உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w12 8/15 பக். 3-7
  • “நான் உங்களோடுகூட இருக்கிறேன்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “நான் உங்களோடுகூட இருக்கிறேன்”
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ‘உண்மையான அறிவு’ வெளிச்சத்திற்கு வந்தது
  • ‘உண்மையான அறிவை’ “அநேகர்” ஏற்றுக்கொள்கிறார்கள்
  • ‘உண்மையான அறிவு பெருகுகிறது’
  • கடவுளை அறிகிற அறிவினால் பூமி நிறைந்திருக்கும்
  • மனிதவர்க்கத்துக்கு கடவுளைப் பற்றிய அறிவு தேவை
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
  • கடவுளுடைய அரசாங்கம் பரலோகத்தில் நிறுவப்படுகிறது
    கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்கிறது!
  • பைபிளில் இருக்கும் உண்மைகளை மறுபடியும் எப்படி கண்டுபிடித்தோம்?
    இன்று யெகோவா விரும்புவதை செய்பவர்கள் யார்?
  • அறிவைப் பெறுதல் இன்றும் என்றும்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
w12 8/15 பக். 3-7

“நான் உங்களோடுகூட இருக்கிறேன்”

“அநேகர் இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள், [உண்மையான] அறிவும் பெருகிப்போம்.” ​—⁠தானி. 12:⁠4.

எப்படிப் பதில் அளிப்பீர்கள்?

நவீன நாட்களில், ‘உண்மையான அறிவு’ எப்படி வெளிச்சத்திற்கு வந்தது?

‘உண்மையான அறிவை’ எப்படி “அநேகர்” ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்?

எந்த விதங்களில் திருத்தமான அறிவு ‘பெருகியிருக்கிறது’?

1, 2. (அ) இப்போதும் எப்போதும் இயேசு தம் குடிமக்களோடு இருப்பார் என்று நமக்கு எப்படித் தெரியும்? (ஆ) தானியேல் 12:​4-ன்படி பைபிளை ஆராய்ந்து படிப்பதால் என்ன பயன்?

நீங்கள் பூஞ்சோலை பூமியில் இருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் திருப்தியாகத் தூங்கி எழுந்திருக்கிறீர்கள், உங்கள் வேலையை ஆரம்பிக்க ஆவலாய் இருக்கிறீர்கள். அந்த வலி இந்த வலி என்று எந்த வலியும் உங்களுக்கு இல்லை. முன்பு இருந்த வியாதியெல்லாம் பறந்துபோய்விட்டன. உங்களுடைய ஐம்புலன்களிலும் எந்தக் குறையும் இல்லை. கண், காது, மூக்கு எல்லாம் நன்றாகச் செயல்படுகிறது. தொடு உணர்வும் சுவை உணர்வும் சிறப்பாகச் செயல்படுகின்றன. உடம்பில் தெம்பு இருக்கிறது, வேலையிலும் உங்களுக்குச் சந்தோஷம் கிடைக்கிறது, உங்களைச் சுற்றி நண்பர்கள் கூட்டம் மொய்க்கிறது. எந்தக் கஷ்டமும் கவலையும் இல்லாததால் மொத்தத்தில் வாழ்க்கை தேனாய் இனிக்கிறது. கடவுளுடைய அரசாங்கம் இந்தப் பூமியை ஆட்சி செய்யும்போது இதுபோன்ற பற்பல ஆசீர்வாதங்கள் அருவியாய் கொட்டும். ராஜாதி ராஜாவான இயேசு கிறிஸ்து தம்முடைய குடிமக்களை ஆசீர்வதிப்பார்... யெகோவாவைப் பற்றி அவர்கள் கற்றுக்கொள்ள வழிசெய்வார்.

2 அந்தச் சமயத்தில் உண்மை ஊழியர்கள் உலகளாவிய கற்பிக்கும் வேலையில் ஈடுபடும்போது யெகோவா அவர்களோடு இருப்பார். சொல்லப்போனால், யெகோவாவும் இயேசுவும் பல நூற்றாண்டுகளாக உத்தம ஊழியர்களுக்குப் பக்கபலமாக இருந்து வந்திருக்கிறார்கள். இயேசு பரலோகத்திற்கு ஏறிச் செல்லும் முன்... தம் சீடர்களோடு எப்போதும் இருப்பதாக வாக்குக் கொடுத்தார். (மத்தேயு 28:​19, 20-ஐ வாசியுங்கள்.) கொடுத்த வாக்கை அவர் நிச்சயம் காப்பாற்றுவார் என்பதில் நம் விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ள... 2,500-க்கும் அதிகமான வருடங்களுக்கு முன்பு பாபிலோனில் தானியேல் எழுதிய ஒரு தீர்க்கதரிசனத்தை இப்போது சிந்தித்துப் பார்க்கலாம். நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த ‘முடிவுகாலத்தில் . . . அநேகர் இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள், [உண்மையான] அறிவும் பெருகிப்போம்’ என்று தானியேல் எழுதினார். (தானி. 12:⁠4) அப்படி ஆராய்பவர்கள் அளவிலா ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள். ஆம், பைபிளைக் கவனமாக ஆராய்ந்து படிப்பவர்கள் அதைப் பற்றிய உண்மையான, திருத்தமான அறிவைப் பெறுவார்கள். அநேகர் ‘உண்மையான அறிவை’ பெறுவார்கள் என்றும், அந்த அறிவு பெருகிப்போகும் என்றும் அந்தத் தீர்க்கதரிசனம் சொல்வதைக் கவனியுங்கள். ஆகவே, எல்லா இடங்களிலும் உள்ள மக்கள் இந்த உண்மையான அறிவை, அதாவது பைபிள் சத்தியங்களைக் கற்றுக்கொள்வார்கள். இந்தத் தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறி வந்திருக்கிறது என்பதைச் சிந்தித்துப் பார்க்கும்போது, இயேசு இன்று தம் சீடர்களுடன் இருக்கிறார் என்பதிலும்... எதிர்காலத்தைக் குறித்து யெகோவா கொடுத்திருக்கும் வாக்குறுதிகளை அவர் நிச்சயம் நிறைவேற்றுவார் என்பதிலும்... நம் விசுவாசம் பலப்படும்.

‘உண்மையான அறிவு’ வெளிச்சத்திற்கு வந்தது

3. அப்போஸ்தலர்களின் மரணத்திற்குப் பிறகு என்ன ஆனது?

3 முன்னறிவிக்கப்பட்டபடியே அப்போஸ்தலர்களின் மரணத்திற்குப் பிறகு விசுவாசதுரோகம் கொஞ்சம் கொஞ்சமாகத் தலைதூக்கி, காட்டுத் தீ போல் எங்கும் பரவியது. (அப். 20:​28-30; 2 தெ. 2:​1-3) அதற்குப் பின்வந்த நூற்றாண்டுகளில் பைபிளைப் பற்றி ஒன்றும் தெரியாதவர்கள் மத்தியிலும் சரி கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்டவர்கள் மத்தியிலும் சரி, ‘உண்மையான அறிவு’ பெருகவில்லை. கிறிஸ்தவமண்டலத் தலைவர்கள் பைபிளை நம்புவதாகச் சொல்லிக்கொண்டார்களே தவிர பொய்களைத்தான் கற்பித்தார்கள். கடவுளை அவமதித்த ‘பேய்களின் போதனைகளையே’ கற்பித்தார்கள். (1 தீ. 4:⁠1) அதனால், நிறையப் பேருக்குக் கடவுளைப் பற்றிய உண்மையே தெரியாமல் போனது. விசுவாசதுரோகிகளின் போதனைகளில் சில... கடவுள் ஒரு திரித்துவம், ஆத்துமா அழியாமை, எரிநரகம்.

4. 1870-களில் வாழ்ந்த சில கிறிஸ்தவர்கள் எப்படி ‘உண்மையான அறிவை’ தேட ஆரம்பித்தார்கள்?

4 என்றாலும், 1870-களில்​—⁠‘கடைசி நாட்கள்’ ஆரம்பமாவதற்குச் சுமார் 40 வருடங்களுக்கு முன்​—⁠அமெரிக்கா, பென்ஸில்வேனியாவில் இருந்த கடவுள்பக்தியுள்ள சில கிறிஸ்தவர்கள் பைபிளை ஆராய்ந்து படிக்கவும் ‘உண்மையான அறிவை’ கண்டடையவும் ஒன்றுகூடி வந்தார்கள். (2 தீ. 3:⁠1) இவர்கள் தங்களை பைபிள் மாணாக்கர்கள் என அழைத்துக்கொண்டார்கள். இவர்கள் யாரும் ஞானிகளோ அறிவாளிகளோ அல்ல. ஏனென்றால், அப்படிப்பட்டவர்களிடமிருந்து உண்மையான அறிவு மறைத்து வைக்கப்படும் என்று இயேசு சொன்னார். (மத். 11:25) மனத்தாழ்மையுள்ள இவர்கள், கடவுளுடைய சித்தத்தைச் செய்ய மனதார விரும்பினார்கள். இவர்கள் கடவுளிடம் ஜெபம் செய்துவிட்டு, பைபிளைக் கவனமாகப் படித்தார்கள், கலந்தாலோசித்தார்கள், படித்த விஷயங்களைக் குறித்து ஆழ்ந்து யோசித்தார்கள். அதோடு, பைபிள் வசனங்களை ஒன்றோடொன்று ஒப்பிட்டுப் பார்த்தார்கள். தங்களைப் போலவே பைபிளை ஆராய்ந்தவர்கள் எழுதி வைத்திருந்த பதிவுகளையும் சோதித்துப் பார்த்தார்கள். எத்தனையோ நூற்றாண்டுகளாக மக்களுக்குத் தெரியாதிருந்த சத்தியங்களை இந்த பைபிள் மாணாக்கர்கள் படிப்படியாகப் புரிந்துகொள்ள ஆரம்பித்தார்கள்.

5. என்ன குறிக்கோளுடன் தி ஓல்ட் தியாலஜி என்ற பெயரில் துண்டுப்பிரதிகள் வெளியிடப்பட்டன?

5 புதிதாய்க் கற்றுக்கொண்ட விஷயங்களைக் குறித்து பைபிள் மாணாக்கர்கள் குதூகலப்பட்டார்கள். இருந்தாலும், அவர்கள் தலைக்கனம் கொள்ளவில்லை, அவர்களாகவே புதிதாய் ஒரு விஷயத்தைக் கண்டுபிடித்துவிட்டதாக தம்பட்டம் அடித்துக்கொள்ளவும் இல்லை. (1 கொ. 8:⁠1) அதற்குப் பதிலாக, தி ஓல்ட் தியாலஜி என்ற பெயரில் தொடர்ந்து சில துண்டுப்பிரதிகளை வெளியிட்டார்கள். பைபிளிலுள்ள சத்தியங்களை வாசகர்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்பதே அவர்களுடைய குறிக்கோளாய் இருந்தது. அவர்களுடைய முதல் துண்டுப்பிரதி “பைபிளை இன்னும் ஆழமாய்ப் படிப்பதற்கு” உதவியது. அதோடு, “மனிதர்களுடைய பொய்யான பாரம்பரியங்கள் அனைத்தையும் விட்டொழிக்கவும், நம் எஜமானருடைய மற்றும் அப்போஸ்தலர்களுடைய உண்மையான போதனைகளைச் சரியாகப் புரிந்துகொள்ளவும்” பேருதவியாயிருந்தது.​—⁠தி ஓல்ட் தியாலஜி, எண் 1, ஏப்ரல் 1889, பக். 32.

6, 7. (அ) என்னென்ன சத்தியங்களை 1870-கள் முதற்கொண்டு நாம் புரிந்துகொண்டிருக்கிறோம்? (ஆ) முக்கியமாக என்ன சத்தியங்கள் உங்கள் மனதைத் தொட்டிருக்கின்றன?

6 யெகோவாவின் சாட்சிகள் 1870-கள் முதற்கொண்டு பற்பல அருமையான சத்தியங்களைக் கற்றுவந்திருக்கிறார்கள்.a இந்தச் சத்தியங்கள் உப்புச் சப்பில்லாத விஷயங்கள் அல்ல, இறையியலாளர்கள் விவாதிக்கும் வெற்றுத் தத்துவங்களும் அல்ல. அவை நம் வாழ்க்கையை வளமாக்கும் அருமையான சத்தியங்கள். நமக்குள் சந்தோஷத்தையும் நம்பிக்கையையும் விதைக்கும் சிலிர்ப்பூட்டும் சத்தியங்கள். யெகோவாவைப் பற்றி, அதாவது அவருடைய அன்பான சுபாவத்தையும் நோக்கங்களையும் பற்றி, நாம் தெரிந்துகொள்ள அவை உதவுகின்றன. இயேசு யார், அவர் எதற்காகப் பூமிக்கு வந்து தம் உயிரைத் தியாகம் செய்தார், இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் ஆகியவற்றையும் அவை விளக்குகின்றன. அதுமட்டுமல்ல, கடவுள் ஏன் கெட்டவர்களை விட்டுவைத்திருக்கிறார், நாம் ஏன் சாகிறோம், நாம் எப்படி ஜெபம் செய்ய வேண்டும், நாம் எப்படி உண்மையான சந்தோஷத்தைப் பெறலாம் ஆகியவற்றைப் பற்றியும் அவை நமக்குக் கற்பிக்கின்றன.

7 ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ‘புதைபொருள்’ போல் மறைந்துகிடந்த தீர்க்கதரிசனங்கள் இப்போது முடிவுகாலத்தில் நிறைவேறி வருவதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. (தானி. 12:⁠9) இந்தத் தீர்க்கதரிசனங்களில் பல, சுவிசேஷப் பதிவுகளிலும் வெளிப்படுத்துதல் புத்தகத்திலும் உள்ளன. நம்முடைய கண்களால் பார்க்க முடியாத சில சம்பவங்களைப் புரிந்துகொள்ளவும் யெகோவா நமக்கு உதவி செய்திருக்கிறார். உதாரணத்திற்கு, இயேசு ராஜாவானது, பரலோகத்தில் போர் மூண்டது, சாத்தான் பூமிக்குத் தள்ளப்பட்டது ஆகிய சம்பவங்களை நமக்குப் புரிய வைத்திருக்கிறார். (வெளி. 12:​7-12) நம்முடைய கண்களால் பார்க்க முடிகிற சம்பவங்களைப் புரிந்துகொள்ளவும் யெகோவா நமக்கு உதவி செய்திருக்கிறார். உதாரணத்திற்கு, போர்கள், பூகம்பங்கள், கொள்ளைநோய்கள், பஞ்சங்கள் ஏன் நிகழ்கின்றன, மக்கள் ஏன் கெட்ட காரியங்களைச் செய்து நாம் வாழும் காலத்தை ‘சமாளிப்பதற்குக் கடினமான கொடிய காலமாக’ ஆக்கியிருக்கிறார்கள் என்பதை அவர் நமக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார்.​—⁠2 தீ. 3:​1-5; லூக். 21:​10, 11.

8. யாருடைய தயவால் சில விஷயங்களை நம்மால் பார்க்கவும் கேட்கவும் முடிந்திருக்கிறது?

8 “நீங்கள் பார்க்கிறவற்றைப் பார்க்கும் கண்கள் சந்தோஷமானவை; ஏனென்றால், நான் உங்களுக்குச் சொல்கிறேன், அநேக தீர்க்கதரிசிகளும் ராஜாக்களும் நீங்கள் பார்க்கிறவற்றைப் பார்க்க விரும்பியும் அவற்றைப் பார்க்கவில்லை; நீங்கள் கேட்கிறவற்றைக் கேட்க விரும்பியும் அவற்றைக் கேட்கவில்லை” என்று இயேசு தம் சீடர்களிடம் சொன்னார். (லூக். 10:​23, 24) உண்மைதான், யெகோவாவின் தயவால் அப்படிப்பட்ட மகத்தான காரியங்களைப் பார்க்கவும் கேட்கவும் நம்மால் முடிந்திருக்கிறது. நாம் ‘சத்தியத்தை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு’ யெகோவா தமது சக்தியை தந்தருளியதற்காக எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம்! (யோவான் 16:​7, 13-ஐ வாசியுங்கள்.) ‘உண்மையான அறிவை’ நாம் எப்போதும் உயர்வாய் மதிப்போமாக! தன்னலமின்றி மற்றவர்களிடம் அதைப் பகிர்ந்துகொள்வோமாக!!

‘உண்மையான அறிவை’ “அநேகர்” ஏற்றுக்கொள்கிறார்கள்

9. ஏப்ரல் 1881-ல் காவற்கோபுர பத்திரிகையில் என்ன அழைப்பு விடுக்கப்பட்டது?

9 ஏப்ரல் 1881-ல், அதாவது காவற்கோபுரத்தின் (ஆங்கிலம்) முதல் இதழ் வெளிவந்து இரண்டு ஆண்டுகள்கூட கழிந்திராத சமயத்தில், 1,000 பிரசங்கிப்பாளர்கள் தேவை என்று இதே பத்திரிகையில் அழைப்பு விடுக்கப்பட்டது. அந்தக் கட்டுரையில் இவ்வாறு சொல்லப்பட்டது: “பகுதி நேரமாகவோ முழுநேரமாகவோ யாருக்கெல்லாம் எஜமானருடைய வேலையைச் செய்ய முடியுமோ அவர்களுக்கெல்லாம் நாங்கள் ஓர் ஆலோசனை சொல்ல விரும்புகிறோம் . . . அது என்னவென்றால்: உங்கள் சக்திக்குத் தகுந்தாற்போல் பெரிய நகரங்களுக்கோ சிறிய நகரங்களுக்கோ கால்பார்ட்டர்களாக அல்லது பிரசங்கிப்பாளர்களாகச் சென்று கடவுள்பக்தியுள்ள, ஆனால் அவரைப் பற்றிய திருத்தமான அறிவைப் பெற்றிராத ஆர்வமுள்ள கிறிஸ்தவர்களைத் தேடிக் கண்டுபிடியுங்கள். நம்முடைய தந்தையின் அளவற்ற இரக்கத்தையும் அவருடைய வார்த்தையில் பொதிந்திருக்கும் அற்புதமான சத்தியங்களையும் அவர்களுக்கு அறிவியுங்கள்.”

10. முழுநேர ஊழியர்களுக்கான அழைப்பு விடுக்கப்பட்டபோது மக்கள் எப்படிப் பிரதிபலித்தார்கள்?

10 நற்செய்தியைப் பிரசங்கிப்பதுதான் உண்மைக் கிறிஸ்தவர்கள் செய்ய வேண்டிய முக்கியமான வேலை என்பதை பைபிள் மாணாக்கர்கள் புரிந்துகொண்டதை அந்த அழைப்புச் சுட்டிக்காட்டியது. ஆனால், அந்தச் சமயத்தில் பைபிள் மாணாக்கர்கள் நடத்திய கூட்டங்களுக்குச் சில நூறு பேரே வந்துகொண்டிருந்தார்கள். அப்படியிருந்தும் 1,000 முழுநேர பிரசங்கிப்பாளர்கள் தேவை என்று அழைப்பு விடுத்தது பைபிள் மாணாக்கர்களுக்கு இருந்த அபார நம்பிக்கையை வெளிப்படுத்தியது. ஒரு துண்டுப்பிரதியையோ பத்திரிகையையோ படித்த பலர் இதுதான் சத்தியம் என்பதைப் புரிந்துகொண்டு அந்த அழைப்பை உடனடியாக ஏற்றுக்கொண்டார்கள். உதாரணத்திற்கு 1882-ல், பைபிள் மாணாக்கர்கள் வெளியிட்ட ஒரு காவற்கோபுர இதழையும், ஒரு சிறுபுத்தகத்தையும் படித்துவிட்டு லண்டனைச் சேர்ந்த வாசகர் ஒருவர்... “கடவுளுடைய சித்தத்தின்படி இந்தப் புனிதமான வேலை முழுமை அடைய நான் எப்படிப் பிரசங்கிக்க வேண்டும், என்ன பிரசங்கிக்க வேண்டும் என்பதைத் தயவுசெய்து எனக்குச் சொல்லிக்கொடுங்கள்” என்று கேட்டு எழுதினார்.

11, 12. (அ) நமக்கு இருக்கும் என்ன குறிக்கோள் கால்பார்ட்டர்களுக்கும் இருந்தது? (ஆ) கால்பார்ட்டர்கள் எப்படி “வகுப்புகளை,” அதாவது சபைகளை, உருவாக்கினார்கள்?

11 1885-க்குள் சுமார் 300 பைபிள் மாணாக்கர்கள் கால்பார்ட்டர்களாகச் சேவை செய்துகொண்டிருந்தார்கள். இன்று நமக்கு இருக்கும் அதே குறிக்கோள்தான், அதாவது இயேசு கிறிஸ்துவுக்குச் சீடர்களை உருவாக்கும் குறிக்கோள்தான், அவர்களுக்கும் இருந்தது. ஆனால், இன்று நாம் பயன்படுத்தும் வழிமுறைகளை அல்ல, வித்தியாசமான வழிமுறைகளை அவர்கள் பயன்படுத்தினார்கள். இன்று, ஆர்வம் காட்டும் நபர்களுக்கு நாம் தனிப்பட்ட விதமாக பைபிள் படிப்பு நடத்துகிறோம். பின்பு சபைக் கூட்டத்திற்கு வரும்படி அவர்களை அழைக்கிறோம். ஆனால், அந்தக் காலத்தில் கால்பார்ட்டர்கள் மக்களிடம் முதலில் புத்தகங்களை விநியோகித்தார்கள். பின்பு, ஆர்வம் காட்டிய அனைவரையும் ஒரே இடத்திற்கு வரவழைத்து பைபிள் படிப்பு நடத்தினார்கள். ஒவ்வொரு நபருக்கும் தனித்தனியாகப் படிப்பு நடத்துவதற்குப் பதிலாக “வகுப்புகளை” அல்லது சபைகளை உருவாக்கினார்கள்.

12 உதாரணத்திற்கு, 1907-ல் சில கால்பார்ட்டர்கள் ஒரு நகரத்திற்குச் சென்று, ஆயிரமாண்டு உதயம் (ஆங்கிலம் [வேதாகமத்தில் படிப்புகள் என்றும் அது அழைக்கப்பட்டது]) புத்தகத்தை வைத்திருந்தவர்களைத் தேடிக் கண்டுபிடித்தார்கள். அதைக் குறித்து காவற்கோபுர பத்திரிகை இவ்வாறு சொன்னது: “ஒரு சிறிய கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக யாராவது ஒருவருடைய வீட்டிற்கு வரும்படி [ஆர்வம்காட்டிய நபர்கள்] அழைக்கப்பட்டார்கள். ஞாயிற்றுக்கிழமை காலைமுதல் இரவுவரை ஒரு கால்பார்ட்டர், மனிதகுலத்திற்கான கடவுளின் நோக்கத்தைப் பற்றி அவர்களிடம் பேசினார். அதற்கு அடுத்த ஞாயிற்றுக்கிழமை, இப்படி வாராவாரம் கூடிவரும்படி அவர்களை உற்சாகப்படுத்தினார்.” 1911-ல் இந்த ஏற்பாட்டில் சகோதரர்கள் சில மாற்றங்களைச் செய்தார்கள். விசேஷப் பயண ஊழியர்கள் 58 பேர் அமெரிக்காவிலும் கனடாவிலும் வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்று பொதுப் பேச்சுகள் கொடுத்தார்கள். அந்தப் பேச்சுகளைக் கேட்க வந்த ஆர்வமுள்ள நபர்களிடம் அவர்களுடைய பெயர்களையும் விலாசங்களையும் வாங்கிக்கொண்டார்கள். தனிநபர்களுடைய வீடுகளில் அவர்கள் கூடிவர ஏற்பாடு செய்தார்கள். இப்படியாக, புதிய “வகுப்புகளை” உருவாக்கினார்கள். 1914-க்குள் உலகமுழுவதிலும் பைபிள் மாணாக்கர்கள் 1,200 சபைகளில் கூடிவந்தார்கள்.

13. ‘உண்மையான அறிவு’ எந்தளவு பரவியிருக்கிறது என்பதில் உங்கள் மனதைக் கவர்ந்த விஷயம் எது?

13 இன்று, உலகமுழுவதிலும் 1,09,400 சபைகள் உள்ளன. சுமார் 8,95,800 சகோதர சகோதரிகள் பயனியர்களாகச் சேவை செய்கிறார்கள். கிட்டத்தட்ட எட்டு லட்சம் பேர் இன்று ‘உண்மையான அறிவை’ ஏற்றுக்கொண்டு அதன்படி வாழ்கிறார்கள். (ஏசாயா 60:​22-ஐ வாசியுங்கள்.)b இது உண்மையிலேயே வியப்பூட்டும் ஒரு விஷயம். ஏனென்றால், தம்முடைய சீடர்களாக இருப்பவர்கள் ‘எல்லா மக்களுடைய வெறுப்புக்கும் ஆளாவார்கள்’ என்று இயேசு சொல்லியிருந்தார். அதுமட்டுமல்ல, தம்முடைய சீடர்கள் துன்புறுத்தப்படுவார்கள், சிறையில் அடைக்கப்படுவார்கள், கொலையும் செய்யப்படுவார்கள் என்று அவர் சொல்லியிருந்தார். (லூக். 21:​12-17) சீடராக்கும் வேலையை சாத்தானும் அவனுடைய பேய்களும் மட்டுமல்ல மனிதர்களும் எதிர்க்கிறார்கள். இருந்தாலும், யெகோவாவின் மக்கள் அந்த வேலையை விடாமல் செய்கிறார்கள். அதில் வெற்றியும் காண்கிறார்கள். இன்று அவர்கள் “உலகமெங்கும்” நற்செய்தியை அறிவிக்கிறார்கள். (மத். 24:14) வெப்பமண்டலக் காடுகள்முதல் பனிப்பிரதேசங்கள்வரை நற்செய்தியைப் பிரசங்கிக்கிறார்கள். ஆம், மலைகள், பாலைவனங்கள், நகரங்கள், ஒதுக்குப்புற கிராமங்கள்... என்று எந்த இடத்தையும் அவர்கள் விட்டுவைப்பதில்லை. மலைக்க வைக்கும் இந்த வேலையைக் கடவுளுடைய உதவியின்றி அவர்களால் செய்யவே முடியாது.

‘உண்மையான அறிவு பெருகுகிறது’

14. நம்முடைய பிரசுரங்கள் மூலமாக ‘உண்மையான அறிவு’ எப்படிப் பெருகியிருக்கிறது?

14 ஏராளமானோர் நற்செய்தியைப் பிரசங்கிப்பதால் ‘உண்மையான அறிவு’ பெருகியிருக்கிறது. புத்தகங்கள், பத்திரிகைகள் போன்ற பிரசுரங்கள் மூலமாகவும் அது பெருகியிருக்கிறது. ஜூலை 1879-ல் பைபிள் மாணாக்கர்கள் ஜயன்ஸ் உவாட்ச் டவர் அண்டு ஹெரல்ட் ஆஃப் கிரைஸ்ட்ஸ் பிரசன்ஸ் என்ற பெயரில் இந்த காவற்கோபுர பத்திரிகையின் முதல் இதழை வெளியிட்டார்கள். இந்த இதழ் ஒரு தனியார் அச்சகத்தில் அச்சிடப்பட்டது; ஆங்கிலத்தில் மட்டும் 6,000 பிரதிகள் அச்சிடப்பட்டன. 27 வயது சார்ல்ஸ் டேஸ் ரஸல் அதன் ஆசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதிர்ச்சி வாய்ந்த இன்னும் ஐந்து பைபிள் மாணாக்கர்களும் அந்தப் பத்திரிகைக்குத் தவறாமல் கட்டுரைகள் எழுதினார்கள். இப்போது 195 மொழிகளில் காவற்கோபுர பத்திரிகை அச்சிடப்படுகிறது. உலகிலேயே அதிகமாக விநியோகிக்கப்படும் பத்திரிகை என்றால் அது காவற்கோபுர பத்திரிகைதான். அதன் ஒவ்வொரு இதழும் 4,21,82,000 பிரதிகள் விநியோகிக்கப்படுகின்றன. காவற்கோபுரத்திற்கு அடுத்த இடத்தில் இருப்பது அதன் துணைப் பத்திரிகையான விழித்தெழு! இது 84 மொழிகளில் அச்சிடப்படுகிறது. இந்தப் பத்திரிகையின் ஒவ்வொரு இதழும் 4,10,42,000 பிரதிகள் விநியோகிக்கப்படுகின்றன. அதோடு, ஒவ்வொரு வருடமும் சுமார் பத்துக் கோடி புத்தகங்களும் பைபிள்களும் அச்சிடப்படுகின்றன.

15. பிரசுரங்களை அச்சிட நமக்கு எங்கிருந்து பணம் கிடைக்கிறது?

15 இந்தப் பிரமாண்டமான வேலை மனமுவந்து கொடுக்கப்படும் நன்கொடைகளால் ஆதரிக்கப்படுகிறது. (மத்தேயு 10:​8-ஐ வாசியுங்கள்.) அச்சு இயந்திரங்கள், பேப்பர், மை, இதர பொருள்கள் என எல்லாவற்றுக்கும் ஆகும் செலவை அச்சகத் துறையினர் அத்துப்படி அறிந்திருக்கிறார்கள். எனவே, மனமுவந்து கொடுக்கப்படும் நன்கொடைகளால் நம்முடைய அச்சகங்கள் இயங்குவதைப் பார்த்து அவர்கள் வாயடைத்து நிற்கிறார்கள். பெத்தேல் அச்சகங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கித்தரும் சகோதரர் ஒருவர் இவ்வாறு சொன்னார்: “நம்முடைய அச்சகங்களைப் பார்க்க வரும் தொழிலதிபர்கள், தொழில்நுட்ப திறன் படைத்த அதிநவீன, அதிவேக அச்சு இயந்திரங்கள்... மனமுவந்து கொடுக்கப்படும் நன்கொடைகளின் ஆதரவில் இயங்குவதைப் பார்த்து மூக்கில் விரலை வைக்கிறார்கள். பெத்தேலில் இளைஞர்கள் சந்தோஷமாய் வேலை செய்வதைப் பார்த்துப் புருவத்தை உயர்த்துகிறார்கள்.”

கடவுளை அறிகிற அறிவினால் பூமி நிறைந்திருக்கும்

16. ‘உண்மையான அறிவை’ மக்கள் பெறுவதற்கு யெகோவா ஏன் வழி செய்திருக்கிறார்?

16 “பலதரப்பட்ட ஆட்களும் சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவை அடைய வேண்டுமென்பது” யெகோவாவுடைய சித்தம் என்பதால் ‘உண்மையான அறிவை’ அவர் பெருகச் செய்திருக்கிறார். (1 தீ. 2:​3, 4) மக்கள் சத்தியத்தை அறிந்துகொள்ள வேண்டுமென யெகோவா விரும்புகிறார். ஏனென்றால், அப்போதுதான் அவர்களால் சரியான முறையில் அவரை வழிபட முடியும், அவரிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். ‘உண்மையான அறிவை’ மக்கள் பெறுவதற்கு வழிசெய்வதன் மூலம் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களை யெகோவா ஒன்றுசேர்த்திருக்கிறார். அதோடு, பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கையுள்ள “எல்லாத் தேசங்களையும் கோத்திரங்களையும் இனங்களையும் மொழிகளையும் சேர்ந்த” ‘திரள் கூட்டமான மக்களையும்’ இப்போது ஒன்றுசேர்க்கிறார்.​—⁠வெளி. 7:⁠9.

17. உண்மை வணக்கத்தாரின் அதிகரிப்பு எதைச் சுட்டிக்காட்டுகிறது?

17 கடந்த 130 வருடங்களாக உலகெங்கும் உண்மை வணக்கத்தார் பெருகியிருப்பதைப் பார்க்கும்போது... கடவுளும் அவர் நியமித்திருக்கும் ராஜாவான இயேசு கிறிஸ்துவும் பூமியிலுள்ள ஊழியர்களை வழிநடத்தி, பாதுகாத்து, ஒழுங்கமைத்து, அவர்களுக்குக் கற்பித்து வந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. அதுமட்டுமல்ல, அவர்கள் எக்கச்சக்கமாகப் பெருகியிருப்பது... எதிர்காலத்தைக் குறித்து யெகோவா கொடுத்திருக்கும் வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேறும் என்பதற்குச் சான்றளிக்கிறது. ‘சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி யெகோவாவை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.’ (ஏசா. 11:⁠9) அப்போது மனிதர்கள் எந்தளவு ஆனந்தமாய் வாழ்வார்கள் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்!

[அடிக்குறிப்புகள்]

a யெகோவாவின் சாட்சிகள்​—⁠விசுவாசம் செயலில், பகுதி 1: இருளிலிருந்து ஒளிக்கு... யெகோவாவின் சாட்சிகள்​—⁠விசுவாசம் செயலில், பகுதி 2: ஒளி பிரகாசிக்கட்டும்... ஆகிய டிவிடிகளைப் பார்த்தால் இன்னும் நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்வீர்கள்.

b ஏசாயா தீர்க்கதரிசனம்​—⁠மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு, தொகுதி 2, பக்கம் 320-ஐப் பாருங்கள்.

[பக்கம் 6-ன் படம்]

ஆரம்பகால பைபிள் மாணாக்கர்கள் மனத்தாழ்மை காட்டினார்கள், கடவுளுடைய சித்தத்தைச் செய்ய மனதார விரும்பினார்கள்

[பக்கம் 7-ன் படம்]

‘உண்மையான அறிவை’ பரப்ப நீங்கள் எடுக்கும் முயற்சியை யெகோவா உயர்வாய் மதிக்கிறார்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்