வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
டிசம்பர் 25-31
பைபிளில் இருக்கும் புதையல்கள் | மல்கியா 1-4
“உங்கள் கல்யாண வாழ்க்கை யெகோவாவை சந்தோஷப்படுத்துகிறதா?”
(மல்கியா 2:13, 14) நீங்கள் இன்னொரு பாவத்தையும் செய்கிறீர்கள். அந்தப் பாவத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீர் யெகோவாவின் பலிபீடத்தில் வழிந்தோடுகிறது, அங்கே அவர்களுடைய கதறலும் பெருமூச்சும் கேட்கிறது. அதனால், கடவுள் இனிமேலும் உங்கள் காணிக்கைகளை ஏற்றுக்கொள்ள மாட்டார், உங்கள் கைகளிலிருந்து எதையும் பிரியத்தோடு வாங்கிக்கொள்ள மாட்டார். ‘ஏன் அப்படி?’ என்று நீங்கள் கேட்கிறீர்கள். ஏனென்றால், இளவயதில் கைப்பிடித்த மனைவிக்கு நீங்கள் செய்த துரோகத்துக்கு யெகோவாவே சாட்சியாக இருக்கிறார். முறைப்படி ஒப்பந்தம் பண்ணி கைப்பிடித்த மனைவியாக இருந்தும் அவளுக்குத் துரோகம் செய்தீர்களே.
jd-E பக். 125-126 பாரா. 4-5
கடவுளைச் சந்தோஷப்படுத்தும் விதத்தில் குடும்ப வாழ்க்கையை அனுபவியுங்கள்
4 கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில், மல்கியாவின் காலத்தில், யூதர்கள் சர்வ சாதாரணமாக தங்கள் மனைவிகளை விவாகரத்து செய்தார்கள். அவர்களைப் பற்றி மல்கியா இப்படிச் சொல்கிறார்: “இளவயதில் கைப்பிடித்த மனைவிக்கு நீங்கள் செய்த துரோகத்துக்கு யெகோவாவே சாட்சியாக இருக்கிறார்.” துரோகத்துக்கு ஆளான மனைவிகளின் கண்ணீர் யெகோவாவுடைய பலிபீடத்தில் வழிந்தோடுகிறது; அவர்களுடைய கதறலும் பெருமூச்சும் கேட்கிறது. அப்படிப்பட்ட அக்கிரமம் செய்தவர்களை, கெட்ட குருமார்கள் தண்டிக்காமல் விட்டுவிட்டார்கள்.—மல்கியா 2:13, 14.
5 மல்கியாவின் காலத்தில், திருமண ஏற்பாட்டின்மேல் மக்களுக்கு இருந்த மோசமான மனப்பான்மையை யெகோவா எப்படிக் கருதினார்? “‘விவாகரத்தை நான் வெறுக்கிறேன்,’ என்று இஸ்ரவேலின் கடவுளான யெகோவா சொல்கிறார்” என்பதாக மல்கியா சொன்னார். யெகோவா ‘மாறவில்லை’ என்றும் அவர் சொன்னார். (மல்கியா 2:16; 3:6) நீங்கள் இங்கே என்ன கவனிக்கிறீர்கள்? விவாகரத்துக்கு எதிரான தன்னுடைய கருத்தைப் பற்றி யெகோவா ஏற்கெனவே சொல்லியிருந்தார். (ஆதியாகமம் 2:18, 24) மல்கியாவின் காலத்திலும் அதைப் பற்றி சொல்லியிருந்தார். இன்றும், அவர் அதைப் பற்றி சொல்கிறார். சிலர், தங்கள் துணையைப் பிடிக்காத காரணத்தால், விவாகரத்து செய்ய தீர்மானிக்கிறார்கள். அவர்களுடைய இதயம் நயவஞ்சகமாக இருந்தாலும், யெகோவா அதை ஆராய்கிறார். (எரேமியா 17:9, 10) ஒருவர் தன் மனைவியை ஏமாற்றி விவாகரத்து செய்யலாம், அதை நியாயப்படுத்தவும் பார்க்கலாம். ஆனால், அந்த நயவஞ்சகமான திட்டத்தைப் பற்றி யெகோவாவுக்கு நன்றாகத் தெரியும். சொல்லப்போனால், “எல்லாமே அவருடைய கண்களுக்கு முன்னால் ஒளிவுமறைவில்லாமல் வெட்டவெளிச்சமாக இருக்கிறது. அவருக்குத்தான் நாம் கணக்குக் கொடுக்க வேண்டும்.”—எபிரெயர் 4:13.