சக மனிதரிடம் உண்மை பேசுங்கள்
“பொய்யைக் களைந்திருக்கிற நீங்கள் ஒவ்வொருவரும் சக மனிதர்களிடம் எப்போதும் உண்மை பேசுங்கள்.”—எபே. 4:25.
1, 2. சத்தியத்தை அல்லது உண்மையைப் பற்றி அநேகர் என்ன நினைக்கிறார்கள்?
ஆண்டாண்டு காலமாகவே சத்தியம் அல்லது உண்மை என்பது சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்திருக்கிறது. பொ.ச.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க கவிஞரான அல்சியஸ், “போதை ஏறினால்தான் உண்மை வெளியே வரும்” என்று சொன்னார். மூக்குமுட்ட குடித்த பிறகுதான் ஒருவர் உண்மையைப் பேசுவார், சொல்லப்போனால் நிறையப் பேச விரும்புவார் என அவர் அர்த்தப்படுத்தினார். முதல் நூற்றாண்டு ரோம ஆளுநரான பொந்தியு பிலாத்து இயேசுவிடம், “சத்தியமா, அது என்ன?” என்று நம்பிக்கையில்லாமல் கேட்டது, அவருக்கும் சத்தியத்தைப் பற்றிய தவறான கண்ணோட்டம் இருந்ததைக் காட்டியது.—யோவா. 18:38.
2 நம்முடைய நாளிலும் சத்தியத்தைப் பற்றி முரண்பாடான கருத்துக்கள் பல நிலவுகின்றன. “சத்தியம்” அல்லது “உண்மை” என்ற வார்த்தைக்குப் பல அர்த்தங்கள் இருப்பதாக அநேகர் சொல்கிறார்கள்; அதன் அர்த்தம் நபருக்கு நபர் வேறுபடுவதாகவும் சொல்கிறார்கள். இன்னும் சிலர், தங்களுக்கு வசதியான சமயங்களில் மட்டும் அல்லது ஏதேனும் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக மட்டும் உண்மையைப் பேசுகிறார்கள். பொய் சொல்வதன் முக்கியத்துவம் என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “நேர்மை ஓர் உன்னத குணமாக இருக்கலாம், ஆனால் பிழைப்புக்கும் பாதுகாப்புக்குமான வாழ்வா சாவா போராட்டத்தில் நேர்மைக்கு இடமில்லை. மனிதர்கள் வாழ வேண்டுமென்றால் வேறு வழியில்லை, பொய் சொல்லியே தீரவேண்டும்.”
3. உண்மை பேசுவதில் இயேசு எப்படித் தலைசிறந்த உதாரணமாகத் திகழ்ந்தார்?
3 இயேசுவுக்கு முற்றிலும் வித்தியாசமான கண்ணோட்டம் இருந்தது; அவரைப் பின்பற்றுபவர்களுக்கும் அப்படித்தான். இயேசு எப்போதும் உண்மையையே பேசினார். இயேசுவின் எதிரிகள்கூட அவரிடம், “போதகரே, நீர் எப்போதும் உண்மை பேசுகிறவர், கடவுளுடைய நெறியைச் சத்தியத்தின்படி கற்பிக்கிறவர்” என்று ஒத்துக்கொண்டார்கள். (மத். 22:16) இன்றும் உண்மைக் கிறிஸ்தவர்கள் இயேசுவின் உதாரணத்தைப் பின்பற்றுகிறார்கள். அவர்கள் உண்மை பேசத் தயங்குவதில்லை. “பொய்யைக் களைந்திருக்கிற நீங்கள் ஒவ்வொருவரும் சக மனிதர்களிடம் எப்போதும் உண்மை பேசுங்கள்” என்று அப்போஸ்தலன் பவுல் கிறிஸ்தவர்களுக்குச் சொன்ன புத்திமதியை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறார்கள். (எபே. 4:25) பவுல் சொன்ன வார்த்தைகளில் அடங்கியுள்ள மூன்று விஷயங்களை நாம் இப்போது பார்க்கலாம்: முதலாவதாக, நம்முடைய சக மனிதர்கள் யார்? இரண்டாவதாக, உண்மை பேசுவதென்றால் என்ன? மூன்றாவதாக, இந்த அறிவுரையை நம் தினசரி வாழ்க்கையில் எப்படிக் கடைப்பிடிக்கலாம்?
நம்முடைய சக மனிதர்கள் யார்?
4. சக மனிதர்கள் யார் என்பதைக் குறித்ததில் இயேசு எப்படி முதல் நூற்றாண்டு யூத மதத் தலைவர்களைப் போல் அல்லாமல் யெகோவாவின் கண்ணோட்டத்தை வெளிக்காட்டினார்?
4 ஒரு யூதனுக்கு மற்ற யூதர்களும் அவரது நெருங்கிய நண்பர்களும்தான் “சக மனிதர்கள்” என்று பொ.ச. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த யூத மதத் தலைவர்கள் சிலர் தவறாகக் கற்பித்தார்கள். ஆனால், இயேசு தம் தகப்பனின் சுபாவத்தையும் சிந்தையையும் அப்படியே வெளிக்காட்டினார். (யோவா. 14:9) இனம், தேசம் போன்ற பேதங்களைக் கடவுள் பார்ப்பதில்லை என இயேசு தம் சீடர்களுக்குத் தெள்ளத்தெளிவாகக் காட்டினார். (யோவா. 4:5-26) அதோடு, “கடவுள் பாரபட்சம் காட்டாதவர், அவருக்குப் பயந்து நீதியின்படி நடக்கிறவன் எவனோ அவன் எந்தத் தேசத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனை அவர் ஏற்றுக்கொள்கிறார்” என்று அப்போஸ்தலன் பேதுருவுக்குக் கடவுளுடைய சக்தி வெளிப்படுத்தியது. (அப். 10:28, 34, 35) எனவே, எல்லா மக்களையும் நாம் சக மனிதர்களாகக் கருத வேண்டும்; சொல்லப்போனால், நம்மை எதிர்ப்பவர்களிடம்கூட நாம் அன்பு காட்ட வேண்டும்.—மத். 5:43-45.
5. சக மனிதர்களிடம் உண்மை பேசுவதன் அர்த்தமென்ன?
5 ஆனால், நம்முடைய சக மனிதர்களிடம் நாம் உண்மை பேச வேண்டும் என்று பவுல் சொன்னதன் அர்த்தமென்ன? எவ்வித வஞ்சகமும் இல்லாமல் நிஜத்தை அப்படியே சொல்ல வேண்டும் என்பதே அதன் அர்த்தம். உண்மைக் கிறிஸ்தவர்கள் மற்றவர்களை ஏமாற்றுவதற்காக உண்மைகளைத் திரித்துப் பேசவோ மாற்றிப் பேசவோ மாட்டார்கள். அவர்கள் ‘பொல்லாததை அறவே வெறுத்து, நல்லதை இறுகப் பற்றிக்கொள்வார்கள்.’ (ரோ. 12:9) ‘சத்தியபரராகிய கர்த்தரை’ பின்பற்றுகிறவர்களாகிய நாமும் நம்முடைய சொல்லிலும் செயலிலும் ஒளிவுமறைவில்லாமல் நேர்மையாக இருக்க வேண்டும். (சங். 15:1, 2; 31:5) நாம் நன்கு யோசித்துப் பேசும்போது தர்மசங்கடமான அல்லது கஷ்டமான சூழ்நிலைகளைக்கூட பொய் சொல்லாமல் சாதுரியமாகச் சமாளிக்க முடியும்.—கொலோசெயர் 3:9, 10-ஐ வாசியுங்கள்.
6, 7. (அ) உண்மை பேச வேண்டும் என்பதற்காக, யார் என்ன கேள்வி கேட்டாலும் எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டுமா? விளக்குங்கள். (ஆ) நம் நம்பிக்கைக்குப் பாத்திரமான யாரிடம் எல்லா உண்மைகளையும் சொல்லலாம்?
6 மற்றவர்களிடம் உண்மை பேச வேண்டும் என்பதற்காக நம்மிடம் யார் என்ன கேள்வி கேட்டாலும் எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டுமா? அப்படிச் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. நேரடியான பதிலையோ ஏதேனும் தகவலையோ தெரிந்துகொள்ள சிலருக்குத் தகுதி இல்லை என்பதை இயேசு பூமியிலிருந்தபோது காட்டினார். வெளிவேஷக்காரர்களாக இருந்த மதத் தலைவர்கள் இயேசுவிடம் வந்து, அவர் எந்த வல்லமையினால் அல்லது அதிகாரத்தினால் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்கிறாரெனக் கேட்டார்கள். அதற்கு இயேசு, “நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்; அதற்கு நீங்கள் பதில் சொல்லுங்கள், அப்போது எந்த அதிகாரத்தினால் இதையெல்லாம் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார். வேத அறிஞர்களும் மூப்பர்களும் பதில் சொல்ல விரும்பாதபோது, “எந்த அதிகாரத்தில் இதையெல்லாம் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குச் சொல்ல மாட்டேன்” என்றார். (மாற். 11:27-33) அவர்கள் அக்கிரமங்கள் செய்ததாலும் விசுவாசமாக நடந்துகொள்ளாததாலும் அவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் தனக்கு இல்லை என்று நினைத்தார். (மத். 12:10-13; 23:27, 28) அதேபோல் இன்றும் யெகோவாவின் மக்கள், சுயநலத்திற்காகத் தந்திரத்தோடும் சூழ்ச்சியோடும் நடந்துகொள்கிற விசுவாச துரோகிகளையும் பொல்லாதவர்களையும் குறித்து உஷாராக இருக்க வேண்டும்.—மத். 10:16; எபே. 4:14.
7 எல்லாத் தகவல்களையும் தெரிந்துகொள்ளும் உரிமை சிலருக்கு இல்லை என்பதைப் பவுலும்கூட சுட்டிக்காட்டினார். ‘மற்றவர்களுடைய விஷயங்களில் அநாவசியமாகத் தலையிடுகிறவர்கள், பேசக்கூடாத விஷயங்களைப் பேசுகிறார்கள்’ என்று அவர் சொன்னார். (1 தீ. 5:13) ஆம், மற்றவர்களுடைய விஷயத்தில் அநாவசியமாகத் தலையிடுகிறவர்களிடம் அல்லது ரகசியங்களைக் காக்காதவர்களிடம் சொந்த விஷயங்களைச் சொல்ல மற்றவர்கள் தயங்குவார்கள். ஆகவே, “அமைதியாக வாழ்வதைக் குறிக்கோளாய் வையுங்கள், மற்றவர்களுடைய விஷயத்தில் தலையிடாமல் இருங்கள்” என்று கடவுளுடைய தூண்டுதலால் பவுல் சொன்ன அறிவுரைக்குக் கீழ்ப்படிவது சாலச் சிறந்தது. (1 தெ. 4:11) என்றாலும், சிலசமயங்களில் மூப்பர்கள் தங்களுடைய பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக ஒருவருடைய தனிப்பட்ட விஷயங்களைக் குறித்துக் கேட்க வேண்டியிருக்கலாம். அதுபோன்ற சமயங்களில் நாம் உண்மையைப் பேசி அவர்களுக்கு ஒத்துழைப்புத் தருவது மிகவும் போற்றப்படுகிறது, பேருதவியாகவும் இருக்கிறது.—1 பே. 5:2.
குடும்பத்தில் உண்மை பேசுங்கள்
8. குடும்பத்தில் உண்மை பேசுவது ஒருவருக்கொருவர் நெருங்கிய பந்தத்தை அனுபவிக்க எப்படி உதவுகிறது?
8 பொதுவாக, குடும்பத்தில்தான் நாம் ஒருவருக்கொருவர் மிக நெருங்கிய பந்தத்தை அனுபவிக்கிறோம். இந்தப் பந்தத்தைப் பலப்படுத்த நாம் ஒருவரோடு ஒருவர் உண்மை பேசுவது அவசியம். ஒளிவுமறைவின்றி, நேர்மையாக, அதேசமயம் அன்பாகப் பேசும்போது நிறைய பிரச்சினைகளையும் மனஸ்தாபங்களையும் நாம் குறைக்கலாம் அல்லது தவிர்க்கலாம். உதாரணத்திற்கு, நாம் ஒரு தவறு செய்துவிட்டால் அதை மணத்துணையிடம், பிள்ளைகளிடம், அல்லது மற்ற நெருங்கிய குடும்ப அங்கத்தினர்களிடம் சொல்லத் தயங்குகிறோமா? மனதார மன்னிப்பு கேட்பது குடும்பத்தின் சமாதானத்தையும் ஒற்றுமையையும் கட்டிக்காக்கும்.—1 பேதுரு 3:8-10-ஐ வாசியுங்கள்.
9. உண்மை பேசுவதென்பது முகத்தில் அறைந்தாற்போல் அல்லது கடுகடுப்பாகப் பேசுவதை ஏன் அர்த்தப்படுத்தாது?
9 உண்மை பேசுவதென்பது, சாதுரியமில்லாமல் முகத்தில் அறைந்தாற்போல் பேசுவதை அர்த்தப்படுத்தாது. நாம் பேசுவது உண்மையாக இருந்தாலும் அதைக் கடுகடுப்பாகச் சொன்னால் யாரும் மதிக்க மாட்டார்கள். பவுல் இவ்வாறு சொன்னார்: “எல்லா விதமான மனக்கசப்பையும், சினத்தையும், கடுங்கோபத்தையும், கூச்சலையும், பழிப்பேச்சையும், மற்ற எல்லா விதமான துர்குணத்தையும் உங்களைவிட்டு நீக்கிப்போடுங்கள். ஒருவருக்கொருவர் கருணையும் கரிசனையும் காட்டுங்கள்; கிறிஸ்துவின் மூலம் கடவுள் உங்களைத் தாராளமாக மன்னித்ததுபோல், நீங்களும் ஒருவரையொருவர் தாராளமாக மன்னியுங்கள்.” (எபே. 4:31, 32) அன்பாகவும் கண்ணியமாகவும் பேசும்போது நாம் சொல்லும் விஷயத்தின் மதிப்பு கூடும், அதோடு யாரிடம் பேசுகிறோமோ அவர்களுக்கு மரியாதை காட்டுவதாக இருக்கும்.—மத். 23:12.
சபையில் உண்மை பேசுங்கள்
10. உண்மை பேசுவதில் இயேசுவின் சிறந்த உதாரணத்தைக் கிறிஸ்தவ மூப்பர்கள் எப்படிப் பின்பற்றலாம்?
10 இயேசு தம்முடைய சீடர்களிடம் எளிமையாகவும் ஒளிவுமறைவின்றியும் பேசினார். அவர் எப்போதும் அன்பாகவே அறிவுரை கொடுத்தார். என்றாலும், கேட்பவர்களின் மனதைப் புண்படுத்தக் கூடாது என்பதற்காக அவர் பட்டும்படாமல் பேசவில்லை, உண்மையை அப்படியே சொன்னார். (யோவா. 15:9-12) உதாரணத்திற்கு, அவருடைய அப்போஸ்தலர்கள் தங்களில் யார் உயர்ந்தவர் என்று அடிக்கடி வாதாடியபோது, அவர்களுக்கு மனத்தாழ்மை அவசியம் என்பதை இயேசு உறுதியாக, அதேசமயம் பொறுமையாகக் கற்றுக்கொடுத்தார். (மாற். 9:33-37; லூக். 9:46-48; 22:24-27; யோவா. 13:14) அதேபோல், இன்று கிறிஸ்தவ மூப்பர்கள் நீதியைக் கடைப்பிடிப்பதில் உறுதியாக இருந்தாலும் கடவுளுடைய மந்தைமீது அதிகாரம் செலுத்த மாட்டார்கள். (மாற். 10:42-44) அவர்கள் ஒருவரோடு ஒருவர் பழகுகையில் ‘கருணையும் கரிசனையும் காட்டுவதன்’ மூலம் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறார்கள்.
11. நம் சகோதரர்கள்மீது அன்பிருந்தால் நம் நாவை எப்படிப் பயன்படுத்துவோம்?
11 நம் சகோதரர்களிடம் உண்மையை மறைக்காமல் நேரடியாகப் பேச வேண்டும்; அதற்கென்று, அவர்கள் மனதைப் புண்படுத்தும் விதத்தில் பேசக் கூடாது. நம் நாவு “தீட்டப்பட்ட சவரகன் கத்தியைப்போல்” ஒருபோதும் இருக்கக்கூடாது; ஆம், கெட்ட வார்த்தைகளை அல்லது இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்தி மற்றவர்களுடைய மனதை நாம் ரணமாக்கக் கூடாது. (சங். 52:2; நீதி. 12:18) நம் சகோதரர்கள் மீது அன்பிருந்தால், ‘தீச்சொல்லினின்று [நம்] நாவைக் காத்திடுவோம், வஞ்சக மொழியை [நம்] வாயைவிட்டு விலக்கிடுவோம்.’ (சங். 34:13, பொது மொழிபெயர்ப்பு) இவ்வாறு நாம் கடவுளைக் கனம்பண்ணுவோம், சபையின் ஒற்றுமையையும் காப்போம்.
12. எப்படிப்பட்ட பொய்க்கு நீதி விசாரணை தேவைப்படும்? விளக்கவும்.
12 கெட்ட எண்ணத்தோடு பொய் சொல்வோரிடமிருந்து சபையைக் காக்க மூப்பர்கள் அயராது உழைக்கிறார்கள். (யாக்கோபு 3:14-16-ஐ வாசியுங்கள்.) ஒருவருக்குக் கேடு விளைவிப்பதற்காகத்தான் கெட்ட எண்ணத்தோடு பொய் சொல்லப்படுகிறது; அதாவது, ஒரு நபர் ஏதாவதொரு விதத்தில் கஷ்டப்பட வேண்டும் அல்லது துயரப்பட வேண்டும் என்பதற்காகத்தான் சொல்லப்படுகிறது. இது, சின்ன விஷயங்களுக்குப் பொய் சொல்வதையோ உண்மைகளை மிகைப்படுத்திச் சொல்வதையோ மட்டும் குறிப்பதில்லை. எல்லா பொய்யும் தவறு என்பது உண்மையே; என்றாலும், எல்லாப் பொய்யுக்கும் நீதி விசாரணை அவசியமில்லை. ஒருவர் உண்மையில்லாத ஒரு விஷயத்தைச் சொல்லியிருந்தால், மூப்பர்கள் சமநிலையுடனும் நியாயத்தன்மையுடனும் விவேகத்துடனும் செயல்பட வேண்டும்; அவர் வேண்டுமென்றே கெட்ட எண்ணத்தோடு பொய் சொல்லும் பழக்கம் உள்ளவரா என்றும், அவருக்கு நீதி விசாரணை தேவையா அல்லது பைபிளிலிருந்து உறுதியான, அன்பான புத்திமதி மட்டும் போதுமா என்றும் தீர்மானிக்க வேண்டும்.
வியாபாரத்தில் உண்மை பேசுங்கள்
13, 14. (அ) சிலர் எப்படித் தங்கள் முதலாளிக்கு உண்மையாக இருப்பதில்லை? (ஆ) வேலையில் நேர்மையாகவும் உண்மையாகவும் இருப்பதால் கிடைக்கும் நன்மை என்ன?
13 இன்று நாம் பொய்யும் பித்தலாட்டமும் நிறைந்த உலகத்தில் வாழ்கிறோம்; எனவே, முதலாளியை ஏமாற்ற வேண்டும் என்ற தூண்டுதலைத் தவிர்ப்பது நமக்குக் கடினமாக இருக்கலாம். வேலைக்கு விண்ணப்பிக்கும்போது அநேகர் பொய்யான விவரங்களைக் கொடுக்கிறார்கள். உதாரணத்திற்கு, சிலர் நல்ல வேலைக்கு அல்லது நிறையச் சம்பளத்திற்கு ஆசைப்பட்டு, தங்களுக்கு அதிக அனுபவமோ படிப்போ இருப்பதாக விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடலாம். பல பணியாளர்கள், தங்கள் அலுவலக விதிமுறைகளை மீறி வேலை நேரத்தில் சொந்த வேலைகளைச் செய்கிறார்கள். அவர்கள் தங்களுடைய வேலைக்குச் சம்பந்தமில்லாத விஷயங்களை வாசித்துக்கொண்டோ, சொந்த விஷயமாக ஃபோனில் பேசிக்கொண்டோ, யாருக்காவது எஸ்எம்எஸ் அனுப்பிக்கொண்டோ, அல்லது இன்டர்நெட்டை அலசிக்கொண்டோ இருக்கிறார்கள்.
14 உண்மைக் கிறிஸ்தவர்கள் தங்களுக்குச் சௌகரியமான சமயங்களில் மட்டுமே நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்க முயற்சி செய்ய மாட்டார்கள். (நீதிமொழிகள் 6:16-19-ஐ வாசியுங்கள்.) பவுல் இவ்வாறு சொன்னார்: “எல்லாவற்றிலும் நேர்மையாக நடக்கவே நாங்கள் விரும்புகிறோம்.” (எபி. 13:18) எனவே, கிறிஸ்தவர்கள் தங்கள் முதலாளி தரும் முழுநாள் சம்பளத்திற்கு முழுநாள் உழைப்பைக் கொடுக்கிறார்கள். (எபே. 6:5-8) கடமையுணர்வோடு வேலை செய்வது நம் பரலோகத் தகப்பனுக்குப் புகழையும் சேர்க்கிறது. (1 பே. 2:12) உதாரணத்திற்கு, ஸ்பெய்னிலுள்ள ராபர்டோ என்ற சகோதரர் நேர்மையாகவும் பொறுப்பாகவும் வேலை செய்ததைப் பார்த்து அவருடைய முதலாளி அவரைப் பாராட்டினார். ராபர்டோவின் நல்நடத்தையினால் இன்னுமதிக சாட்சிகளை அந்த முதலாளி தன் கம்பெனியில் சேர்த்துக்கொண்டார். அவர்களும் சிறப்பாக வேலை செய்தார்கள். ராபர்டோ இதுவரை 23 சகோதரர்களுக்கும் 8 பைபிள் மாணாக்கர்களுக்கும் வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறார்!
15. வியாபாரம் செய்கிற ஒரு கிறிஸ்தவர் எப்படி உண்மை பேசுகிறவராக இருக்க வேண்டும்?
15 நாம் சுயமாகத் தொழில் செய்கிறவராய் இருந்தால், எல்லாக் காரியங்களிலும் உண்மையோடு இருக்கிறோமா? அல்லது சிலசமயங்களில் சக மனிதரிடம் உண்மையைப் பேசாமல் இருக்கிறோமா? வியாபாரம் செய்கிற ஒரு கிறிஸ்தவர், உடனடி லாபம் ஈட்டுவதற்காக தான் விற்கும் பொருளையோ தான் அளிக்கும் சேவையையோ குறித்துப் பொய் சொல்லக் கூடாது; அதோடு, லஞ்சம் வாங்கவோ கொடுக்கவோ கூடாது. மற்றவர்கள் நம்மை எப்படி நடத்த வேண்டுமென எதிர்பார்க்கிறோமோ அவ்வாறே நாமும் அவர்களை நடத்த வேண்டும்.—நீதி. 11:1; லூக். 6:31.
அரசாங்க அதிகாரிகளிடம் உண்மை பேசுங்கள்
16. (அ) கிறிஸ்தவர்கள் அரசாங்க அதிகாரிகளுக்கு என்ன செய்ய கடமைப்பட்டிருக்கிறார்கள்? (ஆ) யெகோவாவுக்கு என்ன செய்ய கடமைப்பட்டிருக்கிறார்கள்?
16 “அரசனுக்குரியதை அரசனுக்கும் கடவுளுக்குரியதைக் கடவுளுக்கும் செலுத்துங்கள்” என்று இயேசு சொன்னார். (மத். 22:21) ‘அரசனுக்குரிய,’ அதாவது அரசாங்க அதிகாரிகளுக்குரிய, எவற்றை நாம் அவர்களுக்குச் செலுத்த வேண்டும்? இயேசு அந்த வார்த்தைகளைச் சொன்னபோது வரி செலுத்துவதைக் குறித்துப் பேசிக்கொண்டு இருந்தார். எனவே, நாம் கடவுளுக்கு முன்பாகவும் மனிதர்களுக்கு முன்பாகவும் சுத்தமான மனசாட்சியைக் காத்துக்கொள்ள, வரி செலுத்துவது உட்பட நாட்டின் எல்லாச் சட்டங்களுக்கும் கீழ்ப்படிகிறோம். (ரோ. 13:5, 6) அதேசமயத்தில், முழு இருதயத்தோடும் முழு மூச்சோடும் முழு மனதோடும் முழு பலத்தோடும் நாம் அன்பு காட்டுகிற யெகோவாதான் உன்னதப் பேரரசர் என்றும் ஒரே உண்மையான கடவுள் என்றும் புரிந்திருக்கிறோம். (மாற். 12:30; வெளி. 4:11) ஆகவே, நாம் யெகோவா தேவனுக்கு நிபந்தனையற்ற கீழ்ப்படிதலைக் காட்டுகிறோம்.—சங்கீதம் 86:11, 12-ஐ வாசியுங்கள்.
17. சலுகைகள் பெறுவதை யெகோவாவின் மக்கள் எப்படிக் கருதுகிறார்கள்?
17 பல நாடுகள், சமூக நலத் திட்டங்களின் மூலமாகவோ சேவைகளின் மூலமாகவோ ஏழை எளியோருக்கு உதவுகின்றன. ஒரு கிறிஸ்தவர் அவற்றிற்குத் தகுதியுள்ளவராய் இருந்தால் அவற்றிலிருந்து நன்மையடைவதில் எந்தத் தவறுமில்லை. ஆனால், அப்படிப்பட்ட சலுகைகளைப் பெறுவதற்காக அரசாங்க அதிகாரிகளிடம் பொய்யான தகவல்களைக் கொடுக்காதிருக்க வேண்டும்; அப்போதுதான், அவர் சக மனிதரிடம் உண்மை பேசுபவராக இருப்பார்.
உண்மையாய் இருப்பதால் வரும் ஆசீர்வாதங்கள்
18-20. சக மனிதரிடம் உண்மையாய் இருப்பதனால் கிடைக்கும் ஆசீர்வாதங்கள் என்ன?
18 உண்மையாய் இருப்பதால் வரும் ஆசீர்வாதங்கள் ஏராளம். நம்மால் சுத்தமான மனசாட்சியைக் காத்துக்கொள்ள முடிகிறது; அது மனதுக்கு சமாதானத்தையும் அமைதியையும் அளிக்கிறது. (நீதி. 14:30; பிலி. 4:6, 7) சுத்தமான மனசாட்சி யெகோவாவின் பார்வையில் விலையேறப்பெற்றதாய் இருக்கிறது. அதோடு, நாம் எல்லா விஷயங்களிலும் உண்மையாய் இருந்தால், மற்றவர்களிடம் மாட்டிக்கொள்வோமோ என்று பயப்பட வேண்டியதில்லை.—1 தீ. 5:24.
19 மற்றொரு ஆசீர்வாதத்தைக் கவனியுங்கள். ‘உண்மையான பேச்சின்’ மூலம் “எல்லா விதத்திலும் எங்களைக் கடவுளுடைய ஊழியர்கள் என்று சிபாரிசு செய்கிறோம்” எனப் பவுல் சொன்னார். (2 கொ. 6:4, 7) பிரிட்டனில் வசிக்கிற ஒரு சாட்சியின் விஷயத்தில் இது உண்மையாக இருந்தது. தன்னுடைய காரை வாங்க வந்தவரிடம் அந்த காரைப் பற்றிய குறைநிறைகளை அவர் ஒன்றுவிடாமல் சொன்னார்; பார்த்தவுடன் தெரியாத குறைகளைக்கூட அவரிடம் சொன்னார். காரை வாங்க வந்தவர் அதை ஓட்டிப் பார்த்த பிறகு, ‘நீங்கள் ஒரு யெகோவாவின் சாட்சியா?’ என்று கேட்டார். அவர் ஏன் அப்படிக் கேட்டார்? அந்தச் சகோதரரின் நேர்மையையும் நேர்த்தியான தோற்றத்தையும் அவர் கவனித்திருந்தார். ஆகவே, அந்தச் சகோதரரால் அவருக்கு நன்கு சாட்சி கொடுக்க முடிந்தது.
20 அதுபோல் நாமும், எப்போதுமே நேர்மையாகவும் உண்மையாகவும் நடந்துகொள்வதன் மூலம் நம்முடைய படைப்பாளருக்குப் புகழ் சேர்க்கிறோமா? “மறைவாகச் செய்யப்படும் வெட்கக்கேடான காரியங்களை நாங்கள் ஒதுக்கித் தள்ளியிருக்கிறோம்; தந்திரமாய் நடக்காமலும்” இருக்கிறோம் என்று பவுல் சொன்னார். (2 கொ. 4:2) எனவே, சக மனிதரிடம் உண்மையைப் பேச முழுமுயற்சி எடுப்போமாக. அப்படிச் செய்யும்போது நம் பரலோகத் தகப்பனுக்கும் அவருடைய மக்களுக்கும் நாம் மகிமை சேர்ப்போம்.
எப்படிப் பதிலளிப்பீர்கள்?
• நம்முடைய சக மனிதர்கள் யார்?
• நம்முடைய சக மனிதரிடம் உண்மை பேசுவதன் அர்த்தமென்ன?
• உண்மையாய் இருப்பது எப்படிக் கடவுளுக்கு மகிமை சேர்க்கும்?
• உண்மையாய் இருப்பதனால் வரும் ஆசீர்வாதங்கள் என்ன?
[பக்கம் 17-ன் படம்]
சிறு சிறு தவறுகளைக்கூட உடனடியாக ஒத்துக்கொள்கிறீர்களா?
[பக்கம் 18-ன் படம்]
வேலைக்காக விண்ணப்பிக்கையில் உண்மை பேசுகிறீர்களா?