நம் விசுவாசத்திற்கு நாம் எவ்வாறு நற்பண்பைக் கூட்டி வழங்கலாம்?
“உள்ளப்பூர்வமான எல்லா முயற்சியினால், உங்கள் விசுவாசத்தோடே நற்பண்பையும் . . . கூட்டி வழங்குங்கள்.”—2 பேதுரு 1:5-7, NW.
1, 2. யெகோவாவின் மக்கள் நற்பண்புள்ளது எதுவோ அதையே செய்ய நாம் ஏன் எதிர்பார்க்க வேண்டும்?
யெகோவா எப்பொழுதும் நற்பண்போடு செயல்படுகிறார். அவர் எது நீதியானதோ நல்லதோ அதைச் செய்கிறார். எனவே, அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களை ‘தம்முடைய மகிமையினாலும் நற்பண்பினாலும்’ அழைத்தவர் என்று அப்போஸ்தலன் பவுல் கடவுளைப்பற்றி பேச முடிந்தது. நற்பண்புள்ள அவர்களுடைய பரலோக பிதாவைப்பற்றிய திருத்தமான அறிவு, உண்மையான தேவபக்திக்குரிய வாழ்க்கையைப் பின்பற்ற எது அவசியம் என்பதை அவர்களுக்குக் காண்பித்திருந்தது.—2 பேதுரு 1:2, 3.
2 அப்போஸ்தலன் பவுல் கிறிஸ்தவர்களைப் ‘பிரியமான பிள்ளைகளைப்போலத் தேவனைப் பின்பற்றுகிறவர்களாகும்படி’ துரிதப்படுத்தினார். (எபேசியர் 5:1) அவர்களுடைய பரலோக பிதாவைப்போலவே, யெகோவாவின் வணக்கத்தார் எந்த சூழ்நிலையிலும் நற்பண்புள்ளது எதுவோ அதையே செய்யவேண்டும். ஆனால் நற்பண்பு என்றால் என்ன?
நற்பண்பு என்பது
3. “நற்பண்பு” எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?
3 நவீனகால அகராதிகள் “நற்பண்பு” என்பதை, “சீரிய பண்பு; நற்குணம்,” என்று வரையறை செய்கின்றன. அது “சரியான செயலும் சிந்தனையும்; சுபாவத்தின் நற்குணம்.” நற்பண்புள்ள மனிதர் நீதியானவர். “சரியான தராதரத்திற்கு இணங்க வாழ்வது,” என்றும் நற்பண்பு வரையறுக்கப்படுகிறது. ஆனால், கிறிஸ்தவர்களுக்கு, “சரியான தராதரம்” கடவுளால் நிர்ணயிக்கப்படுகிறது, அதை அவர் தம்முடைய பரிசுத்த வார்த்தையாகிய பைபிளில் தெளிவாகக் கொடுத்திருக்கிறார்.
4. கிறிஸ்தவர்கள், 2 பேதுரு 1:5-7-ல் சொல்லப்பட்ட என்னென்ன பண்புகளை வளர்ப்பதற்கு கடினமாக உழைக்கவேண்டும்?
4 உண்மைக் கிறிஸ்தவர்கள், யெகோவா தேவனின் நீதியான தராதரங்களுக்கு இசைவாக வாழ்கிறார்கள், அவருடைய அருமையான வாக்குறுதிகளுக்கு விசுவாசத்தைக் காட்டுவதன்மூலம் அவர்கள் பிரதிபலிக்கிறார்கள். அவர்கள் பேதுருவின் ஆலோசனைக்குங்கூட செவிசாய்க்கிறார்கள்: “உள்ளப்பூர்வமான எல்லா முயற்சியினால், உங்கள் விசுவாசத்தோடே நற்பண்பையும், நற்பண்போடே அறிவையும், அறிவோடே தன்னடக்கத்தையும், தன்னடக்கத்தோடே சகிப்புத்தன்மையையும், சகிப்புத்தன்மையோடே தேவபக்தியையும், தேவபக்தியோடே சகோதரசிநேகத்தையும், சகோதரசிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள்.” (2 பேதுரு 1:5-7, NW) ஒரு கிறிஸ்தவன் இப்படிப்பட்ட பண்புகளை வளர்ப்பதற்குக் கடினமாக உழைக்கவேண்டும். இது சில நாட்களிலோ வருடங்களிலோ செய்யப்படுகிற காரியமல்ல, ஆனால் வாழ்நாட்காலம் முழுவதும் தொடர்ந்து எடுக்கப்படவேண்டிய முயற்சியைத் தேவைப்படுத்துகிறது. ஏன், நம் விசுவாசத்திற்கு நற்பண்பைக் கூட்டி வழங்குவதுதானே ஒரு சவாலாக இருக்கிறதே!
5. வேதாகம நோக்குநிலையின்படி நற்பண்பு என்பது என்ன?
5 “நற்பண்பு” என்று மொழிபெயர்க்கப்படும் கிரேக்க வார்த்தையின் மூல செவ்விய அர்த்தம், “எந்தவித சிறப்பான பண்பையும்” குறிக்கிறது என்று அகராதி தொகுப்பவர் M. R. வின்சென்ட் சொல்கிறார். கிறிஸ்தவர்கள் கடவுளுடைய “புண்ணியங்களை” அல்லது நற்பண்புகளை அறிவிக்கவேண்டும் என்று சொல்லும்போது, இதன் பன்மை வடிவத்தைப் பேதுரு பயன்படுத்தினார். (1 பேதுரு 2:9) வேதாகம நோக்குநிலையின்படி, நற்பண்பு என்பது மந்தமான ஒன்றாக அல்ல, ஆனால் “ஒழுக்க பலம், ஒழுக்க சக்தி, ஆத்துமாவின் செயல்பலம்” ஆக இருப்பதாக விளக்கப்படுகிறது. நற்பண்புகளைச் சொல்லும்போது, கடவுளுடைய ஊழியர்கள் வெளிப்படுத்தவும் பேணிக் காத்துக்கொள்ளவும் வேண்டிய தைரியமிக்க ஒழுக்க பண்பை பேதுரு மனதில் கொண்டிருந்தார். ஆனால் நாம் அபூரணராக இருப்பதால், கடவுளுடைய பார்வையில் நற்பண்பாக காணப்படுகிறதை உண்மையில் நாம் செய்ய முடியுமா?
அபூரணராக இருந்தாலும் நற்பண்போடு
6. நாம் அபூரணராய் இருந்தாலும், கடவுளுடைய பார்வையில் நற்பண்பாய் உள்ளதை நாம் செய்ய முடியும் என்று ஏன் சொல்லப்படலாம்?
6 நாம் அபூரணத்தையும் பாவத்தையும் சுதந்தரித்திருக்கிறோம், ஆதலால் கடவுளுடைய பார்வையில் நற்பண்புமிக்கச் செயலை எப்படி நாம் செய்ய முடியும் என்று ஒருவேளை நாம் சிந்திக்கலாம். (ரோமர் 5:12) நாம் சுத்த இருதயங்களைக் கொண்டிருந்து, அதிலிருந்து மாசற்ற சிந்தனைகளையும், வார்த்தைகளையும், செயல்களையும் வெளிப்படுத்துவதற்கு, நமக்கு யெகோவாவின் உதவி நிச்சயம் தேவை. (லூக்கா 6:45-ஐ ஒப்பிடுங்கள்.) பத்சேபாள் சம்பந்தமான பாவத்தைச் செய்தபின்பு, மனந்திரும்பிய சங்கீதக்காரன் தாவீது கெஞ்சினார்: “தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்தில் புதுப்பியும்.” (சங்கீதம் 51:10) தாவீது, கடவுளுடைய மன்னிப்பையும், ஒரு நற்பண்பான போக்கைப் பின்தொடர்வதற்குத் தேவையான உதவியையும் பெற்றார். எனவே, வினைமையான தவறு செய்திருந்து, ஆனால் கடவுளுடைய உதவியையும் சபை மூப்பர்களின் உதவியையும் மனந்திரும்புதலோடு ஏற்றுக்கொண்டிருந்தால், நாம் ஒரு நற்பண்புமிக்க பாதைக்குத் திரும்பி அங்கு நிலைத்திருக்க முடியும்.—சங்கீதம் 103:1-3, 10-14; யாக்கோபு 5:13-15.
7, 8. (அ) நாம் நற்பண்போடு தொடர்ந்து இருப்பதற்கு என்ன தேவை? (ஆ) நற்பண்போடு இருப்பதற்கு கிறிஸ்தவர்கள் என்ன உதவியைப் பெற்றிருக்கின்றனர்?
7 சுதந்தரிக்கப்பட்ட பாவத்தின் காரணமாக, நற்பண்புமிக்க வழி எதையெல்லாம் தேவைப்படுத்துகிறதோ அவற்றைச் செய்வதற்கு தொடர்ந்து நாம் உள்ளான போராட்டத்தைப் போராடிக்கொண்டே இருக்கவேண்டும். நற்பண்புமிக்கவர்களாக இருக்கவேண்டுமென்றால், ஒருபோதும் பாவத்தின் அடிமைகளாக நாம்தாமே ஆவதற்கு அனுமதிக்கமாட்டோம். பதிலாக, நாம் எப்போதும் சிந்தனையிலும், பேச்சிலும், செயலிலும் நற்பண்புமிக்க வகையில் நடந்து, “நீதிக்கு அடிமைகளாக” இருக்கவேண்டும். (ரோமர் 6:16-23) நம்முடைய மாம்சப்பிரகாரமான ஆசைகளும், பாவமுள்ள மனச்சாய்வுகளும் பலமிக்கவையாக இருப்பது உண்மைதான், மேலும் இவற்றிற்கும், கடவுள் நம்மிடத்தில் எதிர்பார்க்கும் நற்பண்புமிக்க செயல்களுக்கும் இடையே ஓயாத போராட்டத்தை நாம் எதிர்ப்படுகிறோம். எனவே, என்ன செய்யப்படவேண்டும்?
8 ஒரு காரியம், நாம் யெகோவாவின் பரிசுத்த ஆவியின் அல்லது கிரியை நடப்பிக்கும் சக்தியின் வழிநடத்துதல்களைப் பின்பற்ற வேண்டும். எனவே, நாம் பவுலின் புத்திமதிக்குக் கவனஞ்செலுத்தவேண்டும்: “ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள். மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது.” (கலாத்தியர் 5:16, 17) ஆம், நீதிக்குரிய ஓர் ஆற்றலாக, கடவுளுடைய ஆவியை நாம் பெற்றிருக்கிறோம், மேலும் சரியான நடத்தைக்கு ஒரு வழிகாட்டியாக நாம் அவருடைய வார்த்தையைப் பெற்றிருக்கிறோம். யெகோவாவின் அமைப்பின் உதவியையும், ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையின்’ ஆலோசனையையும் நாம் பெற்றிருக்கிறோம். (மத்தேயு 24:45-47) எனவே, பாவமுள்ள மனச்சாய்வுகளுக்கு விரோதமாக ஒரு வெற்றிகரமான போராட்டத்தை நாம் போராட முடியும். (ரோமர் 7:15-25) ஒருவேளை அசுத்தமான ஒரு சிந்தனை மனதிற்குள் வந்தால், நாம் அதை உடனே தூக்கி எறிந்துவிட்டு, நற்பண்பில்லாத எந்தவிதத்திலும் செயல்படும்படி வரும் சோதனையை எதிர்த்துச் செயல்படுவதற்கு கடவுளின் உதவிக்காக ஜெபிக்கவேண்டும்.—மத்தேயு 6:13.
நற்பண்பும் நம்முடைய சிந்தனைகளும்
9. நற்பண்புள்ள நடத்தை என்ன வகையான சிந்தனையைத் தேவைப்படுத்துகிறது?
9 ஒரு நபர் சிந்திக்கும் வழியில் நற்பண்பு ஆரம்பிக்கிறது. தெய்வீக தயவை அனுபவிப்பதற்கு, நாம் நீதியான, நல்ல, நற்பண்புமிக்க காரியங்களைச் சிந்திக்கவேண்டும். பவுல் சொன்னார்: “சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் [நற்பண்பு, NW] எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.” (பிலிப்பியர் 4:8) நம் மனதை நீதியிலும், கற்புள்ளவையிலும் நிலைநிறுத்தி வைக்கவேண்டும், மேலும் நற்பண்பற்றது எதுவும் நம்மைக் கவர்ந்திழுப்பதாக இருக்கக்கூடாது. பவுல் இவ்வாறு சொல்ல முடிந்தது: “நீங்கள் என்னிடத்தில் கற்றும் அடைந்தும் கேட்டும் கண்டும் இருக்கிறவைகளெவைகளோ, அவைகளையே செய்யுங்கள்.” நாம் பவுலைப்போல்—சிந்தனை, பேச்சு, செயல் ஆகியவற்றில் நற்பண்போடு—இருந்தால், நல்ல கூட்டாளிகளாகவும் கிறிஸ்தவ வாழ்க்கையில் மிகச் சிறந்த உதாரணங்களாகவும் இருப்போம், ‘சமாதானத்தின் தேவனும் நம்மோடுகூட இருப்பார்.’—பிலிப்பியர் 4:9.
10. நற்பண்புடையோராய் இருக்க, 1 கொரிந்தியர் 14:20-ன் தனிப்பட்ட பொருத்துதல் நமக்கு எவ்வாறு உதவிசெய்யும்?
10 சிந்தனையில் நற்பண்போடு நிலைத்திருந்து இவ்விதமாக நம்முடைய பரலோகத் தகப்பனை பிரியப்படுத்துவது நம்முடைய விருப்பமாக இருந்தால், பவுலின் ஆலோசனையைப் பின்பற்றுவது அவசியமாக இருக்கிறது: “சகோதரரே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள்; துர்க்குணத்திலே குழந்தைகளாயும், புத்தியிலோ தேறினவர்களாயுமிருங்கள்.” (1 கொரிந்தியர் 14:20) கிறிஸ்தவர்களாக நாம், பொல்லாதவை பற்றிய அறிவை அல்லது அனுபவத்தை தேடியலையமாட்டோம் என்பதை இது அர்த்தப்படுத்துகிறது. இந்த வகையில் கெடுக்கப்படுவதற்கு நம்முடைய மனதை அனுமதிப்பதற்குப் பதிலாக, நாம் குழந்தைகளைப்போல் இந்த விஷயத்தில் அனுபவப்படாமல் இருப்பதை ஞானமாய்த் தெரிந்தெடுப்போம். அதே சமயத்தில், ஒழுக்கக்கேடும் தவறு செய்தலும் யெகோவாவின் பார்வையில் பாவமானது என்பதை முழுமையாக நாம் புரிந்துகொள்கிறோம். நற்பண்போடு இருப்பதன்மூலம் அவரை மகிழ்விக்கவேண்டும் என்ற இருதயப்பூர்வமான ஓர் ஆசை நமக்குப் பலனளிக்கும். ஏனென்றால் அசுத்தமான பொழுதுபோக்கு வகைகளையும், சாத்தானுடைய ஆதிக்கத்தின்கீழிருக்கும் இந்த உலகத்தின் மனதைக் கெடுத்துப்போடும் மற்ற செல்வாக்குகளையும் தவிர்ப்பதற்கு இது நமக்கு உதவும்.—1 யோவான் 5:19.
நற்பண்பும் நம்முடைய பேச்சும்
11. நற்பண்போடிருப்பது என்ன வகையான பேச்சைத் தேவைப்படுத்துகிறது, இந்த வகையில் யெகோவா தேவனிலும் இயேசு கிறிஸ்துவிலும் என்ன எடுத்துக்காட்டுகளை நாம் கொண்டிருக்கிறோம்?
11 நம்முடைய சிந்தனைகள் நற்பண்புமிக்கதாய் இருந்தால், நாம் என்ன சொல்கிறோம் என்பதில் இது ஆழ்ந்தப் பாதிப்பைக் கொண்டிருக்கவேண்டும். நற்பண்போடு இருப்பது, சுத்தமான, ஆரோக்கியமான, உண்மையான, கட்டியெழுப்பும் பேச்சைத் தேவைப்படுத்துகிறது. (2 கொரிந்தியர் 6:3, 4, 7) யெகோவா “சத்தியத்தின் தேவன்.” (சங்கீதம் 31:5, NW) அவர் தம்முடைய செயல்தொடர்புகள் அனைத்திலும் உண்மையுள்ளவர், அவருடைய வாக்குறுதிகள் நிச்சயமானவை, ஏனென்றால் அவர் பொய்யுரையாதவர். (எண்ணாகமம் 23:19; 1 சாமுவேல் 15:29; தீத்து 1:3) கடவுளுடைய குமாரன் இயேசு கிறிஸ்து, “கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய்” இருக்கிறார். அவர் பூமியில் இருந்தபோது, எப்போதும் அவருடைய பிதாவிடமிருந்து பெற்றப்படியே சத்தியத்தைப் பேசினார். (யோவான் 1:14; 8:40) மேலுமாக, இயேசு “பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை.” (1 பேதுரு 2:22) நாம் உண்மையில் கடவுளுடைய மற்றும் கிறிஸ்துவினுடைய ஊழியர்களாய் இருந்தால், ‘சத்தியம் என்னும் கச்சையை அரையில் கட்டினவர்கள்போல,’ நாம் நம்முடைய பேச்சில் உண்மைத்தன்மையோடும், நடத்தையில் நேர்மையோடும் இருப்போம்.—எபேசியர் 5:9; 6:14.
12. நாம் நற்பண்புடையோராய் இருப்பதற்கு, என்ன வகையான பேச்சுக்களை நாம் தவிர்க்கவேண்டும்?
12 நாம் நற்பண்புமிக்கவராய் இருந்தால், நாம் தவிர்க்கவேண்டிய பேச்சு வகைகள் சில இருக்கின்றன. நாம் பவுலின் புத்திமதியினால் வழிநடத்தப்படுவோம்: “சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது.” “பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது. அப்படியே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள்; ஸ்தோத்திரஞ்செய்தலே தகும்.” (எபேசியர் 4:31; 5:3, 4) நம்முடைய நீதியுள்ள இருதயங்கள் கிறிஸ்தவமற்ற பேச்சுக்களைத் தவிர்ப்பதற்குத் தூண்டுவதால், மற்றவர்கள் நம் மத்தியில் இருப்பதை புத்துயிரளிப்பதாகக் காண்பார்கள்.
13. கிறிஸ்தவர்கள் ஏன் நாவை அடக்கவேண்டும்?
13 கடவுளைப் பிரியப்படுத்தவும் நற்பண்புமிக்க காரியங்களைப் பேசவும் விரும்புவது, நம் நாவைக் கட்டுப்படுத்தும். பாவமுள்ள மனச்சாய்வுகளினால், நாம் அனைவருமே வார்த்தைகளில் இடறலடைகிறோம். ஆனாலும், “நாம் குதிரைகளின் வாய்களில் கடிவாளம்போடும்போது,” அவை கீழ்ப்படிதலோடு நாம் நடத்தும் திசை நோக்கிச் செல்கிறது என்று சீஷர் யாக்கோபு சொல்கிறார். எனவே, நாவைக் கடிவாளம்போட்டு கட்டுப்படுத்தவும் மேலும் அதை நற்பண்புமிக்க வழிகளில் மட்டுமே பயன்படுத்தவும் கடினமாக முயற்சி செய்யவேண்டும். கட்டுப்படுத்தப்படாத நாவு, “அநீதி நிறைந்த உலகம்.” (யாக்கோபு 3:1-7) இந்தத் தேவபக்தியற்ற உலகத்தின் ஒவ்வொரு பொல்லாத குணமும் பழக்குவிக்கப்படாத நாவோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. அது பொய்ச் சாட்சி, திட்டுதல், புறங்கூறுதல் போன்ற இப்படிப்பட்ட அழிவைக் கொண்டுவரும் காரியங்களுக்குக் காரணமாக இருக்கிறது. (ஏசாயா 5:20; மத்தேயு 15:18-20) கட்டுப்பாடற்ற நாவு, தவறான, பிளவு உண்டாக்கும், அல்லது பழிதூற்றும் வார்த்தைகளைப் பேசும்போது, அது மரணத்தைக் கொண்டுவரும் விஷத்தினால் நிறைந்திருக்கிறது.—சங்கீதம் 140:3; ரோமர் 3:13; யாக்கோபு 3:8.
14 யாக்கோபு சொல்வதுபோல், கடவுளைப்பற்றி நன்றாகப் பேசுவதன்மூலம் ‘யெகோவாவைத் துதித்துவிட்டு,’ பின்பு மனிதர்கள்மேல் பொல்லாங்கை வேண்டுவதன்மூலம் ‘மனிதரைச் சபிப்பதற்கு’ நாவைத் தவறாகப் பயன்படுத்துவது பொருத்தமற்றதாக இருக்கிறது. கூட்டங்களில் கடவுளுடைய துதிகளைப் பாடிவிட்டு, பின்பு வெளியே போய், உடன் விசுவாசிகளைப்பற்றி பொல்லாப்பாகப் பேசுவது எவ்வளவு பாவமாயிருக்கிறது! தித்திப்பும் கசப்புமான தண்ணீர் ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து சுரக்க முடியாதே. யெகோவாவை நாம் சேவிக்கிறோமென்றால், நாம் இனிமையற்ற வார்த்தைகளைப் பேசுவதற்குப் பதிலாக, நற்பண்புமிக்க காரியங்களைப் பேசும்படி எதிர்பார்ப்பதற்கு மற்றவர்களுக்கு உரிமை இருக்கிறது. எனவே, நாம் பொல்லாதப் பேச்சை வெறுத்து விலகி, நம் கூட்டாளிகளுக்கு நன்மையைக் கொடுத்து, அவர்களை ஆவிக்குரிய வகையில் கட்டியெழுப்பும் காரியங்களைச் சொல்வோமாக.—யாக்கோபு 3:9-12.
நற்பண்பும் நம்முடைய செயல்களும்
15. மாறுபாடுள்ள வழிகளில் வாழ்வதற்கு வழிபார்ப்பதைத் தவிர்ப்பது ஏன் முக்கியமானது?
15 கிறிஸ்தவ சிந்தனையும், பேச்சும் நற்பண்புமிக்கதாய் இருக்கவேண்டுமென்றால், நம்முடைய செயல்களைப்பற்றி என்ன? நடத்தையில் நற்பண்புமிக்கவர்களாக இருப்பதுதான் கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெறும் ஒரே வழி. யெகோவாவின் எந்த ஊழியக்காரனும் நற்பண்பை உதறித்தள்ளிவிட்டு, மாறுபாடுள்ளவனாக, ஏமாற்றுபவனாக வாழ்வதற்கு வழிபார்த்துவிட்டு, அப்படிப்பட்ட காரியங்கள் கடவுளிடம் அங்கீகாரத்தைப் பெற்றுவிடும் என்று எண்ணக்கூடாது. நீதிமொழிகள் 3:32 சொல்கிறது: “மாறுபாடுள்ளவன் கர்த்தருக்கு அருவருப்பானவன்; நீதிமான்களோடே அவருடைய இரகசியம் இருக்கிறது.” யெகோவா தேவனோடு நம்முடைய உறவை நாம் நெஞ்சார நேசித்தோம் என்றால், அந்த யோசனையைத் தூண்டும் வார்த்தைகள் துன்பத்தை உண்டாக்கத் திட்டம் போடுவதிலிருந்து அல்லது தவறான வழியில் போவதிலிருந்து விலகியிருக்கும்படி நம்மைத் தடுத்து நிறுத்தும். ஏன், யெகோவாவின் ஆத்துமாவிற்கு அருவருப்பைத்தரும் ஏழு காரியங்களில், “துராலோசனையைப் பிணைக்கும் இருதயம்” இருக்கிறதே. (நீதிமொழிகள் 6:16-19) இதன் காரணமாக, இப்படிப்பட்ட செயல்களை நாம் தவிர்ப்போமாக. நம் உடன் மனிதர்களுக்கு பிரயோஜனமாயும் நம் பரலோகப் பிதாவுக்கு மகிமையாயும் இருப்பதற்கு, நற்பண்புமிக்க செயல்களில் நாம் ஈடுபடுவோமாக.
16. மாய்மால செயல்களில் ஏன் கிறிஸ்தவர்கள் ஈடுபடக்கூடாது?
16 நற்பண்பைக் காட்டுவது, நாம் நேர்மையாய் இருப்பதைத் தேவைப்படுத்துகிறது. (எபிரெயர் 13:18) ஒரு மாயக்காரன், அவனுடைய செயல்கள் அவனுடைய வார்த்தைகளுக்கு இசைவாக இல்லாததால், அவன் நற்பண்புள்ளவனாக இருக்கமுடியாது. “மாயக்காரன்” (ஹிப்பகிரிட்ஸ்) என்று மொழிபெயர்க்கப்படும் கிரேக்க வார்த்தை, “பதில் கொடுப்பவன்” என்று பொருள்படுகிறது, மேலும் மேடை நடிகரையும் குறிக்கிறது. கிரேக்க மற்றும் ரோம நடிகர்கள் முகமூடி அணிந்து நடித்தனர், இந்த வார்த்தை ஒரு பாசாங்கு செய்பவருக்கு உருவகமாகப் பயன்படுத்தப்படலாயிற்று. மாயக்காரர்கள் ‘உண்மையில்லாதவர்களாக’ இருந்தார்கள். (லூக்கா 12:46-ஐ மத்தேயு 24:50, 51-உடன் தொடர்புபடுத்திப் பார்க்கவும்) மாயம் (ஹிப்பகிரிஸிஸ்) என்பது பொல்லாத தன்மையையும் தந்திரத்தையும் ஒருவேளைக் குறிக்கலாம். (மத்தேயு 22:18; மாற்கு 12:15; லூக்கா 20:23) ஒரு நம்பத்தக்க ஆள், வெறும் போலியான சிரிப்புகள், முகப்புகழ்ச்சி, செயல்கள் ஆகியவற்றால் வஞ்சிக்கப்படும்போது அது எவ்வளவு வருத்தம் தருவதாயிருக்கிறது! மறுபட்சத்தில், நம்பத்தக்க கிறிஸ்தவர்களோடு பழகுகிறோம் என்பது இருதயத்திற்கு அனலூட்டுவதாய் இருக்கிறது. மேலும் நாம் நற்பண்போடும் மாய்மாலமில்லாமலும் இருப்பதற்காகக் கடவுள் நம்மை ஆசீர்வதிக்கிறார். ‘மாயமற்ற சகோதரசிநேகம்’ காண்பிப்பவர்கள்மீதும், ‘மாயமற்ற விசுவாசத்தை’ வைத்திருப்பவர்கள்மீதும் அவருடைய அங்கீகாரம் இருக்கிறது.—1 பேதுரு 1:22; 1 தீமோத்தேயு 1:5.
செயலில் நற்குணம் நற்பண்பாய் இருக்கிறது
17, 18. ஆவியின் கனியாகிய நற்குணத்தை நாம் காண்பிக்கும்போது, மற்றவர்களோடு நாம் எவ்வாறு நடந்துகொள்வோம்?
17 நம் விசுவாசத்தோடு நாம் நற்பண்பைக் கூட்டி வழங்கினால், கடவுள் ஏற்றுக்கொள்ளாத காரியங்களைச் சிந்திப்பதை, பேசுவதை, செய்வதை நாம் தவிர்ப்பதற்கு முயற்சிசெய்வோம். ஆனாலும், கிறிஸ்தவ நற்பண்பைக் காண்பிப்பது, நாம் செயலில் நற்குணத்தைப் பின்பற்றுவதையும் உட்படுத்தும். உண்மையில் நற்பண்பு, நற்குணம் என்று வரையறுக்கப்படுகிறது. மேலும் நற்குணம் யெகோவாவின் பரிசுத்த ஆவியின் ஒரு கனி; வெறும் மனித முயற்சியின் ஒரு விளைவல்ல. (கலாத்தியர் 5:22, 23) நாம் ஆவியின் கனியாகிய நற்குணத்தை வெளிக்காட்டும்போது, மற்றவர்களைக்குறித்து நல்லபடியாக நினைக்கவும், அவர்களுடைய அபூரணங்கள் மத்தியிலும் அவர்களின் நல்ல குணங்களைப் போற்றவும் தூண்டப்படுவோம். அவர்கள் யெகோவாவை உண்மையோடு வருடக்கணக்காகச் சேவித்திருக்கிறார்களா? அப்படியென்றால், நாம் அவர்களுக்கு மரியாதைக் காண்பித்து, அவர்களைப்பற்றியும் கடவுளுக்கு அவர்களுடைய ஊழியத்தைப்பற்றியும் நன்மையாகப் பேசவேண்டும். நம் பரலோக பிதா தம்முடைய நாமத்திற்காக அவர்கள் காண்பிக்கிற அன்பையும், அவர்களுடைய நற்பண்புமிக்க விசுவாசத்தின் செயல்களையும் மனதில் வைத்துக்கொள்கிறார், அவ்வாறே நாமும் இருக்கவேண்டும்.—நெகேமியா 13:31ஆ; எபிரெயர் 6:10.
18 பொறுமை, புரிந்துகொள்ளுதல், பரிவிரக்கம் ஆகியவற்றோடு இருக்கும்படி நற்பண்பு நம்மை மாற்றுகிறது. யெகோவாவை வணங்கும் உடன்விசுவாசி இன்னலிலும், மனச்சோர்வினாலும் கஷ்டப்படுகிறார் என்றால், நம்முடைய அன்பான பரலோக பிதா செய்வதுபோல, நாம் அவரிடம் ஆறுதல்படுத்தும் வகையில் பேசி, ஒருவித ஊக்குவிப்பைத் தருவதற்கு முயற்சிசெய்வோம். (2 கொரிந்தியர் 1:3, 4; 1 தெசலோனிக்கேயர் 5:14) ஒருவேளை ஓர் அன்பானவரை மரணத்தில் இழந்ததன் காரணமாக, துயரத்தில் இருப்பவர்களுக்கு நாம் அநுதாபப்படுவோம். துயரத்தை நீக்குவதற்கு நாம் ஏதேனும் செய்யமுடியும் என்றால், நாம் அதைச் செய்வோம், ஏனென்றால், நற்பண்புள்ள ஆவி, அன்புள்ள நற்செயலைச் செய்யத் தூண்டும்.
19. சிந்தனை, பேச்சு, செயல் ஆகியவற்றில் நற்பண்புள்ளவர்களாய் நாம் இருந்தால், மற்றவர்கள் பெரும்பாலும் எப்படி நம்மை நடத்துவார்கள்?
19 நாம் யெகோவாவை, அவரைப்பற்றி நல்லபடியாகப் பேசுவதன்மூலம் எவ்வாறு போற்றுகிறோமோ, அதேபோலவே, நாம் நம்முடைய சிந்தனை, பேச்சு, செயல் ஆகியவற்றில் நற்பண்போடு இருந்தால், நம்மையும் மற்றவர்கள் பெரும்பாலும் போற்றுவார்கள். (சங்கீதம் 145:10) ஒரு ஞானமான பழமொழி சொல்கிறது: “நீதிமானுடைய சிரசின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.” (நீதிமொழிகள் 10:6) பொல்லாத அல்லது கொடூரமான ஆள், மற்றவர்களிடம் பிரியமாய் நடக்கும் நற்பண்பை இழந்தவனாய் இருக்கிறான். அவன் என்ன விதைக்கிறானோ அதையே அறுப்பான், ஏனென்றால் மக்கள் அவனைப்பற்றி புகழ்ந்து பேசுவதன்மூலம் அவர்களுடைய ஆசீர்வாதத்தை உண்மையில் தர முடியாது. (கலாத்தியர் 6:7) யெகோவாவின் ஊழியக்காரர்களைப்போல, நற்பண்பின் வழிகளில் சிந்தித்து, பேசி, செயலில் ஈடுபடுபவர்களுக்கு எவ்வளவு மேலாக இருக்கிறது! அவர்கள் மற்றவர்களின் அன்பையும், நம்பிக்கையையும், மரியாதையையும் சம்பாதித்துக் கொள்கிறார்கள்; மற்றவர்கள் அவர்களை ஆசீர்வதிக்கவும் அவர்களைப்பற்றி நல்லபடியாக பேசவும் தூண்டப்படுவார்கள். அதற்கும் மேலாக, அவர்களுடைய தேவபக்திக்குரிய நற்பண்பு, யெகோவாவின் விலைமதிப்பற்ற ஆசீர்வாதத்தில் முடிவடைகிறது.—நீதிமொழிகள் 10:22.
20. நற்பண்புமிக்க சிந்தனைகள், பேச்சுகள், செயல்கள் யெகோவாவினுடைய மக்களின் சபையில் என்ன விளைவைக் கொண்டிருக்கும்?
20 நற்பண்புமிக்க சிந்தனைகளும், பேச்சுகளும், செயல்களும் யெகோவாவினுடைய மக்களின் சபைக்கு நிச்சயமாகவே பிரயோஜனமுள்ளதாய் இருக்கின்றன. உடன்விசுவாசிகள் ஒருவருக்கொருவர் உள்ளன்புடைய, மரியாதைக்குரிய சிந்தனைகளைக் கொண்டிருந்தார்கள் என்றால் சகோதர அன்பு அவர்கள் மத்தியில் கொடிகட்டிப் பறக்கும். (யோவான் 13:34, 35) உள்ளப்பூர்வமான போற்றுதலும் உற்சாகமும், நற்பண்புமிக்க பேச்சு உட்பட, ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமை போன்ற அனலான உணர்வுகளை ஊட்டி வளர்க்கும். (சங்கீதம் 133:1-3) இருதயப்பூர்வமான, நற்பண்புமிக்க செயல்கள் மற்றவர்களை இதே வழியில் பிரதிபலிக்கும்படி உற்சாகப்படுத்தும். எல்லாவற்றிற்கும் மேலாக, கிறிஸ்தவ நற்பண்பைப் பின்பற்றுதல், நம்முடைய நற்பண்புள்ள பரலோக பிதாவாகிய யெகோவாவின் அங்கீகாரத்திலும் ஆசீர்வாதத்திலும் முடிவடைகிறது. எனவே, நாம் கடவுளின் அருமையான வாக்குறுதிகளுக்கு விசுவாசத்தைக் காட்டுவதன்மூலம் பிரதிபலிப்பதை நம்முடைய இலக்காய் கொண்டிருப்போமாக. மேலும் நிச்சயமாகவே, நம்முடைய விசுவாசத்தோடே நற்பண்பையும் கூட்டி வழங்க உள்ளப்பூர்வமான எல்லா முயற்சியையும் எடுப்போமாக.
உங்களுடைய பதில்கள் யாவை?
◻ “நற்பண்பு” என்பதை நீங்கள் எவ்வாறு வரையறைசெய்வீர்கள், ஆபூரண மக்கள் நற்பண்புள்ளவர்களாக ஏன் இருக்க முடியும்?
◻ நற்பண்பு எந்த வகையான சிந்தனைகளைத் தேவைப்படுத்துகிறது?
◻ நற்பண்பு நம்முடைய பேச்சை எவ்வாறு பாதிக்க வேண்டும்?
◻ நற்பண்பு நம்முடைய செயல்களில் என்ன விளைவைக் கொண்டிருக்கவேண்டும்?
◻ நற்பண்புள்ளவர்களாக இருப்பதன் சில பயன்கள் யாவை?
14. கிறிஸ்தவர்கள் என்ன இரட்டை தராதரங்களைப் பேச்சில் தவிர்க்கவேண்டும்?
[பக்கம் 21-ன் படம்]
தித்திப்பும் கசப்புமான தண்ணீர் ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து சுரக்க முடியாததால் யெகோவாவின் ஊழியர்கள் நற்பண்புமிக்க காரியங்களை மட்டுமே பேசும்படி மற்றவர்கள் சரியாகவே எதிர்பார்க்கிறார்கள்