வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்கு தயாரிக்க தேவையான தகவல்கள்
டிசம்பர் 5-11
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(ஏசாயா 1:18) யெகோவா உங்களிடம், “வாருங்கள், நம்மிடையே இருக்கிற பிரச்சினையைச் சரிசெய்யலாம். உங்களுடைய பாவங்கள் இரத்தம்போல் சிவப்பாக இருந்தாலும், பனிபோல் வெண்மையாகும். செக்கச்செவேல் என்று இருந்தாலும், வெள்ளைவெளேர் என்று ஆகும்.”
it-2-E 761 ¶3
சமரசம்
சமரசம் ஆவதற்கு என்ன செய்ய வேண்டும்? கடவுள் கொடுத்திருக்கும் சட்டங்களை மனிதர்கள் மீறியிருக்கிறார்கள் மீறிக்கொண்டும் இருக்கிறார்கள். அதனால், மனிதர்கள்தான் கடவுளோடு சமரசம் ஆக வேண்டும். (சங்கீதம் 51:1-4) மனிதர்கள் கடவுளுக்கு சரி சமமானவர்கள் கிடையாது. அதோடு, கடவுளுக்கு தன்னுடைய சட்டங்களை மாற்றவோ, திருத்தவோ வேண்டிய அவசியம் இல்லை. (ஏசாயா 55:6-11; மல்கியா 3:6; யாக்கோபு 1:17-ஐ ஒப்பிடுங்கள்) அதனால், சமரசம் ஆவதற்கு அவர் வைக்கும் நிபந்தனைகள் மாறாது. அதை எதிர்த்து யாரும் கேள்வி கேட்கவும் முடியாது. (யோபு 40:1, 2, 6-8-ஐ ஒப்பிடுங்கள்; ஏசாயா 40:13, 14) சில மொழிபெயர்ப்புகள் ஏசாயா 1:18-ஐ, “வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (KJ; AT; JP; RS) என்று மொழிபெயர்த்து இருக்கிறார்கள். ஆனால், அப்படிச் சொல்வதைவிட, “‘வாருங்கள், நம்மிடையே இருக்கிற பிரச்சினையைச் சரிசெய்யலாம்’ என்று யெகோவா சொல்கிறார்” என்று மொழிபெயர்ப்பதுதான் சரியாக இருக்கும். பிரச்சினை கடவுளிடம் இல்லை முழுக்க முழுக்க மனிதர்களிடம்தான் இருக்கிறது.—எசேக்கியேல் 18:25, 29-32.
டிசம்பர் 12-18
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(ஏசாயா 8:1-4) யெகோவா என்னிடம், “நீ ஒரு பெரிய பலகையை எடுத்து, அதில் ‘மகேர்-சாலால்-அஷ்-பாஸ்’ என்று எழுத்தாணியால் எழுது. 2 நம்பிக்கைக்குரிய சாட்சிகளான யெபெரெகியாவின் மகன் சகரியாவும் குருவாகிய உரியாவும் இதை எழுத்தில் எழுதி எனக்கு உறுதிப்படுத்தட்டும்” என்று சொன்னார். 3 அதன்பின், தீர்க்கதரிசனம் சொல்கிறவளான என் மனைவியோடு நான் உறவுகொண்டேன். அவள் கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். அப்போது யெகோவா என்னிடம், “அவனுக்கு மகேர்-சாலால்-அஷ்-பாஸ் என்று பெயர் வை. 4 ஏனென்றால், ‘அம்மா,’ ‘அப்பா’ என்று அவன் கூப்பிடுவதற்கு முன்பே அசீரியர்கள் தமஸ்குவின் சொத்துகளையும் சமாரியாவில் கைப்பற்றிய பொருள்களையும் தங்கள் ராஜாவிடம் கொண்டுபோவார்கள்” என்று சொன்னார்.
it-1-E 1219
ஏசாயா
யூதாவுக்கு விடுதலை சீக்கிரமாக வரும் என்று இந்தத் தீர்க்கதரிசனம் குறிப்பிட்டது. சீரியாவின் ராஜா ரேத்சீனும் இஸ்ரவேலின் ராஜா பெக்காவும் யூதாவுக்கு எதிராக வந்தபோது அசீரியா யூதாவுக்கு உதவி செய்தது. அசீரியர்கள் தமஸ்குவை கைப்பற்றினார்கள். பிறகு கி.மு. 740-ல் இஸ்ரவேல் ராஜ்யத்தை சூரையாடி அழித்துப்போட்டார்கள். இப்படியாக, மகேர்-சாலால்-அஷ்-பாஸ் என்ற பெயரின் அர்த்தம் முழுமையாக நிறைவேறியது. (2 இராஜாக்கள் 16:5-9; 17:1-6) இருந்தாலும், ஆகாஸ் ராஜா யெகோவாமீது நம்பிக்கை வைப்பதற்கு பதிலாக அசீரியர்கள் மீது நம்பிக்கை வைத்தார். சீரியாவின் தாக்குதலையும் இஸ்ரவேலின் தாக்குதலையும் முறியடிப்பதற்கு அசீரியாவிடம் உதவி கேட்டார். அதற்காக அசீரிய ராஜாவுக்கு லஞ்சம் கொடுத்தார். அதனால், ஏசாயா மூலமாக யெகோவா சொன்னபடியே அசீரியர்கள், யூதாவை எருசலேம் வரை அழித்துப்போட அனுமதித்தார்.—ஏசாயா 7:17-20.
டிசம்பர் 19-25
பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஏசாயா 11-16
“பூமி முழுவதும் யெகோவாவைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும்”
w13-E 6⁄1 7
கடவுளுடைய அரசாங்கம் இந்த முழு உலகத்தையும் ஆட்சி செய்ய ஆரம்பிப்பதற்கு முன்பு, சாத்தான் ‘கட்டிப்போடப்படுவான்.’ அப்போதுதான் “தேசங்களை அவன் ஏமாற்றாதபடி” முழுமையாக கட்டுப்படுத்தப்படுவான். (வெளிப்படுத்துதல் 20:2, 3) பிறகு, “நீதி குடியிருக்கிற” “புதிய பூமி” அதாவது, புதிய மனித சமுதாயம் உண்டாகும்.—2 பேதுரு 3:13.
அந்தப் புதிய பூமியில் வாழும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக எந்தக் குறையும் இல்லாத, பாவத்திலிருந்து விடுபட்ட மக்களாக ஆவார்கள். (ரோமர் 8:21) கடவுளுடைய அரசாங்கத்தில், “யாருக்கும் எந்த ஆபத்தும் வராது. எந்தக் கேடும் வராது.” ஏனென்றால், “பூமி முழுவதும் யெகோவாவைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும்.” (ஏசாயா 11:9) அப்போது, எல்லாரும் யெகோவா தேவனின் வழிகளில் நடப்பார்கள், எல்லாரும் அவரையே பின்பற்றுவார்கள்.