உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g19 எண் 2 பக். 10-11
  • பொறுப்போடு நடந்துகொள்வது

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பொறுப்போடு நடந்துகொள்வது
  • விழித்தெழு!—2019
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பொறுப்போடு நடந்துகொள்வது என்றால் என்ன?
  • பொறுப்போடு நடந்துகொள்வது ஏன் முக்கியம்?
  • பொறுப்போடு நடந்துகொள்ள கற்றுக்கொடுப்பது எப்படி?
  • வீட்டில் வேலை செய்ய பிள்ளைகளைப் பழக்குங்கள்
    விழித்தெழு!—2017
  • பிரிந்து செல்ல பயிற்சி
    விழித்தெழு!—1998
  • அந்த வீட்டு வேலைகளையெல்லாம் நான் ஏன் செய்ய வேண்டும்?
    விழித்தெழு!—1990
  • 8 முன்மாதிரி
    விழித்தெழு!—2018
மேலும் பார்க்க
விழித்தெழு!—2019
g19 எண் 2 பக். 10-11
செடிக்குத் தண்ணீர் ஊற்ற ஒரு அப்பா தன் மகனுக்கு உதவுகிறார்

பாடம் 4

பொறுப்போடு நடந்துகொள்வது

பொறுப்போடு நடந்துகொள்வது என்றால் என்ன?

பொறுப்போடு நடந்துகொள்கிறவர்கள் நம்பகமானவர்களாக இருப்பார்கள். கொடுக்கப்பட்ட வேலைகளைச் சரியாகவும் நேரத்துக்குள்ளும் செய்து முடிப்பார்கள்.

பெரியவர்கள் செய்யும் எல்லாவற்றையும் சின்னப் பிள்ளைகளால் செய்ய முடியாதுதான்; ஆனாலும், அவர்களால்கூடப் பொறுப்போடு நடப்பதற்குக் கற்றுக்கொள்ள முடியும். ஒரு புத்தகம் (Parenting Without Borders) இப்படிச் சொல்கிறது: “குழந்தைகள் 15 மாதத்திலிருந்தே பெற்றோர் சொல்வதைச் செய்ய ஆரம்பிப்பார்கள். 18 மாதம் ஆனதும், பெற்றோர் செய்வதையெல்லாம் செய்ய ஆசைப்படுவார்கள். நிறைய கலாச்சாரங்களில், பிள்ளைகளுக்கு 5-7 வயதாகும்போது, பெற்றோர் அவர்களுக்கு வீட்டு வேலைகளைக் கொடுக்க ஆரம்பிக்கிறார்கள். அந்த வயதிலேயே அவர்களால் பெரும்பாலான வேலைகளை நன்றாகச் செய்ய முடிகிறது.”

பொறுப்போடு நடந்துகொள்வது ஏன் முக்கியம்?

நிறைய நாடுகளில், இளைஞர்கள் வீட்டைவிட்டுப் போய்ச் சொந்தக் காலில் நிற்க முயற்சி செய்கிறார்கள். ஆனால், அது முடியாமல் போவதால் பெற்றோரிடமே திரும்பி வந்துவிடுகிறார்கள். பணத்தைச் சரியாகச் செலவு செய்யவோ, வீட்டைக் கவனிக்கவோ, அன்றாடப் பொறுப்புகளைச் சரிவர செய்யவோ பெற்றோர் அவர்களுக்குச் சொல்லித்தராததுதான் சிலசமயங்களில் அதற்குக் காரணம்.

அதனால், இப்போதிருந்தே பொறுப்புகளைச் சரியாகச் செய்ய உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள். “பிள்ளைகளைப் பதினெட்டு வயதுவரை பொத்திப் பொத்தி வைத்துக்கொண்டு, அதன் பிறகு திடீரென்று கண்ணைக் கட்டி காட்டில் விடுவதுபோல் இந்த உலகத்தில் விட்டுவிடாதீர்கள்” என்று ஒரு புத்தகம் (How to Raise an Adult) சொல்கிறது.

பொறுப்போடு நடந்துகொள்ள கற்றுக்கொடுப்பது எப்படி?

வீட்டு வேலைகளைக் கொடுங்கள்.

பைபிள் ஆலோசனை: “எல்லா விதமான கடின உழைப்பும் நல்ல பலனைத் தரும்.”—நீதிமொழிகள் 14:23.

பொதுவாக, அப்பா-அம்மாவோடு சேர்ந்து வேலை செய்ய பிள்ளைகளுக்குப் பிடிக்கும். இயல்பாகவே அவர்களுக்கு இருக்கும் இந்த ஆசையை நீங்கள் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, அவர்களுக்கு வீட்டு வேலைகளைக் கொடுக்கலாம்.

இதைச் செய்ய சில பெற்றோர்கள் தயங்குகிறார்கள். ‘பிள்ளைங்களுக்கு ஏற்கெனவே தலைக்குமேல ஹோம்வர்க் இருக்கு, இதுல நாமவேற எதுக்கு அவங்கள கஷ்டப்படுத்தணும்?’ என்று நினைக்கிறார்கள்.

ஆனால், வீட்டில் வேலை செய்யும் பிள்ளைகள்தான் பெரும்பாலும் பள்ளியில் நன்றாகப் படிக்கிறார்கள். ஏனென்றால், வீட்டு வேலைகளைச் செய்யும்போது, பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளவும் அவற்றைச் செய்து முடிக்கவும் அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். “சின்ன வயதில், அதுவும் உதவி செய்ய வேண்டுமென்ற ஆசை இருக்கும்போதே, அவர்களுக்கு நாம் வேலை தராவிட்டால், மற்றவர்களுக்கு உதவிகள் செய்வது முக்கியமல்ல என்று அவர்கள் நினைக்க ஆரம்பித்துவிடுவார்கள். . . . தங்களுக்கு வேண்டியதையெல்லாம் மற்றவர்கள் செய்துதர வேண்டுமென்றுகூட எதிர்பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள்” என்று நாம் ஏற்கெனவே பார்த்த புத்தகம் (Parenting Without Borders) சொல்கிறது.

அப்படியென்றால், பிள்ளைகள் வீட்டு வேலைகளைச் செய்யும்போது, மற்றவர்களுக்கு உதவி செய்யவும் சுயநலம் இல்லாமல் நடந்துகொள்ளவும் கற்றுக்கொள்கிறார்கள். அதோடு, தாங்களும் குடும்பத்தின் ஒரு முக்கியமான பாகம் என்பதையும், வீட்டு வேலைகள் செய்வது தங்களுக்கு இருக்கும் ஒரு முக்கியமான பொறுப்பு என்பதையும் அவர்கள் புரிந்துகொள்கிறார்கள்.

தவறு செய்தால் விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்பதைப் புரிய வையுங்கள்.

பைபிள் ஆலோசனை: “ஆலோசனையைக் கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள். அப்போதுதான் எதிர்காலத்தில் ஞானமுள்ளவனாக ஆவாய்.”—நீதிமொழிகள் 19:20.

உங்கள் பிள்ளை ஏதாவது தவறு செய்யலாம். ஒருவேளை, இன்னொருவருடைய பொருளைத் தெரியாத்தனமாக உடைத்துவிடலாம். ஆனால், அதை மூடிமறைக்க நீங்கள் முயற்சி செய்யாதீர்கள். அதன் விளைவுகளைச் சந்திக்க அவனைப் பழக்குங்கள். ஒருவேளை, அவன் மன்னிப்புக் கேட்டுவிட்டு, உடைத்த பொருளுக்குப் பதிலாக வேறொன்றை வாங்கித் தரலாம்.

தங்களுடைய தவறுகளுக்கும் தோல்விகளுக்கும் தாங்கள்தான் பொறுப்பு என்பதைப் பிள்ளைகள் புரிந்துகொண்டால்...

  • நேர்மையாக இருப்பதற்குக் கற்றுக்கொள்வார்கள்

  • மற்றவர்கள்மேல் பழிபோட மாட்டார்கள்

  • சாக்குப்போக்கு சொல்ல மாட்டார்கள்

  • பொருத்தமான சமயங்களில், மன்னிப்புக் கேட்பார்கள்

செடிக்குத் தண்ணீர் ஊற்ற ஒரு அப்பா தன் மகனுக்கு உதவுகிறார்

இப்போதே பழக்குங்கள்

இப்போதே பொறுப்போடு நடந்துகொள்ள பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுத்தால், வளர்ந்த பிறகும் அவர்கள் பொறுப்போடு வாழ்வார்கள்

வாழ்ந்து காட்டுங்கள்

  • நான் என் வேலைகளைச் சுறுசுறுப்பாகவும், ஒழுங்காகவும், சரியான நேரத்திலும் செய்கிறேனா?

  • நான் வீட்டு வேலைகள் செய்வதை என் பிள்ளைகளால் கவனிக்க முடிகிறதா?

  • என் தவறுகளை நான் ஒத்துக்கொள்கிறேனா? தேவைப்பட்டால், மன்னிப்புக்கூடக் கேட்கிறேனா?

எங்கள் அனுபவம் . . .

“சின்ன வயசுல இருந்தே என் பிள்ளைங்க நான் சமைக்கறப்போ கூடமாட உதவி செய்வாங்க. நான் துணிமணிய மடிச்சு வெக்கறப்போ அவங்களும் மடிச்சு வெப்பாங்க. வீட்டை சுத்தம் பண்றப்போ அவங்களும் சுத்தம் பண்ணுவாங்க. என்னோட இருக்கறதும், நான் செய்றதயே செய்றதும் அவங்களுக்கு பிடிச்சிருந்துது. அதனால, வேலை செய்றதுனாலே அவங்களுக்கு குஷியா இருந்துச்சு. இப்படித்தான், பொறுப்பா இருக்க கத்துக்கிட்டாங்க.”—லாரா.

“ஒரு தடவ, எங்களுக்கு வேண்டிய ஒருத்தங்ககிட்ட என்னோட சின்ன பையன் முரட்டுத்தனமா நடந்துகிட்டான். அதனால, என் பையன அவங்களுக்கு ஃபோன் பண்ணி மன்னிப்பு கேட்க சொன்னேன். இத்தன வருஷமா அவன் நிறைய பேர்கிட்ட மன்னிப்பு கேக்க வேண்டியிருந்திருக்கு. மனசுல பட்டதத்தான் அவன் சொல்வான், ஆனா மத்தவங்கள கஷ்டப்படுத்துற மாதிரி சொல்லிடுவான். இப்பெல்லாம், தப்பு செஞ்சாலும் உடனடியா மன்னிப்பு கேட்க பழகிட்டான்.”—டெப்ரா.

விளைவுகளைச் சந்திப்பதன் நன்மைகள்

“பிள்ளைகள் தவறுகள் செய்வது சகஜம். ஆனால், அதற்கான விளைவுகளைச் சந்திக்கும்போது அவர்கள் முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொள்வார்கள் என்பதைப் பெற்றோர் ஞாபகம் வைக்க வேண்டும்” என்று ஜெஸிக்கா லேஹி என்ற ஆசிரியை அட்லாண்டிக் பத்திரிகையில் எழுதினார். “சில பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் தவறுகளை மூடிமறைப்பதற்குப் பதிலாக, விளைவுகளைச் சந்திப்பதற்கும் திருந்துவதற்கும் அவர்களுக்கு உதவி செய்கிறார்கள். அப்படிப்பட்ட பெற்றோரின் பிள்ளைகள்தான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார்கள், நன்றாகவும் படிக்கிறார்கள். அவர்கள்தான் எப்போதுமே என்னுடைய வகுப்பில் சிறந்த மாணவர்களாக இருக்கிறார்கள்” என்றுகூட அவர் எழுதினார்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்