வாசகர் கேட்கும் கேள்விகள்
‘சியர்ஸ்’ சொல்லிக் குடிக்கக்கூடாது என்று பைபிள் எங்கேயும் சொல்லவில்லை. இருந்தாலும், யெகோவாவின் சாட்சிகள் ஏன் ‘சியர்ஸ்’ சொல்லிக் குடிப்பதில்லை?
வைன் குடிக்கும்போது (அல்லது வேறு ஏதாவது மதுபானம் குடிக்கும்போது) ‘சியர்ஸ்’ சொல்லிக் குடிக்கிற பழக்கம் நிறைய இடங்களில் ரொம்ப காலமாகவே இருக்கிறது. ஆனால், ஒவ்வொரு இடத்திலும் வித்தியாச வித்தியாசமாக இதைச் செய்வார்கள். ‘சியர்ஸ்’ சொல்லும்போது, சிலர் தங்களுடைய க்ளாஸ்களை ஒன்றோடு ஒன்று லேசாக மோதிக்கொள்வார்கள். பொதுவாக ‘சியர்ஸ்’ சொல்லும் ஒருவர், மற்றவர்கள் ரொம்ப நாளுக்கு சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் வாழ வேண்டும் என்று வாழ்த்துவார் அல்லது மற்றவர்கள் தன்னை அப்படி வாழ்த்த வேண்டும் என்று சொல்லிக் கேட்பார். அப்படி அவர் செய்யும்போது அங்கே இருக்கிற மற்றவர்களும் அவரோடு சேர்ந்து ‘சியர்ஸ்’ என்று சொல்வார்கள். அல்லது, தங்களுடைய க்ளாஸ்களை உயர்த்தி காட்டிவிட்டு அதிலிருந்து கொஞ்சம் வைன் குடிப்பார்கள். இந்தப் பழக்கத்தில் எந்தத் தவறும் இல்லை என்றும், இது மற்றவர்களுக்கு மதிப்பு கொடுக்கிற ஒரு விஷயம்தான் என்றும் நிறைய பேர் நினைக்கிறார்கள். ஆனால், யெகோவாவின் சாட்சிகள் இப்படியெல்லாம் செய்யாமல் இருப்பதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன.
மற்றவர்கள் சந்தோஷமாகவோ ஆரோக்கியமாகவோ இருக்கக்கூடாது என்று அவர்கள் நினைக்கிறார்களா? இல்லை. முதல் நூற்றாண்டில் இருந்த ஆளும் குழு, சபைகளுக்குக் கடிதம் எழுதியபோது “சிறப்புடன் வாழ்வீர்கள், நலமாயிருங்கள்” என்று சொல்லி அந்தக் கடிதத்தை முடித்தது. (அப்போஸ்தலர் 15:29) இந்த வார்த்தைகளை ‘ஆரோக்கியமாக இருங்கள்’ என்றுகூட சொல்லலாம். யெகோவாவின் ஊழியர்களில் சிலர், ராஜாக்களை ‘என் எஜமானே, என்றென்றும் வாழ்க!’ “ராஜா நீடூழி வாழ்க!” என்றெல்லாம் சொல்லியும் வாழ்த்தி இருக்கிறார்கள்.—1 ராஜாக்கள் 1:31; நெகேமியா 2:3.
‘சியர்ஸ்’ சொல்லிக் குடிக்கிற பழக்கம் எப்படி ஆரம்பித்தது? “க்ளாஸில் வைன் ஊற்றி மற்றவர்களுடைய ‘ஆரோக்கியத்துக்காக’ வாழ்த்திக் குடிக்கிற பழக்கம், பழங்காலத்தில் செய்யப்பட்ட ஒரு மதச் சடங்கிலிருந்து வந்திருக்கிறது. அந்தச் சடங்கை செய்தவர்கள் தெய்வங்களுக்காகவும் இறந்தவர்களுக்காகவும் வைனைக் குடிப்பார்கள். (இப்படிக் குடிப்பதை அவர்களுக்குக் கொடுக்கிற பலியாக நினைத்தார்கள்.) கிரேக்கர்களும் ரோமர்களும் சாப்பிடும்போது தங்களுடைய தெய்வங்களுக்குப் படைப்பதற்காக பானங்களை ஊற்றுவார்கள். பிறகு, தெய்வங்களையும் இறந்தவர்களையும் கௌரவப்படுத்த வாழ்த்துச் சொல்லிவிட்டு வைன் குடிப்பார்கள்” என்று த என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா (1910), தொகுப்பு 13, பக்கம் 121-ல் சொல்லியிருப்பதாக காவற்கோபுரம், ஜனவரி 1, 1968 சொன்னது. “இப்படி, தெய்வங்களுக்குப் படைக்கும்போது மற்ற மனிதர்களும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக வாழ்த்துச் சொல்லி அந்த வைனை குடித்திருப்பார்கள்” என்றும் அந்த என்ஸைக்ளோப்பீடியா சொன்னது.
இந்தப் பழக்கத்தை மக்கள் இன்றைக்கும் அப்படித்தான் பார்க்கிறார்களா? 1995-ல் வந்த இன்டர்நேஷனல் ஹேன்ட்புக் ஆன் ஆல்கஹால் அன்ட் கல்சர் இப்படிச் சொல்கிறது: “வாழ்த்துச் சொல்லிக் குடிக்கும் பழக்கத்தை இன்றைக்கு மக்கள் மதத்தோடு சம்பந்தப்படுத்தி செய்யவில்லை என்றாலும், ஆரம்பக் காலத்தில் புனித பானத்தைத் தெய்வங்களுக்குப் படைக்கிற ஒரு சடங்கிலிருந்துதான் அந்தப் பழக்கம் வந்திருக்கிறது. அந்தச் சடங்கில், இரத்தத்தையோ வைனையோ தெய்வங்களுக்குப் படைத்துவிட்டு, ‘நீடூழி வாழ வேண்டும்!’ ‘ஆரோக்கியமாக வாழ வேண்டும்!’ என்று வேண்டிக்கொள்வார்கள்.”
ஒரு பொருளோ வடிவமோ பழக்கமோ ஆரம்பக் காலத்தில் பொய் மதத்தோடு சம்பந்தப்பட்டிருந்தது என்பதற்காக யெகோவாவை வணங்கும் ஒருவர் அவற்றை பயன்படுத்தவோ அந்தப் பழக்கத்தை செய்யவோ கூடாது என்று அர்த்தம் கிடையாது. ஒரு உதாரணத்தை யோசித்துப் பாருங்கள்: “அந்தக் காலத்தில் இருந்த சில மதங்களில் மாதுளைப் பழத்தை ஒரு புனிதச் சின்னமாக பயன்படுத்தினார்கள்” என்று ஒரு பிரபல பைபிள் என்ஸைக்ளோப்பீடியா சொல்கிறது. இருந்தாலும், கடவுள் இஸ்ரவேலர்களிடம் மாதுளைப் பழத்தின் வடிவத்தை செய்து தலைமைக் குருவின் அங்கியையும் ஆலயத்தில் இருந்த தூண்களையும் அலங்கரிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார். (யாத்திராகமம் 28:33; 2 ராஜாக்கள் 25:17) அதுபோலவே, கல்யாணத்தில் மோதிரம் போடும் பழக்கமும்கூட பொய் மதத்தில் இருந்து வந்திருக்கலாம். ஆனால், இன்றைக்கு யாருமே அதை மதத்தோடு சம்பந்தப்படுத்திப் பார்ப்பதில்லை. வெறுமனே ஒருவர் கல்யாணமானவர் என்பதைக் காட்டும் அடையாளமாகத்தான் அதைப் பார்க்கிறார்கள்.
பொய் தெய்வங்களை வணங்குவதற்காக வைனைப் பயன்படுத்துவதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். பாகால் தெய்வத்தை வணங்கின சீகேமின் ஆட்கள் “தங்களுடைய தெய்வத்தின் கோயிலுக்குள் போய்ச் சாப்பிட்டார்கள், குடித்தார்கள், [கிதியோனின் மகன்] அபிமெலேக்கைச் சபித்தார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (நியாயாதிபதிகள் 9:22-28) யெகோவாவை வணங்கும் ஒருவர் அந்தக் கூட்டத்தோடு சேர்ந்து குடித்துவிட்டு அபிமெலேக்கைச் சபித்திருப்பாரா? இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்த சமயத்தைப் பற்றி ஆமோஸ் இப்படி எழுதினார்: ‘பலிபீடங்களுக்குப் பக்கத்தில் உட்காருகிறார்கள். அபராதப் பணத்தில் திராட்சமது வாங்கி தங்கள் கோயில்களில் குடிக்கிறார்கள்.’ (ஆமோஸ் 2:8) யெகோவாவுக்கு உண்மையாக இருந்தவர்கள், மற்ற தெய்வங்களுக்குப் படைப்பதற்காக திராட்சை மதுவை ஊற்றி இருப்பார்களா? அதுபோன்ற சமயங்களில் குடித்திருப்பார்களா? (எரேமியா 7:18) அல்லது, தங்கள் வைன் க்ளாஸை தூக்கி, மற்றவர்களை ஆசீர்வதிக்கச் சொல்லி தெய்வங்களிடம் கேட்டிருப்பார்களா?
சொல்லப்போனால், யெகோவாவை வணங்கின ஆட்களும்கூட சிலசமயங்களில் வானத்தை நோக்கி கைகளை உயர்த்தி, நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் உண்மைக் கடவுளுக்கு முன்பாக கைகளை உயர்த்தி கேட்டிருக்கிறார்கள். “யெகோவாவுடைய பலிபீடத்தின் முன்னால் சாலொமோன் நின்றார். . . . அப்போது அவர் தன்னுடைய கைகளை வானத்துக்கு நேராக விரித்து, ‘இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவே, . . . உங்களைப் போல் வேறெந்தக் கடவுளும் இல்லை. . . . பரலோகத்திலுள்ள உங்கள் குடியிருப்பிலிருந்து [எங்கள் வேண்டுதல்களைக்] கேட்டு எங்களை மன்னியுங்கள்’ ” என்று சாலொமோன் வேண்டியதாக பைபிளில் படிக்கிறோம். (1 ராஜாக்கள் 8:22, 23, 30) அதுபோலவே, எஸ்றா “யெகோவாவைப் புகழ்ந்தார். உடனே ஜனங்கள் எல்லாரும் ‘ஆமென், ஆமென்!’ என்று சொல்லி, தங்கள் கைகளை வானத்துக்கு நேராக விரித்தார்கள். பின்பு, யெகோவாவுக்கு முன்பாக மண்டிபோட்டு, தரைவரைக்கும் குனிந்து வணங்கினார்கள்.” (நெகேமியா 8:6; 1 தீமோத்தேயு 2:8) யெகோவாவுக்கு உண்மையாக இருந்த இவர்கள் எல்லாரும் ஏதோவொரு அதிர்ஷ்ட தெய்வத்துக்கு முன்பாக தங்களுடைய கைகளை உயர்த்தவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.—ஏசாயா 65:11.
இன்றைக்கு ‘சியர்ஸ்’ சொல்லிக் குடிக்கிற நிறைய பேர், ஏதோவொரு தெய்வத்திடமிருந்து ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அப்படிச் செய்யாமல் இருக்கலாம். அதேசமயத்தில், எதற்காக அப்படிச் செய்கிறார்கள் என்ற காரணம்கூட அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். அவர்கள் காரணமே தெரியாமல் செய்கிறார்கள் என்பதற்காக உண்மைக் கிறிஸ்தவர்களும் அவர்களைப் போலவே செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை.
இதுபோலவே பிரபலமாக இருக்கும் இன்னும் நிறையப் பழக்கவழக்கங்களை யெகோவாவின் சாட்சிகள் செய்வதில்லை என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். உதாரணத்திற்கு, நிறைய பேர் தேசியச் சின்னங்களுக்கு அல்லது கொடிக்கு ‘சல்யூட்’ அடிப்பது போன்ற சைகைகளை செய்கிறார்கள். இதை ஒரு வழிபாடாக அவர்கள் பார்ப்பதில்லை. அவர்கள் அப்படிச் செய்யும்போது உண்மைக் கிறிஸ்தவர்கள் அவர்களைத் தடுப்பதும் இல்லை, அவர்களோடு சேர்ந்து அதைச் செய்வதும் இல்லை. மற்றவர்களைக் காயப்படுத்தக்கூடாது என்பதற்காக அதுபோன்ற நிகழ்ச்சிகளை யெகோவாவின் சாட்சிகள் தவிர்க்கிறார்கள். அப்படியே தவிர்க்க முடியாத சூழ்நிலைமை ஏற்பட்டால்கூட, தேசப்பற்றைக் காட்டும் சைகைகளை செய்யாதபடி பார்த்துக்கொள்கிறார்கள். ஏனென்றால், அப்படிச் செய்வது பைபிளுக்கு எதிராக இருக்கும். (யாத்திராகமம் 20:4, 5; 1 யோவான் 5:21) க்ளாஸ் தூக்கி ‘சியர்ஸ்’ சொல்லிக் குடிக்கும் பழக்கத்தை மதச் சம்பந்தப்பட்ட பழக்கமாக இன்றைக்கு நிறைய பேர் பார்ப்பதில்லை என்றாலும், அது மதத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறது என்பது கிறிஸ்தவர்களுக்குத் தெரியும். அப்படிச் செய்வது ஏதோ ‘அதிர்ஷ்ட தெய்வத்திடம்’ நாம் உதவி கேட்பதுபோல் மற்றவர்களுக்குத் தோன்றலாம் என்றும் அவர்களுக்குத் தெரியும். அதனால்தான், கிறிஸ்தவர்கள் ‘சியர்ஸ்’ சொல்லிக் குடிப்பதில்லை.—யாத்திராகமம் 23:2.