‘தகப்பனை வெளிப்படுத்த மகன் விரும்புகிறார்’
“தகப்பனைத் தவிர வேறு ஒருவனுக்கும் மகனைத் தெரியாது; மகனுக்கும், மகன் எவனுக்கு அவரை வெளிப்படுத்த விருப்பமாயிருக்கிறாரோ அவனுக்கும் தவிர வேறு ஒருவனுக்கும் தகப்பனைத் தெரியாது.”—லூக். 10:22.
உங்கள் பதில்?
தகப்பனை வெளிப்படுத்த ஏன் இயேசுவே மிகப் பொருத்தமானவர்?
தகப்பனை இயேசு எவ்வாறு வெளிப்படுத்தினார்?
நீங்கள் என்னென்ன விதங்களில் இயேசுவைப் போல தகப்பனை வெளிப்படுத்தலாம்?
1, 2. என்ன கேள்வி அநேகரின் மனதைக் குழப்பியிருக்கிறது, ஏன்?
‘கடவுள் யார்?’ இந்தக் கேள்விக்குப் பதில் தெரியாமல் நிறையப் பேர் குழம்பிப் போயிருக்கிறார்கள். சர்ச்சுக்குப் போகிற கிறிஸ்தவர்களில் அநேகர் கடவுள் ஒரு திரித்துவம் என்று நம்புகிறார்கள்; ஆனாலும் அவர்களில் பலர் அதை ஒரு புரியாப் புதிர் என்றுதான் சொல்கிறார்கள். எழுத்தாளராகவும் மத குருவாகவும் இருக்கும் ஒருவர், “திரித்துவக் கோட்பாடு என்பது மனிதனின் அறிவுக்கு அப்பாற்பட்டது. மனித மனங்களால் புரிந்துகொள்ள முடியாதது” என்று எழுதினார். மறுபட்சத்தில், சிலர் பரிணாமக் கோட்பாட்டை நம்புகிறார்கள். அவர்களில் பெரும்பாலோர்... கடவுளே இல்லை என்கிறார்கள். இந்த அண்டத்தின் அற்புதப் படைப்புகள் அனைத்தும் தானாகவே வந்ததாகச் சொல்கிறார்கள். பரிணாமவாதியான சார்ல்ஸ் டார்வினோ... கடவுள் இல்லை என்று சொல்லாமல், கடவுளைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ளும் சக்தி மனித மூளைக்கு இல்லை என்று சொன்னார்.
2 தங்கள் நம்பிக்கைகள் என்னவாக இருந்தாலும், கடவுள் யார்... அவர் எப்படிப்பட்டவர்... போன்ற கேள்விகளுக்குப் பதில் தெரிந்துகொள்ள அநேகர் முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால், திருப்தியான பதில் கிடைக்காமல் போனபோது அவர்களில் அநேகர் தங்கள் முயற்சியைக் கைவிட்டுவிட்டார்கள். உண்மையைச் சொன்னால், சாத்தான் ‘விசுவாசிகளாக இல்லாதவர்களுடைய மனக்கண்களைக் குருடாக்கியிருக்கிறான்.’ (2 கொ. 4:4) அதனால்தான், இன்று பெரும்பாலோர் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்த பரலோகத் தகப்பனைப் பற்றிய உண்மையை அறியாமல் குழம்பிப் போயிருக்கிறார்கள், மொத்தத்தில் இருட்டில் இருக்கிறார்கள்.—ஏசா. 45:18.
3. (அ) படைப்பாளரை நமக்கு வெளிப்படுத்தியிருப்பது யார்? (ஆ) எந்தக் கேள்விகளுக்கான பதிலை இப்போது சிந்திக்கப்போகிறோம்?
3 என்றாலும், கடவுளைப் பற்றிய உண்மையை மக்கள் அறிந்துகொள்வது மிக மிக முக்கியம். ஏனென்றால், ‘யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்கிறவர்கள்’ மாத்திரமே மீட்புப் பெறுவார்கள். (ரோ. 10:13) யெகோவாவின் பெயரைச் சொல்லி மக்கள் வேண்டிக்கொள்வதற்கு... அவர் யார், அவர் எப்படிப்பட்டவர் என்பதை அவர்கள் தெரிந்துகொள்வது அவசியம். இதையெல்லாம் தெரிந்துகொள்ள இயேசு கிறிஸ்து தம் சீடர்களுக்கு உதவிசெய்தார். தம் தகப்பனை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். (லூக்கா 10:22-ஐ வாசியுங்கள்.) வேறு யாரையும்விட இயேசுவால் எப்படித் தம் தகப்பனை அவ்வளவு தெளிவாக வெளிப்படுத்த முடிந்தது? அவர் எப்படி வெளிப்படுத்தினார்? தகப்பனை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவதில் நாம் எவ்வாறு இயேசுவைப் பின்பற்றலாம்? இக்கேள்விகளுக்கான பதிலை இப்போது சிந்திப்போம்.
இயேசு கிறிஸ்துவே மிகப் பொருத்தமானவர்
4, 5. தகப்பனை வெளிப்படுத்துவதற்கு இயேசுவே ஏன் மிகப் பொருத்தமானவராய் இருந்தார்?
4 தகப்பனை வெளிப்படுத்துவதற்கு இயேசுவே மிகப் பொருத்தமானவராய் இருந்தார். ஏன்? விண்ணிலும் மண்ணிலும் எந்த உயிரும் படைக்கப்படும் முன் ‘கடவுளுடைய [இந்த] ஒரே மகன்’ பரலோகத்தில் இருந்தார். இவர்தான் பின்பு இயேசுவாகப் பூமிக்கு வந்தார். (யோவா. 1:14; 3:18) கடவுளுடைய ஒரே மகனாக இருப்பது எப்பேர்ப்பட்ட பாக்கியம்! அண்டத்தில் வேறு எந்த உயிரும் இல்லாத சமயத்தில் இந்த மகன் தம் தகப்பனின் முழு அன்பையும் அரவணைப்பையும் பெற்றார். தம் தகப்பனையும் அவரது குணங்களையும் பற்றிப் பக்கத்திலிருந்து கற்றுக்கொண்டார். கோடானு கோடி வருடங்கள் தகப்பனும் மகனும் எத்தனையோ விஷயங்களைப் பற்றிப் பேசி மகிழ்ந்திருப்பார்கள். நாளுக்குநாள் பந்தத்திலும் பாசத்திலும் பெருகிக்கொண்டே போயிருப்பார்கள். (யோவா. 5:20; 14:31) இயேசுவின் மனதில் தம் தகப்பனின் குணங்கள் எந்தளவு ஆழமாய்ப் பதிந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்!—கொலோசெயர் 1:15-17-ஐ வாசியுங்கள்.
5 இந்த மகனைத் தமக்குப் பிரதிநிதியாக யெகோவா நியமித்தார். எனவே, “கடவுளுடைய வார்த்தை” என்று மகன் அழைக்கப்படுகிறார். (வெளி. 19:13) அதனால்தான், தகப்பனை வெளிப்படுத்துவதற்கு இயேசு மிகப் பொருத்தமானவராக இருந்தார். ‘வார்த்தையான’ இந்த இயேசுவை, தகப்பனின் ‘நெஞ்சத்திற்கு நெருக்கமானவர்’ என சுவிசேஷ எழுத்தாளரான யோவான் வர்ணித்தது சரியே. (யோவா. 1:1, 18) ‘நெஞ்சத்திற்கு நெருக்கமானவர்’ என்று அவர் எழுதியபோது, அவர் வாழ்ந்த காலத்தில்... சாப்பாட்டு வேளைகளில்... பின்பற்றப்பட்ட ஒரு பொதுவான பழக்கம் அவர் நினைவுக்கு வந்திருக்கலாம். ஒரே மெத்தையில் விருந்தாளிகள் இடது பக்கமாகச் சரிந்து உட்காருவது வழக்கமாய் இருந்தது. இப்படி உட்கார்ந்தபோது ஒவ்வொருவருடைய தலையும் அவருக்குப் பக்கத்தில் இருந்தவரின் மார்புக்கு அருகே இருந்தது. அதனால், அவர்கள் சுலபமாய்ப் பேசிக்கொள்ள முடிந்தது. எனவே, தகப்பனின் ‘நெஞ்சத்திற்கு நெருக்கமானவராய்’ இருந்த மகனும் அவரிடம் மனம்விட்டுப் பேசியிருப்பார்.
6, 7. தகப்பனுக்கும் மகனுக்கும் இடையே இருந்த உறவு நாளுக்குநாள் எப்படி உறுதியானது?
6 தகப்பனுக்கும் மகனுக்கும் இடையே இருந்த உறவு நாளுக்குநாள் உறுதியானது. இந்த மகன் ‘நித்தம் கடவுளுடைய மனமகிழ்ச்சியாய் இருந்தார்,’ அதாவது மகனைக் கண்டு யெகோவா ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியடைந்தார். (நீதிமொழிகள் 8:22, 23, 30, 31-ஐ வாசியுங்கள்.) அவர்கள் இருவரும் சேர்ந்து வேலை செய்ததும்... தகப்பனின் குணங்களை வெளிக்காட்ட மகன் கற்றுக்கொண்டதும்... அவர்களுக்கு இடையே இருந்த பந்தத்தை இன்னும் பலப்படுத்தியது. புத்திக்கூர்மையுள்ள உயிர்களை யெகோவா படைத்த பிறகு, அவர்கள் ஒவ்வொருவரிடமும் அவர் நடந்துகொண்ட விதத்தை மகன் கவனித்தார்; தம் தகப்பனின் உயர்ந்த உள்ளத்தைப் பார்த்து உருகிப்போனார்.
7 யெகோவாவின் பேரரசதிகாரத்தை எதிர்த்து சாத்தான் சவால்விட்ட சமயத்தில் அவர் நடந்துகொண்ட விதத்தை மகன் கவனித்தார். இக்கட்டான இந்தச் சூழ்நிலையிலும் யெகோவா எப்படி அன்பு, நீதி, ஞானம், வல்லமை ஆகிய குணங்களை வெளிக்காட்டினார் என்பதை மகன் பார்த்தார். அந்த அனுபவம்... பின்பு பூமியில் ஊழியம் செய்தபோது சந்தித்த சவால்களை வெற்றிகரமாகச் சமாளிக்க அவருக்குக் கைகொடுத்தது.—யோவா 5:19.
8. தகப்பனின் குணங்களைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ள சுவிசேஷப் பதிவுகள் நமக்கு எவ்வாறு உதவுகின்றன?
8 மகனுக்கு யெகோவாவோடு நெருங்கிய பந்தம் இருந்ததால் தம் தகப்பனை வேறு யாரையும்விட மிகத் தெளிவாக அவர் வெளிப்படுத்தினார். தகப்பனைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள அவருடைய ஒரே மகனின் போதனைகளையும் செயல்களையும் ஆராய்ந்து பார்ப்பதைவிட சிறந்த வழி வேறெதாவது இருக்க முடியுமா? உதாரணத்திற்கு... “அன்பு” என்ற வார்த்தைக்கு அகராதி தரும் விளக்கத்தை மட்டும் படித்தால் அதன் அர்த்தத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. ஆனால், இயேசுவின் ஊழியத்தையும் மக்களிடம் அவர் காட்டிய அக்கறையையும் தத்ரூபமாய் விவரிக்கும் சுவிசேஷப் பதிவுகளைப் படிக்கும்போது “கடவுள் அன்பாகவே இருக்கிறார்” என்ற வாக்கியத்தின் அர்த்தத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள முடிகிறது. (1 யோ. 4:8, 16) யெகோவாவின் அன்பை மட்டுமல்ல, அவருடைய மற்ற குணங்களையும் இயேசு தம் சீடர்களுக்கு வெளிப்படுத்தினார்.
இயேசு தம் தகப்பனை எவ்வாறு வெளிப்படுத்தினார்?
9. (அ) என்ன இரண்டு முக்கியமான வழிகளில் இயேசு தம் தகப்பனை வெளிப்படுத்தினார்? (ஆ) தமது போதனையின் மூலம் இயேசு தம் தகப்பனை வெளிப்படுத்தினார் என்பதற்கு ஓர் உதாரணம் தருக.
9 அந்நாள் சீடர்களுக்கும் இந்நாள் சீடர்களுக்கும் இயேசு எவ்வாறு தம் தகப்பனை வெளிப்படுத்தினார்? இரண்டு முக்கியமான வழிகளில்: தமது போதனைகள் மூலமும், செயல்கள் மூலமும். முதலாவதாக, இயேசுவின் போதனைகளைப் பற்றிச் சிந்திப்போம். சீடர்களுக்கு இயேசு கற்பித்த விஷயங்கள் தம் தகப்பனின் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் வழிகளையும் அவர் நன்கு புரிந்து வைத்திருந்தார் என்பதைக் காட்டின. உதாரணத்திற்கு, அவர் சொன்ன ஓர் உவமையை எடுத்துக்கொள்வோம். அதில்... தொலைந்துபோன ஓர் ஆட்டைத் தேடிப் போகும் கரிசனை மிகுந்த ஒரு மேய்ப்பனுக்கு இயேசு தம் தகப்பனை ஒப்பிட்டார். தொலைந்துபோன ஆட்டை அந்த மேய்ப்பன் கண்டுபிடித்தபோது, ‘வழிதவறிப் போகாத மற்ற தொண்ணூற்றொன்பது ஆடுகளைவிட அந்த ஆட்டைக் குறித்தே அதிக சந்தோஷப்பட்டதாக’ இயேசு சொன்னார். இந்த உவமையின் மூலம் அவர் என்ன குறிப்பை விளக்கினார்? “இந்தச் சிறியவர்களில் ஒருவர்கூட அழிந்துபோவதை என் பரலோகத் தகப்பன் விரும்புவதில்லை” என்பதையே விளக்கினார். (மத். 18:12-14) இந்த உவமையிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன தெரிந்துகொள்கிறோம்? ‘நான் எதற்கும் லாயக்கில்லை, யாரும் என்னைக் கண்டுகொள்வதில்லை’ என்று எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? அப்படியென்றால், பரலோகத் தகப்பன் உங்கள்மீது அக்கறையாகவும் கரிசனையாகவும் இருக்கிறார் என்பதை மறந்துவிடாதீர்கள். அவர் உங்களை... ‘இந்தச் சிறியவர்களில் ஒருவராக’ கருதுகிறார்.
10. இயேசு தமது செயல்கள் மூலம் எவ்வாறு தம் தகப்பனை வெளிப்படுத்தினார்?
10 இரண்டாவதாக, இயேசு தம் செயல்கள் மூலம் சீடர்களுக்குத் தகப்பனை வெளிப்படுத்தினார். எனவேதான், அப்போஸ்தலன் பிலிப்பு இயேசுவிடம், “எஜமானே, தகப்பனை எங்களுக்குக் காட்டுங்கள்” என்று கேட்டபோது “என்னைப் பார்த்தவன் என் தகப்பனைப் பார்த்திருக்கிறான்” என்று அவரால் சொல்ல முடிந்தது. (யோவா. 14:8, 9) தகப்பனின் குணங்களை இயேசு எப்படியெல்லாம் வெளிக்காட்டினார் என்பதற்குச் சில உதாரணங்களைப் பார்ப்போம். தொழுநோயாளி ஒருவன் தன்னைக் குணப்படுத்தும்படி இயேசுவிடம் கெஞ்சியபோது “தொழுநோய் நிறைந்த” அந்த மனிதனை அவர் தொட்டு “எனக்கு மனமிருக்கிறது; நீ சுத்தமாகு” என்று சொன்னார். அவன் குணமானபோது... இயேசுவின் அன்பில் யெகோவாவின் வல்லமையைப் பார்த்திருப்பான். (லூக். 5:12, 13) லாசரு இறந்துபோன சமயத்திலும், இயேசு ‘உள்ளம் குமுறி, மனம் கலங்கி,’ ‘கண்ணீர்’ சிந்தினார். அந்தக் கண்ணீரில், தகப்பனின் கரிசனையைச் சீடர்கள் பார்த்திருப்பார்கள். லாசருவை இன்னும் கொஞ்சம் நேரத்தில் தாம் உயிருக்குக் கொண்டுவரப் போவதை இயேசு அறிந்திருந்தார். இருந்தாலும், லாசருவின் குடும்பத்தாரும் நண்பர்களும் பட்ட வேதனையின் வலியை அவர் உணர்ந்தார். (யோவா. 11:32-35, 40-43) இதுபோன்று... யெகோவாவின் இரக்கத்தைச் சிறப்பித்துக் காட்டும் இயேசுவின் எத்தனையோ செயல்கள் உங்கள் மனதைக் கவர்ந்திருக்கலாம்.
11. (அ) ஆலயத்தை இயேசு சுத்தப்படுத்தியபோது தம் தகப்பனின் என்ன குணத்தை வெளிப்படுத்தினார்? (ஆ) இந்தப் பதிவு நமக்கு ஏன் ஆறுதல் அளிக்கிறது?
11 இயேசு ஆலயத்தைச் சுத்தப்படுத்திய பதிவிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? அந்தக் காட்சியை உங்கள் மனத்திரையில் கொஞ்சம் ஓடவிடுங்கள்: கயிறுகளால் ஒரு சாட்டை செய்து ஆடு மாடு விற்பவர்களை இயேசு விரட்டுகிறார். காசு மாற்றுபவர்களின் காசுகளைக் கீழே கொட்டி, அவர்களுடைய மேஜைகளைக் கவிழ்த்துப் போடுகிறார். (யோவா. 2:13-17) இயேசுவின் இந்தத் தைரியமான செயலைப் பார்த்த சீடர்களுக்கு, “உமது வீட்டைக் குறித்த பக்திவைராக்கியம் எனக்குள் பற்றியெரியும்” என்று தீர்க்கதரிசனமாக தாவீது ராஜா சொன்ன வார்த்தைகள்தான் நினைவுக்கு வந்தன. (சங். 69:9, NW) இயேசு இப்படிக் கடும் நடவடிக்கை எடுத்ததன் மூலம்... உண்மை வணக்கத்தை ஆதரிக்க தமக்குள் ஆர்வக்கனல் தகித்துக்கொண்டிருந்ததைக் காட்டினார். இயேசுவின் இந்தச் செயலில் தகப்பனின் ‘சாயலை’ பார்க்க முடிகிறதா? இந்தப் பூமியிலிருந்து பொல்லாப்பை ஒழித்துக்கட்ட கடவுளுக்கு அளவில்லா ஆற்றல் மட்டுமல்ல, அளவில்லா ஆசையும் இருக்கிறது என்பதை இந்தப் பதிவு நமக்குக் காட்டுகிறது. அநியாய, அக்கிரமங்களைப் பொறுக்க முடியாமல் இயேசு பொங்கி எழுந்த விதம், இன்று பூமியில் மலிந்து கிடக்கும் அட்டூழியங்களைப் பார்க்கும்போது தகப்பன் எப்படி உணருவார் என்பதைப் படம்பிடித்துக் காட்டுகிறது. இன்று அநியாயத்திற்கும் அட்டூழியத்திற்கும் ஆளாகும் நமக்கு இந்தப் பதிவு எவ்வளவு ஆறுதல் அளிக்கிறது!
12, 13. சீடர்களிடம் இயேசு நடந்துகொண்ட விதத்திலிருந்து யெகோவாவைப் பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?
12 இன்னொரு உதாரணத்தைச் சிந்திப்போம்—தம் சீடர்களிடம் இயேசு நடந்துகொண்ட விதம். தங்களில் யார் உயர்ந்தவன் என்று சீடர்கள் எப்போதும் வாக்குவாதம் செய்துகொண்டிருந்தார்கள். (மாற். 9:33-35; 10:43; லூக். 9:46) ஆதியிலிருந்தே தம் தகப்பனுடன் இருந்துவந்ததால் இயேசுவுக்குத் தெரியும்... பெருமை என்ற குணம் யெகோவாவுக்குக் கொஞ்சமும் பிடிக்காது என்று. (2 சா. 22:28; சங். 138:6) அதுமட்டுமல்ல, பிசாசாகிய சாத்தானிடம் அப்படிப்பட்ட குணம் இருந்ததை இயேசு பார்த்திருந்தார். பெருமைபிடித்த அந்த சாத்தான் பதவிக்காகவும் புகழுக்காகவும் வெறிபிடித்து அலைந்தான். அப்படியிருக்க... அதே குணம், கஷ்டப்பட்டு தாம் பயிற்றுவித்த சீடர்களிடம் இன்னமும் ஒட்டிக்கொண்டிருந்ததைப் பார்த்து இயேசு எவ்வளவு வேதனைப்பட்டிருப்பார்! சோகமான விஷயம் என்னவென்றால், அப்போஸ்தலர்களாக அவர் தேர்ந்தெடுத்தவர்களிடமும் அந்தக் குணம் தென்பட்டதுதான்! பூமியில் இயேசுவின் கடைசி மூச்சு அடங்கும்வரை அவர்களிடம் அந்தப் பெருமை குணம் தலைகாட்டியது. (லூக். 22:24-27) இருந்தாலும், இயேசு அவர்கள்மீது கோபப்படாமல் எல்லாச் சமயங்களிலும் கனிவுடன் அவர்களைக் கண்டித்தார். அவர்கள் மீதிருந்த நம்பிக்கையை அவர் இழந்துவிடவில்லை. என்றைக்காவது ஒருநாள்... தம்மைப்போல் தாழ்மையாய் இருக்க அவர்கள் கற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் இருந்தார்.—பிலி. 2:5-8.
13 சீடர்களின் பெருமையைப் பொறுமையாய்த் திருத்திய இயேசுவில் யெகோவாவின் சுபாவத்தை உங்களால் காண முடிகிறதா? திரும்பத் திரும்பத் தவறு செய்தபோதிலும் தம் மக்களை உதறித்தள்ளாத யெகோவாவின் கருணையை இயேசுவின் சொற்களிலும் செயல்களிலும் உங்களால் பார்க்க முடிகிறதா? உயர்ந்த உள்ளம் படைத்த... பொறுமையின் சிகரமான... இப்படிப்பட்ட கடவுளிடம் தவறு செய்யும்போதெல்லாம் மனந்திரும்பி மன்னிப்புக் கேட்க நம் மனம் நம்மைத் தூண்டுகிறதல்லவா?
தகப்பனை வெளிப்படுத்த மகன் விரும்பினார்
14. தகப்பனை வெளிப்படுத்த தாம் விரும்பியதை இயேசு எப்படிக் காட்டினார்?
14 பல ஆட்சியாளர்கள்... மக்களுக்குத் தெரிய வேண்டிய விஷயங்களைச் சொல்லாமல் அவர்களை இருட்டில் வைத்து, அடக்கி ஆள முயற்சி செய்கிறார்கள். அதற்கு மாறாக இயேசு, தம் தகப்பனைப் பற்றி மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினார், அவரைப் பற்றி அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களையெல்லாம் சொன்னார். (மத்தேயு 11:27-ஐ வாசியுங்கள்.) அதோடு, யெகோவா தேவனைப் பற்றிய அறிவை தம் சீடர்கள் பெற்றுக்கொள்வதற்காக அவர்களுக்கு “அறிவுத்திறனை” தந்தார். (1 யோ. 5:20) அதாவது, தகப்பனைப் பற்றி அவர் கற்பித்த விஷயங்களைச் சீடர்கள் புரிந்துகொள்ள அவர்களுடைய மனக்கண்களைத் திறந்தார். தம் தகப்பனைத் திரித்துவம் என்ற புரியாப் புதிருக்குள் மறைத்து அவரைப் பற்றி மக்கள் புரிந்துகொள்ள முடியாதபடி அவர் செய்யவில்லை.
15. தகப்பனைப் பற்றிய சில விஷயங்களைச் சீடர்களிடம் இயேசு ஏன் சொல்லவில்லை?
15 தகப்பனைப் பற்றி அவருக்குத் தெரிந்த எல்லா விஷயங்களையும் இயேசு வெளிப்படுத்தினாரா? இல்லை, அவருக்குத் தெரிந்த எத்தனையோ விஷயங்களை அவர் சொல்லவில்லை. அதற்குக் காரணமும் இருந்தது. (யோவான் 16:12-ஐ வாசியுங்கள்.) என்ன காரணம்? அந்தச் சமயத்தில் சீடர்களால் எல்லாவற்றையும் “புரிந்துகொள்ள முடியாது” என்பதை இயேசு அறிந்திருந்தார். என்றாலும், கடவுளுடைய சக்தியான “சகாயர்” வரும்போது அவர்களுக்குப் பல விஷயங்கள் வெளிப்படுத்தப்படும்... “சத்தியத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள” உதவி கிடைக்கும்... என்று அவர் சொன்னார். (யோவா. 16:7, 13) பிள்ளைகளுக்குப் புரிந்துகொள்ளும் வயது வரும்வரை பெற்றோர் சில விஷயங்களை அவர்களிடம் சொல்லாதிருப்பதுபோல், சீடர்களுக்குப் புரிந்துகொள்ளும் முதிர்ச்சியும் பக்குவமும் வரும்வரை இயேசுவும் தகப்பனைப் பற்றிய சில விஷயங்களை அவர்களிடம் சொல்லாதிருந்தார். சீடர்களின் வரம்புகளை அறிந்து அன்போடு நடந்துகொண்டார்.
இயேசுவைப் போலவே மற்றவர்களுக்கு யெகோவாவை வெளிப்படுத்துங்கள்
16, 17. தகப்பனைப் பற்றி மற்றவர்களுக்குக் கற்பிக்க உங்களால் ஏன் முடிகிறது?
16 ஒருவரோடு நெருங்கிப் பழகி அவருடைய அருமையான குணங்களைத் தெரிந்துகொள்ளும்போது அவரைப் பற்றி பிறரிடம் பேச ஆவலாய் இருப்பீர்கள், அல்லவா? இயேசுவும் அதைத்தான் செய்தார். பூமியில் இருந்தபோது தம் தகப்பனைப் பற்றி மக்களிடம் பேசினார். (யோவா. 17:25, 26) இயேசுவைப் போலவே நாமும் யெகோவாவை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த முடியுமா?
17 நாம் இதுவரை பார்த்தபடி, வேறு யாரையும்விட இயேசு தம் தகப்பனைப் பற்றி ஆழமாய் அறிந்து வைத்திருந்தார். எனவே, அவரைப் பற்றிய சில விஷயங்களைச் சீடர்களோடு பகிர்ந்துகொள்ள விரும்பினார். கடவுளுடைய சுபாவத்தின் பல பரிமாணங்களைப் புரிந்துகொள்வதற்கான அறிவுத்திறனையும் அவர்களுக்குத் தந்தார். தகப்பனைப் பற்றி இன்று எத்தனையோ பேருக்குத் தெரியாத உண்மைகளை இயேசுவின் மூலம் நாம் தெரிந்துகொண்டிருக்கிறோம், அல்லவா? இயேசு தம் போதனைகள் மூலமாகவும் செயல்கள் மூலமாகவும் தகப்பனைத் தெளிவாய் வெளிப்படுத்தியிருப்பதற்கு நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம், அல்லவா? சொல்லப்போனால், யெகோவாவைப் பற்றி அறிந்திருப்பதால் நாம் உண்மையிலேயே பெருமைப்படுகிறோம். (எரே. 9:24; 1 கொ. 1:31) யெகோவாவிடம் நெருங்கிச் செல்ல நாம் முயற்சி எடுத்திருப்பதால் அவரும் நம்மிடம் நெருங்கி வந்திருக்கிறார். (யாக். 4:8) அதனால்தான், நாமும் அவரைப் பற்றி இப்போது மற்றவர்களுக்குக் கற்பிக்க முடிகிறது. அதை எப்படிச் செய்யலாம்?
18, 19. நீங்கள் என்னென்ன விதங்களில் தகப்பனை வெளிப்படுத்தலாம்? விளக்கவும்.
18 நம்முடைய சொல்லாலும் செயலாலும் நாமும் இயேசுவைப் போல் தகப்பனை வெளிப்படுத்த வேண்டும். ஊழியத்தில் நாம் சந்திக்கும் அநேகருக்கு உண்மையான கடவுள் யார் என்றே தெரியாது. பொய்மத போதனைகளால் கடவுளைப் பற்றி அவர்களுக்குத் தவறான கருத்துகள் இருக்கலாம். எனவே, கடவுளுடைய பெயர் என்ன... மனிதர்களுக்காக அவர் என்ன எதிர்காலம் வைத்திருக்கிறார்... அவர் எப்படிப்பட்ட குணம் படைத்தவர்... ஆகியவற்றை பைபிளிலிருந்து அவர்களுக்கு நாம் விளக்கலாம். அதுமட்டுமல்ல, கடவுளுடைய குணங்களைப் புதிய கோணத்தில் புரிந்துகொள்ள உதவும் பைபிள் பதிவுகளை நாம் படித்திருந்தால் அவற்றை நம் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளிடம் பகிர்ந்துகொள்ளலாம். அப்படிச் செய்தால் அவர்களும் பயனடைவார்கள்.
19 இயேசுவைப் போல் நாமும் நமது செயல்கள் மூலம் தகப்பனை வெளிப்படுத்த வேண்டும். கிறிஸ்துவின் அன்பு நம் செயல்களில் வெளிப்படுவதை மக்கள் பார்க்கும்போது யெகோவாவிடமும் இயேசுவிடமும் கவர்ந்திழுக்கப்படுவார்கள். (எபே. 5:1, 2) “நான் கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றுவதுபோல் நீங்கள் என்னுடைய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்” என்று அப்போஸ்தலன் பவுல் உற்சாகப்படுத்தினார். (1 கொ. 11:1) ஆம், நமது செயல்களைப் பார்த்து... யெகோவா எப்படிப்பட்டவர் என்பதைத் தெரிந்துகொள்ள மக்களுக்கு உதவுவதைப் பெரும் பாக்கியமாய்க் கருதுகிறோம்! தகப்பனை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவதில் நாம் எப்போதும் இயேசுவைப் பின்பற்றுவோமாக!