விடுதலை அளிக்கும் கடவுளை வணங்குங்கள்
“நாம் கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதே அவர்மீது அன்பு காட்டுவதாகும்; அவருடைய கட்டளைகள் பாரமானவை அல்ல.”—1 யோ. 5:3.
உங்கள் பதில்?
சாத்தான் எப்படிக் கடவுளுடைய சட்டங்கள் பாரமானவை போல் தோன்றச் செய்கிறான்?
நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் நாம் ஏன் மிகக் கவனமாக இருக்க வேண்டும்?
விடுதலை அளிக்கும் கடவுளுக்கு எப்போதும் உண்மையாயிருக்க நமக்கு எது உதவும்?
1. யெகோவா தம்முடைய சுதந்திரத்தை எப்படிப் பயன்படுத்துகிறார், ஆதாம் ஏவாளுக்கு அவர் எந்தளவு சுதந்திரம் அளித்திருந்தார்?
யெகோவாவுக்கு இருக்கும் சுதந்திரத்திற்கு எல்லையே இல்லை. ஆனால், அவர் அதை ஒருநாளும் தவறாகப் பயன்படுத்துவதில்லை... சின்ன சின்ன விஷயங்களிலெல்லாம் தலையிட்டு தம்முடைய ஊழியர்களைக் கட்டுப்படுத்துவதுமில்லை. மாறாக, சுயமாகத் தீர்மானிக்கும் சுதந்திரத்தை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறார். அதனால், தங்கள் நியாயமான எல்லா ஆசைகளையும் அவர்களால் பூர்த்தி செய்துகொள்ள முடிகிறது. உதாரணத்திற்கு, ஆதாம் ஏவாளுக்குக் கடவுள் ஒரேவொரு நிபந்தனையைத்தான் விதித்தார். அதாவது, “நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்” என்று மட்டுமே சொன்னார். (ஆதி. 2:17) எனவே, தங்கள் படைப்பாளரின் சித்தத்தைச் செய்ய அவர்களுக்கு நிறையச் சுதந்திரம் இருந்தது!
2. கடவுள் தந்த சுதந்திரத்தை நம்முடைய முதல் பெற்றோர் ஏன் இழந்தார்கள்?
2 நம்முடைய முதல் பெற்றோருக்குக் கடவுள் ஏன் அவ்வளவு சுதந்திரம் அளித்திருந்தார்? ஏனென்றால், அவர்களைத் தமது சாயலில் படைத்திருந்தார், அவர்களுக்கு மனசாட்சியைக் கொடுத்திருந்தார். படைப்பாளரான தம்மீது அவர்கள் வைத்திருந்த அன்பு அவர்களை நல்வழியில் நடத்தும் என்று நம்பினார். (ஆதி. 1:27; ரோ. 2:15) ஆனால், தங்கள் அன்பான படைப்பாளரையும் அவர் தந்த சுதந்திரத்தையும் அவர்கள் மதிக்கவில்லை. பதிலாக, அதிக சுதந்திரம் கொடுப்பதாக ஆசைகாட்டிய சாத்தானை நம்பி அவன் வலையில் விழுந்தார்கள். எது சரி, எது தவறு என்பதைத் தாங்களே தீர்மானிக்க துணிந்தார்கள். ஆனால், அவர்கள் எதிர்பார்த்த சுதந்திரம் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. மாறாக, அவர்களும் அவர்களுடைய வருங்கால சந்ததியாரும் பாவத்திற்கும் மரணத்திற்கும் அடிமையானார்கள்.—ரோ. 5:12.
3, 4. சாத்தான் நம்மை எப்படி மூளைச்சலவை செய்ய முயற்சி செய்கிறான்?
3 கடவுளுடைய ஆட்சியை உதறித்தள்ள... பரிபூரணமாகப் படைக்கப்பட்ட இரண்டு மனிதர்களையும் எண்ணற்ற தேவதூதர்களையும் சாத்தான் தூண்டிவிட்டிருக்கிறான் என்றால் நம்மை மட்டும் விட்டுவைப்பானா என்ன? அன்றுமுதல் இன்றுவரை அவனுடைய சூழ்ச்சி முறைகள் மாறவில்லை. கடவுளுடைய நெறிமுறைகள் பாரமானவை, அவற்றைக் கடைப்பிடித்தால் வாழ்க்கையில் நாம் ஜாலியாக இருக்கவே முடியாது என்று நம்மை மூளைச்சலவை செய்ய அவன் முயற்சி செய்கிறான். (1 யோ. 5:3) இன்று உலகில் மக்கள் அப்படித்தான் நினைக்கிறார்கள். அவர்களோடு நாம் சதா பொழுதைக் கழித்தால் நாமும் அவர்களைப் போல் நினைக்க ஆரம்பித்துவிடுவோம். பாலியல் ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்ட 24 வயதுள்ள ஒரு சகோதரி இவ்வாறு சொன்னார்: “நான் மட்டும் வித்தியாசமா இருந்தா எங்கே என் நண்பர்கள் என்னை தப்பா நெனச்சிடுவாங்களோன்னு ரொம்ப பயந்தேன். அவங்ககூட சேர்ந்ததால கெட்டு குட்டிச்சுவரானேன்.” கெட்ட நண்பர்களின் சகவாசத்தால் நீங்களும்கூட பாதிக்கப்பட்டிருக்கலாம்.
4 இதில் சோகம் என்னவென்றால், கிறிஸ்தவ சபைக்குள்ளும் இந்த மாதிரி கெட்ட காரியங்களைச் செய்ய தூண்டுபவர்கள் இருக்கலாம். ஓர் இளம் சகோதரர் சொல்வதைக் கேளுங்கள்: “சபையிலிருந்த என் நண்பர்கள் சிலர் சத்தியத்தில இல்லாதவங்கள காதலிச்சாங்க. அவங்களோட சகவாசம் வச்சுக்கிட்டதால நானும் அவங்கள போலவே ஆயிட்டேன். அது கடைசிலதான் எனக்கே புரிஞ்சுது. யெகோவாவ விட்டு விலகிப் போக ஆரம்பிச்சேன். சபைக் கூட்டங்கள் எனக்குப் ‘போர்’ அடிக்க ஆரம்பிச்சுது, ஊழியத்திற்குப் போகவே பிடிக்கல. ‘இதுக்குமேல இந்த பசங்களோட சகவாசம் வச்சிக்கிட்டா சரிபடாதுன்னு’ என் மனசு சொல்லுச்சு. உடனே அவங்க சகவாசத்தை வெட்டி விட்டுட்டேன்!” கெட்ட சகவாசம் ஓர் ஆளை எந்தளவு நாசமாக்கிவிடலாம் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? நமக்கு உதவியாய் இருக்கும் பைபிள் உதாரணம் ஒன்றை இப்போது பார்ப்போம்.—ரோ. 15:4.
அவர்களுடைய இருதயத்தைக் கவர்ந்தான்
5, 6. மற்றவர்களை அப்சலோம் எப்படி ஏமாற்றினான், அவனுடைய தந்திரம் பலித்ததா?
5 மற்றவர்களைக் கெடுத்தவர்களைப் பற்றிய உதாரணங்கள் பைபிளில் ஏராளம் உள்ளன. அப்படிப்பட்டவர்களில் ஒருவன்தான் அப்சலோம், தாவீது ராஜாவின் மகன். அவன் அழகென்றால் அப்படியொரு அழகு. ஆனால், சாத்தானைப் போல் அவனுடைய மனதுக்குள்ளும் பேராசை தலைதூக்கியது. தன் தந்தையின் சிம்மாசனத்தில் உட்காரத் துடியாய்த் துடித்தான். அரச பீடத்தில் அமரும் உரிமை தனக்கு இல்லை என்பது தெரிந்தும் அதற்காக ஆசைப்பட்டான்.a அரியணையை அபகரிக்கும் வெறியில், இஸ்ரவேலர்மீது தனக்கு ரொம்ப அக்கறை இருப்பது போலவும்... அரசவையில் உள்ள யாருக்குமே அந்தளவுக்கு அக்கறை இல்லாதது போலவும்... கபட நாடகம் ஆடினான். ஏதேன் தோட்டத்தில்... பிசாசு செய்தது போலவே ‘தன்னை நல்லவனாக’ காட்டிக்கொண்டு தன் அப்பாமீது அபாண்டமாகப் பழிசுமத்தினான்.—2 சா. 15:1-5.
6 அப்சலோமின் தந்திரம் பலித்ததா? ஓரளவிற்குப் பலித்தது என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், அப்சலோம் “இஸ்ரவேல் மனுஷருடைய இருதயத்தைக் கவர்ந்துகொண்டான்” என்று பைபிள் சொல்கிறது. (2 சா. 15:6) அப்சலோமின் அகம்பாவத்தால் கடைசியில் அவனுக்குப் பெரிய அடிவிழுந்தது. அதனால், அவனும் அவனுடைய வார்த்தையைக் கேட்டு ஏமாந்துபோன ஆயிரக்கணக்கானோரும் அழிந்தே போனார்கள்.—2 சா. 18:7, 14-17.
7. அப்சலோம் பற்றிய பதிவிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (பக்கம் 14-ல் உள்ள படத்தைப் பாருங்கள்.)
7 அப்சலோமின் பேச்சைக் கேட்ட அந்த இஸ்ரவேலர் எப்படி அவ்வளவு சுலபமாக ஏமாந்து போனார்கள்? ஒருவேளை அப்சலோம் அவர்களுக்குச் செய்வதாகச் சொன்ன காரியங்களுக்கு அவர்களும் ஏங்கியிருக்கலாம். அல்லது அவனது தோற்றத்தைக் கண்டு மயங்கியிருக்கலாம். உண்மை என்னவாக இருந்தாலும் ஒரு விஷயம் மட்டும் நமக்கு நன்றாகத் தெரியும்: யெகோவாவுக்கும் அவர் நியமித்த ராஜாவுக்கும் அவர்கள் உண்மையாக இருக்கவில்லை. இன்றும் யெகோவாவின் ஊழியர்களின் மனதைக் கவர அப்சலோம் போன்ற ஆட்களைச் சாத்தான் பயன்படுத்தி வருகிறான். ‘யெகோவாவின் நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பது ரொம்ப ரொம்பக் கஷ்டம். அவரை வணங்காத ஜனங்களைப் பாருங்கள், எவ்வளவு ஜாலியாக இருக்கிறார்கள்’ என்றெல்லாம் அவர்கள் சொல்லலாம். அதெல்லாம் சுத்தப் பொய் என்பதைப் புரிந்துகொண்டு கடவுளுக்கு எப்போதும் உண்மையாக இருப்பீர்களா? யெகோவாவின் ‘பரிபூரணமான சட்டம்’ மட்டுமே, அதாவது கிறிஸ்துவின் சட்டம் மட்டுமே, உங்களுக்கு உண்மையான விடுதலை அளிக்கும் என்பதைப் புரிந்துகொள்வீர்களா? (யாக். 1:25) அப்படியென்றால், அந்தச் சட்டத்தை நீங்கள் நேசியுங்கள், கிறிஸ்தவராக நீங்கள் பெற்றிருக்கும் சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்த யாரும் எதுவும் உங்களைத் தூண்ட அனுமதிக்காதீர்கள்.—1 பேதுரு 2:16-ஐ வாசியுங்கள்.
8. யெகோவாவின் நெறிமுறைகளை மீறினால் சந்தோஷம் கிடைக்காது என்பதற்குச் சில உதாரணங்களைக் கொடுங்கள்?
8 சாத்தான் முக்கியமாக இளைஞர்களைக் குறிவைக்கிறான். 30 வயதைக் கடந்த ஒரு சகோதரர் பருவ வயதில் தான் செய்த தவறைப் பற்றி இவ்வாறு சொல்கிறார்: “யெகோவாவின் நீதிநெறிகள் என்னைக் கட்டிக்காப்பதாக நான் நெனைக்கல. என்னைக் கட்டிப்போடுவதாகத்தான் நெனைச்சேன்.” அதன் விளைவு, அவர் பாலியல் ஒழுக்கக்கேட்டில் விழுந்துவிட்டார். அது அவருக்குச் சந்தோஷத்தைத் தரவில்லை. “எத்தனையோ வருஷங்கள் ஆன பிறகும் என் மனசாட்சி உறுத்திட்டே இருந்துச்சு. நான் ஏன்தான் அப்படி செஞ்சேனோன்னு நெனச்சு நெனச்சு உள்ளுக்குள்ள புழுங்கினேன்” என்று அவர் சொல்கிறார். பருவ வயதில் தான் செய்த தவறைப் பற்றி ஒரு சகோதரி இவ்வாறு எழுதினார்: “பாலியல் ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்ட பிறகு என்னையே நான் வெறுத்தேன், நான் உயிரோடு இருந்து என்ன பிரயோஜனம்னு நெனச்சேன். அது நடந்து இப்போ 19 வருஷம் ஆயிடுச்சு. இருந்தாலும் அந்தப் பழைய நெனப்பெல்லாம் திரும்பத் திரும்ப கண் முன் வந்து என்னை வாட்டியெடுக்குது.” இன்னொரு சகோதரி இவ்வாறு சொன்னார்: “என்னுடைய தவறால எனக்குப் பிரியமானவங்க எவ்வளவு புண்பட்டாங்க என்பதை நெனைக்கும்போதெல்லாம் என் மனசும் உள்ளமும் வெடிச்சு சிதறுது. கடவுளிடம் இருக்கிற என் பந்தமும் பாதிக்கப்படுகிறது. யெகோவாவுடைய தயவை இழந்து வாழ்வதைப் போன்ற ஒரு கொடுமை வேறெதுவுமே இல்லை.” பாவத்தின் பின்விளைவுகளைப் பற்றியெல்லாம் நாம் யோசித்துப் பார்ப்பதை சாத்தான் விரும்புவதில்லை.
9. (அ) யெகோவாவையும், அவருடைய சட்டங்களையும், நியமங்களையும் நாம் எப்படிக் கருதுகிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்? (ஆ) கடவுளைப் பற்றி முழுமையாய் அறிந்துகொள்வது ஏன் முக்கியம்?
9 உடலின் இச்சைகளுக்கு அடிபணிந்தால் விபரீதமான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதைச் சத்தியத்தில் உள்ள அநேக இளைஞர்களும், ஏன் பெரியவர்களும்கூட பட்டுத்தான் புரிந்திருக்கிறார்கள் என்பது ரொம்ப வருத்தமாக இருக்கிறது! (கலா. 6:7, 8) எனவே, உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என்னைச் சிக்க வைக்க சாத்தான் என்னென்ன தந்திரங்களைப் பயன்படுத்துகிறான் என்பதை நான் புரிந்திருக்கிறேனா? எப்போதும் உண்மையையே பேசுகிற... எப்போதும் நான் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிற... யெகோவாவை என்னுடைய உயிர் நண்பராகக் கருதுகிறேனா? உண்மையிலேயே பிரயோஜனம் அளிக்கக்கூடிய, மிகுந்த சந்தோஷம் தரக்கூடிய ஒன்றை யெகோவா எனக்குக் கொடுக்காமல் இருக்கவே மாட்டார் என்பதை நான் முழுமையாய் நம்புகிறேனா?’ (ஏசாயா 48:17, 18-ஐ வாசியுங்கள்.) இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நீங்கள் சாதகமாகப் பதில் சொல்வதற்கு, யெகோவாவைப் பற்றி முழுமையாய் அறிந்திருக்க வேண்டும். உங்கள் சுதந்திரத்தைப் பறிப்பதற்காக அல்ல, உங்கள்மீது அன்பு வைத்திருப்பதால்தான் பைபிளில் சட்டங்களையும் நியமங்களையும் அவர் கொடுத்திருக்கிறார் என்பதை நீங்கள் புரிந்திருக்க வேண்டும்.—யாக். 4:8.
ஞானமும் கீழ்ப்படிதலும் உள்ள இருதயத்திற்காக ஜெபம் செய்யுங்கள்
10. வாலிபனாய் இருந்த சாலொமோன் ராஜாவைப் பின்பற்ற நாம் ஏன் முயற்சி செய்ய வேண்டும்?
10 சாலொமோன் ஒரு வாலிபனாக இருந்தபோது, ‘நான் போக்கு வரவு அறியாத சிறுபிள்ளையாயிருக்கிறேன்’ என்று யெகோவாவிடம் பணிவாகச் சொன்னார். பின்பு, தனக்கு ஞானமும் கீழ்ப்படிதலும் உள்ள இருதயத்தைக் கொடுக்கும்படி கேட்டார். (1 இரா. 3:7-9, 12) சாலொமோனின் வேண்டுதலுக்கு யெகோவா செவிகொடுத்தார். அதேபோல், உங்களுடைய வேண்டுதலுக்கும் செவிகொடுப்பார்—நீங்கள் சிறியவராக இருந்தாலும் சரி பெரியவராக இருந்தாலும் சரி. ஆனால், யெகோவா உங்களுக்கு அறிவையும் ஞானத்தையும் அற்புதமான விதத்தில் அருள மாட்டார். என்றாலும், நீங்கள் அவருடைய வார்த்தையைக் கருத்தூன்றிப் படித்தால், அவருடைய சக்தியைத் தரும்படி கேட்டால், சபைக் கூட்டங்களில் வழங்கப்படும் ஆன்மீக உணவை முழுமையாகப் பிரயோஜனப்படுத்திக்கொண்டால்... அவர் உங்களுக்கு நிச்சயம் ஞானத்தை அருள்வார். (யாக் 1:5) இந்த வகையில் யெகோவா தமது இளம் ஊழியர்களையும் ஞானமுள்ளவர்களாக ஆக்குகிறார். சொல்லப்போனால், தம்முடைய அறிவுரைகளை அசட்டை செய்பவர்களைவிட... இந்த உலகத்தின் பார்வையில் ‘ஞானிகளாகவும் அறிவாளிகளாகவும்’ இருப்பவர்களைவிட... தமது இளம் ஊழியர்களை அதிக ஞானமுள்ளவர்களாக ஆக்குகிறார்.—லூக். 10:21; சங்கீதம் 119:98-100-ஐ வாசியுங்கள்.
11-13. (அ) சங்கீதம் 26:4, நீதிமொழிகள் 13:20, 1 கொரிந்தியர் 15:33 ஆகியவற்றிலிருந்து என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்? (ஆ) இந்த வசனங்களில் உள்ள நியமங்களை நீங்கள் எப்படிப் பின்பற்றுவீர்கள்?
11 யெகோவாவைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்வதற்கு பைபிளைப் படிப்பதும் படித்தவற்றைத் தியானிப்பதும் மிக மிக முக்கியம். இப்போது சில வசனங்களை சிந்திப்போம். நாம் எப்படிப்பட்ட நண்பர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைக் குறித்து அவை ஒவ்வொன்றிலும் ஒரு முக்கியமான நியமம் உள்ளது: “வீணரோடே நான் உட்காரவில்லை, வஞ்சகரிடத்தில் நான் சேருவதில்லை.” (சங். 26:4) “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.” (நீதி. 13:20) “கெட்ட சகவாசம் நல்ல பழக்கவழக்கங்களைக் கெடுத்துவிடும்.”—1 கொ. 15:33.
12 இந்த வசனங்களிலிருந்து என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்? (1) நண்பர்களை நாம் கவனமாய்த் தேர்ந்தெடுக்க வேண்டுமென யெகோவா விரும்புகிறார். நமக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய... அவரிடம் நமக்குள்ள பந்தத்திற்குப் பங்கம் விளைவிக்கக்கூடிய... எந்தவொரு காரியத்தையும் செய்யாதபடி நம்மைப் பாதுகாக்க விரும்புகிறார். (2) நண்பர்கள் நம்மை நல்ல வழியிலோ கெட்ட வழியிலோ நடத்தலாம் என்பது நிதர்சனமான உண்மை. மேலே குறிப்பிடப்பட்ட வசனங்கள் நம்மைச் செயல்படத் தூண்டும் விதத்தில் எழுதப்படும்படி யெகோவா செய்திருக்கிறார். எப்படி? எந்த வசனமும் “நீ இப்படிச் செய்யாதே... அப்படிச் செய்யாதே” என்று கட்டளையிடும் பாணியில் எழுதப்படவில்லை என்பதைக் கவனியுங்கள். மாறாக, அவை உண்மையைத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. ஒருவிதத்தில், ‘இதுதான் உண்மை, நீ என்ன செய்யப் போகிறாய்? உன் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது?’ என்று யெகோவா நம்மிடம் கேட்பது போல்தான் அந்த வசனங்கள் உள்ளன.
13 அந்த மூன்று வசனங்களும் உண்மைகளை உரித்து வைப்பதால், காலத்தால் அழியாதவை, பல சந்தர்ப்பங்களுக்குப் பொருந்தக்கூடியவை. உதாரணத்திற்கு, இதுபோன்ற கேள்விகளை உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்: ‘வஞ்சகரோடு’ பழகுவதை நான் எப்படித் தவிர்க்கலாம்? என்ன மாதிரியான சந்தர்ப்பங்களில் அப்படிப்பட்டவர்களோடு நான் பழக நேரலாம்? (நீதி. 3:32; 6:12) நான் “ஞானிகளோடு” பழக வேண்டும் என்று யெகோவா சொல்லும்போது யாரை ஞானிகள் என்று குறிப்பிடுகிறார்? அதேபோல், நான் மூடர்களோடு பழகுவதைத் தவிர்க்கும்படி அவர் சொல்லும்போது யாரை மூடர்கள் என்று குறிப்பிடுகிறார்? (சங். 111:10; 112:1; நீதி. 1:7) கெட்டவர்களின் சகவாசம் என்னிடம் உள்ள என்ன “நல்ல பழக்கவழக்கங்களை” கெடுத்துவிடும்? உலகத்தார் மத்தியில்தான் கெட்ட நண்பர்கள் இருப்பார்களா? (2 பே. 2:1-3) இந்தக் கேள்விகளுக்கு நீங்கள் எப்படிப் பதில் அளிப்பீர்கள்?
14. குடும்ப வழிபாட்டிலிருந்து நீங்கள் இன்னும் எப்படி அதிக பிரயோஜனம் அடையலாம்?
14 நீங்களோ உங்கள் குடும்பத்தாரோ முக்கியமாகக் கருதும் சில விஷயங்களில் கடவுளுடைய கண்ணோட்டத்தைத் தெரிந்துகொள்ள விரும்பலாம். அவற்றோடு சம்பந்தப்பட்ட வசனங்களை இதேபோல் நீங்கள் ஏன் ஆராய்ந்து பார்க்கக்கூடாது?b பெற்றோர்களே, இந்த விஷயங்களைக் குறித்து உங்கள் குடும்ப வழிபாட்டின்போது சிந்திப்பதற்கு முயற்சி செய்யுங்கள். அப்படிச் சிந்திக்கும்போது... கடவுள் நம்மை நெஞ்சார நேசிப்பதால்தான் சட்டங்களையும் நியமங்களையும் கொடுத்திருக்கிறார் என்பதைக் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள உதவுவதே உங்கள் குறிக்கோளாய் இருக்க வேண்டும். (சங். 119:72) சொல்லப்போனால், அப்படிக் குடும்பமாக உட்கார்ந்து படிக்கும்போது நீங்கள் எல்லாருமே யெகோவாவிடம் நெருங்கி வருவீர்கள், நீங்களும் ஒருவருக்கொருவர் நெருங்கி வருவீர்கள்.
15. ஞானமும் கீழ்ப்படிதலும் உள்ள இருதயம் உங்களுக்கு இருக்கிறதா என்று எப்படித் தெரிந்துகொள்ள முடியும்?
15 ஞானமும் கீழ்ப்படிதலும் உள்ள இருதயம் உங்களுக்கு இருக்கிறதா என்று எப்படித் தெரிந்துகொள்ள முடியும்? ஒரு வழி... தாவீது ராஜாவைப் போல கடவுளுக்கு உண்மையாய் வாழ்ந்தவர்களின் எண்ணத்துடன் நம் எண்ணம் ஒத்திருக்கிறதா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். ‘என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது’ என்று அவர் எழுதினார். (சங். 40:8) அதேபோல், ‘உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள்முழுதும் அது என் தியானம்’ என்று 119-வது சங்கீதத்தை எழுதியவர் சொன்னார். (சங். 119:97) கடவுளுடைய வார்த்தையின் மீது அப்படிப்பட்ட பிரியத்தை, அதாவது அன்பை, நாம் வளர்த்துக்கொள்ள கடினமாய் முயற்சி செய்ய வேண்டும். பைபிளை ஆழமாய்ப் படித்து, ஜெபம் செய்து, தியானிக்கும்போது அந்த அன்பு வளரும். கடவுளுடைய நெறிமுறைகளைப் பின்பற்றி நிறைய ஆசீர்வாதங்களை அனுபவிக்கும்போதும் அது வளரும்.—சங். 34:8.
பெற்ற சுதந்திரத்தைத் தக்க வைத்துக்கொள்ளுங்கள்!
16. நாம் பெற்றிருக்கும் சுதந்திரத்தைத் தக்க வைத்துக்கொள்வதற்கு நாம் எதை மனதில் வைக்க வேண்டும்?
16 சுதந்திரம் பெறுவதற்காகத் தேசங்கள் காலங்காலமாக எத்தனையோ கொடூரமான போர்களை நடத்தியிருக்கின்றன என்றால், கிறிஸ்தவராக நீங்கள் பெற்றிருக்கும் சுதந்திரத்தைத் தக்க வைத்துக்கொள்வதற்காக இன்னும் எந்தளவு போராட வேண்டும்? சாத்தானையும், இந்த உலகத்தையும், அதன் மோசமான மனப்போக்கையும் நீங்கள் எதிர்த்துப் போரிட்டால் மட்டுமே போதாது. உங்கள் அபூரணத்தோடும், திருக்குள்ள, வஞ்சகமான இருதயத்தோடும் நீங்கள் போராட வேண்டும் என்பதை மனதில் வையுங்கள். (எரே. 17:9; எபே. 2:3) இருந்தாலும், யெகோவாவின் உதவியோடு இந்தப் போராட்டத்தில் நீங்கள் வெற்றி பெற முடியும். நீங்கள் ஒவ்வொரு முறை வெற்றி பெறும்போதும்—அது சிறியதாக இருந்தாலும் சரி பெரியதாக இருந்தாலும் சரி—இரண்டு நன்மைகளாவது விளைகின்றன. முதலாவதாக, நீங்கள் யெகோவாவின் இருதயத்தைச் சந்தோஷப்படுத்துகிறீர்கள். (நீதி. 27:11) இரண்டாவதாக, ‘விடுதலை அளிக்கும் பரிபூரணமான சட்டத்தால்’ விளையும் நன்மைகளை ருசிக்கும்போது வாழ்வுக்கு வழிநடத்தும் ‘இடுக்கமான பாதையைவிட்டு’ விலகாதிருக்க மேலும் உறுதி பெறுகிறீர்கள். தமக்கு உண்மையாய் இருப்பவர்களுக்கு யெகோவா வாக்குறுதி அளித்திருக்கும் மாபெரும் விடுதலையை எதிர்காலத்தில் பெறுவீர்கள்.—யாக். 1:25; மத். 7:13, 14.
17. நம்முடைய அபூரணத்தை நினைத்து நாம் ஏன் இடிந்துபோய் உட்கார்ந்துவிடக் கூடாது, யெகோவா நமக்கு எப்படி உதவி செய்கிறார்?
17 உண்மைதான், நாம் எல்லாருமே சில சமயங்களில் தவறு செய்கிறோம். (பிர. 7:20) அதற்காக, ‘நான் எதற்கும் லாயக்கில்லை’ என்று நினைக்க வேண்டியதில்லை அல்லது இடிந்துபோய் உட்கார்ந்துவிட வேண்டியதில்லை. நீங்கள் தவறு செய்திருந்தால் அதைத் திருத்திக்கொள்ள என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள். தேவைப்பட்டால் மூப்பர்களிடம் உதவி கேளுங்கள். “விசுவாசத்தோடு ஏறெடுக்கப்படுகிற ஜெபம் சுகமில்லாதவனைச் சுகப்படுத்தும், யெகோவா அவனை எழுந்திருக்கச் செய்வார். அதோடு, அவன் பாவங்கள் செய்திருந்தால், அவற்றை அவர் மன்னிப்பார்” என்று யாக்கோபு எழுதினார். (யாக். 5:15) கடவுள் கருணை உள்ளம் படைத்தவர் என்பதையும்... உங்களிடம் உள்ள ஏதோவொரு நல்லதைப் பார்த்து சபைக்குள் ஈர்த்திருக்கிறார் என்பதையும்... ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். (சங்கீதம் 103:8, 9-ஐ வாசியுங்கள்.) எனவே, நீங்கள் யெகோவாவுக்கு முழு இருதயத்தோடு உத்தமமாய்ச் சேவை செய்யும்வரை அவர் உங்களைக் கைவிடவே மாட்டார்.—1 நா. 28:9.
18. யோவான் 17:15-ல் காணப்படும் இயேசுவின் ஜெபத்திற்கு இசைவாக நாம் எப்படி நடக்க வேண்டும்?
18 அது பூமியில் இயேசுவின் கடைசி இரவு. தமக்கு உண்மையாயிருந்த 11 அப்போஸ்தலர்களுடன் சேர்ந்து அவர் உருக்கமாக ஜெபம் செய்தபோது, ‘பொல்லாதவனிடமிருந்து இவர்களைப் பாதுகாக்கும்படி’ கடவுளிடம் வேண்டிக்கொண்டார். (யோவா. 17:15) இயேசு தமது அப்போஸ்தலர்களிடம் மட்டுமே அப்படிப்பட்ட அக்கறையைக் காட்டவில்லை. நம்மிடமும் காட்டுகிறார். எனவே, இயேசு வேண்டிக்கொண்டபடி இந்தக் கொடிய காலங்களில் வாழும் நம்மையும் யெகோவா நிச்சயம் பாதுகாப்பார். “உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அவர் [யெகோவா] கேடகமாயிருக்கிறார். . . . தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார்.” (நீதி. 2:7, 8) உண்மைதான், உத்தமமாய் இருப்பது அவ்வளவு ஒன்றும் சுலபமில்லை. ஆனால், முடிவில்லா வாழ்வையும் உண்மையான சுதந்திரத்தையும் பெறுவதற்கு அதுதான் ஒரே வழி. (ரோ. 8:21) எனவே, யாரும் உங்களைத் திசைதிருப்ப அனுமதிக்காதீர்கள்!
[அடிக்குறிப்புகள்]
a அப்சலோம் பிறந்த பின்புதான்... தாவீதின் சிம்மாசனத்தில் உட்கார அவருக்கு ஒரு சந்ததியை, அதாவது ஒரு மகனை அளிக்கப்போவதாக யெகோவா வாக்குறுதி அளித்தார். எனவே, தாவீதின் சிம்மாசனத்தில் உட்கார யெகோவா தன்னைத் தேர்ந்தெடுக்கவில்லை என்பதை அப்சலோம் அறிந்திருக்க வேண்டும்.—2 சா. 3:3; 7:12.
b உதாரணத்திற்கு, 1 கொரிந்தியர் 13:4-8-ல் அன்பைப் பற்றி பவுல் விவரிப்பதை ஆராய்ந்து பார்க்கலாம். கடவுளுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தால் கிடைக்கும் ஆசீர்வாதங்களை விளக்கும் சங்கீதம் 19:7-11-ஐயும் சிந்திக்கலாம்.
[பக்கம் 14-ன் படங்கள்]
அப்சலோம் போன்ற ஆட்களை நாம் எப்படிக் கண்டுகொள்ளலாம், அவர்களிடமிருந்து நம்மை எப்படிப் பாதுகாத்துக்கொள்ளலாம்?