பெண்களே, தலைமை ஸ்தானத்திற்கு ஏன் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்?
“ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆண் தலையாக இருக்கிறான்.”—1 கொ. 11:3.
1, 2. (அ) யெகோவாவின் தலைமை ஸ்தான ஏற்பாட்டைப் பற்றியும் அதற்குக் கீழ்ப்படிவதைப் பற்றியும் அப்போஸ்தலன் பவுல் என்ன எழுதினார்? (ஆ) இந்தக் கட்டுரையில் என்னென்ன கேள்விகளுக்குப் பதில் காண்போம்?
தலைமை ஸ்தானம். இந்த ஏற்பாட்டைச் செய்தவர் யெகோவா தேவனே. இந்த ஏற்பாட்டில் உள்ள வரிசைக்கிரமத்தை அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: ‘ஒவ்வொரு ஆணுக்கும் கிறிஸ்து தலையாக இருக்கிறார்; கிறிஸ்துவுக்குக் கடவுள் தலையாக இருக்கிறார்.’ (1 கொ. 11:3) இயேசு கிறிஸ்து தமக்குத் தலையாக இருக்கிற யெகோவா தேவனுக்குக் கீழ்ப்படிவதைக் கௌரவமானதாகக் கருதினார், அதில் மகிழ்ச்சியும் கண்டார்; மக்களிடம் அவர் கருணையுள்ளவராக, கரிசனையுள்ளவராக, மென்மையானவராக, சுயநலமற்றவராக நடந்துகொண்டார். கிறிஸ்தவ ஆண்களுக்கு அவரே தலைவராக இருக்கிறார். கிறிஸ்தவ ஆண்களும் அவரைப் போலவே மற்றவர்களிடம், குறிப்பாகத் தங்கள் மனைவிகளிடம் நடந்துகொள்ள வேண்டும். இவற்றையெல்லாம் நாம் முந்தின கட்டுரையில் சிந்தித்தோம்.
2 பெண்களைப் பற்றி என்ன சொல்லலாம்? அவர்களுக்குத் தலையாக இருப்பது யார்? “ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆண் தலையாக இருக்கிறான்” என்று பவுல் எழுதினார். கடவுளுடைய தூண்டுதலால் எழுதப்பட்ட அந்தக் குறிப்பைப் பெண்கள் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்? கணவர் சத்தியத்தில் இல்லாவிட்டாலும் அவர்கள் அந்த நியமத்தின்படி நடக்க வேண்டுமா? கணவருடைய தலைமை ஸ்தானத்திற்கு மனைவி கீழ்ப்படிவது, அவர் எடுக்கிற எல்லாத் தீர்மானங்களையும் ஒரு தலையாட்டிப் பொம்மைபோல் ஏற்றுக்கொள்வதை அர்த்தப்படுத்துமா? ஒரு பெண் எப்படி நடந்துகொள்ளும்போது புகழப்படுவாள்?
“ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன்”
3, 4. தலைமை ஸ்தான ஏற்பாட்டிலிருந்து கணவர்களும் மனைவிகளும் நன்மையடைய முடியும் என ஏன் சொல்லலாம்?
3 தலைமை ஸ்தான ஏற்பாட்டைச் செய்த யெகோவா தேவன், ஆதாமைப் படைத்த பிறகு, “மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன்” என்று சொன்னார். பின்பு ஏவாளை உருவாக்கினார்; தனக்கு ஒரு துணை கிடைத்துவிட்டதால், ஆம் ஒரு தோழி கிடைத்துவிட்டதால், ஆதாம் சந்தோஷத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டான். “இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்” என்று வாய்நிறையச் சொன்னான். (ஆதி. 2:18-24) பூஞ்சோலை பூமியில் என்றென்றும் வாழப்போகிற பரிபூரண மனிதகுலத்தை உருவாக்கும் மகத்தான வாய்ப்பு ஆதாம் ஏவாளுக்கு இருந்தது.
4 என்றாலும், ஏதேன் தோட்டத்தில் இவர்கள் கலகம் செய்ததால், இனிமேலும் மனிதரால் பரிபூரணமான விதத்தில் தலைமை வகிக்க முடியாமல் போனது. (ரோமர் 5:12-ஐ வாசியுங்கள்.) ஆனால், தலைமை ஸ்தான ஏற்பாடு மாறவில்லை. கணவர் வகிக்கிற சரியான தலைமை ஸ்தானத்திற்கு மனைவி கீழ்ப்படியும்போது குடும்பத்தில் ஏராளமான நன்மைகள் விளையும், சந்தோஷம் பூத்துக்குலுங்கும். இயேசு மனிதனாகப் பூமிக்கு வருவதற்கு முன்பு, ‘எப்பொழுதும் யெகோவாவின் சமுகத்தில் களிகூர்ந்தார்.’ (நீதி. 8:30) யெகோவாவுக்குக் கீழ்ப்படியும்போது இயேசு எப்படி மகிழ்ச்சி கண்டாரோ அப்படியே கணவர்களுக்குக் கீழ்ப்படியும்போது மனைவிகளும் மகிழ்ச்சி காண்பார்கள். இருந்தாலும், அபூரணத்தின் காரணமாக, கணவர்களால் பரிபூரண தலைமை ஸ்தானத்தை வகிக்க முடிவதில்லை, மனைவிகளாலும் பரிபூரண கீழ்ப்படிதலைக் காட்ட முடிவதில்லை. கணவன் மனைவி இருவருமே தங்களுடைய பங்கை நிறைவேற்ற முடிந்தளவு முயற்சி செய்யும்போது, தலைமை ஸ்தான ஏற்பாட்டிலிருந்து ஆத்ம திருப்தியைக் காண்பார்கள்.
5. தம்பதியர் ரோமர் 12:10-ல் உள்ள ஆலோசனையை ஏன் பின்பற்ற வேண்டும்?
5 மணவாழ்க்கை மணம் கமழ வேண்டுமானால், எல்லாக் கிறிஸ்தவர்களுக்கும் பைபிள் தருகிற பின்வரும் ஆலோசனையைத் தம்பதியர் பின்பற்றுவது அவசியம்: “ஒருவருக்கொருவர் சகோதர அன்பையும் கனிவான பாசத்தையும் காட்டுங்கள்; ஒருவருக்கொருவர் மதிப்புக் கொடுப்பதில் முந்திக்கொள்ளுங்கள்.” (ரோ. 12:10) கணவன் மனைவி இருவருமே, ‘ஒருவருக்கொருவர் கருணையும் கரிசனையும் காட்டவும் ஒருவரையொருவர் தாராளமாக மன்னிக்கவும்’ கடினமாக முயல வேண்டும்.—எபே. 4:32.
மணத்துணை சத்தியத்தில் இல்லாவிட்டால்...
6, 7. சத்தியத்தில் இல்லாத கணவருக்கு மனைவி கீழ்ப்படியும்போது என்ன பலன்கள் கிடைக்கலாம்?
6 உங்கள் மணத்துணை சத்தியத்தில் இல்லாவிட்டால் என்ன செய்வது? பெரும்பாலும், சத்தியத்தில் இல்லாமல் இருப்பது கணவர்களே. அப்படிப்பட்ட ஒரு கணவரிடம் மனைவி எப்படி நடந்துகொள்ள வேண்டும்? “மனைவிகளே, உங்கள் கணவருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்; அப்போது, அவர் கடவுளுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாதவராக இருந்தாலும், உங்கள் கற்புள்ள நடத்தையையும் நீங்கள் காட்டுகிற ஆழ்ந்த மரியாதையையும் பார்த்து உங்கள் நடத்தையினாலேயே விசுவாசியாவதற்குத் தூண்டப்படலாம்; ஆம், நீங்கள் ஒரு வார்த்தைகூடச் சொல்லாமலேயே அவர் விசுவாசியாவதற்குத் தூண்டப்படலாம்” என்று பைபிள் சொல்கிறது.—1 பே. 3:1, 2.
7 சத்தியத்தில் இல்லாத கணவருக்குக் கட்டுப்பட்டு நடக்கும்படியே கடவுளுடைய வார்த்தை மனைவிகளுக்கு ஆலோசனை கொடுக்கிறது. மனைவியின் நல்நடத்தையைப் பார்க்கும்போது, அவள் அருமையான குணங்களை வெளிக்காட்டுவதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்பதை அறிந்துகொள்ள அவளுடைய கணவர் தூண்டப்படலாம். இதனால், அவளுடைய மத நம்பிக்கைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டலாம், காலப்போக்கில் அவர் சத்தியத்திற்கும் வரலாம்.
8, 9. கணவர் ஒருவேளை சத்தியத்தில் ஆர்வம் காட்டாவிட்டாலும் கிறிஸ்தவ மனைவி என்ன செய்யலாம்?
8 கணவர் ஒருவேளை சத்தியத்தில் ஆர்வம் காட்டாவிட்டால் என்ன செய்வது? எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் சரி கிறிஸ்தவக் குணங்களை வெளிக்காட்டும்படியே, அதுவும் எல்லாச் சமயங்களிலும் வெளிக்காட்டும்படியே, மனைவிகளை பைபிள் ஊக்குவிக்கிறது. உதாரணமாக, ‘அன்பு நீடிய பொறுமை உள்ளது’ என்று 1 கொரிந்தியர் 13:4 சொல்கிறது. அப்படியானால், கிறிஸ்தவ மனைவிகள் ‘எப்போதும் மனத்தாழ்மையோடும் சாந்தத்தோடும் நீடிய பொறுமையோடும் நடந்துகொள்ள’ வேண்டும்; அன்பினால் பொறுத்துப்போக வேண்டும். (எபே. 4:2) கடினமான சூழ்நிலைகளிலும்கூட, கடவுளுடைய சக்தியின் உதவியோடு கிறிஸ்தவக் குணங்களை மனைவிகளால் வெளிக்காட்ட முடியும்.
9 “என்னைப் பலப்படுத்துகிற கடவுள் மூலமாக எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பலம் உண்டு” என்று பவுல் எழுதினார். (பிலி. 4:13) ஆம், தன்னுடைய சொந்த பலத்தால் செய்ய முடியாத அநேக காரியங்களைச் செய்யவும் ஒரு கிறிஸ்தவ மனைவிக்குக் கடவுளுடைய சக்தி உதவுகிறது. உதாரணமாக, மணத்துணை கொடுமைப்படுத்தினால் பழிவாங்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்படலாம். என்றாலும், கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் பைபிள் இவ்வாறு சொல்கிறது: “ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதீர்கள்; . . . ‘பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிலடி கொடுப்பேன் என்று யெகோவா சொல்கிறார்.’” (ரோ. 12:17-19) “உங்களில் யாரும் தீங்குக்குத் தீங்கு செய்யாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்; உங்கள் மத்தியில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, மற்ற எல்லாருக்கும் நன்மை செய்ய எப்போதும் நாடுங்கள்” என்று 1 தெசலோனிக்கேயர் 5:15-ல் நாம் வாசிக்கிறோம். சொந்த பலத்தில் செய்ய முடியாததைக் கடவுளுடைய சக்தியின் உதவியோடு நம்மால் செய்ய முடியும். ஆகையால், நம்முடைய குறைகளை நிறைவு செய்வதற்காகக் கடவுளுடைய சக்தியைக் கேட்டு ஜெபிப்பது பொருத்தமானதே!
10. தம்மை மோசமாக நடத்தியவர்களிடமும் இழிவாகப் பேசியவர்களிடமும் இயேசு எவ்வாறு நடந்துகொண்டார்?
10 இயேசு தம்மை மோசமாக நடத்தியவர்களிடமும் இழிவாகப் பேசியவர்களிடமும் நடந்துகொண்ட விதம், நமக்கு மிகச் சிறந்த முன்மாதிரியாக இருக்கிறது. “அவர் சபித்துப் பேசப்பட்டபோது பதிலுக்குச் சபித்துப் பேசவில்லை; துன்புறுத்தப்பட்டபோது மிரட்டவில்லை; மாறாக, நீதியாய்த் தீர்ப்பு வழங்குகிறவரிடம் தம்மையே ஒப்படைத்தார்” என்று 1 பேதுரு 2:23 சொல்கிறது. அவருடைய சிறந்த முன்மாதிரியைப் பின்பற்றும்படி பைபிள் நம்மை அறிவுறுத்துகிறது. எனவே, மற்றவர்கள் உங்களிடம் மோசமாக நடந்துகொள்ளும்போது கோபப்படாதீர்கள். கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் பைபிள் தருகிற அறிவுரையின்படி, “மிகுந்த கரிசனையையும் மனத்தாழ்மையையும் காட்டுங்கள்; யாராவது தீங்கு செய்தால் பதிலுக்குத் தீங்கு செய்யாதீர்கள், யாராவது சபித்துப் பேசினால் பதிலுக்குச் சபித்துப் பேசாதீர்கள்.”—1 பே. 3:8, 9.
வெறும் தலையாட்டிப் பொம்மைகளா?
11. கிறிஸ்தவப் பெண்கள் சிலருக்கு என்ன விசேஷப் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது?
11 கணவனுடைய தலைமை ஸ்தானத்திற்குக் கீழ்ப்படிவது என்றால், மனைவிகள் தலையாட்டிப் பொம்மைகளாக இருக்க வேண்டும் என்று அர்த்தமா? குடும்ப விஷயங்களிலும் சரி மற்ற விஷயங்களிலும் சரி, வாயே திறக்கக் கூடாதா? இல்லவே இல்லை! ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் யெகோவா பல விசேஷப் பொறுப்புகளைத் தந்திருக்கிறார். கிறிஸ்துவோடு சக ராஜாக்களாகவும் குருமார்களாகவும் சேவை செய்யப்போகும் 1,44,000 பேருக்குக் கிடைக்கிற மாபெரும் கௌரவத்தைப் பற்றி நினைத்துப் பாருங்கள். இந்தக் கௌரவத்தைப் பெறுபவர்களில் பெண்களும் அடங்குவர்! (கலா. 3:26-29) அப்படியானால், தாம் செய்திருக்கிற ஏற்பாடுகளில் பெண்களுக்கும் முக்கியப் பங்கை யெகோவா அளித்திருக்கிறார்.
12, 13. பெண்கள் தீர்க்கதரிசனம் சொன்னதற்கு ஓர் உதாரணம் கொடுங்கள்.
12 உதாரணமாக, பூர்வ காலங்களில் பெண்கள் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். யோவேல் 2:28, 29 இவ்வாறு முன்னுரைத்தது: ‘நான் மாம்சமான யாவர்மேலும் என் [சக்தியை] ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்; . . . ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் [சக்தியை] ஊற்றுவேன்.’
13 கி.பி. 33-ஆம் வருடம் பெந்தெகொஸ்தே தினத்தன்று கூடியிருந்த சுமார் 120 சீடர்களில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் இருந்தனர். இந்த முழுத் தொகுதியின் மீது கடவுள் தம்முடைய சக்தியைப் பொழிந்தார். அதனால்தான் யோவேல் தீர்க்கதரிசி முன்னறிவித்ததை பேதுரு மேற்கோள் காட்டிப் பேசினார்; அதை ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொருத்திக் காட்டி, “யோவேல் தீர்க்கதரிசி மூலம் இவ்வாறு அறிவிக்கப்பட்டதே நிறைவேறியிருக்கிறது: ‘கடவுள் சொல்வதாவது, “கடைசி நாட்களில், பலதரப்பட்ட மக்கள்மீதும் என் சக்தியைப் பொழிவேன், அப்போது உங்கள் மகன்களும், உங்கள் மகள்களும் தீர்க்கதரிசனம் சொல்வார்கள்; . . . அந்நாட்களில் என்னுடைய ஊழியக்காரர்கள் மீதும் ஊழியக்காரிகள் மீதும் என் சக்தியைப் பொழிவேன், அப்போது அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்வார்கள்”’” என்று குறிப்பிட்டார்.—அப். 2:16-18.
14. முதல் நூற்றாண்டின்போது நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் பெண்கள் எவ்வாறு பங்கு வகித்தார்கள்?
14 முதல் நூற்றாண்டின்போது, நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் பெண்கள் முக்கியப் பங்கு வகித்தார்கள். கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி மற்றவர்களுக்கு அறிவித்தது மட்டுமல்லாமல் அது சம்பந்தப்பட்ட வேலைகளையும் அவர்கள் செய்தார்கள். (லூக். 8:1-3) உதாரணமாக, பெபேயாள் என்ற சகோதரியை, ‘கெங்கிரேயா சபையில் ஊழியம் செய்து வருகிறவர்’ என்று அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்டார்; தன்னுடைய சக வேலையாட்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தபோது, விசுவாசமுள்ள பெண்களின் பெயர்களையும் குறிப்பிட்டார். ‘நம் எஜமானருக்காகக் கடினமாய் உழைத்து வருகிற பெண்களான திரிபேனாளுக்கும் திரிபோசாளுக்கும் வாழ்த்துத் தெரிவியுங்கள்’ என்று சொன்னார். “எஜமானருக்காகக் கஷ்டப்பட்டுப் பல வேலைகள் செய்த அன்புக்குரிய பெர்சியாளுக்கும்” வாழ்த்துத் தெரிவித்தார்.—ரோ. 16:1, 12.
15. நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் இன்று பெண்கள் எப்படியெல்லாம் பங்கு வகிக்கிறார்கள்?
15 இன்று, உலகெங்கும் நற்செய்தியை அறிவித்து வருகிற 70 லட்சத்திற்கும் அதிகமானோரில் பெரும்பாலோர் பெண்களே; அவர்களில் எல்லா வயதுப் பெண்களும் அடங்குவர். (மத். 24:14) அவர்களில் அநேகர் முழுநேர ஊழியர்களாக, மிஷனரிகளாக, பெத்தேல் அங்கத்தினர்களாக இருக்கிறார்கள். சங்கீதக்காரனாகிய தாவீது இப்படிப் பாடினார்: “யெகோவா கட்டளை தந்தார்; நற்செய்தியை அறிவிக்கிற பெண்களின் கூட்டம் மிகுதி.” (சங். 68:11, NW) இந்த வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மை! நற்செய்தியை அறிவிப்பதிலும் தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றுவதிலும் பெண்கள் வகிக்கிற பங்கை யெகோவா மிக உயர்வாய்க் கருதுகிறார். எனவே, கிறிஸ்தவப் பெண்கள் தலைமை ஸ்தானத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று அவர் சொல்வது தலையாட்டிப் பொம்மைகளாக இருக்க வேண்டுமென்பதை ஒருபோதும் அர்த்தப்படுத்தாது.
தலையாட்டிப் பொம்மைகளாக இல்லாத இரு பெண்கள்
16, 17. மனைவிகள் வெறும் தலையாட்டிப் பொம்மைகளாக இருக்கக் கூடாது என்பதை சாராளின் உதாரணம் எப்படிக் காட்டுகிறது?
16 பெண்களுக்கு யெகோவாவே இப்படிப் பலவித விசேஷப் பொறுப்புகளை அளிக்கிறார் என்றால், கணவர்கள் முக்கியத் தீர்மானங்கள் எடுப்பதற்கு முன் தங்கள் மனைவிகளுடைய கருத்துகளைக் கேட்கத்தானே வேண்டும்? அப்படிக் கேட்பதே ஞானமானது. தங்களுடைய கருத்தைக் கணவர்கள் கேட்காதபோதிலும் அதைத் தெரிவித்த அல்லது புத்திசாலித்தனமாகச் செயல்பட்ட மனைவிகளைப் பற்றி பைபிள் குறிப்பிடுகிறது. இரண்டு உதாரணங்களைக் கவனியுங்கள்.
17 முதலாவதாக, ஆபிரகாமின் மனைவி சாராளை எடுத்துக்கொள்ளுங்கள். ஆபிரகாமின் இரண்டாம் தாரமான ஆகார், தன்னிடம் அவமரியாதையாக நடந்துகொண்டதால் அவளையும் அவளுடைய மகனையும் வீட்டைவிட்டுத் துரத்திவிடும்படி ஆபிரகாமிடம் சாராள் சொல்லிக்கொண்டே இருந்தாள். “இந்தக் காரியம் ஆபிரகாமுக்கு மிகவும் துக்கமாயிருந்தது.” ஆனால், யெகோவாவுக்கு அப்படி இருக்கவில்லை. அப்போது அவர் ஆபிரகாமிடம், ‘அந்தப் பிள்ளையையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாயிருக்க வேண்டாம்; சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள்’ என்று சொன்னார். (ஆதி. 21:8-12) ஆபிரகாம் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்தார்; சாராள் சொன்னதைக் கேட்டு அவள் விருப்பப்படி செய்தார்.
18. அபிகாயில் எப்படித் தானாகவே செயல்பட்டாள்?
18 அடுத்து, செல்வந்தனான நாபாலின் மனைவி அபிகாயிலை எடுத்துக்கொள்ளுங்கள். தாவீது, பொறாமைபிடித்த சவுல் ராஜாவிடமிருந்து தப்பியோடிய சமயம், நாபாலின் மந்தைகள் கூடாரமிட்டிருந்த இடத்தில் சிறிது காலம் தங்கியிருந்தார். தாவீதும் அவருடைய ஆட்களும் இந்தச் செல்வந்தனுடைய சொத்துப்பத்துகளை அபகரிக்கவில்லை; மாறாக, அவற்றுக்குக் காவலாக இருந்தார்கள். நாபாலோ ‘முரடனும் மோசமானவனாகவும்’ இருந்தான்; ஒன்றுக்கும் உதவாதவனாக,’ ‘புத்தியில்லாதவனாக இருந்தான்.’ தாவீதின் ஆட்கள் தங்களுக்கு உணவுப்பொருள்களைத் தரும்படி அவனிடம் போய் மரியாதையுடன் கேட்டபோது, அவன் ஒரேயடியாக மறுத்துவிட்டான். தாவீதின் ஆட்களிடம் ‘சீறினான்.’ ‘நடந்த சம்பவங்களை அபிகாயில் கேள்விப்பட்டபோது என்ன செய்தாள்? நாபாலிடம் எதையுமே சொல்லிக்கொள்ளாமல், “தீவிரமாய் இருநூறு அப்பங்களையும், இரண்டு துருத்தி திராட்சரசத்தையும், சமையல் பண்ணப்பட்ட ஐந்து ஆடுகளையும், ஐந்துபடி வறுத்த பயற்றையும், வற்றலாக்கப்பட்ட நூறு திராட்சக்குலைகளையும், வற்றலான இருநூறு அத்திப்பழ அடைகளையும் எடுத்து,” தாவீதிடமும் அவருடைய ஆட்களிடமும் கொண்டுபோய்க் கொடுத்தாள். அபிகாயில் செய்தது சரியா? சரிதான். அதன்பின் நடந்த சில சம்பவங்கள் அவள் செய்தது சரியே என்பதைக் காட்டுகின்றன. ‘யெகோவா நாபாலை வாதித்ததினால், அவன் செத்தான்’ என்று பைபிள் சொல்கிறது. பிற்பாடு, தாவீது அபிகாயிலைத் திருமணம் செய்துகொண்டார்.—1 சா. 25:3, 14-19, 23-25, 38-42; NW.
‘புகழப்படுகிற பெண்’
19, 20. உண்மையிலேயே புகழப்படுவதற்கு ஒரு பெண் என்ன செய்ய வேண்டும்?
19 யெகோவாவுக்குப் பிரியமான விதத்தில் நடந்துகொள்கிற மனைவியை பைபிள் மெச்சுகிறது. ‘குணசாலியான பெண்ணை’ நீதிமொழிகள் புத்தகம் இப்படிப் புகழ்கிறது: “அவளுடைய விலை முத்துக்களைப் பார்க்கிலும் உயர்ந்தது. அவள் புருஷனுடைய இருதயம் அவளை நம்பும்; அவன் சம்பத்துக் குறையாது. அவள் உயிரோடிருக்கிற நாளெல்லாம் அவனுக்குத் தீமையையல்ல, நன்மையையே செய்கிறாள்.” அதோடு, “தன் வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்; தயையுள்ள போதகம் அவள் நாவின்மேல் இருக்கிறது. அவள் சோம்பலின் அப்பத்தைப் புசியாமல், தன் வீட்டுக்காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாயிருக்கிறாள். அவள் பிள்ளைகள் எழும்பி, அவளைப் பாக்கியவதி என்கிறார்கள்; அவள் புருஷனும் அவளைப் பார்த்து . . . அவளைப் புகழுகிறான்.”—நீதி. 31:10-12, 26-29.
20 உண்மையிலேயே புகழப்படுவதற்கு ஒரு பெண் என்ன செய்ய வேண்டும்? ‘சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், யெகோவாவுக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்’ என்று நீதிமொழிகள் 31:30 சொல்கிறது. யெகோவாவுக்குப் பயப்படுவதில் அவர் ஏற்படுத்தியிருக்கிற தலைமை ஸ்தானத்திற்கு மனமுவந்து கீழ்ப்படிவதும் உட்பட்டிருக்கிறது. “ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆண் தலையாக இருக்கிறான்; ஆணுக்குக் கிறிஸ்து தலையாக இருக்கிறார்; கிறிஸ்துவுக்குக் கடவுள் தலையாக இருக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது.—1 கொ. 11:3.
கடவுளின் பரிசுக்கு நன்றியோடிருங்கள்
21, 22. (அ) கடவுள் தந்துள்ள திருமணம் என்ற பரிசுக்காகத் தம்பதியர் ஏன் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்? (ஆ) யெகோவா ஏற்படுத்தியுள்ள அதிகாரத்திற்கும் தலைமை ஸ்தானத்திற்கும் நாம் ஏன் மரியாதை காட்ட வேண்டும்? (பக்கம் 17-ல் உள்ள பெட்டியைக் காண்க.)
21 திருமண பந்தத்தில் இணைந்திருக்கும் கிறிஸ்தவர்கள் கடவுளுக்கு நன்றியோடிருக்க எத்தனை எத்தனையோ காரணங்கள் உள்ளன. சந்தோஷமான தம்பதியராக, மணவாழ்வுக்கு அவர்கள் மணம் சேர்க்கலாம். கடவுள் தந்திருக்கிற இந்தப் பரிசுக்கு அவர்கள் நன்றி காட்டலாம். ஏனென்றால், மனமொத்த தம்பதியராய் யெகோவாவோடு நடக்க மணவாழ்வு அவர்களுக்கு வாய்ப்பளிக்கிறது. (ரூத் 1:9; மீ. 6:8) மணவாழ்வில் வசந்தம் வீச என்ன தேவை என்பது மணவாழ்வைத் துவக்கி வைத்தவரான யெகோவாவுக்கு நன்றாகத் தெரியும். எனவே, எப்போதும் அவருக்குப் பிரியமாக நடங்கள்; அப்படி நடந்தால், இன்றைய தொல்லைமிகுந்த உலகத்திலும்கூட ‘யெகோவாவுக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலனாக’ இருக்கும்.—நெ. 8:10.
22 தன்னைப் போலவே தன் மனைவியையும் நேசிக்கிற ஒரு கிறிஸ்தவ கணவர் கனிவோடும் கரிசனையோடும் தலைமை ஸ்தானத்தை வகிப்பார். தேவபயமுள்ள அவருடைய மனைவி அவருக்கு உறுதுணையாக இருந்து ஆழ்ந்த மரியாதை காட்டுவாள்; இவ்வாறு அவருடைய அன்பு மனைவியாக விளங்குவாள். இப்படிப்பட்ட தம்பதியர் மணவாழ்க்கைக்கு மகுடம் சேர்ப்பார்கள்; அதுமட்டுமல்ல, கடவுளாகிய யெகோவாவுக்கு மகிமை சேர்ப்பார்கள்; அவரே என்றென்றும் நம் புகழுக்குரியவர்!
நினைவிருக்கிறதா?
• தலைமை ஸ்தானம் சம்பந்தமாகவும் அதற்குக் கீழ்ப்படிவது சம்பந்தமாகவும் யெகோவா என்ன ஏற்பாடு செய்திருக்கிறார்?
• தம்பதியர் ஏன் ஒருவருக்கொருவர் மதிப்புக் காட்ட வேண்டும்?
• சத்தியத்தில் இல்லாத கணவரிடம் கிறிஸ்தவ மனைவி எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
• முக்கியத் தீர்மானங்கள் எடுப்பதற்கு முன் கணவர்கள் ஏன் தங்கள் மனைவிகளின் கருத்துகளைக் கேட்க வேண்டும்?
[பக்கம் 17-ன் பெட்டி]
அதிகாரத்தில் உள்ளோருக்கு நாம் ஏன் மதிப்புக் காட்ட வேண்டும்?
பரலோகத்திலும் சரி பூமியிலும் சரி, அதிகாரத்தையும் தலைமை ஸ்தானத்தையும் யெகோவா ஏற்படுத்தி வைத்திருக்கிறார். எதற்காக? புத்திக்கூர்மையுள்ள தம்முடைய படைப்புகளின் நன்மைக்காக! சுயமாகத் தீர்மானமெடுக்கிற சுதந்திரத்தைப் பயன்படுத்துவதற்கும், ஒற்றுமையாகச் சேவை செய்து அவருக்கு மகிமை சேர்ப்பதற்கும் இவை அவர்களுக்கு வாய்ப்பளிக்கின்றன.—சங். 133:1.
பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் அடங்கிய சபை, இயேசு கிறிஸ்துவின் அதிகாரத்தையும் தலைமை ஸ்தானத்தையும் ஏற்றுக்கொண்டிருக்கிறது. (எபே. 1:22, 23) யெகோவாவின் அதிகாரத்தை அவருடைய மகன் இயேசு ஏற்றுக்கொண்டிருப்பதால், “எல்லாவற்றையும் அவருக்குக் கீழ்ப்படுத்திய கடவுளுக்கு . . . கீழ்ப்பட்டிருப்பார். அப்போது, கடவுளே எல்லாருக்கும் எல்லாமுமாக இருப்பார்.” (1 கொ. 15:27, 28) அப்படியானால், சபையிலும் குடும்பத்திலும் கடவுள் ஏற்படுத்தியுள்ள தலைமை ஸ்தானத்தை அவருடைய ஊழியர்களான நாம் மதித்து நடப்பது எவ்வளவு முக்கியம்! (1 கொ. 11:3; எபி. 13:17) அவ்வாறு நடந்தால், யெகோவாவின் அங்கீகாரத்தையும் ஆசீர்வாதத்தையும் கண்டிப்பாகப் பெறுவோம்.—ஏசா. 48:17.
[பக்கம் 13-ன் படம்]
தெய்வீகக் குணங்களை வெளிக்காட்ட கிறிஸ்தவ மனைவிக்கு ஜெபம் உதவும்
[பக்கம் 15-ன் படங்கள்]
கடவுளுடைய அரசாங்கத்திற்காக மும்முரமாய் உழைக்கும் பெண்களை யெகோவா உயர்வாய்க் கருதுகிறார்