உயிர்—போற்றிப் பேணிக் காக்கவேண்டிய ஒரு பரிசு
யெகோவா தேவன் பிள்ளைபெறும் சிலாக்கியத்தை மனித குடும்பத்திற்குக் கொடுத்தபோது, அது என்னே ஒரு பரிசாக இருந்தது! தங்களுடைய திருமண ஐக்கியத்தின் இந்தச் சிறிய உற்பத்தியைப் பேணிக் காப்பதற்காகத் தயாராக இருந்த, ஒருவரையொருவர் நேசித்த, மகிழ்ச்சியான ஒரு தம்பதியின் காத்திருந்த கரங்களால் பெறப்படுவதற்காக ஓர் அழகிய குழந்தை வரும். அந்தக் குழந்தையின் வாழ்க்கை திறக்கப்படும்போது அந்தக் குடும்பத்திற்குச் சந்தோஷம் மட்டுமே காத்திருக்கும்.
ஆனால் ஆதாம் ஏவாளின் பாவம் மனிதகுலத்தில் பிறந்த குழந்தைகளுக்குத் துயரமான விளைவுகளையே கொண்டுவந்தது. பாவத்தின் விளைவாக, நம்முடைய முதல் தாய் பிள்ளைகளைப் பெறும்போது துன்பத்தையும், சரீரப்பிரகாரமான வேதனையையும் அனுபவிக்கும்படி சபிக்கப்பட்டாள். அவர்களுடைய சந்ததி பிறந்த பாவம் நிறைந்த சூழ்நிலையும், பிள்ளை வளர்ப்பைச் சமாளிக்கமுடியாத ஒரு சவாலாக்கியது. ஆகவே, இன்றைய சிக்கலான உலகில், ஒரு குழந்தையின் கருத்தரிப்புப் பெரும்பாலும் சந்தோஷத்துடன் வரவேற்கப்படுவதில்லை என்பதில் ஆச்சரியமொன்றுமில்லை. இருப்பினும், பிறவாக் குழந்தையைப்பற்றிய சிருஷ்டிகரின் கருத்து என்ன? ஒழுக்கப் பண்புகளின் மாறிவரும் அலைகளோடு அவருடைய கருத்தும் மாறிவிட்டதா? நிச்சயமாகவே இல்லை. இவ்வுலகின் பிறவாக் குழந்தைகளைப்பற்றிய அவருடைய கருத்தும், அக்கறையும் என்றும் மாறாததாய் இருக்கின்றன.
தாய்க்குள் தனிச்சிறப்பான ஒரு தனி மனிதன் வளர்ந்து வருகிறான் என்பதாக வேத எழுத்துக்கள் தெளிவாக்குகின்றன. உயிர் கருத்தரிப்பின்போது தொடங்குகிறது. இவ்வுலகத்திற்குள் பிறப்பதானது கடவுள் ஏற்கெனவே பார்த்த குழந்தையை வெறுமனே மனிதனுக்கு வெளிப்படுத்துகிறது. ‘ஒவ்வொரு குழந்தையும் கர்ப்பந்திறந்து’ பிறக்கிறதைப்பற்றி எசேக்கியேல் பேசுகிறார். (எசேக்கியேல் 20:26) யோபு “என் தாய் வயிற்றின் கதவுகள்” (கத்தோலிக்க பைபிள்) என்பதாக விவரித்து, கருச்சிதைவை “வெளிச்சத்தைக் காணாத சிசுக்கள்” என்றழைக்கிறார்.—யோபு 3:10, 16.
கருப்பையில் வளரும்போதே, அந்த மென்மையான உயிருக்கான யெகோவா தேவனின் கனிவான கரிசனையைக் கவனியுங்கள். எரேமியாவிடம் அவர் சொன்னார்: ‘நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணினேன்.’ (எரேமியா 1:5) தாவீது சொன்னார்: “நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாய் உருவாக்கப்பட்டபோது, என் எலும்புகள் உமக்கு மறைவாய் இருக்கவில்லை. என் கருவை உம்முடைய கண்கள் கண்டது.” (சங்கீதம் 139:15, 16) யோபு கடவுளை “கர்ப்பத்தில் என்னை உண்டுபண்ணினவர்” என்றழைத்து, அவர் “கர்ப்பத்தில் எங்களை உருவாக்கினார்” என்றும் கூறுகிறார்.—யோபு 31:15.
ஆனால் பிள்ளை தேவையில்லை என்றிருக்கிற, மனமுடைந்துபோயிருக்கும் கருக்கொண்டுள்ள தாயின்மீது கடவுளுக்கிருக்கும் அக்கறையைப்பற்றி என்ன? எல்லா ஆட்களையும்விட, பெற்றோராய் இருப்பதன் கனமான பொறுப்புகளைச் சிருஷ்டிகர் உணருகிறார். கருக்கொண்டுள்ள ஒரு தாய், கடினமான சூழ்நிலைமைகளிலிருந்தாலும், தெய்வீகத் தேவைகளுக்கான மரியாதையின் காரணமாக அவளுடைய குழந்தையை வைத்துக்கொள்வதைத் தெரிந்தெடுத்தால், அவளுடைய தீர்மானத்தைக் கடவுள் ஆசீர்வதிக்கமாட்டாரா? சரியாகவே ஒரு பெற்றோர் மகிழ்ச்சியான ஒரு குழந்தையை வளர்ப்பதில் அவருடைய உதவிக்காக ஜெபிக்கக்கூடும் மற்றும் ஜெபிக்கவேண்டும். தம்முடைய வார்த்தையின் பக்கங்கள்மூலம், பிள்ளைகளை வளர்ப்பதன் பேரில் கிடைக்கக்கூடிய அறிவுரைகளிலே தலைச் சிறந்த அறிவுரைகளைக் கடவுள் ஏற்கெனவே கொடுத்திருக்கிறார். பைபிள் நியமங்களைக் குடும்ப வாழ்க்கையில் பொருத்திப் பிரயோகிப்பது ஆசீர்வதிக்கப்பட்ட பலன்களைக் கொடுக்கும். தெய்வ பயமுள்ள பிள்ளைகளை வளர்ப்பதன் சந்தோஷங்களும், பலன்களும் செய்திருக்கும் எந்தத் தியாகங்களையும்விட மிகையாகவே இருக்கும். பெருமைப்படும் எந்தப் பெற்றோரும் இதை ஒப்புக்கொள்ளமுடியும்.
அந்தக் குழந்தை கற்பழிப்பின் அல்லது முறைதகாப் புணர்ச்சியின் விளைவாக இருக்குமானால், யெகோவா காரியங்களை எவ்வகையிலேனும் வித்தியாசமாக நோக்குகிறாரா? அந்தச் செயல் அந்தத் தாய்க்கு எதிராக செய்த குற்றச் செயலாக இருந்தாலும், அந்தக் குழந்தையைக் குற்றம் சொல்வதற்கில்லை. அதன் உயிரை மாய்ப்பது ஒரு வன்முறையை மற்றொரு வன்முறையால் எதிர்ப்பதாகவே ஆகும். அப்படிப்பட்ட பலியாட்கள் அனுபவிக்கக்கூடிய உணர்ச்சிசம்பந்தமான அதிர்ச்சியை நிச்சயமாகவே யெகோவா உணருகிறார். ஆகவே தாயும் சேயும் அதன் பின்விளைவுகளை ஒரு சமநிலையான வழியில் சமாளிக்க அவர் உதவிசெய்யக்கூடும்.
கருத்தரித்த ஒரு பெண் நிறைவுறும் காலம்வரை அவளுடைய குழந்தையைச் சுமந்திருப்பது அவளுடைய உயிரை ஆபத்துக்குள்ளாக்கலாம் என ஒரு மருத்துவர் தெரிவிப்பாராகில் என்ன? டாக்டர் ஏலன் குட்மாகர் இவ்வாறு கூறினார்: “இன்று அநேகமாக எந்தக் கர்ப்பிணியையும்—அவள் புற்றுநோய் அல்லது வெள்ளணுப்புற்று போன்ற மரணத்துக்கேதுவான ஒரு நோயால் அவதிப்பட்டாலொழிய—கருத்தரிப்பிலிருந்து உயிரோடு பாதுகாப்பது சாத்தியமானதே. மேலும் அவள் அவ்வாறு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால், கருக்கலைப்பு அவளுடைய உயிரை நீட்டிக்க அதிக வாய்ப்பில்லை, அதைவிட அவளுடைய உயிரைப் பாதுகாக்க வாய்ப்பேயில்லை.” தி என்ஸைக்ளோப்பீடியா அமெரிக்கானா கூறுவதாவது: “வினைமையான மருத்துவப் பிரச்னைகள் மத்தியிலும் பெரும்பாலான கர்ப்பிணிகளைக் கருத்தரிப்பிலிருந்து பாதுகாப்பது சாத்தியமாகையால், தாயின் ஆரோக்கியத்தைக் காக்க சில கருக்கலைப்புகளே செய்யப்படவேண்டியிருக்கின்றன. பெரும்பாலான கருக்கலைப்புகள் குழந்தை ஒன்று பெறுவதைத் தவிர்ப்பதற்காக வேண்டப்படுகின்றன.” எனவே அத்தகைய நிலைமைகள் மிக அபூர்வமாக ஏற்படுகின்றன. எனினும், குழந்தை பிறக்கும் சமயத்தில் அவ்வாறு ஏற்படின், பிறகு தாயின் உயிருக்கும், பிள்ளையின் உயிருக்கும் இடையில் பெற்றோர் ஒரு தெரிவைச் செய்யவேண்டும். அது அவர்களுடைய தீர்மானம்.
நம்முடைய இனப்பெருக்கத் திறமைகளை உபயோகிப்பதன்பேரில், உயிரின் சிருஷ்டிகர் தெளிவான வழிநடத்துதல்களைக் கொடுத்திருக்கிறார் என்பதில் ஆச்சரியமேதுமுண்டா? அவருடைய பார்வையில், ஓர் உயிரை மாய்ப்பது பாவமாவதுபோல, தாங்கள் பேணிக்காக்க உத்தேசிக்காத ஓர் உயிரை உண்டாக்குவதும் பாவமாகும்.
நிச்சயமாக இருக்கவேண்டுமானால், இந்த விவாதம் இந்த ஒழுங்குமுறையின் முடிவுவரை தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். ஆனால் உயிரின் சிருஷ்டிகராகிய யெகோவா தேவனையும், அவருடைய சட்டங்களைப் போற்றி கைக்கொள்பவர்களையும் பொறுத்தவரை, எந்தவித முரண்பாடுமில்லை. உயிர் விலையேறப்பெற்ற—அதன் தொடக்கத்திலிருந்தே போற்றிப் பேணி வளர்க்கப்படவேண்டிய—ஒரு பரிசாகும். (g93 5/22)
[பக்கம் 11-ன் பெட்டி]
கருக்கலைப்பைக் கடவுளின் நோக்குநிலையில் கருதுதல்
திருமணக்கட்டிற்கு வெளியே ஒரு குழந்தையைக் கருத்தரித்து, தாய்மைத்துவத்திற்குத் தயாரின்றி இருக்கும் அந்த இளம் பெண்ணைப்பற்றி என்ன? இந்த உலகிற்குள் ஒரு குழந்தையைக் கொண்டுவர அவள் அனுமதிக்கப்படவேண்டுமா? அதன் தாய் ஏதோ விவேகமின்றியும் ஒழுக்கங்கெட்ட வழியிலும் நடந்துகொண்டாள் என்பதற்காக, அந்தக் குழந்தையைப்பற்றியுள்ள கடவுளின் உணர்ச்சிகள் மாறிவிடவில்லை. ஒரு குழந்தையின் பிறப்பு அதன் தாய் தன்னுடைய ஒழுக்கக்கேட்டின் இயற்கை விளைவுகளை உணருவதற்கு உதவி செய்து, இவ்வாறு கடவுளுடைய சட்டங்களின் விவேகத்தை அவளுடைய மனதில் பதியவைக்கும். தன்னுடைய கள்ளத்தன பாலுறவின் விளைவை இல்லாமல் செய்வதானது, அவளில் குற்றவுணர்ச்சியின் வேதனையை விட்டுச்செல்லலாம். அல்லது மென்மேலும் ஒழுக்கங்கெட்ட செயல்களைச் செய்ய அது அவளுக்குத் துணிவளிக்கலாம்.
பொறுப்புகளைச் சேர்ந்து சுமக்க தகப்பன் இல்லையென்றால், பிள்ளையை வளர்த்தல் அத்தனை எளிதாக இருக்காது. ஆனால் நம் பரம பிதாவிடத்தில் உள்ள ஓர் உறுதியான உறவுமுறை, அதைச் செய்ய தேவையான மனவுறுதியையும், உணர்ச்சிசம்பந்தப்பட்ட பலத்தையும், ஆதரவையும், வழிநடத்துதலையும் கொடுக்கக்கூடும். ஒற்றைப் பெற்றோரின் பாரத்தை இலகுவாக்குவதில் உதவிசெய்ய கிறிஸ்தவ சபையையும் அவர் கொடுத்திருக்கிறார்.