உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • rs பக். 269-பக். 276
  • நடுநிலை வகிப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நடுநிலை வகிப்பு
  • வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல்
  • இதே தகவல்
  • “இரட்சிப்பு யெகோவாவினுடையதே”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • யெகோவாவின் சாட்சிகள் ஏன் தேசிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை?
    யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
  • “அவர்கள் உலகத்தின் பாகமல்ல”
    ஒரே உண்மையான கடவுளுடைய வணக்கத்தில் ஒன்றுபடுதல்
  • ‘அவர்கள் உலகத்தின் பாகமல்ல’
    ஒரே மெய்க் கடவுளை வணங்குங்கள்
மேலும் பார்க்க
வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல்
rs பக். 269-பக். 276

நடுநிலை வகிப்பு

சொற்பொருள் விளக்கம்: போரிடும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கட்சிகளில் எதையும் சேராத அல்லது ஆதரிக்காதவர்களின் நிலை. உலகத்தின் உட்கட்சிகளுக்கிடையே ஏற்படும் சண்டைகளைக் குறித்ததில் ல்லாத் தேசங்களிலும் எல்லாச் சூழ்நிலைமைகளிலும் உண்மையான கிறிஸ்தவர்கள் முழு நடுநிலை வகிப்பைக் காத்து வந்திருப்பது பூர்வ மற்றும் நவீன கால சரித்திர உண்மையாயிருக்கிறது. தேசாபிமான சடங்குமுறைகளில் பங்குகொள்வது, படைக்கலம் பூண்ட படைகளில் சேவிப்பது, ஓர் அரசியல் கட்சியில் சேர்வது, அரசியல் பதவிக்காக நாடியோடுவது, அல்லது வாக்களிப்பது ஆகியவற்றைப் பற்றி மற்றவர்கள் செய்வதில் அவர்கள் தலையிடுகிறதில்லை. ஆனால் அவர்கள்தாமே, பைபிளின் கடவுளாகிய யெகோவாவை மாத்திரமே வணங்குகிறார்கள்; அவர்கள் தங்கள் உயிரை எந்த நிபந்தனையுமில்லாமல் அவருக்கு ஒப்புக்கொடுத்து அவருடைய ராஜ்யத்துக்குத் தங்கள் முழு ஆதரவையும் கொடுக்கிறார்கள்.

உலகப்பிரகாரமான அரசாங்கங்களின் அதிகாரத்தினிடம் கிறிஸ்தவர்கள் கொண்டுள்ள மனப்பான்மைக்கு ஆதாரமாயுள்ள வேத வசனங்கள் யாவை?

ரோமர் 13:1, 5-7: “எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் [அரசாங்க ஆளுநர்களுக்குக்] கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது. . . . ஆகையால், நீங்கள் கோபக்கினையினிமித்தம் மாத்திரமல்ல, மனச்சாட்சியினிமித்தமும் கீழ்ப்படிய வேண்டும். . . . ஆகையால் யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்தவேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள்; எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள்; எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள்.” (கடவுள் அனுமதியாமல் எந்த அரசாங்கமும் இருக்கமுடியாது. தனியாட்களான அதிகாரிகளின் நடத்தை எத்தகையதாயினும், அவர்கள் வகித்திருந்த அதிகாரப் பதவியினிமித்தம் உண்மையான கிறிஸ்தவர்கள் அவர்களுக்கு மரியாதை காட்டியுள்ளனர். உதாரணமாக, அந்த அரசாங்கங்கள் வரி பணத்தை எம்முறையில் பயன்படுத்தினபோதிலும், எல்லாரும் பயனடையக்கூடிய அவர்களுடைய சேவைக்குப் பதிலாக, யெகோவாவின் வணக்கத்தார் தங்கள் வரிகளை நேர்மையுடன் செலுத்திவந்திருக்கிறார்கள்.)

மாற்கு 12:17: “அதற்கு இயேசு: இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்.” (ஆகையால் கிறிஸ்தவர்கள் உலகப்பிரகாரமான அரசாங்கங்களுக்குப் பணத்தை வரிகளாகச் “செலுத்த” வேண்டியதுமட்டுமல்லாமல், கடவுளிடம் தங்களுக்கு இருக்கும் மிக மேலான கடமைகளையும் நிறைவேற்றவேண்டுமென எப்பொழுதும் உணர்ந்திருக்கிறார்கள்.)

அப். 5:28, 29: “[யூத உயர்நீதிமன்ற பேச்சாளன் ஒருவன்] நீங்கள் அந்த [இயேசு கிறிஸ்துவின்] நாமத்தைக் குறித்துப் போதகம்பண்ணக்கூடாதென்று நாங்கள் உங்களுக்கு [அப்போஸ்தலருக்கு] உறுதியாய்க் கட்டளையிடவில்லையா? அப்படியிருந்தும், இதோ, எருசலேமை உங்கள் போதகத்தினாலே நிரப்பி, அந்த மனுஷனுடைய இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தவேண்டுமென்றிருக்கிறீர்கள் என்று சொன்னான். அதற்குப் பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும் மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் [அரசராக, NW] தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது . . . என்றார்கள்.” (மனித அதிபதிகளின் கட்டளைகளுக்கும் கடவுளின் கட்டளைகளுக்கும் நடுவில் நேர்முகமான முரண்பாடிருக்கையில், உண்மையான கிறிஸ்தவர்கள் அப்போஸ்தலரின் முன்மாதிரியைப் பின்பற்றி கடவுளுக்குக் கீழ்ப்படிவதையே முதல் வைத்திருக்கின்றனர்.)

உலகப்பிரகாரமான போர்களில் பங்குகொள்வதைக் குறித்து உண்மையான கிறிஸ்தவர்களின் மனப்பான்மைக்கு எப்பொழுதும் ஆதாரமாயுள்ள வேதவசனங்கள் யாவை?

மத். 26:52: “இயேசு அவனை நோக்கி: உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்துபோவார்கள். . . . என்றார்.” (கடவுளுடைய குமாரனைப் பாதுகாக்கப் போரிடுவதைப்பார்க்கிலும் வேறு ஏதாவது உயர்ந்தக் காரணம் போரிடுவதற்கு இருக்க முடியுமா? எனினும், அந்தச் சீஷர்கள் மாம்சப்பிரகாரமான போருக்குரிய ஆயுதங்களை நாடக்கூடாதென இயேசு இங்கே தெரிவித்தார்.)

ஏசா. 2:2-4, தி.மொ.: “கடைசி நாட்களில் யெகோவாவின் ஆலயமுள்ள பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தபிக்கப்பட்டு மலைகளுக்குமேலாய் உயர்த்தப்படும்; . . . அவர் ஜாதியாருக்குள் நியாயந்தீர்த்து பல தேசத்தாருக்குத் தீர்ப்புச் செய்வார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தம் கற்பதுமில்லை.” (எல்லாத் தேசங்களிலிருந்தும் தனிப்பட்ட ஆட்கள் தாங்கள் தொடரப்போகிற போக்கை அவரவரே தீர்மானிக்கவேண்டும். யெகோவாவின் நியாயத்தீர்ப்புக்குச் செவிகொடுத்தவர்கள் அவரே தங்கள் கடவுள் என்பதற்கு அத்தாட்சியளிக்கின்றனர்.)

2 கொரி. 10:3, 4: “நாங்கள் மாம்சத்தில் நடக்கிறவர்களாயிருந்தும், மாம்சத்தின்படி போர்செய்கிறவர்களல்ல. எங்களுடைய போரயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது.” (இங்கே பவுல், சபையைப் பொய்ப் போதகங்களுக்கு எதிரே பாதுகாப்பதற்கு, வஞ்சக சூழ்ச்சி, பகட்டாய்த் தொனிக்கும் மொழிநடை, அல்லது உலகப்பிரகாரமான போரயுதங்கள் போன்ற மாம்சத்துக்கேற்றப் போரயுதங்களைத் தான் ஒருபோதும் நாடவில்லையெனக் கூறுகிறான்.)

லூக்கா 6:27, 28: “எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் [இயேசு கிறிஸ்து] சொல்லுகிறேன்: உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யுங்கள். உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள்.”

பூர்வ இஸ்ரவேலர் போரில் ஈடுபடும்படி யெகோவா அனுமதித்தது உண்மையல்லவா?

பூர்வ இஸ்ரவேலருக்குச் சுதந்தரசொத்தாக யெகோவாதாமே நியமனஞ்செய்த தேசத்தை உடைமையாக எடுத்துக்கொள்ளவும், இழிவான பழக்கவழக்க நடத்தைகளில் ஈடுபட்டு உண்மையான கடவுளை எதிர்த்துவந்ததனால் உயிர்வாழ்வதற்கு இனிமேலும் தகுதியுடையோரல்லரென யெகோவா கருதின ஜனங்கள்மீது மரண தண்டனையை நிறைவேற்றவும் போர் நடவடிக்கையைப் பயன்படுத்தும்படி யெகோவா பூர்வ இஸ்ரவேல் ஜனத்துக்குக் கட்டளையிட்டார். (உபா. 7:1, 2, 5; 9:5; லேவி. 18:24, 25) எனினும், ராகாபும் கிபியோனியரும் யெகோவாவில் கொண்டிருந்த நம்பிக்கையைச் செயலில் மெய்ப்பித்துக் காட்டினதால் அவர்களுக்கு இரக்கம் காண்பிக்கப்பட்டது. (யோசுவா 2:9-13; 9:24-27) நியாயப்பிரமாண உடன்படிக்கையில் கடவுள் தாம் சம்மதிக்கும் போருக்குரிய விதிகளை நியமித்து வைத்தார், விதிவிலக்குகளையும் அந்தப் போர் நடத்தப்படவேண்டிய முறையையும் குறிப்பிட்டார். அவை உண்மையாகவே யெகோவாவின் பரிசுத்தப் போர்கள். இன்று எந்தத் தேசத்தின் உலகப்பிரகாரமான போரக் குறித்ததிலும் அவ்வாறில்லை.

கிறிஸ்தவ சபை ஸ்தபிக்கப்பட்டதோடு, ஒரு புதிய நிலை உண்டாயிற்று. கிறிஸ்தவர்கள் மோசயின் நியாயப்பிரமாணத்தின்கீழ் இல்லை. கிறிஸ்துவைப் பின்பற்றுவோர் சகல ஜாதிகளின் ஜனங்களையும் சீஷராக்கவேண்டும்; ஆகையால் உண்மையான கடவுளை வணங்குவோர் காலப்போக்கில் எல்லாத் தேசங்களிலும் காணப்படுவர். எனினும், அந்தத் தேசங்கள் போர் தொடுக்கச் செல்கையில் அவர்களின் உள்நோக்கமென்ன? பூமி முழுவதையும் சிருஷ்டித்தவரின் சித்தத்தை நிறைவேற்றுவதற்கா அல்லது ஏதோவொரு தேசீய அக்கறையை முன்னேற்றுவிப்பதற்கா? ஒரு தேசத்திலுள்ள உண்மையான கிறிஸ்தவர்கள் மற்றொரு தேசத்துக்கு எதிராகப் போருக்குச் சென்றால், அவர்கள் தங்கள் உடன் விசுவாசிகளுக்கு எதிராக, தாங்கள்தாமே ஜெபித்த அதே கடவுளிடம் உதவிக்காக ஜெபித்த ஆட்களுக்கு எதிராகப் போர்செய்வோராய் இருப்பர். சரியாகவே, கிறிஸ்து பட்டயத்தை உறையிலே போடும்படி தம்மைப் பின்பற்றுவோருக்குக் கட்டளையிட்டார். (மத். 26:52) இதுமுதற்கொண்டு, அவர்தாமே, பரலோகத்தில் மகிமைப்படுத்தப்பட்டவராய், உண்மையான கடவுளுக்கும் அவருடைய சித்தத்துக்கும் எதிர்ப்பைக் காட்டினவர்களுக்கு மரணத்தீர்ப்பை நிறைவேற்றுவார்.—2 தெச. 1:6-8; வெளி. 19:11-21.

போராயுதந்தரித்தப் படைகளில் சேவிப்பதைக் குறித்து, பூர்வக் கிறிஸ்தவர்கள் கொண்டிருந்த மனப்பான்மையைப்பற்றி, உலகப்பிரகாரமான சரித்திரம் என்ன தெரிவிக்கிறது?

“கிடைக்கக்கூடிய எல்லாத் தகவல்களையும் கவனமாய்த் திரும்ப ஆராய்வது, மார்க்கஸ் அரலியஸின் [பொ.ச. 161-லிருந்து 180 வரை ரோம பேரரசன்] காலம் வரை, ஒரு கிறிஸ்தவனும் போர்ச்சேவகனாகவில்லை; மேலும் ஒரு போர்ச்சேவகனும், கிறிஸ்தவனானபின்பு, இராணுவ சேவையில் தொடர்ந்திருக்கவில்லை என்று காட்டுகிறது.”—கிறிஸ்தவத்தின் எழுச்சி (லண்டன், 1947), E.W. பார்ன்ஸ், பக். 333.

“போராலும், ஒருவருக்கொருவர் நடத்தும் படுகொலையாலும், எல்லா அக்கிரமத்தாலும், நிரம்பியிருந்த நாங்கள், உலக முழுவதிலும் ஒவ்வொருவரும் எங்கள் போரயுதங்களை,—எங்கள் பட்டயங்களைக் கலப்பைக் கொழுக்களாகவும், எங்கள் ஈட்டிகளை வேளாண்மைக்குரிய கருவிகளாகவும் மாற்றிவிட்டோம்,—மேலும் நாங்கள் பக்தியையும், நீதியையும், அருட்பண்பையும், விசுவாசத்தையும், நம்பிக்கையையும் வளர்க்கிறோம், இவற்றை, சிலுவையில் அறையப்பட்டவரின்மூலம் பிதாவிடமிருந்தே நாங்கள் அடைந்திருக்கிறோம்.”—ஜஸ்ட்டின் மார்ட்டிர் “டிரைஃபோ என்ற யூதனிடம் உரையாடல்” (பொ.ச. 2-ம் நூற்றாண்டு), ‘நைசினுக்கு முற்பட்ட பிதாக்கள் (கிரான்ட் ராப்பிட்ஸ், மிச்.; 1885 எடின்பர்க் பதிப்பின் மறு அச்சுப்பதிப்பு), A. ராபர்ட்ஸ் மற்றும் J. டோனால்ட்சன் ஆகியோர் பதிப்பித்தது, புத். I, பக். 254.

“பேரரசின் பொதுத்துறை ஆட்சியிலோ அல்லது இராணுவ தற்காப்புப் போர் நடவடிக்கைகளிலோ எத்தகைய பங்குமெடுக்க அவர்கள் மறுத்தனர். . . . கிறிஸ்தவர்கள், மேலுமதிகப் பரிசுத்தமான கடமையை துறந்துவிடாமல், போர்ச்சேவகரின், நீதிபதிகளின், அல்லது ஆட்சியாளர்களின் பாகத்தை வகிப்பது முடியாதக் காரியமாயிருந்தது.”—கிறிஸ்தவத்தின் சரித்திரம் (நியு யார்க், 1891), எட்வர்ட் கிபன், பக். 162, 163.

அரசியல் விவாதங்களிலும் நடவடிக்கைகளிலும் உட்படுவதைக் குறித்து உண்மையான கிறிஸ்தவர்கள் கொண்டுள்ள மனப்பான்மைக்கு எந்த வேதவசனங்கள் எப்பொழுதும் ஆதாரமாக இருந்திருக்கின்றன?

யோவான் 17:16, NW: “நான் [இயேசு] உலகத்தின் பாகமல்லாததுபோல், அவர்களும் உலகத்தின் பாகமல்லர்.”

யோவான் 6:15: “அவர்கள் [யூதர்கள்] வந்து, தம்மை ராஜாவாக்கும்படிப் பிடித்துகொண்டுபோக மனதாயிருக்கிறார்களென்று இயேசு அறிந்து, மறுபடியும் விலகி, தனியே மலையின்மேல் ஏறினார்.” பின்னால் ரோம தேசாதிபதியினிடம் அவர் பின்வருமாறு கூறினார்: “என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போரடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல.”—யோவான் 18:36.

யாக். 4:4: “விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.” (இந்தக் காரியம் ஏன் அவ்வளவு வினைமையானது? ஏனென்றால், 1 யோவான் 5:19-ல் சொல்லியிருக்கிறபடி, “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது.” யோவன் 14:30-ல் இயேசு சாத்தானை “இந்த உலகத்தின் அதிபதி,” எனக் குறிப்பிட்டார். ஆகையால், ஒருவன் உலகப்பிரகாரமான எந்தக் கட்சியை ஆதரித்தாலும் சரி, அவன் யாருடைய ஆட்சி அதிகாரத்தின்கீழ் உண்மையில் வருகிறான்?)

அரசியலில் தலையிடுவதைக் குறித்து, பூர்வ கிறிஸ்தவர்களென அறியப்பட்டவர்களின் மனப்பான்மை என்னவென உலகப்பிரகாரமான சரித்திராசிரியர்கள் அறிவிக்கின்றனர்?

“புறமத உலகத்தை ஆண்டவர்கள் பூர்வ கிறிஸ்தவத்தைப் பெரும்பாலும் புரிந்துகொள்ளவுமில்லை தயவாய்க் கருதவுமில்லை. . . . கிறிஸ்தவர்கள் ரோமக் குடிமக்களின் சில கடமைகளில் பங்குகொள்ள மறுத்தனர். . . . அவர்கள் அரசியல் வேலையை ஏற்பதில்லை.”—நாகரிகத்துக்குச் செல்லும் வழியில், ஓர் உலகச் சரித்திரம் (ஃபிலடெல்ஃபியா, 1937), A. ஹெக்கல் மற்றும் J. சிக்மன், பக். 237, 238.

“கிறிஸ்தவர்கள், ஆசாரிய மற்றும் ஆவிக்குரிய மரபினராக, அரசாங்கத்தினின்று ஒட்டாமல்விலகி தனிவேறுபட்டு நின்றார்கள், மேலும் கிறிஸ்தவம், அந்த முறையில் மாத்திரமே சமுதாய வாழ்க்கையைப் பாதிக்கக்கூடியதாகத் தோன்றுகிறது, அது, அரசாங்கத்தின் குடிமக்களுக்குள் மேலும் மேலுமதிகமாய்ப் பரிசுத்த உணர்ச்சிகளைப் படிப்படியாய் அறிவுறுத்த நடைமுறையில் பெருமுயற்சி செய்வதால் மிகத் தூய்மையானதென்று ஒப்புக்கொள்ளவேண்டியதே.”—கிறிஸ்தவ மதத்தின் மற்றும் சர்ச்சின் சரித்திரம், முதல் மூன்று நூற்றாண்டுகளின்போது (நியு யார்க், 1848), அகஸ்டஸ் நியான்டர், H. J. ரோஸ் என்பவரால் ஜெர்மன் மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது, பக். 168.

கொடிகள் மற்றும் தேசிய கீதங்கள் உட்பட்ட சடங்காசாரங்களைக் குறித்து உண்மையான கிறிஸ்தவர்கள் கொண்டுள்ள மனப்பான்மைக்கு எந்த வேதவசனங்கள் எப்பொழுதும் ஆதாரமாயிருந்திருக்கின்றன?

1 கொரி. 10:14: “விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள்.” (மேலும் யாத்திராகமம் 20: 4, 5)

1 யோவான் 5:21: “பிள்ளைகளே, நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக.”

லூக்கா 4:8: “இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: உன் தேவனாகிய கர்த்தரைப் [யெகோவாவையே] பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.”

தானியேல் 3:1-28-ஐயும் பாருங்கள்.

அத்தகைய தேசாபிமான சின்னங்களும் சடங்காசாரங்களும் உண்மையில் மத உட்பொருளைக் கொண்டிருக்கின்றனவா?

“அமெரிக்கன் பள்ளியில் கொடி வணக்கத்துக்கும் வாக்காணை எடுப்பதற்குமுரிய சடங்கு மதக் கடைப்பிடிப்பென [சரித்திராசிரியன்] கார்ல்டன் ஹேயிஸ் வெகுகாலத்துக்கு முன் குறிப்பிட்டுக் காட்டினான். . . . மேலும் நாள்தோறும் கடைப்பிடிக்கும் இந்தச் சடங்குமுறைகள் மதசம்பந்தமானவையென தொடர்ந்த பல வழக்குகளில் உயர்நீதிமன்றம் முடிவாக உறுதிசெய்துள்ளது.”—தி அமெரிக்கன் காரக்டர் (நியு யார்க், 1956) D. W. பிரோகன், பக். 163, 164.

“பூர்வ கொடிகள் ஏறக்குறைய முற்றிலும் மத இயல்புடையவை. . . . நூற்றாண்டுகளாக, இங்கிலாந்தின் தேசீய கொடி—புனித ஜியார்ஜின் செஞ்சிலுவை—மதசம்பந்தமான ஒன்றாயிருந்தது; உண்மையில் தேசீய கொடிகளுக்குப் புனித உணர்ச்சியைக் கொடுக்க மதத்தின் உதவி எப்பொழுதும் தேடப்பட்டதென தோன்றுகிறது, மேலும் அவை பலவற்றின் தொடக்கம் ஒரு புனிதக் கொடியிலிருந்து வந்ததென ஆய்ந்து கண்டறியலாம்.”—என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா (1946), புத். 9, பக். 343.

“நவம்பர் 19-ம் தேதியில், [இராணுவ உயர்] நீதிமன்றத்தின் துணைப்பெருந்தலைவர் தலைமைவகித்த ஒரு பொது சடங்காசாரத்தில், பிரஸீலியன் கொடிக்கு உயர்மதிப்புகள் காட்டப்பட்டன. . . . அந்தக் கொடியை ஏற்றினபின், அமைச்சர் படைபெருந்தலைவர், டிரிஸ்டேயோ டி அலென்கார் அராரைப் அந்த நினைவுச் சின்னம் நாட்டினதைக் குறித்துப் பின்வரும் முறையில் தம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார்: ‘ . . . கொடிகள் வணக்கத்தைக் கடமைப்படுத்தும் தேசாபிமான மதத்தின் ஒரு தெய்வத்தன்மை வாய்ந்தவயாகிவிட்டிருக்கின்றன. . . . கொடி மரியாதை செலுத்தி வணங்கப்படுகிறது . . . தந்தை நாடு வணங்கப்படுவதுபோல் கொடியும் வணங்கப்படுகிறது.’”—டயரியோ ட ஜஸ்டிக்கா (கூட்டரசு தலைநகர், பிரேசில்), பிப்ரவரி 16, 1956, பக். 1906.

தேசாபிமான சடங்காசாரங்களைக் குறித்து, பூர்வ கிறிஸ்தவர்களென அறியப்பட்டவர்களின் மனப்பான்மையைப் பற்றி உலகப்பிரகாரமான சரித்திரம் என்ன சொல்கிறது?

“கிறிஸ்தவர்கள் . . . அரசரின் தெய்வத்தன்மைக்குப் பலிசெலுத்த மறுத்துவிட்டனர்—இன்று கொடிக்கு வணக்கம் செலுத்த அல்லது பற்றுறுதி ஆணையைச் சொல்ல மறுப்பதற்குப் பொதுவாய்ச் சமமாயிருந்தது. . . . அவர்கள் வசதிக்காக ஒரு பலிபீடம், அதன்மீது நெருப்பு எரிந்துகொண்டிருக்கும்படி பொதுவாய் வட்டரங்கில் வைத்திருந்தபோதிலும், கிறிஸ்தவர்களில் வெகு சிலரே மறுதலித்தனர். ஒரு கைதி செய்வதற்கிருந்ததெல்லாம் ஒரு சிட்டிகையளவு தூபவர்க்கத்தை அந்த எரியும் தழலில் தூவவேண்டியதே, அவனுக்குப் பலிசெலுத்தின சான்று பத்திரம் கொடுத்து விடுதலை செய்வர். மேலும் அவன் பேரரசனை வணங்குகிறதில்லை; ரோம அரசாங்கத்தின் தலைவனாக பேரரசனின் தெய்வீகத் தன்மையை அவன் வெறுமென ஒப்புக்கொள்கிறானென அவனுக்குக் கவனமாய் விளக்கினர். எனினும், பெரும்பாலும் கிறிஸ்தவர்கள் ஒருவரும் தப்பிக்கொள்வதற்கான அந்த வாய்ப்பைத் தங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளவில்லை.”—சாகப்போகும் நிலையில் இருப்போர் (நியு யார்க், 1958), D. P. மன்னிக்ஸ், பக். 135, 137.

“பேரரசனின் ஒரு சிலைக்குமுன் நின்ற ஒரு பலிபீடத்தில் ஒருசில தூபவர்க்கத் தூள்களைத் தூவுவதோ அல்லது ஒருசில திராட்சமது துளிகளைத் தெளிப்பதோ பேரரசனை வணங்கும் செயலில் அடங்கியிருந்தது. அந்த நிலைமையிலிருந்து வெகுகாலத்தால் விலகியிருக்கும் நாம் அந்தச் செயல் . . . கொடிக்கு அல்லது அரசாங்கத்தின் ஏதோ புகழ்பெற்ற ஆளுநருக்கு வணக்கம் செலுத்த கையைத் தூக்குவதிலிருந்தோ, மதிப்பு, மரியாதை, மற்றும் தேசாபிமானத்தைத் தெரிவிக்கும் ஒரு குறிப்பிலிருந்தோ எவ்வகையிலும் வேறுபட்டிருப்பதை ஒருவேளை காண்கிறதில்லை. அந்த முதல் நூற்றாண்டிலிருந்த மிகப் பல ஆட்கள் அதைப்பற்றி ஒருவேளை அம்முறையில் உணர்ந்திருக்கலாம், ஆனால் கிறிஸ்தவர்கள் அவ்வாறு உணரவில்லை. அவர்கள் அந்த முழு காரியத்தையும் மத வணக்கத்துக்குரியதெனவும், பேரரசனை ஒரு தெய்வமாக ஒப்புக்கொள்வதெனவும், ஆகையால் அது கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் உண்மைத்தவறுவதெனவும் கருதி, அதைச் செய்ய மறுத்தனர்.”—கிறிஸ்தவ மதத்தின் தொடக்கங்கள் (நியு ஹேவன், கான்.; 1958), M. F. எல்லர், பக். 208, 209.

கிறிஸ்தவர்களின் நடுநிலைவகிப்பு அவர்கள் தங்கள் அயலாரின் சுகநலத்தில் அக்கறை கொண்டவரல்லரென பொருள்கொள்கிறதா?

நிச்சயமாகவே இல்லை. இயேசு திரும்ப எடுத்துக் கூறின பின்வரும் கட்டளையை அவர்கள் நன்றாய் அறிந்துள்ளனர் மற்றும் அதைப் பொருத்திப் பயன்படுத்த மனச்சாட்சியுடன் பெருமுயற்சியெடுக்கின்றனர்: “உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல அயலானிடத்திலும் அன்புகூரவேண்டும்.” (மத். 22:39, தி.மொ.) மேலும், “யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்,” என்று அப்போஸ்தலனாகிய பவுல் எழுதி பதிவுசெய்துள்ள அறிவுரையையும் அறிந்திருக்கிறார்கள். (கலா. 6:10) தங்கள் அயலாருக்குத் தாங்கள் செய்யக்கூடிய மிகப் பெரிய நன்மை, கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை அவர்களோடு பகிர்ந்துகொள்வதேயென அவர்கள் உறுதியாய் நம்புகின்றனர், இந்த ராஜ்யம் மனிதவர்க்கம் எதிர்ப்படும் பிரச்னைகளை நிலையாய்த் தீர்த்துவிடும், மேலும் அதை ஏற்போருக்கு நித்திய ஜீவனின் அதிசயமான எதிர்பார்ப்பைத் திறந்துவைக்கிறது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்