சமாதானமாய்ப் பழக பிள்ளைக்குச் சொல்லிக்கொடுங்கள்
நீக்கோல் என்ற எட்டு வயது சிறுமியின் குடும்பம் நாட்டின் மறுகோடிக்குக் குடிமாறவிருந்தது. அதை நினைத்துப் பூரித்துப்போன நீக்கோல் தன் உயிர்த்தோழி கேப்ரீலிடம் அது பற்றிய விவரங்களை ஒன்றுவிடாமல் சொல்லி வந்தாள். கேப்ரீல் திடீரென ஒருநாள் நீக்கோலிடம், ‘நீ எங்கே போனால் எனக்கென்ன?’ என்று முகத்தில் அறைந்ததுபோல் சொல்லிவிட்டாள். இதைக் கேட்டதும் நீக்கோலின் பிஞ்சு உள்ளம் நொறுங்கிப்போனது, கேப்ரீலை நினைத்து அவளுக்குக் கோபம் கோபமாக வந்தது; தன் அம்மாவிடம்போய், “இனிமேல் கேப்ரீலை பார்க்கவும் மாட்டேன், அவளுடன் பேசவும் மாட்டேன்!” என்று சொன்னாள்.
நீ க்கோல், கேப்ரீல் போன்ற சின்னஞ்சிறுசுகளின் சண்டைகளில் பெரும்பாலும் பெற்றோர் தலையிட்டு அவற்றைச் சுமுகமாய் தீர்த்து வைக்க வேண்டியிருக்கிறது. புண்பட்ட பிஞ்சு உள்ளங்களின் வலியைப் போக்குவதற்கு மட்டுமல்ல, பிரச்சினையை எப்படிச் சரிசெய்வது என்பதைக் கற்றுக்கொடுப்பதற்கும்தான். பொதுவாக சிறு பிள்ளைகள் இயல்பாகவே, ‘குழந்தைக்கேற்ற’ விதமாக நடந்துகொள்கிறார்கள்; தங்களுடைய பேச்சும் செயல்களும் எந்தளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைப் பெரும்பாலும் அவர்கள் அறியாதிருக்கிறார்கள். (1 கொரிந்தியர் 13:11) குடும்பத்திலும்சரி வெளியிலும்சரி, எல்லாரோடும் சமாதானமாய்ப் பழகுவதற்குக் கைகொடுக்கும் குணங்களை வளர்த்துக்கொள்ள அவர்களுக்கு உதவி தேவை.
“சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடர” பிள்ளைகளுக்குப் பயிற்சியளிக்க வேண்டுமென்பதில் யெகோவாவின் சாட்சிகளாயிருக்கும் பெற்றோர் மிகக் கவனமாய் இருக்கிறார்கள். (1 பேதுரு 3:11) சமரசம் செய்பவராய் இருப்பதில் கிடைக்கிற சந்தோஷத்தோடு ஒப்பிட, அவநம்பிக்கை, விரக்தி, பகைமை போன்ற உணர்வுகளை அடக்கியாள எடுக்கிற எந்த முயற்சியும் தகுந்ததுதான். நீங்கள் ஒரு பெற்றோரா? அப்படியானால், சமாதானமாய்ப் பழக உங்கள் பிள்ளைகளுக்கு எப்படிச் சொல்லித்தரலாம்?
‘சமாதானத்தின் தேவனைப்’ பிரியப்படுத்துவதற்கான ஆசையை ஊட்டுங்கள்
யெகோவா, “சமாதானத்தின் தேவன்” என அழைக்கப்படுகிறார்; ‘சமாதானத்தை [“தரும்,” NW] தேவன்’ என்றும் அடையாளம் காட்டப்படுகிறார். (பிலிப்பியர் 4:9; ரோமர் 15:33) எனவே, விவேகத்தோடு நடக்கும் பெற்றோர் அவருக்குப் பிரியமாய் நடக்க வேண்டும், அவருடைய பண்புகளை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டுமென்ற ஆசையை பிள்ளைகளின் மனதில் ஊட்டி வளர்க்கிறார்கள். இதைச் செய்ய, கடவுளுடைய வார்த்தையான பைபிளைச் சிறப்பாகப் பயன்படுத்துகிறார்கள். உதாரணத்திற்கு, யெகோவாவின் சிங்காசனத்தைச் சுற்றி மரகதப் பச்சை நிறத்தில் ஜொலிக்கும் வானவில்லை அப்போஸ்தலன் யோவான் ஒரு தரிசனத்தில் பார்த்ததை எடுத்துக்கொள்வோம்; இந்த அசாதாரண காட்சியை தங்கள் மனக்கண்ணில் ஓடவிட்டுப் பார்க்க உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள்.a (வெளிப்படுத்துதல் 4:2, 3) இந்த வானவில், யெகோவாவைச் சுற்றி எங்கும் நிலவுகிற அமைதிக்கும் சாந்தத்திற்கும் அடையாளமாய் இருக்கிறது என்றும், அவருக்குக் கீழ்ப்படிகிற எல்லாருக்கும் அத்தகைய ஆசீர்வாதங்களை அவர் அருளுவார் என்றும் விளக்குங்கள்.
“சமாதானப்பிரபு” என்றழைக்கப்படுகிற தம்முடைய மகன் இயேசுவின் மூலமும் யெகோவா வழிநடத்துதலை அளிக்கிறார். (ஏசாயா 9:6, 7) எனவே, சண்டை சச்சரவுகளைத் தவிர்ப்பது சம்பந்தமாக இயேசு புகட்டிய அருமையான பாடங்களைக் கொண்ட பைபிள் பதிவுகளை உங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து வாசியுங்கள், அவற்றை விளக்குங்கள். (மத்தேயு 26:51-56; மாற்கு 9:33-35) ஒருகாலத்தில் ‘கொடுமை செய்கிறவராக’ இருந்த பவுல், “கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டை பண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், . . . தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்க வேண்டும்” என்று எழுதும் அளவிற்கு தன்னை மாற்றிக்கொண்டதற்கான காரணத்தை விளக்குங்கள். (1 தீமோத்தேயு 1:13; 2 தீமோத்தேயு 2:24) அப்படிச் செய்தால், உங்கள் எதிர்பார்ப்பையும் மிஞ்சும் விதத்தில் உங்கள் பிள்ளை நடந்துகொள்ளலாம்.
தான் ஏழு வயது பிள்ளையாக இருந்தபோது, பள்ளிப் பேருந்தில் ஒரு பையன் தன்னை கேலி கிண்டல் செய்தது ஈவானுக்கு இன்னும் நினைவிருக்கிறது. “எனக்கு வந்த கோபத்தில், பதிலுக்குப் பதில் பேசிவிட வேண்டுமென்று நினைத்தேன்! . . . வம்பிழுப்பவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று வீட்டில் சொல்லிக்கொடுக்கப்பட்ட பாடம் சட்டென நினைவுக்கு வந்தது. ‘ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருக்கவும்,’ ‘எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருக்கவும்’ வேண்டுமென்றுதான் யெகோவா ஆசைப்படுகிறார் என்பது எனக்குத் தெரியும்” என்று அவன் சொல்கிறான். (ரோமர் 12:17, 18) சண்டையில் முடிந்திருக்க வேண்டிய சூழலை சமரசத்தில் முடிப்பதற்குத் தேவையான பலத்தையும் தைரியத்தையும் ஈவானுக்கு இது அளித்தது. சமாதானத்தின் தேவனுக்குப் பிரியமாய் நடக்க ஆசைப்பட்டதால், இச்சந்தர்ப்பத்தில் அவன் சாந்தமாய் பதில் அளித்தான்.
பெற்றோரே—சமாதானமாய் இருங்கள்
உங்கள் வீட்டில் சாந்தம் தவழுகிறதா? அப்படியென்றால், அவர்கள் உங்களைப் பார்த்தே சமாதானமாய் நடந்துகொள்ள நன்றாகக் கற்றுக்கொள்வார்கள். சமாதானமாய் இருப்பதில் நீங்கள் முடிந்தவரை கடவுளையும் கிறிஸ்துவையும் பின்பற்ற முயலுங்கள். அப்போதுதான் சமாதானமாய்ப் பழக பிள்ளைகளுக்கு நீங்கள் சொல்லிக் கொடுக்கையில் அது அவர்கள் மனதைச் சென்றெட்டும்.—ரோமர் 2:21.
ரஸ், சின்டி தம்பதியர் தங்கள் இரண்டு மகன்களையும் நல்ல விதத்தில் வளர்க்க பெரும் முயற்சி எடுத்தார்கள்; மற்றவர்கள் எரிச்சலூட்டும்போது, கனிவோடு நடந்துகொள்ளும்படி அவர்களுக்குப் புத்தி சொன்னார்கள். “பிரச்சினைகள் தலைதூக்குகையில் பிள்ளைகளிடமும் மற்றவர்களிடமும் நானும் என் கணவரும் எப்படி நடந்துகொள்கிறோம் என்பது மிக முக்கியம்; ஏனெனில், அதேபோன்ற சூழ்நிலைகள் ஏற்படுகையில் எங்கள் பிள்ளைகள் எப்படி நடந்துகொள்வார்கள் என்பது இதன்மீது பெரிதும் சார்ந்திருக்கிறது” என்கிறார் சின்டி.
எந்தப் பெற்றோர்தான் தவறு செய்யாதிருக்கிறார்கள்? ஆகவே, நீங்கள் தவறு செய்யும்போதுகூட சிறந்த பாடத்தைப் புகட்ட அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். “சில சமயங்களில், விஷயத்தை முழுமையாக கேட்டுத் தெரிந்துகொள்ளாமல், நானும் என் மனைவி டெர்ரீயும் கோபத்தில் கொதித்தெழுந்து எங்கள் மூன்று பிள்ளைகளையும் தண்டித்திருக்கிறோம் . . . அப்படி நடந்துகொண்ட சமயங்களில் அவர்களிடம் நாங்கள் மன்னிப்பு கேட்டிருக்கிறோம்” என்று ஸ்டீவன் மறைக்காமல் சொல்கிறார். “நாங்களும் தவறு செய்கிறவர்கள்தான், எங்களிடமும் குற்றங்குறைகள் உள்ளன என்பதைப் பிள்ளைகளுக்குப் புரிய வைக்கிறோம். இது, எங்கள் குடும்பத்தில் அமைதி நிலவ வழிசெய்திருப்பதோடு, சமாதானமாய்ப் பழகுவது எப்படியென்று பிள்ளைகள் கற்றுக்கொள்வதற்கும் துணைபுரிந்திருக்கிறது” என்று டெர்ரீயும் சொல்கிறார்.
நீங்கள் உங்கள் பிள்ளைகளை நடத்துகிற விதத்தைப் பார்த்து சமாதானமாய்ப் பழகுவதற்கு அவர்கள் கற்றுக்கொள்கிறார்களா? “மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்” என்று இயேசு அறிவுரை கூறினார். (மத்தேயு 7:12) உங்களிடம் குற்றங்குறைகள் இருந்தாலும், பிள்ளைகளிடம் நீங்கள் காட்டுகிற அன்பும் பாசமும் நிச்சயமாய் நல்ல பலன்களைத் தரும் என்பதில் உங்களுக்குச் சந்தேகமே வேண்டாம். அன்பாகப் புத்திசொல்லும்போது உங்கள் பிள்ளைகள் உடனடியாக கேட்டு நடப்பார்கள்.
சட்டெனக் கோபப்படாதீர்கள்
“விவேகமுடையோர் எளிதில் சினமடையார்” என்று நீதிமொழிகள் 19:11 (பொது மொழிபெயர்ப்பு) சொல்கிறது. இப்படி விவேகத்துடன் நடக்க உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் எப்படி உதவலாம்? தங்கள் மகனையும் மகளையும் வளர்ப்பதில் தங்களுக்கு உதவிய ஒரு நடைமுறை வழியைப்பற்றி டேவிட்டும் அவரது மனைவி மரீயமும் சொல்கிறார்கள். “பிள்ளைகளுடைய மனம் புண்படும் விதத்தில் யாராவது எதையாவது சொல்லியிருக்கலாம் அல்லது செய்திருக்கலாம். அந்தச் சமயங்களில், புண்படுத்தியவரின் நிலையிலிருந்து கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கும்படி சொல்கிறோம். ‘இன்றைக்கு அவருக்கு வேலைப் பளு அதிகமாயிருந்ததா? அவர் பொறாமைப்படுகிற ரகமா? அவரை யாராவது புண்படுத்திவிட்டார்களா?’ போன்ற எளிய கேள்விகளை அவர்களிடம் கேட்கிறோம்” என்று டேவிட் சொல்கிறார். “இப்படிக் கேள்விகள் கேட்பது, நடந்ததை நினைத்து நினைத்து புழுங்கிக்கொண்டிராதிருக்க அல்லது யார் பக்கம் நியாயமிருக்கிறதென வாக்குவாதம் செய்யாமல் அமைதியாய் இருக்க உதவுகிறது” என்று மரீயம் சொல்கிறார்.
இப்படிப்பட்ட பயிற்சி அருமையான பலன்களைத் தரலாம். இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட நீக்கோலுக்கு அவளுடைய அம்மா மீஷல் எப்படி உதவினார் என்பதைக் கவனியுங்கள். நீக்கோலுக்கும் அவளுடைய தோழி கேப்ரீலுக்கும் உள்ள நட்பில் விழுந்த விரிசலைச் சரிப்படுத்துவதோடு அவர் நிறுத்திக்கொள்ளவில்லை. அதைவிட கூடுதலான உதவியை அளித்தார். “நீக்கோலும் நானும் சேர்ந்து, பெரிய போதகரிடம் கற்றுக்கொள் புத்தகத்தில் 14-வது அதிகாரத்தை வாசித்தோம்” என்கிறார் மீஷல்.b “பிறகு, நாம் மற்றவர்களை ‘ஏழெழுபதுதரம்’ மன்னிக்க வேண்டுமென இயேசு சொன்னபோது அவர் எதை அர்த்தப்படுத்தினாரென அவளுக்கு விளக்கினேன். அவள் மனதிலுள்ளவற்றைக் கொட்டியபோது கவனமாய் காதுகொடுத்துக் கேட்டேன். பின்னர், ‘தன்னுடைய உயிருக்கு உயிரான தோழி தன்னைவிட்டுப் பிரிந்து கண்ணுக்கெட்டாத தூரத்துக்குப் போகப்போவதை நினைத்து கேப்ரீல் எந்தளவுக்கு நொந்துபோய், வேதனைப்பட்டிருப்பாள் என்று கொஞ்சம் நினைத்துப்பார்’ என்று சொன்னேன்.”—மத்தேயு 18:21, 22.
கேப்ரீல் எதனால் திடீரென தன்மீது எரிந்து விழுந்திருக்கலாம் என்பதை, தன்னுடைய அம்மாவுடைய உதவியால் நீக்கோல் தெளிவாகப் புரிந்துகொண்டாள்; அவளுடைய உள்ளத்தில் அனுதாபம் சுரந்தது; அது, கேப்ரீலிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு மன்னிப்புக் கேட்க அவளைத் தூண்டியது. “அதிலிருந்து மற்றவர்களின் உணர்வுகளை மதித்து நடப்பதிலும் அவர்களுடைய உள்ளத்தைக் குளிர்விக்கும் விதத்தில் நல்ல காரியங்களைச் செய்வதிலும் நீக்கோல் பூரித்துப் போகிறாள்” என்று மீஷல் சொல்கிறார்.—பிலிப்பியர் 2:3, 4.
தவறுகள் நடக்கும்போதும் மனஸ்தாபங்கள் ஏற்படும்போதும் கோபத்தில் சீறாமல் இருக்க உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள். இதனால், உங்கள் பிள்ளைகள் மற்றவர்களிடம் உண்மையிலேயே பாசமாய்ப் பழகுவதையும் கரிசனை காட்டுவதையும் பார்த்து மனநிறைவு பெறுவீர்கள்.—ரோமர் 12:10; 1 கொரிந்தியர் 12:25.
மன்னிப்பதன் மகிமையை ருசிக்க ஊக்கப்படுத்துங்கள்
“குற்றத்தை மன்னிப்பது . . . மகிமை” என்று நீதிமொழிகள் 19:11 சொல்கிறது. தாளா வேதனையில் இயேசு துடிதுடித்துக்கொண்டிருந்த சமயத்தில், தம்முடைய தகப்பனைப் போலவே மன்னிக்கும் மனப்பான்மையை வெளிக்காட்டினார். (லூக்கா 23:34) பிள்ளைகளை நீங்கள் மன்னிக்கையில் ஏற்படுகிற இதமான உணர்வை அவர்கள் ருசிக்கும்போது, பிறரை மன்னிக்க அவர்கள் கற்றுக்கொள்ளலாம். இதனால் வரும் மகிமையை ருசிக்க ஆரம்பிக்கலாம்.
உதாரணத்திற்கு, வில்லீ என்ற ஐந்து வயது சிறுவனுக்கு, தன் பாட்டியம்மாவுடன் உட்கார்ந்துகொண்டு படங்களுக்கு வண்ணம் தீட்டுவது ரொம்ப பிடிக்கும். ஒருநாள் பாட்டியம்மா திடீரென வண்ணம் தீட்டுவதை நிறுத்திவிட்டு, கோபமாக வில்லீயை திட்டிவிட்டுப் போய்விட்டார். வில்லீயின் முகம் வாடிவிட்டது. அவனுடைய அப்பா அவனைத் தேற்றினார்: “வில்லீயின் பாட்டியம்மா அல்ஸைமர் நோயால் அவதிப்படுகிறார். எனவே, இதை அவனுக்குப் புரிகிற விதத்தில் எளிமையாக விளக்கினோம்” என்று அவனுடைய அப்பா சாம் சொன்னார். வில்லீயை எத்தனையோ முறை தாங்கள் மன்னித்திருப்பதை நினைப்பூட்டினார்கள்; அவனும் அதேபோல் மற்றவர்களை மன்னிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சொன்னார்கள். இதைக் கேட்ட பிறகு வில்லீ நடந்துகொண்ட விதத்தைப் பார்த்து அவனுடைய அப்பாவிற்கு ஒரே ஆச்சரியம். “எங்கள் செல்ல மகன் 80 வயதான தன் பாட்டியம்மாவிடம் போனான்; மன்னிப்புக் கேட்டு கெஞ்சும் குரலில் அவரிடம் பேசினான், அவருடைய கையைப் பிடித்து மேசையிடம் மீண்டும் அழைத்து வந்தான். இதைப் பார்த்தபோது எங்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்துபாருங்கள்” என்று சாம் சொல்கிறார்.
மற்றவர்களுடைய குற்றங்குறைகளையும் தப்பிதங்களையும் ‘[“எப்போதும்,” NW] பொறுத்துக்கொள்ள’ பிள்ளைகள் கற்றுக்கொண்டு, அவர்களை மன்னிப்பது உண்மையிலேயே மகிமையான செயல்தான். (கொலோசெயர் 3:13, பொ.மொ.) வேண்டுமென்றே மனதை நோகடிக்கும் விதத்தில் மற்றவர்கள் நடந்துகொண்டாலும்கூட சாந்தமாய் பதில் அளிப்பது நிச்சயம் பலன் அளிக்குமென பிள்ளையிடம் சொல்லுங்கள்; ஏனெனில், “ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்.”—நீதிமொழிகள் 16:7.
சமாதானமாய்ப் பழக பிள்ளைக்கு எப்போதும் உதவுங்கள்
‘சமாதான சூழலில்’ தங்களுடைய பிள்ளைகளுக்கு கடவுளுடைய வார்த்தையிலிருந்து பெற்றோர் சொல்லிக்கொடுக்கும்போதும், ‘சமாதானம் பண்ணுகிறவர்களாய்’ இருக்கும்போதும் அவர்கள் பிள்ளைகளுக்குப் பெரிதும் உதவுகிறார்கள். (யாக்கோபு 3:18, NW) அத்தகைய பெற்றோர் சண்டை சச்சரவுகளைத் தீர்த்துக்கொள்ள பிள்ளைகளைத் தயார்படுத்துகிறார்கள், சமாதானமாய் பழகுவதற்கும் சொல்லிக்கொடுக்கிறார்கள், இது வாழ்நாள் முழுவதும் ஆனந்தத்தையும் ஆத்ம திருப்தியையும் அவர்களுக்கு அளவில்லாமல் அள்ளித் தருகிறது.
டான், காத்தீ தம்பதியருக்கு வாலிப வயதில் மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள்; இவர்கள் மூவரும் யெகோவாவின் சேவையில் சுறுசுறுப்பாய் ஈடுபடுகிறார்கள். “அவர்கள் சின்னப்பிள்ளைகளாய் இருந்தபோது நல்வழியைப் போதித்து வளர்ப்பது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. எனினும், அதன் பலனாக அவர்கள் யெகோவாவின் சேவையில் இப்போது சுறுசுறுப்பாய் ஈடுபடுவதைப் பார்க்கும்போது சந்தோஷமாயிருக்கிறது. இப்போது எல்லாரிடமும் சமாதானமாய்ப் பழகுகிறார்கள், பிரச்சினைகள் ஏற்படுகையில் தாராளமாய் மன்னிக்கிறார்கள்” என்கிறார் டான். “மற்றவர்களோடு சமாதானமாக இருப்பதைப் பார்ப்பது எங்களுக்கு மகிழ்ச்சியாய் இருக்கிறது. ஏனெனில் சமாதானம், ஆவியின் கனியில் ஒன்றாக இருக்கிறதல்லவா!” என்று காத்தீ சொல்கிறார்.—கலாத்தியர் 5:22, 23.
ஆகவே, சமாதானமாய்ப் பழக உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்கும் விஷயத்தில், கிறிஸ்தவ பெற்றோராய் நீங்கள் ‘சோர்ந்துபோகாமல்’ அல்லது ‘தளர்ந்துபோகாமல்’ இருப்பதற்கு நியாயமான காரணம் இருக்கிறது எனலாம். பிள்ளைகள் உடனடியாக இதைக் கற்றுக்கொள்ளாவிட்டாலும், நீங்கள் தொடர்ந்து சொல்லிக்கொடுக்கும்போது, “அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணராகிய தேவன் உங்களோடேகூட இருப்பார்” என்பது உறுதி.—கலாத்தியர் 6:9; 2 கொரிந்தியர் 13:11.
[அடிக்குறிப்புகள்]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! என்ற புத்தகத்தில் பக்கம் 75-லுள்ள படத்தைக் காண்க.
b யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 20-ன் பெட்டி/படம்]
பொழுதுபோக்கு ஏற்படுத்தும் பாதிப்பு
“மீடியாவின் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் வன்முறை” என்ற தலைப்பில் மீடியா அவேர்னெஸ் நெட்வர்க் என்ற நிறுவனம் ஒரு கட்டுரையை வெளியிட்டது. அது சொல்வதாவது: “கதாநாயகர்களும் வில்லன்களும் அடிக்கடி அடிதடியில் இறங்குவதாக பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் காட்டப்படுகிறது. இதன்மூலம் பிரச்சினைக்குத் தீர்வுகாண ஒரே வழி வன்முறைதான் என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது.” ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டவற்றில், சுமார் 10 சதவீத தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், இசை வீடியோக்கள் மட்டுமே வன்முறையின் பயங்கரமான பாதிப்புகளை வெளிச்சம்போட்டுக் காட்டின. ஆனாலும், “பிரச்சினைக்கு பரிகாரம் காண்பதற்கான நியாயமான, எதார்த்தமான, தவிர்க்க முடியாத வழியாக வன்முறை காட்டப்பட்டது” என்று அந்தக் கட்டுரை குறிப்பிடுகிறது.
தொலைக்காட்சியைப் பார்ப்பது சம்பந்தமாக மாற்றங்களைச் செய்ய வேண்டுமென நினைக்கிறீர்களா? சமாதானமாய்ப் பழக பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்க நீங்கள் எடுக்கும் முயற்சிகளை பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் பாழ்ப்படுத்த இடங்கொடுக்காதீர்கள்.
[பக்கம் 17-ன் படம்]
‘சமாதானத்தின் தேவனைப்’ பிரியப்படுத்துவதற்கான ஆசையை உங்கள் பிள்ளைகளின் மனதில் ஊட்டி வளருங்கள்
[பக்கம் 18-ன் படம்]
பிள்ளைகளுடைய பேச்சும், செயல்களும் நோகடிக்கும் விதத்தில் இருந்தால் சரிசெய்ய நடவடிக்கை எடுங்கள்
[பக்கம் 19-ன் படம்]
மன்னிப்புக் கேட்பதற்கும், மன்னிப்பதற்கும் உங்கள் பிள்ளைகள் கற்றுக்கொள்ள வேண்டும்