உங்களைப் பார்த்து மற்றவர்கள் என்ன கற்றுக்கொள்கிறார்கள்?
1. இயேசுவின் சீடர்கள் அவரைப் பார்த்து என்னவெல்லாம் கற்றுக்கொண்டார்கள்?
1 “என் நுகத்தை உங்கள்மீது ஏற்றுக்கொண்டு என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்” என்று இயேசு சொன்னார். (மத். 11:29) இதிலிருந்து, அவர் தம்முடைய வார்த்தைகளினால் மட்டுமல்ல, தம்முடைய சிறந்த முன்மாதிரியினாலும் மற்றவர்களுக்குக் கற்பித்தார் என்பது தெளிவாகிறது. இயேசுவைப் பார்த்து அவருடைய சீடர்கள் என்னவெல்லாம் கற்றிருப்பார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். அவர் மென்மையானவராக, கருணையுள்ளவராக, அன்புள்ளவராக இருந்தார். (மத். 8:1-3; மாற். 6:30-34) அவர் உண்மையிலேயே மனத்தாழ்மையுள்ளவராக இருந்தார். (யோவா. 13:2-5) அவரோடு சீடர்கள் ஊழியத்திற்குச் சென்றிருந்தபோது, அவர் அயராமல் உழைப்பவர் என்பதையும், சத்தியத்தை மற்றவர்களுக்குக் கற்பிப்பதில் கரைகண்டவர் என்பதையும் கண்கூடாகப் பார்த்தார்கள். (லூக். 8:1; 21:37, 38) அப்படியானால், நம்மோடு ஊழியத்திற்கு வருபவர்கள் நம்மிடமிருந்து எதையெல்லாம் கற்றுக்கொள்கிறார்கள்?
2. நமது நேர்த்தியான தோற்றமும் மக்களிடம் நாம் நடந்துகொள்ளும் விதமும் வீட்டுக்காரர்களை எப்படிக் கவருகின்றன?
2 வீட்டுக்காரர்கள்: நம்முடைய அடக்கமான உடை, பண்பான நடத்தை, மக்கள் மீதுள்ள உள்ளப்பூர்வமான அக்கறை, இவையெல்லாம் வீட்டுக்காரர்களின் மனதை ஈர்க்கலாம். (2 கொ. 6:3; பிலி. 1:27) நாம் எதையுமே பைபிளிலிருந்து எடுத்துக்காட்டிப் பேசுவதை அவர்கள் கவனிக்கிறார்கள். அவர்கள் பேசும்போது நாம் மரியாதையோடு செவிகொடுப்பதைக் கண்டு கவரப்படுகிறார்கள். ஆகவே, மக்கள் நற்செய்தியிடம் கவர்ந்திழுக்கப்படுவதற்கு இந்த விஷயங்களில் நாம் வைக்கிற முன்மாதிரி மிக முக்கியம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
3. சகோதர சகோதரிகளை நாம் எவ்வாறு நல்ல விதத்தில் தூண்டலாம்?
3 நம் சகோதரர்கள்: நாம் நடந்துகொள்கிற விதம் நம் சகோதரர்களையும் எவ்விதங்களில் கவரும் என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். ஊழியத்தில் நமக்கிருக்கிற பக்திவைராக்கியம் மற்றவர்களையும் தொற்றும். இரும்பை இரும்பு கருக்கிடுவதுபோல, நன்கு தயாரித்து வீட்டுக்காரரிடம் பேசுவது ஊழியத்தில் திறமைகளை வளர்த்துக்கொள்ள மற்றவர்களையும் தூண்டும். (நீதி. 27:17) ஆர்வம் காட்டியவர்களின் பெயர், முகவரி போன்ற விவரங்களை எழுதி வைப்பதற்குச் சிரத்தை எடுத்துக்கொண்டு, சொன்ன நேரத்தில் அவர்களை மீண்டும் போய்ச் சந்திப்பது மற்றவர்களையும் அவ்வாறு செய்ய ஊக்குவிக்கும். வீட்டுக்காரர்களிடம் சாதுரியத்தோடும் விவேகத்தோடும் நடந்துகொள்வது, நம்மோடு சேர்ந்து ஊழியம் செய்கிற சகோதர சகோதரிகளும் அதே குணங்களை வெளிக்காட்ட ஊக்கப்படுத்தும். இவ்வாறு, நம் ஊழியத்தை முழுமையாக நிறைவேற்றுவது, நம் சக ஊழியர்களை நல்ல விதத்தில் தூண்டலாம்.—2 தீ. 4:5.
4. நாம் வைக்கிற முன்மாதிரியை ஏன் அவ்வப்போது ஆராய்ந்து பார்க்க வேண்டும்?
4 அப்படியானால், நீங்கள் என்ன பேசுகிறீர்கள், எப்படி நடந்துகொள்கிறீர்கள், என்ன முன்மாதிரி வைக்கிறீர்கள் என்பதையெல்லாம் அவ்வப்போது ஆராய்ந்து பார்க்கலாம், அல்லவா? நாம் வைக்கிற நல்ல முன்மாதிரி யெகோவாவைப் பிரியப்படுத்தும்; அப்போஸ்தலன் பவுலைப் போலவே நம்மையும் உணரச் செய்யும். அவர் சொன்னார்: “நான் கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றுவதுபோல் நீங்கள் என்னுடைய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்.”—1 கொ. 11:1.