யெகோவாவை நேசிக்க பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுங்கள்
“வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.”—சங்கீதம் 127:5.
1, 2. பிள்ளைகள் எவ்வாறு ‘பலவான் கையிலுள்ள அம்புகளைப்போல’ இருக்கிறார்கள்?
வி ல்வீரர் ஒருவர் அம்பைக் குறிபார்த்து எய்யத் தயாராகிறார். வில்லின் நாணில் அம்பை கவனமாக வைக்கிறார்; தன் பலத்தையெல்லாம் திரட்டி வில்லை வளைக்கிறார். கொஞ்சம் சிரமமாக இருந்தாலும்கூட அவர் கவனமாகவும் பொறுமையாகவும் அம்பைக் குறிபார்க்கிறார். இதோ, அம்பு இலக்கை நோக்கிப் பாய்கிறது! ஆனால் அது இலக்கை அடையுமா? ஒரு வில்வீரரின் திறமை, காற்றடிக்கும் திசையும் வேகமும், அம்பின் நிலை போன்ற பல்வேறு காரணிகள் அதைத் தீர்மானிக்கலாம்.
2 சாலொமோன் ராஜா பிள்ளைகளை “பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு” ஒப்பிட்டார். (சங்கீதம் 127:5) பிள்ளைகளின் விஷயத்தில் இந்த உதாரணத்தை எப்படிப் பொருத்தலாம் என்பதைக் கவனியுங்கள். வில்வீரர் அம்பை கொஞ்ச நேரம் மட்டுமே வில்லில் வைத்திருப்பார். இலக்கை அடைவதற்கு அவர் அதை விரைவாக எய்ய வேண்டும். அதைப்போலவே, யெகோவாமீது உள்ளப்பூர்வமான அன்பை பிள்ளைகளில் வளர்ப்பதற்கு பெற்றோருக்கும் கொஞ்ச காலமே இருக்கிறது. சீக்கிரத்திலேயே பிள்ளைகள் வளர்ந்து தங்கள் இஷ்டப்படி தீர்மானிக்கும் வயதை எட்டி விடுகிறார்கள். (மத்தேயு 19:5) அந்த அம்பு இலக்கை அடையுமா, அதாவது பிள்ளைகள் பெரியவர்களான பிறகும் தொடர்ந்து கடவுளை நேசித்து அவருக்குச் சேவை செய்வார்களா? பல காரணிகள் இதைத் தீர்மானிக்கின்றன. பெற்றோரின் திறமை, பிள்ளைகள் வளரும் சூழல், ‘அம்பு’ அதாவது பிள்ளை தனக்கு கிடைக்கும் பயிற்சிக்கு பிரதிபலிக்கும் விதம் ஆகியவை அவற்றில் உட்பட்டுள்ள மூன்று காரணிகளாகும். இவை ஒவ்வொன்றையும் நாம் விலாவாரியாகச் சிந்திப்போம். முதலாவதாக, திறம்பட்ட பெற்றோரின் தனித்தன்மைகளை கவனிப்போம்.
திறம்பட்ட பெற்றோர் நல்ல முன்மாதிரி வைக்கிறார்கள்
3. பெற்றோரின் சொல்லும் செயலும் ஏன் ஒன்றுபோல இருக்கவேண்டும்?
3 இயேசு தாம் கற்பித்தவற்றிற்கு இசைவாக வாழ்ந்ததன்மூலம் பெற்றோருக்கு முன்மாதிரி வைத்திருக்கிறார். (யோவான் 13:15) மறுபட்சத்தில், ‘சொல்லியும் செய்யாதிருந்த’ பரிசேயர்களை அவர் கண்டனம் செய்தார். (மத்தேயு 23:3) யெகோவாவை நேசிக்க பிள்ளைகளைத் தூண்டுவதற்கு பெற்றோரின் சொல்லும் செயலும் ஒன்றுபோல இருக்கவேண்டும். பெற்றோர் சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக இருந்தால், அவர்களுடைய வார்த்தைகள் நாணில்லாத வில்லைப்போல ஒன்றுக்கும் உதவாது.—1 யோவான் 3:18.
4. எப்படிப்பட்ட கேள்விகளை பெற்றோர் தங்களையே கேட்டுக்கொள்ள வேண்டும், ஏன்?
4 பெற்றோரின் முன்மாதிரி ஏன் மிக முக்கியம்? இயேசுவின் முன்மாதிரியைப் பார்த்து பெரியவர்கள் கடவுளை நேசிக்க கற்றுக்கொள்வதுபோல, பெற்றோரின் நல்ல முன்மாதிரியைப் பார்த்து பிள்ளைகளும் யெகோவாவை நேசிக்கக் கற்றுக்கொள்ள முடியும். பிள்ளைகளின் நண்பர்கள் அவர்களை ஆன்மீக ரீதியில் பலப்படுத்தவும் முடியும், அவர்களுடைய ‘நல்லொழுக்கங்களைக் கெடுக்கவும்’ முடியும். (1 கொரிந்தியர் 15:33) கிட்டத்தட்ட பிள்ளைப் பருவம் முழுவதிலும், அதிலும் முக்கியமாக, பிள்ளையின் குணங்களும் மனோபாவங்களும் வடிவமைக்கப்படுகிற பிஞ்சுப் பருவம் முழுவதிலும், பிள்ளையின் நெருங்கிய நண்பர்கள் அதன் பெற்றோரே. பிள்ளைமீது அதிக செல்வாக்கு செலுத்துபவர்களும் அவர்களே. அதனால், பெற்றோர் தங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘நான் எப்படிப்பட்ட நண்பராக இருக்கிறேன்? என் பிள்ளை என்னிடமிருந்து நல்ல பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொள்கிறதா? ஜெபம், பைபிள் படிப்பு போன்ற முக்கியமான காரியங்களில் நான் எப்படிப்பட்ட முன்மாதிரி வைக்கிறேன்?’
திறம்பட்ட பெற்றோர் பிள்ளைகளுடன் ஜெபிக்கிறார்கள்
5. பெற்றோரின் ஜெபங்களைக் கேட்கும்போது பிள்ளைகள் எதைக் கற்றுக்கொள்ள முடியும்?
5 நீங்கள் செய்யும் ஜெபங்களை கவனித்துக் கேட்பதன்மூலம் யெகோவாவைப்பற்றி அநேக விஷயங்களை பிள்ளைகள் கற்றுக்கொள்ள முடியும். சாப்பாட்டு வேளையில் நீங்கள் கடவுளுக்கு நன்றி தெரிவிப்பதையும் பைபிள் படிப்பு நடத்துகையில் ஜெபிப்பதையும் அவர்கள் கேட்கும்போது என்ன முடிவுக்கு வருவார்கள்? யெகோவாவே நம் சரீர தேவைகளை கவனித்துக் கொள்கிறார், அதற்காக நாம் அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம் என்பதை அவர்கள் கற்றுக் கொள்ளலாம்; அதோடு பைபிள் சத்தியங்களை நமக்கு கற்பிப்பவரும் அவரே என்பதையும் அவர்கள் கற்றுக் கொள்வார்கள். இவை மிக முக்கியமான பாடங்கள், அல்லவா!—யாக்கோபு 1:17.
6. யெகோவா நம் ஒவ்வொருவர்மீதும் அக்கறையுள்ளவர் என்பதை பிள்ளைகள் உணர்ந்துகொள்ள பெற்றோர் எவ்வாறு உதவலாம்?
6 சாப்பாட்டு வேளையிலும் குடும்பமாக பைபிள் படிக்கையிலும் மட்டுமல்லாமல் மற்ற சமயங்களிலும் ஜெபிக்கும்போது, குறிப்பாக குடும்பத்தில் ஒவ்வொருவரையும் பாதிக்கிற விஷயங்களுக்காக ஜெபிக்கும்போது பிள்ளைகளுக்கு நீங்கள் இன்னுமதிகத்தைக் கற்றுக் கொடுக்கிறீர்கள். அதாவது, யெகோவா உங்கள் குடும்பத்தின் ஓர் அங்கத்தினராக, உங்கள் ஒவ்வொருவர்மீதும் அதிக அக்கறையுள்ள ஒரு நபராக இருக்கிறார் என்பதை பிள்ளைகள் உணர்ந்துகொள்ள நீங்கள் உதவுகிறீர்கள். (எபேசியர் 6:18; 1 பேதுரு 5:6, 7) ஒரு தகப்பன் இவ்வாறு சொல்கிறார்: “எங்களுடைய மகள் பிறந்த சமயத்திலிருந்தே நாங்கள் அவளுடன் சேர்ந்து ஜெபித்தோம். அவள் பெரியவளானபோது, மற்றவர்களுடன் பழகும் விஷயத்தைக் குறித்தும், அவளைப் பாதித்த மற்ற விஷயங்களைக் குறித்தும் ஜெபித்தோம். மணமாகி அவள் புகுந்தவீடு செல்லும்வரை ஒருநாள்கூட நாங்கள் அவளுடன் ஜெபிக்காமல் இருந்ததே இல்லை.” அவ்வாறே நீங்களும் உங்கள் பிள்ளைகளோடு ஒவ்வொரு நாளும் ஜெபம் செய்யலாம், அல்லவா? யெகோவாவை நம் சரீர தேவைகளையும் ஆன்மீகத் தேவைகளையும் கவனித்துக் கொள்கிறவராக மட்டுமல்லாமல் நம் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்கிற ஒரு நண்பராகவும் அவர்கள் கருத நீங்கள் உதவுகிறீர்களா?—பிலிப்பியர் 4:6, 7.
7. விஷயங்களைக் குறிப்பாகச் சொல்லி ஜெபிப்பதற்கு பெற்றோர் எதை அறிந்திருப்பது அவசியம்?
7 சொல்லப்போனால், விஷயங்களைக் குறிப்பாகச் சொல்லி ஜெபிப்பதற்கு, பிள்ளை அன்றாடம் எதிர்படுகிற விஷயங்களை நீங்கள் அறிந்திருப்பது அவசியம். இரண்டு பெண்பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கியிருக்கும் ஒரு தகப்பன் சொல்வதைக் கவனியுங்கள்: “ஒவ்வொரு வாரத்தின் முடிவிலும் எனக்கு நானே இரண்டு கேள்விகள் கேட்டுக் கொள்வேன்: ‘இந்த வாரம் எப்படிப்பட்ட விஷயங்கள் என் பிள்ளைகளின் மனதை பாதித்திருக்கின்றன? பிள்ளைகள் என்னென்ன நல்ல காரியங்களை எதிர்ப்பட்டிருக்கிறார்கள்?’” பெற்றோரே, இப்படிப்பட்ட கேள்விகளை நீங்கள் கேட்டுக்கொள்வதோடு பிள்ளைகளுடன் சேர்ந்து ஜெபிக்கையில் இதற்கான பதில்கள் சிலவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம், அல்லவா? இவ்வாறு செய்தீர்களென்றால், ஜெபத்தைக் கேட்கிறவரான யெகோவாவிடம் ஜெபிப்பதற்கு மட்டுமல்ல அவரை நேசிப்பதற்கும் நீங்கள் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்கள்.—சங்கீதம் 65:2.
திறம்பட்ட பெற்றோர் நன்கு படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கிறார்கள்
8. கடவுளுடைய வார்த்தையைப் படிக்கும் பழக்கத்தை பிள்ளைகள் வளர்ப்பதற்கு பெற்றோர் ஏன் உதவ வேண்டும்?
8 பைபிள் படிப்பதைப்பற்றி பெற்றோரின் மனோபாவம், பிள்ளைக்கும் கடவுளுக்கும் இடையே உள்ள பந்தத்தை எப்படிப் பாதிக்கலாம்? இரு நபர்களுக்கிடையே பந்தம் நிலைப்பதற்கு அவர்கள் ஒருவருக்கொருவர் பேசினால் மட்டுமே போதாது, ஒருவருக்கொருவர் செவிகொடுத்துக் கேட்கவும் வேண்டும். யெகோவாவுக்குச் செவிகொடுப்பதற்கு ஒரு வழி, ‘உண்மையுள்ள ஊழியக்காரர்’ வழங்குகிற பிரசுரங்களின் உதவியோடு பைபிளைப் படிப்பதே. (மத்தேயு 24:45-47; நீதிமொழிகள் 4:1, 2) ஆகையால், பிள்ளைகள் யெகோவாவுடன் நிலையான, அன்பான பந்தத்தை வைத்துக்கொள்வதற்கு அவருடைய வார்த்தையைப் படிக்கும் பழக்கத்தை வளர்க்கும்படி பெற்றோர் அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
9. நல்ல படிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள பிள்ளைகளுக்கு எவ்வாறு உதவலாம்?
9 நல்ல படிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள பிள்ளைகளுக்கு எவ்வாறு உதவலாம்? இதற்கும்கூட, பெற்றோர் வைக்கும் முன்மாதிரியே சிறந்தது. நீங்கள் தனிப்பட்ட விதமாய் தினம்தினம் பைபிளை ஆர்வமாய் வாசிப்பதையோ ஆழ்ந்து படிப்பதையோ பிள்ளைகள் பார்க்கிறார்களா? உண்மைதான், பிள்ளைகளை கவனிப்பதில் நீங்கள் அதிக பிஸியாக இருக்கலாம்; அதனால் வாசிப்பதற்கும் படிப்பதற்கும் நேரம் எங்கிருக்கிறது என நீங்கள் நினைக்கலாம். ஆனால் உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள், ‘நான் தினமும் டிவி பார்ப்பதை பிள்ளைகள் கவனிக்கிறார்களா?’ அப்படியானால், தனிப்பட்ட படிப்பில் அவர்களுக்கு நல்ல முன்மாதிரி வைப்பதற்காக அதிலிருந்து கொஞ்சம் நேரத்தை உங்களால் ஒதுக்க முடியுமா?
10, 11. பெற்றோர் ஏன் குடும்பமாக பைபிளைத் தவறாமல் கலந்துபேச வேண்டும்?
10 யெகோவாவுக்குச் செவிகொடுக்கும்படி பிள்ளைகளுக்குக் கற்பிப்பதற்கு மற்றொரு நடைமுறையான வழி தவறாமல் குடும்பமாக பைபிளைக் கலந்து பேசுவதாகும். (ஏசாயா 30:21) ‘பெற்றோர்தான் பிள்ளைகளைத் தவறாமல் சபை கூட்டங்களுக்கு அழைத்துச் செல்கிறார்களே, அதோடு ஒரு குடும்பப் படிப்பையும் ஏன் நடத்த வேண்டும்?’ என சிலர் கேட்கலாம். ஏனென்றால், அதற்கு அநேக நல்ல காரணங்கள் உள்ளன. பிள்ளைகளுக்குக் கற்பிக்கும் முக்கிய பொறுப்பை யெகோவா பெற்றோரிடமே கொடுத்திருக்கிறார். (நீதிமொழிகள் 1:8; எபேசியர் 6:4) கடவுளை வழிபடுவது பொதுவிடத்தில் மட்டுமே பின்பற்றப்படும் சடங்கல்ல, மாறாக ஒவ்வொருவருடைய வாழ்க்கையின் பாகமாக இருக்கிறது என்பதைக் குடும்பப் படிப்பு பிள்ளைகளுக்குப் போதிக்கிறது.—உபாகமம் 6:6-9.
11 அதோடுகூட, திறம்பட்ட குடும்பப் படிப்பு ஆன்மீகத்தையும் ஒழுக்கத்தையும்பற்றி பிள்ளைகள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள பெற்றோருக்கு வாய்ப்பு தரலாம். உதாரணமாக, பிள்ளைகள் சிறுவர்களாக இருந்தால், பெரிய போதகரிடம் கற்றுக்கொள் போன்ற பிரசுரங்களை குடும்பப் படிப்பில் பெற்றோர் பயன்படுத்தலாம்.a பைபிள் படிப்புக்காகத் தயாரிக்கப்பட்ட இப்புத்தகத்தில் கிட்டத்தட்ட ஒவ்வொரு பாராவிலும், கலந்துபேசப்படுகிற பொருளின்பேரில் பிள்ளைகளின் கருத்தைக் கேட்கும் கேள்விகள் உள்ளன. இப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள வசனங்களைக் காரணம்காட்டி விளக்குவதன்மூலம் “நன்மை தீமையின்னதென்று” பகுத்தறிவதற்கான திறனை பிள்ளைகள் வளர்ப்பதற்கு பெற்றோர் உதவலாம்.—எபிரெயர் 5:14.
12. குடும்பப் படிப்பை பிள்ளைகளின் தேவைகளுக்கேற்ப பெற்றோர் எவ்விதமாக மாற்றியமைக்கலாம், இவ்விஷயத்தில் எது பலன்தருவதாக நீங்கள் கண்டிருக்கிறீர்கள்?
12 பிள்ளைகள் வளர வளர அவர்களுடைய தேவைகளுக்கேற்ப படிப்பை மாற்றி அமையுங்கள். இரண்டு டீனேஜ் பெண்பிள்ளைகளை உடைய ஒரு தம்பதி, பள்ளியில் நடைபெற்ற ஒரு நடன நிகழ்ச்சிக்குச் செல்ல பிள்ளைகள் அனுமதி கேட்டபோது, காரணம்காட்டி சிந்திக்க வைப்பதற்கு கையாண்ட முறையைக் கவனியுங்கள். அப்பா இவ்வாறு சொல்கிறார்: “‘நம் அடுத்த குடும்பப் படிப்பில் இவ்விஷயத்தைக் கலந்துபேச கொஞ்ச நேரத்தை ஒதுக்குவோம், நானும் அம்மாவும் பிள்ளைகளாக நடிப்போம், நீங்கள் இருவரும் பெற்றோராக நடிக்க வேண்டும். யார் வேண்டுமானாலும் அப்பாவாகவோ, அம்மாவாகவோ நடிக்கலாம். ஆனால், இரண்டுபேரும் சேர்ந்து இந்தப் பொருளின்பேரில் ஆராய்ச்சி செய்து, நடன நிகழ்ச்சிக்கு செல்வதா வேண்டாமா என்பதைத் தெரிவிக்க வேண்டும்’ என்று எங்களுடைய பிள்ளைகளிடம் சொன்னோம்.” அதனால் கிடைத்த பலன்? அவர் தொடர்ந்து இவ்வாறு சொல்கிறார்: “(பெற்றோரின் பாத்திரத்தை ஏற்ற) எங்கள் மகள்கள் இவ்விஷயத்தில் நன்மை தீமையைப் பகுத்தாராய்ந்ததையும் (பிள்ளைகளின் பாத்திரத்தை ஏற்ற) எங்களிடம் நடன நிகழ்ச்சிக்கு செல்வது ஏன் அவ்வளவு சரியானதல்ல என்பதை பைபிளிலிருந்து காரணங்காட்டி விளக்கியதையும் பார்த்து நாங்கள் அசந்து போனோம். அதற்குப் பதிலாக வேறெந்த காரியங்களைச் செய்வது நல்லதாக இருக்கும் என்பதைப்பற்றி அவர்கள் தந்த ஆலோசனைகளைக் கேட்டு நாங்கள் ஆச்சரியத்தில் வாயடைத்து நின்றோம். அவர்களுடைய எண்ணங்களையும் ஆசைகளையும் நன்கு புரிந்துகொள்வதற்கு இது நல்ல வாய்ப்பாக அமைந்தது.” உண்மைதான், பைபிள் படிப்பைத் தவறாமலும் குடும்பத்தின் தேவைகளுக்கு ஏற்பவும் நடத்துவதற்கு விடாமுயற்சியும் கற்பனைத் திறனும் அவசியம். ஆனால் கைமேல் பலன் கிடைப்பது நிச்சயம்.—நீதிமொழிகள் 23:15.
அமைதியான சூழலை உருவாக்குங்கள்
13, 14. (அ) பெற்றோர் எவ்வாறு அமைதியான குடும்பச் சூழலை உருவாக்கலாம்? (ஆ) ஒரு பெற்றோர் தன் தவறை ஒப்புக்கொண்டால் என்ன நல்ல பலன்கள் கிடைக்கலாம்?
13 ரம்மியமான வானிலை நிலவும் சமயத்தில் வில்வீரர் குறிபார்த்து எய்தால் அம்பு இலக்கை அடைவதற்கு அதிக சாத்தியம் உள்ளது. அதைப்போலவே, பெற்றோர் அமைதியான குடும்பச் சூழலை உருவாக்கும்போது பிள்ளைகள் யெகோவாவை நேசிக்கப் பழகுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கும். “அமைதி ஏற்படுத்துவோர் விதைத்த அமைதி என்னும் விதையிலிருந்து நீதியென்னும் கனி விளைகிறது” என்று யாக்கோபு எழுதினார். (யாக்கோபு 3:18, பொது மொழிபெயர்ப்பு) பெற்றோர் எவ்வாறு வீட்டில் அமைதியான சூழலை உருவாக்கலாம்? தம்பதியருக்கிடையே நல்ல புரிந்துகொள்ளுதலும் ஒற்றுமையும் இருக்க வேண்டும். கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் நேசித்து மதித்து நடக்கும்போதுதான் யெகோவாவையும் மற்றவர்களையும் நேசித்து, மதித்து நடக்க பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க முடியும். (கலாத்தியர் 6:7; எபேசியர் 5:33) அன்பும் மதிப்பும் உள்ள இடத்தில் அமைதி நிலவும். தம்பதியர் தங்களிடையே நல்லுறவை காத்துக் கொள்ளும்போது குடும்பத்தில் எழக்கூடிய பிரச்சினைகளை அவர்களால் நன்கு சமாளிக்க முடியும்.
14 இன்று எந்தவொரு மணவாழ்வும் பரிபூரணமாக இல்லாததுபோல எந்தவொரு குடும்பமும் பரிபூரணமாக இல்லையென்பது மறுக்க முடியாத உண்மை. பெற்றோர் சில சமயங்களில், தங்கள் பிள்ளைகளிடம் ஆவியின் கனியை வெளிக்காட்டத் தவறலாம். (கலாத்தியர் 5:22, 23) அப்போது பெற்றோர் என்ன செய்யவேண்டும்? தாங்கள் செய்த தவறை ஒப்புக்கொண்டால், பிள்ளைகள் அவர்களை மதிப்புக் குறைவாக கருதுவார்களா? அப்போஸ்தலன் பவுலின் உதாரணத்தைக் கவனியுங்கள். அவர் பலருக்கு ஆன்மீகத் தகப்பனாக விளங்கினார். (1 கொரிந்தியர் 4:15) இருந்தாலும், தான் செய்த தவறுகளை அவர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். (ரோமர் 7:21-25) என்றபோதிலும் அவருடைய நேர்மையும் மனத்தாழ்மையும் நாம் அவர்மேல் வைத்திருக்கும் மதிப்பை உயர்த்துகிறதே ஒழிய குறைத்துப் போடுகிறதில்லை. தன்னிடம் குறைகள் இருந்தாலும் கொரிந்து சபையினரிடம் அவரால் நம்பிக்கையுடன் இவ்வாறு எழுத முடிந்தது: “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறது போல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்.” (1 கொரிந்தியர் 11:1) நீங்களும்கூட உங்கள் குறைகளை ஒப்புக்கொண்டீர்களென்றால், பிள்ளைகள் அவற்றைப் பெரிதாக எடுக்க மாட்டார்கள்.
15, 16. கிறிஸ்தவ சகோதர சகோதரிகளை நேசிக்கும்படி பெற்றோர் ஏன் தங்கள் பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டும், அதை அவர்கள் எவ்வாறு செய்யலாம்?
15 பிள்ளைகள் யெகோவாவை அதிகமதிகமாக நேசிப்பதற்கேற்ற சூழலை உருவாக்க பெற்றோர் வேறென்ன செய்யலாம்? அப்போஸ்தலனாகிய யோவான் பின்வருமாறு எழுதினார்: “தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?” (1 யோவான் 4:20, 21) எனவே, கிறிஸ்தவ சகோதர சகோதரிகளை நேசிக்கும்படி உங்கள் பிள்ளைகளுக்குக் கற்பிக்கையில், கடவுளை நேசிக்கும்படியே அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறீர்கள். பெற்றோர் தங்களையே இவ்வாறு கேட்டுக் கொள்வது நல்லது: ‘சபையிலுள்ளவர்களைப்பற்றி எப்போதும் நல்ல விஷயங்களைப் பேசுகிறேனா அல்லது விமர்சிக்கிறேனா?’ நீங்கள் என்ன தொனியில் பேசுகிறீர்கள் என்பதை எப்படித் தெரிந்து கொள்ளலாம்? சபை கூட்டங்களைப் பற்றியும் சபையிலுள்ளவர்களைப் பற்றியும் உங்கள் பிள்ளைகள் என்ன பேசுகிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனியுங்கள். அப்போது உங்கள் எண்ணங்கள் அவர்களுடைய பேச்சில் எதிரொலிப்பதை நீங்கள் காணலாம்.
16 ஆன்மீக சகோதரர்களை நேசிக்கும்படி பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க பெற்றோர் என்ன செய்யலாம்? இரண்டு டீனேஜ் பையன்களின் தகப்பனான பீட்டர் இவ்வாறு சொல்கிறார்: “எங்கள் மகன்கள் சிறுவர்களாக இருந்த சமயத்திலிருந்தே ஆன்மீக ரீதியில் முதிர்ச்சியுள்ள சகோதர சகோதரிகளை அடிக்கடி விருந்துக்காகவும் எங்களுடன் நேரம் செலவழிப்பதற்காகவும் அழைத்தோம். அப்படிப்பட்ட சமயங்களில் நாங்கள் எல்லாருமே ரொம்ப ஜாலியாக இருந்தோம். எங்களுடைய பிள்ளைகள் சின்ன வயதிலிருந்தே யெகோவாவை நேசிக்கிறவர்களுடன்தான் பழகி வந்திருக்கிறார்கள். யெகோவாவுக்குச் சேவை செய்வதே அதிக சந்தோஷம் தரும் வாழ்க்கை என்பதை இப்போது அவர்கள் புரிந்திருக்கிறார்கள்.” ஐந்து பெண்பிள்ளைகளின் தகப்பனான டென்னஸ் இவ்வாறு சொல்கிறார்: “சபையில் வயதான பயனியர்களுடன் நட்பு கொள்ளும்படி எங்கள் மகள்களை ஊக்குவித்தோம். வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் பயணக் கண்காணிகளையும் அவர்கள் மனைவிகளையும் உபசரித்தோம்.” சபை ஒரு பெரிய குடும்பம், அதனால் நம் குடும்பத்தில் உள்ளவர்களை நடத்துவதைப் போலத்தான் சபையில் உள்ளவர்களையும் நடத்த வேண்டும் என்ற கருத்தை பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கவும் நீங்கள் முயலுகிறீர்களா?
பிள்ளையின் பொறுப்பு
17. பிள்ளைகள் முடிவாக எதைத் தீர்மானிக்க வேண்டும்?
17 வில்வீரரின் உதாரணத்தை நாம் மீண்டும் சிந்திப்போம். அவர் என்னதான் திறம்பட்டவராக இருந்தாலும், அம்பு வளைந்தோ கோணல்மாணலாகவோ இருந்தால் இலக்கை அவரால் அடைய முடியாது. சொல்லப்போனால், வளைந்திருக்கும் அம்பை நிமிர்த்த, அதாவது பிள்ளையின் தவறான எண்ணங்களைச் சரிசெய்ய பெற்றோர் கடினமாக முயற்சிப்பார்கள் என்பது உண்மைதான். என்றாலும், இவ்வுலகத்தின் செல்வாக்கு தங்களை வடிவமைக்க விட்டுவிடுவார்களா அல்லது தங்களுடைய ‘பாதைகளைச் செவ்வைப்படுத்த’ யெகோவாவை அனுமதிப்பார்களா என்பதை முடிவாகத் தீர்மானிப்பது பிள்ளைகளின் பொறுப்பே.—நீதிமொழிகள் 3:5, 6; ரோமர் 12:2.
18. ஒரு பிள்ளை செய்யும் தீர்மானம் மற்றவர்களை எப்படிப் பாதிக்கலாம்?
18 “கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும்” பிள்ளைகளை வளர்க்க வேண்டிய கனத்த பொறுப்பு பெற்றோருக்கு இருந்தாலும்கூட ஒரு பிள்ளை எப்படிப்பட்ட நபராக வளரும் என்பது அதன் கையில்தான் இருக்கிறது. (எபேசியர் 6:4) எனவே, பிள்ளைகளே, உங்களை இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள், ‘என் பெற்றோரின் அன்பான பயிற்றுவிப்பை நான் ஏற்றுக் கொள்வேனா?’ அப்படி ஏற்றுக் கொள்வீர்களானால், நீங்கள் மிகச் சிறந்த வாழ்க்கைமுறையைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று அர்த்தம். அதோடு, உங்கள் பெற்றோரை சந்தோஷத்தில் ஆழ்த்துவீர்கள். அதைவிட முக்கியமாக, யெகோவாவின் இருதயத்தைச் சந்தோஷப்படுத்துவீர்கள்.—நீதிமொழிகள் 27:11.
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளால் வெளியிடப்பட்டது.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• ஜெபிப்பதிலும் பைபிள் படிப்பதிலும் பெற்றோர் எவ்வாறு நல்ல முன்மாதிரி வைக்க முடியும்?
• பெற்றோர் எவ்வாறு அமைதியான குடும்பச் சூழலை உருவாக்கலாம்?
• பிள்ளைகள் செய்ய வேண்டிய தீர்மானம் என்ன? அவர்களுடைய தீர்மானம் மற்றவர்களை எப்படிப் பாதிக்கும்?
[பக்கம் 28-ன் படம்]
தனிப்பட்ட படிப்பில் உங்கள் பிள்ளைக்கு நல்ல முன்மாதிரி வைக்கிறீர்களா?
[பக்கம் 29-ன் படம்]
குடும்பத்தில் சந்தோஷம் உலாவர அமைதியான குடும்பச் சூழல் அவசியம்