நம்பிக்கை துரோகம் —கடைசி நாட்களுக்கான ஓர் அடையாளம்!
“நாங்கள் எந்தளவு பற்றுமாறாதவர்களாகவும் [அதாவது, உண்மையுள்ளவர்களாகவும்] நீதியுள்ளவர்களாகவும் குற்றமற்றவர்களாகவும் நடந்துகொண்டோம்.”—1 தெ. 2:10.
முக்கியக் குறிப்புகளை மனதில் நிறுத்த:
தெலீலாள், அப்சலோம், யூதாஸ் இஸ்காரியோத்து ஆகியோரின் நம்பிக்கை துரோகச் செயல்களிலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?
உண்மையாயிருந்த யோனத்தானையும் பேதுருவையும் நாம் எப்படிப் பின்பற்றலாம்?
மணத்துணைக்கும் யெகோவாவுக்கும் என்றும் உண்மையாய் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
1-3. (அ) கடைசி நாட்களுக்கான ஓர் அடையாளம் என்ன, அது எதைக் குறிக்கிறது? (ஆ) என்ன மூன்று கேள்விகளைக் குறித்து நாம் இப்போது சிந்திக்கப் போகிறோம்?
தெலீலாள், அப்சலோம், யூதாஸ் இஸ்காரியோத்து—இவர்கள் மூன்று பேருக்கும் என்ன ஓர் ஒற்றுமை இருக்கிறது? இவர்கள் மூன்று பேருமே நம்பிக்கை துரோகிகள். தெலீலாள்... தன்னை உயிருக்கு உயிராய்க் காதலித்த நியாயாதிபதி சிம்சோனுக்கு வஞ்சகம் செய்தாள். அப்சலோம்... தன்னைப் பெற்றெடுத்த தகப்பன் தாவீது ராஜாவின் சிம்மாசனத்தைத் தட்டிப்பறிக்க முயற்சி செய்தான். யூதாஸ்... தன்னுடைய தலைவர் கிறிஸ்து இயேசுவைக் காட்டிக் கொடுத்தான். இவர்களுடைய நம்பிக்கை துரோகச் செயல்களால் மற்றவர்களுக்கு ஏற்பட்ட வலியும் வேதனையும் எத்தனை எத்தனை! சரி... இவர்களைக் குறித்து நாம் ஏன் சிந்திக்க வேண்டும்?
2 இன்றைய சமுதாயத்தில் நம்பிக்கை துரோகம் சர்வ சாதாரணமாகிவிட்டது என்கிறார் நவீன எழுத்தாளர் ஒருவர். அதைக் குறித்து நாம் ஆச்சரியப்படத் தேவையில்லை. ஏனென்றால், ‘இந்தச் சகாப்தத்தின் இறுதிக்கட்டத்திற்கான’ அடையாளத்தை இயேசு கொடுத்தபோது, ‘பலர் . . . ஒருவரையொருவர் காட்டிக்கொடுப்பார்கள்,’ அதாவது நம்பிக்கை துரோகம் செய்வார்கள், என்று சொன்னார். (மத். 24:3, 10) “நம்பிக்கை துரோகம் செய்வது” அல்லது “காட்டிக்கொடுப்பது” என்பது எதிரியின் கையில் ஒருவரை வஞ்சகமாய்ப் பிடித்துக் கொடுப்பதைக் குறிக்கிறது. இதுபோன்ற நம்பிக்கை துரோகச் செயல்களைப் பார்க்கும்போது நாம் “கடைசி நாட்களில்” வாழ்கிறோம் என்பது உறுதியாகிறது. இந்தக் காலகட்டத்தில் மக்கள் “நம்பிக்கை துரோகிகளாக . . . காட்டிக்கொடுக்கிறவர்களாக” இருப்பார்கள் என பவுல் அன்றே சொன்னார். (2 தீ. 3:1, 2, 4) எழுத்தாளர்களும் திரைக்கதை ஆசிரியர்களும் தங்கள் புத்தகங்களிலும் சினிமாக்களிலும் நம்பிக்கை துரோகத்தை மக்கள் ரசிக்கும் விதத்தில் சுவைபட சித்தரிக்கிறார்கள். ஆனால் நிஜ வாழ்வில்... நம்பிக்கை துரோகம், காட்டிக் கொடுப்பது போன்ற ஈனச் செயல்கள் துக்கங்களையும் துயரங்களையுமே தருகின்றன. உண்மையைச் சொன்னால், இப்படிப்பட்ட செயல்கள் கடைசி நாட்களுக்கான ஓர் அடையாளம்!
3 கடந்த காலத்தில் நம்பிக்கை துரோகிகளாய் இருந்தவர்களைப் பற்றிய பைபிள் பதிவுகளிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? மற்றவர்களுக்கு உண்மையாய் இருந்தவர்களை நாம் எவ்வாறு பின்பற்றலாம்? யாருக்கு உண்மையாய் நிலைத்திருக்க நாம் தீர்மானமாய் இருக்க வேண்டும்? இது குறித்து, பின்வரும் பாராக்களில்...
மோசமான உதாரணங்கள்
4. தெலீலாள் எப்படி சிம்சோனைக் காட்டிக்கொடுத்தாள், அது ஏன் கேவலமான செயல்?
4 முதலாவதாக, வஞ்சக வலை விரித்த தெலீலாளைப் பற்றிப் பார்ப்போம். சிம்சோன் அவள்மீது கொள்ளை அன்பு வைத்திருந்தார். அதேசமயம், கடவுளுடைய மக்கள் சார்பாக பெலிஸ்தருக்கு எதிராகப் போரிட தீர்மானமாய் இருந்தார். சிம்சோன்மீது தெலீலாள் வைத்திருந்தது உண்மையான காதல் அல்ல என்பதை பெலிஸ்தரின் ஐந்து அதிபதிகள் ஒருவேளை அறிந்திருக்கலாம். அதனால்... தெலீலாள் மூலம் சிம்சோனின் பலத்திற்கு என்ன காரணம் என்பதைத் தெரிந்துகொண்டு அவரைத் தீர்த்துக்கட்ட நினைத்தார்கள். அதற்கு லஞ்சமாக தெலீலாளுக்கு ஒரு பெரிய தொகையைக் கொடுக்க முன்வந்தார்கள். பேராசைப்பிடித்த அந்தப் பாதகியும் அதற்குச் சம்மதித்தாள். சிம்சோனிடமிருந்து ‘அந்த’ ரகசியத்தைத் தெரிந்துகொள்ள முயற்சி செய்து மூன்று முறை தோற்றுப்போனாள். இருந்தாலும், “அவள் தன் வார்த்தைகளால் ஒவ்வொரு நாளும் அவரை நச்சரித்துத் தொந்தரவு செய்தாள்.” பாவம் சிம்சோன் “உயிர் போகுமளவிற்கு வருத்தமுற்றார்.” கடைசியில் உண்மையைச் சொல்லிவிட்டார். தான் பிறந்ததுமுதல் தன் தலைமயிர் சிரைக்கப்படவில்லை என்றும், சிரைக்கப்பட்டால் தன் பலம் போய்விடும் என்றும் சொன்னார்.a அது போதுமே தெலீலாளுக்கு. சிம்சோன் தன் மடியில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில் ஆளை வரவழைத்து அவர் தலைமுடியைச் சிரைக்கச் செய்தாள். பின்பு, எதிரிகள் அவரை என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும் என்று அவர்கள் கைகளில் ஒப்படைத்தாள். (நியா. 16:4, 5, 15-21; பொது மொழிபெயர்ப்பு) எவ்வளவு கேவலமாக நடந்துகொண்டாள்!! இந்த நெஞ்சழுத்தக்காரி தன்னை உயிராய் நேசித்த ஒருவரையே காட்டிக்கொடுத்ததற்குக் காரணம்—பேராசை.
5. (அ) அப்சலோம் எப்படிக் குள்ளநரித்தனமாக நடந்துகொண்டான், அவனுடைய சதித்திட்டம் எதை வெளிக்காட்டியது? (ஆ) அகித்தோப்பேலின் நம்பிக்கை துரோகம் தாவீதை எந்தளவு பாதித்தது?
5 இரண்டாவதாக, குள்ளநரி குணம் படைத்த அப்சலோமைப் பற்றிப் பார்ப்போம். பதவி மோகம் கொண்ட அப்சலோம் தன் தகப்பன் தாவீது ராஜாவின் அரியணையை அபகரிக்க வெறிபிடித்து அலைந்தான். முதலாவதாக, ‘இஸ்ரவேல் மக்களுடைய இருதயத்தைக் கவர்ந்துகொள்ள’ அவர்கள்மீது அன்பு வைத்திருப்பதுபோல் பாசாங்கு செய்தான்; பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசினான். ஏதோ அவர்கள் மேல் ரொம்ப அக்கறையாய் இருப்பதுபோல் அவர்களைக் கட்டியணைத்து முத்தமிட்டான். (2 சா. 15:2-6) தாவீதின் நம்பிக்கைக்குரிய நண்பனான அகித்தோப்பேலையும் தன் கைக்குள் போட்டுக்கொண்டான். இந்தக் கருங்காலியும் தாவீதின் ஆட்சியைக் கவிழ்ப்பதில் அப்சலோமோடு கைகோர்த்துக்கொண்டான். (2 சா. 15:31) இந்தத் துரோகச் செயல் தன்னை எந்தளவு நொறுக்கிப் போட்டது என்பதை 3-ஆம் சங்கீதத்திலும் 55-ஆம் சங்கீதத்திலும் தாவீது எழுத்தில் வடித்திருக்கிறார். (சங். 3:1-8; சங்கீதம் 55:12-14-ஐ வாசியுங்கள்.) யெகோவாவால் நியமிக்கப்பட்ட ராஜாவின் ஆட்சிப் பீடத்தைத் தட்டிப்பறிக்க அப்சலோம் போட்ட சதித்திட்டம், கடவுளுடைய பேரரசாட்சியை அவன் எவ்வளவு துச்சமாய்க் கருதினான் என்பதை வெளிக்காட்டியது. (1 நா. 28:5) கடைசியில், வெட்கங்கெட்ட அப்சலோமின் கலகம் ஒடுக்கப்பட்டது. யெகோவாவால் அபிஷேகம் செய்யப்பட்ட தாவீது ராஜாவின் ஆட்சியோ மீண்டும் மலர்ந்தது.
6. யூதாஸ் எப்படி இயேசுவைக் காட்டிக்கொடுத்தான், “யூதாஸ்” என்ற பெயர் யாருக்குப் பயன்படுத்தப்படுகிறது?
6 மூன்றாவதாக, கிறிஸ்துவின் கூடவே இருந்து குழிபறித்த நயவஞ்சக யூதாஸ் இஸ்காரியோத்தைப் பற்றிப் பார்ப்போம். தம் 12 அப்போஸ்தலர்களோடு சேர்ந்து கடைசி பஸ்காவை இயேசு ஆசரித்தபோது, “உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்” என்று சொன்னார். (மத். 26:21) பிற்பாடு அந்த இரவில், பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோருடன் கெத்செமனே தோட்டத்தில் அவர் இருந்தபோது, “என்னைக் காட்டிக்கொடுக்கிறவன் இதோ, நெருங்கி வந்துவிட்டான்” என்றார். அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே சதிகாரர்கள் சிலருடன் யூதாஸ் நேராக அவரிடம் வந்து, “‘ரபீ, வாழ்க!’ எனச் சொல்லி, மிக மென்மையாக அவரை முத்தமிட்டான்.” (மத். 26:46-50; லூக். 22:47, 52) யூதாஸ் ஒரு ‘நீதிமானைக் காட்டிக்கொடுத்தான்.’ ஆம், இயேசுவை அவருடைய எதிரிகள் கையில் ஒப்படைத்தான். எவ்வளவு காசுக்காக இந்தப் பேராசைப் பிடித்தவன் இந்தத் துரோகச் செயலைச் செய்தான்? வெறும் முப்பது வெள்ளிக் காசுகளுக்கு! (மத். 27:3-5) அன்றுமுதல் இன்றுவரை... நட்பு என்ற போர்வையில் “நம்பிக்கை துரோகம்” செய்கிறவர்களைக் குறிப்பிட “யூதாஸ்” என்ற பெயர் பயன்படுத்தப்படுகிறது.b
7. இவர்களிடமிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொண்டோம்: (அ) அப்சலோம் மற்றும் யூதாஸ், (ஆ) தெலீலாள்.
7 இந்த மோசமான உதாரணங்களிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொண்டோம்? யெகோவாவால் நியமிக்கப்பட்டவர்களுக்கு விரோதமாகத் துரோகம் செய்ததால் அப்சலோம், யூதாஸ் இருவருமே கேவலமான முடிவைச் சந்தித்தார்கள். (2 சா. 18:9, 14-17; அப். 1:18-20) தெலீலாள் என்ற பெயரைக் கேட்கும்போதெல்லாம்... அவளுடைய துரோகமும் வஞ்சகமும்தான் மக்களின் நினைவுக்கு வரும். (சங். 119:158) எனவே, பதவி ஆசையும் பேராசையும் நம் கண்களை மறைத்துவிட நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. ஏனென்றால், யெகோவாவிடம் நமக்குள்ள அருமையான பந்தத்திற்கே அது பங்கம் விளைவிக்கலாம்! நம்பிக்கை துரோகம் என்ற கொடிய குணத்தை அறவே வெறுக்க இந்த மூவருடைய கசப்பான அனுபவங்களும் நமக்குப் பெரிதும் உதவும்.
உண்மையாய் இருந்தவர்களைப் பின்பற்றுங்கள்
8, 9. (அ) தாவீதுக்கு ஆதரவளிப்பதாய் யோனத்தான் ஏன் உறுதியளித்தார்? (ஆ) யோனத்தானை நாம் எப்படிப் பின்பற்றலாம்?
8 உண்மையாய் இருந்தவர்களைப் பற்றிய உதாரணங்களும் பைபிளில் நிறைய உள்ளன. அவற்றில் இரண்டு பேருடைய உதாரணங்களையும்... அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடங்களையும்... பற்றிப் பார்ப்போம். முதலாவதாக, உயிருள்ளவரை தாவீதுக்கு உண்மையாய் இருந்த யோனத்தானைப் பற்றிப் பார்ப்போம். இவர் சவுல் ராஜாவின் மூத்த மகன். நியாயமாக, சவுலுக்குப்பின் இவர்தான் அரியணையில் அமர வேண்டும். ஆனால், அடுத்த அரசனாக ஆவதற்கு தாவீதை யெகோவா தேர்ந்தெடுத்தார். கடவுளுடைய இந்தத் தீர்மானத்தை யோனத்தான் மதித்ததால் தாவீதைத் தனக்குப் போட்டியாக நினைக்காமல் ‘தன் உயிரைப்போலச் சிநேகித்தார்.’ தாவீதுக்கு காலமெல்லாம் ஆதரவளிப்பதாய் உறுதியளித்தார். அதுமட்டுமல்ல, தன்னிடமிருந்த அங்கி, வாள், வில், கச்சை எல்லாவற்றையும் அவருக்குக் கொடுத்து அரசனுக்குரிய மரியாதையைச் செலுத்தினார். (1 சா. 18:1-4) ‘தாவீதின் கையைத் திடப்படுத்த’ தன்னால் முடிந்த அனைத்தையும் யோனத்தான் செய்தார். தன் உயிரையே பணயம் வைத்து சவுலிடம் தாவீதுக்காகப் பரிந்துபேசினார். உண்மைத்தன்மைக்கு உதாரணமாய்த் திகழ்ந்த யோனத்தான், “நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிருப்பீர்; அப்பொழுது நான் உமக்கு இரண்டாவதாயிருப்பேன்” என்று தாவீதிடம் கூறினார். (1 சா. 20:30-34; 23:16, 17) இப்படிப்பட்ட உயிர் நண்பன் இறந்தபோது தாவீது கண்ணீரில் கரைந்ததில் ஆச்சரியமே இல்லை. யோனத்தான்மீது அளவிலா அன்பு வைத்திருந்த தாவீது துக்கத்தில் அவருக்காக ஒரு சோக கீதம் இயற்றினார்!—2 சா. 1:17, 26.
9 யாருக்கு உண்மையாக இருக்கவேண்டும் என்பதில் யோனத்தான் தெளிவாய் இருந்தார். உன்னதப் பேரரசரான யெகோவாவுக்கு முழுமையாய் அடிபணிந்தார். கடவுளால் அபிஷேகம் செய்யப்பட்ட தாவீதை முழுமனதோடு ஆதரித்தார். இன்றும்... சபையில் நமக்கு முக்கியமான பொறுப்புகள் கொடுக்கப்படாவிட்டாலும் நம்மை வழிநடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள சகோதரர்களை நாம் முழுமனதோடு ஆதரிக்க வேண்டும்.—1 தெ. 5:12, 13; எபி. 13:17, 24.
10, 11. (அ) பேதுரு ஏன் இயேசுவை விட்டுப் போகவில்லை? (ஆ) நாம் எப்படி பேதுருவைப் பின்பற்றலாம்?
10 இரண்டாவதாக, இயேசுவுக்கு உண்மையாய் இருப்பதாய் வாக்குக்கொடுத்த அப்போஸ்தலன் பேதுருவைப் பற்றிப் பார்ப்போம். சீக்கிரத்தில் மீட்புபலியாகத் செலுத்தப்படவிருந்த தமது சதையிலும் இரத்தத்திலும் நம்பிக்கை வைப்பதன் அவசியத்தை அடையாள மொழியில் இயேசு விளக்கியபோது சீடர்களில் அநேகர் அதிர்ச்சி அடைந்து, ‘இதை யார் கேட்பார்கள்’ என்று சொல்லி அவரைவிட்டு விலகிச் சென்றார்கள். (யோவா. 6:53-60, 66) அப்போது இயேசு தம் 12 அப்போஸ்தலர்களைப் பார்த்து, “நீங்களும் என்னைவிட்டுப் போகப் போகிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு பேதுரு, “எஜமானே, நாங்கள் யாரிடம் போவோம்? முடிவில்லா வாழ்வைத் தரும் வார்த்தைகள் உங்களிடம்தானே இருக்கின்றன. நீங்கள்தான் கடவுளுடைய பரிசுத்தர் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம், அதை நம்புகிறோம்” என்றார். (யோவா. 6:67-69) அப்படியென்றால், தம்மையே பலியாகச் செலுத்தப்போவதைக் குறித்து இயேசு சொன்ன விஷயத்தை பேதுரு முழுமையாகப் புரிந்துகொண்டார் என்று சொல்ல முடியுமா? அப்படிச் சொல்ல முடியாது. ஆனாலும், கடவுளின் அபிஷேகம் செய்யப்பட்ட மகனுக்கு உண்மையாய் இருப்பதில் பேதுரு உறுதியாயிருந்தார்.
11 ‘இயேசு ஏதோ யோசிக்காமல் சொல்லிவிட்டார்... கொஞ்சநாள் போனால் அவரே அதைப் புரிந்துகொண்டு தன் கருத்தை மாற்றிக்கொள்வார்’ என்று பேதுரு நினைக்கவில்லை. “முடிவில்லா வாழ்வைத் தரும் வார்த்தைகள்” இயேசுவிடம்தான் உள்ளன என்பதை மனத்தாழ்மையுள்ள பேதுரு அறிந்திருந்தார். இன்றும்கூட... ‘உண்மையுள்ள நிர்வாகி’ வழங்கும் பிரசுரங்களில் ஏதாவதொரு குறிப்பை நம்மால் சரியாகப் புரிந்துகொள்ள முடியாதபோது அல்லது அது நம் கருத்தோடு ஒத்துப்போகாதபோது என்ன செய்கிறோம்? அதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டுமே தவிர இன்னும் கொஞ்சநாள் போனால் நாம் நினைத்தவாறே அதில் ஏதாவது மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கக் கூடாது.—லூக்கா 12:42-ஐ வாசியுங்கள்.
என்றும் மணத்துணைக்கு உண்மையாய் இருங்கள்
12, 13. எப்போது நம்பிக்கை துரோகம் நிகழ்கிறது, மணத்துணைக்குத் துரோகம் செய்வதற்கு வயதைக் காரணம் காட்டுவது ஏன் சரியல்ல?
12 எந்த விதமான நம்பிக்கை துரோகச் செயலானாலும் சரி, அது குற்றம்தான். இது கிறிஸ்தவக் குடும்பங்களிலும் சபையிலும் தலைதூக்கினால் அங்கு நிலவும் சமாதானமும் ஒற்றுமையும் நிலைகுலையும். அதற்கு நாம் ஒருபோதும் இடங்கொடுக்கக் கூடாது. அப்படியானால், நம் மணத்துணைக்கும் கடவுளுக்கும் என்றும் உண்மையாய் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
13 மணத்துணைக்குத் துரோகம் செய்வது... துரோகத்திலும் படுபயங்கரமான துரோகம். இந்தத் துரோகத்தைச் செய்பவர்... இதுவரை தன் துணைக்குக் காட்டிவந்த அன்பையும் பாசத்தையும் இப்போது வேறொரு நபருக்குக் காட்ட ஆரம்பிக்கிறார். கைவிடப்பட்ட துணைக்குத் தனிமையே துணையாகிவிடுகிறது; ஒரு கணத்தில் வாழ்க்கையே தலைகீழாகிவிடுகிறது. ஒருகாலத்தில் உயிருக்கு உயிராய் நேசித்தவர்கள் மத்தியில் எப்படி இந்தப் பிளவு ஏற்படுகிறது? அதற்கு முதல் காரணம், தம்பதிகளுக்கிடையே பரஸ்பர உணர்ச்சிப் பகிர்தல் இல்லாமல் போவதே. தங்கள் திருமண பந்தத்தைக் கட்டிக்காக்க தம்பதிகள் முயற்சி எடுக்காமல் போகும்போதுதான் நம்பிக்கை துரோகம் நிகழ்கிறது என்கிறார் சமூகவியல் பேராசிரியை காப்ரியெல்லா டர்னாடுரி. நடுத்தர வயதுக்காரர்களும் இப்படிப்பட்ட துரோகச் செயல்களைச் செய்துவிடலாம். 50 வயதுக்காரர் இன்னொரு பெண்ணுடன் குடும்பம் நடத்துவதற்காக 25 வருடமாய் தனக்கு உண்மையாயிருந்த தன் உத்தம பத்தினியை விவாகரத்து செய்தார். ‘இந்த வயதில் இதெல்லாம் சகஜம்’ என்று சிலர் சொல்லலாம். ஆனால், வயதுக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இப்படிப்பட்ட செயலை சகஜம் என்று சொல்வதைவிட... துரோகம் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.c
14. (அ) மணத்துணைக்குத் துரோகம் செய்வதை யெகோவா எப்படிக் கருதுகிறார்? (ஆ) மணத்துணைக்குத் துரோகம் செய்வதைக் குறித்து இயேசு என்ன சொன்னார்?
14 பைபிள் சொல்லும் காரணத்திற்காக அல்லாமல் வேறு காரணங்களுக்காகத் தங்கள் துணையைக் கழற்றிவிடுகிறவர்களை யெகோவா எப்படிக் கருதுகிறார்? நம் கடவுள் ‘தள்ளிவிடுதலை [அதாவது, விவாகரத்தை] வெறுக்கிறார்.’ தங்கள் மணத்துணையை வஞ்சித்து விவாகரத்து செய்பவர்களை அவர் கடுமையாகக் கண்டிக்கிறார். (மல்கியா 2:13-16-ஐ வாசியுங்கள்.) இந்த விஷயத்தில் இயேசுவும் தம் தகப்பனைப் போலவே உணருகிறார். எந்தத் தவறும் செய்யாத தன் துணையை ஒருவர் விவாகரத்து செய்துவிட்டு எதுவும் நடக்காததுபோல் இருந்துவிட முடியாது என்று இயேசு சொன்னார்.—மத்தேயு 19:3-6, 9-ஐ வாசியுங்கள்.
15. திருமணமானவர்கள் எப்படித் தங்கள் துணைக்கு என்றும் உண்மையாய் இருக்கலாம்?
15 திருமணமானவர்கள் எப்படித் தங்கள் துணைக்கு என்றும் உண்மையாய் இருக்கலாம்? “உன் இளவயதின் மனைவியோடே [அல்லது கணவனோடே] மகிழ்ந்திரு” என்றும் ‘நீ நேசிக்கிற மனைவியோடே [அல்லது கணவனோடே] இந்த ஜீவவாழ்வை அநுபவி’ என்றும் கடவுளுடைய வார்த்தை சொல்கிறது. (நீதி. 5:18; பிர. 9:9) தம்பதிகளுக்கு வயது ஆக ஆக, உடல் ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் தங்கள் உறவை வலுப்படுத்த தங்களால் முடிந்த அனைத்தையும் அவர்கள் செய்ய வேண்டும். அப்படியென்றால்? அவர்கள் ஒருவருக்கொருவர் அக்கறையாய் இருக்க வேண்டும், ஒருவருக்கொருவர் நேரம் செலவிட வேண்டும், ஒருவருக்கொருவர் நாளுக்கு நாள் அன்பில் பெருக வேண்டும். தம்பதிகள் தங்கள் பரஸ்பர பந்தத்தையும் யெகோவாவுடன் உள்ள பந்தத்தையும் கட்டிக்காக்க கடினமாய் உழைக்க வேண்டும். அதற்காக... அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து பைபிளைப் படிக்க வேண்டும், ஒன்றாகச் சேர்ந்து ஊழியத்தில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும், யெகோவாவின் ஆசீர்வாதத்திற்காக ஒன்றாகச் சேர்ந்து ஜெபம் செய்ய வேண்டும்.
என்றும் யெகோவாவுக்கு உண்மையாய் இருங்கள்
16, 17. (அ) நம் உறவினர் அல்லது நண்பர் சபைநீக்கம் செய்யப்படும்போது நாம் யாருக்கு உண்மையாயிருக்க வேண்டும்? (ஆ) சபைநீக்கம் செய்யப்பட்ட உறவினர்களோடு சகவாசம் வைத்துக்கொள்ளக் கூடாது என்ற கட்டளைக்குக் கீழ்ப்படிவதில் நன்மைகள் உண்டு என்பதற்கு ஓர் உதாரணம் தருக.
16 சபையில் படுபயங்கரமான பாவங்களைச் செய்தவர்கள், ‘விசுவாசத்தில் ஆரோக்கியமானவர்களாக’ ஆவதற்கு ‘கடுமையாகக் கடிந்துகொள்ளப்பட்டிருக்கிறார்கள்.’ (தீத். 1:13) சில சந்தர்ப்பங்களில், தவறு செய்த சிலர் சபைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட கண்டிப்பினால் ‘பயிற்றுவிக்கப்பட்டவர்கள்’ மீண்டும் கடவுளுடன் நல்லுறவுக்குள் வர முடிந்திருக்கிறது. (எபி. 12:11) நம்முடைய உறவினர் அல்லது நெருங்கிய நண்பர் சபைநீக்கம் செய்யப்பட்டிருந்தால் என்ன செய்வோம்? அவருக்கு உண்மையாய் இருப்போமா அல்லது யெகோவாவுக்கு உண்மையாய் இருப்போமா? நாம் யெகோவாவுக்குத்தான் உண்மையாய் இருக்க வேண்டும். சபைநீக்கம் செய்யப்பட்ட எந்த நபரோடும் சகவாசம் வைத்துக்கொள்ளக் கூடாது என்று அவர் சொல்லியிருக்கிறார். அந்தக் கட்டளைக்கு நாம் கீழ்ப்படிகிறோமா என்றும் பார்த்துக்கொண்டிருக்கிறார்.—1 கொரிந்தியர் 5:11-13-ஐ வாசியுங்கள்.
17 சபைநீக்கம் செய்யப்பட்ட உறவினர்களோடு சகவாசம் வைத்துக்கொள்ளக் கூடாது என்ற யெகோவாவின் கட்டளைக்குக் குடும்பத்தினர் கீழ்ப்படிந்தால் நன்மைகள் உண்டு. அதற்கு ஓர் உதாரணத்தைப் பார்ப்போம். ஓர் இளைஞர் சபைநீக்கம் செய்யப்பட்டு 10 வருடங்களுக்கும் மேல் ஆகியிருந்தது. அந்தச் சமயத்தில்... அவருடைய அப்பா, அம்மா, நான்கு சகோதரர்கள் என அனைவருமே அவரோடு ‘பழகுவதை விட்டுவிட்டார்கள்.’ சிலசமயங்களில் அவர்களோடு நேரம் செலவிட அவர் முயற்சி செய்தார். ஆனால், அவர்கள் அதற்கு இடம் கொடுக்கவே இல்லை. அவர்கள் அனைவரும் யெகோவாவுக்கு உண்மையாய் இருந்தார்கள். அவர் திரும்பவும் சபைக்குள் சேர்த்துக்கொள்ளப்பட்டபோது, தன் குடும்பத்தாரோடு நேரம் செலவிட முடியாததை நினைத்து ஒவ்வொரு நாளும் வருத்தப்பட்டதாகச் சொன்னார். முக்கியமாக, ராத்திரி வேளைகளில் தான் தனிமையில் இருந்தபோது ரொம்பவே வருத்தப்பட்டதாகச் சொன்னார். ‘ஒருவேளை என் குடும்பத்தில் யாராவது ஒருத்தர் என்மேல் பரிதாபப்பட்டு என்னோடு கொஞ்சநேரம் செலவழித்திருந்தாலும்கூட... அதுவே போதும் என்று திருப்தியாய் இருந்திருப்பேன்’ என்றார். ஆனால்... அவர்கள் யாருமே அவருடன் கொஞ்சம்கூட சகவாசம் வைத்துக்கொள்ளாததால் அந்த ஏக்கமே யெகோவாவுடன் மீண்டும் நல்லுறவுக்குள் வர அவருக்குத் தூண்டுகோலாய் அமைந்தது. சபைநீக்கம் செய்யப்பட்ட உறவினர்களுடன் சகவாசம் வைத்துக்கொள்ள உங்கள் மனம் ஏங்கினால் இந்த உதாரணத்தை நினைத்துக்கொள்ளுங்கள்.
18. உண்மையாய் இருந்தவர்களையும் நம்பிக்கை துரோகிகளையும் பற்றிச் சிந்தித்த பிறகு உங்கள் தீர்மானம் என்ன?
18 துரோகிகள் நிறைந்த வஞ்சக உலகில் நாம் வாழ்கிறோம். ஆனால், கிறிஸ்தவ சபைக்குள் பற்றுமாறாதவர்கள்... உண்மையுள்ளவர்கள்... நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்களுடைய முன்மாதிரியை நாம் பின்பற்றலாம். அவர்கள் உண்மையானவர்கள் என்பதற்கு அவர்கள் வாழ்க்கையே மௌன சாட்சி. ஆம், “விசுவாசிகளாகிய உங்களிடம் நாங்கள் எந்தளவு பற்றுமாறாதவர்களாகவும் [அதாவது, உண்மையுள்ளவர்களாகவும்] நீதியுள்ளவர்களாகவும் குற்றமற்றவர்களாகவும் நடந்துகொண்டோம் என்பதற்கு நீங்களும் சாட்சி, கடவுளும் சாட்சி.” (1 தெ. 2:10) எனவே, நாம் அனைவரும் கடவுளுக்கும் நம் சகோதர சகோதரிகளுக்கும் என்றும் உண்மையாய் இருப்போமாக!
[அடிக்குறிப்புகள்]
a சிம்சோனின் பலத்திற்குக் காரணம், வெறும் அவருடைய தலைமயிர் அல்ல, ஒரு நசரேயனாக யெகோவாவுடன் அவருக்கிருந்த விசேஷ உறவே. அந்த உறவுக்கு அவருடைய தலைமயிர் அடையாளமாக இருந்தது.
b ஆங்கிலத்தில்... “யூதாஸ் முத்தம்” என்பது “நம்பிக்கை துரோகச் செயலை” குறிக்கிறது.
c நம்பிக்கை துரோகத்திற்குப் பலியானவர்கள் அதிலிருந்து மீண்டுவருவதற்கான வழியைத் தெரிந்துகொள்ள... ஜூன் 15, 2010 காவற்கோபுரத்தில் பக்கங்கள் 29-32-ல் “துணையே துரோகியாகையில்—சகிப்பதும் சமாளிப்பதும்” என்ற கட்டுரையைக் காண்க.
[பக்கம் 10-ன் படம்]
அபிஷேகம் செய்யப்பட்ட மகனைவிட்டு மற்றவர்கள் சென்றபோதிலும் பேதுரு செல்லவில்லை