வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
ஆதியாகமம் 38:15, 16 குறிப்பிடுகிறபடி, வேசி என நினைத்து ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வதற்கு யூதாவை தூண்டிய சம்பவங்கள் யாவை?
வேசி என நினைத்து ஒரு பெண்ணுடன் யூதா உடலுறவு கொண்டபோதிலும் உண்மையில் அவள் ஒரு வேசி அல்ல. ஆதியாகமம் 38-ம் அதிகாரத்தின்படி சம்பவித்தது இதுவே:
யூதாவின் மூத்த மகன் “கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனாயிருந்ததினால்” தாமாரின் மூலம் அவனுக்கு குமாரர்கள் பிறப்பதற்கு முன்பே சாகடிக்கப்பட்டான். (ஆதியாகமம் 38:7) கொழுந்தனை திருமணம் செய்துவைக்கும் பழக்கம் அந்தக் காலத்தில் இருந்தது; அதாவது, வாரிசு இல்லாமல் ஒருவன் இறந்துபோனால் அந்த விதவைக்கு அவனுடைய சகோதரனே வாரிசை உருவாக்க வேண்டும். ஆனால் யூதாவின் இரண்டாவது மகன் ஓனான் இந்தக் கடமையை நிறைவேற்ற மறுத்துவிட்டான். ஆகவே, கடவுள் அவனை நியாயந்தீர்த்ததால் அவனும் இறந்துபோனான். தனது மூன்றாம் மகன் சேலா பெரியவனாக வளர்ந்த பிற்பாடு அவனை தாமாருக்கு மணமுடிக்கலாம் என்று எண்ணி தன் மருமகளை அவளுடைய தகப்பன் வீட்டிற்கு யூதா அனுப்பி வைத்தார். ஆனால் வருடங்கள் கடந்த பிறகும் தாமாருக்கு சேலாவை மணமுடித்துக் கொடுக்க யூதா தவறிவிட்டார். எனவே, இஸ்ரவேலனாகிய தனது மாமனார் யூதாவின் மனைவி இறந்த பின்பு, அவர் மூலம் தனக்கென்று ஒரு வாரிசை உருவாக்கிக்கொள்ள தாமார் திட்டமிட்டாள். அத்திட்டத்தின்படி, தான் யாரென அடையாளம் தெரியாதபடிக்கு ஒரு கோயில் வேசியாக மாறுவேடம் போட்டுக்கொண்டு, யூதா அடிக்கடி கடந்துபோகும் பாதையில் உட்கார்ந்து கொண்டாள்.
வேசி கோலத்தில் அமர்ந்திருந்த பெண் தாமார் என அறியாமல் யூதா அவளுடன் உடலுறவு கொண்டார். தன் விவேகத்தைப் பயன்படுத்தி, உடலுறவுக்கு கைமாறாக அவரிடமிருந்து அடைமானமாக சில பொருட்களையும் வாங்கிக்கொண்டாள்; இதை வைத்தே அவர் மூலம் தான் கர்ப்பமானதை பிற்பாடு நிரூபித்தாள். உண்மை வெளியானபோது யூதா அவள் மீது குற்றம் சுமத்தவில்லை, மாறாக, “என்னிலும் அவள் நீதியுள்ளவள்; அவளை என் குமாரனாகிய சேலாவுக்குக் கொடாமற்போனேனே” என்று தாழ்மையுடன் கூறினார். அதற்கு ‘அப்புறம் அவர் அவளைச் சேரவில்லை.’—ஆதியாகமம் 38:26.
வாக்குக் கொடுத்தபடி தனது மகன் சேலாவை தாமாருக்கு கொடுக்காமல் போன விஷயத்தில் யூதா தவறு செய்துவிட்டார். கோயில் வேசி என நினைத்து ஒரு பெண்ணுடன் உறவு கொண்டதிலும் தவறிவிட்டார். இது கடவுளின் நோக்கத்திற்கு முரணாக இருந்தது, ஏனென்றால் திருமண ஏற்பாட்டிற்குள் மட்டுமே பாலுறவு அனுமதிக்கப்பட்டிருந்தது. (ஆதியாகமம் 2:24) ஆனால் உண்மையில் யூதா ஒரு வேசியுடன் உறவு கொள்ளவில்லை. மாறாக, கொழுந்தனை மணமுடிக்கும் முறைமையின்படி தன்னை அறியாமலேயே சேலாவின் ஸ்தானத்தை வகித்து, பிறக்கும் குழந்தைக்கு சட்டப்பூர்வ தகப்பனானார்.
தாமாரைப் பொறுத்தவரை, அவளுடைய செயல் ஒழுக்கயீனமான செயல் அல்ல. அவளுக்குப் பிறந்த இரட்டைக் குமாரர்கள் வேசிக்குப் பிறந்த பிள்ளைகளாக கருதப்படவில்லை. கொழுந்தனை மணமுடிக்கும் வழக்கத்தின்படி மோவாபிய பெண் ரூத்தை பெத்லகேம் ஊரானாகிய போவாஸ் விவாகம் செய்துகொண்டபோது, தாமாரின் மகனாகிய பேரேசைக் குறித்து பெத்லகேம் ஊரைச் சேர்ந்த மூப்பர்கள் நல்ல விதமாகவே பேசினார்கள். அவர்கள் போவாஸிடம் இவ்வாறு கூறினார்கள்: “இந்தப் பெண்ணிடத்திலே கர்த்தர் உனக்கு அருளிச் செய்யப்போகிற சந்தானத்தினாலே, உன் வீடு தாமார் யூதாவுக்குப் பெற்ற பேரேசின் வீட்டைப் போல ஆகக்கடவது.” (ரூத் 4:12) பேரேசும்கூட இயேசு கிறிஸ்துவின் முன்னோர்கள் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கிறார்.—மத்தேயு 1:1-3; லூக்கா 3:23-33.