வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
யெகோவாவுக்கு உண்மையாய் இருப்பவர்களின் மரணம் எந்த விதத்தில் ‘அவர் பார்வைக்கு அருமையாய்’ இருக்கிறது?
▪ ‘யெகோவாவுடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது’ என்று கடவுளுடைய சக்தியின் உதவியால் சங்கீதக்காரன் எழுதினார். (சங். 116:15) தம்மை உண்மையாய் வணங்கும் ஒவ்வொருவரின் உயிரையும் யெகோவா பொக்கிஷமாய்க் கருதுகிறார். ஆனால், இந்த வசனம் தனிநபரின் மரணத்தைப் பற்றிக் குறிப்பிடுவதில்லை.
ஒரு கிறிஸ்தவர் மரணம்வரை யெகோவாவை உண்மையாக வணங்கி வந்திருந்தாலும்கூட அவருக்காக நடத்தப்படும் இரங்கல் கூட்டத்தில் சங்கீதம் 116:15-ஐ அவருக்குப் பொருத்துவது சரியாக இருக்காது. ஏன்? ஏனென்றால், அந்த வசனத்திற்கு ஆழமான அர்த்தம் இருக்கிறது. தமக்கு உண்மையாய் இருப்பவர்களின் உயிரைக் கடவுள் பொக்கிஷமாய்க் கருதுவதால் அவர்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட அவர் அனுமதிக்க மாட்டார் என்பதையே அது அர்த்தப்படுத்துகிறது.—சங்கீதம் 72:14-யும் 116:8-யும் பாருங்கள்.
தம்முடைய உண்மை ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட யெகோவா அனுமதிக்க மாட்டார் எனச் சங்கீதம் 116:15 உறுதியளிக்கிறது. நம்முடைய நவீன நாளைய சரித்திரத்தின் பக்கங்களைப் புரட்டினால்... பல பயங்கரமான சோதனைகளையும் துன்புறுத்தல்களையும் நாம் சகித்து வந்திருப்பது தெரியும். நாம் முற்றிலுமாக அழிக்கப்பட யெகோவா ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் என்பதற்கு இது பலத்த அத்தாட்சி.
யெகோவா அளவில்லா வல்லமை படைத்தவர், தமது நோக்கத்தைக் கண்டிப்பாக நிறைவேற்றுபவர். எனவே, நாம் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட அவர் அனுமதிக்க மாட்டார். அப்படி அவர் அனுமதித்தால் அவரைவிட அவருடைய எதிரிகளுக்கு அதிக வல்லமை இருக்கிறதென்று ஆகிவிடும்—இதற்கு வாய்ப்பே இல்லை. தம்மை உண்மையாய் வணங்கும் ஜனங்கள் இந்தப் பூமியில் குடியிருக்க வேண்டுமென்ற அவருடைய நோக்கம் நிறைவேறாமல் போய்விடும்—இதற்கும் வாய்ப்பே இல்லை. (ஏசா. 45:18; 55:10, 11) யெகோவாவுடைய பெரிய ஆலயத்தின் பூமிக்குரிய பிரகாரத்தில் அவரை வணங்க ஜனங்களே இல்லாமல் போய்விட்டால்... அவருக்குப் பரிசுத்த சேவை செய்ய யார் இருப்பார்கள்? ‘புதிய வானத்தின்’ ஆட்சியின்கீழ் வாழப்போகும் நீதியுள்ள மனித சமுதாயத்தை உருவாக்க யார் இருப்பார்கள்? (வெளி. 21:1) பூமியில் நீதியுள்ள மனித சமுதாயமே இல்லாமல் போய்விட்டால் கிறிஸ்துவின் ஆயிர வருட அரசாட்சிக்கு அவசியமே இருக்காதே!(?)—வெளி. 20:4, 5.
தம்முடைய மக்களை எதிரிகள் ஒட்டுமொத்தமாக அழிப்பதற்கு யெகோவா அனுமதித்தால், அவருடைய உயர்ந்த ஸ்தானத்திற்கும் உன்னதப் பெயருக்கும் அது களங்கத்தை ஏற்படுத்துமே. சர்வலோக பேரரசர் என்ற அவருடைய உயரிய பதவிக்கு அது பெருத்த அடியாக இருக்குமே. தம்மையும் தமது புனிதமான பெயரையும் யெகோவா உயர்வாய்க் கருதுவதால் தம்முடைய மக்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட அவர் அனுமதிப்பாரா? அவர் ‘நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்’ என்பதால் தம்மை உண்மையாக வணங்குபவர்களை அவர் கைவிடவே மாட்டார் என்பதை நினைவில் வையுங்கள். (உபா. 32:4; ஆதி. 18:25) அதுமட்டுமல்ல, தம்முடைய ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட அவர் அனுமதித்தால், ‘யெகோவா தம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தம் தமது ஜனத்தைக் கைவிடமாட்டார்’ என்ற வசனம் பொய்யாகிவிடும். (1 சா. 12:22) ஆனால், ‘யெகோவா தம்முடைய ஜனத்தை நெகிழவிட மாட்டார், தம்முடைய சுதந்தரத்தைக் கைவிட மாட்டார்’ என்று பைபிள் சொல்கிறது.—சங். 94:14.
யெகோவாவின் ஜனங்கள் இந்தப் பூமியிலிருந்து ஒருபோதும் அழிந்துபோக மாட்டார்கள் என்பதை அறிவது எவ்வளவு ஆறுதல் அளிக்கிறது! ‘உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது யெகோவாவுடைய ஊழியக்காரரின் சுதந்தரமும், என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறது’ என்று யெகோவா வாக்குறுதி அளித்திருப்பதால் எப்போதும் அவருக்கு உண்மையாய் இருப்போமாக.—ஏசா. 54:17.
[பக்கம் 22-ன் சிறு குறிப்பு]
தமது மக்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட யெகோவா அனுமதிக்கவே மாட்டார்