முழு இருதயத்தோடு உண்மையுள்ளவர்களாய் நிலைத்திருங்கள்
“நான் உமது சத்தியத்திலே நடப்பேன்; நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்.”—சங். 86:11.
1, 2. (அ) சோதனைகளோ சபலங்களோ வரும்போது நாம் யெகோவாவுக்கு உண்மையுள்ளவர்களாய் இருக்க எது உதவுமென்று சங்கீதம் 86:2, 11 தெரிவிக்கிறது? (ஆ) முழு இருதயத்தோடு யெகோவாவுக்கு உண்மையுள்ளவர்களாய் இருக்க எப்போதே உறுதிபூண்டிருப்பது முக்கியம்?
சிறைவாசம் அல்லது துன்புறுத்தல் மத்தியிலும் பல வருடங்களாக உண்மையோடு சகித்திருந்த கிறிஸ்தவர்கள் சிலர், பின்பு பொருளாசையில் விழுந்திருக்கிறார்கள். ஏன்? இதற்கான பதில், நம் இருதயத்தைப் பொறுத்திருக்கிறது. உண்மைத்தன்மைக்கும் ஒருமுகப்படுத்தப்பட்ட இருதயத்திற்கும், அதாவது பிளவுபடாத முழு இருதயத்திற்கும், சம்பந்தம் இருப்பதை 86-ஆம் சங்கீதம் காட்டுகிறது. “என் ஆத்துமாவைக் காத்தருளும், நான் பக்தியுள்ளவன் [“உண்மையுள்ளவன்,” NW]; என் தேவனே, உம்மை நம்பியிருக்கிற உமது அடியேனை நீர் இரட்சியும்” என்று தாவீது ஜெபம் செய்தார். “கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்; நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்” என்றும் அவர் வேண்டினார்.—சங். 86:2, 11.
2 முழு இருதயத்தோடு நாம் யெகோவாமீது நம்பிக்கை வைக்காவிட்டால், பிற நாட்டங்களும் வசீகரங்களும் அவர் மீதுள்ள நம் உண்மைத்தன்மையைப் பலவீனப்படுத்திவிடலாம். இதுபோன்ற தன்னல ஆசைகள், நாம் நடந்துசெல்லும் பாதையில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகளைப் போன்றவை. நாம் ஒருவேளை பலவித சோதனைகளில் உண்மையுள்ளவர்களாய் நிலைத்து இருந்திருக்கலாம்; என்றாலும், சாத்தானுடைய கண்ணிகளில் சிக்கிவிட வாய்ப்புண்டு. ஆகவே, இதுபோன்ற சோதனைகளிலோ சபலங்களிலோ நாம் சிக்கிவிடுவதற்குமுன், இப்போதே முழு இருதயத்தோடு யெகோவாவுக்கு உண்மையுள்ளவர்களாய் இருக்க உறுதிபூண்டிருப்பது எவ்வளவு முக்கியம்! அதனால்தான், “எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 4:23) இது சம்பந்தமாக, யெரொபெயாம் ராஜாவிடம் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசியின் அனுபவத்திலிருந்து மிக முக்கியமான பாடங்களை நாம் கற்றுக்கொள்ளலாம்.
“உனக்கு வெகுமானம் தருவேன்”
3. கடவுளுடைய தீர்க்கதரிசி நியாயத்தீர்ப்புச் செய்தியை அறிவித்தபோது யெரொபெயாம் என்ன செய்தார்?
3 இந்தக் காட்சியை உங்கள் மனத்திரையில் சற்று ஓடவிடுங்கள்: பத்துக் கோத்திர வடக்கு ராஜ்யத்தில் கன்றுக்குட்டி வழிபாட்டை யெரொபெயாம் ராஜா ஆரம்பித்திருக்கிறார்; அவரிடம் தேள்கொட்டுவது போன்ற செய்தி ஒன்றைத் தேவனுடைய மனுஷன் அப்போதுதான் அறிவித்திருக்கிறார். கோபத்தில் ராஜா சீறுகிறார். ‘அவனைப் பிடியுங்கள்!’ என்று தன் ஆட்களுக்குக் கட்டளையிடுகிறார். ஆனால் யெகோவா அந்தத் தீர்க்கதரிசிக்குத் துணைநிற்கிறார். உடனடியாக, ராஜா நீட்டிய கை முடக்க முடியாதவாறு சூம்பிவிடுகிறது; அந்தப் பலிபீடமும் வெடித்து இரண்டாகப் பிளந்துவிடுகிறது. புலியாகப் பாய்ந்த யெரொபெயாம் சட்டெனப் பூனையாக மாறிவிடுகிறார். “நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சமுகத்தை நோக்கி வேண்டிக்கொண்டு, என் கை முன்போலிருக்கும்படிக்கு எனக்காக விண்ணப்பம்பண்ண வேண்டும்” என்று கெஞ்சுகிறார்; அந்தத் தீர்க்கதரிசியும் விண்ணப்பம் செய்கிறார், ராஜாவின் கை சரியாகிவிடுகிறது.—1 இரா. 13:1–6.
4. (அ) ராஜா வழங்கவிருந்த வெகுமானம் தீர்க்கதரிசியின் உண்மைத்தன்மைக்குப் பெரும் சோதனையாக இருந்தது ஏன்? (ஆ) தீர்க்கதரிசி என்ன பதில் சொன்னார்?
4 அதன்பிறகு, யெரொபெயாம் ராஜா தேவனுடைய மனுஷனிடம், “நீ என்னோடேகூட வீட்டுக்கு வந்து இளைப்பாறு; உனக்கு வெகுமானம் தருவேன்” என்கிறார். (1 இரா. 13:7) இப்பொழுது தீர்க்கதரிசி என்ன செய்வார்? தான் கண்டனத்தீர்ப்புச் செய்தியை அறிவித்ததால் ராஜாவின் உபசரிப்பை உதறித்தள்ளுவாரா? (சங். 119:113) அல்லது, ராஜாவின் மனம் மாறியதுபோல் தெரிந்ததால் அவரது அழைப்பை ஏற்றுக்கொள்வாரா? நண்பர்களுக்குப் பரிசுப் பொருள்களை வாரிவழங்கும் அளவுக்கு யெரொபெயாமிடம் ஏராளமான செல்வம் கொட்டிக்கிடக்கிறது. அப்படியிருக்க, தீர்க்கதரிசியின் உள்ளத்தில் துளியளவு பொருளாசை இருந்ததென்றாலும்கூட, ராஜாவின் வெகுமானம் அவருக்குப் பெரும் சோதனையாகவே இருக்கும். ஆனால், “நீ அப்பம் புசியாமலும், தண்ணீர் குடியாமலும், போனவழியாய்த் திரும்பாமலும் இரு” என்று யெகோவா ஏற்கெனவே அவரிடம் கட்டளையிட்டிருக்கிறார். ஆகவே, “நீர் எனக்கு உம்முடைய வீட்டில் பாதி கொடுத்தாலும், நான் உம்மோடே வருவதுமில்லை, இந்த ஸ்தலத்தில் அப்பம் புசிப்பதுமில்லை, தண்ணீர் குடிப்பதுமில்லை” என்று தீர்க்கதரிசி திட்டவட்டமாகச் சொல்கிறார். பின்னர் பெத்தேலிலிருந்து வேறு வழியாகத் திரும்புகிறார். (1 இரா. 13:8–10) தீர்க்கதரிசி எடுத்த தீர்மானத்திலிருந்து, இருதயப்பூர்வமான உண்மைத்தன்மையைக் குறித்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம்?—ரோ. 15:4.
‘போதுமென்றிருங்கள்’
5. பொருளாசை நம் உண்மைத்தன்மைக்குச் சோதனையாக இருப்பது எவ்வாறு?
5 பொருளாசை நம் உண்மைத்தன்மைக்குச் சோதனையாக இல்லாததுபோல் தோன்றலாம், ஆனால் அது சோதனையாகவே இருக்கிறது. நமக்குத் தேவையானவற்றைத் தருவதாக யெகோவா அளித்திருக்கும் வாக்குறுதியை நாம் நம்புகிறோமா? (மத். 6:33; எபி. 13:5) தற்போது நினைத்துக்கூடப் பார்க்க முடியாத சில “நல்ல” பொருள்களை உடனே பெற வேண்டுமெனத் துடிப்பதற்குப் பதிலாக, அவை இல்லாமலேயே நம்மால் வாழ முடியுமா? (பிலிப்பியர் 4:11–13-ஐ வாசியுங்கள்.) சபை மற்றும் ஊழியம் சம்பந்தப்பட்ட காரியங்களை ஓரங்கட்டிவிட நினைக்கிறோமா? யெகோவாவுக்கு உண்மையாகச் செய்ய வேண்டிய சேவையை நாம் முதலிடத்தில் வைக்கிறோமா? கடவுளுக்கு முழு இருதயத்தோடு நாம் சேவை செய்கிறோமா இல்லையா என்பதைப் பொறுத்தே இவற்றுக்கு நாம் பெரும்பாலும் பதிலளிப்போம். ஏனெனில், “போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம். உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்” என்று பவுல் அறிவுரை கூறியுள்ளார்.—1 தீ. 6:6–8.
6. நமக்கு என்ன “வெகுமானம்” கொடுக்கப்படலாம், அதை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க எது உதவும்?
6 உதாரணமாக, நாம் வேலை பார்க்குமிடத்தில் கூடுதல் சம்பளத்தோடும் பிற சலுகைகளோடும் பதவி உயர்வு தருவதாக மேலதிகாரி சொல்லலாம். வேலைதேடி வெளி நாட்டிற்குச் சென்றால் எக்கச்சக்கமாகச் சம்பாதிக்கலாம் என்று நாம் ஒருவேளை நினைக்கலாம். முதலில், இவையெல்லாம் யெகோவா தரும் ஆசீர்வாதங்களென்றே தோன்றலாம். ஆனால், தீர்மானத்தை எடுப்பதற்குமுன், நம்முடைய உள்நோக்கம் என்ன என்பதை நாம் ஆராய்ந்துபார்க்க வேண்டும், அல்லவா? ஆகவே, “நான் எடுக்கும் தீர்மானம் யெகோவாவுடன் எனக்கிருக்கும் பந்தத்தைப் பலப்படுத்துமா, பலவீனப்படுத்துமா?” என்ற முக்கியமான கேள்வியை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும்.
7. பொருளாசையைக் களைந்தெறிவது ஏன் முக்கியம்?
7 சாத்தானின் உலகம் பொருளாசையையே சதா தூண்டிவிடுகிறது. (1 யோவான் 2:15, 16-ஐ வாசியுங்கள்.) நம் இருதயத்தைக் கெடுக்க வேண்டுமென்பதே பிசாசின் நோக்கம். ஆகவே, நம் இருதயத்தில் பொருளாசை துளிர்க்கிறதா என்று கண்டறியவும், அப்படி இருந்தால் அதைக் களைந்தெறியவும் படுகவனமாக இருக்க வேண்டும். (வெளி. 3:15–17) இந்த உலகின் சகல ராஜ்யங்களையும் தர சாத்தான் முன்வந்தபோது, அதை இயேசு உடனடியாக மறுத்துவிட்டார். (மத். 4:8-10) “பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல” என்று அவர் சொன்னார். (லூக். 12:15) நாம் உண்மையுள்ளவர்களாய் இருந்தோமென்றால், நம்மீது நம்பிக்கை வைக்க மாட்டோம், மாறாக யெகோவாமீது நம்பிக்கை வைப்போம்.
‘பொய் சொன்ன’ தீர்க்கதரிசி
8. தேவனுடைய தீர்க்கதரிசியின் உண்மைத்தன்மை எவ்வாறு சோதிக்கப்பட்டது?
8 தேவனுடைய தீர்க்கதரிசி எங்கும் நிற்காமல் தன் வீட்டை நோக்கிப் போயிருந்தாரென்றால் எந்தப் பிரச்சினையும் வந்திருக்காது. ஆனால், சீக்கிரத்திலேயே அவர் மற்றொரு சோதனையைச் சந்திக்க நேர்ந்தது. ‘கிழவனான ஒரு தீர்க்கதரிசி பெத்தேலிலே குடியிருந்தார்’; அன்றைய தினம் நடந்த எல்லா விஷயங்களையும் ‘அவருடைய குமாரர் வந்து தங்கள் தகப்பனுக்கு அறிவித்தார்கள்’ என்று பைபிள் குறிப்பிடுகிறது. அதைக் கேட்ட அந்தத் தீர்க்கதரிசி, தேவனுடைய தீர்க்கதரிசியைச் சந்திப்பதற்கு, கழுதையின்மேல் சேணம்வைத்துக் கொடுக்கச் சொல்கிறார். பின்பு சீக்கிரத்திலேயே தேவனுடைய தீர்க்கதரிசியைக் கண்டுபிடித்துவிடுகிறார்; ஒரு பெரிய மரத்தடியில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த அவரிடம், “என்னோடே வீட்டுக்கு வந்து அப்பம் புசியும்” என்று அழைக்கிறார். அதற்குத் தேவனுடைய தீர்க்கதரிசி மறுப்புத் தெரிவித்தபோது, அந்த வயதான தீர்க்கதரிசி, ‘உம்மைப்போல நானும் தீர்க்கதரிசிதான்; அவன் அப்பம் புசித்துத் தண்ணீர் குடிக்க, நீ அவனைத் திருப்பி, உன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டுவா என்று ஒரு தூதன் கர்த்தருடைய வார்த்தையாக என்னோடே சொன்னார்’ என்று கூறுகிறார்; ஆனால், ‘அவரிடத்தில் பொய் சொன்னார்’ என்று வசனம் சொல்கிறது.—1 இரா. 13:11–18.
9. நயவஞ்சகர்களைப்பற்றி பைபிள் என்ன சொல்கிறது, அவர்கள் யாருக்குத் தீங்கு விளைவிக்கிறார்கள்?
9 வயதான தீர்க்கதரிசி என்ன உள்நோக்கத்தோடு இப்படிச் செய்தாரென்று நமக்குத் தெரியாது; என்றாலும், அவர் சொன்னது பொய்யே. ஒருவேளை, அந்த வயதான தீர்க்கதரிசி ஒரு காலத்தில் யெகோவாவுக்கு உண்மையுள்ளவராக இருந்திருக்கலாம். ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தில் அவர் கபடநாடகம் ஆடினார். இந்தச் செயலை பைபிள் வன்மையாகக் கண்டிக்கிறது. (நீதிமொழிகள் 6:16, 17-ஐ வாசியுங்கள்.) இப்படிப்பட்ட நயவஞ்சகர்கள் ஆன்மீக ரீதியில் தங்களுக்கே கேடு விளைவித்துக்கொள்வதோடு பெரும்பாலும் மற்றவர்களுக்கும் தீங்கு விளைவிக்கிறார்கள்.
வயதான தீர்க்கதரிசியோடே ‘திரும்பிப் போனார்’
10. வயதான தீர்க்கதரிசி அழைத்தபோது தேவனுடைய தீர்க்கதரிசி என்ன செய்தார், அதன் விளைவு என்ன?
10 வயதான தீர்க்கதரிசியின் கபடநாடகத்திற்குப் பின்னால் என்ன இருந்திருக்கலாமென்று தேவனுடைய தீர்க்கதரிசி பலமுறை யோசித்துப் பார்த்திருக்க வேண்டும். ‘முற்றிலும் வித்தியாசமான ஒரு செய்தியை என்னிடம் சொல்லும்படி இன்னொருவரிடம் தம் தூதரை யெகோவா அனுப்பியிருப்பாரா?’ என்று அவர் யோசித்துப் பார்த்திருக்கலாம். யெகோவாவிடமே கேட்டு இதைத் தெளிவுபடுத்தியிருக்கலாம்; ஆனால் அவர் அப்படிச் செய்ததாக பைபிள் குறிப்பிடுவதில்லை. மாறாக, ‘அவர் இவரோடே திரும்பிப் போய், இவர் வீட்டிலே அப்பம் புசித்துத் தண்ணீர் குடித்தார்.’ அது யெகோவாவுக்குப் பிடிக்கவில்லை. கடைசியில், வஞ்சிக்கப்பட்ட தீர்க்கதரிசி யூதாவுக்குத் திரும்பிச் செல்கிற வழியில், ஒரு சிங்கம் அவரைக் கொன்றுபோட்டது. அந்தத் தீர்க்கதரிசிக்கு ஏற்பட்ட சோக முடிவைப் பாருங்கள்!—1 இரா. 13:19–25.a
11. அகியா என்ன நல்ல முன்மாதிரி வைத்தார்?
11 மறுபட்சத்தில், யெரொபெயாமை ராஜாவாக அபிஷேகம் செய்வதற்கு அனுப்பப்பட்ட அகியா தீர்க்கதரிசி, தள்ளாத வயதிலும் யெகோவாவுக்கு உண்மையுள்ளவராய் இருந்தார். முதிர்வயதானவராய், கண்தெரியாமல்போயிருந்த அவரிடம், நோய்வாய்ப்பட்டிருந்த மகன் பிழைப்பானா மாட்டானா என்று விசாரித்து வரும்படி யெரொபெயாம் தன் மனைவியை அனுப்பினார். அப்போது, யெரொபெயாமின் மகன் செத்துப்போவான் என்று அவர் தைரியமாகச் சொன்னார். (1 இரா. 14:1–18) அவர் உண்மையுள்ளவராய் இருந்ததால் அநேக ஆசீர்வாதங்களைப் பெற்றார்; கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எழுதப்பட்டவற்றில் அவருடைய எழுத்துகளும் இடம்பெற்றன. எப்படி? அகியா எழுதியவற்றைப் பயன்படுத்தி, பிற்பாடு ஆசாரியனாகிய எஸ்றா பைபிளின் ஒரு பகுதியை எழுதினார்.—2 நா. 9:29.
12-14. (அ) தேவனுடைய தீர்க்கதரிசியின் விஷயத்திலிருந்து என்ன பாடத்தை நாம் கற்றுக்கொள்கிறோம்? (ஆ) மூப்பர்கள் தரும் பைபிள் ஆலோசனைக்கு ஜெபசிந்தையோடு கவனம் செலுத்துவது ஏன் அவசியம் என்பதற்கு உதாரணம் தருக.
12 தேவனுடைய தீர்க்கதரிசி, புசித்துக் குடிப்பதற்காக அந்த வயதான தீர்க்கதரிசியோடு போவதற்கு முன் யெகோவாவிடம் விசாரிக்காதது ஏன் என பைபிள் சொல்வதில்லை. ஒருவேளை, அவர் கேட்க விரும்பியதையே வயதான தீர்க்கதரிசி அவரிடம் சொன்னதாலா? இதிலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம்? யெகோவா எதிர்பார்க்கும் காரியங்கள் சரியானவையே என்பதை நாம் முழுமையாக நம்ப வேண்டும். என்ன வந்தாலும் சரி, அவற்றைக் கடைப்பிடிக்கத் தீர்மானமாய் இருக்கவும் வேண்டும்.
13 ஆலோசனையைப் பொறுத்தவரை, தாங்கள் விரும்புவதையே யாராவது சொன்னால் சிலர் அதை ஏற்றுக்கொள்கிறார்கள். உதாரணமாக, ஒரு பிரஸ்தாபிக்குக் கிடைக்கிற வேலை, குடும்பத்திற்காகவும் ஆன்மீகக் காரியங்களுக்காகவும் அவர் செலவிடுகிற நேரத்தையெல்லாம் உறிஞ்சிவிடலாம். இதுபற்றி ஒரு மூப்பரிடம் அவர் ஆலோசனை கேட்கலாம். ‘உங்கள் குடும்பத்தை எப்படிக் கவனித்துக்கொள்வது என்பதைச் சொல்கிற நிலையில் நான் இல்லையே’ என்று அந்த மூப்பர் முதலில் சொல்லலாம் அதன் பிறகு, அந்த வேலையை ஏற்றுக்கொள்வதால் ஆன்மீக ரீதியில் என்னென்ன ஆபத்துகள் வரலாம் என்று அவர் அந்தப் பிரஸ்தாபியிடம் சொல்லலாம். அந்த மூப்பர் முதலில் சொன்னதற்கு மட்டும் அவர் முக்கியத்துவம் கொடுப்பாரா, அல்லது அதையடுத்துச் சொன்ன ஆலோசனைகளுக்கும் கவனம் செலுத்துவாரா? தெளிவாகவே, ஆன்மீக ரீதியில் தனக்கு எது மிகச் சிறந்தது என்பதை அந்தப் பிரஸ்தாபிதான் தீர்மானிக்க வேண்டும்.
14 இன்னொரு சூழ்நிலையையும் கற்பனை செய்துபாருங்கள். சத்தியத்தில் இல்லாத கணவரை விட்டுப் பிரிந்துசெல்ல வேண்டுமா வேண்டாமா என ஒரு சகோதரி மூப்பரிடம் கேட்கலாம். இந்த விஷயத்தில் அந்தச் சகோதரிதான் தீர்மானம் எடுக்க வேண்டுமென அந்த மூப்பர் சொல்வார் என்பதில் சந்தேகமில்லை. பின்பு, இதுகுறித்து பைபிள் சொல்கிற புத்திமதியை அந்தச் சகோதரிக்கு அவர் எடுத்துச் சொல்லலாம். (1 கொ. 7:10–16) அந்த மூப்பர் சொல்கிற ஆலோசனைக்கு அந்தச் சகோதரி போதிய கவனம் செலுத்துவாரா? அல்லது தன் கணவரை விட்டுப் பிரிவதற்கு ஏற்கெனவே முடிவு செய்துவிட்டாரா? பைபிளிலிருந்து கொடுக்கப்படுகிற ஆலோசனையை ஜெபத்தோடு சிந்தித்துப் பார்த்துத் தீர்மானம் எடுப்பது ஞானமான காரியமாகும்.
பணிவுடன் இருங்கள்
15. தேவனுடைய தீர்க்கதரிசி செய்த தவறிலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம்?
15 தேவனுடைய தீர்க்கதரிசி செய்த தவறிலிருந்து நாம் வேறு என்ன பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம்? “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிரு” என்று நீதிமொழிகள் 3:5 கூறுகிறது. தேவனுடைய தீர்க்கதரிசி அதுவரை யெகோவாமீது நம்பிக்கை வைத்தே எல்லாவற்றையும் செய்தார், இப்போதோ சுயமாகத் தீர்மானம் செய்தார். அவர் செய்த தவறின் காரணமாகத் தன் உயிரையும் இழந்தார், கடவுளிடம் தனக்கிருந்த நல்ல பெயரையும் இழந்தார். பணிவோடு, உண்மையுள்ளவர்களாய் யெகோவாவுக்குச் சேவை செய்வதன் அவசியத்தை இந்தத் தீர்க்கதரிசியின் அனுபவம் எவ்வளவு தெளிவாக வலியுறுத்துகிறது!
16, 17. யெகோவாவுக்கு உண்மையுள்ளவர்களாய் நிலைத்திருக்க எது நமக்கு உதவும்?
16 நம் இருதயத்தில் எழுகிற சுயநல ஆசைகள் நம்மைத் தவறாக வழிநடத்தலாம். ஏனெனில், “எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது.” (எரே. 17:9) ஆகவே, யெகோவாவுக்கு உண்மையுள்ளவர்களாய் நிலைத்திருக்க வேண்டுமென்றால் அகம்பாவமாக நடந்துகொள்வது, சுயமாகத் தீர்மானம் செய்வது போன்ற எண்ணங்களை வளர்க்கும் பழைய சுபாவத்தைக் களைந்துபோட வேண்டும்; இதற்கு நாம் தொடர்ந்து கடினமாய் உழைக்க வேண்டும். அதோடு, “மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் [“உண்மைத்தன்மையிலும்,” NW] தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட” புதிய சுபாவத்தை அணிந்துகொள்ள வேண்டும்.—எபேசியர் 4:22–24-ஐ வாசியுங்கள்.
17 “தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் [அதாவது, பணிவுள்ளவர்களிடத்தில்] ஞானம் உண்டு” என நீதிமொழிகள் 11:2 குறிப்பிடுகிறது. நாம் பணிவோடு யெகோவாவைச் சார்ந்திருந்தோமென்றால், படுமோசமான தவறுகளைச் செய்ய மாட்டோம். உதாரணமாக, நாம் மனதளவில் சோர்ந்துவிட்டால், சரியான தீர்மானத்தை எடுக்க முடியாமல் குழம்பிப்போகலாம். (நீதி. 24:10) நாம் யெகோவாவுக்குச் செய்யும் சேவையின் ஏதாவது ஓர் அம்சத்தில் உற்சாகம் இழந்துவிடலாம்; அதனால், ‘நான் இவ்வளவு காலம் செய்தது போதும், இனி மற்றவர்கள் செய்யட்டும்’ என்று நினைக்க ஆரம்பிக்கலாம். அல்லது, எல்லாரையும்போல் இயல்பாக வாழ விரும்பலாம். என்றாலும், நாம் ‘மும்முரமாகப் பிரயாசப்பட்டு,’ ‘கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகினோமென்றால்’ நம் இருதயத்தைக் காத்துக்கொள்வோம்.—லூக். 13:24; 1 கொ. 15:58.
18. சரியான தீர்மானத்தை எடுக்க முடியாமல் தவிக்கும்போது நாம் என்ன செய்யலாம்?
18 சில சமயங்களில், முக்கியமான தீர்மானங்களைச் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படலாம், நாம் செய்ய வேண்டிய சரியான காரியம் எதுவென்று தெரியாமல் தவிக்கலாம். அப்போது, நம் மனதிற்குப் பட்டதே மிகச் சரியானது என்ற முடிவுக்கு வருவோமா? இதுபோன்ற சந்தர்ப்பங்களை நாம் எதிர்ப்படும்போது, யெகோவாவிடம் உதவி கேட்பதே ஞானமானது. “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிற . . . தேவனிடத்தில் கேட்கக்கடவன்” என்று யாக்கோபு 1:5 சொல்கிறது. நாம் சரியான தீர்மானங்களைச் செய்வதற்கு நம் பரலோகத் தகப்பன் தம் சக்தியைத் தந்து உதவுவார்.—லூக்கா 11:9, 13-ஐ வாசியுங்கள்.
உண்மையுள்ளவர்களாய் நிலைத்திருக்கத் தீர்மானமாய் இருங்கள்
19, 20. எதைச் செய்ய நாம் தீர்மானமாய் இருக்க வேண்டும்?
19 சாலொமோன் விசுவாசத்தைவிட்டு வழிவிலகிச் சென்றதைத் தொடர்ந்து வந்த கொந்தளிப்பான காலங்களில் கடவுளுடைய ஊழியர்களின் உண்மைத்தன்மைக்குக் கடும் சோதனைகள் வந்தன. பலர் சோதனைகளுக்கு அடிபணிந்துவிட்டபோதிலும், சிலர் யெகோவாவுக்கு உண்மையுள்ளவர்களாய் நிலைத்திருந்தார்கள்.
20 ஒவ்வொரு நாளும், நம் உண்மைத்தன்மையைச் சோதிக்கிற சில தெரிவுகளையும் தீர்மானங்களையும் நாம் செய்ய வேண்டியுள்ளது; அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் நாமும்கூட உண்மையுள்ளவர்களாய் நிலைத்திருக்கலாம். தமக்கு உண்மையுள்ளவர்களை யெகோவா தொடர்ந்து ஆசீர்வதிப்பாரென்ற நம்பிக்கையுடன், முழு இருதயத்தோடு யெகோவாவுக்கு எப்பொழுதும் உண்மையுள்ளவர்களாய் நிலைத்திருப்போமாக.—2 சா. 22:26, NW.
[அடிக்குறிப்பு]
a வயதான தீர்க்கதரிசியை யெகோவா தண்டித்தாரா இல்லையா என்று பைபிள் சொல்வதில்லை.
எப்படிப் பதில் அளிப்பீர்கள்?
• நம் இருதயத்தில் துளிர்க்கிற பொருளாசையைக் களைந்தெறிய நாம் ஏன் கடினமாய் உழைக்க வேண்டும்?
• யெகோவாவுக்கு உண்மையுள்ளவர்களாய் நிலைத்திருக்க எது நமக்கு உதவும்?
• நாம் பணிவுடன் இருப்பது, கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாய் நிலைத்திருக்க எப்படி உதவும்?
[பக்கம் 9-ன் படங்கள்]
சபலங்கள் ஏற்படும்போது அவற்றை உடனடியாக உதறித்தள்ளுகிறீர்களா?
[பக்கம் 10-ன் படங்கள்]
பைபிளிலிருந்து கொடுக்கப்படுகிற ஆலோசனையை நீங்கள் ஜெபத்தோடு சிந்தித்துப் பார்ப்பீர்களா?