உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w19 மார்ச் பக். 29-31
  • நீங்கள் “ஆமென்” சொல்வதை யெகோவா உயர்வாக மதிக்கிறார்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நீங்கள் “ஆமென்” சொல்வதை யெகோவா உயர்வாக மதிக்கிறார்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2019
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • “ஜனங்கள் எல்லாரும், ‘ஆமென்!’ என்று சொல்ல வேண்டும்”
  • “மக்கள் எல்லாரும், ‘ஆமென்!’ என்று சொல்லி யெகோவாவைப் புகழ்ந்தார்கள்”
  • நீங்கள் “ஆமென்” சொல்வது ஏன் முக்கியம்?
  • ஆமென்
    சொல் பட்டியல்
  • மற்றவர்களுக்கு முன்பாக மனத்தாழ்மையுள்ள இருதயத்துடன் ஜெபம் செய்தல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1987
  • உங்களுக்குத் தெரியுமா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
  • கடவுளுடைய நோக்கத்தில் இயேசுவின் ஒப்பற்ற ஸ்தானத்தை மதித்துணருங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2019
w19 மார்ச் பக். 29-31
சபையில் ஜெபம் செய்யப்படும்போது, சகோதர சகோதரிகள் தலையைக் குனிந்து நிற்கிறார்கள்

நீங்கள் “ஆமென்” சொல்வதை யெகோவா உயர்வாக மதிக்கிறார்

நம்முடைய வழிபாட்டை யெகோவா உயர்வாக மதிக்கிறார். தன்னுடைய ஊழியர்கள் பேசுவதை அவர் ‘கவனித்துக் கேட்கிறார்.’ அவரைப் புகழ்வதற்கு நாம் செய்யும் எல்லாவற்றையும், அது சின்னதாக இருந்தால்கூட, அவற்றை உயர்வாக மதிக்கிறார். (மல். 3:16) உதாரணத்துக்கு, நாம் எண்ணற்ற தடவை சொல்லியிருக்கும் ஒரு வார்த்தையைக் கவனியுங்கள். அதுதான் “ஆமென்” என்ற வார்த்தை! இதையும் யெகோவா உயர்வாக மதிக்கிறாரா? நிச்சயமாக! இந்த வார்த்தையின் அர்த்தத்தையும், இது பைபிளில் எப்படிப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் ஆராய்ந்து பார்க்கும்போது இதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்வோம்.

“ஜனங்கள் எல்லாரும், ‘ஆமென்!’ என்று சொல்ல வேண்டும்”

“ஆமென்” என்ற வார்த்தைக்கு, “அப்படியே ஆகட்டும்!” அல்லது “நிச்சயமாக நடக்கட்டும்” என்று அர்த்தம். “உண்மையாக இரு,” “நம்பகத்தன்மையோடு நடந்துகொள்” என்ற அர்த்தத்தைத் தருகிற எபிரெய மூல வார்த்தையிலிருந்து இது வந்திருக்கிறது. சில சமயங்களில், சட்டப்பூர்வ வழக்குகளில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது. ஒரு நபர் உறுதிமொழி எடுத்த பிறகு, “ஆமென்” என்று சொல்வார். அவர் சொன்ன விஷயங்கள் உண்மையானவை என்பதும், அதன் விளைவுகளை அவர் ஏற்றுக்கொள்கிறார் என்பதும்தான் அதன் அர்த்தம். (எண். 5:22) எல்லாருக்கும் முன்னால், அப்படி “ஆமென்” என்று சொன்னது, தன்னுடைய உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும் என்ற அவருடைய தீர்மானத்துக்கு வலுசேர்த்தது.—நெ. 5:13.

“ஆமென்” என்ற வார்த்தை எப்படிப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதற்கான மிகச் சிறந்த உதாரணம், உபாகமம் புத்தகத்தின் 27-வது அதிகாரத்தில் இருக்கிறது. வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்துக்குள் இஸ்ரவேலர்கள் நுழைந்த பிறகு, மோசேயின் திருச்சட்டம் வாசிக்கப்படுவதைக் கேட்பதற்காக, கெரிசீம் மலைக்கும் ஏபால் மலைக்கும் நடுவில் அவர்கள் ஒன்றுகூடி வர வேண்டியிருந்தது. அவர்கள் அங்கே கூடிவந்ததற்கு அது மட்டுமே காரணமல்ல; திருச்சட்டத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதைத் தெரியப்படுத்துவதற்காகவும்தான்! அதை அவர்கள் எப்படித் தெரியப்படுத்தினார்கள்? திருச்சட்டத்துக்குக் கீழ்ப்படியாமல் போனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று வாசிக்கப்பட்டபோது, அவர்கள் “ஆமென்!” என்று சொன்னார்கள். (உபா. 27:15-26) ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் பிள்ளைகளும் சத்தமாக “ஆமென்” என்று சொன்னபோது, அந்தச் சத்தம் எப்படி இருந்திருக்கும் என்று கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். (யோசு. 8:30-35) அன்று சொன்ன வார்த்தையை அவர்கள் மறக்கவே இல்லை; அந்த வார்த்தையை அவர்கள் காப்பாற்றினார்கள். “யோசுவா வாழ்ந்த காலத்திலும், யோசுவாவுக்குப்பின் உயிரோடிருந்த பெரியோர்களின் காலத்திலும், அதாவது இஸ்ரவேலுக்காக யெகோவா செய்த எல்லாவற்றையும் தெரிந்துவைத்திருந்த பெரியோர்களின் காலத்திலும், இஸ்ரவேலர்கள் யெகோவாவை வணங்கிவந்தார்கள்” என்று பைபிள் சொல்கிறது.—யோசு. 24:31.

தான் சொன்னது உண்மை என்பதைக் காட்டுவதற்காக இயேசுவும் “ஆமென்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்; ஆனால், அதை ஒரு விசேஷமான விதத்தில் பயன்படுத்தினார். யாராவது சொன்ன ஒரு விஷயத்துக்குப் பிறகு அவர் “ஆமென்” என்று சொல்லவில்லை. அதற்குப் பதிலாக, தான் ஒரு விஷயத்தைச் சொல்வதற்கு முன்பு அவர் “ஆமென்” என்று சொன்னார். (இது “உண்மையாகவே” என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.) தான் சொன்னது உண்மை என்பதை வலியுறுத்துவதற்காகத்தான் அவர் அப்படிச் சொன்னார். சில சமயங்களில், “உண்மையாகவே” என்ற வார்த்தையை இரண்டு தடவை சொன்னார்; அதாவது, “உண்மையாகவே உண்மையாகவே” என்று சொன்னார். (மத். 5:18; யோவா. 1:51) இப்படி, தன்னுடைய வார்த்தைகள் முழுக்க முழுக்க உண்மை என்பதை, தன்னுடைய பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு உறுதிப்படுத்தினார். கடவுளுடைய எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் அதிகாரம் தனக்கு இருந்ததால்தான் இயேசு அவ்வளவு உறுதியாகப் பேசினார்.—2 கொ. 1:20; வெளி. 3:14.

“மக்கள் எல்லாரும், ‘ஆமென்!’ என்று சொல்லி யெகோவாவைப் புகழ்ந்தார்கள்”

யெகோவாவைப் புகழும்போதும், அவரிடம் ஜெபம் செய்யும்போதும், இஸ்ரவேலர்கள் “ஆமென்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்கள். (நெ. 8:6; சங். 41:13) ஜெபத்தைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள், அதன் முடிவில் “ஆமென்” என்று சொன்னதன் மூலம், சொல்லப்பட்ட விஷயங்களைத் தாங்கள் ஏற்றுக்கொண்டதைக் காட்டினார்கள். இப்படி, அங்கே கூடிவந்திருந்த எல்லாராலும் யெகோவாவைச் சந்தோஷமாக வணங்க முடிந்தது. யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியை தாவீது ராஜா எருசலேமுக்குக் கொண்டுவந்தபோது இப்படித்தான் நடந்தது. அங்கே நடந்த கொண்டாட்டத்தில், ஒரு பாடலின் மூலம் தாவீது ராஜா இதயப்பூர்வமாக ஜெபம் செய்தார். 1 நாளாகமம் 16:8-36-ல் அது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த ஜெபம், அதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களுடைய மனதைத் தொட்டது. அதனால், அவர்கள் “எல்லாரும், ‘ஆமென்!’ என்று சொல்லி யெகோவாவைப் புகழ்ந்தார்கள்.” இப்படி, ஒன்றுகூடி வந்து யெகோவாவை வணங்குவது அவர்களுக்கு அதிக சந்தோஷத்தைத் தந்தது.

முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களும், யெகோவாவைப் புகழ்ந்தபோது “ஆமென்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்கள். (ரோ. 1:25; 16:27; 1 பே. 4:11) “ஆமென்! ‘யா’வைப் புகழுங்கள்!” என்று சொல்லி பரலோகத்தில் இருக்கிற தேவதூதர்களும் யெகோவாவைப் புகழ்வதாக வெளிப்படுத்துதல் புத்தகம் சொல்கிறது. (வெளி. 19:1, 4) ஆரம்பக் கால கிறிஸ்தவர்கள், தங்களுடைய கூட்டங்களில் செய்த ஜெபங்களுக்குப் பிறகு “ஆமென்” என்று சொல்வது வழக்கமாக இருந்தது. (1 கொ. 14:16) ஆனால், வெறுமனே இந்த வார்த்தையைச் சொல்வது சரியாக இருக்கவில்லை.

நீங்கள் “ஆமென்” சொல்வது ஏன் முக்கியம்?

யெகோவாவின் ஊழியர்கள் “ஆமென்” என்ற வார்த்தையை எப்படியெல்லாம் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டோம். இதிலிருந்து, ஜெபத்தின் முடிவில் “ஆமென்” சொல்வது ஏன் அர்த்தமுள்ளதாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. நம்முடைய தனிப்பட்ட ஜெபத்தின் முடிவில் “ஆமென்” சொல்லும்போது, நாம் ஜெபத்தில் சொன்னவற்றை உண்மையாகத்தான் சொன்னோம் என்பதைக் காட்டுகிறோம். எல்லாருக்கும் முன்னால் செய்யப்படும் ஜெபத்தின் முடிவில் “ஆமென்” சொல்லும்போது, அதை மனதுக்குள் சொன்னால்கூட, சொல்லப்பட்ட விஷயங்களை ஒத்துக்கொள்கிறோம் என்பதைக் காட்டுகிறோம். வேறுசில விஷயங்களுக்காகவும் “ஆமென்” சொல்வது முக்கியம். அதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

ஜெபம் நம்முடைய வணக்கத்தின் பாகமாக இருப்பதால், நாம் அதைக் கவனமாகக் கேட்கிறோம். ஜெபத்தின் மூலம் நாம் யெகோவாவை வணங்குகிறோம். ஜெபத்தில் என்ன சொல்கிறோம் என்பது மட்டுமல்ல, ஜெபம் செய்யப்படும்போது எப்படி நடந்துகொள்கிறோம் என்பதும் முக்கியம். நாம் அர்த்தமுள்ள விதத்தில் “ஆமென்” சொல்ல ஆசைப்படும்போது, நல்ல விதமாக நடந்துகொள்வோம்; கவனமாக ஜெபத்தைக் கேட்போம்.

யெகோவாவை வணங்கும் நம் எல்லாரையும் ஜெபம் ஒன்றுசேர்க்கிறது. எல்லாருக்கும் முன்னால் ஜெபம் செய்யப்படும்போது, சபையார் எல்லாரும் ஒரே விஷயத்தைக் காதுகொடுத்துக் கேட்கிறோம்; இதன் மூலம் நாம் எல்லாரும் ஒன்றுசேர்க்கப்படுகிறோம். (அப். 1:14; 12:5) நம் சகோதர சகோதரிகளோடு சேர்ந்து “ஆமென்” சொல்லும்போது, அது நம் எல்லாரையும் இன்னும் அதிகமாக ஒன்றுசேர்க்கிறது. நாம் எல்லாரும் சத்தமாக “ஆமென்” சொன்னாலும் சரி, மனதுக்குள் சொன்னாலும் சரி, ஜெபத்தில் கேட்கப்பட்ட விஷயங்களைச் செய்ய அது யெகோவாவைத் தூண்டுகிறது.

ஃபோன் வழியாகக் கூட்டங்களைக் கவனித்துக்கொண்டிருக்கிற சகோதரி, ஜெபம் செய்யப்படும்போது தலையைக் குனிந்திருக்கிறார்

“ஆமென்” சொல்வதன் மூலம் நாம் யெகோவாவைப் புகழ்கிறோம்

ஜெபத்தின் மூலம் யெகோவாவைப் புகழ்கிறோம். யெகோவாவை வணங்குவதற்காக நாம் செய்யும் சின்னச் சின்ன விஷயங்களைக்கூட அவர் கவனிக்கிறார். (லூக். 21:2, 3) நம்முடைய உள்நோக்கம் என்ன, நம் இதயத்தில் என்ன இருக்கிறது என்பதையெல்லாம் அவர் பார்க்கிறார். கூட்டங்களில் நடப்பதை ஃபோன் மூலம் கேட்டுக்கொண்டிருக்கும்போது “ஆமென்” சொல்வதையும் யெகோவா கவனிக்கிறார். நாம் அப்படி “ஆமென்” சொல்லும்போது, சபையாரோடு சேர்ந்து நாமும் யெகோவாவைப் புகழ்கிறோம்.

நாம் “ஆமென்” சொல்வது அவ்வளவு முக்கியம் இல்லை என்று நாம் நினைக்கலாம். ஆனால், அது உண்மையிலேயே ரொம்ப மதிப்புள்ளது. ‘தாங்கள் மன உறுதியோடு இருப்பதையும், சொல்லப்பட்டதை ஏற்றுக்கொள்வதையும், தங்களுடைய இதயத்திலிருக்கிற நம்பிக்கையையும் இந்த ஒரு வார்த்தையின் மூலம் கடவுளுடைய ஊழியர்களால் வெளிக்காட்ட முடியும்’ என்று ஒரு பைபிள் என்சைக்ளோபீடியா சொல்கிறது. நாம் ஒவ்வொரு தடவை “ஆமென்” சொல்லும்போதும், அது யெகோவாவுக்குப் பிரியமாக இருக்கட்டும்!—சங். 19:14.

எல்லா சமயத்திலும் “ஆமென்” சொல்ல வேண்டுமா?

“ஆமென்” என்ற வார்த்தை ரொம்பவே முக்கியமானது. ஆனால், ஜெபம் செய்பவர் தவறாக எதையாவது சொல்லிவிட்டால் என்ன செய்வது? “ஆமென்” சொல்லாமல் இருந்துவிடலாமா? இல்லை! சில சமயங்களில், நாம் எல்லாரும் தவறாக எதையாவது சொல்லிவிடுவோம் என்பது யெகோவாவுக்குத் தெரியும்; அவர் அதைப் பெரிதுபடுத்துவதில்லை. அதனால், மற்றவர்கள் செய்யும் ஜெபத்தில் குறை கண்டுபிடிக்கக் கூடாது. அவர்களுடைய வார்த்தைகளுக்குப் பதிலாக, அவர்களுடைய கருத்துக்குக் கவனம் செலுத்தினால், “ஆமென்” சொல்வது நமக்குப் பிரச்சினையாக இருக்காது.

ஆனால், யெகோவாவை வணங்காத ஒருவர் ஜெபம் செய்யும்போது, நாம் சத்தமாகவோ மனதுக்குள்ளோ “ஆமென்” சொல்ல மாட்டோம். ஒருவேளை, அப்படிப்பட்ட ஒருவர் ஜெபம் செய்யும்போது நாம் அங்கே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் என்ன செய்வது? உதாரணத்துக்கு, பொது நிகழ்ச்சி ஒன்றில் நாம் கலந்துகொள்ளலாம்; அதில் யாராவது ஒருவர் ஜெபம் செய்யும்படி அழைக்கப்படலாம். அல்லது, நம்முடைய குடும்பத்தில் இருப்பவர்கள் யெகோவாவை வணங்காதவர்களாக இருக்கலாம். யெகோவாவை வணங்காத குடும்பத் தலைவர், குடும்பத்துக்காக ஜெபம் செய்ய முடிவு செய்யலாம். அப்போது நாம் என்ன செய்ய வேண்டும்?

அதுபோன்ற சூழ்நிலைகளில், நாம் அமைதியாகவும் மரியாதையாகவும் இருப்போம்; ஒருபோதும் “ஆமென்” சொல்ல மாட்டோம். மற்றவர்களுடைய கையைப் பிடித்துக்கொள்ளவும் மாட்டோம். அப்படிச் செய்தால், நாம் அவர்களுடைய ஜெபத்தில் கலந்துகொள்கிறோம் என்று அர்த்தமாகிவிடும். அப்படியென்றால், நாம் என்ன செய்யலாம்? மனதுக்குள் ஜெபம் செய்துகொள்ளலாம். ஆனால், சத்தமாக “ஆமென்” சொல்ல மாட்டோம். அப்படிச் சொன்னால், அவர்களுடைய ஜெபத்தில் நாமும் பங்குகொள்கிறோம் என்று அவர்கள் நினைத்துவிட வாய்ப்பிருக்கிறது. ஜெபத்தின்போது எல்லாரும் எழுந்து நின்றால், நாமும் எழுந்து நிற்க வேண்டுமா? அதை நாமே முடிவு செய்துகொள்ளலாம். எழுந்து நிற்பதோ தலையைக் குனிந்திருப்பதோ நாம் அந்த வணக்கத்தின் பாகமாக இருக்கிறோம் என்பதை அர்த்தப்படுத்தாது. அதுபோன்ற சூழ்நிலைகளில் என்ன செய்வது என்று ஒவ்வொரு கிறிஸ்தவரும் முடிவெடுக்க வேண்டும். மற்றவர்கள் அவருடைய தீர்மானத்தைப் பற்றி குறை சொல்லக் கூடாது.

நாம் சிந்தித்த இந்தச் சூழ்நிலைகளிலிருந்து, “ஆமென்” சொல்வதை யெகோவா ஏன் முக்கியமாக நினைக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்