அந்நியர்களுக்குத் தயவு காட்ட மறந்துவிடாதீர்கள்
“உபசரிக்கும் குணத்தைக் காட்ட [அதாவது, அந்நியர்களுக்குத் தயவு காட்ட] மறந்துவிடாதீர்கள்.”—எபி. 13:2.
1, 2. (அ) வேறு நாட்டிலிருந்து வந்திருப்பவர்களுக்கு என்ன சவால்கள் இருக்கின்றன? (ஆரம்பப் படம்) (ஆ) அப்போஸ்தலர் பவுல் என்ன விஷயத்தை ஞாபகப்படுத்தினார், என்ன கேள்விகளுக்கான பதில்களை இப்போது பார்ப்போம்?
முப்பது வருடங்களுக்கு முன்பு, ஓசா என்பவர் ஒரு யெகோவாவின் சாட்சி இல்லை. கானாவில் இருந்த தன்னுடைய வீட்டை விட்டுவிட்டு அவர் ஐரோப்பாவுக்கு வந்திருந்தார். [1] (பின்குறிப்பு) அவர் இப்படிச் சொல்கிறார்: “நான் இங்க வந்ததுக்கு அப்புறம்தான், மக்களுக்கு என்மேல அக்கறை இல்லன்னு தெரிஞ்சிக்கிட்டேன். அதோட, அங்க இருந்த சீதோஷ்ணமும் மோசமா இருந்துச்சு. ஏர்போர்ட்ல இருந்து வந்தப்போ என் வாழ்க்கையில முதல் முறையா குளிர உணர்ந்தேன், உடனே அழ ஆரம்பிச்சுட்டேன்.” புது மொழியைக் கற்றுக்கொள்வது ஓசாவுக்குக் கஷ்டமாக இருந்ததால், நல்ல வேலையைக் கண்டுபிடிக்க அவருக்கு ஒரு வருடத்துக்கு மேல் ஆனது. வீட்டிலிருந்து ரொம்ப தூரம் தள்ளி வந்திருந்ததால், அவர் தனியாக இருப்பதுபோல் உணர்ந்தார், வீட்டு ஞாபகம் அவரை வாட்டியது.
2 நீங்கள் ஓசாவின் இடத்தில் இருந்தால், மற்றவர்கள் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள்? உங்களுடைய நாடு மற்றும் நிறம் எதுவாக இருந்தாலும் ராஜ்ய மன்றத்தில் இருப்பவர்கள் உங்களை அன்போடு வரவேற்கும்போது உங்களுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்! அதற்காக நீங்கள் நன்றியோடு இருப்பீர்கள், இல்லையா? “உபசரிக்கும் குணத்தைக் காட்ட” [அதாவது, அந்நியர்களுக்குத் தயவு காட்ட] உண்மை கிறிஸ்தவர்கள் மறந்துவிடக் கூடாது என்று பைபிள் சொல்கிறது. (எபி. 13:2) அதனால், பின்வரும் கேள்விகளுக்கான பதில்களை இப்போது பார்க்கலாம்: அந்நியர்களைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார்? அந்நியர்களைப் பற்றிய எண்ணத்தை நாம் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறதா? வேறொரு நாட்டிலிருந்து நம் சபைக்கு வந்திருப்பவர் தன்னுடைய சொந்த நாட்டில் இருப்பதுபோல் உணர நாம் என்ன செய்யலாம்?
அந்நியர்களைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார்?
3, 4. யாத்திராகமம் 23:9-ல் இருப்பதுபோல், இஸ்ரவேலர்கள் அந்நியர்களை எப்படி நடத்த வேண்டுமென்று யெகோவா விரும்பினார், ஏன்?
3 எகிப்தில் அடிமைகளாக இருந்த தன்னுடைய மக்களை யெகோவா விடுதலை செய்த பிறகு, அவர்களோடு வந்த அந்நியர்களுக்குத் தயவு காட்டுவது சம்பந்தமாக அவர்களுக்குச் சட்டங்களைக் கொடுத்தார். (யாத். 12:38, 49; 22:21) வேறு நாட்டிலிருந்து வருகிறவர்களுக்கு வாழ்க்கை எப்போதும் சுலபமாக இருக்காது என்பதால், அவர்களை அன்பாகக் கவனித்துக்கொள்ள யெகோவா சில ஏற்பாடுகளைச் செய்திருந்தார். அதில் ஒன்றுதான், கதிர்களைப் பொறுக்குவதற்கான ஏற்பாடு!—லேவி. 19:9, 10.
4 இஸ்ரவேலர்கள் அந்நியர்களை மதிக்க வேண்டும் என்று யெகோவா அவர்களுக்கு வெறுமென கட்டளை போடுவதற்குப் பதிலாக, அந்நியர்களாக வாழ்வது எப்படி இருக்கும் என்பதை அவர்கள் ஞாபகப்படுத்திப்பார்க்க வேண்டும் என்று விரும்பினார். (யாத்திராகமம் 23:9-ஐ வாசியுங்கள்.) எகிப்தியர்களுக்கு இனப்பெருமை அல்லது தப்பெண்ணம் இருந்தது; அதனால், இஸ்ரவேலர்கள் தங்களுக்கு அடிமைகளாவதற்கு முன்பிருந்தே அவர்களை எகிப்தியர்களுக்குப் பிடிக்காது. (ஆதி. 43:32; 46:34; யாத். 1:11-14) இஸ்ரவேலர்கள் எகிப்தில் அந்நியர்களாக இருந்தபோது அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டார்கள். இந்த விஷயத்தை மனதில் வைத்து, தங்கள் மத்தியில் இருந்த அந்நியர்களுக்கு இஸ்ரவேலர்கள் தயவு காட்ட வேண்டும் என்று யெகோவா விரும்பினார்.—லேவி. 19:33, 34.
5. வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு யெகோவாவைப் போல தயவு காட்ட நமக்கு எது உதவும்?
5 யெகோவா மாறவில்லை. இன்றும் நம்முடைய சபைக் கூட்டங்களுக்கு வரும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அவர் தயவு காட்டுகிறார் என்பதை மறந்துவிடக்கூடாது. (உபா. 10:17-19; மல். 3:5, 6) வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு என்னென்ன சவால்கள் இருக்கும் என்று நன்றாக யோசித்துப் பாருங்கள். உதாரணத்துக்கு, புதிய மொழியைப் புரிந்துகொள்வது அவர்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம். அவர்கள் அநியாயமாக நடத்தப்படலாம். அதனால், நாம் அவர்களுக்கு உதவ வேண்டும், அவர்களிடம் தயவோடு நடந்துகொள்ள வேண்டும்.—1 பே. 3:8.
அந்நியர்களைப் பற்றிய எண்ணத்தை நாம் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறதா?
6, 7. வேரூன்றியிருந்த தப்பெண்ணத்தைத் தவிர்க்க யூத கிறிஸ்தவர்கள் கற்றுக்கொண்டார்கள் என்பது நமக்கு எப்படித் தெரியும்?
6 யூதர்கள் மத்தியில் சர்வசாதாரணமாக வேரூன்றியிருந்த தப்பெண்ணத்தைத் தவிர்க்க ஆரம்பக் கால கிறிஸ்தவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. கி.பி. 33-ஆம் வருடம் பெந்தெகொஸ்தே நாளன்று, வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த புதியவர்களை எருசலேமில் இருந்த யூத கிறிஸ்தவர்கள் உபசரித்தார்கள், அவர்களை அன்பாகக் கவனித்துக்கொண்டார்கள். (அப். 2:5, 44-47) உபசரிப்பது, அதாவது அந்நியர்களுக்குத் தயவு காட்டுவது என்றால் என்ன என்பதை யூத கிறிஸ்தவர்கள் நன்றாகப் புரிந்துவைத்திருந்தார்கள் என்பதை இது காட்டுகிறது.
7 அந்தச் சமயத்தில் வேறொரு சம்பவமும் நடந்தது. தங்கள் மத்தியில் இருந்த விதவைகள் சரியாகக் கவனிக்கப்படவில்லை என்று கிரேக்க மொழி பேசிய யூதர்கள் குறை சொன்னார்கள். (அப். 6:1) இந்தப் பிரச்சினையைத் தீர்க்க, ஏழு ஆண்களை அப்போஸ்தலர்கள் தேர்ந்தெடுத்தார்கள். அந்த விதவைகள் சரியாகக் கவனிக்கப்படுகிறார்களா என்பதைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு அவர்களுக்கு இருந்தது. எந்தப் பிரச்சினையும் வரக்கூடாது என்பதற்காக கிரேக்க பெயர்களை உடைய ஆண்களை அப்போஸ்தலர்கள் தேர்ந்தெடுத்தார்கள்.—அப். 6:2-6.
8, 9. (அ) நமக்குத் தப்பெண்ணம் இருக்கிறதா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள என்னென்ன கேள்விகளை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும்? (ஆ) நாம் எதை மாற்றிக்கொள்ள வேண்டும்? (1 பே. 1:22)
8 நாம் உணர்கிறோமோ இல்லையோ, நாம் எல்லாரும் நம்முடைய கலாச்சாரத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். (ரோ. 12:2) நம்முடைய அக்கம்பக்கத்தாரோ நம்மோடு வேலை செய்கிறவர்களோ கூடப்படிக்கிறவர்களோ, வித்தியாசமான பின்னணியையும் நாட்டையும் நிறத்தையும் சேர்ந்தவர்களைப் பற்றி ஏதாவது தரக்குறைவாகப் பேசலாம். நாமும் அவர்களைப் போலவே பேச ஆரம்பித்துவிடுகிறோமா? நம்முடைய நாட்டைப் பற்றியோ கலாச்சாரத்தைப் பற்றியோ யாராவது கிண்டல் செய்தால் நாம் என்ன செய்கிறோம்?
9 ஒரு சமயத்தில், யூதர்களாக இல்லாதவர்களைப் பற்றி அப்போஸ்தலர் பேதுருவுக்குத் தப்பெண்ணம் இருந்தது. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக அவர் அதை மாற்றிக்கொண்டார். (அப். 10:28, 34, 35; கலா. 2:11-14) அதேபோல், நமக்கும் தப்பெண்ணமோ இனப்பெருமையோ துளியளவு இருந்தால்கூட அதை மாற்றிக்கொள்வதற்குக் கடினமாக முயற்சி செய்ய வேண்டும். (1 பேதுரு 1:22-ஐ வாசியுங்கள்.) நாம் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நாம் எல்லாருமே தவறு செய்யும் இயல்புடையவர்கள் என்பதையும், மீட்பைப் பெற யாருக்கும் தகுதி இல்லை என்பதையும் மறந்துவிடக்கூடாது. (ரோ. 3:9, 10, 21-24) அதனால், மற்றவர்களைவிட நாம் உயர்ந்தவர்கள் என்று நினைக்கக் கூடாது. (1 கொ. 4:7) பவுல் தன்னோடு இருந்த கிறிஸ்தவர்களிடம், “நீங்கள் இனி அறிமுகமில்லாதவர்களும் அல்ல, அந்நியர்களும் அல்ல, ஆனால் . . . கடவுளுடைய வீட்டாராக இருக்கிறீர்கள்” என்று சொன்னார். (எபே. 2:19) பவுலுக்கு இருந்த அதே எண்ணம் நமக்கும் இருக்க வேண்டும். எப்படிப்பட்ட தப்பெண்ணம் இருந்தாலும் அதை விட்டுவிட்டு புதிய சுபாவத்தை அணிந்துகொள்ள நாம் எல்லாரும் கடினமாக முயற்சி செய்ய வேண்டும்.—கொலோ. 3:10, 11.
அந்நியர்களுக்கு எப்படித் தயவு காட்டலாம்?
10, 11. உண்மையுள்ளவரான போவாஸ், அந்நியர்களுக்குத் தயவு காட்டும் விஷயத்தில் யெகோவாவைப் போலவே எப்படி நடந்துகொண்டார்?
10 உண்மையுள்ளவரான போவாஸ், அந்நியர்களுக்குத் தயவு காட்டும் விஷயத்தில் யெகோவாவைப் போலவே நடந்துகொண்டார். தன்னுடைய வயல்களை மேற்பார்வை செய்ய போனபோது, மோவாப் தேசத்திலிருந்து வந்திருந்த அந்நிய பெண்ணான ரூத்தை அவர் பார்த்தார். தரையில் கிடந்த கதிர்களைப் பொறுக்குவதற்கு ரூத் கடினமாக வேலை செய்துகொண்டிருந்தாள். மோசேயின் திருச்சட்டத்தின்படி, கதிர்களைப் பொறுக்க ரூத்துக்கு உரிமை இருந்தது. ஆனால், அவள் அதற்கு அனுமதி கேட்டிருந்ததை போவாஸ் கேள்விப்பட்டபோது, கதிர்க்கட்டுகளிலிருந்து கதிர்களை எடுத்துக்கொள்வதற்குக்கூட அவளுக்கு அனுமதி கொடுத்தார்.—ரூத் 2:5-7, 15, 16-ஐ வாசியுங்கள்.
11 இதற்குப் பிறகு நடந்த சம்பவத்திலிருந்து, போவாசுக்கு ரூத்மீது அக்கறை இருந்தது என்பதும், அந்நியப் பெண்ணான அவளுடைய இக்கட்டான சூழ்நிலையை அவர் புரிந்துவைத்திருந்தார் என்பதும் நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. வயலில் வேலை செய்துகொண்டிருந்த ஆண்கள் ரூத்துக்குத் தொல்லை தரக்கூடாது என்பதற்காகத் தன்னுடைய ஊழியக்காரப் பெண்களோடு இருக்கும்படி போவாஸ் அவளிடம் சொன்னார். தன்னுடைய சொந்த வேலைக்காரர்களைப் போலவே அவளுக்கும் போதுமான உணவும் தண்ணீரும் கிடைக்கும்படி பார்த்துக்கொண்டார். ஏழையாக இருந்த அந்த அந்நியப் பெண்ணுக்கு போவாஸ் மதிப்பு கொடுத்தார், அவளைத் தைரியப்படுத்தினார்.—ரூத் 2:8-10, 13, 14.
12. அந்நியர்களுக்குத் தயவு காட்டுவதால் கிடைக்கும் நன்மை என்ன?
12 ரூத் தன்னுடைய மாமியாரான நகோமி மீது மாறாத அன்பைக் காட்டினாள் என்பதற்காக மட்டும் போவாஸ் அவளுக்குத் தயவு காட்டவில்லை. அவள் யெகோவாவை வணங்க ஆரம்பித்திருந்ததாலும், தன்னைப் பாதுகாக்க அவள் யெகோவாவை நம்பியிருந்ததாலும்தான் தயவு காட்டினார். யெகோவா காட்டுகிற மாறாத அன்பைத்தான் போவாசும் ரூத்மீது காட்டினார். (ரூத் 2:12, 20; நீதி. 19:17) அதேபோல், நாமும் தயவு காட்டும்போது, “பலதரப்பட்ட ஆட்களும்” சத்தியத்தைப் பற்றி கற்றுக்கொள்ளவும், தங்கள்மீது யெகோவா எந்தளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளவும் அவர்களுக்கு நம்மால் உதவ முடியும்.—1 தீ. 2:3, 4.
ராஜ்ய மன்றத்துக்கு வருகிற புதியவர்களுக்கு நாம் அன்போடு வாழ்த்துதல் சொல்கிறோமா? (பாராக்கள் 13, 14)
13, 14. (அ) ராஜ்ய மன்றத்துக்கு வரும் புதியவர்களுக்கு நாம் ஏன் வாழ்த்துதல் சொல்ல வேண்டும்? (ஆ) வேறொரு கலாச்சாரத்திலிருந்து வந்திருப்பவர்களிடம் பேசுவது கஷ்டமாக இருந்தால் நீங்கள் என்ன செய்யலாம்?
13 வேறொரு பின்னணியைச் சேர்ந்த புதியவர்கள் நம் ராஜ்ய மன்றத்துக்கு வரும்போது, அவர்களுக்கு வாழ்த்துதல் சொல்வதன் மூலம் நாம் தயவு காட்டலாம். ஒரு நாட்டுக்குப் புதிதாகக் குடிமாறி வந்திருக்கிறவர்களுக்கு சில சமயங்களில் கூச்ச உணர்வு இருக்கலாம். அவர்கள் யாரிடமும் பேசாமல், தனியாக இருக்கலாம். அவர்களுடைய கலாச்சாரத்தாலோ அந்தஸ்தாலோ மற்ற இனத்தை அல்லது நாட்டைச் சேர்ந்த மக்களைவிட தாங்கள் தாழ்வானவர்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்கலாம். அதனால், நாம்தான் அவர்களுக்கு முதலில் வாழ்த்துதல் சொல்ல வேண்டும், அவர்கள்மேல் உண்மையான அக்கறையும் தயவும் காட்ட வேண்டும். JW லாங்குவேஜ் அப்ளிகேஷன் உங்கள் மொழியில் இருந்தால், புதிதாக வந்திருப்பவர்களுக்கு எப்படி வாழ்த்துதல் சொல்வது என்று அதிலிருந்து கற்றுக்கொள்ளலாம்.—பிலிப்பியர் 2:3, 4-ஐ வாசியுங்கள்.
14 வேறொரு கலாச்சாரத்திலிருந்து வந்தவர்களிடம் பேசுவது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம். அப்படி இருந்தால், முதலில் உங்களை அவர்களிடம் அறிமுகம் செய்துகொள்ளுங்கள். அப்போது, நீங்கள் நினைத்ததைவிட அவர்களுக்கும் உங்களுக்கும் பொதுவான விஷயங்கள் நிறைய இருப்பதைத் தெரிந்துகொள்வீர்கள். ஒவ்வொரு கலாச்சாரத்திலும் குறைகளும் நிறைகளும் இருக்கின்றன என்பதை எப்போதும் ஞாபகத்தில் வையுங்கள்.
வேறு நாட்டிலிருந்து வந்திருப்பவர் தன் சொந்த நாட்டில் இருப்பதுபோல் உணர நாம் என்ன செய்யலாம்?
15. வேறொரு நாட்டிலிருந்து வந்திருப்பவர்களைப் புரிந்துகொள்ள நமக்கு எது உதவும்?
15 புதிய சபைக்கு வந்ததை நினைத்து வேறொரு நாட்டிலிருந்து வந்தவர்கள் சந்தோஷப்பட வேண்டுமென்றால், உங்களை இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நான் இன்னொரு நாட்டுல இருந்தா, மத்தவங்க என்னை எப்படி நடத்தணும்னு எதிர்பார்ப்பேன்?’ (மத். 7:12) புதிதாக வந்திருப்பவர்கள் உள்ளூர் கலாச்சாரத்துக்கு ஏற்றபடி சில மாற்றங்கள் செய்யும்போது, அவர்களிடம் பொறுமையாக இருங்கள். அவர்கள் யோசிக்கும் விதத்தையோ பிரதிபலிக்கும் விதத்தையோ ஆரம்பத்தில் நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கலாம். அப்போது, நம்முடைய கலாச்சாரத்துக்கு ஏற்றபடி அவர்கள் யோசிக்க வேண்டும், நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதற்குப் பதிலாக அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.—ரோமர் 15:7-ஐ வாசியுங்கள்.
16, 17. (அ) குடிமாறி வந்திருப்பவர்களோடு நெருங்கிப் பழக, நாம் என்னென்ன முயற்சிகள் எடுக்கலாம்? (ஆ) நம் சபைக்குக் குடிமாறி வந்திருப்பவர்களுக்கு என்ன நடைமுறையான உதவிகளைச் செய்யலாம்?
16 வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுடைய கலாச்சாரத்தைப் பற்றியும் அவர்களுடைய நாட்டைப் பற்றியும் தெரிந்துகொள்ளும்போது அவர்களோடு பழகுவது நமக்குச் சுலபமாக இருக்கலாம். நம்முடைய நாட்டுக்கோ நம்முடைய பகுதிக்கோ குடிமாறி வந்தவர்களுடைய கலாச்சாரத்தைப் பற்றி நம்முடைய குடும்ப வழிபாட்டின்போது ஆராய்ச்சி செய்யலாம். அவர்களிடம் நெருங்கிய நட்பை வளர்த்துக்கொள்ள வேறென்ன செய்யலாம்? அவர்களை நம் வீட்டுக்கு அழைத்து சாப்பாடு கொடுக்கலாம். ‘விசுவாசக் கதவைப் புறதேசத்தாருக்குத் திறந்த’ யெகோவாவைப் போல நாமும் நடந்துகொள்ள வேண்டும். ‘நம்முடைய விசுவாசக் குடும்பத்தாராக’ இருக்கும் அந்நியர்களுக்கு நம்முடைய கதவைத் திறக்க வேண்டும்.—அப். 14:27; கலா. 6:10; யோபு 31:32.
மற்ற நாடுகளிலிருந்து வருகிறவர்களைத் தாராளமாக உபசரிக்கிறோமா? (பாராக்கள் 16, 17)
17 குடிமாறி வந்திருக்கும் குடும்பத்தாரோடு நாம் நேரம் செலவு செய்யும்போது, நம்முடைய கலாச்சாரத்துக்கு ஏற்றபடி நடந்துகொள்ள அவர்கள் எடுக்கும் முயற்சிகளை நாம் மதிப்போம். புதிய மொழியைக் கற்றுக்கொள்ள நாம் அவர்களுக்கு உதவலாம். அதோடு, அவர்களுக்கு நல்ல வீடோ வேலையோ கிடைப்பதற்கும் உதவி செய்யலாம். இப்படிப்பட்ட நடைமுறையான உதவிகளைச் செய்வது, நம் சகோதர சகோதரிகளுடைய வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.—நீதி. 3:27.
18. குடிமாறி வந்திருப்பவர்கள் எப்படி மரியாதையும் நன்றியும் காட்டலாம்?
18 குடிமாறி வந்தவர்கள், தாங்கள் குடிமாறி வந்திருக்கும் நாட்டின் கலாச்சாரத்துக்கு ஏற்றபடி நடந்துகொள்ள தங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய விரும்புவார்கள். அதற்கு ரூத் ஒரு நல்ல உதாரணம். எப்படி? (1) தான் வந்திருந்த நாட்டின் கலாச்சாரத்தை மதிக்கும் விதத்தில், கதிர்களைப் பொறுக்குவதற்கு அவள் அனுமதி கேட்டாள். (ரூத் 2:7) அவளுக்கு இருந்த உரிமையை அவள் ஏனோதானோ என்று எடுத்துக்கொள்ளவில்லை, மற்றவர்கள் தனக்குக் கடமைப்பட்டிருப்பது போலவும் நடந்துகொள்ளவில்லை. (2) தனக்குக் கிடைத்த தயவுக்காக அவள் எவ்வளவு நன்றியுள்ளவளாக இருந்தாள் என்பதை மற்றவர்களிடம் உடனடியாகச் சொன்னாள். (ரூத் 2:13) வேறொரு நாட்டுக்குக் குடிமாறி வந்தவர்கள் ரூத்தைப் போல நடந்துகொள்ளும்போது, உள்ளூரில் இருப்பவர்களும் சகோதர சகோதரிகளும் அவர்களை மதிப்பார்கள்.
19. அந்நியர்களை வரவேற்க நமக்கு என்னென்ன காரணங்கள் இருக்கின்றன?
19 யெகோவா எல்லாருக்கும் அளவில்லாமல் தயவு காட்டியிருக்கிறார், நற்செய்தியைக் கேட்பதற்கு உதவி செய்திருக்கிறார். இது நமக்கு எவ்வளவு சந்தோஷத்தைத் தருகிறது! குடிமாறி வந்தவர்கள் தங்களுடைய சொந்த நாட்டில், பைபிள் படிப்பு படிக்க முடியாமலோ யெகோவாவின் மக்களோடு சபைக் கூட்டங்களுக்குப் போக முடியாமலோ இருந்திருக்கலாம். ஆனால், நம்மோடு பழகுவதற்கு இப்போது அவர்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் தங்களுடைய சொந்த நாட்டில் இருப்பது போல் உணர நாம்தான் உதவி செய்ய வேண்டும். அவர்களுக்கு உதவ நம்மிடம் நிறைய பணம் இல்லாமல் இருக்கலாம், நடைமுறையான உதவிகளை அவ்வளவாகச் செய்ய முடியாமல் போகலாம். இருந்தாலும், அந்நியர்களுக்குத் தயவு காட்டும்போது, நாம் யெகோவாவைப் போல் அவர்கள்மீது அன்பு காட்டுகிறோம். ‘கடவுளுடைய முன்மாதிரியைப் பின்பற்றுகிற’ நாம், அந்நியர்களை வரவேற்க நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்யலாம்!—எபே. 5:1, 2.
^ [1] (பாரா 1) பெயர் மாற்றப்பட்டுள்ளது.