றும் யெகோவாவை மட்டுமே வணங்குவீர்கள். (உபா. 5:9) உங்கள் வாழ்க்கையை நீங்கள்தான் அர்ப்பணிக்க வேண்டும். உங்களுக்காக வேறு யாரும் அதைச் செய்ய முடியாது.

18 நீங்கள் யெகோவாவுக்குச் சொந்தமானவராக இருக்க விரும்புவதை அவரிடம் தனிப்பட்ட விதமாக சொன்னால் மட்டும் போதாது. கடவுளுக்கு உங்களை அர்ப்பணித்திருப்பதை மற்றவர்களுக்குக் காட்டவும் வேண்டும். இயேசுவைப் போல, தண்ணீரில் ஞானஸ்நானம் எடுப்பதன் மூலம் இதை நீங்கள் செய்யலாம். (1 பே. 2:21; 3:21) யெகோவாவுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று நீங்கள் தீர்மானித்திருந்தால்... ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்று விரும்பினால்... என்ன செய்ய வேண்டும்? மூப்பர் குழுவின் ஒருங்கிணைப்பாளரிடம் உங்கள் விருப்பத்தைச் சொல்லுங்கள். பைபிளில் சொல்லப்பட்டிருக்கிற தகுதிகள் உங்களுக்கு இருக்கின்றனவா என்பதைத் தெரிந்துகொள்ள சில மூப்பர்கள் உங்களோடு கலந்துபேச அவர் ஏற்பாடு செய்வார். இதைப் பற்றிக் கூடுதலாகத் தெரிந்துகொள்ள விரும்பினால், “ஞானஸ்நானம் எடுக்காத பிரஸ்தாபிக்கு” (பக்கங்கள் 182-184) என்ற பகுதியையும், “ஞானஸ்நானம் எடுக்க விரும்புகிறவர்களுக்கான கேள்விகள்” (பக்கங்கள் 185-207) என்ற பகுதியையும் பாருங்கள்.

ஊழியத்தின் வளர்ச்சியைப் பற்றிய அறிக்கைகள்

19 காலம் காலமாகவே, தூய வணக்கம் உலகம் முழுவதும் பரவி வந்திருப்பதைப் பற்றிய அறிக்கைகள் யெகோவாவின் மக்களுக்கு தனி உற்சாகத்தைக் கொடுத்திருக்கின்றன. நல்ல செய்தி உலகம் முழுவதும் பிரசங்கிக்கப்படும் என்று இயேசு கிறிஸ்து தன்னுடைய சீஷர்களிடம் சொன்னார். அந்தச் சமயத்திலிருந்தே, இந்த வேலை எப்படிச் செய்து முடிக்கப்படும் என்பதைத் தெரிந்துகொள்ள உண்மைக் கிறிஸ்தவர்கள் ஆர்வமாக இருந்திருக்கிறார்கள்.—மத். 28:19, 20; மாற். 13:10; அப். 1:8.

20 இயேசுவின் ஆரம்பகால சீஷர்கள், பிரசங்க வேலையில் ஒருவருக்கொருவர் கிடைத்த பலன்களைப் பற்றித் தெரிந்துகொண்டபோது ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். (மாற். 6:30) கி.பி. 33, பெந்தெகொஸ்தே நாளில், கடவுளுடைய சக்தி பொழியப்பட்டபோது சுமார் 120 சீஷர்கள் கூடியிருந்ததாக அப்போஸ்தலர் புத்தகம் சொல்கிறது. சீக்கிரத்திலேயே சீஷர்களின் எண்ணிக்கை சுமார் 3,000-மாகவும், பிறகு சுமார் 5,000-மாகவும் உயர்ந்தது. “மீட்புப் பெறவிருந்தவர்களை யெகோவா தினமும் அவர்களோடு சேர்த்துக்கொண்டே வந்தார்” என்றும், “ஏராளமான குருமார்களும் இயேசுவின் சீஷர்களானார்கள்” என்றும் அறிக்கை செய்யப்பட்டது. (அப். 1:15; 2:5-11, 41, 47; 4:4; 6:7) இந்த அதிகரிப்புகளைப் பற்றி சீஷர்கள் கேட்டபோது கண்டிப்பாக உற்சாகம் அடைந்திருப்பார்கள்! யூத மதத் தலைவர்களுடைய தூண்டுதலால் கடும் துன்புறுத்தல் வந்தபோதிலும், கடவுள் கொடுத்த வேலையைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்திருப்பார்கள்!

21 சுமார் கி.பி. 60-61-ல் கொலோசெயர்களுக்கு பவுல் எழுதிய கடிதத்தில், நல்ல செய்தி ‘உலகம் முழுவதும் பரவி ஏராளமாகப் பலன் தந்ததாக’ குறிப்பிட்டார். அதோடு, அந்தச் செய்தி “வானத்தின் கீழ் இருக்கிற எல்லா மக்களுக்கும் பிரசங்கிக்கப்பட்டது” என்றும் சொன்னார். (கொலோ. 1:5, 6, 23) ஆரம்பகால கிறிஸ்தவர்கள், கடவுளுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்ததால், கி.பி. 70-ல் எருசலேம் அழிக்கப்படுவதற்கு முன் பிரமாண்டமான அளவில் பிரசங்க வேலையைச் செய்து முடிக்க கடவுளுடைய சக்தி அவர்களுக்கு உதவியது. அதைப் பற்றிய அறிக்கைகளைக் கேட்டபோது உண்மையுள்ள அந்தக் கிறிஸ்தவர்களுக்கு ரொம்பவே உற்சாகம் கிடைத்திருக்கும்.

முடிவு வருவதற்கு முன்னால் இந்த ஊழியம் முழுமையாகச் செய்து முடிக்கப்படுவதைப் பார்க்க நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்களா?

22 இன்றும் யெகோவாவின் அமைப்பு, ஊழிய அறிக்கைகளைப் பதிவு செய்து வைக்க முயற்சி செய்கிறது. “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நல்ல செய்தி உலகம் முழுவதும் இருக்கிற எல்லா தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்” என்று மத்தேயு 24:14-ல் சொல்லப்பட்டுள்ள தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாகத்தான் இன்று ஊழியம் செய்யப்பட்டு வருகிறது. அதனால், யெகோவாவுக்கு அர்ப்பணித்த ஊழியர்களான நாம் ஊழியத்தை அவசரமாகச் செய்து முடிக்க வேண்டியிருக்கிறது. முடிவு வருவதற்கு முன்னால் இந்த ஊழியம் முழுமையாகச் செய்து முடிக்கப்படுவதற்கு நம்முடைய பங்கைச் செய்ய நாம் ஆர்வமாக இருக்க வேண்டும். இந்த வேலை முழுமையாகச் செய்து முடிக்கப்படும்படி யெகோவா பார்த்துக்கொள்வார். அதில் நம்முடைய பங்கை நாம் செய்யும்போது, யெகோவாவின் மனதை சந்தோஷப்படுத்துவோம்.—எசே. 3:18-21.

உங்களுடைய வெளி ஊழிய அறிக்கை

23 நாம் எதை அறிக்கை செய்ய வேண்டும்? அமைப்பு கொடுத்திருக்கும் வெளி ஊழிய அறிக்கை என்ற படிவத்தைப் பார்த்து அதை நாம் தெரிந்துகொள்ளலாம். அதேசமயம், பின்வரும் விவரங்களைத் தெரிந்துகொள்வதும் உதவியாக இருக்கும்:

24 “அளிப்புகள் (அச்சடிக்கப்பட்டது மற்றும் எலக்ட்ரானிக் வடிவில் கொடுத்தது)” என்ற பகுதியில், ஞானஸ்நானம் எடுக்காத நபர்களிடம் நீங்கள் எத்தனை பிரசுரங்களைக் கொடுத்தீர்கள் என்பதைக் குறிப்பிடுங்கள். அவை அச்சடிக்கப்பட்ட பிரசுரங்களாக இருந்தாலும் சரி, எலக்ட்ரானிக் பிரசுரங்களாக இருந்தாலும் சரி! “வீடியோக்களைக் காண்பித்தது” என்ற பகுதியில், நம்முடைய வீடியோக்களை நீங்கள் எத்தனை தடவை காட்டினீர்கள் என்பதைக் குறிப்பிடுங்கள்.

25 ஞானஸ்நானம் எடுக்காத ஒருவருடைய ஆர்வத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக அவரை நீங்கள் எத்தனை தடவை சந்தித்தீர்கள் என்பதை “மறுசந்திப்புகள்” என்ற பகுதியில் குறிப்பிடுங்கள். ஆர்வம் காட்டிய ஒருவரை அவருடைய வீட்டுக்குப் போய் பார்ப்பது, அவருக்குக் கடிதம் எழுதுவது, போனில் பேசுவது, மெசேஜ் அனுப்புவது, ஏதாவது பிரசுரத்தை வைத்துவிட்டு வருவது ஆகியவற்றை மறுசந்திப்பாகக் குறித்துக்கொள்ளலாம். அதோடு, ஒவ்வொரு தடவை பைபிள் படிப்பு எடுக்கும்போதும், அதை ஒரு மறுசந்திப்பாகக் குறித்துக்கொள்ளலாம். குடும்ப வழிபாட்டில், ஞானஸ்நானம் எடுக்காத பிள்ளை கலந்துகொள்ளும்போது, பெற்றோரில் ஒருவர் அதை வாரத்துக்கு ஒரு மறுசந்திப்பாகக் குறித்துக்கொள்ளலாம்.

26 ஒருவருக்குப் பொதுவாக வாராவாரம் நீங்கள் பைபிள் படிப்பு நடத்தினாலும், ஊழிய அறிக்கையில் அதை ஒரேவொரு பைபிள் படிப்பாகத்தான் குறிப்பிட வேண்டும். அந்த மாதத்தில் நடத்துகிற வெவ்வேறு பைபிள் படிப்புகளின் மொத்த எண்ணிக்கையை அதில் குறிப்பிடுங்கள். உதாரணத்துக்கு, ஞானஸ்நானம் எடுக்காத நபர்களுக்கு நீங்கள் படிப்பு நடத்தியிருக்கலாம். அல்லது, ஊழியக் குழுவில் இருக்கிற ஒருவருடைய அறிவுரைப்படி செயலற்ற ஒரு பிரஸ்தாபிக்கு படிப்பு நடத்தியிருக்கலாம். அல்லது, புதிதாக ஞானஸ்நானம் எடுத்த ஒருவர், இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்தை இன்னும் படித்து முடிக்கவில்லையென்றால், அவருக்கும் படிப்பு நடத்தியிருக்கலாம். இதையெல்லாம் பைபிள் படிப்புகளாக நீங்கள் அறிக்கை செய்ய வேண்டும்.

27 எவ்வளவு “மணிநேரங்கள்” ஊழியம் செய்தோம் என்பதைச் சரியாகக் குறிப்பிடுவது முக்கியம். வீட்டுக்கு வீடு ஊழியம், சபை ஏற்பாடு செய்கிற மற்ற விதமான ஊழியங்கள், மறுசந்திப்பு, பைபிள் படிப்பு, சந்தர்ப்ப சாட்சி ஆகியவற்றுக்காக நாம் செலவிடுகிற நேரத்தை இந்தப் பகுதியில் குறிப்பிட வேண்டும். இரண்டு பிரஸ்தாபிகள் சேர்ந்து ஊழியம் செய்யும்போது, இரண்டு பேருமே நேரத்தைக் கணக்கிட்டுக்கொள்ளலாம். ஆனால், அந்தச் சமயத்தில் நடத்தப்படுகிற மறுசந்திப்புகளையும் பைபிள் படிப்புகளையும் ஒருவர் மட்டுமே கணக்கிட வேண்டும். பெற்றோர்கள் இருவரும் சேர்ந்து தங்கள் பிள்ளைகளோடு குடும்ப வழிபாட்டை நடத்தும்போது, அவர்கள் இரண்டு பேரும் வாரத்துக்கு ஒரு மணிநேரம்வரை கணக்கிட்டுக்கொள்ளலாம். பொதுப் பேச்சு கொடுக்கிற நேரத்தைச் சகோதரர்கள் கணக்கிடலாம். பொதுப் பேச்சை மொழிபெயர்க்கிறவரும் அந்த நேரத்தைக் கணக்கிடலாம். ஊழியத்துக்காகத் தயாராவது, வெளி ஊழியக் கூட்டத்தில் கலந்துகொள்வது, ஊழியத்துக்குப் போய்வரும் வழியில் மற்ற வேலைகளைச் செய்வது போன்றவை அவசியமாக இருந்தாலும், அவற்றுக்கு ஆகும் நேரத்தை நாம் ஊழிய மணிநேரமாகக் கணக்கிட மாட்டோம்.

28 ஒவ்வொரு பிரஸ்தாபியும் பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியின் அடிப்படையில், தாங்கள் ஊழியம் செய்கிற நேரத்தைக் கணக்கிட வேண்டும். சில பிரஸ்தாபிகள், மக்கள்தொகை அதிகமாக இருக்கிற இடங்களில் பிரசங்கிக்கிறார்கள். வேறு சிலர், மக்கள் குறைவாக இருக்கிற இடங்களில் ரொம்ப தூரம் பயணம் செய்து பிரசங்கிக்கிறார்கள். ஊழியப் பகுதிகள் வித்தியாசப்படுகின்றன; பிரஸ்தாபிகள் தங்கள் ஊழியத்தைப் பார்க்கிற விதமும் வித்தியாசப்படுகிறது. அதனால், ஊழியத்தில் செலவு செய்கிற நேரத்தை எப்படிக் கணக்கிடுவது என்பதை அவரவர் மனசாட்சியின்படி தீர்மானிக்க வேண்டும். இந்த விஷயத்தில், உலகம் முழுவதும் இருக்கிற பிரஸ்தாபிகள் ஆளும் குழுவில் இருப்பவர்களுடைய மனசாட்சியின்படிதான் தீர்மானம் எடுக்க வேண்டும் என்று ஆளும் குழு கட்டாயப்படுத்துவதில்லை; மற்றவர்களை நியாயந்தீர்க்க யாரும் நியமிக்கப்படுவதும் இல்லை.—மத். 6:1; 7:1; 1 தீ. 1:5.

29 ஊழியத்தில் செலவு செய்த மணிநேரத்தை முழு எண்களாக அறிக்கை செய்ய வேண்டும். வயதானவராக இருப்பதால்... படுத்த படுக்கையாக இருப்பதால்... அல்லது வேறு காரணங்களால் நடமாட முடியாமல் இருப்பதால்... அதிகமாக ஊழியம் செய்ய முடியாமல் இருக்கும் பிரஸ்தாபிகள் மட்டும் இதற்கு விதிவிலக்கு. அப்படிப்பட்டவர்கள், 15 நிமிஷங்களை... 30 நிமிஷங்களை... அல்லது 45 நிமிஷங்களைக்கூட அறிக்கை செய்யலாம். ஒரு மாதத்தில் வெறும் 15 நிமிஷங்கள் சாட்சி கொடுத்தால்கூட, அதை ஊழிய அறிக்கையில் போடலாம். மூப்பர்கள் அவரை ஒழுங்கான பிரஸ்தாபியாகக் கணக்கில் எடுத்துக்கொள்வார்கள். மோசமான நோயினாலோ பயங்கரமாக அடிபட்டதாலோ வேறு ஏதாவது காரணத்தாலோ ஒருசில மாதங்களுக்கு மட்டும் நடமாட முடியாமல் இருப்பவர்களுக்கும் இந்த ஏற்பாடு பொருந்தும். ஆனாலும், ஊழியத்துக்குப் போகவே முடியாமல் இருக்கிறவர்களுக்கு மட்டும்தான் இது பொருந்தும். ஒரு பிரஸ்தாபிக்கு இந்த ஏற்பாடு பொருந்துமா இல்லையா என்பதை ஊழியக் குழு தீர்மானிக்கும்.

பிரஸ்தாபி அட்டை

30 நீங்கள் ஒவ்வொரு மாதமும் கொடுக்கிற வெளி ஊழிய அறிக்கை, உங்களுடைய பிரஸ்தாபி அட்டையில் பதிவு செய்யப்படும். இந்த அட்டைகள் உள்ளூர் சபைக்குச் சொந்தமானது. நீங்கள் வேறொரு சபைக்கு மாறிப் போக விரும்பினால், உங்களுடைய சபை மூப்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். சபையின் செயலர் உங்களுடைய அட்டைகளைப் புதிய சபைக்கு அனுப்பி வைப்பார். அப்படிச் செய்யும்போது, உங்களுடைய புதிய சபையில் இருக்கிற மூப்பர்கள் உங்களை வரவேற்கவும், ஆன்மீக உதவிகளைச் செய்யவும் தயாராக இருப்பார்கள். மூன்று மாதங்களுக்கும் குறைவான காலத்துக்கு மட்டும் நீங்கள் வேறு இடத்துக்குப் போக வேண்டியிருந்தால், உங்களுடைய வெளி ஊழிய அறிக்கையை மாதாமாதம் உங்களுடைய சபைக்கே அனுப்புங்கள்.

வெளி ஊழிய அறிக்கையை ஏன் கொடுக்க வேண்டும்?

31 வெளி ஊழிய அறிக்கையைக் கொடுக்க சிலசமயங்களில் மறந்துவிடுகிறீர்களா? நம் எல்லாருக்குமே சில விஷயங்களை மற்றவர்கள் ஞாபகப்படுத்த வேண்டியிருக்கிறது என்பது உண்மைதான். வெளி ஊழிய அறிக்கையைக் கொடுப்பது சம்பந்தமாக சரியான மனப்பான்மையை நாம் வளர்த்துக்கொண்டால், அதைச் செய்வது ஏன் முக்கியம் என்பதைப் புரிந்துகொண்டால், நாம் மறக்காமல் ஊழிய அறிக்கையைக் கொடுப்போம்.

32 “நான் எவ்வளவு நேரம் ஊழியம் பண்றேன்னு யெகோவாவுக்கு தெரியும். அப்புறம், நான் எதுக்கு வெளி ஊழிய அறிக்கைய சபையில கொடுக்கணும்?” என்று சிலர் கேட்கிறார்கள். நாம் எவ்வளவு செய்கிறோம் என்றும், அதை மனப்பூர்வமாகச் செய்கிறோமா அல்லது கடமைக்காகக் கொஞ்ச நேரம் செய்கிறோமா என்றும் யெகோவாவுக்குத் தெரியும் என்பது உண்மைதான். ஆனால், நோவா எத்தனை நாட்கள் பேழைக்குள் இருந்தார் என்பதையும் இஸ்ரவேலர்கள் எத்தனை வருஷங்கள் வனாந்தரத்தில் பயணம் செய்தார்கள் என்பதையும் யெகோவா பதிவு செய்து வைத்திருப்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். எத்தனை பேர் தனக்கு உண்மையாக இருந்தார்கள், எத்தனை பேர் கீழ்ப்படியாமல் போனார்கள் என்பதையும்கூட யெகோவா பதிவு செய்திருக்கிறார். கானான் தேசம் படிப்படியாகக் கைப்பற்றப்பட்டதைப் பற்றியும், இஸ்ரவேலில் இருந்த உண்மையுள்ள நியாயாதிபதிகள் செய்த சாதனைகளைப் பற்றியும் யெகோவா பதிவு செய்திருக்கிறார். இப்படி, தன்னுடைய ஊழியர்கள் செய்ததையெல்லாம் தன்னுடைய சக்தியினால் யெகோவா பதிவு செய்திருக்கிறார். திருத்தமான பதிவுகளை வைத்திருப்பதை யெகோவா எந்தளவு முக்கியமாகக் கருதுகிறார் என்பது இதிலிருந்து தெரிகிறது.

33 பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கிற சரித்திர சம்பவங்களைப் படிக்கும்போது, யெகோவாவின் மக்கள் தங்களுடைய அறிக்கைகளையும் பதிவுகளையும் எந்தளவு திருத்தமாக வைத்திருந்தார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. நிறைய சந்தர்ப்பங்களில், திட்டவட்டமான எண்ணிக்கைகள் பதிவு செய்யப்பட்டதால்தான் சரித்திரப் பதிவுகளின் வலிமை கூடியது. இந்த உதாரணங்களைப் படித்துப் பாருங்கள்: ஆதியாகமம் 46:27; யாத்திராகமம் 12:37; நியாயாதிபதிகள் 7:7; 2 ராஜாக்கள் 19:35; 2 நாளாகமம் 14:9-13; யோவான் 6:10; 21:11; அப்போஸ்தலர் 2:41; 19:19.

34 யெகோவாவுக்காக நாம் செய்கிற எல்லா சேவைகளையும் வெளி ஊழிய அறிக்கையில் நாம் குறிப்பிடுவதில்லை என்பது உண்மைதான். ஆனாலும், நாம் கொடுக்கும் வெளி ஊழிய அறிக்கைகள் யெகோவாவின் அமைப்புக்கு ரொம்பப் பிரயோஜனமாக இருக்கின்றன. முதல் நூற்றாண்டில், அப்போஸ்தலர்கள் பிரசங்கித்துவிட்டு திரும்பி வந்தபோது, “தாங்கள் செய்த எல்லாவற்றையும், கற்பித்த எல்லாவற்றையும் பற்றி” இயேசுவிடம் சொன்னார்கள். (மாற். 6:30) சிலசமயங்களில், ஊழியத்தில் எந்தெந்த விஷயங்களுக்கு இன்னும் கவனம் செலுத்த வேண்டும் என்பதை வெளி ஊழிய அறிக்கைகள் காட்டும். உதாரணத்துக்கு, சில விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருந்தாலும், வேறு சில விஷயங்களில் முன்னேற்றம் இல்லாதது தெரியவரலாம். ஒருவேளை, பிரஸ்தாபிகளின் வளர்ச்சி விகிதம் சமீப காலங்களில் குறைந்துவருவது தெரியவரலாம். கண்காணிகள், சபையில் உள்ளவர்களை உற்சாகப்படுத்த வேண்டியிருக்கலாம் அல்லது பிரச்சினைகளைச் சரிசெய்ய வேண்டியிருக்கலாம். அவர்கள் வெளி ஊழிய அறிக்கைகளைக் கவனமாகப் பார்த்து, தனிப்பட்டவர்களின் முன்னேற்றத்துக்கோ சபையின் முன்னேற்றத்துக்கோ தடையாக இருக்கிற விஷயங்களைச் சரிசெய்ய முயற்சி செய்வார்கள்.

35 அறிக்கைகள் இன்னொரு விதத்திலும் அமைப்புக்கு உதவியாக இருக்கின்றன. அதாவது, ஊழியம் செய்வதற்கு எந்த இடத்தில் இன்னும் அதிகமான ஆட்கள் தேவை என்பதை அவை காட்டுகின்றன. எந்தெந்த இடங்களில் நிறைய பேர் ஆர்வம் காட்டுகிறார்கள்? எங்கே வளர்ச்சி குறைவாக இருக்கிறது? பைபிளைப் பற்றி மக்களுக்குச் சொல்லிக்கொடுக்க எந்தெந்தப் பிரசுரங்கள் தேவைப்படுகின்றன? இப்படிப்பட்ட விஷயங்களை ஊழிய அறிக்கைகளைப் பார்த்து அமைப்பு தெரிந்துகொள்கிறது. உலகத்தில் இருக்கிற வெவ்வேறு நாடுகளில், பிரசங்க வேலைக்கு எந்தெந்தப் பிரசுரங்கள் தேவைப்படும் என்பதைத் திட்டமிடவும், அதற்கு ஏற்றபடி செயல்படவும் அறிக்கைகள் உதவுகின்றன.

36 அறிக்கைகள் உற்சாகத்தைத் தருகின்றன. நம்முடைய சகோதரர்கள் உலகம் முழுவதும் நல்ல செய்தியைப் பிரசங்கித்து வருவதைப் பற்றிய அறிக்கைகளைக் கேள்விப்படும்போது ரொம்ப சந்தோஷப்படுகிறோம், இல்லையா? அப்படிப்பட்ட அறிக்கைகளைக் கேட்கும்போது யெகோவாவின் அமைப்பு எப்படி வளர்ந்துவருகிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. சகோதர சகோதரிகளுக்கு ஊழியத்தில் கிடைக்கும் அனுபவங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளும்போது நமக்கு சந்தோஷம் கிடைக்கிறது, இன்னும் அதிகமாக ஊழியம் செய்ய வேண்டுமென்ற ஆர்வமும் வருகிறது. (அப். 15:3) வெளி ஊழிய அறிக்கைகளை நாம் தவறாமல் கொடுப்பது முக்கியம். இப்படிச் செய்வதன் மூலம், எல்லா இடங்களிலும் இருக்கிற சகோதர சகோதரிகள்மீது அக்கறை வைத்திருப்பதை நாம் காட்டுவோம். அதோடு, இந்தச் சின்ன விஷயத்தில்கூட, யெகோவாவின் அமைப்பு செய்திருக்கிற ஏற்பாட்டுக்கு அடிபணிந்து நடப்பதைக் காட்டுவோம்.—லூக். 16:10; எபி. 13:17.

இலக்குகள் வைக்க வேண்டும்

37 நம்முடைய வெளி ஊழிய அறிக்கையை இன்னொருவருடைய வெளி ஊழிய அறிக்கையோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. (கலா. 5:26; 6:4) ஒவ்வொருவருடைய சூழ்நிலையும் வித்தியாசமாக இருக்கிறது. அதனால், தனிப்பட்ட விதமாக நாம் எப்படி ஊழியத்தில் முன்னேறலாம் என்பதை யோசித்து, நம்மால் எட்ட முடிந்த இலக்குகளை வைப்பது நல்லது. அந்த இலக்குகளை எட்டும்போது, முன்னேற்றம் செய்த திருப்தி நமக்குக் கிடைக்கும்.

38 “மிகுந்த உபத்திரவத்திலிருந்து” தப்பிக்கப்போகும் மக்களைக் கூட்டிச்சேர்க்கிற வேலையை யெகோவா வேகமாக நடக்க வைக்கிறார் என்பது நன்றாகவே தெரிகிறது. இது சம்பந்தமாக ஏசாயா இப்படித் தீர்க்கதரிசனம் சொன்னார்: “கொஞ்சம் பேர் ஆயிரம் பேராகவும், சாதாரண ஜனங்கள் சக்திபடைத்த தேசமாகவும் ஆவார்கள். யெகோவாவாகிய நானே சரியான நேரத்தில் இது வேகமாக நடக்கும்படி செய்வேன்.” (வெளி. 7:9, 14; ஏசா. 60:22) இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறுகிற காலத்தில் நாம் வாழ்கிறோம். விறுவிறுப்பான இந்தக் கடைசி நாட்களில் நல்ல செய்தியை அறிவிக்கிற ஊழியர்களாக இருப்பது எப்பேர்ப்பட்ட பாக்கியம்!—மத். 24:14.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்